நெஞ்சுக்கு நீதி
திரைமறைவு நாடகம் · 229 / 391
12. திரைமறைவு நாடகம் இதே மார்ச் திங்களில் பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பூட்டோவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, பூட்டோ பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்தியாவில் புதுடெல்லியில் புதிய அரசு பொறுப்பேற்ற இரு நாட்களுக்குள் 27.3.1977-ல் உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு பெரும் கறுப்பு அத்தியாயமாக இடம் பெற்றுவிட்ட விமான விபத்து, அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள கெனரி (Canary) என்ற தீவில் நடைபெற்றது.
விமானங்கள் இறங்கும் ஓடு தளத்தில் இரண்டு ஜம்போ ஜெட் விமானங்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 570 பயணிகள் கருகிப்போனார்கள். தப்பிப் பிழைத்த 70 பயணிகள் கடுமையான தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த விபத்தில் உயிர் தப்பிய ஒரு பயணி சொன்ன தகவல் கொடுைமையானது. "திடீரென இடி முழக்கம் போல வெடிச் சப்தம் கேட்டது. விமானத்தின் மேல் பகுதி பிளந்து என் மனைவியின் மீது ஒரு இரும்புத் துண்டு விழுந்தது.
அவளை அந்த இருக்கையிலிருந்து எழச் செய்வதற்காக, "சீட் பெல்ட்" டைக் கழற்றிட முயன்றேன். அதற்குள் மற்றொரு வெடிச் சப்தம் கேட்டது. மழை பொழிவதைப் போல மற்றொரு விமானத்திலிருந்து எங்கள் விமானத்திற்குள் பயணிகள் பொல பொலவெனக் கொட்டினார்கள். பிறகு பெரிய பெரிய நெருப்புக் கோளங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன."
உலக முழுதுமுள்ள ஏடுகளில் அந்த விபத்து பற்றிய செய்திகளும் படங்களும் வெளி வந்தது கண்டு அவைகளைப் படித்தோர் அனைவரும் கண்ணீர் வடித்தனர். இந்திய நாட்டில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசு, எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும் என்ற கேள்வி எழத்தக்க அளவுக்கு கசப்புகளும், காழ்ப்பு உணர்வுகளும், சிம்மாசனம் ஏறிக் கொண்டது போலவே பாகிஸ்தானின் ஆட்சி லகானைப் பிடித்த பிரதமர் பூட்டோவின் அரசுக்கும் எத்தனை நாள் இந்த ஆட்சி?
என்று அரசியல் ஆரூடங்கள் கணிக்கப்பட்டன. அங்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் பரவலாகத் திட்டமிட்டு நடைபெற்றன எனக் குற்றம் சுமத்தப்பட்டு லாகூர் போன்ற நகரங்களில் மார்ச் மாதமே கிளர்ச்சித் தீ பரவத் தொடங்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் முழுவதுமே சட்டம் ஒழுங்கு கெடக் கூடிய சூழல் உருவாகியிருப்பதாக பிரதமர் . பூட்டோ கவலை தெரிவித்தார். பூட்டோ பதவி விலக வேண்டும் என்றும், நீதித்துறையின் மேற்பார்வையிலும் இராணுவத்தின் மேற்பார்வையிலும் புதிய பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகளின் தேசியக் கூட்டணி கோரிக்கை விடுத்து பாகிஸ்தான் முழுதும் முழு அடைப்பு, வேலை நிறுத்தம் என்று போராட்டங்களை நடத்தத் தொடங்கியது.
