நெஞ்சுக்கு நீதி
ஊனமுற்ற ஒற்றுமை! · 231 / 391
14. ஊனமுற்ற ஒற்றுமை! கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து நான் விலகி விட்டதாகச் செய்தி வந்ததும்; நாவலரும் மற்றவர்களும் அவர்கள் வகுத்திருந்த திட்டத்திற்கு மாறாக-நான் முந்திக்கொண்டு செயல்பட்டு விட்டதாகக் கருதி; உடனடியாக நாவலரும் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். "அந்தக் காலத்தில் கழகம் பெற்ற தேர்தல் வெற்றிக்குரிய புகழில் பங்கு கொண்ட கழகத்தலைமை, அண்மைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டும்" என்று நாவலர் அவர்கள், தனது பதவி விலகல் செய்தியில் கருத்தறிவித்திருந்தார்.
இதற்கிடையே என் இல்லத்துக்கு ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் வந்து குழுமிவிட்டனர். தெருவில் நடமாடுவதற்கு இடமில்லாத அளவுக்குப் பெருங்கூட்டம். முரசொலி அலுவலகத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கானவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி விட்டனர். "பதவி விலகலைத் திரும்பப் பெற வேண்டும்!"
என்ற பெரு முழக்கத்துடன் வீட்டைச் சுற்றிலும், வீட்டுக்குள்ளும் வியர்வை சொட்டச் சொட்ட, மூச்சு முட்டமுட்டக் கதறியழுது என்னைத் திக்குமுக்காடச் செய்த அந்த உடன் பிறப்புகளின் உணர்ச்சிப் பிரவாகத்தை இப்போது நினைத்துக் கொண்டாலும் என் உள்ளம் உருகுகிறது. எள் விழவும் இடமின்றி; வீட்டுக்குள்ளும் தாழ்வாரத்திலும் கூடத்திலும் வாயிற்புறத்திலும் நிரம்பியிருந்தோர் விட்ட மூச்சுக் காற்றின் அனல், புகையாகவே மாறி மார்கழி மாதத்துப் பனிமூட்டம் போல் சூழ்ந்து கொண்டது.
சமாளிக்க முடியாத அளவுக்குக் கூட்டம் திரண்டிடும் ஒவ்வொரு சமயமும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை, வீட்டு வாசல்படியில் வந்து நின்று ஒலிபெருக்கியின் உதவியுடன் கழகத்தினருக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். யாரும் கேட்பதாக இல்லை. அழுதனர், அலறினர், ஆவேசமாகப் பேசினர். அதன்பின் உச்சத்தில் நின்று ஏசினர். உரிமையோடு கண்டித்தனர். பாசத்துடன் கடிந்துரைத்தனர். "பதவி விலகியதற்குக் காரணத்தைச் சொல்!"
என்றனர். கழகப் பொருளாளர் பேராசிரியர் அவர்கள் அந்தப் பெருங்கூட்டத்துக்கு மத்தியில் பேசினார். அவரைத் தொடர்ந்து நான் பேசியபோது, எனது பதவி விலகலுக்கான காரணத்தைச் சற்று விரிவாக விளக்கினேன். அந்த விளக்கம், (11.4.1977) ஏடுகளில் வெளிவந்துள்ளது. அதனை இப்போது நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். "என் அன்பு உடன் பிறப்புகளே! கழகப் பொருளாளர் பேராசிரியர் அவர்கள் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.
நானும் கடந்த ஒரு வார காலமாக உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்களில், நமது கழத்தினுடைய ஜனநாயக மரபு குறித்து விளக்கியிருக்கிறேன். ஒரு தேர்தல் முடிந்த பிறகு, அந்தத் தேர்தலில் ஏற்படும் தோல்விக்குப் பொறுப்பேற்று உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதில்கூட நான் ஒருவன் தனியாக அந்த முடிவை எடுத்துவிட இயலாது என்பதையும், யாரோ ஐந்தாறு பேர் சொல்வதற்காக அப்படியொரு முடிவை எடுப்பது கழகத்திற்கு நல்லதல்ல என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
களத்திலே சோதனையான நேரத்தில் வீரர்களை விட்டுவிட்டு ஓடுவிடுகிற தளபதியைப்போல ஒரு கட்சியினுடைய தலைவன், ஓடிவிட முடியாது என்பதையும் கூறியிருக்கிறேன். இத்தனையும் சொல்லிவிட்டு, இப்போது திடீரென நானே இந்த முடிவை எடுத்தது ஏன் என்பதுதான் உங்கள் கேள்வி! ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழுவைக்கூட்டி, பொருளாளர் பேராசிரிபர் கூறியதுபோல அதன் கருத்தையறிந்து செயல்படுத்துவதற்கு மாறாக; யாரோ சிலபேர் மறைவில் பேசுகிறார்கள் - கையெழுத்து வாங்குகிறார்கள் என்பதற்காக விலகுவதா?
