உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தேர்தல் முடிவும் தென்னகமும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தேர்தல் முடிவும் தென்னகமும் · 227 / 391

10. தேர்தல் முடிவும் தென்னகமும் பனகல் பூங்கா கூட்டத்தில் தோழர் பி.ஆர். அவர்கள் மேலும் பேசுகையில், "இந்தத் தேர்தலில் யார் வேட்பாளர் என்பது பிரச்சினையல்ல. இந்தத் தேர்தலில் இரண்டே வேட்பாளர்கள்தான் நிற்கிறார்கள். ஒருபுறத்திலே ஜனநாயகம் மறுபுறத்திலே சர்வாதிகாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது, "இந்த நாட்டில் இருள் பரவிவிட்டது" என "சுயராஜ்யா" இதழில் ஆர். வெங்கட்ராமன் எழுதினார்.

ஆனால் இப்போது அவர் ஆளுங்காங்கிரசின் வேட்பாளராக நிற்கிறார்" என்றும் குறிப்பிட்டார். எமர்ஜன்சி பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனைக் கண்டித்து திரு.ஆர்.வெங்கட்ராமன் "சுயராஜ்யா" ஏட்டில் அதன் ஆசிரியர் என்கிற முறையில் பின்வருமாறு எழுதியதை யார்தான் மறந்துவிட முடியும்! இதோ அது:- "இந்திய அரசு அவசர நிலையைப் பிரகடனம் செய்திருப்பது அரசியல் சட்ட துஷ்பிரயோகமாகும். இந்தியப் பிரஜைகளின் உரிமைகளை மறுப்பதுமாகும்.

சீன ஆக்ரமிப்பைத் தொடர்ந்து 1962-ல் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை, ஆக்ரமிப்பு சில வாரங்களில் முடிந்துவிட்ட போதும் கூட 1969 வரையில் நீடித்தது. 1971-ல் பாகிஸ்தான் ஆக்ரமிப்பைத் தொடர்ந்து செய்யப்பட்ட அவசரச் சட்டப் பிரகடனம் 1971-ல் சண்டை முடிந்தும்கூட அமலில் இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இந்த நாடு அவசர கால சட்டத்தின் படியே இயங்கி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், அரசியல் சட்டம் பிரஜைகளுக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகள் "எமர்ஜன்சி" என்னும் பெயரால் பிடுங்கப் பட்டுவிட்டன...

இது போன்ற "எமர்ஜன்சி" விதிகள், உலகில் வேறு எந்த ஜனநாயக அரசியல் சட்டத்திலும் கிடையாது. ஜெர்மனியின் மூன்றாவது குடியரசு இப்படி மிக அதிகமான அதிகாரத்தை இட்லருக்கு வழங்கிய காரணத்தினால்தான் அவர் சர்வாதிகாரியாக முடிந்தது. ஆகவே, நாம்தான் அரசியல் சட்ட விதிகள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...."

இவ்வாறு தன்னை ஆசிரியாராகக் கொண்ட சுயராஜ்யாவில் கடுமையாக எழுதிய ஆர்.வி. அவர்கள் இந்திரா காங்கிரசின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதைக் கண்டித்துத்தான் மார்க்சிஸ்ட் தலைவர் இராமமூர்த்தி தியாகராய நகர் கூட்டத்தில் முழக்கமிட்டார். அன்றைய கூட்டத்தில் பாபு ஜெகஜீவன்ராம் ஆற்றிய உரை, என் மனப்புண்ணுக்கு மருந்தாக அமைந்தது என்றே கூறலாம். அந்த உரையை நினைவூட்ட விரும்புகிறேன். 28.2.77-ல் அவர் ஆற்றிய உரை மறுநாள் காலை, மாலை ஏடுகளில் வெளிவந்தது.

"திரு. கருணாநிதி அவர்கள் எந்த நாற்காலியில் அமருகிறாரோ அதன் காரணமாக அந்தப் பதவிநாற்காலிக்குப் பெருமை கிடைக்கும். அத்தகைய மனிதர்தான் கருணாநிதி. திரு. கருணாநிதி, உள்ளார்ந்த ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். மக்களுடைய அடிப்படையைப் பலமாகக் கொண்டவர். பதவியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் கருணாநிதியின் நிலைமையைப் பொருத்து எந்தவித மாற்றமுமில்லை. எந்தவித விசாரணைக் கமிஷனும், கற்பனையாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கைக் குறைத்துவிட முடியாது.

