நெஞ்சுக்கு நீதி
கைவிலங்கு என்ன செய்யும்? · 228 / 391
11. கைவிலங்கு என்ன செய்யும்? ஜெ கஜீவன்ராம் கூறிய கருத்தையொட்டி முரசொலியின் முதல் பக்கத்தில் ஒரு சிறிய கட்டுரை 23.3.77 அன்று வெளிவந்தது. அந்தக் கட்டுரையில்; "பொதுவாகவே தென்பகுதியில் வாழ்வோர் பழமைவாதிகள் (Conservatives) என்பது உலகறிந்த உண்மை. பேராசிரியர் எகரன்ஃ பெல்ஸ் என்பார் இந்த உண்மையை விளக்கியிருக்கிறார். உலகத்தில் தெற்கு வடக்காக நீண்டிருக்கும் நாடுகளில் எல்லாம் தெற்கே வாழ்வோர் விவசாயத்தையே நம்பி வாழ்வோர்களாகவும், வடக்கே வாழ்வோர் நவீன தொழில் வளர்ச்சியில் நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர்.
பூமத்திய ரேகையிலிருந்து தூரம் அதிகம் ஆக ஆக சீதோஷ்ண நிலை மாறுகிறது; இதன் காரணமாகத் தான் மக்கள் மனநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது - என்பது அவர் கூறும் காரணம்! அமெரிக்காவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த தெற்குப் பகுதி, நீக்ரோ அடிமைகளை விடுதலை செய்ய மறுத்ததும் அதன் விளைவாக உள்நாட்டுப் போர் மூண்டதும் நினைவு கூரத்தக்கது. தெற்கே வாழ்வோர் பழமை விரும்பிகள்; புதிய மாறுதலை உடனடியாக ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
அந்த மனோநிலைதான் இப்போதும் இந்தியாவில் விந்தியத்திற்கு இப்பால் இருந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஜனதாவுக்கு ஒரே ஒரு கர்நாடகத்தில் இரண்டு இடங்களும்தான் கிடைத்திருக்கின்றன. கேரளத்தில் அதுகூட இல்லை. அங்கு மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு வருமென்று எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது தமிழ்நாடு பரவாயில்லை; நமது அணிக்கு நான்கு இடங்களாவது கிடைத்திருக்கின்றன. இந்திரா ஆட்சியை மாற்றவே முடியாது என்கிற எண்ணம் பலருக்கு இருந்தது.
வடக்கே அடிக்கிற புயலை எடுத்துச் சொன்ன போது, அதை நம்ப மறுத்தார்கள். மாறுதலை சுலபத்தில் விரும்பாத தென்னக மனோநிலைக்கு இது மேலும் ஓர் உதாரணமாகும். ஜனதா கட்சி ஒற்றுமையாக இருந்து, நிலையான ஆட்சியைத் தருமா? என்ற கேள்வி எழுந்ததையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. "எப்படியோ இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு வடக்குவாழ் மக்களைப் பாராட்டி, நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணிக்கு 103 இலட்சம் வாக்குகளும், தி.மு.க. கூட்டணிக்கு 67 இலட்சம் வாக்குகளும் கிடைத்திருந்த போதிலும் தி.மு.க. கூட்டணி நான்கு இடங்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் பெற முடிந்தது. என்பது இந்திய நாடு ஏற்றுக் கொண்டுள்ள தேர்தல் முறையின் விந்தைமிகு விசித்திரமாகும். இந்திரா காந்தி, தனது தோல்வியையும் தனது கட்சியின் தோல்வியையும் தமக்கேயுரிய மனவலிமையுடன் ஏற்றுக்கொண்டு, நாட்டின் பொதுப் பிரச்சினைகளில் தாமும் தமது கட்சியும், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு அளித்துப் புதிய அரசுடன் ஒத்துழைக்கத் தயார் என்றும், மக்களின் தீர்ப்பை, தாமும் தமது சகாக்களும் அடக்க உணர்வுடன் ஏற்பதாகவும் அறிக்கை விடுத்தார்.
அறிக்கையைத் தொடர்ந்து மார்ச் 22-ஆம் நாள் இந்திரா காந்தி, தமது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்த ஜட்டி அவர்களிடம் அளித்தார். இந்தப் பிரமாண்டமான தேர்தல் நேரத்தில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மறைவு மட்டுமின்றி; இந்தியப் பாட்டாளி மக்களின் இணையற்ற தலைவர்களில் ஒருவராக விளங்கிய கேரளத்துச் சிங்கம் ஏ.கே. கோபாலன் இயற்கை எய்தினார். தமிழகத்தில் சுய மரியாதைச் சுடராய்த் திகழ்ந்து பின்னர்ப் பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணாவின் தலைமையை ஏற்று, அதற்குப் பிறகு தனிக்கட்சி கண்டு அதற்குத் தலைவராகி, அந்தக் கட்சியைக் காங்கிரசுடன் இணைத்துவிட்டவரும் இளைமை கால முதல் எனது இனிய நண்பருமான ஈ.வெ.கி.