அந்தக் கிளர்ச்சிகளின் முடிவாக மார்ச்சில் பிரதமராகப் பொறுப்பேற்ற பூட்டோ, ஜூலை மாதம் 5 ஆம் நாள் இராணுவக் காவலில் வைக்கப்பட்டார். அவரால் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஜியாவே அவரைக் காவலில் வைத்துவிட்டு இராணுவ ஆட்சியை அறிவித்தார். இதற்கிடையே குடியரசு முன்னாள் தலைவர் வி.வி.கிரி அவர்கள் வெளியிட்ட கருத்தையொட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களும், அரசியல் சட்டத்தைத் திருத்தியாவது எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசுகளைக் கலைத்து விட்டு, அந்த மாநில சட்டமன்றங்களுக்குத் தேர்தல்களை நடத்த வேண்டுமென வலியுறுத்தி அறிக்கை விடுத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநில அரசுகள், மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை, நாடாளுமன்றத் தேர்தலில் இழந்து விட்டதால்; மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் மாநிலங்களிலும் ஏற்படும் வண்ணம் அந்த மாநிலங்களில் புதிய சட்டமன்றத் தேர்தல் நடைபெற வேண்டுமென்றும், தேவைப்படின் அதற்கேற்ப அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமெனவும் ஜே.பி.குறிப்பிட்டார். மாநிலத்துக்கு எந்த அரசு தேவை என்பதையும், மத்தியில் எந்த அரசு தேவை என்பதையும் நிர்ணயிக்கிற மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்து விட்டு, ஏற்கனவே மக்களால் மாநிலங்களில் அமைந்துள்ள அரசுகளை நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் அடிப்படையில் கலைத்து மறு தேர்தல் நடத்துவது என்பதை தி.மு.கழகத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தான்.
இருப்பினும் ஜனதா கட்சியுடன் அப்போதுதான் தேர்தல் உடன்பாடு கொண்டு தேர்தல் உறவு ஏற்பட்டிருந்த காரணத்தால்; மாநில அரசுகளைக் கலைக்கும் முடிவைக் கழகம் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. அப்படி எதிர்க்காத தவற்றின் காரணமாக 1980-ல் இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் பெருவெற்றி பெற்று, அப்போதும் ஜனதா ஆட்சி செய்ததுபோலப் பல மாநில அரசுகளைக் கலைத்துப் புதிய தேர்தல்கள் நடத்த முன்வந்தபோது அந்தத் தவற்றையும் கழகம் அனுமதிக்க நேர்ந்தது.
தவற்றை உணர்வதும் அப்படி உணர்ந்ததை வெளிப்படையாகத் தெரிவிப்பதும்தான் நெஞ்சுக்கு நாமே வழங்கிக் கொள்கிற நீதியாகும். எனினும் தவறு செய்வதும், வருந்துவதும் ஒரு வாடிக்கை முறையாகி விடக்கூடாது. சில மாநில காங்கிரஸ் அரசுகள் மத்திய அரசு சட்டசபைகளைக் கலைத்து விட்டுப் புதிய தேர்தல் நடத்த இருப்பதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூடி ஒன்பது சட்டப் பேரவைகளைக் கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தது.
உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்கம், ஒரிசா, இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகியவை அந்த ஒன்பது மாநிலங்களாகும். தமிழ்நாட்டில் 1976-லேயே கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால் அதற்கும் சேர்த்துச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுமென்றும் ஜூன் அல்லது ஜூலை மாத வாக்கில் அந்தத் தேர்தல் நடைபெறக் கூடுமென்றும் ஏடுகளில் செய்திகள் வரத்தொடங்கின. சட்டமன்றத் தேர்தலையொட்டிக் கட்சிகள் பிரச்சாரத்தில் ஒன்றையொன்று முந்திக் கொண்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகள் அப்படியே தொடருமா என்பது அரசியல் அரங்கில் கேள்விக்குறியாயிற்று.
நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மொரார்ஜி தேசாய் அவரது வாலிப வயதில் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்தவர் என்றும் அப்படிப் பணியாற்றியபோது இலஞ்சம் வாங்கியதற்காக அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டவர் என்றும் மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் மொரார்ஜி பிரதமரான பிறகு, டெல்லியிலிருந்து எம்.ஜி.ஆர். அவர்களிடம் அதற்கான விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டதும்; தேர்தல் நேரத்தில் அப்படி ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்ததற்காக எம்.ஜி.ஆர்.
