உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தியாகமும் துரோகமும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தியாகமும் துரோகமும்! · 219 / 391

2. தியாகமும் துரோகமும்! '1977 க்குள் நுழைவோம் என்று என்னதான் அழைத்தாலும் - வீட்டுக்குள்ளிருந்து விடைபெற்றுக் கொண்டு செல்லும்போது; சிறிது தொலைவு சென்ற பிறகு ஒருமுறை நின்று - திரும்பி - வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுச் செல்வது என்பது ஒரு முறைக்கு இரு முறைகூட நடக்கிற நிகழ்ச்சியல்லவா; அதைப் போலத்தான் 1976 இடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாலும் அந்த ஆண்டு என் வாழ்க்கையிலும், இந்திய நாட்டு அரசியல்வாதிகளின் வாழ்க்கையிலும் அரசியல் இயக்கங்களின் மீதும் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை அறவே மறந்து விட முடியாத அளவுக்கு திரும்பித் திரும்பிப் பார்த்துப் பிரியாவிடை பெற்றுத்தான் புறப்பட வேண்டியிருக்கிறது.

தி.மு.கழகத்தின் சார்பில் நான் விடுத்த அழைப்பை ஏற்று 1976 டிசம்பர் 15ஆம் நாளன்று டெல்லியில் கழக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா.செழியன் அவர்கள் இல்லத்தில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அசோக் மேத்தா, திருமதி மொகீந்தர் கவுர், திக்விஜய் நாராயண் சிங் எம்.பி., பிலுமோடி எம்.பி., எச்.எம்.படேல் எம்.பி., பிஜுபட்நாயக், சமர்குகா எம்.பி., சுரேந்திரா மோகன் எம்.பி., வாஜ்பாய் எம்.பி., கிருஷ்ணகாந்த் எம்.பி., பேராசிரியர் ஷெர்சிங் எம்.பி. ஆகிய பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்திருந்தார்கள் என்பதையும் "சகிப்புத் தன்மையுடன் மனம் விட்டுப் பேசி, மீண்டும் நாட்டில் இயல்பான சூழ்நிலை அமைந்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தி.மு.க.

எண்ணுகிறது" என்றும் - "அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கென அமைந்த தனித் தன்மைகளையோ, கொள்கைகளையோ விட்டு விட்டு அரசின் கொள்கைகள், நடைமுறைத் திட்டங்கள் அனைத்துக்கும் 'ஆமாம்' போடுபவையாக ஆகவேண்டுமென நினைத்துப் பார்க்கக்கூட இடமில்லை" என்றும் நான் அந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்ததையும் - அதன் தொடர்பாக மறுநாள் (16.12.76) அந்தக்கூட்டம் எச்.எம்.பட்டேல் எம்.பி.

அவர்களின் இல்லத்தில் நடைபெற்று, அதனையொட்டித்தான் 'ஜனதா கட்சி' உருவாகிடுவதற்கான விதை ஊன்றப்பட்டது என்பதையும் 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். நான் அழைப்பு விடுத்து டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த 15.12.76-ஆம் நாளைய கலந்துரையாடல் கூட்டத்திலும் எச்.எம். பட்டேல் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த 16.12.76 ஆம் நாளைய கலந்துரையாடல் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்காக 14.12.76 அன்று நான் டெல்லி போய்ச் சேர்ந்தேன்.

டெல்லி சென்றடைவதற்கு முன்பு 'ஜான்சி' என்னுமிடத்தில் புகைவண்டி நின்றபோது நாளேடுகள் வாங்க முடிந்தது. அந்த ஏடுகளில் என்னை மிகவும் கவர்ந்து விட்ட செய்தியொன்று காணப்பட்டது. இரயில் பயணத்தில் என்னுடன் துணையாக வந்திருந்த நண்பர்கள் ராஜாராம், லட்சுமணன் இருவரையும் விடுத்துத் தனியாக அமர்ந்து நான் நாளேட்டில் படித்த செய்தியை முரசொலி இதழுக்கு ஒரு கடிதமாக எழுதினேன். இந்திய நாட்டின் விடுதலைக்காக இரத்தம் சிந்திய இளங்காளை ஒருவனைப் பற்றிய செய்தியாகும் அது.