சம்பத் அவர்களும் இந்தக் கால கட்டத்தில் தான் தேர்தலுக்கு முன்னரே மறைந்து விட்டார். "எமர்ஜன்சி" யைக் கவசமாக அணிந்து கொண்டு, தமிழ்நாடு சுற்றுப்பயணம் வந்தபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர், பரூவா என்பவர்; "கருணாநிதியை ஒரு நீளமான குச்சியைக் கொண்டுதான் தொடவேண்டும். கை விரலால் தொட முடியாத அளவுக்கு மோசமான பேர்வழி" என்று சற்றும் நாகரீகமில்லாமல் துடுக்காகப் பேசினார் - அந்தப் பரூவா அவர்கள் காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருக்கவே தகுதியற்றவர் என்றும், அவரால்தான் இவ்வளவு பெரும் தோல்வி இந்திரா காந்திக்கே கூட ஏற்பட்டதென்றும் அதுவரையில் மத்திய அரசில் உள்துறை அமைச்சராக இருந்துவந்த பிரமானந்த ரெட்டி அவர்கள் வலியுறுத்தி, வெளிப்படையாகவே கருத்தறிவித்தார்.
1977 ஏப்ரல் 3ஆம் நாளன்று தி.மு.க., ஜனதா, மார்க்சிஸ்ட் கட்சியினர் இணைந்து சர்வாதிகாரத்தைச் சாய்த்து ஜனநாயகம் மலரச் செய்து, இந்தியாவில் புதிய ஆட்சியைக் கண்ட வெற்றித் திருவிழாவைத் தமிழக முழுதும் கொண்டாட வேண்டுமென கழகத்தின் பொதுச் செயலாளர் நாவலர் அவர்கள் அறிவிப்பு விடுத்தார். அதன்படி நான் சென்னையிலும், பொதுச் செயலாளர் நாவலர் கோவையிலும், ஜனநாயக வெற்றி விழாக் கூட்டங்களில் கலந்து கொண்டோம்.
மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசு மத்தியில் அமைந்தது. அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த கூட்டம் டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மார்ச் 24-ஆம் நாள் நடைபெற்றது. அவரைத் தலைவராக ஆச்சார்ய கிருபளானி முன் மொழிந்தார்.உடல் நலிவுடன் ஜெயப்பிரகாசர், சக்கர நாற்காலியில் அமர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்தார். கிருபளானியின் முன்மொழிதலையொட்டி ஜெயப்பிரகாசர் வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தீர்மானத்தை ராஜ் நாராயண் கொண்டுவர, வாஜ்பேயி வழி மொழிந்தார்.
தொடக்க விழாவிலேயே தொல்லை ஆரம்பமாகிவிட்டது. பாபு ஜெகஜீவன்ராம் அமைச்சராவார் என எண்ணி அவருக்கு நான் சென்னையிலிருந்து தொலைபேசியில் வாழ்த்துக் கூறினேன். அவர் அமைச்சரவை அமைப்பில் மனக் கசப்புடன் இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. பின்னர் ஒருவாறு தலைவர்கள் சமாதானப் பேச்சுகள் நடத்தி மொரார்ஜி பிரதமராகவும், சரண்சிங், ஜெகஜீவன்ராம், அத்வானி, பிரகாஷ் சிங் பாதல், பகுகுணா, சிக்கநத்தர் பக்த், சாந்திபூஷண், டாக்டர் பிரகாஷ் சந்தர், மதுதண்டவதே, நானாஜி தேஷ்முக், மோகன் தாரியா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், புருஷோத்தம் கெளசிக், ராஜ்நாராயணன், எம்.எம்.படேல், பிஜு பட்நாயக், பா.இராமச்சந்திரன், வாஜ்பேயி, ரவீந்திரவர்மா ஆகியோரை அமைச்சர்களாகவும் கொண்ட புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது.
இந்திரா காந்தி ஆட்சியில் கிரிமினல் வழக்கு ஒன்றில் சிக்க வைக்கப்பட்டு, அப்பீல் செய்திருந்த பிரகாஷ் சிங் பாதல் மொரார்ஜி அமைச்சரவையில் இடம் பெற்றார். பரோடா வெடிகுண்டு வழக்கில் எட்டுமாத காலம் கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். மார்ச் 21-ஆம் நாளில்தான் ஜார்ஜ் பெர்னாண்டசின் கை விலங்கு அகற்றப்பட்டது. சிறையில் இருந்தவாறே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பெர்னாண்டஸ்!
