உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஒப்புவமைகள்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஒப்புவமைகள்! · 222 / 391

5. ஒப்புவமைகள்! மி சாக் கைதியாக ஓராண்டுக் காலம் சிறையில் இருந்து விடுதலையான சந்திரசேகர் அவர்கள், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழுவில் இளந்துருக்கியராக விளங்கியவர். மிகப் புரட்சிகரமான காங்கிரஸ் எதிர்ப்பாளராக மாறி, இந்திய மக்களின்; அதுவும் குறிப்பாக இளைஞர்களின் இதயத்தில் எதிர்கால நம்பிக்கை ஒளியாகச் சுடர் விட்டவர். வசதிகளும், தேவைகளும், வாய்ப்புகளும், பதவி தேடி அலைதலும் போன்ற வக்கிரமான சிந்தனைகள் அவர் உள்ளத்தில் புகமுனைந்து; கதவு திறக்கப்படாமல் தொலைதூரத்தில் காத்திருந்த காலகட்டத்தில் அவரது சொற்கள் விலை மதிப்பற்றவைகளாக இருந்தன.

அந்தப் பெருமைக்குரிய நேரத்தில்தான் அவர் ஜெய்ப்பூர் நிருபர்களிடையே பிப்ரவரி 2-ஆம் நாள் பேசும்பொழுது பின் வருமாறு குறிப்பிட்டார்- "தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள்மீது (சர்க்காரியா) விசாரணைக் கமிஷன் அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். கடந்த முறை 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றபோது திரு. கருணாநிதி அவர்களோடு பிரதமர் இந்திராகாந்தி உடன்பாடு வைத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது திரு.கருணாநிதி மீது 1968-ஆம் ஆண்டு சம்பந்தமான விஷயங்கள் பற்றியெல்லாம் பிரதமர் இந்திரா, ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தியிருக்கிறார். 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் எல்லாச் சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.கழகத்திடமே விட்டுவிட்டபோது, பிரதமர் இந்திராவுக்கு ஊழல் பற்றித் தெரியாதா? இந்திராகாந்தி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியதை ஆட்சியில் இருந்து கொண்டிருந்த கருணாநிதி அவர்கள் ஆதரிக்காமல் எதிர்த்த காரணத்தினால்தான் அவர் ஆட்சியையும் கலைத்து, அவர்மீது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது."

நான் இதைக் குறிப்பிட்டுக்காட்டும் இவ்வேளையில், 1977ல் நியாயத்திற்காகக் குரல் கொடுத்த அந்த சந்திரசேகர் என்ற பளிங்கு மனத்தினர் மீது மாசு படிந்து மங்கிவிட்டார் எனினும்; 1976ல் கழக கட்சியைக் கலைத்தபோது வெகுண்டுரைத்துக் கண்டித்த அவரே தான், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கழக ஆட்சியைக் கலைக்கும் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார். பிரதமர் இந்திராவுக்கு, ஜெயப்பிரகாஷிடம் நான் கொண்டிருந்த நட்புப் பிடிக்கவில்லை - எனவே அன்று ஆட்சி கலைக்கப்பட்டது!

பிரதமர் சந்திரசேகருக்கு, நான் வி.பி.சிங் அவர்களிடம் கொண்ட நட்புப் பிடிக்கவில்லை - எனவே அவரும் இந்திரா வழியில் 1991ல் கழக ஆட்சியைக் கலைத்தார். "இந்திரா ஆட்சி, மன்னராட்சி முறைக்குத் திரும்பச் செல்வது மட்டுமல்ல; பாசிசம் வளரவும் வழிவகுப்பதாகும்" என்று ஜெய்ப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர்தான்; ஆளுநரிடம் அறிக்கைகூடப் பெறத் தேவையில்லையென்று குடியரசுத் தலைவரிடம் கூறி தி.மு.க.

