உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/"கோடுகளே! வளையாதீர்!"
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

"கோடுகளே! வளையாதீர்!" · 223 / 391

6. "கோடுகளே! வளையாதீர்!" நா டாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள்; குறிப்பாக எதிர்க்கட்சிகள், தங்களைத் தயார்படுத்திக் கொள்ள கால அவகாசம் போதாது எனக் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த போதிலும் அவைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல், ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரஸ் எப்படியும் வெற்றி பெற்றுத் தீரவேண்டுமென்ற எண்ணத்துடன் மார்ச் இறுதி வாரத்தில் தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டு - அதிகார துஷ்பிரயோகத்தில் எல்லைமீறி ஈடுபட்டவாறு களத்தில் இறங்கியது.

தொடக்கப் பிரச்சாரமே காதுகளை மட்டுமல்ல; அரசியல் நாகரீகத்தையே துளைத்திடுவதாக நடத்தப்பட்டது காங்கிரசின் சார்பில்! ஜெயப்பிரகாஷ் செல்லாக்காசு! அசோக் மேத்தா அமெரிக்காவின் கூலி! மொரார்ஜி தேசாய் கள்ள நாணயம்! ஜெகஜீவன்ராம் லீலா விநோதப் பிறவி! கருணாநிதி கொள்ளைக்காரன்! இப்படிப்பட்ட மளிப்பு விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த வசை புராணங்கள் ஏடுகளில் வந்தது கண்டு நான் கழக உடன் பிறப்புகளுக்கு விடுத்த செய்தியில் அண்ணா அவர்கள் அத்தகைய வசவாளர்கள் குறித்துக் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

"என்ன சிறிதளவு வாட்டமுற்றது போலக் காணப்படுகிறாய்? வீரத் திருமுகத்தில் விசாரக் குறிகள் தெரிகின்றனவே, வந்துற்ற இடுக்கண் யாது? வந்திடில் என்ன? வாட்டம் கொள்ளப்போமோ? வள்ளுவப் பெருந்தகையை மறந்தனையோ? "இடுக்கண் வருங்கால் நகுக" என்றாரே! தமிழரின் நெறியினை அழித்திட வல்ல தீநெறி தமிழகத்திலே நெளிந்திடக் கண்டு போலும்; வள்ளுவர், இடுக்கண் தமிழினத்தைத் தாக்கக்கூடும் என்றறிந்து அவ்விதமானதோர் தாக்குதல் ஏற்படினும் கவலை கொள்ளல் ஆகாது; கொண்டிடின் இடுக்கண்களை எதிர்த்து நின்று வெற்றி பெற இயலாது என்று எடுத்துக்காட்ட, "நகுக" என்று கூறினார்.

குறள்நெறி நின்றிடும் குறிக்கோளுடைய உனக்கு ஏற்படலாமா வாட்டம், வருத்தம்! மாற்றார்கள் மனம் போன போக்கில் ஏசுவது கேட்டா வாட்டம்? மறக்குலத்தில் உதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து மதகரி மீது வீசினானாமே உன் முன்னோரில் ஒரு வீரன், களத்தில்; மறந்தனையோ? வீசினான் என்றவுடன் வசைமொழியின் விருப்பம் தீருமட்டும், விசாரம் குறையும் அளவு நானும் வீசவா என்று கேட்கத்தோன்றும் தம்பி! ஆனால் வீரன் வேல் வீசியது மதகரி மீது, சிறுநரி மீதல்ல தெரிகிறதா?"

இவ்வாறு அண்ணா எழுதியதை எடுத்துச் சொல்லி, ஆதிக்க வெறி ஏகாதிபத்திய சக்தி சர்வாதிகாரத் தன்மையெனும் மதகரி மீது வேல் வீசத்தான் தேர்தல் களம் புகுந்துள்ளோம் என்பதை மனத்திற் கொண்டு பணியாற்றிடுமாறு கழகத்தினருக்கு அந்தச் செய்தி வாயிலாக அழைப்பு விடுத்தேன். கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை அறிவிப்பதற்கும் 1977 பிப்ரவரி 10-ஆம் நாள் வியாழன் மாலை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் தலைமைக் கழகம் ஏற்பாடு செய்யும் மாபெரும் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்டது.

மிசாக் கைதியாக பிப்ரவரி மாதம் வரையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ் நாராயணன், சிறையிலிருந்தவாறே இந்திராகாந்தியின் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டது என்று கூறப்பட்ட சூழலிலும் மிசாச் சிறைகளிலிருந்து விடுவிக்கப்படாமல் மத்தியப் பிரதேசத்தில் 4500 பேரும், உத்திரபிரதேசத்தில் 7000 பேரும், பீகாரில் 2700 பேரும், கர்நாடகத்தில் 250 பேரும், கேரளத்தில் 200 பேரும், பஞ்சாப்பில் 100 பேரும், மற்றும் சில மாநிலங்களிலும் சேர்த்து இன்னமும் 16,000 பேர் காராக்கிரகக் கொட்டடிகளிலேயே கிடந்தனர்.

பத்திரிகைகளுக்கு பாதி சுதந்திரமே அளிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் எழுதிய கட்டுரையொன்றில் புகழ்வாய்ந்த கட்டுரையாளர் 'மில்' அவர்களின் ஆழமான கருத்தை அழகுபடச் சித்திரித்திருந்தார். "பயன்தரும் காரியங்களுக்காக என இருந்தாலும்கூட, தனது குடிமக்கள் கட்டுக்கடங்கியவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காக அவர்களை வளரவிடாமல் அடக்கும் ஓர் அரசாட்சி, அந்தக் கூனிக் குறுகிய மனிதர்களால் மகத்தான காரியங்களை ஆற்ற இயலாது என்பதை விரைவில் உணரும்."

இதுவே அந்த அனுபவரீதியான அற்புதமான கருத்து! குல்தீப் நய்யாரின் கட்டுரை வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு 6.2.77 தினமணியில் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பத்துப் பிரிவுகளாகத் தினமணி ஏடு வெளியிட்டு எழுப்பிய கேள்விகளுக்கான விடை மிக முக்கியமானது. 1. தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலகல் அல்லது விலக்கல். 1972 அக்டோபர் 10.