உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மூன்றாம் பாகம் - முகப்பு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மூன்றாம் பாகம் - முகப்பு · 218 / 391

நெஞ்சுக்கு நீதி 1. மூன்றாம் பாகம் - முகப்பு "நெ ஞ்சுக்கு நீதி" மூன்றாம் பாகத்தை எழுதத் தொடங்குகிறேன். இது என் வாழ்க்கை எனக் கூறப்படினும் இயக்கத்தின் வரலாற்றைப் பெருமளவுக்கும் - இந்திய நாட்டு அரசியல் சமுதாய நிலவரங்கள் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகள் - உலக நிலைமைகள் போன்றவற்றைக் கணிசமான அளவுக்கும் கொண்டுள்ள ஒரு பெரிய கதம்ப மாலையின் இழை நாராகவே விளங்குகிறது என்பதை நான் எழுதி முடித்துள்ள இரண்டு பாகங்களிலும் காண முடியும்.

இதன் முதல் பாகத்தை முடித்தபோது இறுதி அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன். "நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் அண்ணா அவர்களின் நினைவே எனக்கு ஊன்று கோலாய்த் துணை புரிகிறது. அவருடைய இதயத்தை இரவலாகப் பெற்றுக் கொண்ட உணர்வோடுதான் நான் ஒவ்வொரு கணமும் நடை போடுகிறேன்."

இரண்டாம் பாகத்தை நான் எழுதத் தொடங்கியபோது முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்த வாசகத்தையும் நினைவூட்ட விரும்புகிறேன். "இனி இருப்பது நீடித்த பயணமோ, குறுகிய காலப் பயணமோ - எனக்குத் தெரியாது! அது பற்றிய கவலையுமில்லை! நடை தள்ளாடலாம் - தடைபடலாம் - முடிவுற்றுப் போய் விடலாம் ஆனால் நான் பெற்றுள்ள அந்த உணர்வுகளுக்குத் தள்ளாட்டமில்லை! முடிவே இல்லை! இல்லவே இல்லை!"

இப்படித் தொடங்கி எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை; "1976ஆம் ஆண்டு உச்சகட்ட சோதனைகளுக்குப் பிறகும், கழகத்திற்கு வந்துற்ற சோதனைகள் ஓய்ந்து விடவில்லை. 1977க்குப் பிறகும் அவை தொடர்ந்தன. அவற்றைத் தனியொருவனாக நின்றல்ல - தன்னலம் கருதாத தியாகத் திருவிளக்குகளாம் தி.மு.கழகத்தின் உடன்பிறப்புக்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தின் துணையினால் எதிர்கொண்டேன். அந்த வரலாற்றை "நெஞ்சுக்கு நீதி" மூன்றாம் பாகமாகத் தொடர விரும்புகிறேன்" என்ற முத்தாய்ப்புடன் நிறைவு செய்திருந்தேன்.

ஆம்; எனது வயது 52 வரையிலான நிகழ்ச்சிக் கோவைகளை, செய்தித் தொகுப்புகளை வழங்கிவிட்டு இப்போது எனது 71-வது வயதில், கடந்த 18 ஆண்டுகால வரலாற்றையும் - இனியும் எஞ்சிடும் ஆண்டுகளின் நிகழ்வுகளையும் இயன்றவரையில் எழுதிடும் ஆர்வத்துடன் தான் இந்தக் கடமையை ஆற்றுகிறேன். செங்கோல் வந்தது என்பதற்காக - எழுதுகோல் இனி எதற்கு; என ஒதுக்கி வைத்திருந்தால் என் எழுத்து ஆர்வத்திலும் ஆற்றலிலும்கூட ஒரு பெரும் இடைவெளி தோன்றித் தொய்வு ஏற்பட்டிருக்கும்.

இடையில் வருவதும் போவதும் செங்கோல் என்றைக்கும் நிலையானது எழுதுகோல் எனும் எனது திண்ணமான எண்ணத்தின் விளைவே; நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதாகும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். உயர்நிலைப்பள்ளியில் கையெழுத்து இதழ், பலரையும் கவர்ந்து, நான் ஏற்றுக்கொண்ட இலட்சியங்களைப் பிறரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் உலா வந்தது! தொடர்ந்து 'முரசொலி' துண்டுத்தாள்! திங்கள் ஒருமுறை - அடுத்து வாரம் ஒரு முறை - இப்போது நாள்தோறும் என்று வளர்ந்துள்ள வரையில் - எழுதி எழுதிக் குவித்திருக்கிறேன்!

