உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/காமராஜர் மரணம் 2.10.1975
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

காமராஜர் மரணம் 2.10.1975 · 226 / 391

2. தி.மு.க. அமைச்சர்கள் மீது ராஷ்டிரபதிக்குப் புகார் மகஜர் அனுப்பப்பட்டது 1972 நவம்பர். 3. அந்த மகஜர் பற்றி சமாதானம் கூறும்படி இந்திய அரசு தமிழக முதலமைச்சருக்கு எழுதியது 1972 நவம்பர் 15. 4. தமிழக முதல்வர் (கருணாநிதி) டில்லிக்குப் பதில் அனுப்பிய நாள் 1972 டிசம்பர் 14. 5. மகஜர் அனுப்பியவர்களின் எதிர் உரை டில்லிக்கு அனுப்பப்பட்டு அதை டில்லி அரசு முதல்வருக்கு அனுப்பியது 1973 பிப்ரவரி 17. 6.

எதிர் உரைக்குத் தமிழக முதல்வரின் பதில் அனுப்பியது:- 1973 மே 28. 7. ராஷ்டிரபதி நெருக்கடி நிலை பிரகடனம் 1975 ஜூன் 25. 8. நெருக்கடி நிலையை எதிர்த்துத் தி.மு.க. தீர்மானம் 1975 ஜூன் 27. 9. காமராஜர் மரணம் 2.10.1975 10. தமிழகத்தில் ராஷ்டிரபதி ஆட்சியில் 1972ல் சமர்ப்பித்த மகஜர் மீது விசாரணைக்கு உத்திரவு 1976 பிப்ரவரியில். குறிப்பு:- முதலில் குறிப்பிட்ட 2 ஆண்டு இடைவெளிக்குக் காரணம் என்ன? 25.6.75க்கு முன்னரோ; 2.10.75க்கு முன்னரோ; 10-வது அயிட்டம் நடந்திருக்கக் கூடாதா?

குறுக்கிட்டது எது? நடவடிக்கைகளைத் தூண்டியது எது? இப்படி தினமணியில் வந்த வினாக்களுக்கு விளக்கம் என்ன? பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கழக ஆட்சியை இந்திராகாந்தி கலைப்பதற்குக் குறுக்கே நின்றார். கலைப்பது ஜனநாயகமல்ல என்று இந்திராவுக்குச் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார். அதனால் இந்திரா காந்தி கழக ஆட்சியைக் கலைத்திட அஞ்சினார். காமராஜர் மறைந்த பிறகு இந்திரா காந்திக்குக் கழக ஆட்சியைக் கலைத்திடக் குறுக்கே இருந்த தடை நீங்கிவிட்டது.

இந்த உண்மையைத்தான் தினமணி கேள்விகள் வாயிலாக விளக்கியிருந்தது 6.2.77 இதழில். ஆட்சியைக் கலைப்பதற்கு முன்பு நானே காமராஜரிடம் நேரிலும், சஞ்சீவ ரெட்டியார் மூலமும் கழக அமைச்சர்கள் பதவி விலகிவிடுகிறோம் எனக் கூறிய போதும் காமராஜர் அவர்கள் அதனை விரும்பவில்லை. இந்தியாவில் சுதந்திரத்தை சுவாசிக்கும் வாய்ப்பு இந்த ஒரு மாநிலத்தில்தான் இருப்பதாகக் கூறி, எனது முடிவை மறுத்துவிட்டார். எப்படியோ அந்தப் பெருந்தலைவர் மறைந்தபிறகு கழக ஆட்சியைக் கலைத்துவிட்டு; அவர் நினைவாக நான் அரசின் சார்பாக அமைத்திருந்த நினைவு மண்டபத்தையும் இந்திராகாந்தி அம்மையார் திறந்து வைத்துவிட்டார்.

77 பிப்ரவரி 10-ஆம் நாள் தேர்தல் அறிக்கை வெளியிடும் பொதுக் கூட்டத்திற்கும், அன்று காலை மாவட்டக்கழகச் செயலாளர்கள் கூட்டத்திற்கும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.டி.சீதாபதி மும்முரமாகப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, தத்துவக் கவிஞர் குடியரசு ஒரு கவிதை எழுதி வெளியிட்டார். அதை முழுவதுமாகக் குறிப்பிடாவிட்டாலும் ஓரிரு வரிகளை நினைவூட்டியே ஆக வேண்டும். "நெருப்புக்குக் குளிரெடுத்தால் நடுங்கும்; சாம்பல் நெஞ்சுக்குள் ஓய்வெடுக்கும் கலைஞர் என்னும் திருக்கோலம் நடுங்கியதாய் வரலா றில்லை!

கோடுகளே! வளையாதீர்! உங்கள் கோணல் கோழைகளை எழுதிவிடும்! இந்தத் தேர்தல் ஆடுகளை விற்கின்ற சந்தை அல்ல அச்சமற்ற இந்தியாவின் அரிமா நோக்கு!" பசுமரத்தாணி போல் பதியக் கூடிய தேர்தல் பிரச்சாரக் கவிதை! ஆனால் பட்டி தொட்டியெங்கும் பரப்பப்பட கழகத்திடம் ஆளுங்கட்சியைப் போல வசதி வாய்ப்புகள் இல்லையே! எனவே, எளிமையாக அதே நேரம் எழுச்சி குலுங்க, சென்னைக் கடற்கரைக் கூட்டத்திற்கான வேலைகளைக் கழகத்தினர் விரைந்து நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு முதல் நாள் திடுக்கிடும் செய்தியொன்று கிடைத்தது. சோர்ந்து போனேன். அயர்ந்தேன். அதிர்ச்சியுற்றேன். பல காலமாக அறிந்த ஒருவர், சில காலம் நெருங்கிப் பழகி என்பால் அன்பைப் பொழிந்தவர், இலங்கை ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் மலேசியாவில் ஈப்போ சென்றிருந்த போது அங்கே மரணமுற்றார் என்பதே அந்தத் துன்பச் செய்தி. அவர் இலங்கைத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

பைந்தமிழ் ஆர்வலர். அரசவை வழக்கறிஞர் எனும் தகுதி பெற்ற சட்ட மேதை. இலங்கை அரசில் தமிழர் பிரதிநிதியாக அமைச்சர் பதவி வகித்தவர். இலங்கை அரசின் பிரதிநிதியாக ஐ.நா. அவைக்கும் சென்றவர். பின்னர் இலங்கையில் தமிழர் உரிமைப் போர் எழுந்தபோது, இனநலம் காப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். சிங்களம் மட்டுமே நீதிமன்ற மொழி என்று 1970ல் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தவுடன் அங்கு நீதிமன்றம் செல்வதையே நிறுத்திவிட்டார்.

1976-ல் தமிழ் ஈழத் தனிநாட்டுக் கோரிக்கைக்காக அமைதி வழி போராட்டம் நடத்தி நாவலர் அமிர்தலிங்கனார் போன்றவர்கள் துண்டு அறிக்கை வெளியிட்டு, யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது கடுமையான சட்டங்கள் பாயந்தபோது, ஆறாண்டுக் காலம் நீதிமன்றமே செல்லாமல் இருந்த இவர் இலங்கையின் நெருக்கடிக் காலச் சட்டத்தை எதிர்த்து வாதாடி வெற்றி பெற்று அறப்போர்த்தலைவர்களை விடுவித்தார். தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தனி ஈழம் கோரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் கூட்டுத் தலைவர்களில் ஒருவராகத் தொண்டு புரிந்தவர்.

அத்துடன் என்மீது இங்குள்ள காங்கிரஸ் அரசு போட்ட வழக்குகளில் வாதாடுவதற்காக அவரே மிகுந்த உணர்ச்சியுடன் வந்து வாதாடினார். வழக்குக்காக அவர் வரும்போதெல்லாம் என்மீதும் கழகத்தின் மீதும் அவர் காட்டிய பரிவும் பாசமும் மலையளவு! கடல் அளவு! நான்கு புறமும் கொடுமைகள் தாக்கிடும் "எம்ர்ஜன்சி" நேரத்தில் இலங்கையிலிருந்து ஒரு தமிழர் - சட்டமேதை - அனைவரும் போற்றும் ஆற்றலாளர் - பதவியிழந்து வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டிருந்த எனக்கு ஆறுதலாக வாதாட முன் வந்தார் என்றபோது அந்தப் பெரியவரின் பிரிவு தமிழகத்தில் உள்ள தமிழ்ப் பற்றாளர்கள் அனைவராலும் கவலையுடன் உணரப்பட்டது.

தந்தை செல்வா அவர்களையும் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களையும் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களைக் காண்பதற்கும் பழகுவதற்கும் முன்பே, கண்டு பழகியவன் நான் என்றாலும் தமிழ்ஈழ மக்களின் பிரச்சினை குறித்து சென்னையில் பொன்னம்பலம் அவர்களுடன் நீண்ட நேரம் விவாதிக்கிற வாய்ப்புக் கிட்டியது. என் வழக்கிற்காக அவர் வரும்போதெல்லாம் அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் தமிழ்ஈழ மக்களின் அமைதியான உரிமைப் போராட்ட வரலாற்றினைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த அத்தியாயத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த 1991-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழ் ஈழ மண்ணில் ஆயுதமேந்திய தமிழ்ப் போராளிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள இராணுவத்தினர் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. போராளிகளின் ஒற்றுமையின்மையும், சகோதர யுத்தமும், ஒருசில தவறான அணுகுமுறைகளும், இங்குள்ள தமிழ் மக்களின் மனத்தில் இருந்த அனுதாப உணர்வு பெரிதும் குறைந்திடவும் - தமிழ்ஈழ மக்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஏக்கம் கொண்டிடவுமான நிலைமைக்குக் காரணங்களாகி விட்டன.

