நெஞ்சுக்கு நீதி
துப்பாக்கி மருந்து · 220 / 391
3. துப்பாக்கி மருந்து Keep the Gun powder dry - துப்பாக்கி மருந்தை உலர்ந்த நிலையிலேயே வைத்துக் கொள் - நனைந்து போக விட்டுவிடாதே - இந்த வாக்கியத்தை அன்பும் பாசமும் குழைந்து இழைத்திட என்னிடத்தில் சொல்லி என் தோளில் தட்டிக்கொடுத்துத் துணிவூட்டியவர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களாவார்கள்! கழக ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் இந்திராகாந்தியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர், சென்னைக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்த நேரத்தில்தான் இந்த வாசகத்தைக் கூறி எனக்கு நம்பிக்கையும் தைரியமும் அளித்தார் ஜெகஜீவன்!
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும், குறிப்பாக ஆதி திராவிட மக்கள் மீதும் நன்றியை எதிர்பார்க்காமல் நான் கழகச் சார்பிலும்; கழக ஆட்சியின் சார்பிலும் கொண்டிருந்த பாசம், பற்று அவற்றின் அடிப்படையில் ஆற்றிய ஆக்கப்பணிகள் பாபு ஜெக ஜீவன்ராம் அவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்த காரணத்தினால் தான்; அவர் இந்திராகாந்தி கொண்டுவந்த "எமர்ஜன்சி"யை ஆதரித்து மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தாலும்கூட, என்பால் கொண்ட தனிப்பட்ட அன்பினாலும், கழகத்தின்பால் கொண்ட அளவில்லாத ஆசையினாலும் Keep the Gun Powder dry என்ற வார்த்தைகளைப் போர்வாளாக வடித்தெடுத்து என் கரத்திலே கொடுத்துள்ளார் என்பதை எண்ணி எண்ணிப் பூரிப்புக் கொண்டேன் நான்!
அரசியல் சார்புடைய நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி - என் குடும்பத்து நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிற அளவுக்கு நட்புறவு கொண்டிருந்த அவரது அறிவுரையின் பொருள்தான் என்ன? "மத்தியில் இருக்கும் இந்திரா காங்கிரஸ் ஆட்சி உன்னையும் கழகத்தையும் வீழ்த்துவதற்குத் திட்டம் போட்டுச் செயல்படுகிறது. இந்தச் சோதனையான நேரத்தில்தான் பொறுமை மிகவும் தேவை. நீயும் உன் தலைமையில் உள்ள தி.மு.க.வும் கொண்டுள்ள உறுதியை நான் பாராட்டுகிறேன்.
அவசரப்படவேண்டாம். ஆனாலும் துப்பாக்கி மருந்தை நனைய விடாமல் பாதுகாத்து வைத்திருந்தால், தேவையான நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பது போலக் கட்சியின் கட்டுக்கோப்பை வலுவாகப் பாதுகாத்துப் பேணி வந்தால் சரியான நேரத்தில் கட்சியைக் காப்பாற்றும் போராட்டத்தில் வெற்றி பெறலாம். இதைத்தான் அந்த ஆங்கிலச் சொற்றொடரின் விளக்கமாக ஜெகஜீவன்ராம் விரித்துரைத்தார். வியப்பு என்னவென்றால்; இந்த அறிவுரையை அவர் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு வழங்கியதுதான்.
மறைந்துவிட்டவர்கள் எழுத்து மூலமாக எதுவும் ஆதார பூர்வமாக வைத்து விட்டுப் போகாததை; அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கதை விடும் காலத்தில் இந்தச் சந்திப்பையும் - இருவரிடையே நடந்த உரையாடலையும் - ஜெகஜீவன் பாபுவை வைத்துக்கொண்டே சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நினைவூட்டும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது! 1977 பொதுத் தேர்தலின்போது ஜெகஜீவன்ராம் அவர்கள் காங்கிரசிலிருந்து விலகி, ஜனதா கட்சியையும் தி.மு.கழகத்தையும் சேர்ந்த வேட்பாளர்களுக்கான ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் சென்னை பனகல் பூங்காவில் பேசினார்.
அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நான்: "அன்புக்குரிய பாபு ஜெகஜீவன்ராம் அவர்களே! சோதனைகளையும் வேதனைகளையும் கழகம் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் - உங்களை நான் சந்தித்த போது; "Keep the Gun power dry" தாங்கள் கூறிய அறிவுரைப்படியே இந்தக் கழகத்தைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டேன்.
அவரும் புன்னகையுடன் தலையசைத்துப் பெருமிதம் கொண்டார். அவரைப் போன்றோர் விரும்பியதற்கேற்பவும் புகழ்ந்து பாராட்டியதற்கேற்பவும் கழக அமைப்பு என்பது; அடித்தளத்திலிருந்து உச்சி வரையில் ஜனநாயகக் கோட்பாட்டுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததினால்தான் பாலைவனத்துப் பயணக் கொடுமைகளைக்கூடச் சோலைவனத்துச் சுகப்பயணமாகக் கருதிக்கொண்டு கடமையாற்றிட முடிந்தது. அப்படிக் கடமையாற்றிய கழகத் தளபதிகளில் ஒருவரான சிட்டிபாபுவின் நிகழ்ச்சிகளாகவும், அந்த வீரனின் நினைவு போற்றிடும் கூட்டங்களுமாகவே - 1977 ஜனவரித் திங்களின் பெரும்பகுதி நாட்கள் ஆகிவிட்டன.
ஜனவரி 5-ஆம் நாள் மிசா கைதியாகவே மாண்டுவிட்ட அந்த அஞ்சா நெஞ்சனைப் பற்றி முரசொலியில் எழுதியவரிகளை எப்போது நான் திரும்பப் படித்திட நேரினும் என் இதயம் கனத்துத்தான் போய்விடுகிறது. "உடன்பிறப்பே - என்று நான் கடிதத்தை எழுதத் தொடங்கும் போதெல்லாம் இதயத்தின் ஒரு பகுதியில் பேரன்பு பீறிட்டுக் கிளம்பும். இன்னொரு பகுதியில் பாச உணர்வின் அலைகள் மோதும். அவை இரண்டறக் கலந்த பிறகே "உடன் பிறப்பே" என்ற வார்த்தை வடிவம் கொள்ளும்.
அந்த உடன்பிறப்பு என்ற சொல்லில் சங்கமமாகும் பெயர்களில் சிட்டிபாபு எனும் அந்தச் சிங்கத்தின் பெயரும் முதல் வரிசையில் நிற்கின்ற பெயர்களில் ஒன்றன்றோ? தேக்கு மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்தது போலல்லவோ அவன் சாய்ந்து கிடக்கிறான். "பொரு தடக்கை வாளெங்கே; மணி மார்பெங்கே? போர் முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத பருவயிரத்தோள் எங்கே?"
என்ற கலிங்கத்துப் பரணியின் பாட்டுக்கு எடுத்துக்காட்டாக அல்லவா என் ஆருயிர் உடன்பிறப்பு வீழ்ந்து கிடக்கிறான். "சுடரைச் சுடர் தூண்டு கண்ணான் - பல்லால் அதரத்தை அதுக்கி விண்மீது பார்த்தான்" என்று இந்திரஜித்தனைக் கம்பர் வர்ணித்தமைக்கு ஈடான தீரவடிவம் கொண்ட வேங்கையல்லவா இன்று மரணத்தின் மடியில் கிடக்கிறது!