ஆட்சியைக் கலைத்தார். அவர் செயலுக்கு ஏதேதோ காரணங்களைக் கூறினார். அந்தக் கட்டம் வரும்போது அவைகளைப்பற்றி விரிவாகத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதால் இப்போது நிறுத்திக் கொள்கிறேன். வானத்தில் வண்ண வண்ணமாக உருக்கொண்டு உடனுக்குடன் மாறிக் கொள்ளும் முகில்களைப் போன்றது அரசியல் என்றாலுங்கூட - வானத்தைப் போன்று விரிந்து நிலைத்த தன்மை அரசியல்வாதிகளின் நெஞ்சத்துக்குத் தேவை என்பதை மட்டும் கோடிட்டுக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சுதந்திர இந்தியாவில் இழந்துவிட்ட ஜனநாயகத்தை மீண்டும் பெறுவதற்காக அரசியல் கட்சியின் தலைவர்களும், நடுநிலையாளர்களான அறிஞர் பெருமக்களும் களத்தில் நின்ற அதே காலத்தில்தான் 1977 ஜனவரியில் செக்கோஸ்லாவாகியா நாட்டில் ஜனநாயக உரிமைகளைக் கோரி, அறிஞர் பெருமக்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். அவர்களில் 240 பேர் கையெழுத்திட்ட ஜனநாயக உரிமை மீட்பு அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அந்தக் கிளர்ச்சிக்குக் காரணமே அந்த நாட்டின் அரசு பின்லாந்து நாட்டின் தலைநகரமான "ஹெல்என்சி"யில் நடந்த ஒரு மாநாட்டில் செக்கோஸ்லாவாகிய மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதாக உறுதி அளித்திருந்ததைச் செயல்படுத்திட மறுத்ததுதான்! "ஹெல்என்சி" நகர் மாநாட்டில் அளிக்கப்பட்ட உறுதிக்கேற்ப ஜனநாயக உரிமைகளை வழங்குக என வலியுறுத்தும் அறிக்கையை வெளியிட்டவுடன்; அந்த நாட்டின் அரசியலில் இருந்த முக்கிய பிரமுகர்களும், அறிக்கையில் கையெழுத்திட்டவர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஜனநாயக உரிமை இயக்கத்தின் தலைவர் ஜான் மொட்டாக்கா என்பவரும் சிறைக்கூண்டில் தள்ளப்பட்டார். போலீசாரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட அவர் 1977 மார்ச் திங்கள் 13ஆம் நாள் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல; ஜனநாயக உரிமைகள் அடக்கி ஒடுக்கப்படும் எந்தப் பகுதியிலும் - எந்த நாட்டிலும் முன்னறிவிப்பில்லாமலே திடீரென வெடிக்கும் எரிமலைகளைப்போல ஜனநாயக மீட்புப் போராட்டம் வெடித்தே தீரும்!

சில நேரங்களில் இராணுவ வீரர்களின் அழுத்தமான பூட்ஸ் கால்களில் அந்த உரிமை வேட்கையாளர்கள் புழுக்களாக மிதிபட்டு நசுங்கிப் போகலாம் அதனால் - "மிதிபட மிதிபடப் புழுவும் புலியாகும்" என்ற பழமொழி நிரந்தரமாகப் பொய்த்துப் போய்விடாது. அதே 1977 ஜனவரியில்தான் இஸ்ரேலிய நாட்டுக்கு எதிராக பாலஸ்தீனியத் தலைவர் அபுதாவுத் என்பார் "கறுப்பு செப்டம்பர்" என்ற இயக்கத்தின் சார்பாகப் பல உரிமைக் கிளர்ச்சிகளை நடத்தினார் என்பதற்காக பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது பயங்கரமான கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்றாவது நாளே (12.1.77) அவசரமாக பாரிஸ் நகர நீதி மன்றத்தில் விசாரணைக்காகக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அவர்மீது சாட்டப்பெற்ற கொலைக்குற்றம் என்ன? மேற்கு ஜெர்மனியில் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின்போது பதினோரு இஸ்ரேலியர்களைப் படுகொலை செய்தார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு! வழக்கை விசாரணை செய்த பாரிஸ் நகர நீதிமன்றம் அபுதாவுத்தைக் கைது செய்து குற்றம் சாட்டியதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்று கூறி விடுவித்து விட்டது.

அவரை ஏற்கனவே அல்ஜீரியா நாடு, நாடு கடத்தியிருக்கிறது. இப்போது அவரை மேற்கு ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று இஸ்ரேல் விடுத்த வேண்டுகோளையும் பிரான்சு நிராகரித்து விட்டது. அந்த முடிவைக் கண்டிக்கும் வகையில், இஸ்ரேல் நாடு, பாரிசில் இருந்த தனது தூதுவரைத் திரும்ப அழைத்துக் கொண்டது. இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஈகால் அலான் என்பவர் பாரிசில் அளிக்கப்பட்ட தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது, "இது வெட்கக்கேடான சரணடைதல்" என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.