அவர்கள் மொரார்ஜியிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துக் கொண்டு அறிக்கையொன்றையே வெளியிட்டார். "மொரார்ஜி தேசாய் ஆர்.டி.ஒ.வாக இருந்தபோது இலஞ்சம் வாங்கி டிஸ்மிஸ் ஆனார்" என்று நான் கலந்துகொண்ட ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மற்றொரு கட்சித் தலைவர் பேசியதை வைத்து நானும் பேசி விட்டேன்.
ஆனால் அப்புகார் உண்மையற்றது என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் வந்துள்ளது. தவறாகப் பேசியதற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு எம்.ஜி.ஆரின் அறிக்கை 1977 ஏப்ரல் இறுதி வாரத்தில் பத்திரிகைகளில் வெளிவந்தது. எந்தப் புகாரையும் அவர் யார் மீது கூறினாலும் அதற்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்ள முன் வருவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள் மீது ஜனாதிபதியிடம் 1972-ல் புகார் கொடுத்து; அது 1976-க்கு மேல் சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு வந்தபோதுகூட எம்.ஜி.ஆர்.
அவர்கள், சர்க்காரியா கமிஷனுக்குத் தந்த வாக்குமூலத்தில், "இந்த புகார்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சேலம் வக்கீல் கண்ணன் அவர்கள் மூலம் அறிந்தவைகளையே சொல்லியிருக்கிறேன். எனக்கு நேரடியாகத் தெரியாது" என்றுதான் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, மொரார்ஜி பிரதமராவார் என எதிர்பார்க்காமல் இத்தகைய புகார்களைக் கூறித் தூற்றியவர்; அவர் பிரதமரானதும் நேராகவே டெல்லிக்குச் சென்று மொரார்ஜியைச் சந்தித்துத் தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனதா ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவார்கள் என இரகசியமாக வாக்குறுதியளித்து விட்டுத் திரும்பினார். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சரண்சிங் அவர்கள், இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் "மாருதி கார் பிரைவேட் லிமிடெட்" விவாகரம் பற்றியும், நகர்வாலா விவகாரம் பற்றியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பன்சிலாலுக்கு எதிரான விவகாரங்கள் பற்றியும் விசாரித்தறிய கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
நெருக்கடி நிலையின்போது மத்திய மாநில அரசுகள் இழைத்த கொடுமைகளை நாடாளுமன்றக் குழு ஒன்று விசாரிக்க வேண்டுமென மக்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜோதிர்மயி பாசு தீர்மானமொன்று கொண்டு வந்தார். சென்னை சிறையில் சிட்டிபாபு சாகடிக்கப்பட்ட கொடுமையையும் விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டுமென ஜனதா உறுப்பினரும் காந்தியடிகளின் பேத்தியுமான சுமித்ரா ஜி. குல்கர்னி வலியுறுத்திப் பேசினார் நாடாளுமன்றத்தில்!
இ.காங்கிரஸ் உறுப்பினர்களைப் போல் செயல்பட்ட சில சி.பி.ஐ. அதிகாரிகள் மீது பகிரங்க விசாரணை நடத்தப்பட வேண்டுமென பரோடா வெடிகுண்டு சதி வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பத்திரிகையாளர்- களில் ஒருவரான விக்ரமராவ் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார். சென்னை சிறையில் நடந்த கொடுமைகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஓம் மேத்தாவே காரணமென்று ஆவேசமாக மக்களவையில் பேசிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி, 1976-ல் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட சென்னைக்கு கிருஷ்ணா நீர்த் திட்டம் என்ன ஆயிற்று என வினவினார்.