கொள்கையில் தங்கம் எது ? பித்தளை எது? என்று தேர்ந்தெடுக்கும் நேரம் வந்தபோது தன்னைத் தங்கமென நிரூபித்துக்காட்டிய அடலேறு சிட்டிபாபு! ஆம்; நம் மனத்தை விட்டு என்றும் மறையாத மாணிக்கப்பரிதி!" என்ன எழுதி என்ன பயன்? மறுநாள் ஜனவரி ஆறாம் நாள் எரிநெருப்புக்கு இரையாயிற்று; ஆரூர்த்தேர் போல் அசைந்து வரும் அந்த உடல்! ஜனவரி 11ஆம் நாள் சென்னை யோகலட்சுமி திருமண மண்டபத்தில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமை வகித்திட - பேராசிரியர் அன்பழகன் முன்னிலை ஏற்றிட எஸ்.ஜே.சாதிக் பாட்சா, அலமேலு அப்பாதுரை, மா.முத்துசாமி ஆகியோர் உரை நிகழ்த்திட - முன்னாள் மேயரும் என் அன்புத்தம்பியுமான சிட்டிபாபுவின் படத்தை நான் திறந்து வைத்த உணர்ச்சிமிகு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாவட்டக் கழகத்தின் துணைச் செயலாளர் இரா.மு. மனோகரன் என்ற ஓய்வில்லா உழைப்பாளி உறுதிகுலையா நெஞ்சினன் அந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி உருக்கமிகு வரவேற்புரையாற்றினார். அந்தப் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் ஜனவரி 8 முதல் இரண்டு நாட்கள் (இன்று காமராசர், பசும்பொன் தேவர், இராமநாதபுரம் எனப் பிரிந்துள்ள) முழுமையான முகவை மாவட்டத்தில் நான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், மேற்கு இராமநாதபுரத்தில் 6691 ரூபாயும், இராமநாதபுரம் சிறப்புக் கூட்டத்தில் 7000 ரூபாயும், அந்த ஊர் விடுதியில் தங்கியிருந்த போது தனித்தனியே வழங்கப்பட்ட 3280 ரூபாயும், மற்றும் மானாமதுரை - பரமக்குடி - திருப்பத்தூர் - சிங்கம் புணரி கூட்டங்களில் வழங்கிய ரூபாயுடன் சேர்த்து; மொத்தம் 27,147 ரூபாய் வழக்கு நிதிக்காகக் கிடைத்தது.
'எமர்ஜன்சி' இருளில் இருந்த பொழுது, முற்றிலும் 'பளிச்' என விடியாத நிலையில் - வைகறையையொட்டிய கருக்கல் கண்ணுக்குத் தோன்றினாலும்கூட, என்னையும் என்னுடன் சில நண்பர்களையும் நீதிமன்றத்திற்கு இழுத்து இட்டுக்கட்டிய பொய்வழக்குகள் நீடித்துக் கொண்டே இருந்த காரணத்தால் - வழக்குகளுக்குத் தேவையான நிதியைத் திரட்ட வேண்டியிருந்தது. இந்தச் சுற்றுப் பயணத்தில் என்னுடன் செ.மாதவன், தா.கிருட்டினன், சுப.தங்கவேலன், சத்தியேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தச் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது ஆங்கில ஏடு ஒன்றில் இந்த உலகத்தைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தியைப் படித்தேன். ஐ.நா.மன்றத்தின் பொருளாதாரம் மற்றும் சமூகக்குழு நிறுவிய மக்கள் தொகை ஆணைக் கழகத்தின் அறிக்கை பற்றிய செய்தியாகும் அது! "1976-மார்ச்சில் இந்த உலகின் மொத்த மக்கள் தொகை நானூறு கோடி. கி.பி. 2000 முடியும் போது, இது 663 கோடியே 70 இலட்சமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சத்துத் தொண்ணுற்றைந்து குழந்தைகள் பிறக்கின்றன. உலகிலேயே அதிகமான மக்கள் நெருக்கம் கொண்ட கண்டம் ஆசியாதான்! 1974-ல் அங்கு 220 கோடியே 60 இலட்சம் பேர் வாழ்ந்தனர். அது உலக மக்கள் தொகைக்கு சரிபாதிக்கு மேலாகும். அடுத்தது வடஅமெரிக்காவும் தென் அமெரிக்காவும் இணைந்த பரப்பாகும். இங்கே 55 கோடிப்பேர். ஐரோப்பாவில் 47 கோடிப்பேர். ஆப்பிரிக்காவில் 39 கோடியே 10 இலட்சம் பேர்.
ஆஸ்திரேலியாவிலும் கடல் தீவுகளிலும் 2 கோடியே 10 இலட்சம் பேர். உலகிலேயே குறைந்த காலம் வாழ்வோர், வறுமை, பசி, நோய் என காலனியாதிக்கம் விட்டுச் சென்ற கொடுமைகளுக்கு ஆளாகும் ஆப்பிரிக்கர்கள்தான். அந்தக் கண்டத்து நாடுகள் 19ல் சராசரி வயது நாற்பதுக்கும் கீழுள்ளது". உலகத்திற்குப் பொதுப்பிரச்சனை; மக்கள் தொகை நாளும் பெருகுவது என்கிற போது - குறிப்பாக ஆசியா கண்டத்தில் அதிலும் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் மக்கள் பெருக்கத்தினால் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம் ஏற்படத்தானே செய்கிறது.