பரோடா வெடிகுண்டு சதி வழக்கில் அவரை இணைத்துப் பழிவாங்குவதற்காக இந்திரா காந்தி அரசு அவரைத் தேடியபோது அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். மிசாவில் கைது ஆகிவிடாமல் தப்புவதற்காக - அப்போது பல வடநாட்டுத் தலைவர்கள், தி.மு.க. ஆட்சி நடைபெற்ற தமிழகத்தில்தான் தஞ்சம் புகுந்தார்கள். என்னுடைய அன்பு நண்பர்களில் ஒருவராகவும், எனது நலத்தில் தனிப்பட்ட முறையில் நாட்டமுடையவராகவும் விளங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், தமிழகத்தில் எந்தப் பொதுக் கூட்டத்தில் பேசினாலும் அவரைச் சுட்டுக் கொன்று பிடிப்பதற்காக மத்திய அரச ஏவியிருந்த போலீசாரிடமிருந்து தன்னைக் காப்பாற்றியது கருணாநிதிதான் என்பதை நன்றியுணர்வுடன் குறிப்பிடத் தவறியதில்லை.
அப்போது எங்கள் இருவர் இதயமும் உணர்ச்சிப் பெருக்கால் விம்மும். அதனால்தான் பெருந்தலைவர் காமராஜரும், நீலம் கஞ்சீவ ரெட்டியும், ஈ.எம்.எஸ். போன்ற அகில இந்தியத் தலைவர்களும் "எமர்ஜன்சி நேரத்தில் இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் கூடிய ஒரே இடம் தமிழ்நாடுதான்" என்று வெளிப்படையாகவே போற்றினார்கள்.
ஜனதா பெரும் வெற்றி வாகை சூடியதையொட்டி, சிறையில் அடைபட்டிருந்த ஜார்ஜை புதுடெல்லி டிஸ்ஹசாரி நீதிமன்றத்திற்குக் கைகளில் விலங்குடன் அழைத்து வந்தனர். அவர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டது பற்றி அன்றையதினம் ஏடுகள் எழுதியதைப் படித்தால் உள்ளம் உருகும். "நீதிமன்றத்துக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கொண்டு வரப்பட்டபோது, போலீஸ் வண்டியிலிருந்து அவர் இறங்கியதும் - ஆயிரக்கணக்கில் கூடியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பெரிய வரவேற்பு தந்தனர்.
மாலைகள் அணிவித்தனர். அந்தப் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்க பெர்னாண்டஸ் கையை உயர்த்த முயன்றார். முடியவில்லை. காரணம் அவரது கைகளை விலங்கு பிணைத்திருந்தது. அப்போது பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி அவரது கைவிலங்குகளைப் போலீசார் தற்காலிகமாக அகற்றினர். பின்னர் அவர் கையை உயர்த்தி மக்களை வணங்கி விட்டுப் பேசினார். "கடந்த எட்டு மாதங்களாக எனக்குக் கைவிலங்கு பூட்டியிருந்தமைக்காக நான் கலக்கமடையவில்லை.
ஆனால் கடந்த 19 மாதங்களாக அவசர நிலைமை என்ற பெயரால் இந்திய நாட்டு மக்களுக்குப் பூட்டப்பட்டிருந்த கைவிலங்கு அகற்றப்பட்டது என்பதிலே மகிழ்ச்சியடைகிறேன். அந்த விலங்கு நீங்குவதற்காக, இந்த விலங்கை நான் அமைதியாக ஏற்றுக் கொண்டிருந்தேன். என்னையும் சேர்த்து எங்கள் இருபத்திரெண்டு பேர் மீது இந்திரா அரசைத் தூக்கி எறிவதற்காக சதி செய்தோம் - குண்டு வைத்தோம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்போது மக்களே இந்திராவின் அரசைத் தூக்கி வீசி விட்டார்கள்.