கங்கையும் காவிரியும் இணைக்கப்பட்டால் தான் இந்தியாவில் நதி நீர்ப்பிரச்சினை தீரும் என்று அவர் திட்டவட்டமாக விளக்கினார். மாநிலங்களவையில் கழகச் சார்பில் பேசிய உறுப்பினர் கமலநாதன்; மீண்டும் சர்வாதிகாரம் தோன்றாதிருக்குமாறு அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்றும், நீதித்துறை சுதந்திரமாக இயங்க, வழிவகை கண்டாக வேண்டுமென்றும், தமிழகக் கழக அரசு கலைக்கப்பட்ட விதம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் நாடாளுமன்ற விவாதங்கள் களைகட்டி விட்டன என்பதற்கு எடுத்துக்காட்டாக இவை விளங்கின. கழகக் கூட்டணியைப் பொறுத்த வரையில் தேர்தலில் பெருந்தோல்வியைச் சந்தித்திருந்தாலும் கூட, கழகத்தின் செயல் வீரர்கள் எவரும் நெஞ்சுரம் குன்றவில்லை. மாநில முழுதும் சர்வாதிகார ஆட்சி மத்தியில் வீழ்ந்ததைக் கொண்டாடும் விதத்தில் விழாப் பொதுக்கூட்டங்களைப் பேரெழுச்சியுடன் கழகக் காளையர் நடத்தினர்.
அதையொட்டித் திருப்பூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் நாவலர் அவர்கள் ஏப்ரல் 9-ஆம் நாள் (1977) அன்று கலந்து கொண்டு ஆற்றிய உரையை இப்போது நினைவுபடுத்தியாக வேண்டும். ஏனெனில் அடிமட்டத் தொண்டர்களை ஊக்கப்படுத்திக் கட்சியை நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புகளில் ஒன்றானதும் முக்கியமானதுமான பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர்; என்ன ஆனார் - என்பதை எண்ணிப் பார்த்திடும்போது அவரது திருப்பூர்ப் பேச்சு ஞாபகத்தில் இருக்க வேண்டிய ஒன்றாகி விடுகிறது.
"தாங்கள் அடைந்துள்ள வெற்றிக்கு சினிமா கவர்ச்சிதான் காரணமென்று, எம்.ஜி. ராமச்சந்திரனின் ஆதரவுப் பத்திரிகையே கூறுகிறது. அரசியல் கூட்டங்களுக்கு வருகிற மக்களைத்தான் நாம் திருத்த முடியும். வீட்டிலிருக்கும் மக்களை எப்படித் திருத்த முடியும்? அந்தப் படிப்பினையை இப்போது புரிந்து கொண்டோம், காலம் மாறுகிறது. அந்தக் கவர்ச்சியும் நிச்சயம் மாறும். கர்நாடக, கேரள, ஆந்திர மக்களை நான் பாராட்டுகின்றேன்.
அனைத்து மாநில மக்களையும் பாராட்டுகின்றேன். காரணம்; அவர்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தான் அவர்களது மாநில முதலமைச்சராக வர வேண்டுமென நினைக்கிறார்கள். அதே உணர்வு தமிழ் மக்களுக்கும் இரத்தத்தோடு இணைய வேண்டும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மொரார்ஜியையும் மற்ற தலைவர்களையும் தரக்குறைவாகப் பேசி இகழ்ந்துரைத்த எம்.ஜி. ராமச்சந்திரன், இன்று மொரார்ஜியிடம் சரணடைந்துள்ளார். கடந்த 20-ந் தேதி வரையில் வீரம் பேசிய எம்.ஜி.ராமச்சந்திரன் வீரம் எங்கே?
மொரார்ஜிக்கு இன்று நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகக் கூறும் எம்.ஜி.ராமச்சந்திரன், அன்று என்ன பேசினார்? மொரார்ஜியை யாருக்காவது தெரியுமா என்று கேட்டார்! அவர் இலஞ்சம் வாங்கினார் என்று பேசினார்! அவர் ஆட்சிக்கு வந்தால் இந்தி திணிக்கப்படும் என்று கூறினார்! இப்போது சரணடைந்தமைக்கு என்ன காரணம் தெரியுமா? 1972-ல் நாடாளு மன்றத்தில் சிட்டிபாபு எம்.பி. எம்.ஜி.ஆருக்கு அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா?
