நெஞ்சுக்கு நீதி
தலைவர் பதவி விலகல்! · 230 / 391
13. தலைவர் பதவி விலகல்! செ ன்னையிலிருந்து 5.4.1977 திங்கள் மாலை, தம்பி முரசொலி மாறனுடன் பம்பாய் போய்ச் சேர்ந்த நான் மறுநாள் காலையில் 10 மணி அளவில் ஐஸ்லோக் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பெற்று வந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களைச் சந்தித்தேன். மிகுந்த களைப்புற்ற நிலையில் ஜே.பி. அவர்கள் இருந்த போதிலும் எங்களைக் கண்டவுடன் பூரிப்புடன் வரவேற்று, படுக்கையிலிருந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டு சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேல் எங்களுடன் உரையாடினார்.
பொதுவான முறையில் உரையாடல் நாட்டு நடப்புக் குறித்தும், நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் இருந்தது என்றாலும் அவரிடம் விடைபெற்றுப் புறப்படும்போது அவர் என்னைப் பார்த்து "தி.மு.க. அமைச்சர்கள் மீதும் உங்கள் மீதும் இந்திரா அரசு தொடுத்த வழக்குகள் என்ன ஆயின? திரும்பப் பெறப்பட்டு விட்டனவா?"
என்று கேட்டார். "இல்லை" என்று நான் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார். பம்பாயில் நாங்கள் தங்கியிருக்கும் இடத்தைக் கேட்டு அறிந்து கொண்டதோடு, அன்று மாலை 6.15 மணி விமானத்தில் நாங்கள் டெல்லி போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்ட அவர், மாலை 4 மணி அளவில், கழக ஆட்சியில் சென்னை நகர ஷெரீபாக நியமிக்கப்பட்டவரும் எக்ஸ்பிரஸ் ஏட்டின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவருமான நண்பர் இராமகிருஷ்ணன் அவர்களிடம் இரண்டு உறையிட்ட கடிதங்களைக் கொடுத்தனுப்பியிருந்தார்.
ஒன்றில் என் முகவரியும், மற்றொன்றில் பிரதமர் மொரார்ஜி தேசாய் முகவரியும் எழுதப்பட்டிருந்தன. எனது முகவரியிட்ட கடிதத்தைப் பிரித்துப்பார்த்தேன். "அன்புள்ள கருணாநிதி அவர்களுக்கு, இத்துடன் உள்ள கடிதத்தை மொரார்ஜிதேசாய் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுகிறேன்" என ஜே.பி. அவர்கள் எழுதியிருந்தார். ஜே.பி. அவர்களை பம்பாய் மருத்துவ மனையில் சந்தித்ததையொட்டி, டெல்லியில் இருந்தவாறே 'முரசொலி' இதழுக்கு நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
"ஜே.பி.எனும் மகாவீரரைச் சந்தித்து என் மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவிக்கத்தான் டெல்லிக்கு வருவதற்கு முன்பு பம்பாய்க்குப் பறந்து சென்றேன். நான்கைந்து ஆண்டுக் காலத்துக்கு மேலாக, அவருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு. அவரின் இளைய சகோதரனாகவே அவர் என்னை நேசித்தார். நானும் அவர் மீது சகோதர பாசத்தைப் பொழிந்து, அதன் காரணமாக என் நெஞ்சுக்கோர் நிறைவைத் தேடிக் கொண்டிருப்பவன். அவருடன் நெருங்கி உறவாடாத காலத்தில் தொலைவிலிருந்து அவரை வணங்கிக் கொண்டிருந்தவன் நான்.
வாழ்த்திக் கொண்டிருந்தவன் நான். அவர் இந்த நாட்டு விடுதலைக்காக ஏற்ற தியாகத்தை எண்ணி எண்ணிப் பெருமைப் பட்டிருக்கிறேன். பதினான்கு ஆண்டுக் காலத்திற்கு மேலாக, சிறைக்கொட்டடியில் இளஞ்சிங்கமாக அடைபட்டுக் கிடந்த அவர், இன்று பழுத்த பழமாகக் காட்சி தருகிறார். மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக வந்திருந்த போது, நானும் கழக அமைச்சர்களும் அவரைச் சந்திக்க அடிக்கடி வேலூர் செல்வதுண்டு.