சற்றொப்ப ஒரு திங்கள் கழித்து உகண்டாவில் இடிஅமீன்; தனது "காகவா" இனத்தைச் சேர்ந்தவர்களை அரசின் மிகப்பெரும் பொறுப்புகளில் நியமித்திருப்பதாகக் குற்றம் சொன்ன இராணுவ அதிகாரிகள் பலரை, இடிஅமீனின் அரசுப் படையினர் - கொலை செய்து, உகண்டா - கென்யா பகுதியில் பாயும் மால்பா நதியில் பிணக்கட்டுமரங்களாக மிதக்க விட்டனர். இக்கொடுஞ்செயலைக் கண்டித்து "ஜனாளிலூஉம்" என்ற பேராயர் தலைமையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது.

அந்தப் பேரணியில் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் இடிஅமீனைக் கண்டித்துப் பங்கு கொண்டனர். இடிஅமீனின் அரசுப் படையினர் அந்த மூவரையும் கைது செய்து, "கொல்லுவோம்! கொல்லுவோம்!" என்று கூச்சலிட்டுக் கொண்டே இழுத்துச் சென்றனர்! அவ்வளவுதான்! அவர்கள் கொல்லப்பட்டனர்! அதுபற்றி இடிஅமீன் விடுத்த அறிக்கையில், "அவர்கள் பாபம்; ஒரு விபத்தில் இறந்துவிட்டனர்" என உருக்கமாகக் குறிப்பிட்டார். ஆம்; அப்பட்டமான பொய், இராணுவ உடை மாட்டி உலவவிடப்பட்டது!

ஜனநாயகம்; சுதந்திரம் இவைகள் பறிக்கப்படும்போது அமைதிக்கிளர்ச்சிகளையும் ஆட்சியில் இருப்போர் வன்முறைக் கிளர்ச்சிகளாக்கிடுவர். இயல்பாகவே வழி ஏதுமின்றி வன்முறைகள் தோன்றுவதும் தவிர்க்க முடியாததாகி விடுவதுண்டு. இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை "எமர்ஜன்சி" பிடித்து அழுத்தியபோதிலும் வடமாநிலங்களில் சில வன்முறைச் செயல்கள் நடந்ததாக வந்த செய்திகளைத் தவிர, தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அமைதியான முறையில்தான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது எனக் கூறலாம்.

1876 ஜூலைத் திங்களில் தோன்றித் தமிழுக்கும், இலக்கியத்திற்கும் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய செந்தமிழ்ச் செம்மல் - தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாட முடியாமல் நெருக்கடி நிலைமை 1976ல் குறுக்கிட்டாலுங்கூட; எளிய முறையிலாவது ஒரு மண்டபத்தில் கொண்டாடலாமென சென்னை தமிழ் இலக்கியக் கழகம் திரு.மு.நாகநாதன் வாயிலாக அனுமதி பெற்று, சென்னை மத்திய நூலகம் பாவாணர் அரங்கில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழாவுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக, போலீசார் அந்த மண்டபத்தை முற்றுகையிட்டுப் பூட்டிவிட்டுப் போய் விட்டனர்.

யாருடைய நூற்றாண்டு விழாவுக்கு இத்தகைய வேதனையான நிலை! தமிழ் மொழி காத்திட 1938ல் போர்க்கோலம் பூண்ட வரும் - திராவிட நாகரீகம், பண்பாடு, மொழி இவற்றுக்காகத் தலை நிமிர்ந்து முழங்கியவரும் - 1950ல் இறுதியாகக் கண்மூடும் வரையில் உறுதியாகத் தமிழ் இனம் வாழப் பணியாற்றியவருமான மறைமலை அடிகாளாரின் நூற்றாண்டு விழாவுக்குத்தான் இந்த நிலை! "மதியிலா விசும்பென்கோ! மணமிலா மலரென்கோ! நதியிலா ஊரென்கோ! நதியிலா யாழென்கோ!

நிதியிலா வாழ்வென்கோ! நெய்யிலா உணவென்கோ! துதிகுலாம் மறைமலையார் தோற்றமிலாத் தமிழுலகை!" என்று மறைமலை அடிகளாரைப் பற்றித் தணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை எழுதிய பாடல் ஒன்றே அடிகளாரின் பெருமையைத் தமிழுலகம் எப்படிப் போற்றியது என்று விளக்கிடப் போதுமானது! அந்தத் தமிழ்ப் பெரியாரின் நூற்றாண்டு விழாவுக்கு நெருக்கடிக் காலத்தில் இப்படியொரு இடையூறு! பின்னர், காவல்துறைப் பெரிய அதிகாரிகளிடம் விளக்கிச் சொல்லி, அரசியல் கட்சி சார்பாக விழா நடத்தவில்லை; இலக்கியக் கழகம் சார்பாக நடத்தப்படுகிறது - நாவலர் நெடுஞ்செழியன் மட்டுமே கலந்து கொள்கிறார் என்று விவரித்து - சில நாட்களுக்குப் பிறகே அந்த நூற்றாண்டு விழாவை நடத்துகிற அளவுக்கு - நெருக்கடிக் காலத்திலும் தமிழகம் அமைதியாகத்தான் இருந்தது.