இன்னமும் நாள்தோறும் எழுதிக் கொண்டு தானிருக்கிறேன்! எத்தனை புதினங்கள் - எத்தனை சிறுகதைகள் எத்தனை நாடகங்கள் - எத்தனை கவிதைகள் - எத்தனை திரைப்படங்கள் எத்தனை இலக்கியங்கள் முடிவாக இத்தனை தான் என்று முற்றுப்பெறாத காரணத்தால் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. "முழுமையாக ஒருநாள் இதயத்தை இடரும் எந்தச் செய்திகளும் இல்லை - எனவே இன்று நிம்மதி!"

என்று அமைதியாக ஒருசேர இரவும் பகலும் இணைந்து கழிந்ததே கிடையாது. அப்படியொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட எனக்கு; பாலைவனத்தில் நடந்தால் பாதம் கொப்பளிக்குமே என்பது கூடவாத் தெரியாது! ஆனால் எனக்குப் பாதம் மட்டும் கொப்பளிக்கவில்லை. இதயமே கொந்தளித்தது. அதற்கு எந்த மருத்துவரும் தரமுடியாத மருந்தாக என் கைவசம் இருப்பதுதான் எழுத்து! "அம்மவோ! வீண்பழி சுமத்துகிறார்களே" என்று உள்ளம் கதறி அழும்!

உடனே எழுத உட்காருவேன் - எழுதியதைப் படிப்பேன் - என் எழுத்துக்கள் என் கண்ணீரைத் துடைத்துவிட்டு; என் தோளில் தட்டும்! துயரம் பறக்கும்! "அவரா? நம்ப முடியவில்லையே! இப்படியொரு துரோகம் செய்துவிட்டாரா? நன்றி என்ற சொல்லுக்கே நாட்டில் இடமில்லையா?"

ஏங்கும் நெஞ்சம்! வீங்கும் விழிகள்! ஆறுதல் கூற எழுதுகோல்தான் ஓடிவரும்! எழுதும்! எழுந்து கொள்வேன் நான்! சினம் பொங்குமளவுக்குச் சிறியோர்தம் இழிமொழி, பழி மொழி கிளம்பும்! பகை நாணும் படைக்கலன்களாய் எழுத்துக்கள் என் பின்னே அணிவகுக்கும்! எழுதிப் படிப்பேன்! புழுதியெனக் காற்றில் மறையும் பகைப்புலம்! இந்த அரிய மாமருந்தாம் எழுத்தைத் துணை கொண்ட எனக்கு; சபலம், சஞ்சலம், சலனம், இவற்றைக் காலால் மிதிக்கும் கொள்கையும், குறிக்கோளும்; இரத்த நாளமாக - இதயத் துடிப்பாக - அமைந்துவிட்ட காரணத்தால் நானும் கழகமும் எதிர்கொண்டு மீண்ட 1976ஆம் ஆண்டு; வரலாற்றில் ஒருவகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகவே ஆகிவிட்டது.

அதனால்தான் 1977ல் வெளியிடப்பட்ட "பிரிட்டானிகா" புத்தகத்தின் சிறப்பு வெளியீட்டில் - (Special supplement - 1977 BRITANNICA, Book of the year) வந்துள்ள குறிப்பில் Ref: "Encyclopacdia? Britannica year Book 1977" என்பதில் "Repression in India" என்ற தலைப்பில் பின்வரும் செய்தி சுட்டிக் காட்டப் படுகிறது. (பக்கம் 85) 1976 பிப்ரவரித் திங்களின் முதல் குறிப்பாக - "இந்திய மத்திய நூற்றுக்கணக்கான தி.மு.கழகத்தினரை நெருக்கடி கால சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது."