அவர் தனி ஆற்றலும் சுதந்திரமான உணர்வும் கொண்டிருந்த காரணத்தால் அவரைத் தொடர்ந்து முதல்வராக இருக்க பிரதமர் இந்திரா அனுமதிக்க மாட்டார் என்பதை நான் முன்னமே அறிவேன். அதனால்தான் நான் கருணாநிதியிடம் கூறினேன்; "உங்கள் வெடி மருந்தை உலர்த்திப் பக்குவமாக வைத்திருங்கள்!"

என்று- நான் சொன்னபடியே அவர் செய்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்." ஜெகஜீவன் உரை நிகழ்த்திய இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மார்ச் 4-ஆம் நாள் சென்னையில் மயிலை, திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை ஆகிய இடங்களில் பேசிய பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷண் அவர்கள் தி.மு.க. அமைச்சர்கள் மீது போடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அரசியல் காழ்ப்புடன் போடப்பட்ட ஒன்று என்பதைப் பல்வேறு காரணங்களை எடுத்துரைத்துக் கண்டனம் செய்தார்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தி.மு.க. சார்பில் அவரே வாதாட முன்வந்ததையும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி சர்க்காரியா ஒப்புக் கொள்ளாததால் விசாரணையைப் புறக்கணித்து வெளியேறியதையும் சாந்தி பூஷண் விளக்கிப் பேசினார். மார்ச் 7-ஆம் நாள் பம்பாய் "ஜஸ்லோக்" மருத்துவமனையிலிருந்து ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் குறித்த வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டார். "அன்புள்ள நண்பர்களே!

சென்னைக்கு வந்து உங்களை நேரில் சந்தித்துப் பேசலாமென்றுதான் நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இப்போது பம்பாய் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில் நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்து, மத்தியிலே புதிய அரசை அமர்த்த இருக்கிறீர்கள். ஒரே கட்சியின் 30 ஆண்டுக்கால ரிக்கார்டும், ஒரு தனி நபரின் பத்தாண்டுக்கால ஆட்சியும் உங்கள் முன்னாள் இருக்கின்றன.

நீங்கள்தான் அதன் விளைவுகளைப் பரிசீலனை செய்ய வேண்டும். அதன் விளைவுகளில் நீங்கள் திருப்தி அடைந்திருந்தால் நான் எதுவும் சொல்வதற்கில்லை. இதுவரை நடந்தவை குறித்தும், இப்போது நடந்து கொண்டிருப்பவை குறித்தும், நான் தனிப்பட்ட முறையில் பெரிதும் வேதனை அடைந்துள்ளேன். அனைவராலும் வெறுக்கப்படும் நெருக்கடி நிலை இன்னும் அமலில் இருக்கிறது. முற்றாக அகற்றப்படவில்லை. நூற்றுக்கணக்கான அரசியல் தொண்டர்களும், சமுதாய ஊழியர்களும், தலைவர்களும் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது, தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதிக்கக்கூடாத அவமானத்திற்குரிய நிலைமையாகும். இவையனைத்தையும் மாற்றுவதற்கும் மீண்டும் நாட்டை சுதந்திரத்துக்கும் உண்மையான ஜனநாயத்துக்கும் அழைத்துச் செல்லவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அதிர்ஷ்டவசமாக ஒரு வாய்ப்பினை அளித்திருக்கிறது. அதுபோலவே மத்தியில் காங்கிரசை நீக்கும் வல்லமை பெற்ற ஒரு ஒன்றுபட்ட எதிர்க்கட்சி இப்போது தோன்றியுள்ளது. அதுதான் ஜனதா கட்சியாகும்.