இது என்ன ஜனநாயகம்? என்றெல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள். அண்ணா அவர்களுக்கு எதிராக, ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் ஊர் ஊருக்கும் சென்று கோஷ்டி சேர்த்தும் குறைவான எண்ணிக்கையினர்தான் அவருக்குச் சேர்ந்தார்கள். இருந்தபோதிலும் அந்தக் குறைவானவர்களைக் கண்டு அண்ணா அவர்கள் எவ்வளவு மனம் புழுங்கினார்கள், எவ்வளவு வேதனைப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அண்ணா அவர்களுடன் கலந்து பழகி, ஒட்டி உறவாடி, ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் - எத்தகைய குடும்ப பாச உணர்வுடன் நடத்த வேண்டும் என்கிற பயிற்சியை நாம் பெற்றுள்ளோம்.
இதை வெறும் அரசியல் இயக்கமாக மாத்திரம் கருதினால், பத்துப்பேர்தான் இருக்கிறார்களா, வா ஒரு கை பார்த்து விடுவோம் என்று அரசியல் ரீதியிலே அறைகூவல் விடுத்திட நான் தயங்க மாட்டேன். அப்படி அறைகூவல் விடாமல் நான் உணர்ச்சிவயப்- பட்டுத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்ததற்குக் காரணம்; நாம் எவ்வளவோ பற்றோடும் பாசத்தோடும் பழகிக் கொண்டிருக்கும் பொழுது, நம்மில் ஒருவருக்கு ஒன்று என்றால் நம்மையறியாமல் இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே என்பதை எண்ணும்பொழுது, பத்துப்பேர் தானே என்று என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
நெருங்கிப் பழகியவர்கள், நேற்று வரையில் சகோதர உணர்வுடன் பாசம் காட்டியவர்கள் மறைமுகமாகக் கூடிப் பேசவும், குழுக்கள் உருவாக்கவும் முனைந்து, கழகத்தை ஊனப்படுத்துகிறார்களே; எதுவாயினும் என்னிடம் நேரில் பேசியிருக்கலாமே; எந்த விவாதமாயினும் எளிதில் கிடைப்பவன்தானே நான் - ஆனால் அதை விடுத்துப் பத்துப் பேரோ அல்லது நாலு பேரோ அதிலும் நாவலரைப் போன்றோர் துணையுடன் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளார்கள் என்ற செய்திதான் என் இதயத்தைத் துளைக்கிறது. காயம் சிறிதா?
பெரிதா? என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபடாமல், சிறிய காயமாக இருந்தாலும் உடன் அதற்கு மருந்து போடாமல் இருந்துவிட்டால் அது, பெரிய காயமாக மாறி உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதைப்போல் - கழகத்தின் கட்டுக் கோப்புக் குலைகிற நிலை, தலைகாட்டுவதைத் தடுத்திடத்தான் என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற லட்சக் கணக்கான தொண்டர்கள் இந்த முடிவை ஏற்க மறுத்தாலும்; ஒரு சிலருக்குக் கூட நான் வேண்டாதவனாகக் கழகத்தின் பொறுப்பான இடத்தில் இருந்திட விரும்பவில்லை."
எத்தனை விளக்கங்களை நான் அளித்தும் கூடக் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. சென்னை மாநகர முழுதுமுள்ள கழக அலுவலகங்களில், கழகத்தினர் இல்லங்களில் தமிழகமெங்குமிருந்து கழக நிர்வாகிகளும், செயல்வீரர்களும், முன்னணியினரும் வந்து குழுமிவிட்டனர். கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தைப் பொருளாளர் போராசிரியர் முன்னின்று கூட்டிவிட்டார். பொறுப்புக்களில் இருந்து விலகிய நானும் நாவலரும் அந்தச் செயற்குழுக் கூட்டத்தில் முதலில் கலந்து கொள்ளவில்லை.
