உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/செயற்குழு கூடியது
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

செயற்குழு கூடியது · 221 / 391

4. செயற்குழு கூடியது ஜெ யப்பிரகாஷர் நடத்திய முழுப்புரட்சி இயக்கத்தின் வளர்ச்சியும், நாட்டு மக்கள் ஆர்வத்துடன் அளித்த ஆதரவும் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ஏதேதோ காரணங்களைக் கூறி, நெருக்கடி நிலையைக் பிரகடனம் செய்து இந்திய நாட்டு விடுதலைக்குப் போராடிய தியாகிகள் பலரையும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற முனைந்த இயக்கங்களின் முன்னோடிகளையும் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருந்த இந்திராகாந்தி அவர்கள், நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டதாகக் கூறிய பிறகும் - நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 1977 மார்ச் திங்களில் நடைபெறும் என அறிவித்த பிறகும் - சிறையிலிருந்தோர் அனைவரையும் உடனடியாக ஓரிரு நாட்களுக்குள் விடுதலை செய்யாமல் மிக மெத்தனமாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் விடுதலை செய்திட ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.

உத்தமர் காந்தியடிகளின் பேரன்பைப் பெற்ற பழம்பெரும் தேசத் தலைவர்களில் ஒருவரான கிருபளானி அவர்கள் ஜனவரியில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சென்னையில் அவர் தங்கியிருந்த இடத்தில் ஜனவரி 31ல் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். என்னுடன் முரசொலி மாறனும் வந்திருந்தார். காந்தியடிகளின் பேரன் ராஜ்மோகன் காந்தியும் உடன் இருந்தார். தமிழ்நாட்டு அரசியல் நிலைமைகளை அவரிடம் விளக்கினேன்.

இந்தியாவின் ஜனநாயகச் சீர்குலைவை எண்ணி அவர் எந்த அளவுக்கு மனம் புண்பட்டுப் போயிருந்தார் என்பதை உணர முடிந்தது. அந்த மாதத்தில் அவர் தமிழகத்தில் முக்கிய சில நகரங்களில் பேசும்போது குறிப்பிட்டவை நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டவையாகும். "அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்தாக வேண்டும். தாமதமோ தயக்கமோ கூடாது. விடுதலைக்குப் போராடியவர்கள் பலர் செத்துவிட்டார்கள். இந்த உலகை விட்டுப் போய்விட்டார்கள்.

எஞ்சியிருப்போரை இருட்சிறையில் போட்டு வாட்டுவது என்ன நியாயமோ? நாடு எப்படி ஆகியிருக்கிறது என்றால் உண்மையான விடுதலைப் போராட்டக்காரர்களுக்கு மதிப்பு இல்லை. மரியாதை இல்லை. பலர் தியாகத்தை விலை பேச ஆரம்பித்து விட்டார்கள். நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, அவர் என்னுடன் ஒரே சிறையில் இருந்ததாக நிரூபிக்கும் சான்றிதழ் ஒன்று தரவேண்டும் என்று கேட்டார். அப்படியொரு சான்றிதழ் கிடைத்- தால் அதை வைத்து அவர் தியாகி நிலம், மானியம் பெற முடியும் என்பதால் கேட்டார்.

நான் அவரைப் பார்த்து என்னோடு எந்தச் சிறையில் இருந்தீர்கள் என்று கேட்டேன். அவர் ஒரு சிறைச் சாலையின் பெயரைச் சொன்னார். நான் அந்தச் சிறைச்சாலைக்குள் போனதே இல்லை. இப்படிப் பலர் பொய் சொல்லி தாமிரப்பத்திரம், மானியம், தியாகி நிலம் பெறத் துடிக்கிறார்கள். சுதந்திரத்திற்காக உண்மையிலேயே போராடியவர்கள் இப்போது சுதந்திரம் பறிக்கப்பட்டுச் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்துவிட்டுத்தான் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்.