"பஞ்சாப் வாஞ்சி நாதன்" என்ற தலைப்பில் அந்தக் கடிதம் முரசொலியில் வெளி வந்தது. அப்பொழுதும் தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரன் ஒருவனை நினைவு படுத்தியும் முன்னிலைப் படுத்தியும்தான் என்னால் எழுத முடிந்தது. நாளிதழ் கிடைத்த ஊரின் பெயரும் "ஜான்சி" என்கிறபோது, அந்த வீரவாலிபனின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் புதிய எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்படுவது இயற்கைதானே! இங்கிலாந்து நாட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டுப் புதைக்கப்பட்ட அந்த விடுதலை வீரனின் உடல் அறுபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு 1976 டிசம்பர் 13ஆம் நாள் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் பஞ்சாப்பில் அவனுக்காக ஈமக்கடன்கள் நிறைவேற்றப்பட்டன என்பதே அந்தச் செய்தியாகும்.

அந்த வீரன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஷகீத் மதன்லால் திங்ரா எனும் பெயருடையான். அந்த வீரன் 1909-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 17-ஆம் நாள் இலண்டன் மாநகரத்து 'பெண்டோவிலே' சிறைச் சாலையில் தூக்கு மேடைக்கு முத்தமளித்து விட்டுப் புன்னகை மலர்ந்த முகத்துடன் தன் உயிரைத் தியாகம் செய்தவன். அமிர்தசரசில் வசதியும் வளமும் மிக்க குடும்பத்துப் பிள்ளை. அமிர்தசரசில் தனது தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு லாகூர் கல்லூரியில் தனது அறிவுச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளச் சென்றான்.

அரசாங்க வேலையில் கூடச் சில நாட்கள் சேர்ந்து வாழ்க்கையை ஓட்டத் தொடங்கினான். பொறியியல் துறைப் பயிற்சி பெறும் விழைவுடன் 1906-ஆம் ஆண்டு இலண்டன் சென்று அங்குள்ள யுனிவர்சிட்டி கல்லூரியில் தன்னை இணைத்துக் கொண்டான். வேலை பார்த்த சில நாட்களிலும் சரி; கல்வி பயின்ற நாட்களிலும் சரி; அவன் இதயத்தை இந்திய நாட்டு விடுதலைப் போர் நிகழ்ச்சிகள் ஈட்டி கொண்டு தாக்கிக் கொண்டிருந்தன. விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட தியாகச் செம்மல்களை ஆங்கிலேய ஆதிக்க வெறியர்கள் தூக்கிலிட்டுக் கொன்ற சம்பவங்கள் - சுட்டுப் பொசுக்கிய நிகழ்வுகள் - அவன் நெஞ்சைக் குலுக்கிய வண்ணமிருந்தன.

அவனது உள்ளத்தில் அமைதி இல்லை. வெளித்தோற்றத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஊமை போல உலவிக்கொண்டிருந்தான். இலண்டன் நகரில் உள்ள "இந்தியா இல்லம்" என்ற இடத்தில் அவன் சவர்க்காரைக் காணவும் அவருடன் பழகவும், அவரது கருத்துக்களைக் கேட்கவும் வாய்ப்புக்களைப் பெற்றான். லாலா லஜபதிராய் போன்ற விடுதலை வீரர்களைக் காணும் வாய்ப்பும் அவர்கள் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் அவனுக்குக் கிட்டியது உண்டு. அப்போது அவன் நெஞ்சில் சம்மட்டி அடிகள் விழுவது போன்ற செய்திகள், இந்திய மண்ணிலிருந்து அடுக்கடுக்காக வந்தன.