அதற்கு எம்.ஜி.ஆரின் பதில் என்ன? என்பதாக ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு விடையளித்த ராம்நிவாஸ் மிர்தா என்ற மத்திய காங்கிரஸ் அமைச்சர், "எம்.ஜி.ஆருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்தக் கேள்வி கேட்கப்பட்டது 1972 ஆகஸ்டு, மாதம் - எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு விலகி, இந்திரா காந்தியை ஆதரிக்கச் சென்றது 1972 அக்டோபர் மாதம் - அந்நியச் செலாவணி மோசடி பிரச்சினை பரிசீலனையில் இருக்கிறது என்று கூறி ஐந்து ஆண்டு ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அதைக் கேட்டு எம்.ஜி. ராமச்சந்திரன் அலறிக் கொண்டு டெல்லிக்கு ஓடி, மொரார்ஜிக்குத் தனது கட்சி எம்.பிக்கள் நிபந்தனையற்ற ஆதரவு தருவார்கள் என்று சரணாகதி அடைந்திருக்கிறார்."
திருப்பூர் மேடையிலே நாவலர் இவ்வளவு வீராவேசமாகப் பேசி தி.மு.க. தொண்டர்களை ஊக்கப்படுத்தினார் என்றாலும்; நாடாளுமன்றத் தோல்விக்குப் பிறகு அவருக்கும் அவருடன் சில நாட்களாகக் கூடிப் பேசிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும், ஏதோ உள்ளத்தில் ஒரு சலனம் ஏற்பட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கழகத்திற்கு இனி எதிர்காலமே இல்லை என்ற முடிவுக்கு; அந்தக் கழகத்தைக் கட்டிக் காத்திட வேண்டிய பொதுச் செயலாளரே வருவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
அதனால் அவர்கள் சில நேரங்களில் குழுக்களாகக் கூடித் தனியாகப் பேசுகிறார்கள் என்றெல்லாம் எனக்குச் செய்திகள் வந்தபோது அதை நான் அலட்சியப்படுத்தி விட்டேன். நம்பவில்லை. மத்திய ஜனதா அரசு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீதிருந்த பரோடா வெடிகுண்டு வழக்கையும், சுப்பிரமணியம் சுவாமி மீதிருந்த அந்நியச் செலாவணிப் புகார் வழக்கையும், பிரகாஷ் சிங் பாதல் மீதிருந்த கிரிமினல் வழக்கையும் திரும்பப் பெற்றது போல தி.மு.க.
அமைச்சர்கள் மீதிருந்த வழக்குகளையும், சர்க்காரியா கமிஷனையும் திரும்பப் பெறுமென்று எதிர்பார்த்து அது நடக்காததால் ஜனதா ஆட்சியின் மீது ஒரு அதிருப்தியும், நான் அத
ற்காக முயற்சி செய்யவில்லை என்ற ஒரு ஆதங்கமும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. எந்த ஒரு கட்டத்திலும் அப்படியொரு கோரிக்கையை நானாக வலியச் சென்று வைத்திட நான் விரும்பவில்லை. எனவே எனக்கும் தெரியாமல் ஒரு புகைச்சல் நாவலரைச் சார்ந்த குழுவினரிடையே கிளம்பியிருந்தது பிறகுதான் தெரிந்தது. பம்பாய் 'ஜஸ்லோக்' மருத்துவமனையில் சிறுநீரகக் கோளாறினால் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களைச் சந்திக்க ஏப்ரல் திங்களில் நான் பம்பாய் சென்று, அங்கிருந்து டெல்லிக்குப் போய் சென்னை திரும்பிய பிறகு திரைமறைவில் ஒரு பெரிய நாடகமே அரங்கேறியிருக்கிறது என்பதை அப்போதுதான் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் யார் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தேனோ; அவர்கள் கழகத்தை ஊனப்படுத்தி, முடமாக்கத் திட்டம் தீட்டியுள்ளது கேட்டு அதிர்ந்து போனேன்.