"வன்முறை இரு புறமும் கூர்மையுள்ள கத்தி - அதனைப் பயன்படுத்தினால்; அது பயன்படுத்தியோர் மீதே பாயும்" என்றும் - "கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு!" என்றும் அண்ணா அவர்களால் கற்பிக்கப்பட்ட கழகத்தினர் எமர்ஜன்சியின் எல்லாவகையான கொடுமைகளையும் இதழ்களில் புன்னகையை இழையோடவிட்டே சகித்துக்கொண்டு பொறுமை காத்தனர் என்பதற்கு; மறைமலை அடிகளார் நூற்றாண்டு விழாவை இலக்கியக் கழகத்தின் சார்பாக - காவல்துறையினர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்தியதும் ஒரு சான்றாகும்.

ஜனநாயக உரிமை கோரியவர்கள் மீது செக்கோஸ்லாவாகியா அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறை - பாலஸ்தீனிய விடுதலைத் தலைவர்களில் ஒருவரான அபுதாவுத் மீது இஸ்ரேல் எடுத்த நடவடிக்கை - நீதி வழங்கிய பாரிஸ் நீதிமன்றத்தின் மீதே பாய்ந்து விழுந்த அநீதி - தனக்கு எதிரானவர்களை வஞ்சம் தீர்த்துக் கொண்டு நல்லவன்போல இடிஅமீன் விடுத்த அபாண்ட அறிக்கைகள் - இவற்றையெல்லாம் பார்க்கும்போது; இந்த அளவில் அல்லது இந்த வடிவத்தில் இல்லாவிடினும் இந்தியாவில் நெருக்கடி நிலைக்கு முன்பு சில காலமும், நெருக்கடி நிலைக்குப் பிறகு சில காலமும் - இந்த பாணியில் டெல்லி அரசு செயல்பட்டது என்பதை அறவே மறுத்துவிட யாராலும் முடியாது என்பதே என் கணிப்பாகும்.

பிப்ரவரி 2-ஆம் நாள் கூடிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கழக முன்னணியினர் இதுபோன்ற கருத்துக்களை உள்ளடக்கித்தான் தமது உரைகளை நிகழ்த்தினர். தலைமைச் செயற்குழுக்கூட்டம் மறுநாள் பிப்ரவரி 3-ஆம் தேதியும் தொடர்ந்து நடந்தது எனினும்; அன்று அதிகாலை 7 மணியளவில் ஆண்டு தோறும் கழகத்தினர் ஆற்றிடும் நெஞ்சை உருக்கிக் கண்களைக் குளமாக்கிடும் கடமை யொன்றுண்டே-அந்தக் கடமை ஆற்றிடக் கிளம்பினோம். ஜனநாயக உலகின் வழிகாட்டிகளில் ஒருவராய் - பண்பாடு மிகுந்த அரசியலின் படைப்பாளனாய் - தமிழினத்தின் மறுமலர்ச்சித் தூதுவனாய் - தமிழ்மொழியின் ஏற்றத்திற்குழைத்த ஏந்தலாய் வாழ்ந்து மறைந்து அழியாப் புகழேந்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள் அன்றைக்கு!

வழக்கம் போல் அண்ணா சதுக்கத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து அவர் நினைவு போற்றும் அமைதி ஊர்வலத்திற்குக் கழகப் பொறுப்பாளர் நண்பர் சாதிக்பாட்சா விடுத்த அறிக்கைக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். 1976 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா சதுக்கத்திற்கு வர இயலாதவர்கள் என்று மட்டுமே முரசொலியில் செய்தி வெளியிடக்கூடிய அளவுக்கு பல்வேறு சிறைகளில் மிசாக் கைதிகளாகப் பூட்டப் பட்டிருந்தோர், 1977 பிப்ரவரி 3-ஆம் நாள் விடுதலை பெற்றவர்களாய் அந்த சதுக்கத்திற்குள் நானும், பொதுச் செயலாளர் நாவலரும், பொருளாளர் பேராசிரியரும் முன் செல்லப்பின் தொடர்ந்து வந்தபோது புல்லரித்த மேனியராயினர்.