விடுதலைப் போரில் ஈடுபட்ட ஆறு வீரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு இந்தியாவில் தூக்கிலிடப்பட்டார்கள் என்ற செய்தி அவன் விழிகளைச் செந்தீயாக்கிற்று. பழி தீர்க்கப் புறப்பட்டு விட்டான். அப்போது அவனுக்கு வயது இருபத்திரெண்டுதான். பழி தீர்க்கும் அவனுடைய பார்வை, இங்கிலாந்தில் இந்தியாவின் செயலாளருக்கு அரசியல் மெய்க்காப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சர்.வில்லியம் கர்சன் வீலி என்பவர் மீது விழுந்தது.

அந்த வில்லியம் கர்சன் ஒரு காலத்தில் அவன் குடும்பத்து நண்பராகக் கூட இருந்தவர்தான். அதெல்லாம் அவன் நினைவுக்கு வரவில்லை. இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட தியாகிகளுக்குப் பதிலாக அவர் உயிரைப் பறிக்க வேண்டுமென்று குறி வைத்தான். 1909 ஜூலை முதல் நாள் இலண்டனில் இந்தியர்கள் நடத்திய விழா ஒன்றுக்கு சர்.வில்லியம் கர்சன் அழைக்கப்பட்டிருந்தார். ஆங்கிலேய அரசின் மீது விசுவாசமுள்ள இந்தியப் பெருமக்கள் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவாகும் அது.

அந்த நிகழ்ச்சிக்கு ஷகீத் மதன்லால் திங்ராவும் வந்திருந்தான். மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வில்லியம் கர்சன் பிரபு அனைவரிடமும் கைகுலுக்கி விடை பெற்றுக் கொண்டபோதுதான் அவருக்கு உலகத்திலிருந்தே விடை கொடுத்தனுப்பத் தனது கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தினான் அந்த இளைஞன் திங்ரா. கர்சன் உயிரைக் குடித்த கைத்துப்பாக்கியால் தன்னுயிரையும் முடித்துக்கொள்ள திங்ரா முயன்றபோது அவனைப் பிடித்து விட்டார்கள்.

ஜூலை 23-ஆம் நாள் இலண்டன் நீதிமன்றம் திங்ராவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது. அவனது இறுதியான மரண சாசனத்தைப் படிப்பதற்கு நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. எனினும் அவன் சாவதற்கு முன்பு குறிப்பிட்ட அந்த வாசகம் என்றும் சாகாவரம் பெற்றதாகும். "என்னுடைய பிரார்த்தனை எல்லாம் நான் மீண்டும் இதே தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும். என் தாயின் விலங்குகள் அகற்றப்படும் வரையில் நான் அதே குறிக்கோளுக்காக உயிரிழக்க வேண்டும்" அந்த தீரன் திங்ராவின் உடல்தான் அறுபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு இலண்டன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு, டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு - பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவும்; "திங்ரா அடிமை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றான்.

இன்று அவனது உடல் சுதந்திர நாட்டுக்கு வந்துள்ளது;" என்று பஞ்சாப் கவர்னர் சௌதாரி அவர்கள் பாராட்டிப் புகழவுமான நிலையில் - பஞ்சாப் மண்ணில் புதைக்கப்பட்டது. திங்ரா போன்ற தியாகச் சிங்கங்களால் எழுப்பப்பெற்ற சுதந்திர மாளிகையில் ஜனநாயகக் காற்றோட்டத்தைத் தடுத்தும் - நெருக்கடி காலக் கொடுமை என்ற அழுக்கைத் திணித்தும் - விடுதலைப் போராட்டத் தலைவர்கள், தளபதிகள் பலரைக் கூண்டுக் கிளிகளாக ஆக்கியும் - எழுதிடப் பேசிட சுதந்திரமில்லாத நிலையை ஏற்படுத்தியும்; இரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடத்தித்தான் சுதந்திர இந்தியாவுக்கு வந்துள்ள எதேச்சாதிக்காரக் கேடுபாடுகளைப் போக்க முடியும் என்ற முடிவுக்கு இந்திய நாட்டு அரசியல் தலைவர்களையும், இயக்கங்களையும் கொண்டு வந்து விட்டார்களே என்ற கவலையுடன்தான் டெல்லி போய்ச் சேர்ந்தேன்.