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினை எப்படியெல்லாம் வடிவெடுத்தது என்பது குறித்து விரிவாக இந்த மூன்றாம் பாகத்திலேயே எழுதும் வாய்ப்பு இருப்பதால்; அதனை இப்போது விவரிக்காது விடுகிறேன். 10.2.1977 சென்னைக் கடற்கரையில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடிய மாபெரும் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழக வேட்பாளர்களின் முதல் பட்டியல் 24 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதுவரையில் தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.

புதுவை நாடாளுமன்றம் உள்ளிட்ட நாற்பது தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு மட்டுமே அறிவித்ததற்குக் காரணம்; தோழமைக் கட்சிகளுடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைக்கு இடம் இருக்கிறது என்பதினால் தான். அந்தக் கூட்டத்தில் கழகத் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையின் இறுதிப் பகுதி பின்வருமாறு அமைந்தது. அதாவது:- "இன்றைய நிலையில் வாக்காளப் பெருமக்களின் முன் எழுந்துள்ள கேள்விகள் யாவை? நாட்டில் மற்ற கட்சிகளுக்கும் சந்தர்ப்பம் இருக்கக் கூடிய மக்களாட்சி முறையா?

அல்லது ஒரே கட்சிதான் இருந்திட வேண்டுமென்ற காட்டாட்சி முறையா?" "சுதந்திரமான நீதித்துறை இயக்கமா? அல்லது அச்சுறுத்தப்பட்ட நீதி தேவர்களின் மயக்கமா?" "சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவமா? அல்லது சட்டத்தின் ஆட்சிக்குச் சமாதி எழுப்பிவிட்டு ஆளுக்கொரு நீதி என்ற அநீதியா?"

"கட்டுப்பாடும் ஜனநாயகமும் இணைந்த நிலையா? அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் தற்கொலையா?" "மக்களிடையே அமைதியும் உரிமையும் தவழும் சூழலா? அல்லது அதிகார அராஜகமும் அரசியல் வஞ்சம் தீர்ப்பதுமான சூதுச் சுழலா?" "சுருக்கமாகச் சொன்னால்; ஜனநாயகமா? எதேச்சாதிகாரமா?"

இந்த வினாக்களுக்கு விடையளியுங்கள் என்றுதான், வாக்காளப் பெருமக்களை தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை கேட்டுக் கொண்டது. சென்னைக் கடற்கரைக் கூட்டம் முடிந்த மறுநாள் (11.2.77) காலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ரூதீன் அலி அகமது அவர்கள் திடீரென மறைந்தார் என்ற செய்தி இந்திய மக்களின் நெஞ்சைக் குலுக்கியது. கழக ஆட்சியைக் கலைப்பதற்குக் கையெழுத்திட்டவராயிற்றே என்று எண்ணிட முடியுமா? குடியரசுத் தலைவர் தேர்தலில் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வீடு தேடி வந்தவர் மட்டுமல்ல- இந்திராகாந்தியின் எமர்ஜன்சிப் பிரகடனத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாமலே; வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு கையொப்பமிட்டார் என்ற நம்பகமான செய்தியும் அவர்மீது ஒரு அன்பையும் மரியாதையையும் ஏற்படுத்துகின்றன அல்லவா?

கண்ணியமிக்க ஒரு மனித மேதை காலமாகிவிட்டார் என்றதும்; கடந்த கால நிகழ்வுகளில் கசப்பானவை மறைந்து போய், அவரது சிறப்புகள்தானே முன்னால் வந்து காட்சியளிக்கும். அந்த அடிப்படையில்தான் நான் பக்ரூதீன் அலி அவர்களின் மறைவு குறித்து வானொலியில் உரையாற்றினேன். வானொலியிலும் தொலைக் காட்சியிலும் என்னைப் போன்றோர் பதவியில் இருக்கும்போது எடுத்ததற்கெல்லாம் பேச அழைப்பார்கள். பதவியில்லையேல்; அதுவும் என்னை யாராவது பெரும்புள்ளிகள், தலைவர்கள் மறைந்து விட்டால் இரங்கலுரை ஆற்றுவதற்கு மட்டுமே அழைப்பார்கள்.

அப்படித்தான் பக்ரூதீன் அலி அவர்களின் மறைவுக்கு இரங்கலுரையாற்ற வானொலியாளர்கள் அழைத்தனர். வானொலியில் நான் இரங்கலுரையில்; "மதச்சார்பற்ற கொள்கையின் சின்னமாக விளங்கியவர் பக்ருதீன் அலி அகமது. அவர், அடக்கமான பண்பும் அன்பான உள்ளமும் எளிமையான இயல்பும் படைத்தவர். கழக அரசு தமிழகத்தில் நடைபெற்ற காலத்தில் அப்போது மத்திய அரசின் அமைச்சர்களில் ஒருவராக இருந்த அவரை நான் தமிழக முதல்வர் என்ற முறையில் பலமுறை அணுகிப் பேசி விவாதித்தது உண்டு, இந்த மாநிலத்தின் தேவைகளுக்காக!

அப்போது அவர் காட்டிய முகமலர்ச்சியும் குடியரசுத் தலைவர் ஆனபிறகும் அவர் வெளிப்படுத்திய அன்பும், உளமார நேசித்த பண்பும், என்றைக்கும் மறக்கக் கூடியவை அல்ல. சாவின் கொடிய கரங்கள் மென்மையான மலர்களையெல்லாம் பறித்துக் கசக்கி எறிந்துவிடுகின்றன. நாட்டின் நாயகராக விளங்கியவரை - காலம், நம்மிடமிருந்து கடத்திச் சென்று விட்டது. சிறந்த முஸ்லீம் ஒருவரை இழந்துவிட்டோம். இந்தியாவின் தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டோம்.

நல்ல நிர்வாகியொருவரை இழந்துவிட்டோம். அந்தப் பெருமகனாரின் மறைவுக்கு, கழக சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மறைந்த பெரியவருக்கு இதயமார்ந்த அஞ்சலியைச் செலுத்தினேன். பிப்ரவரி 15ந் தேதியன்று தி.மு.க. ஜனதா கட்சி தேர்தல் உடன்பாடு பற்றிப் பேச திரு.நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள் சென்னைக்கு வந்தார். 7. ஜனநாகயத்தின் விலை! கழகத்திற்கும் ஜனதா கட்சிக்குமிடையே தேர்தல் உடன்பாடு ஏற்படுத்துவதற்காக சஞ்சீவரெட்டி அவர்கள் பிப்ரவரி 15ம் நாள் அன்று சென்னைக்கு வந்தது மூன்றாவது பயணமாகும்.

அவர் வருகைக்கு முன்னரே ஜனதா கட்சி தனது வேட்பாளர்களின் பெயர்களையும் தொகுதிகளையும் அறிவித்திருந்தது. அதற்குப்பிறகு கழகச் சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் வேட்பாளர் பெயர்களும் அறிவிக்கப் பட்டுவிட்டன. எனவே கழகம் தனியாகத்தான் போட்டியிடும் என்ற நிலை உருவாகியிருந்த கட்டத்திலேதான் சஞ்சீவரெட்டி அவர்கள் உடன்பாட்டை ஏற்படுத்தியே தீர்வது என்ற உறுதியுடன் என் இல்லத்திற்கு வந்து விட்டார். பிப்ரவரி 10-ஆம் நாள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் மத்திய சென்னைத் தொகுதியில் முரசொலிமாறன் கழக வேட்பாளர் எனத் தெரிவித்து, ஆர்வம் படைத்த கழக அமைப்புகள் தேர்தல் பணிகளை மிக விறுவிறுப்பாகத் தொடங்கி ஐந்து நாட்கள் அவர்களின் அயராப் பணியை நோக்கின்-இன்னும் சில மணி நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் செல்ல இருந்தால் எப்படியோ அப்படி அந்தத் தேர்தல் வேலைகளை உச்சக்கட்டத்திற்குக் கொண்டுவந்திருந்தனர்.

சஞ்சீவ ரெட்டியார் அவர்கள் என் இல்லத்திற்கு வந்தபோது தி.மு.க. - ஜனதா தேர்தல் உடன்பாட்டில் மத்திய சென்னைத் தொகுதிதான் பெரும் சிக்கலாக அமைந்தது. அந்தத் தொகுதி பற்றிய சிக்கல் தீர்ந்தால் உடன்பாடு முடிவடைந்தது போலத்தான்! மத்திய சென்னைத் தொகுதியில் ஜனதா வேட்பாளராக திரு.பா.இராமச்சந்திரன் அவர்கள் நிற்பதற்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்பது சஞ்சீவரெட்டியாரின் கோரிக்கை. ஆனால் மாவட்டக் கழகமும், தொகுதியில் உள்ள கழக அமைப்புகளும் அதற்கு இணங்க மறுத்துவிட்டன.

முரசொலிமாறன் எனது மருமகன் என்பதற்காக அல்ல: சென்னை மாநகரில் மத்திய தொகுதி என்பது கழகத்தின் கோட்டை போன்றது; அந்தத் தொகுதியில் கழகம் போட்டியிடாமல் இருப்பது - அதிலும் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்புமனு தாக்கல் செய்ய தேதி முடிவானபிறகு வேறு ஒரு கட்சிக்கு விட்டுக்கொடுப்பது என்பதைக் கழக அமைப்புகள் பிடிவாதமாக மறுக்கின்றன எனும் நிலையை நானும், கழக முன்னணியினரும் எவ்வளவோ எடுத்துச்சொன்னோம். திரு.சஞ்சீவரெட்டி அவர்களிடம் எனக்குள்ள அன்பும் மரியாதையும், அதே போல் அவருக்கு என்பால் உள்ள அன்பும் மதிப்பும் அளவிட முடியாதது.