"அவர் என்ன இந்தியாவின் பெரிய பதவியில் இருப்பவரா? அவரது உடல் நிலையைக் கவனிக்க இத்தனை அமைச்சர்கள் வேலூரில் முகாம் போடுவானேன்?" என்று அ.தி.மு.க. ஏடுகளில் அப்போது கழக அரசைக் கண்டித்து எழுதியதும் உண்டு. இந்தியாவில் நேர்மையான நிர்வாகமும் ஊழலற்ற நிலையும் எல்லா முனைகளிலும், மாநிலங்களிலும், மத்தியிலும் இருந்திட வேண்டுமென்று அவர் ஒரு முழுப்புரட்சிக்கு வித்தூன்றியபோது, நான் அவரை டெல்லியில் சந்தித்தபோதும், அவர் என்னை சென்னை வந்தபோது சந்தித்த நேரத்திலும், "குற்றம் குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
எல்லா மட்டத்திலும் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களை எங்களுக்குச் சொல்லுங்கள். அதுபற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று நானும் நாவலரும் பேராசிரியரும் மற்றுமுள்ள கழக முன்னணியினரும் அவரிடம் திட்டவட்டமாகக் கூறினோம்.
அந்த அடிப்படையில்தான் அவர், நிருபர்களிடம் பேசிய போது கூட, "கருணாநிதி கலந்துரையாடத் தயாராக இருக்கிறார். மற்ற மாநிலங்களில் உள்ள முதல்வர்களோ, மத்திய அமைச்சர்களோ என்னுடன் கலந்துரையாடத் தயாராக இல்லை" என்ற கருத்தைத் தெரிவித்தார். கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்து வீடுகளைத் திறந்து வைத்த விழாவிலே கலந்து கொண்டு "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற நமது கொள்கைக்குப் புகழாரம் சூட்டினார்.
மூதறிஞர் இராஜாஜிக்கு, கழக அரசு கிண்டியில் அமைத்த நினைவாலயத்தைத் திறந்து வைத்த போது, "மதுவிலக்கை மீண்டும் கழக அரசு அமல்படுத்தியதற்கு மகிழ்ச்சி! குதிரைப் பந்தய ஒழிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு மகிழ்ச்சி! ஆனால் இன்னும் பரிசுச்சீட்டு ஒழிக்கப்படவில்லையே" என்று குறிப்பிட்டார்.
உடனே நான் சிறிதும் தயங்காமல் பரிசுச்சீட்டும் விரைவில் ஒழிக்கப் படுமென அதே மேடையில் அறிவித்து அதே ஆண்டில் பரிசுச் சீட்டை ஒழித்ததையும் நாடு மறந்திருக்காது. 1975-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர் சென்னை வந்தபோது கழகத்தின் சார்பில் மாபெரும் வரவேற்புக் கொடுத்தோம். அவர் மக்களின் தொண்டர்! நாட்டுக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாகத் தலைவர்! சர்வோதயம் கண்ட உத்தமர்! அன்பின் உருவம்! அருள் வடிவம்!
அவர்மீது பாய்ந்த வலிமையான கணைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு; தனக்குச் சரியெனப்பட்டதை சலியாது மக்களிடம் எடுத்துச் சொல்லிவந்தார். அவரைச் சகித்துக்கொள்ள முடியாத சர்வாதிகாரப் போக்கினர், அவரைச் சண்டாளர் என்றனர்,வாய் கூசாது! கொள்ளைக்காரர் என்றனர் - கொடிய அரக்கரைப் போல் விமர்சித்தனர்! அவரால் நாட்டுக்கே ஆபத்து என்று, நடிப்பையே அரசியலாக்கிக் கொண்டவர்கள் நாத்தழும்பேறிப் பேசினர். இறுதியில் அவர் மீது அடக்குமுறை பாய்ந்தது.
சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மட்டுமா? நாடே சிறைக்கூடமாகத்தான் மாறியது! எதேச்சாதிகாரத்தின் இரத்த வெறி கொண்ட நாக்கு, அவரது உடல் வலிவை உறிஞ்சத் தொடங்கியது. சிறையில் அவர் மாண்டு விடக்கூடாதே என்ற அச்சத்துடன் அவரை, இந்திரா அம்மையாரின் அரசு விடுதலை செய்தது. இன்னும் பதினைந்து நாட்கள் முன்னதாக அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தால், இப்போது அவர் உடல் நலிவால் அனுபவிக்கிற இன்னல்களை அனுபவித்திருக்க வேண்டியதில்லை.
எனினும் அந்தக் கிழச்சிங்கம்-தான் தொடுத்த போரில் வெற்றிபெற்று விட்டது. அந்த வெற்றிக்களிப்புடன், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பம்பாய் மருத்துவமனையில் அவர் அமர்ந்திருந்த காட்சியைக் கண்டேன். கண்டதும் என் கண்கள் குளமாகிவிட்டன. கழிபேருவகையுடன் அவர் என்னை வரவேற்றார். எனக்கும் கரை காண முடியாத மகிழ்ச்சி அதே நேரத்தில், அய்யோ! போரிட்ட சிங்கம், போரில் வெற்றி பெற்ற சிங்கம், மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கிறதே என்ற மனக்கலக்கம்."
"கண்டேன் கிழச் சிங்கத்தை!" என்ற தலைப்பில் முரசொலியில் நான் எழுதிய கடிதம் இதுதான். அவர் என்னிடம் தந்த கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே இதனை எழுதினேன். ஏப்ரல் 7-ந் தேதி காலை பிரதமர் மொரார்ஜி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இதற்கிடையே சென்னையிலிருந்து நேராக டெல்லிக்கு வந்துவிட்ட நண்பர் மாதவனும் என்னுடன் பிரதமர் இல்லத்திற்கு வந்தார். முரசொலி மாறனும் அந்தச் சந்திப்பின் போது எங்களுடன் இருந்தார்.
பம்பாயில் ஜே.பி. அவர்கள் என்னிடம் கொடுத்திருந்த கடிதத்தை மொரார்ஜியிடம் கொடுத்தேன். அதைப் பிரித்துப் படித்த மொரார்ஜி தேசாய் ஒரு விநாடி மௌனமாக இருந்துவிட்டு, பிறகு எங்களைப் பார்த்து "இதை நான் மட்டும் முடிவு செய்ய முடியாதே! அமைச்சரவை அல்லவா முடிவெடுக்க வேண்டும்?"
என்று கூறினார். ஜே.பி. தந்துள்ள கடிதத்தில் என்ன இருக்கிறது என்றே எனக்குத் தெரியாதே என்று கூறினேன். மொரார்ஜி; "தி.மு.க. அமைச்சர்கள் மீது இந்திரா போட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டவையென்று நாமே கூறியிருக்கிறோம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தலே நல்லது!"
என்று ஜே.பி. எழுதியிருக்கிறார் என்றார். சொன்னதை மறவாமல் செயல்பட வேண்டுமென்று கருதிய ஜே.பி.யின் நாணயமான உள்ளத்தையும் - அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் வேறு கோணத்தில் சிந்திக்கத் தொடங்கிய மொரார்ஜியின் குணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே; பிரதமர் மொரார்ஜியிடம் விடைபெற்றுக் கொண்டேன். அன்றே பாபு ஜெகஜீவன்ராம் இல்லம் சென்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினேன். மத்திய அமைச்சர்கள் சரண் சிங், ராஜ்நாராயண், ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ், சாந்திபூஷண், பா.ராமச்சந்திரன் ஆகியோரையும் அசோக்மேத்தாவையும், நாடாளுமன்ற அவைத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியாரையும் சந்தித்து அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து விட்டு, எதிர்க்கட்சித்தலைவர் ஒய்.பி.சவான் அவர்களையும் சந்தித்து உரையாடிவிட்டு, 8.4.77 காலை சென்னைக்குத் திரும்பினேன்.