உணர்ச்சி கொந்தளிக்கும் உள்ளத்தினராய் இருவிழி வழியும் அருவிகளை அடக்கிக்கொள்ளும் திறனற்றவராயினர். அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்திட அந்தத் தாயின் வயிறு இடம் தராத காரணத்தினால் பல தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்புகள் அல்லவா; அண்ணாவின் மொழிப்படி! அந்த உடன்பிறப்புகள், மலர் இதழ்களையும் கண்ணீர் மழையையும் அண்ணா சதுக்கத்தில் அவர் நீடுதுயில் கொண்டிருக்கும் இடத்தில் - எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது எனும் வாசகத்தின் மீது கொட்டிவிட்டு மீண்டும் செயற்குழுவுக்குத் திரும்பிய காட்சி இன்னமும் என் அகக்கண்முன்னே அகலாத அருங்காட்சியாகவே இருக்கிறது.

பிப்ரவரி 3-செயற்குழுவில் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொதுப்பிரச்சினையில் தி.மு.கழகம், அனைத்திந்திய அளவில் நிறுவன காங்கிரஸ்-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி - சோஷலிஸ்டு கட்சி - ஜனசங்கம் - பி.எல்.டி. முதலிய கட்சிகளுடன் ஒத்துழைத்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்காலத்திற்கு மேலாகப் பணியாற்றிக் கடும் சோதனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவித்தபோது கூட தமிழ்நாட்டில் தி.மு.கழகம், தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்துப்பாராமலும், கழகத்தைச் சேர்ந்தவர்கட்கு நெருக்கடி நிலையால் எந்தச் சங்கடங்களும் ஏற்படாமல் இருந்தபோதிலும், கழக ஆட்சிக்கு அபாயம் எதுவும் விளைவிக்கப்படாத நிலையிலும் - ஜனநாயகத்தைக் காப்பாற்றும் ஒரே குறிக்கோளுடன் உடனடியாகச் செயற்குழுவைக் கூட்டி நெருக்கடி நிலையை இரத்து செய்ய வேண்டுமென்று கேட்டும், இந்திய நாடு முழுவதும் மிசாவில் கைது செய்யப்பட்ட பல்வேறு அரசியல் க

ட்சியினரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும், பத்திரிகைகளின் நியாயமான உரிமைகளை வழங்க வேண்டுமென்றும், தீர்மானம் நிறைவேற்றியதையும் நாடு மறந்திடவில்லை. பாராளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் ஜனநாயகத்திற்காக வாதிட்ட கட்சிகளுடன் தி.மு.க. இணைந்து நின்று ஒருமித்த குரல் எழுப்பியதையும் யாரும் மறுக்க முடியாது. ஜனநாயகப் பாதுகாப்புக்கான பொதுப்பிரச்சினையில் தன்னைப் பல்வேறு சோதனைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும், இட்டுக்கட்டப்பட்ட இழிவுகளுக்கும் கற்பிக்கப்பட்ட களங்கங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு தி.மு.கழகம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மார்ச் திங்களில் நடைபெற இருக்கிற நாடாளு மன்றப் பொதுத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பது ஒன்றையே மையக்குறிக்கோளாகக் கொண்டு தி.மு.கழகம் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளது. இந்தக் கருத்து வெற்றி பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய கட்சிகள் தேர்தல் உடன்பாடு கொள்ளும் என்று கழகம் எதிர்பார்க்கிறது. அத்தகைய உடன்பாடுகள் அமையாவிட்டால் கழகம் தனித்தே போட்டியிட வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாதாகவே அமையும்.

உருவாகும் நிலைமைகளை ஆராய்ந்து ஏற்ற முடிவுகளை எடுக்க இந்தச் செயற்குழு, கழகத் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் முழு அதிகாரத்தை வழங்குகிறது." இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் மலை குலைந்தாலும் நிலை குலையாத கொள்கைப் பிடிப்பாளரும் - மிசாக் கைதியாக சேலம் சிறைச்சாலையில் ஓராண்டு வாடியவரும்- கழக அரசில் குடிநீர் வாரியத்தலைவராக இருந்து அரும் பணியாற்றிவரும் - அண்மையில் (11.5.90) கழகத்தினர், குடும்பத்தினர் அனைவரையும் வேதனையில் ஆழ்த்துகிற அளவுக்குத் திடீரென இயற்கை எய்தியவருமான நண்பர் செ.கந்தப்பன் ஆவார்!

தீர்மானத்தை வழி மொழிந்தவர் சென்னை சிறையில் மிசாக்கைதியாக அடைபட்டு, அடிபட்டு, அல்லற்பட்ட நண்பர் ஆற்காடு என்.வீராசாமி ஆவார்! இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கின.