உங்களுக்குத் தமிழ்நாட்டில் உங்களுடைய தி.மு.க. இருக்கிறது. நான் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - நீங்கள் தி.மு.க. வுக்கும் ஜனதா கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும். கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியும் மேற்கூறிய கட்சிகளுடன் உடன்பாடு கொண்டு தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. அக்கட்சியும் உங்கள் ஆதரவையும் வாக்கையும் பெற வேண்டும். உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் உண்மையுள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண்". ஜெயப்பிரகாஷரின் இந்த அறிக்கையையொட்டி; "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி" என்ற பிரபல ஆங்கில ஏட்டின் சார்பில் அவரைப் பேட்டி கண்ட குஷ்வந்த் சிங் அவர்கள் கேட்ட கேள்வியையும் அதற்கு லோக்நாயக் ஜே.பி. அளித்த பதிலையும் காண்போம். கேள்வி:- தி.மு.க. ஒரு பிரிவினைக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதன் தலைவர்கள் ஊழல் புகார் விசாரணையின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் ஜனதா கட்சி தேர்தல் உறவு வைத்திருப்பதில் நீங்கள் மகிழ்கிறீர்களா? பதில்:- தனக்குப் பிரிவினையில் நம்பிக்கை இல்லை இல்லையென்று தி.மு.க. பலமுறை எடுத்துக் கூறியுள்ளது. ஆனால் பிரிவினைவாதிகள் என்ற நிந்தை இன்னும் அதைவிட்டுப் போகவில்லை. இது மெத்த விந்தையானதே. தி.மு.க. தலைவர்களுடன் பலமுறை நெருக்கமாக விவாதம் நடத்தியவன் என்ற வகையில் அவர்களிடம் பிரிவினைக் கொள்கைகள் எதுவும் இல்லை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

நான் ஊழலுக்காக வாதிடுபவனல்ல. ஆனால் பதவியைப் பெற முதற்கருவியாக ஊழலையே கையாண்ட இந்திரா காந்தியின் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சி, மற்றவர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு கமிஷன் போடுவது சரியில்லை என்றே எனக்குப்படுகிறது. மத்தியில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி, மற்றும் மாநிலங்களில் எல்லாக் கட்சி ஆட்சிகள் மீதும் ஊழல் பற்றிய புகார்களை விசாரிக்கக் குடியரசுத் தலைவர் ஒரு விசாரணை நீதிமன்றத்தை அமைக்கட்டும்.

அந்த விசாரணையின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பே, மற்றவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க இந்திரா காந்திக்குத் தகுதியும் உரிமையும் உண்டு. ஜே.பி. அவர்களின் இந்தப் பேட்டி "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி" யில் மட்டுமின்றி - பல்வேறு மொழி ஏடுகளிலும் வெளிவந்தது. அனைத்து இந்தியத் தலைவர்கள் வரிசையில் அசோக் மேத்தா அவர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகம் வந்தார். எமர்ஜன்சியில் பல்வேறு மாநில அரசியல்வாதிகள் பட்ட கொடுமைகளையெல்லாம் கூட்டங்களில் உருக்கமாக வர்ணித்த அசோக் மேத்தா அவர்கள், "தமிழ்நாட்டில் உள்ள உங்களுக்கு நெருக்கடி நிலை விளைவுகளின் முழு அனுபவம் ஏற்படவில்லை.

காரணம் நெருக்கடி நிலை பிரகடனத்துக்குப் பிறகும் இங்கே தி.மு.க. ஆட்சி ஆறு மாதத்துக்கு மேல் இருந்தது. மக்களைக் கொடுமைக்கு ஆளாக்கக்கூடிய அடக்குமுறை உத்திரவுகளை மத்திய அரசு பிறப்பித்தபோது, அதற்குக் கீழ்ப்படிய மறுத்தது தி.மு.க. அரசு! சோதனைமிக்க அந்த நேரத்தில் உறுதி குலையாது எதிர்த்து என்ன விலையேனும் கொடுப்போம் என்று எழுந்து நின்றது உங்கள் தி.மு.க. அரசு! அதன் விளைவாக அது பின்னர்த் தண்டனைக்கு ஆட்பட்டது" என்று கூறியபோது கழகக் கண்மணிகள் அனைவரும் நெஞ்சுயர்த்திப் பீடுநடை போட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

மார்ச் 15-ஆம் நாள் சென்னை கடற்கரையில் பா.இராமச்சந்திரன் தலைமையில் நானும், விஜயலட்சுமி பண்டிட், அசோக் மேத்தா ஆகியோரும் பேசினோம். விஜயலட்சுமி பண்டிட் அவர்கள் பேச்சின் சில பகுதிகள் வருமாறு:- "முன்பு நாம் துன்பம் மிக அடைந்து சாதித்த சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல் இது. நமது நண்பர் கருணாநிதி அவர்கள் இங்கே குறிப்பிட்டது போல சுதந்திரப்போராட்டத்தில் பங்கு பெற நல்வாய்ப்பினைப் பெற முடியாத பலர்; பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இப்போராட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.