நான் திரும்புவதற்குள்ளாகவே; டெல்லியில் உள்ள ஜனதா கட்சித் தலைவர்கள் சிலர் தி.மு.க.வுடன் உறவை நீடிக்க விரும்பவில்லை என்பதும் எம்.ஜி.ஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையற்ற ஒத்துழைப்புத் தருவதாக மொரார்ஜியிடம் வாக்குறுதி அளித்திருப்பதும் ஆகிய இந்தச் செய்திகள் சென்னையில் உள்ள நாவலருக்கும் அவருடன் குழுவாகச் செயல்படும் சில முன்னாள் அமைச்சர்களுக்கும் எட்டிவிட்டன. என்னுடன் டெல்லியில் ஒரே ஓட்டலில் அடுத்த அறையில் தங்கியிருந்த நண்பர் மாதவன் அவர்களே, தொலைபேசியின் மூலம் இந்தச் செய்திகளை சென்னைக்குத் தெரிவித்துவிட்டார்.
அதன் காரணமாக நாவலர் அவர்களும் அவரது குழு நண்பர்களும், "இனிக் கழகத்திற்கு எதிர்காலம் இல்லாதது மட்டுமல்ல; வழக்குகளைத் திரும்பப் பெறாத நிலையில் பல இன்னல்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்" என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அந்த முடிவைச் செயல்படுத்த நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். இப்படியொன்று நடைபெறுகிறது என்பதே தெரியாத நிலையில் நான் சட்டமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளுக்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன்.
கழகத் தேர்தல் நிதி வசூலிப்பது என அறிவித்தபடி சென்னை மாநகரில் சில பகுதிகளில் காலை 9.30 மணிக்குத் தொடங்கிக் கொடுமையான வெய்யிலில் 3 மணி வரையில் வடசென்னையிலும், பிறகு தென்சென்னையிலும் நானே உண்டியல் ஏந்திச் சென்றதில் 35,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை ஒரு நாளில் கிடைத்தது. இத்தகைய எழுச்சியான நிலை; மீண்டும் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது; தோல்வியினால் தொண்டர்கள் துவண்டுவிடவில்லை தமிழ்மக்களும் கழகத்தின் பக்கமிருந்து விலகி விடவில்லை என்ற நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்த போதுதான் எனக்கு மிக வேதனையான ஒரு செய்தி கிடைத்தது.
அச்செய்தி பத்திரிகையிலும் வந்துவிட்டது. "கழகத் தலைமையிலிருந்து நான் விலக வேண்டுமென்று சிலர், பொதுக் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள்" என்ற செய்திதான் அது! செய்தி கிடைத்தவுடன் கழகத் தலைமைப் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதாக ஏப்ரல் 10-ஆம் நாள் பொதுச் செயலாளர் நாவலருக்குக் கடிதம் எழுதிவிட்டு; விலகிய செய்தியை ஏடுகளுக்கும் அறிவித்துவிட்டேன். "பேரன்பிற்குரிய பொதுச்செயலாளர் அருமை நாவலர் அவர்களுக்கு வணக்கம்.
பொதுக்குழுவில் மிகப் பெரும்பான்மையோரும் செயற்குழுவில் மிகப்பெரும்பான்மையோரும், கழகத்தில் என் தலைமை நீடிக்க வேண்டுமென விரும்பியபோதிலும் கூட, நான் நினைத்துக் கூடப்பார்க்காத சில நண்பர்கள்-ஆம்! மிக நெருங்கிய நண்பர்கள்- கழகத் தலைமைப் பொறுப்பிலிருந்து நான் விலக வேண்டுமென்று கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் எண்ணிக்கையில் சிலரே ஆயினும் நமது கழகத்தில் இதுபோன்ற கையெழுத்து வாங்கும் முறை கட்சிக் கட்டுக்கோப்பைக் குலைத்துவிடுமென நான் கருதுவதால் கழகத்தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்திடுகிறேன்.
இந்தப் பொறுப்பில் இருந்த காலத்தில் என்னுடன் ஒத்துழைத்த தங்களுக்கும், பொருளாளர் பேராசிரியருக்கும், தலைமைக் கழகச் செயலாளர்களுக்கும், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புள்ள மு.கருணாநிதி இந்தப் பதவி விலகல் செய்தி வெளி வந்தவுடன் கழகச் செயல்வீரர்களிடம் பெரும் குமுறல்-கொந்தளிப்பு! பதவி விலக மாட்டேன் என எதிர்பார்த்துக் கையெழுத்து வாங்கியவர்களுக்கும் தூண்டியவர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஏமாற்றம்!