இந்தத் தேர்தலில் ஈடுபடும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சுதந்திர உரிமைக்கு நாம் தரவேண்டிய பரிசு நிரந்தர விழிப்புணர்ச்சியாகும்." இவ்வாறு கிருபளானி பேசிய அதே நாளில் ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்த செய்தியொன்றில்: "எதிர்க்கட்சியினரெல்லாம் உடன்பாடு கொண்டு ஒரே அணியில் வருவார்களேயானால் அவர்களுக்கு எனது நல்லாசி உண்டு. அப்படி அவர்கள் உடன்பட்டு ஒன்று சேராவிடில் தேர்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் இராது" என்று எச்சரித்தார்.

அவரது அறிக்கைக்குப் பிறகு ஜனவரி 21ஆம் நாள் காஷ்மீரத்து முதலமைச்சர் ஷேக் அப்துல்லா அவர்கள் பாட்னா சென்று அவரைச் சந்தித்து நாட்டு நிலை - அரசியல் நிலை குறித்து விவாதித்தார் என்று செய்தி வந்தது. ஷேக் அப்துல்லா - ஜெயப்பிரகாஷ் சந்திப்பை நினைவு கூர்ந்திடும் இவ்வேளையில் 1975 பிப்ரவரி 12ஆம் நாள் அவர் சென்னையில் என் இல்லத்திற்கு வந்து என்னுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டுச் சென்றது மனக்கண் முன்னால் நிழலாடுகிறது.

காஷ்மீர் மாநில ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு என்னைச் சந்திக்க வேண்டுமென்பதற்காகவும் என்னிடம் அது குறித்துச் சில விளக்கங்கள் அளிக்க வேண்டுமென்பதற்காகவுமே வந்தார் என்பதை "நெஞ்சுக்கு நீதி" இரண்டாம் பாகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் என்னிடம் தனிப்பட்ட முறையிலும் நிறைந்த பாசம் வைத்திருந்தவர். 1976ல் ஆட்சி கலைக்கப் படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட சென்னைக்கு வந்த அவரது அமைச்சர் ஒருவரிடம் ஒரு கூடை காஷ்மீர் ஆப்பிள் மற்றும் பல பழ வகைகளை அனுப்பி வைத்திருந்தார்.

ஆட்சி கலைக்கப்பட்டுத் தமிழ்நாட்டில் நெருக்கடி சோதனைகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தபோது டெல்லியிலிருந்து அவர் என்னுடன் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடக்கும் எமர்ஜன்சி கொடுமைகளை அவரிடம் நேரிலே விரிவாக எடுத்துச் சொல்லிட அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தா.கிருஷ்ணன் அவர்களை அனுப்பி வைத்ததேன். "நண்பர் கருணாநிதியிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.

பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து இந்தச் சோதனைகளைத் தாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள். என் அன்பும் ஆதரவும் அவருக்கும் அவரது கட்சிக்கும் என்றைக்கும் உண்டு!" என்பதாக தா.கிருஷ்ணன் அவர்களிடம் ஷேக் அப்துல்லா அவர்கள் மனம் திறந்து கூறி அனுப்பி வைத்தார். இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, ஷேக் அப்துல்லா காலத்துக் காஷ்மீரையும் - இன்றைய காஷ்மீரையும் சீர்தூக்கிப் பார்க்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் அந்தப் பகுதிகளைக் காண உலக முழுதுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த காலமெங்கே!

இன்று அப்படி வரும் பயணிகள் கடத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்று அஞ்சி நடுங்கும் காலமெங்கே! வெண்பனி போர்த்திப் படுத்திருக்கும் பாதைகள் இன்று செந்நிறக் குருதிக் கோலங்கள் போட்டுக் கொண்டல்லவா கிடக்கின்றன! உல்லாசப் படகுகள் மேய்ந்து கொண்டிருக்கும் ஏரிகளில் ஏனிந்த இடுகாட்டு அமைதி இப்போது? இந்திய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை அடுக்கடுக்காகச் சந்தித்த போதிலும்; இந்திய தேசியக் கொடியின் மதிப்பைக் காத்திட்ட ஷேக் அப்துல்லா உலவிய அந்த மண்ணில் - தாங்கள் அந்நியப் பட்டுப்போன ஒரு உணர்வோடு; இந்திய தேசியக் கொடியைத் தெருவில் போட்டுக் கொளுத்தும் செயலில் அன்றோ காஷ்மீரத்துக் கிளர்ச்சிக்காரர்கள், ஈடுபடுகின்றனர்!