பொதுப்பிரச்சனையில் அவர் நினைத்ததை அவரது திறமையானதும் இனிமையானதுமான பேச்சின் மூலம் சாதித்துக் கொள்வதில் மிகவும் வல்லவர். அவரோடு உரையாடிய நேரத்தில் ஒரு கட்டத்தில் மத்திய சென்னைத் தொகுதியை ஜனதாவுக்கு விட்டுத் தர நான் முன்வந்து விட்டபோது, பொதுச்செயலாளர் நாவலர் அவர்கள் மாறனைத் தனியாக அழைத்து, "நீ இந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளாதே! மத்திய சென்னைத் தொகுதியில்தான் நிற்பேன் என்று உறுதியாகக் கூறிவிடு!"

என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஆனால் மாறன் தன்னுடைய பிரச்சினையினால் தி.மு.க. - ஜனதா கட்சி உடன்பாடு முறிந்து விடக்கூடாதென்று கருதி - அந்தத் தொகுதியின் வேட்பாளராகத் தான் போட்டியிடுவதில்லை என்ற முடிவை சஞ்சீவரெட்டியாரிடத்திலேயே கூறியதோடு, அந்தத் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய கழகத்தினரையும் அமைதிப்படுத்தி அறிக்கையொன்றும் வெளியிட்டார். ஒரு தொகுதியின் பிரச்சினை காரணமாக உடன்பாடு ஏற்படாமல் போய்விடுமோ என

்ற சங்கடம் தவிர்க்கப்பட்டது. சஞ்சீவ ரெட்டி அவர்கள் மிகவும் மகிழ்ந்தார். "தோழமைக் கட்சிகளிடத்தில் கழகம் காட்டுகிற உண்மையான நட்புக்கும் உறவு மனப்பான்மைக்கும் தேச நலனுக்காகத் தனது வாய்ப்புகளைக் கூட விட்டுத் தருகிற நல்ல மனப்பான்மைக்கும் இது எடுத்துக் காட்டு" எனக் கூறி அவர் என்னைத் தழுவிக் கொண்டார். இந்த நிகழ்ச்சியை நான் குறிப்பிடும்போது அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக 1978-ஆம் ஆண்டு அ.தி.மு.க.

ஆட்சியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் அழைக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்துவைத்த நிகழ்ச்சியை எண்ணிப் பார்க்கிறேன். அப்போது நான் எதிர்க்கட்சித் தலைவர். அந்தப்படத்தின் கீழே என்ன பொன்மொழி எழுதலாம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் என்னிடம் கேட்டார். "உழைப்பே உயர்வு தரும்" என்ற சொற்றொடரைக் குறிப்பிட்டேன். உழைப்பின் உயர்வு பற்றியே அந்தப் படத்தின் கீழ்ப் பொறிக்கப்பட்டது.

படத்திறப்பு விழாவுக்கு வந்த குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டி அவர்களின் உரையில் அவருக்கும் காமராஜருக்குமிடையே இருந்த பற்றும் பாசமும் பெருமளவு இடம் பெற்றன. அவர்களிருவரின் அந்த அரிய உறவுடன் என்னையும் தொடர்புபடுத்தி எமர்ஜன்சி காலத்து சம்பவங்களையெல்லாம் நினைவு கூர்ந்தார். "காமராசர் மறைந்தபோது நெருக்கடி நிலை காரணமாக அவரது உடல் அடக்கத்திற்கு வரமுடியுமோ என்று கவலை கொண்டிருந்தபோது எனக்கு எல்லா வகையிலும் உதவி செய்து, சென்னை வரும் வாய்ப்புகளை முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் செய்து கொடுத்தார்."

என்பதையும் மனமுருக அவர் குறிப்பிட்டார். அவரது அந்தப் பேச்சை இப்போது நினைத்தாலும், அவர் படத்திறப்பு விழாவுக்கு வந்த போது எதிர்கட்சித் தலைவராக இருந்த என்னைத்தான் முதலமைச்சராக எண்ணிப் பேசியது போலிருந்தது. பழகிய நாட்கள், ஒன்றிக் கலந்த அன்பு, நன்றியுணர்வு இவற்றையெல்லாம் பெரிய பதவிகளில் அமரும் போது காலில் போட்டு மிதித்துத் துவைத்துவிடும் மனித ஜென்மங்கள் சிலருக்கு மத்தியில், நீலம் சஞ்சீவரெட்டி போன்றவர்கள், கூழாங்கல் குவியலில் கோமேதகங்களாக அல்லவா காட்சியளிக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு (1989-90) இரண்டு ஆண்டுகாலத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது சென்னையில் ஒருவிழாவுக்கு வந்திருந்தார். அரசுச் சார்பற்ற ஒரு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி. அதற்கு சந்திரசேகர், அரசின் உள்துறை மத்திய இணைஅமைச்சர் சுபோத் காந்த் சகாய் என்பவரும் வந்திருந்தார். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அமைதி இல்லை என்று விஷமப்பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலம்.

அந்தப் பிரச்சாரத்தில் மத்திய அரசான சந்திரசேகர் அரசும் ஈடுபட்டிருந்தது. அந்தச் சூழலில் சென்னை விழாவில் சஞ்சீவரெட்டி அவர்கள் எவ்வளவு துணிவான கருத்தை, தெளிவான கருத்தை அழுத்தந்திருத்தமாகச் சொன்னார் தெரியுமா? "இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு அமைதி சரியாக இருக்கிற மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு! இங்கே அமைதியில்லை - ஒழுங்கு இல்லை - என்று சிலபேர் பேசுவது நல்லதல்ல! தயவுசெய்து தவறான பிரச்சாரம் செய்து, வெளிச்சத்தில் இருட்டைச் திணிக்க முயலாதீர்கள் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

மிகப்பெரிய உள்ளத்தோடு அவர் சொன்ன அறிவுரையை எதேச்சாதிகாரக்குணம் படைத்தோர் கேட்டார்களா இல்லையா என்பது வேறு விஷயம்! ஓய்வு எடுக்கும் வயதில் பெங்களூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு ஒரு ஆசை. அது என்ன ஆசை என்பதைச் சொன்னால் அவரது எளிமையான குணநலனும், வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து முன்னேற வேண்டுமென்ற நல்லெண்ணமும் நமக்கு விளங்கும். மொழிவழியாக மாநிலங்கள் அமையாமல் ஒன்றுபட்ட சென்னை மாகாணமாக இருந்த எல்லைப் பரப்புக்குள் ஆந்திர மாநிலமும் இணைந்திருந்தபோது இங்கே காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் சஞ்சீவரெட்டி.

அதனால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அமைச்சர் அலுவலக அறையைக் காணவேண்டுமென்று விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடத் தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் அவருக்கு எளிமையான முறையில் காலைச் சிற்றுண்டி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர் என்ற முறையில் நான், அவை முன்னவரும் கல்வி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன், பேரவைத் தலைவர் டாக்டர் தமிழ்க்குடிமகன், நாஞ்சிலார் மற்றும் அமைச்சர்கள் அவரை வரவேற்று அவருடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்தினோம்.

அப்போது அவர் தனது பொது வாழ்க்கையின் பழைய நிகழ்வுகளையெல்லாம் தொடர்ச்சியாக இல்லாவிடினும் உணர்ச்சி ததும்பச் சொன்ன போது என் இதயத்திற்கு மிக இதமாக இருந்தது. தலைமைச் செயலகத்தின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, பல ஆண்டுகளுக்கு முன் அவர் அமைச்சராக வீற்றிருந்த அறை இதுதான் என்று அவர் சுட்டிக்காட்டிப் பரபரவென்று உள்ளே நுழைந்த போது ஒரு பச்சைக் குழந்தையின் பளிங்கு மனத்தையே அவரிடம் பார்க்க முடிந்தது.

அந்த அறையில் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இத்தகைய நல்லியல்புகள் படைத்த ஒருவர் 1977-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. - ஜனதா உடன்பாட்டில் எழுந்த தடையை அகற்றுவதில் அவருக்கேயுரிய திறனையும் தூய இதயத்தினையும் பயன்படுத்தி உடன்பாட்டை வெற்றிகரமாக முடித்ததில் ஆச்சரியமிருக்க முடியாதல்லவா? இந்த உடன்பாடு தமிழ்நாட்டில் ஏற்பட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் அவசர அவசரமாக சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியை இந்திரா அரசு வெளியிட்டது.

பொதுவாக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் முடிவுகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதுதான் மரபு. அந்த மரபு சர்க்காரியா கமிஷன் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. தி.மு.க. அமைச்சரவை மீது ஆதாரங்களின்றிக் கொடுக்கப்பட்ட புகார். புகார் மனு கொடுத்த எம்.ஜி.ஆர். அவர்களோ புகார்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்ற முகப்புரையுடன்தான் புகார் மனுவையே சர்க்காரியா கமிஷனுக்குத் தரும் போது எழுத்து வாக்குமூலம் அளித்திருந்தார்.