திரு. கருணாநிதி அவர்கள் இங்கே மூசாபர் நகர் சம்பவம் பற்றிச் சொல்லியிருக்கிறார். என் அண்டை ஊர் அது. அங்கே நான் நேரில் சென்று பார்த்தேன். குடும்பநலக் கட்டாய அறுவையை எதிர்த்துத் தமது முறையீட்டை டெல்லிக்குச் சென்று தெரிவிக்கத் தீர்மானித்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எத்தகைய அக்ரமம் இது ! காலையிலேயே சென்னை நிருபர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். நேருவின் ஜனநாயகத்திற்கும் - இந்திராவின் ஜனநாயகத்துக்கும் என்ன வேறு பாடு என்பதே அந்தக் கேள்வி.

நேரு நடத்திய ஆட்சி மக்களின் விருப்பத்தின்படி நடந்த ஆட்சி. இன்று நடப்பதோ மக்களை அடக்கி ஆளும் ஆட்சி. இது தான் எனது பதில்." தேர்தல் பிரச்சாரத்தில் அகில இந்தியத் தலைவர்கள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டுக் கூட்டணித் தலைவர்களும் - குறிப்பாகக் கழகச் சார்பில் நானும், பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், பொருளாளர் பேராசிரியர் அவர்களும் கழக முன்னணித் தளபதிகளும் தமிழகம் முழுதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டோம்.

இலட்சக்கணக்கில் கூடிய மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட எங்களின் அந்தப் பிரச்சாரத்திற்கு ஈடு கொடுக்க இந்திரா காங்கிரஸ் அளவற்ற பணத்தைத் தொகுதிகளில் தண்ணீராக ஓடவிட்டது. அதற்கு இணையாக அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வும் செலவிட்டது! தி.மு.கழகமோ; வழக்கு நிதி சேர்த்துச் சோதனைகளை எதிர்கொண்ட நேரம் அது. கழகத்தின் கூட்டணிக்கட்சியான ஜனதா கட்சிக்கே, கழகம் கடன் தந்து அதனைப் பிறகு பா.ரா அவர்கள் திருப்பித் தந்தார் என்றால் எங்கள் அணியின் பொருளாதார நிலையைப் புரிந்து கொள்ளலாம்.

அதுவும் எவ்வளவு? பத்து இலட்சமா? கோடியா? ஒரே ஒரு இலட்ச ரூபாய்! காமராசர் தலைமையில் அணி வகுத்து நின்று இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காங்கிரஸ்காரர்கள் பெரும்பாலோர் திரு.கருப்பையா மூப்பனார் அவர்கள் தலைமையில் இந்திரா காங்கிரசில் இணைந்துவிட்டதால், தி.மு.க.வின் தோழமைக் கட்சியான ஜனதா கட்சி பெரும்பலத்துடன் இருந்ததாகச் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் விட, பொழுது விடிந்து பொழுது போனால் தி.மு.க.வைப் பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்ய அரசின் விளம்பர சாதனமான வானொலி முடுக்கிவிடப்பட்டிருந்தது.

எனவே தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, தி.மு.க. சார்பில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நண்பர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களும், ஜனதா கட்சி சார்பில் மத்திய சென்னையில் நண்பர் பா. இராமச்சந்திரன், வேலூர் தொகுதியில் நண்பர் தண்டாயுதபாணி, நாகர்கோயில் தொகுதியில் நண்பர் குமரி அனந்தன் ஆகிய நான்கு இடங்களே தமிழ்நாட்டில் கூட்டணிக்குக் கிடைத்தன. இந்திராகாந்தி உள்ளிட்ட அவர் கட்சியின் பெருந்தலைகள் அனைத்தும் வட மாநிலங்களில் தோல்வியுற்றுச் சரிந்தன.

ஜனதா -ஜனநாயக காங்கிரஸ் -மார்க்சிஸ்ட் -அகாலிதளம் -தி.மு.க. -இ.காங்கிரஸ் -அ.தி.மு.க. -இந்திய கம்யூனிஸ்டு -பிறகட்சிகளும் சுயேச்சைகளும் -தேர்தல் முடிவின் இறுதி நிலவரமாக இன்னும் ஐந்து தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் மத்திய அரசில் காங்கிரஸ் அகற்றப்பட்டு முதல் தடவையாக மாற்றுக் கட்சி ஆட்சி; ஆம், ஜனதா ஆட்சி அமைகிறது என்ற அறிவிப்பு வெளிவந்தது. நாடு மகிழந்தது. "நெருக்கடி நிலையின் கொடுமைகளைத் தென்னக மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை" என்று ஜெகஜீவன்ராம் இரத்தினச் சுருக்கமாகத் தேர்தல் முடிவு பற்றிக் கருத்துத் தெரிவித்தார்.