இதற்கு என்ன முடிவோ என்ற பெருமூச்சுடன் விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டுமென ஜெயப் பிரகாஷ் நாராயண் அவர்கள் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் அவர்கள் செய்தியாளர்களிடம் பின்வரும் செய்தியை அறிவித்தார். "ஜனதா கட்சி என்ற பெயரில் பழைய காங்கிரஸ், சோஷலிஸ்டுக் கட்சி, பி.எல்.டி., ஜனசங்கம் ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டாகத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளன.

ஆனால் இக்கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகுதான் ஒன்றாக இணையும். நடைமுறை ரீதியில் சில நுணுக்கமான பிரச்சினைகளும், சட்ட நுணுக்கப் பிரச்சினைகளும் இருப்பதால் குறுகிய காலத்தில் இக்கட்சிகள் அனைத்தும் ஒரே கட்சியாக இணைவது என்பது சாத்தியமல்ல. தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் ஒரே கட்சியாக இணைவோம். ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டாகச் செயல்படுவோம். பிராந்தியக் கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

ஜனநாயகத்தின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அந்த உடன்பாடு கடைப்பிடிக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் அனைவரிடமும் நியாயமாகவும், மறைமுகமாகக்கூட அவர்களுக்கு முட்டுக்கட்டை விதிக்காமலும் அரசின் எல்லாத்துறையைச் சார்ந்தோரும் நடந்துகொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்."

அவரது அறிக்கையில் கண்டவாறு எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கேற்பத் தமது செயல்பாடுகளைத் தொடங்கின. ஆனால் மொரார்ஜிதேசாய் அரசுக்கு விடுத்த வேண்டுகோளை அரசு மதித்ததாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தின் மீது நெருக்கடி நிலை தொடக்கத்தில் மத்திய இந்திரா அரசு சேறுவாரி இறைத்தது போலவே, நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகும்கூட என் மீதும் கழகத்தினர் மீதும் களங்கம் சுமத்தும் செய்திகளை வானொலியில் தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருந்தார்கள்.

அவர்களுக்குப் பக்கபலமாகவும், தி.மு.க. என்றாலே ஒரு தேவையற்ற "அசூயை" உணர்வோடும் இயங்கிடும் பத்திரிகைகளிலும் அதுபோன்ற அவதூறுச் செய்திகள் இடைவிடாது இடம்பெற்றன. "இழிவுபடுத்திக் கூறுவது - அவதூறு பேசுவது ஆகியவற்றை விட்டொழிக்குமாறு அரசியல் கட்சிகள் அனைத்தையும் வேண்டிக் கொள்கிறேன்" என்று ஜனவரியில் பிரதமர் இந்திராகாந்தி வானொலியில் பேசியதைக் கேட்டு நான் வியப்புற்றேன்.

சென்னையில் உள்ள அண்ணா தியேட்டர், பைலட் தியேட்டர் போன்ற சில தியேட்டர்கள் எனக்குச் சொந்தமென்றும், ஸ்பென்சரை நான் விலைக்கு வாங்கிவிட்டேன் என்றும், அஃதன்னியில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் முப்பது கோடி ரூபாய் சொத்து சேர்த்து விட்டேன் என்றும், வழக்கு ஏதேனும் வராதா என வாசற்படியை நோக்கி ஏங்கிக் கொண்டிருந்த நெல்லை ரத்னவேல் பாண்டியனை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கி விட்டேன் என்றும், நூறாண்டு கால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முதலாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த வரதராசன் அவர்களையும் மற்றும் சிலரையும் நீதிபதியாக நியமித்தது கழக ஆட்சியில் ஏற்பட்ட பெரும் தவறுகள், ஊழல்கள் என்றும், இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை டெல்லியிலே அச்சடித்து, கழக ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாளே அரசு வேன்களிலும், காவல்துறை வாகனங்களிலும், ஜீப்புகளிலும் வைத்துத் தமிழ்நாடு முழுதும் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரப்பச் செய்த பணிக்கு ஒப்புதல் அளித்த இந்திராகாந்தி அவர்கள் தான் 1977 ஜனவரியில் வானொலியில் பேசுகிறார்; இழிவுபடுத்தியோ, அவதூறு செய்தோ பிரச்சாரங்கள் கூடாது என்று!