இனியும் எமக்கு எதிரான இந்த வழக்குப் பொருத்தமுடையதுதானா?" அவரது உரை கேட்டு, மக்கள் பெருத்த ஆரவார முழக்கம் செய்தனர். நீதிமன்ற வாசலில் பெர்னாண்டஸ் கைவிலங்குடன் இருப்பது போன்ற காலண்டர்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த நிகழ்ச்சியை அடுத்து ஒரு வாரத்திற்குள்ளாக அவர் புதிய மத்திய அமைச்சரவையில் ஓர் அமைச்சராகப் பொறுப்பேற்றார். கையில் விலங்குகள் தாங்கிய கைதியாக இருப்பதற்கும் - கையிலே பேனா பிடித்து அரசுக் கோப்புகளிலே கையெழுத்துப் போடுவதற்கும் - தயாராக இருக்கும் உறுதி படைத்தவர்களால் தான் பொதுவாழ்வில் வரலாறு படைக்க முடியும் என்பதற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் வாழ்க்கை, ஓர் உன்னதமான எடுத்துக்காட்டு!
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் முடிவுற்றதும் - நாடாளுமன்ற அவைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவைத் தலைவர் தேர்தலுக்கு நீலம் சஞ்சீவரெட்டி அவர்களின் பெயரை மொரார்ஜி தேசாய் முன் மொழிந்தார். எதிர்க்கட்சித் தலைவர் சவான் வழி மொழிந்தார். மற்றொரு வேட்புமனுவில் வாஜ்பேயி முன் மொழிந்தார். நாடாளுமன்ற கழக உறுப்பினர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி வழிமொழிந்தார். சஞ்சீவரெட்டி அவர்களை ஒருமனதாக அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் - கழகச் சார்பில் நாடாளுமன்றத்தில் நமது ஆசைத்தம்பி பாராட்டுரை நல்கினார்.
"திரு. சஞ்சீவரெட்டி ஜனநாயக மரபினைக் காப்பாற்றுவார் என்ற முழுநம்பிக்கை எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் தி.மு.க.வின் ஆதரவு வழங்கப்படும். சஞ்சீவ ரெட்டி அவர்கள் முன்பு குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக நின்றபோது, தி.மு.கழகம் ஆதரவு கொடுக்க முடியாத நிலைமை இருந்தது. இப்போது இந்தியத் திருநாட்டின் அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. நெருக்கடி நிலையால் ஏற்பட்ட கடந்த 19 மாதகால அனுபவங்கள் இந்திய அரசியலில் புதிய சூழலை உருவாக்கி விட்டது.
பெருமளவில் தி.மு.க. அணி வெற்றி பெற்று இடங்களைப் பிடிக்காவிட்டாலும், எமர்ஜன்சியை எதிர்த்து நின்ற ஜனநாயகப் போராட்டத்தில் தி.மு.க.வின் பங்கு கணிசமானது என்ற அடிப்படையில்தான் அவைத்தலைவராகத் தங்களை வழிமொழியும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்."
இவ்வாறு ஆசைத்தம்பி அவர்கள், அவைத் தலைவரைப் பாராட்டிப் பேசியதில் மட்டுமல்ல; தனியொரு கழக உறுப்பினராக இருந்து அவர் நாடாளுமன்றத்தில் ஒலித்த பேரிகை முழக்கம் தமிழர்களுக்காக, தமிழ் நாட்டுக்காக, கழகக்கொள்கைகளின் வெற்றிக்காகப் பெருமுழக்கமாகவே தொடர்ந்து இருந்தது. மொரார்ஜி தலைமையில் புதிய அரசு அமையும் போதே ஒருசில குழப்பங்கள். அதனால் முழுமையான அளவில் அமைச்சரவை உருவாகச் சில நாட்களாயின. நெருக்கடி காலத்தில் பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது என்ற அடிப்படையில் முதற்கட்டமாக, இந்திரா அரசு ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது தொடுத்திருந்த பரோடா வெடிகுண்டு சதி வழக்கினை மொரார்ஜி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
அதைப்போலவே மத்திய அமைச்சராகிவிட்ட பிரகாஷ் சிங் பாதல் மீது இந்திரா காந்தி காலத்தில் தொடரப்பட்ட கிரிமினல் வழக்கும் திரும்பப் பெறப்பட்டது. ஜனதா கட்சி முன்னணியினரில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி மீது, அந்நியச் செலாவணி குற்றத் தடுப்பு இயக்குநரகம்; அந்நியச் செலாவணி சம்பந்தமாக அவர் மீது மூன்று புகார் கூறித் தொடுத்திருந்த வழக்கும் திரும்பப் பெறப்பட்டது ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய், சட்ட அமைச்சர் சாந்திபூஷண் உள்ளிட்ட ஜனதா கட்சித் தலைவர்கள் எல்லாம், இந்திரா அரசு தி.மு.கழகத்தினர் மீது போட்டுள்ள வழக்குகள் அனைத்தும் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துடன் போடப்பட்டவை என்று மேடைகளில் பேசினார்களே - அந்த வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டுமேயென்று எண்ணினார்களா?
அதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன்.