சர்க்காரியா கொடுத்த அறிக்கையும் முற்றுப் பெற்ற அறிக்கையல்ல. 28 புகார்களில் 7 புகார்களை மட்டும் ஒட்டிய அறிக்கையாகும். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து வழக்குத் தொடர இந்திரா அரசு, தமிழகக் கவர்னர் ஆட்சிக்குத் தாக்கீது அனுப்பியது. பிப்ரவரி 15-ஆம் நாள் சஞ்சீவரெட்டியாருடன் பேசி தி.மு.க.-ஜனதா தேர்தல் உடன்பாடு ஏற்படுகிறதென்றால் மறுநாளே பிப்ரவரி 16-ஆம் நாள் சர்க்காரியா கமிஷனின் முதல் அறிக்கையை மிகுந்த அவசரத்துடன் வெளியிட்டு, தி.மு.க.

முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளையும் தொடரச் செய்ததற்குக் காரணம் - தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் கழகத்தைப் பற்றிய ஒரு களங்கத்தைப் பரப்ப வேண்டுமென்ற நோக்கம்தான். எந்த இந்திராகாந்தி 1977ல் இந்த வழக்குகளால் தி.மு.க.வைப் பூண்டோடு அழித்து விடலாமென்று திட்டமிட்டுச் செயல்பட்டாரோ அதே இந்திராகாந்தி 1980ல் தி.மு.க.வின் ஆதரவைப் பெற்று பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் செலுத்திய விஷத்தை அவரே திரும்ப எடுத்துக் கொண்டார்.

அரசியலில் பழிவாங்கவோ, வஞ்சம் தீர்க்கவோ அரசியல் கட்சிகளை அச்சுறுத்தவோ வேண்டுமென்று திட்டமிட்டுப் பொய்யாகப் போடும் வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலும் இடையூறுகளும் பணியில் சில தடங்கல்களும் விளையக்கூடுமே தவிர அந்த வழக்குகளின் முடிவுகள் அரசுக்குச் சாதகமாக அமைவதுமில்லை! ஒருவேளை அமைந்தாலும் அதனால் உறுதிமிக்க அரசியல் கட்சிகளை அறவே அழித்து விட்டதாகச் சரித்திரமும் இல்லை! இந்திரா அரசு மெத்த எரிச்சலுடன் போட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்துக்கொண்டே நானும் நண்பர்களும் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டோம்.

பிப்ரவரி 18-ஆம் நாள் முரசொலியில் நான் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை நினைவுபடுத்திக் கொள்கிறேன். "உடன்பிறப்பே, தி.மு.கழகம்-ஜனதா கட்சி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதா, என்று டெல்லியிலிருந்து ஒருவர் மிக்க ஆவலுடன் தொலைபேசி வாயிலாக என்னைக் கேட்டார். கருணாநிதி மீதும் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் மீதும் மேலும் சில புதிய வழக்குகள் தொடுக்கப்படும் என்று வானொலியிலும் பத்திரிகைகள் மூலமும் செய்திகள் பரப்பப்படுகின்றனவே; அதிலிருந்தே தெரியவில்லையா?

தி.மு.க.-ஜனதா உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பது? என்று நான் அவரிடம் பதிலுக்குக் கேட்டேன். அவருக்கு மெத்த மகிழ்ச்சி உடன்பாடு ஏற்பட்டதில்! எனக்கும் மிக்க மகிழ்ச்சி புதிய வழக்குகள் வருவதில். ஒவ்வொரு வழக்கிற்கும் ஐந்து ஆண்டு - பத்து ஆண்டு எனத் தண்டனை வழங்கப்பட்டு அந்தத் தண்டனைகளைத் தனித் தனியாக அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் ஒரு முப்பது அல்லது நாற்பது ஆண்டுக்காலத் தண்டனை எனக்குக் கிடைக்கும்.

இப்போது வயது எனக்கு ஐம்பத்து மூன்று நடக்கிறது (1977ல்) இன்னும் என்னதான் வாழ்ந்தாலும் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதென்பது இயலாத காரியம் - அதற்குள் எப்போதோ? அதுவும் சொல்ல முடியாது. எனவே வழக்குகளின் மூலம் எனக்கு வலை பின்னிச் சிறைக் கொட்டடியிலேயே எனது இறுதி மூச்சுக் கலந்துவிடக் கூடும். அந்த முடிவை முகமலர்ச்சியோடும் அமைதியோடும் ஏற்றுக் கொள்ள நானும் என்னுடன் உள்ளவர்களும் தயாராகி விட்டபிறகு எத்தனை வழக்குகள் வந்தால் என்ன?

நானும் நமது கழகமும் செய்த குற்றமெல்லாம்-ஜனநாயகத்தைக் காப்பாற்ற அவசரகாலப் பிரகடனத்தைத் திரும்பப் பெறுக என்று கூறியதுதான்! அதற்கான விலையை நாம் கொடுத்துத் தான் தீர வேண்டும். ஜனநாயகத்தைக் காத்திட வெற்றி தோல்விகள் பற்றிக் கவலைப்படாமல்-வேதனைகளால் சோர்ந்திடாமல்-கழகம் களத்தில் நின்ற காரணத்தினால்தான் கழகத்தின் துணையும் பெற்று இந்திய நாட்டின் தியாகத் தலைவர்கள் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்திய காரணத்தினால்தான் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் சற்று மாசு கலந்த காற்றில் இணைந்து வரும் ஜன நாயகத்தையாவது நாம் சுவாசித்துக் கொண்டிருக்க முடிகிறது.

ஜனநாயகத்தை மீட்டுக்கொண்டு வர இந்திரா காங்கிரசல்லாத அல்லது அந்த அணியினர் அல்லாத மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்த அந்த பிப்ரவரித் திங்களில்தான் ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒரு காலத்தில் அபிசீனியா என்று அழைக்கப்பட்ட எத்தியோப்பியா நாட்டில் ஓர் அதிரடிப்புரட்சி முறியடிக்கப்பட்டது என்ற செய்தியும், அதனைத் தொடர்ந்து பல செய்திகளும் வந்து கொண்டேயிருந்தன. அந்த நாட்டில் ஆட்சி நடத்தும் இராணுவக் கௌன்சிலின் தலைமைச் செயலகம் இருக்கும் அடிஸ் அபாபா நகரத்தில் அந்த இராணுவக் கௌன்சிலுக்கு விரோதமான சக்திகள் புரட்சியில் ஈடுபட்டன.

அமைச்சக நிரந்தரச் செயலாளர் "அடோசேயேடி பால்கே" என்பவர் அவரது இல்லத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். புரட்சி அடக்கப்பட்டதாகச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. அடுத்து வந்த செய்திப்படி இராணுவக் கௌன்சிலின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் டெபேரிபாண்டேவும் மற்றும் ஆறு முக்கிய கௌன்சில் உறுப்பினர்களும் கொல்லப்பட்டுவிட்டனர். அந்தக் கொலைகளுக்குப் பிறகும் இராணுவக் கௌன்சில் ஆட்சியில் மாற்றமில்லை. கொலையுண்ட ஏழுபேரும் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக் கூறப்பட்டது.

"கர்னல் மெங்கிஸ்ட்டு ஹெய்லிமரியம்" என்பவர் இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நடத்தும் வலிமையுடன் திகழ்வதாகச் செய்திகள் வந்தன. அவர் ஒரு தேசியவாதி எனவும் மார்க்சிஸ்டு எனவும் வர்ணிக்கப்பட்டார். இந்தியா, இழந்த ஜனநாயகத்தை மீண்டும் பெற்றிடப் போராடிக் கொண்டிருந்தபோது - எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சியார் கைக்கு வருவது என்பவதற்கான வன்முறைப் புரட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதற்காகவே 1977 பிப்ரவரியில் நடைபெற்ற எத்தியோப்பியா நாட்டு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.

சுமார் 3 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டை நினைவுபடுத்திக் கொள்ளும்போது அங்கு வாட்டுகிற வறுமையும், தலைவிரித்தாடுகிற பஞ்சம் பட்டினியும், ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுகளும் கொண்ட எலும்புக் கூடுகளாய் மனிதர்கள் சாகாமல் செத்துக் கொண்டிருக்கும் காட்சிகளும் நம் கண் முன்னால் தோன்றாமற் போகாது! அதிகாரப் பொறுப்பு கைவிட்டுப் போகக் கூடாது என்பதிலும் அல்லது போய் விட்டதை எப்படியும் பற்றியே தீரவேண்டும் என்பதிலும் மட்டுமே அக்கறை காட்டும் ஒரு நாட்டில் சர்வாதிகார ஆட்சி இருப்பினும், ஜனநாயக ஆட்சி இருப்பினும் நிலைமை ஒன்றேதான்!

ஆனால் ஜனநாயகத்தில் வாய் திறந்து "அய்யோ பசிக்குதே!" என்று கூவ முடியும்! சர்வாதிகார ஆட்சியில் அதற்கும் வாய் திறக்க முடியாது! காரணம் தலையிருந்தால் அல்லவா வாய் திறப்பதற்கு? 8. வாக்குமூலங்கள்! எதேச்சாதிகாரம் எப்பாடு படுத்தும் என்பதையும் "எமர்ஜன்சி" உருவத்தில் என்னையும் என்னைத் தலைவனாகக் கொண்ட கழகத்தையும் எப்பாடுபடுத்திற்று என்பதையும், "நெஞ்சுக்கு நீதி" இரண்டாம் பாகத்தின் இறுதியில் ஓரளவு குறிப்பிட்டிருக்கிறேன்.