அண்ணா தியேட்டரும், பைலட் தியேட்டரும், ஸ்பென்சரும் யாருக்குச் சொந்தமென்று இப்போது மக்களுக்குத் தெரியும். அன்று முப்பது கோடி ரூபாய் சொத்து என்றால்; இதை எழுதும் இன்றைய நிலையில் பணமதிப்பின்படி முன்னூறு கோடி ரூபாயாகும். அந்தக் குற்றச்சாட்டில் எவ்வளவு உண்மை என்பதும் இப்போது மக்களுக்குத் தெரியும். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட திரு.ரத்னவேல் பாண்டியனும், திரு.வரதராசனும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகவே உயர் பதவி பெற்று; அவர்கள் ஈட்டியுள்ள புகழ் எவ்வளவு என்பதும் - அவர்கள் எத்துணை ஆற்றலாளர்கள் என்பதும், இப்போது மக்களுக்குத் தெரியும்.

ஆனால் அன்று? தி.மு.க.வுக்கு எதிராகச் செய்யப்பட்ட அவதூறுப் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கிய இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் வழக்குகளையும் சரமாரியாகத் தொடர்ந்து கொண்டே இருந்த காரணத்தினால் மக்கள் திகைத்தனர்; குழப்பமுற்றனர். எந்தச் சூழல் ஆனாலும் ஜனநாயகக் கடமையை ஆற்றித் தானே தீரவேண்டுமென்று தேர்தல் களத்தில் இறங்கிய கழகம், 1977 பிப்ரவரி 2-ஆம் நாள் தலைமைக் கழகச் செயற்குழுக் கூட்டம், சென்னை கோடம்பாக்கம் 'முரசொலி' அலுவலகத்தில் நடைபெறும் என அறிவித்தது.

பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன்தான் அந்த அறிவிப்பைத் தந்திருந்தார். இந்தக் கால கட்டத்தில் தலைமை நிலையப் பொறுப்பாளராக எஸ்.ஜே.சாதிக்பாட்சா பணியாற்றிக் கொண்டிருந்ததால் செயற்குழுவுக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்டக் கழகத்தினருடன் இணைந்து அவரும் கவனித்தார். செயற்குழுவுக்கான செய்திகள் ஏடுகளில் வந்துகொண்டிருக்கும் போதே திரு.எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களை நானும், கோவை எஸ்.ஏ.ராசமாணிக்கமும், ஜி.லட்சமணன் எம்.பி.யும், முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனும், இளம்பரிதி எம்.எல்.சி.யும் மற்றும் முப்பதுக்கு மேற்பட்ட கழகத் தோழர்களும் கொலை செய்ய முயன்றதாகத் தொடரப்பட்டிருந்த வழக்கில் பிப்ரவரி 10-ஆம் நாள் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வருமாறு எனக்கும் நண்பர்களுக்கும் சம்மன் வந்தது.

வேண்டுமென்றே, திட்டமிட்டு, பொய்யாகப் புனையப்பெற்ற அந்த வழக்கு; தேர்தல் வருவதை முன்னிட்டு மிகத் தீவிரமாகப் பரபரப்புடன் நடத்தப்பட்டது. அது மட்டுமா? இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் தி.மு.க. தேர்தல் நிதியாக 59 இலட்ச ரூபாய் திரட்டி வங்கியில் போட்டு வைத்திருக்கிறது என ஒரு செய்தியும் வெளியிடப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட சில ஏடுகள், கழக அமைப்புகள் தேர்தல் செலவுக்கு அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றமடையட்டும் என்ற எண்ணத்துடன், விமர்சனங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.