என்னையும் நாவலரையும் கலந்து பேசச் செய்திடும் முயற்சிகள் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களாலும், தளபதி வீரமணி அவர்களாலும் எடுக்கப்பட்டுப் பெரியார் திடலில் நாங்களிருவரும் கலந்து பேசினோம். இளமைக் காலந்தொட்டு இலட்சியப் பிணைப்பால் ஆழமாக வேரூன்றி இருந்த நட்பு எங்களிருவரையும் கண்ணீர் வடிக்கச் செய்தது. பேராசிரியர் அவர்கள் மற்றும் கழகத்தின் மூத்த தலைவர்களான மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், சி.வி.எம்.
அண்ணாமலை ஆகியோர் அன்று மேற்கொண்ட மிகச்சிரமமான பணி வெற்றியளித்து, நானும் நாவலரும் செயற்குழுக் கூட்டத்திற்குச் சென்றோம். எங்களின் பதவி விலகல்களைத் திரும்பப் பெற வேண்டுமெனச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. செயற்குழு முடிவை அறியவும், எங்கள் அறிவிப்பைக் கேட்கவும் சென்னை அரசினர் தோட்டம் சட்டமன்றக் கழக அலுவலகத்திற்கு முன்னால் பல்லாயிரம் பேர் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் மத்தியில் ஒரு மேசையைத் தூக்கிப் போட்டு, அதில் ஏறி நின்று நானும் நாவலரும் பேசினோம்.
"நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து அண்ணாவாக இருக்கிறோம். இந்த அண்ணன் என்ற வடிவத்திற்கு எந்தவிதமான சீர்குலைவும் ஏற்படாமல் ஒன்றுபட்டிருப்போம்" என்று நான் கூறிவிட்டு, பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தேன். நாவலர் அந்தக் கூட்டத்தினர் மத்தியில் பேசியதாவது:- "கலைஞரும் நானும் அடுத்தடுத்து ஏற்பட்ட உணர்ச்சியின் விளைவாக உங்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்திடப் பதவி விலகினோம்.
அதன் மூலம் உங்கள் உணர்ச்சி எப்படியிருக்கிறது என்று சோதித்துப் பார்த்தோம். இந்தச் சோதனையில் கழகத் தோழர்களாகிய நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்." என்று நாவலர் பேசி, அவரது பதவி விலகலையும் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தார். "பேரறிஞர் அண்ணாவின் பெருமையை - புகழை நிலைநாட்டுமளவுக்கு நானும், கலைஞரும், பேராசிரியரும் உறுதி பூண்டு செயலாற்றுவோம்" என்று அந்தக் கூட்டத்தில் சூளுரைத்தார் நாவலர்.
ஏப்ரல் 11-ந் தேதி அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சென்னைக் கடற்கரையில் சாதிக் பாட்சா தலைமையில் நானும் நாவலரும், பேராசிரியரும் கலந்து கொள்ளும் மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் ஏப்ரல் 17-ந் தேதி ஞாயிறு மாலை நடைபெறுமென்றும், ஏப்ரல் 24-ந் தேதி தஞ்சையில் கழகப் பொதுக்குழு நடைபெறுமென்றும் தலைமைக் கழகத்தினால் அறிவிக்கப்பட்டது. தஞ்சைப் பொதுக் குழு அறிவிப்பு பொதுச் செயலாளர் நாவலர் கையெழுத்துடன் தான் ஏடுகளுக்குத் தரப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் 17- சென்னைக் கடற்கரைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் விரைவாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 15.4.77 அன்று நானும் பொருளாளர் பேராசிரியரும் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு நாவலர் வருகைக்காகக் காத்திருந்தோம். அப்போது திடீரென ஒரு செய்தி வந்தது. நாவலர், ஆதித்தனார், மாதவன், இராசாராம் ஆகியோர் கழகத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், புதிய கட்சி தொடங்கப் போவதாகவும், இராசாராம் நிருபர்களுக்கு அறிவித்தார் என்பதுதான் அந்தச் செய்தி!
ஏப்ரல் 11-ஆம் நாள் செயற்குழுவில் ஒற்றுமை நிலை நாட்டப்படுகிறது. நாவலர் உள்ளமுருகக் கழகத் தோழர்கள் மத்தியில் பேசுகிறார். இடையில் ஏப்ரல் 12,13,14 மூன்று நாட்கள்தான். அதற்குள் யாரோ நாவலரின் மனத்தைத் கெடுத்துவிட்டிருக்கிறார்கள். 15-ந் தேதி கட்சியிலிருந்தே விலகி, புதுக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துவிட்டார். அந்த முடிவுக்கும், புதுக்கட்சி முயற்சிக்கும் - பக்கபலமாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர் ஆதித்தனார் அவர்களாவார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது நான் மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன்.