1976ல் கணிக்கப்பட்ட தகவலை; இப்போது நான் 18 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிடுகிறேன். இதை நான் குறிப்பிடும் போது கி.பி.2000த்தை எட்டிப் பிடிக்க இன்னும் 6 ஆண்டுகளே உள்ள நிலைமையில்; எதிர்பார்க்கப்படும் 663 கோடியே 70 இலட்சத்தையும் தாண்டுகிற கணக்குத்தானே வரும்போல இருக்கிறது. அப்போது மக்கள் தொகை நெருக்கடியில் முன்னிற்கும் ஆசியாவில் உள்ள நாடுகளுடன் போட்டி போடும் நாடாக இந்தியா இருக்கும்; இருக்கிறது என்பது கண் கூடாகத் தெரிந்தும், 1976 முதல் இந்திய அரசு அதனைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கை என்ன?
மக்கள் தரும் ஒத்துழைப்புத்தான் என்ன? இந்தியப் பேரரசு வகுத்திட்ட திட்டங்கள் என்ன? அக்கறை என்ன? இந்திராகாந்தி அறிவித்த 20 அம்சத்திட்டத்துடன் - அவரது இளையமகன் சஞ்சய் காந்தி அறிவித்த ஐந்து அம்சத்திட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடு திட்டமும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. எம்ர்ஜன்சி கொண்டு வந்துதான் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றில்லை - எமர்ஜன்சி இல்லாமலே இந்தத் திட்டங்களை நாடு வரவேற்கும் என்றுதான் தி.மு.கழகம் அன்றைக்கு அறிவித்தது.
ஆனால் அனைத்தும் ஏட்டுச் சுரைக்காய்த் திட்டங்களாகவே இருந்தன. எமர்ஜன்சியை ஒரு கட்டத்தில் ஆதரித்து, தி.மு.கழகத்தைக் கடுமையாக விமர்சித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகூட ஐந்து அம்சத் திட்டத்தை சஞ்சய் காந்தி அறிவித்ததை ஏற்கவில்லை. அதுவும் செம்மையாக நடக்கவில்லை! பெருந்தலைவர் காமராசர் தலைமையிலிருந்த பழைய காங்கிரஸ், தி.மு.கழகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, ஜெயபிரகாஷர் தலைமையில் உருவாகிக் கொண்டிருந்த மக்கள் இயக்கம் போன்ற அரசியல் இயக்கங்கள் இந்திய அரசியலில் இந்திரா காங்கிரசுக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சியின் ஆட்சியை மத்தியில் கொண்டு வரவேண்டுமென்று முடிவெடுத்து; அந்த முடிவை நோக்கிக் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தபோது - சென்னைக்கு வந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர் இராஜேஸ்வரராவ் அவர்களிடம்; இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைத் தடை செய்ய வேண்டுமென்று நான் கூறியதாக யாரோ சிலர் ஒரு தவறான தகவலைத் சொல்லவே: அவரும் அதை நம்பி; ஒரு நிகழ்ச்சியில் தி.மு.கழகத்தைக் கண்டித்து விட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைத் தடை செய்யுமாறு நான் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கூறவே இல்லையென்று; ஜனவரி 11-ஆம் நாள் முரசொலியில் ஒரு அறிக்கை விடுத்தேன். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் தி.மு.கழகமும் "எமர்ஜன்சி" பிரகடனத்தைப் பற்றிய கருத்து வேறுபாடு காரணமாக வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட்டாலும்கூட; அந்தக் கட்சியைத் தடை செய்ய வேண்டுமென்ற எண்ணம் என்றைக்குமே கழகத்திற்கு இல்லை என்றும் அந்த அறிக்கையில் விளக்கினேன்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி எமர்ஜன்சியை ஒரு காலக்கட்டம் வரையில் எதிர்க்கவில்லை எனினும்; பிறகு அந்தக் கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்து எமர்ஜன்சியை ஆதரித்தது சரியல்ல என்று ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். எனினும் எமர்ஜன்சி தளர்த்தப்பட்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறும்; என அறிவிக்கப்பட்ட நிலையில்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி தவிர மற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியே; இந்திரா காங்கிரசைத் தேர்தலில் எதிர்க்கக்கூடிய நிலைதான் அரசியல் அரங்கில் உருவாகிக் கொண்டிருந்தது.