நீலம் சஞ்சீவ ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவில் ஜனநாயகம் காத்திடும் தேர்தல் களத்தில் இணைந்து நின்று போரிட உடன்பாடு கண்ட அதே நாளில் (15.2.77) நான் எழுதி முரசொலியில் வெளிவந்த ஒரு கடிதத்தில் உள்ள சில பகுதிகளையும், சுமார் ஒன்பது மாதங்கள் வெளியிடப் படாமலேயே பத்திரமாக வைத்திருந்து எமர்ஜன்சிக் கொடுமையும் தணிக்கை நெருக்கடியும் தளர்த்தப்பட்டபிறகு அதே 15.2.77 அன்று முரசொலியில் வெளியிடப்பட்ட படத்தையும் இதனைப் படிப்போர் பார்வைக்கு வைக்கின்றேன். உடன்பிறப்புகள் சிலர் சூழ்ந்து நிற்க சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் முன்னால் கையில் கழகக் கொடியைத் தூக்கிப் பிடித்து நிற்கிறேன்.

"அண்ணா வாழ்க! ஜனநாயகம் வெல்க!" என நான் முழங்க என்னோடு சேர்ந்து சூழ இருப்போரும் முழங்குகிறார்கள். 1976 ஜூன் 3-ஆம் நாள் என் பிறந்த நாள் என்றால், அதற்கு முதல் நாள் நான் நடத்திய தனி நபர் அறப்போர்க் காட்சிதான் இது. அதனை விளக்குவதே இந்தப் படம். யாருக்கும் அறிவிக்காமல் அண்ணா சாலையில் நடந்தே வந்து அண்ணா சிலைக்கருகில் இந்தத் தனி நபர் அறப்போரை நடத்தினேன். கைது செய்யப்பட்டேன். என்னுடன் கைது செய்யப்பட்டோர் யார் யார் என்பதை இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

எதற்காக இந்தத் தனி நபர் அறப்போர் என்பதை 15.2.77 முரசொலி கடிதத்தில்தான் விபரமாகக் குறிப்பிட முடிந்தது. காரணம்: அதுவரையில் அவ்வளவு முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் அந்த முரசொலிக் கடிதம் தெளிவுபடுத்தியது. ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு! 1976 ஜூன் மூன்றாம் நாள் என் பிறந்தநாளுக்கான செய்தியைக் கடிதமாக எழுதுகிறேன். ஒவ்வொரு

நாளும் "உடன்பிறப்பே" என அழைத்து எழுதும் நான், அன்றைய தினம் "அண்ணனே" என அழைத்து மடல் தீட்டியிருந்தேன். அதில் பல பகுதிகள் தணிக்கை அதிகாரியால்- வெட்டப்பட்டுவிட்டன. "என் அன்னை தந்தையை விட அதிகமான பாசத்தை; அண்ணனே! நீ என் மீது பொழிந்தாய்!"

இந்த வாசகம் வெட்டப்பட்டு விட்டது தணிக்கையில். "அண்ணா! உன்னிடம் நான் எதை யாசித்தேன்? நீ என் விரலில் அணிந்து விட்ட இந்தக் கணையாழியையா? கனம் மந்திரிப் பதவியையா? உன் காலுக்கு அணியாக இருந்து, உன் கட்டளைக்குக் காத்துக்கிடந்த இந்தத் தம்பி, உன்னிடம் யாசித்தது என்ன? என் கல்லறை மீது நீ சிந்துகிற கண்ணீரைத்தானே யாசித்தேன்! அந்தப் பிரச்சனையை நீ எனக்கு அளித்தாயா? இல்லையே!"

என எழுதியிருந்தேன். தணிக்கை அதிகாரியின் கத்திரிக்கோல் வெட்டிவிட்டது. "நீ உருவாக்கிய கழகம் - நீ உருவாக்கிய கொள்கை - நீ உருவாக்கிய கொடி இவற்றைக் காத்திட அண்ணனே; இந்த என் பிறந்தநாளில் சூளுரை மேற்கொள்கிறேன்!" என எழுதியிருந்ததும் தேசவிரோதமாம்! அவசரக்காலச் சட்டத்திற்கு முரண்பாடானதாம்! எனவே தணிக்கை அதற்கும் குறுக்கே கோடு கிழித்துவிட்டது. இந்த வாசகங்களில் எந்த தேச விரோதமும் இல்லை. எதற்காக இதனை எழுதிட மறுப்புத் தெரிவிக்கிறீர் என்று தணிக்கை அதிகாரியைக் கேட்டேன்.

பலனில்லை. அவருக்கு மேலேயுள்ள அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டேன். ஆணவ மௌனமே விடையாகக் கிடைத்தது. நான் எழுதியது - அதற்கு அனுமதி கிடைக்காதது ஆகிய இத்தனையையும் இரவோடு இரவாக ஒரு துண்டு அறிக்கையாகத் தயார் செய்து, அந்தப் பிரதிகளைக் கையில் எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் பிப்ரவரி 2-ஆம் நாள் ஒவ்வொருவர் கையிலும் கொடுத்துக் கொண்டே சென்று அண்ணா சிலைக்கு கீழே நின்று தனி நபர் அறப்போரில் நான் ஈடுபட்ட காட்சியின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம்; என் திருமண விழாப் படங்களைப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியைவிட ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி எனக்கு ஏற்படுவதுண்டு.

இதே அண்ணா சிலையின் அடிபீடத்தில் தமிழகப் பொதுப் பணித்துறை அமைச்சராக நின்று; அண்ணா சிலையைத் திறந்து வைத்த ஆர்க்காடு இராமசாமி முதலியாருடன் 1968-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எனது புகைப்படங்கள் ஏடுகளில் வந்ததுண்டு! ஆனால் அந்த அண்ணாவின் சிலையின் கீழ் அமைச்சனாகவும் நிற்பேன் -அறப்போர்த் தொண்டனாகவும் நிற்பேன் என்பதை ஒரு சூளுரையாக எனக்கும் என்போல் தொண்டுள்ளம் கொண்டவர்க்கும் அறிவிப்பதல்லவா இந்தப் படம்!

அதனால் இந்தப் படமே என்னைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த படம்! கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து நானும் நண்பர்களும் போர்க்களம் கண்ட படம் நான் ஒரு பதவியில் அமர்வதற்கு முன்பு எடுத்த படம்! ஆனால் இது, இரண்டு ஆண்டுகள் பொதுப்பணி அமைச்சராகவும், ஏழாண்டுகள் முதலமைச்சராகவும் இருந்த பிறகும் ஒரு தொண்டனின் போர்க்குணம் மாறவில்லை. உறுதி மாறவில்லை. கொள்கை குலையவில்லை. துணிவு தொலையவில்லை என்பதைக் காட்சியாக்கிடும் படம்; என்னை கர்வம் கொள்ளச் செய்திடும் படம்!

என் இயல்புக்கு மட்டும் எடுத்துக்காட்டாக அமையாமல்; எமர்ஜன்சிக்கோரம் எத்தகைய எதேச்சாதிகாரப் பேய்க்கோலம் பூண்டிருந்தது என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதே இந்தப் படம். அந்த எதேச்சாதிகாரம் வீழ்த்தும் களத்தில் தனித்தனியாக நின்று போரிட்ட பல கட்சியினரும் தேர்தல் களத்தில் அணி சேர்ந்தனர். இந்திரா காங்கிரசிலிருந்து அமைச்சர் பதவியையும், உறுப்பினர் பதவியையும் துறந்து வெளியேறிய பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள் ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.

அந்தக் கட்சியில் இணைந்திடாவிட்டாலும், ஜனநாயகக் காங்கிரசையும், ஜனதாக்கட்சியையும், தி.மு.கழகம் போல இந்திராகாந்தியின் எமர்ஜன்சியை எதிர்த்த கட்சிகள் அனைத்தையும் ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய பண்டித நேருவின் குடும்பத்திலிருந்தே ஒரு மாது சிரோன்மணி புறப்பட்டார். நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டவர். சுதந்திர இந்தியாவில் கவர்னர், அமெரிக்கத் தூதர், சோவியத் தூதர் எனப் பல பெருமைமிகு பதவிகளை வகித்தவர்.

பண்டித நேருவின் சகோதரியான விஜயலட்சுமி பண்டிட் அவர்கள். சுமார் ஏழாண்டு காலமாக அரசியலில் ஒதுங்கியிருந்த அவர், தனது 78-வது வயதில் புது டெல்லியில் ஜெகஜீவன்ராம் இல்லத்தில் நிருபர்களைச் சந்திக்கிறார் என்பது பரபரப்பான செய்தியாயிற்று. பண்டிதநேருவின் தங்கை விஜயலட்சுமியா? அவர் பாபு ஜெகஜீவன் இல்லத்திலா? பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறாரா? செய்தியாளர்கள் படையெடுத்தனர். "இந்திரா காங்கிரஸ் கட்சியை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன்.

நாட்டின் வாழ்வில் எழுகிற பிரச்சினைகளே முக்கியம்! தனி மனிதர்கள் அல்ல! ஜனநாயகமும் மனித நெறிகளும் அழிக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது" என்று கூறிய விஜயலட்சுமி பண்டிட் அவர்கள்; சஞ்சய்காந்தியைப் பற்றிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளித்தபோது, "சஞ்சய் என் பேரன்.

அவன் செய்கிற காரியங்களைப் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவன் செய்வது நல்லதா கெட்டதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாட்டு மக்கள்" என்று குறிப்பிட்டார். அப்போது பம்பாய் நகரத்தில் ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரபல வழக்கறிஞர் ஜெத்மலானி அவர்கள் ஒரு திடுக்கிடும் செய்தியை அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெளியிட்டார். "கள்ளக்கடத்தல் மன்னன் என்று வர்ணிக்கப்படும் ஹாஜி மஸ்தானை வற்புறுத்தி; மொரார்ஜி தேசாயையும், எஸ்.கே.