"The D.M.K. has already collected and deposited Rs.59 Lakhs in the Bank as Election Fund." என வெளியிடப்பட்ட அந்தச் செய்தி தவறானது என்பதை விளக்கி நான் அறிவிப்புத் தந்தேன். "தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் நிதி திரட்டுவதாக இருந்தாலும், வழக்கு நிதி திரட்டுவதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட கழகத்தினருக்குக் குடும்ப நிதி திரட்டுவதாக இருந்தாலும் எந்த நிதியாயினும் அதன் விபரங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

1976 ஜூன் திங்கள் 25-ஆம் நாள் தி.மு.க. தலைமைக் கழகத்திலும், தி.மு.க. அறக்கட்டளையிலும் இருக்கின்ற மொத்த நிதிக்கான விபரங்கள், தனித்தனியே அறிக்கை வாயிலாகக் கழக அமைப்புகளுக்குத் தரப்பட்டுள்ளன. அதில் அப்போது அந்தத் தேதியில் தலைமைக் கழக இருப்பாக இருந்த தொகை 37 இலட்ச ரூபாய் என்றும் - தி.மு.க. அறக்கட்டளைக்கு 20 இலட்ச ரூபாய் என்றும் - விபரங்கள் தரப்பட்டிருந்தன. அந்த இரு தொகைளையும் ஒன்றாகக் கூட்டி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, 2 இலட்ச ரூபாய் வட்டியாகச் சேர்த்து 59 லட்ச ரூபாயும் தேர்தல் நிதி எனத் தவறாக அறிவித்துவிட்டது என விளக்கியிருந்தேன்.

எக்ஸ்பிரஸ் செய்தியைச் சில ஏடுகள் திரித்து உள் நோக்கத்துடன் எழுதியிருப்பதால் இந்த விபரங்கள் தரப்படுகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தேன். மிசாக் கைதிகளாக சிறையில் இருந்தவர்களில் வசதியற்ற குடும்பத்தினருக்குத் தலைமைக்கழக சார்பில் மாதந்தோறும் பண உதவி செய்த வகையில் ஒரு இலட்சத்து எண்பத்தி எட்டாயிரம் ரூபாய் அளிக்கப்பட்ட விபரத்தைக்கூட 24.1.77 முரசொலி இதழில் தலைமைக் கழகம் வெளியிட்டது. இதுபோன்ற செலவினங்களையும், வழக்குகளை நடத்துகின்ற செலவினங்களையும், அண்ணா அறிவாலயம் அமைத்திட தி.மு.க அறக்கட்டளைக்கு வழங்கிய பத்து இலட்ச ரூபாயையும் எனது அறிக்கையிலும், முரசொலி கடிதத்திலும் விபரமாகச் சுட்டிக்காட்டி - எஞ்சி நிற்கும் 19 இலட்ச ரூபாயில்தான் தலைமைக்கழகம் நாடாளுமன்றத் தேர்தலையும், அதற்குப் பிறகு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க வேண்டியுள்ளது என்றும் கோடிட்டுக் காட்டியிருந்தேன்.

கழகச் செயற்குழு கூடுவதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் இ.எம்.எஸ்.நம்பூரிதிபாட் அவர்களும் பி.இராமமூர்த்தி அ