தி.மு.கழகம்; நாடாளுமன்றத் தேர்தலில் தனது நிலை என்ன என்பது பற்றி விவாதிக்க முன்வந்தது. முதல் கட்டமாக நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான ஐவர் குழு ஒன்றைப் பொதுச் செயலாளர் நாவலர் நெடுங்செழியன் அவர்கள் தலைமைக் கழகச் சார்பில் அறிவித்தார். அந்தக் குழுவில் சாதிக் பாட்சா, மாதவன், ராஜாராம், முரசொலி மாறன், இரா.செழியன் ஆகியோர் இடம் பெற்றனர். மற்ற கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்துப் பேசவும் - தேர்தல் அறிக்கை தயாரித்துச் செயற்குழுவில் வைக்கவும்; அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நானும் நாவலரும் பேராசிரியரும் தமிழகத்தின் பலபகுதிகளில் நிகழ்ச்சிகளிலும் - வழக்குநிதி சிறப்புக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம். 1977 பிப்ரவரி 2-ஆம் நாள் தலைமைச் செயற்குழு கூடுமென்று அறிவிக்கப்பட்டவுடன்; ஜனவரி 29 ஆம் நாள் என்னைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். செய்தியாளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், அளிக்கப்பட்ட பதில்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். கேள்வி:- சென்னை வரும் சஞ்சீவரெட்டி உங்களைச் சந்திக்க இருக்கிறாரா?
தேர்தல் பற்றிப் பேசுவீர்களா? பதில்:- சஞ்சீவரெட்டி சென்னை வந்தால் நாங்கள் சந்திப்பது புதிதல்ல. நட்பு அடிப்படையில் சந்திப்பதுண்டு. ஒருவேளை இந்த முறை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் தேர்தல் பற்றியும் பேசக்கூடும். கேள்வி:- புதிதாக உருவாகியுள்ள ஜனதா கட்சியுடன் கொள்கை அடிப்படையில் தேர்தல் உடன்பாடு கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா? பதில்:- ஜனதா கட்சியுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் உடன்பாடு கொள்ளலாம் என்கிற நிலை வரும்போது அதில் தி.மு.க தயக்கம் காட்டுவதற்கு அவசியம் ஏதுமில்லை.
கேள்வி:- தற்போதைய தேர்தலில் எதை முக்கிய பிரச்சினையாகக் கருதுகிறீர்கள்? பதில்:- ஜனநாயகத்தைக் காப்பதுதான் அடிப்படையான முக்கிய பிரச்சனை. மற்ற விளக்கங்களைத் தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம். கேள்வி:- முஸ்லீம் லீக் கட்சியினர் கழகத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக்கொண்டதாக அறிவித்துள்ளார்களே? பதில்:- அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும்; முஸ்லீம் சமுதாயத்திற்கும் தி.மு.கழகத்திற்கும் இடையே உள்ள அன்பும் உறவும் என்றும் நிலைத்திருக்கும்.
அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை
தேய்பிறை அல்ல! வளர்பிறை! நான் நிருபர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த மறுநாள் பாட்னா நகரில் நடைபெற்ற பேரணிக் கூட்டத்தில் பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள்; "அடுத்த 25 ஆண்டு காலத்துக்கான மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் தேர்தல் இது! எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்! ஜனதா கட்சி ஒற்றுமையாகச் செயல்பட்டு, மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்" என்று உறுதி மொழி கூறியது எல்லா ஏடுகளிலும் வெளிவந்திருந்தது.
ஜெயப்பிரகாஷரின் நல்ல எண்ணமும் - இந்த நாட்டை வளமாக்க வேண்டுமென்ற ஆசையும் - வலுவாக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும்; நிறைவேறியதா? அல்லது கனவாகக் கலைந்ததா?