பட்டீலையும் கடத்தலில் சம்பந்தப்படுத்தி ஒப்புதல் வாக்கு மூலம் தரும்படி அரசாங்கம் பெருமுயற்சி எடுத்துக்கொண்டது. வருவாய்த் துறையின் புலனாய்வு அதிகாரியான ஸ்ரீவத்சவா இப்படிக்கேட்டுக் கொண்டார். ஆனால் ஹாஜிமஸ்தான் மறுத்துவிட்டார். அவர் ஒத்துக் கொண்டிருந்தால் மிசாவில் விடுதலையான அரசியல் தலைவர்களான மொரார்ஜி தேசாயையும், மற்றவர்களையும் "காபிபோசா" சட்டத்தில் கைது செய்திருப்பார்கள். எப்போது விசாரணையில்லாமல் கைது செய்வது ஆரம்பமாயிற்றோ, அப்போதே சட்டத்தின் ஆட்சிக்கு சமாதி எழுப்பப்பட்டுவிட்டது.

மகத்தான ஜனநாயகப் பரிசோதனை இந்திரா காந்தியாலும், அவரது சகாக்களாலும் தளபதிகளாலும் நாச வேலைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது. "கர்தண்டா" என்கிற இடத்தைச் சேர்ந்த கள்ளக்கடத்தல்காரர் ஒருவர், மத்திய அரசின் சட்டமந்திரியான கோகலேயிடமிருந்து பெற்ற "சர்டிபிகேட்"டைப் பெருமையாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்."

திரு.ஜெத்மலானி அவர்களின் இந்தப் பேச்சு 18.2.77 இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்தது. (நெஞ்சுக்கு நீதி மூன்றாம் பாகத்திற்கான இந்த அத்தியாயத்தை நான் எழுதும்போது, "தடா" என்ற ஒரு பயங்கரவாத தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் இப்போது 1991-ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் அரசியல் ஆதாயத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது) பொதுவாகவே கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது, நாடாளுமன்றத்திலோ - சட்டப் பேரவைகளிலோ அவற்றை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளுக்கு; சமாதானம் கூறும் முறையில் அந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்று சில ஆளுங்கட்சிகள் கூறுவதும்; ஆனால் நடைமுறையில் அந்தச் சட்டங்களை வஞ்சம் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்ட ஒன்று.

அதற்கு இந்திராகாந்தி அரசு விதிவிலக்கல்ல என்பதை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கல்கத்தாவில் பேசிய மொரார்ஜி தேசாய் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்:- "இந்திராகாந்தி, அவர் தந்த வாக்குறுதிகளை அவரே மீறியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (என்.எஸ்.ஏ.) அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அவர் நாடாளுமன்றத்தில் உறுதி கூறினார். அந்த உறுதியை அவர் எழுத்து மூலமாகவும் எனக்குத் தெரிவித்தார்.

அளித்த வாக்குறுதியில் திடமாக இருப்பதாக எனக்குக் கடிதமும் எழுதினார். ஆனால் முடிவில் அந்தச் சட்டத்தில் என்னையே சிறையில் தள்ளினார்." பொது மேடையில் இவ்வாறு உரை நிகழ்த்திய மொரார்ஜி தேசாய், அதே நாளில் (10.2.77) கல்கத்தா செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியது, மிகுந்த உருக்கமானது. உணர்ச்சிகரமானது. "மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து நடக்கும் இன்றைய போராட்டம் சுதந்திரப்போராட்டத்தைவிட மிகமிக முக்கியமானது.

ஏனென்றால் இப்போது எல்லா சுதந்திரங்களும் இல்லாமல் போய்விட்டன. அந்நிய சர்வாதிகாரி ஒருவருக்குப் பதிலாக இந்திய சர்வாதிகாரி ஒருவர் இருப்பதால் நிலைமையில் வித்தியாசம் வந்துவிடுமா என்ன? பிரிட்டிஷார் காலத்தில்கூட இன்றைய தினம் உள்ளது போல் இத்துணைக் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் இருந்ததில்லை."

இது மொரார்ஜி தேசாயின் குரல் மட்டுமல்ல; இந்திய நாட்டு விடுதலைக்குப் போராடி சுதந்திரக் காற்றைத் தேடி ஓடிய தியாகிகள் அனைவரின் குரலும் இதுவாகத்தானிருந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் வாழ்த்துடனும் ஆதரவுடனும் மொரார்ஜி தேசாய் அவர்களும்; ஜெகஜீவன்ராம் அவர்களும், கலந்து பேசி, ஜனதாவுடன் ஜனநாயக காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கொண்டதையொட்டித் தமிழ்நாட்டில் ஜனதாவுக்கும், தி.மு.க.வுக்கும், இந்தக் கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளும் கட்சிகளுக்கும் ஆதரவு தருவதென முடிவு செய்திருப்பதாக திரு.

கந்தப்பன் மூலமாக ஜெகஜீவன்ராம் எனக்குக் கடிதம் அனுப்பியதோடு, அவரது கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பவர்களையும் அந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 19-ஆம் நாள் தி.மு.க., ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே தேர்தல் உடன்பாடு கையெழுத்தாயிற்று. வடசென்னை, தென்சென்னை, செங்கற்பட்டு, வந்தவாசி, திருப்பத்தூர், அரக்கோணம், சிதம்பரம்(தனி), திண்டிவனம், தஞ்சாவூர், நாகப்பட்டினம்(தனி), பெரம்பலூர், சேலம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி(தனி), பெரியகுளம், பழனி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 19 நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும் - மத்திய சென்னை, திருபெரும்புதூர், வேலூர், கடலூர், தர்மபுரி, இராசிபுரம், நீலகிரி, கோபிசெட்டிப் பாளையம், கோவை, கரூர், திருச்சி, மாயூரம், புதுக்கோட்டை, சிவகங்கை, சிவகாசி, தென்காசி, திருச்செந்தூர், நாகர்கோயில், பாண்டிச்சேரி ஆகிய 19 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜனதாவும், மதுரை, திண்டுக்கல் ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதென இடங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

உடன்பாட்டில் கழகச் சார்பில் நானும், ஜனதா சார்பில் பா.இராமச்சந்திரன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.இராமமூர்த்தி அவர்களும் கையொப்பமிட்டோம். அந்த உடன்பாடுட்டுக்கு மறுநாள் 20.2.77 மாலை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் மொரார்ஜி தேசாய் அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார். அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

கடற்கரைக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. வேறு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். எனவே கடற்கரைக் கூட்டம் முடிந்த மறுநாள் காலையில்தான் எங்களுக்குள் அந்தச் சந்திப்பு நடந்தது. கடற்கரைக் கூட்டத்தில் அவர் பேசியதில் சில முக்கியமான பகுதிகளை நினைவில் நிறுத்த வேண்டும். அவரது பேச்சு வெளிவந்த ஏடுகளைப் புரட்டி நான் எடுத்த பகுதிகள் இவை! இதோ மொரார்ஜியின் அந்த உரை:- "தி.மு.க. ஆட்சி, காமராசருக்கு எழுப்பிய நினைவாலயத்தை நான் இப்போது பார்த்துவிட்டு வருகிறேன்.

அந்த நினைவாலயம் கட்டி முடிந்தபோது அதன் முகப்பில் தி.மு.க. அரசு ஒரு இராட்டையை பெரிய அளவில் வைத்திருந்தது. கழக ஆட்சி கலைக்கப்பட்டவுடன், அந்த நினைவாலயத்தை இந்திராகாந்தி திறந்து வைக்க வந்தார். சுதந்திரப் போராட்டத்தின் சின்னமான அந்த இராட்டையை 24 மணி நேரத்துக்குள் அக்ற்றிவிட்டுத்தான் பிரதமர் இந்திரா அந்தக் காமராசர் நினைவாலயத்தைத் திறந்து வைத்துள்ளார். இதுதான் ஒரு நினைவாலயத்தை கௌரவிக்கும் முறையா?"

கோபம் கொப்பளிக்க இப்படிக் கேட்ட மொரார்ஜி "மக்களை மதிப்பதும், மக்களால் மதிக்கப்படுவதுமான ஆட்சி திரும்ப வந்த பின்னர் அந்த இராட்டை மீண்டும் காமராசர் நினைவாலயத்தில் வைக்கப்படும்" என்று உறுதிபடக் கூறினார். அத்துடன் நிறுத்தவில்லை அவர், அவரது பேச்சில் முக்கியமான கட்டம் பின் வருமாறு:- "1971-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. விதித்த நிபந்தனைகளுக்கெல்லாம் உட்பட்டு அவர்களுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டவர்கள், தங்களின் காரியம் முடிந்ததும், தாங்களிட்ட கட்டளைக்கெல்லாம் கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்பதற்காகக் கழக அரசைக் கலைத்துவிட்டார்கள்.

தி.மு.க.வுக்கு இது ஒரு கசப்பான அனுபவம் என்றாலும் சுயமரியாதையுள்ள எந்த ஒரு ஆட்சியும் மேலிடம் பிறப்பிக்கும் எல்லாக் கட்டளைகளுக்கும் அடங்க வேண்டும்- என்று எதிர் பார்க்க முடியாது. அப்படித் தி.மு.க. ஆட்சி கீழ்ப்படியாத காரணத்தினால்தான் இலஞ்ச ஊழல் எனக்கூறி, குற்றச்சாட்டு மனு கொடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுக்காலத்திற்குப் பிறகு அரசியல் நோக்கத்துடன் தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டு ஆட்சியைக் கலைத்து விசாரணையும் வைத்தார்கள்.