அண்ணா மறைந்து, நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நாவலர்தான் முதல்வராக வரவேண்டுமென என்னைப்போன்றோர் சொல்லிக் கொண்டிருந்தபொழுது; அமைச்சரவையில் ஆதித்தனாருக்கு இடம் தரக்கூடாது என்பதில் மிக உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருந்தவர் நாவலர். பின்னர், நான்தான் முதல்வர் பொறுப்பேற்க வேண்டுமென ஓரிருவர் தவிர மற்ற எல்லாச் சட்டமன்ற உறுப்பினர்களும் என்னை வலியுறுத்தி, இறுதியாக நான் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டபோது; ஆதித்தனாருக்கு அமைச்சரவையில் இடம் தரக்கூடாது என எம்.ஜி.ஆர்.
அவர்கள் குறுக்கே நின்றார். ஆனால் நான், அவரது கருத்தை ஏற்காமல் ஆதித்தனார் அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டேன். தமிழ்ப் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னனாகவும் - 'தினத்தந்தி' என்னும் பேராற்றிலிலிருந்து தினகரன், மாலை முரசு எனும் சிறந்த நாளேடுகள் எனும் கிளை நதிகள் தோன்ற வழிகாட்டியாக விளங்கியவரும் தமிழின உணர்வு மிக்கவரும் ஆதித்தனார் என்பதை நான் என்றும் புகழ்ந்து பாராட்டத் தவறியதில்லை.
ஆனால், அந்த ஆதித்தனார்தான் நாவலருடன் சேர்ந்து கழகத்திலிருந்தும் விலகி, புதுக் கட்சியும் தொடங்கிட நாவலருக்கு எல்லா உதவிகளும் செய்தார் என அறிகிறபோது; என் மனத்துக்குள் சிரிப்பு முகிழ்க்காதா என்ன? அது மகிழ்ச்சியின் வெளிப்பாடா? அல்ல! அல்ல! வேதனையின் மின்னல் கீற்று! ஆதித்தனாரிடம் பத்திரிகை பலம் உண்டு - பணபலம் உண்டு - கட்சி தொடங்கவும், இருக்கிற கட்சிக் கட்டுப்பாட்டை உடைக்கவும் அந்த இரண்டும் போதுமென அவர் எண்ணினார்.
அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டார். அத்துடன் நாவலர் அவர்களையும் புரிந்து கொண்டார். அவர்கள் தொடங்கிய புதுக்கட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. "மக்கள் தி.மு.க." எனப் புதுக் கட்சிக்குப் பெயரிட்டனர். ஆதித்தனாரிடம் ஏற்கனவே சில நேரங்களில் பண உதவி பெற்றிருந்த கழகத் தொண்டர்கள், செயல் வீரர்கள், அவர் பின்னால் அணிவகுப்பார்கள் என எண்ணினார்கள். ஆனால் எந்தவொரு கழகத் தோழனும், ஆதித்தனாரிடம் பெற்ற அத்தகைய உதவிகள், கழகக் கொள்கையை அவரிடம் விலை பேசுவதற்கானவை என்று கருதிக் கொள்ளவில்லை.
நாவலர் அவர்கள் தனது நிலையை விளக்கி அறிக்கையொன்று விடுத்தார். அதில், கழகத் தொண்டர்கள், அவருக்கு எழுதிய கடிதங்கள் அவர் மனத்தைப் புண்படுத்துவதாக இருப்பதால் கழகத்திலிருந்து விலகுகிறேன் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து, அவரைச் சுற்றியிருந்தோர் அவரது உணர்வுகளைத் திசை திருப்பி; அத்தகைய முடிவுக்கு அவரை வரச் செய்து விட்டனர் என்பது தெளிவாகப் புரிந்தது. இச்செய்தி கேட்டுப் பதறிப்போன திராவிடர்கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத்தில் ஒற்றுமை காத்திட வேண்டி ஒர் உணர்ச்சிமிகு அறிக்கை வெளியிட்டார்கள்.
"தி.மு.க. என்பது அறுபது ஆண்டு பாரம்பரியமுள்ள, தமிழர் நல்வாழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு மாபெரும் அரசியல் இயக்கம்" எனக் குறிப்பிட்டு 17.4.1977 அன்று அவர்கள் விடுத்த வேண்டுகோள் அறிக்கை அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்தது.