வர்களும் காங்கிரசுக்கு எதிரான அணியில் தான் சேர்ந்து தேர்தலில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய அளவில் காங்கிரசுடன் உடன்பாடு இல்லை என்றும், ஆனால் தமிழ்நாடு, கேரளம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுடன் உடன்பாடு காண முயற்சிக்குமென்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.ராஜேஸ்வரராவ் அறிவித்தார். இந்தச் சமயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி மிகக் கடுமையாகத் தாக்கி, புவனேசுவரம் பொதுக்கூட்டத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு கொள்ளவேண்டுமென்ற கருத்து, தமிழ்நாடு ஜனதா கட்சி முன்னோடிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு, அது ஏடுகளிலும் வெளிவரத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழகத்தின் செயற்குழு பிப்ரவரி 2-ஆம் நாள் காலையில் கூடியது. பிப்ரவரி முதல் தேதியன்று சிறையிலிருந்து விடுதலையான மிசா வீரர்களாம் கழகத்தினர் சிலர், தமது ஊர்களுக்குக் கூடச் செல்லாமல் நேராகச் செயற்குழுக் கூட்டத்திற்கே வந்து கலந்து கொண்டனர்.

செயற்குழு நடக்கும்போது இனிப்பான செய்தியாக பாபு ஜெகஜீவன்ராம், காங்கிரசிலிருந்து விலகிவிட்ட செய்தி வந்தது. "காங்கிரஸ் அமைப்பிலும், அரசாங்க நிர்வாகத்திலும் எதேச்சாதிகாரத்தன்மைகள் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளன" என்று காங்கிரசிலிருந்து விலகிய ஜெகஜீவன்ராம் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

அவர் விலகிய பிறகு, அவரையும் அவருடன் விலகிய எச்.என்.பகுகுணா, நந்தினி சத்பதி, கே.ஆர்.கணேஷ், டி.என்.திவாரி, ராஜ்மங்கல்பாண்டே ஆகியோரையும் அன்றிரவு காங்கிரசிலிருந்து விலக்கி விட்டதாக காங்கிரஸ் டெல்லி அலுவலகம் அறிவித்தது. கழகச் செயற்குழுவில் நீண்டநேர விவாதத்திற்குப் பிறகு மிக முக்கியமாக 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறை மீண்ட செம்மல்களை வரவேற்றும் பாராட்டியும், கழகத்தின் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் அடக்கு முறைகளுக்கிடையிலேயும் தமிழ்நாட்டு மக்கள் கழகத்தைத் தங்கள் பாதுகாப்பு அரணாக எண்ணிக் காத்தமைக்காக நன்றி தெரிவித்தும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ்க் குறிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகளை நெருக்கடி நிலை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகும் மறுப்பது என்பது சுதந்திரமான பொதுத்தேர்தல் நடப்பதற்கு தடையாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தும், நியாயமான தேர்தல் நடக்க செய்தித்துறை, பொதுமக்கள் தொடர்புத்துறை, வானொலி போன்ற பொதுத்துறைகள் அனைத்திலும் தேர்தலில் போட்டியிடும் எல்லாக் கட்சியினருக்கும் சமவாய்ப்புத் தரப்பட வேண்டுமென வலியுறுத்தியும், சென்னைச் சிறைச்சாலையில் மிசாக் கைதிகளை மிருகங்களை விடக் கேவலமாக நடத்திய கொடுஞ்செயலை விசாரிக்க, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கழகத்தினர் மீது களங்கம் சுமத்தப் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமென்று அறிவுறுத்தியும் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள், இருட்டில் கண்கள் கட்டப்பெற்றுத் தடுமாறித் தத்தளித்த ஜனநாயகத்தை வெளிச்சத்திற்கு அழைத்து வந்து விழிகளையும் திறந்து விட்டது போன்ற உணர்வை நாட்டில் ஏற்படுத்தின.

தி.மு.க. செயற்குழு சென்னையில் நடைபெற்று இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றிய அதே பிப்ரவரி 2-ஆம் நாள் திரு. சந்திரசேகர் அவர்கள் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் என்னைப் பற்றியும் பிரதமர் இந்திரா காந்தி அவர்களைப் பற்றியும் தெரிவித்த கருத்து மறுநாள் இந்தியா முழுமையுமுள்ள எல்லா மொழி ஏடுகளிலும் வெளிவந்தது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் சில அதனை ஒரு ஓரத்தில் சிறியதாக வெளியிட்டுத் தமது பத்திரிகா தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கின.

சந்திரசேகர் வெளியிட்ட கருத்து என்ன?