இதில் மேலும் ஒரு விசித்திரம் என்னவென்றால், எந்தக் கருணாநிதியின் ஆட்சி ஊழலில் ஈடுபட்டது என்று புகார் சொன்னார்களோ; அந்த ஆட்சியைக் கலைக்கும் நாளன்று காலை வரையில் கவர்னர் கே.கே.ஷா அவர்கள் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசியதுதான்!"

மொரார்ஜியின் இந்தப் பேச்சை இலட்சக்கணக்கான மக்கள் கேட்டனர். மனத்தில் பதிய வைத்துக் கொண்டனர். ஆனால் மொரார்ஜி அன்று பேசியதை; பிறகு அவரே பிரதமராக வந்தவுடன் அவரே மறந்துவிட்டதுதான் மேலும் ஒரு பெரிய விசித்திரம்! 9. "ஆயுள் தண்டனையின் அனுபவங்கள்" "மே லும் ஒரு விசித்திரம் என்னவென்றால்" எனச் சென்னைக் கடற்கரைப் பேச்சைத் தொடர்ந்த மொரார்ஜி தேசாய் அவர்கள் ஒரு பெரிய விசித்திரமாக - அவர் அன்று பேசியதையே மறந்துவிட்டார் என்பதாக சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அதுபற்றி விபரமாகப் பிறகு எழுதுகிறேன். ஆம்; எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. 'மிசா' சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் வந்த மாவீரன் சிட்டிபாபு எங்களைச் சந்திக்காமலே சாவூருக்குப் போய்விட்டாலும் கூட, அந்தத் தியாகி சிறைச்சாலையில் எழுதிய "ஆயுள் தண்டனையின் அனுபவங்கள்" என்ற கையெழுத்து நோட்டுப்புத்தகம் எப்படியோ விடுதலையாகி வெளியே வந்து விட்டது. சென்னை சிறையில் நடைபெற்ற கொடுமைகளுக்கு நீதிவிசாரணை வேண்டுமென்று கழகமும் மற்ற ஜனநாயக இயக்கங்களும் விடுத்த கோரிக்கை அப்போது அலட்சியப்படுத்தப் படினும்; பின்னொரு காலத்தில் ஜனதா ஆட்சி சிறிது காலம் நடைபெற்றபோது கவர்னராக இருந்த பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் நீதிபதி இஸ்மாயில் அவர்களைக் கொண்டு விசாரணைக் கமிஷன் நியமித்த போது சிட்டிபாபுவ

ின் அந்த "டைரி" விசாரணைக்கு மிகவும் பயன்பட்டது. சிறை அதிகாரிகள் குற்றவாளிகள் என இஸ்மாயில் கமிஷன் அடையாளம் காட்டி அறிக்கை தந்த பிறகும் அப்போதிருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றார்களே தவிர - யாரும் தண்டிக்கப்படவில்லை. எந்த நடவடிக்கைக்கும் ஆளாக்கப்படவில்லை. ஆனால் சிட்டிபாபுவின் டைரிக் குறிப்புகளை இந்த விசாரணைக் கமிஷன்களுக்கெல்லாம் முன்பே - மத்தியில் ஜனதா ஆட்சியும், மாநிலத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியும் வராததற்கு முன்பே - மிசாக் கைதியாக இருந்து விடுதலையானவுடனே; முரசொலிமாறன் "ஆயுள் தண்டனையின் அனுபவங்கள்" என்ற அந்தத் தொடரை முரசொலியில் வெளியிட்டார்.

முரசொலியில் தொடர்ந்து அந்த சோகமும், வீரமும் தியாகமும் நிரம்பிய கட்டுரை வெளிவந்த போதிலும், முதல் நாள் வெளிவந்தததை மட்டும் இப்போது குறிப்பிடுகிறேன். சிறையில் அடைக்கப்பட்ட அன்றைக்கே சென்னையில் சித்ரவதையல்லவா நடந்தது. சிட்டிபாபு அடைப்பட்டிருந்த கொட்டடி- யில் நடைபெற்றதை மட்டும் சிட்டிபாபுவின் எழுத்தாலேயே விவரிக்கப்பட்டிருப்பதை இங்கே காணலாம். "மாலை 5 மணி. மீண்டும் உணவு, களியுடன் கூடிய தட்டு!

யாரோ பயன்படுத்திய தட்டுகள்! யாரோ பயன்படுத்திய சிறுநீர் பானைகள்! யாரிடம் கேட்பது, கேட்டால் யார் பதில் சொல்வது! இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுதான்! ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள்! மங்கலான ஒளியில் 8 மணி அளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது. காரணம், நான் இருந்த இடம் வருவோரை போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள் சற்றேறக்குறைய இருபதுக்கும் மேற்பட்டோர், சிறை அதிகாரி...!

அழகான பெயர்! அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருது சொல்தான்...! ஆமாம், அந்த அன்புதான் அரசியல் கைதிகளை அடித்திட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார். அவர் மட்டும் அல்ல. அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகள் உட்பட! அவரது கை அசைவில் அத்தனைப் பேரும் நாங்கள் இருக்கும் இடத்துக்குள் நுழைந்தனர். இரு கோடுகளைத் தனித்தனியே படுக்க வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றனர். அவர்களது கையில் இருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இக்கோடுகளுக்கு நடுவே உள்ள இடைவெளி!

பட்டாளத்தின் பதுமைபோல் அவர்கள் நின்றனர். இதற்குள் காக்கி உடை அணிந்த... கம்பீரமாகக் குரல் எழுப்பினார். (பத்தாம் நம்பர் அறைக்கு) அருகில்! கண்ணுக்குத் தெரியாமல் காலன் கவர வருவான் உயிரை என்பார்கள் கட்டையாக விழப் போகிறவர்கள்! ஆனால் கதவருகே காக்கி உடையில் காவலாளிகள் காலனைப் போல்! கதவு திறக்கப்படும் ஒலி! கம்பீரமான குரல் பேசியது! பெயர் சொல்லி அறைவிட்டு வருதல் வேண்டும். "SEARCH" என்ற பெயரால் திறக்கப்பட்ட கதவு "பளீர்" என்ற சத்தத்துடன் துவங்கியது.

ஏதோ சினிமாவில் காணும் காட்சிபோல் இருந்தது. கொலைக்காரக் கைகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டிருந்தன! அலறல்! அழுகுரல்! அய்யோ! அப்பா! அம்மா! என்னும் அபயக் குரல்கள்! 'ஓடு உள்ளே' என்ற உத்தரவு! சர்க்கஸ் புலி ஆட்டுக்குட்டி தலையைத் தன் அகண்ட வாயில் வைத்துச் 'சுவைக்காமல் காண்போருக்கு வித்தைகாட்டுவது போல்' கண நேர அதிர்ச்சி! ஓடு என்றவுடன் தீ வளையத்தில் தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது அறை பத்து.

அடுத்த அறை ஒன்பது! அப்படியே ஐந்து வரை வந்து கொண்டிருந்தது. அடுத்து ஓர் அறைதான். அதற்கு அடுத்து எங்கள் அறை! அறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் காட்சியிலேயே அவர்கள் அடிபட்டது போன்ற உணர்வு! தங்களை அறியாமல் இது என்ன என்ற கேள்வி! அழுவதா சிரிப்பதா என்றிருக்கும் நிலை எனக்கு! காரணம் இது போன்ற காட்சிகளை நான் இரண்டு முறை கண்டவன் மட்டும் அல்ல! நானே ஓர் அங்கமாக அகப்பட்டு உள்ளவன்!

அதனால் எனக்கு அதிர்ச்சி இல்லை! ஆனாலும் எனது நண்பர்களைப் பார்த்து ஆடை அணிந்து கொண்டே வெளியே போகவேண்டும்! அவன் சொல்வதுபோல் ஆடையைக் கழற்றி விட்டுப் போகக்கூடாது என்று சொன்னேன். ஆனால் அனைவரும் மழையில் நனைந்த குழந்தைகள் போல் உடல் ஆடிக் கொண்டிருப்பதையும் காணாமல் இருக்க முடியவில்லை. அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது! அடுத்து நாம்தான். பூட்டுத் திறப்பது மட்டுமே கேட்டது! கதவைத் தள்ளினார்கள்!

"வாங்கடா" என்ற குரல்! கடைசி அறையானது உக்கிரம் அதிகமாக உள்ள நிலை. அலுத்துப் போய்விட்டவர்கள் அல்ல அவர்கள்! அதிகாரி வேறு வெளியில் நின்றபடி 'என்னடா மெதுவாக அடிக்கிறீர்கள்' என்று அதட்டல்! உத்தரவு உக்கிரமாக வருகிறபோது உதை வேகத்தைக் கேட்கவா வேண்டும்! கதவு திறந்ததும் யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப்போவ தில்லை; அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்கள் அல்லவா நாங்கள்!

எனவே திரும்பிப் பார்த்தேன்! தீர்மானமாக நானே முதலில் வெளியில் வந்தேன் பெயர் சொல்லி! எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்தன அறைகள்! நிலைக்கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுவது போல் எனக்குத் தோன்றியது. கண்கள் கணநேரம் காண்பது எல்லாம் காரிருள் போல் இருந்தது. இரு கோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி! ஆம்; அவர்கள் அடித்ததும் அப்படித்தான்! ஆனால் அவர்கள் அசந்தனர்.