டெல்லியில் நான் எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று பாட்னாவிலிருந்து லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் எனக்கு எழுதிய கடிதம் ஊக்கமளிப்பதாக அமைந்தது. அந்தக் கடிதம் எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் படிக்கப்பட்டது. டெல்லிக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பிரதமர் இந்திராகாந்தி உடனடியாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும் கூட; எதேச்சாதிகார நிலையை நாடு தாங்காது எனப் புரிந்து கொண்டு எமர்ஜன்சியைத் தளர்த்திடத் தொடங்கினார்.

நாடு முழுவதும் சிறைப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள், செயல்வீரர்கள், தொண்டர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். 1976 டிசம்பர் 15, 16 நாட்களில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்! 1977 ஜனவரி 18-ஆம் நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி "நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்" என்று அறிவித்தார்.

தமிழகத்தில் கழகத்தினர் உட்பட மிசா கைதிகளாக இருந்த அனைவரும் ஜனவரி 23 தொடங்கி, பிப்ரவரி 2ஆம் நாளுக்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இப்படியொரு மகிழ்ச்சியான செய்தி வரும் என்று முன் கூட்டியே யூகித்துதான் 1977 ஜனவரி முதல் நாளன்று நான் விடுத்த புத்தாண்டுச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டேன். "புத்தாண்டு பிறந்துவிட்டது. 1976-ஆம் ஆண்டு எனும் வாழை மரம், எழுபத்தி ஏழாம் ஆண்டு எனும் இளங்கன்றைத் தந்துவிட்டு, காலத்தின் மடியில் வீழ்ந்துவிட்டது; புத்தாண்டு பசுங்குருத்தினை விரித்துக் கொண்டு உலக மக்களின் வாழ்த்து கீதத்திலே மெல்ல அசைந்தாடுகிற காட்சியைக் காணுகிறோம்."

இந்த வாழ்த்துடன் இயேசுநாதர் தனது பன்னிரெண்டு சீடர்களை மக்கள் தொண்டுக்காகப் பணித்த போது ஆற்றிய உரையின் ஒரு பகுதியையும் சுட்டிக் காட்டியிருந்தேன். "சீடர்களே! உங்களை ஓநாய்களுக்கிடையே ஆடுகளைப் போல் அனுப்புகிறேன். நீங்கள் பாம்புகளைப் போல விழிப்புள்ளவர்- களாகவும், புறாக்களைப் போல சாந்தமுள்ளவர்களாகவும் பணி புரியுங்கள்! மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரன் தன் சகோதரனைக் கொல்லுவான்.

தகப்பன் பிள்ளைகளையும் - பிள்ளைகள் தகப்பனையும் கொல்லும்படி செய்வார்கள். என் பொருட்டு நீங்கள் எல்லோருடைய பகை உணர்வுக்கும் ஆளாக நேரிடும். ஆனால் இறுதி வரையில் நிற்பவனே மீட்புப் பெறுவான் என்பதை மறந்துவிடாதீர்கள்." இத்தகைய அறிவுரையைக் கேட்ட சீடர்களில் ஒருவன்தான் யூதாஸ்! இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன். காட்டிக் கொடுப்பதற்காக அவன் வாங்கிய காசுக்கு ஒரு புதைகுழி நிலத்தை வாங்கி; மனச்சாட்சி குத்தியதால் மரணமடைந்த அந்த யூதாசின் பிணத்தை அதில் புதைத்தார்கள்.

அந்த நிலத்திற்கு "இரத்த நிலம்" என்று பெயர் ஏற்படலாயிற்று என்பர். கழிபேருவகையுடன் புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்றேன். எனினும் அந்த ஆண்டும் - கழகத்தைப் பொருத்த வரையில் இயேசு நாதரின் வரலாறு போலவே அமைந்தது என்பதற்காகவே இவற்றைக் குறிப்பிடுகிறேன்.