இந்தச் செய்தி, இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்ற நடைபெற்ற இரண்டாவது சுதந்திரப் போரில் தி.மு.க.வின் முக்கியமான பங்கினை வரலாற்று முத்திரையாக "பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின்" சிறப்பு வெளியீட்டுப் புத்தகக் குறிப்பாகப் பதிந்து விட்- டிருக்கிறது என்பதை எண்ணும்போது; 'மிசா' காலத்துத் தழும்புகள் எல்லாம்கூட புன்னகை புரிந்து பூபாளம் பாடுகின்றன அல்லவா! 1976 ஏப்ரல் திங்கள் 25ஆம் நாளில்தான், வடக்கு தெற்கு வியட்நாம் நாடுகளின் தேசிய சட்டமன்றங்கள் கூடி, ஒரு கூட்டு தேசிய சட்ட மன்றத்தை அமைத்து, இரு நாடுகளும் ஒன்றாக இணைவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் விமானப்படை வரிசையை, சிட்டுக்குருவிக் கூட்டம் எனக் கருதி; அதனைத் தொடர்ந்து விரட்டிப் பல ஆண்டுப் போருக்குப் பிறகு வெற்றி கண்ட வியட்நாம் மக்களுக்கும் உலகம் விடுதலை வாழ்த்துக் கூறியது அந்த ஆண்டில்தான்! நாளும் வளர்ந்துவரும் விஞ்ஞானப் புதுமைகளில் ஒன்றாக மார்ஸ் (Mars) கிரகத்தில் 'நைட்ரஜன்' இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அந்தச் செய்தி வைக்கிங் (Viking) அறிவியல் ஆய்வு அறிஞர்களால் அறிவிக்கப்பட்டதும் 1976 ஜூலை 26ஆம் நாளன்றுதான்!

அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் இருப்பினும் இப்போது எந்த உயிரினமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே ஜூலைத் திங்களில் பொதுவுடைமைச் சீனாவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, பீகிங் நகரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாங்சான் (Tang-San) எனப்படும் தொழில் நகரம் அடியோடு அழிந்து சுமார் ஏழு இலட்சம் மக்கள் மடிந்து போனார்கள் என்ற செய்தி உலகை உலுக்கிற்று.

மாசேதுங் அப்போது பீகிங் நகரில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தாராம். பீகிங் நகரத்திலும் அந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டு அதிர்வுகள் உருவாயினவாம். எனவே சீன அரசும், பொதுவுடைமைத் தலைவர்களும் மாசேதுங்கை, வேறு ஒரு பாதுகாப்பான நகருக்குச் செல்ல வேண்டுமென வற்புறுத்தினார்களாம். ஆனால் மாவோ அதனை உறுதியாக மறுத்து விட்டாராம். தியாகத் தன்மை வாய்ந்த அந்த தீரத் தலைவனின் வாழ்க்கையில் எத்தனையோ நில அதிர்ச்சி போன்ற நிகழ்வுகள்; அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாமல்லவா?

அந்த மாவீரன் மாசேதுங்கை செப்டம்பர் 9 ஆம் நாளும் அதற்கு முன்பே அந்த நாட்டின் பிரதமர் சூன்லாயை ஜனவரி 8 ஆம் நாளும்; மரணம், தனது மடியில் போட்டுக் கொண்டதும் 1976ல் தான்! மாசேதுங் மறைவையொட்டி (10.9.1976) முரசொலியில் நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் வருமாறு:- "சீன நாட்டில் 'சாவ்சன்' என்ற சிற்றூரில் ஏழை விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த மாசேதுங் இளமைப் பருவத்திலேயே இலட்சியச் சுடராக ஒளிவிட்டு மாணவர்களையும் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து அரசியல் விழிப்புக்குக் குரல் கொடுத்த சேவலாக விளங்கினார்.

பொங்கி வரும் எதிர்ப்புகளைப் புன்னகையால் சந்திப்பதும், தடைகளை - படைகளை - தாக்கிடும் கணைகளைத் தாங்கிடத் தன் இதயத்தைத் தயார் நிலையில் வைத்திருப்பதும் மாசேதுங்கிற்குக் கூடப் பிறந்த குணங்களாகிவிட்டிருந்தன. பாட்டாளி வர்க்கத்தை வாழவைக்க மார்க்ஸ் படைத்திட்ட தத்துவங்களை சீன நாட்டு மண்ணுக்கு ஏற்ற வகையில் கையாள்வதாக அவர் முழக்கம் செய்தார். சியாங்கே ஷேக்கிற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, சீனத்தைச் செஞ்சீனமாக்கி, தனது எண்பத்து மூன்றாவது வயது வரையில் எவராலும் அசைக்க முடியாத தலைவராகவும் சீனத்தின் அதிபராகவும் விளங்கிய அந்த அரிமா மறைந்து விட்டது.

பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற தலைப்பில் அரசியல் அமைப்புகள் உருவாகியுள்ள சீனா போன்ற நாடுகளின் மக்கள் வாழ்வு, அவர் தம் உரிமைகள், இவைகளைப் பற்றி நமக்கு முழு விபரங்கள் கிடைத்திடவில்லை யென்றாலும் மக்களின் மனங்கவர்ந்த மாபெரும் தலைவராக மாசேதுங் விளங்கினார் என்பதையும், அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சில பெரிய நாடுகளில் ஒன்றாகச் சீனத்தை உயர்த்திய பெருமைக்குரியவர் என்பதையும் யாரும் மறந்துவிட முடியாது. அவருக்குத் தெரியும், தான் ஏற்றுக் கொண்ட வேலை - சறுக்கு மரம் ஏறும் கதையென்று!

குமுறி வரும் வெள்ளப்பெருக்கில் எதிர்நீச்சல் போடும் செயல் என்று! எனினும் பாசி பிடித்த குருதிக் குட்டைகளாக -உளுத்துப்போன எலும்புக் கூடுகளாக - செல் மொய்த்த நரம்புக் கூண்டுகளாக மக்கள் வாழ்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கான போராட்டத்தில் அவர் பெற்ற வெற்றியை மறக்க இயலுமோ?"

1976 நெருக்கடி நிலையின் கோரப்பிடியில் தி.மு.கழகமும் - கழகத்தினரும் சிக்கியிருந்த நிலையில் மாசேதுங்கின் மறைவினால் அவரது வீரவாழ்வு நினைவு கொள்ளப்பட்டு - சுற்றிநின்ற சூது, வாது, சூழ்ச்சி, அடக்குமுறை, அவதூறு எனும் ஓநாய்களை வெற்றி கொண்டு இந்த இயக்கத்தைக் காத்திட முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடிந்தது. அந்த ஆண்டில்தான் அமெரிக்க அதிபராக ஜிம்மி கார்ட்டரும், இங்கிலாந்துப் பிரதமராக ஜேம்ஸ் கல்லகனும் பதவியேற்றனர்.

இங்கிலாந்து நாட்டு விமானமொன்றும் - யுகோஸ்லாவியா நாட்டு விமானமொன்றும் வான வெளியில் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு - மிக அரிதாக நடக்கக்கூடிய அந்த விபத்தில்; 176 பயணிகள் உயிரிழந்த நிகழ்ச்சியும் அந்த ஆண்டு செப்டம்பர் திங்களில்தான் நடைபெற்றது. 1976 டிசம்பர் 2ல் உலக இலக்கிய அறிஞர்களும், சுவைஞர்களும் மகிழத்தக்க செய்தியாக 19ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க எழுத்தாளர்களின் கையெழுத்துப்பிரதிகள் இலண்டன் மாநகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து கிடைத்தன.

பைரன் (Byron) ஷெல்லி (Shelly) ஆகிய பெருங்கவிஞர்களின் கையெழுத்துப் பிரதிகளும் அவற்றில் அடங்கும். உலகின் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமது செவிகளில் செய்திகளாகப் பாய்ந்து கொண்டிருந்த அந்த 1976ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் ஜனவரி முதல் நாளன்று 75-வது காங்கிரஸ் மாநாட்டில் நெருக்கடி நிலை (எமர்ஜன்சி) பிரகடனத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சட்டத்தின் 19-வது பிரிவில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் இரத்து செய்யப்பட்டதுடன்; அதன் தொடர்பாக ஜனவரி இறுதி நாளன்று தமிழகத்தில் கழக ஆட்சியும், மார்ச் 12ஆம் நாள் குஜராத் மாநில ஆட்சியும் கலைக்கப் படுகின்றன.

மே திங்கள் 25ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்தின் 40-வது பிரிவு திருத்தப்பட்டு மத்திய - மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் நீதிமன்றத்தின் வரம்புக்குள் வராது என அறிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றமும் தன் ஆயுளை மேலும் ஓராண்டு நீட்டித்துக் கொள்கிறது. தமிழகத்தில் கழக ஆட்சியைக் கலைத்து விட்டு அமைக்கப் பட்ட கவர்னர் ஆட்சியில் சென்னையில் கள்ளச் சாராயம் அருந்தியோர் 120 பேர் மாண்டு போகிறார்கள்.

இத்தனை நிகழ்வுகளையும் தன்னகத்தே கொண்டதும் தி.மு.க.வினரை மேலும் மேலும் தியாகத் தீயில் புடம்போட்டு எடுத்ததுமான 1976ஆம் ஆண்டைக் கடந்து 1977ஆம் ஆண்டுக்குள் நுழைவோம். அதுவே இந்த மூன்றாம் பாகத்தின் தொடக்கமாக இருக்கட்டும்.