இது எலி அல்ல புலி என்று! காரணம். அத்தனை அடிக்கும் என் உடல் விழவில்லை தரை நோக்கி! தள்ளினார்கள் மதில்சுவர் மீது! சட்டென்று திரும்பிக் கொண்டேன். வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன்! ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடக்காலாலும் வலக்காலாலும் துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் உள்ள நிலையில். ஆர்க்காடு வீராசாமி நெடுமரமாகக் கீழ் சாய்ந்து கிடந்தார்!

வெறிக்கூட்டம். முரசு பறை அறைவது போல், இரு கைகளால் அறை கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஒரு புறத்தில் இக்காட்சி பள்ளிக்கூட மாணவன் பெஞ்சு மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும்...! ஒரே குத்துதான் நீலத்துக்கு! (நீல நாராயணனுக்கு)குள்ள உருவம். நீலம் மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து முதுகில் இரண்டு தடியடி! அவ்வளவுதான் குலைநோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளி போல் சுருண்டு விழுவதைக் கண்டேன்!

கால் எடுத்து வைத்துக் கைகொடுக்க முடியுமா என்று அசைந்தேன்! தொண்டையில் ஓர் குத்து எனக்கு. மீண்டும் சுவரில் தள்ளப்பட்டேன்! அய்யோ என்று சாய்ந்தேன் நான்! அங்கே என் அன்புத் தம்பி! ஆமாம்; மு.க. ஸ்டாலின்தான்! தமிழகத்து முதலமைச்சர் மகன் நேற்றுவரை! அறிந்தே அந்த... தன் கால்பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்கச் சுழற்றி உதைத்தான்! அடுத்துக் கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் கன்னத்தில் கை நீட்டினான்.

கண்டேன் காட்சியை! கண நேரத்தில் அவன் தன் இருகை எடுத்துக் கும்பிடும் காட்சி மட்டுமே என் கண்களுக்குப் புலப்பட்டது! இவர்கள் இவனை அடித்தே கொன்று விடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர். உதவிக்கு அவர்கள் எழ முடியாத படி! எமதூதர்கள்! என்ன செய்வது, எனக்கொன்று ஓர் துணிவு! திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தம்பியைத் தள்ளிக் கொண்டே! தடிகள் கழுத்தில்!

அவை அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்ற விழும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது கழுத்தில். அத்தனையும் பெற்று அன்புத் தம்பியை அறைக்குள்ளே ஓடவிட வழி கிடைத்தது என்ற நிம்மதி. அதேபோல் வீராசாமியைத் தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர்! நீலம் மூச்சுத் திணற... தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்! தம்பியோ தான் பட்ட அடி மறந்து தன் உடன்பிறப்புக்களை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி!

அவர்களைப் படுக்க வைக்கத் தன் தோள் துண்டைத் தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கிப்படுக்க வைத்த காட்சி! என்னையோ அவர்கள், "வாடா தம்பி வா" என்று வாயில் ஓர் குத்து விட்டு உள்ளே தள்ளினார்கள்! இல்லை, இல்லை! கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவதுபோல் அறையில் நான் வீழ்ந்தேன். இல்லை, தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா! நினைவு வேறு எனக்குப் பாதியாகத் தானேயிருக்கிறது. பூட்டுப் பூட்டப்பட்டது!

உள்ளே அழுகுரல்! முனகல்! அப்பா, அம்மா என்று ஒலி! அன்புத் தம்பியோ! அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை... மார்பில் சாத்திவிட்டு! அவன் தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தைத் தடவிக் கொண்டே கேட்டான். "அண்ணே! இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா?"

ஆமாம்; அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! அடிக்க வந்தவர் அல்லவே அவர்கள்! கொலை வெறித்தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்... ...பாம்புகள் எங்களை அல்லவா கடித்தன! பரவாயில்லை. இதுவும் ஒரு படிப்பினைதானே! ஆண்டுகள் ஒன்பது அதிகாரம், அடுத்த ஒன்பதாவது மணி சர்வாதிகாரம்! இரண்டும் ஒரே நேரத்தில் கிடைப்பது என்ன அவ்வளவு சுலபமா? இரண்டின் தன்மையை ஒரு மனிதன் பெறுவது அரசியல் கணக்குப்படி கூட்டலும் கழித்தலும் அல்லவா!

மிச்சம் முதிர்ச்சி தானே! அந்த அனுபவம் கிடைப்பதற்கு நாங்கள் அடிபட்டது பலன்தானே! அன்புத்தம்பி ஸ்டாலினோ அதிர்ச்சி அடைந்திடவில்லை. அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக் கூடாது என்று அன்பொழுகக் கேட்டேன். 'அடி பலமா உனக்கு' என்றேன். 'அதெல்லாம் இல்லை அண்ணே' என்று அனுபவம் பெற்றவனைப் போலப் பேசினான்.

தெம்பு குறையக் கூடாது என்பதற்காக. 'தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள்' என்றேன். 'இருக்கட்டும் அண்ணே' என்று சொல்லி அவன் என்னைத் தன் கரங்களால் அடிபட்ட இடங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டே என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்!

முகத்தைத் துடைத்துக் கொண்டே 'தம்பி, தண்ணீர் தேவை' என்றேன்! பாவம். அவன் என்ன செய்வான் - அறையில் இருந்தால் தானே தர! அதற்குள் அதட்டல் குரல்! "யார்ரா சிட்டிபாபு, வீராசாமி, நீலநாராயணன்? வாங்கடா வெளியில்!" பூட்டுத் திறக்கப்பட்டது. தம்பியைப் பார்த்தேன்! அவன் எங்களை மீண்டும் அடிக்கப் போகிறார்கள் என்று எண்ணியிருப்பான் போலும்! பாவம். தண்ணீர் கேட்டதற்கு அவன் அப்போது கண்ணீர் விட்டான்! அந்தக் காட்சிகள் இதய இணைவு அல்லவா!

அகமும் புறமும் ஒன்றாக இணைய என் இதயம் முடிவெடுத்த நேரம் அது தானே! ஆமாம்! அன்னையிடம், அன்பு மனைவியிடம், அருள்மிகு மக்களிடம் பெறமுடியாத அன்பை அன்று அவனது கண்ணீர்த் துளிகள் எனக்கு தன் கண் பார்வையில் எனது இதயத்தையே தானாகத் தந்துவிட்டது அவனிடம்!"

இது சிட்டிபாபு எழுதிய டைரியின் முதல் நாள் நிகழ்ச்சி. இந்த 'டைரி' தொடர்ந்து வெளி வந்தது முரசொலியில்! நூல் வடிவிலும் வெளியிடப்பட்டது. இவைகளைப் படித்தோர் கண்ணீர் வடித்தனர். கேட்டோர் குமுறி அழுதனர். என் செய்வது; நாட்டு நடப்பை உணரும் பக்குவம் பெற்றோர் - நல்லது கெட்டது எது என்பதை ஆய்ந்திடும் அறிவுடையோர் மட்டுமே ஜனநாயக நாட்டில் மனித உரிமைகள் இப்படியும் மாய்க்கப்படுவதோ என மலைத்தனர். தவித்தனர்.

பாதகச் செயல்களுக்கு விடை கொடுக்க எண்ணினர். பாவிகட்குப் பாடம் புகட்ட முனைந்தனர். வாக்குச் சாவடியில் அதனைச் செயலில் காட்டினர். மற்றவரோ காடு மேடானால் என்ன - மேடு நாடானால் என்ன - நாடு கேடானால் என்ன - என எண்ணி வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப்பேசிக் கிடப்போம்! தருமன் வேடம் போட்டவனைத் தருமன் என்றும் - துரியன் வேடம் அணிந்தவனைத் துரியன் என்றும் கருதிடும் கண்மூடி மாந்தர்கள்! இந்த இரண்டாம் பிரிவினர் தொகையே தமிழகத்தில் சற்று அதிகம் என்ற காரணத்தால் தகுதியுடையோர் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது என்பதும், அவர்கள் தேர்தலில் வெல்வதும் அவ்வளவு எளிதல்ல!

மிகச் சிரமமான ஒன்றேயாகும்! அந்தச் சிரமத்தைப் பாராமல் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் நோக்குடன் அணிவகுத்த தி.மு.க., ஜனதா கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி சார்பில் 28.2.77 அன்று தியாகராயர் நகர் பனகல் பூங்காவில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பாபு ஜெகஜீவன்ராம், பி.இராமமூர்த்தி, பா.இராமச்சந்திரன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் தோழர் பி.இராமமூர்த்தி அவர்கள் இந்திராவின் இருபது அம்சத் திட்டம் பற்றி மிகச் சுவைபடப் பேசினார்.

"இந்திராவின் இருபது அம்சத்திட்டம் என்ன என்று கேட்டால், "அதுதான் இருபது அம்சத் திட்டம்," என்கிறார்கள். "கடவுள்" என்றால் என்ன என்று கேட்டால் "அதுதான் கடவுள்" என்று பதில் சொல்கிற மாதிரி - தந்தை பெரியாருடைய சிலையில் "கடவுள் இல்லை - அதை நம்புகிறவன் முட்டாள்!

அதை உருவாக்கியவன் அயோக்கியன்" என்று அவரது வாசகம் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதேமாதிரி நாங்கள் அன்றைக்கே சொன்னோம். "இருபது அம்சத்திட்டம் என்ற ஒன்று கிடையாது. அதை நம்புகிறவன் முட்டாள். அதை உண்டாக்கியவன் அயோக்கியன்." இவ்வாறு பி.ஆர். அவர்கள் பேசியபோது மேடையில் இருந்த நாங்கள் மட்டுமல்ல - தியாகராயர் நகரில் கூடியிருந்த அந்த மக்கள் கடலே கரவொலி ஆரவாரத்தினால் குதூகலித்தது.