உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது! · 217 / 391

இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது! நெ ருக்கடி நிலை கொடுமைகளில் ஒன்றாக கைது செய்யப்பட்ட தியாகமறவன், கொள்கைக் குன்று, என்னுடைய அன்பு உடன் பிறப்பு, கழக நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலே பயங்கரமாக அதிகாரிகளால் தாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு முரடன் கொடுத்த உதை காரணமாக வயிற்றிலே அடிபட்டு அதன் காரணமாக வயிற்றுக்குள் சில கோளாறுகள் ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிறையிலே அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்த நோய் குணமாகாமலேயே டிசம்பர் மாதம் சென்னை பொது மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கே சிட்டிபாபுவின் வயிற்றிலே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிலும் முற்றிலும் குணமாகாத நிலையிலே ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை அதே இடத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி காலையிலே மருத்துவமனையிலே ஆபத்தான நிலையிலே சிட்டிபாபு இருப்பதாக தொலைபேசி மூலம் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன். அங்கே மிசா கைதியாக இருந்த நண்பர் கமலநாதனும், மருத்துவனையில் பணியாற்றிக்கொண்டிருந்த டாக்டர் காஞ்சனா கமலநாதனும் சிட்டிபாபுவுக்கு அருகே நின்று கதறியழுது கொண்டிருந்தனர். சிட்டிபாபுவின் துணைவியாரும் துடித்துப் புலம்பினர். எனக்காகவே தன்னுடைய இறுதிமூச்சை நிறுத்தி வைத்திருந்ததைப் போல என்னைக் கண்டவுடன் அந்த ஆறுதலோடு கண்ணை மூடினார் 45 வயதே நிறைந்த அந்தக் கழகக் காளை.

கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக அரும்பணியாற்றி கடமை உணர்வோடு பணியாற்றிய சிட்டிபாபு மறைந்தவுடன் எனக்கு ஆறுதல் கூற வந்தவர்களிடம் எல்லாம் "என்னை சிறிது நேரம் அழவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். சிட்டிபாபு இறந்தது குறித்து உண்மையான விவரங்களை எல்லாம் கூட தெளிவாக பத்திரிகைகளில் தர முடியாத அளவிற்கு தணிக்கைக் கொடுமை! கழகத் தொண்டர்கள் உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது செய்து விடுவார்களோ என்று சிட்டிபாபு மரணமடைந்த அன்று இரவு சென்னை நகரத்தில் கழகத்தோழர்கள் எல்லாம் போலீசாரால் வேட்டையாடப்பட்டனர்.

சிட்டிபாபுவின் மறைவையொட்டி நான் வெளியிட்ட இரங்கல் செய்தி இதோ:- சிட்டீ, நீ மறைந்துவிட்டாயா? அய்யோ! என்னால் நம்ப முடியவில்லையே! கொள்கை முரசே! தியாக மறவனே! கழகத்தின் தூணே! எங்கள் துணையே! நீ போய் விட்டாயா? அய்யகோ! இன்று இந்தக் காட்சியையா நான் காண வேண்டும்? அந்தோ! நான் யாருக்கப்பா ஆறுதல் சொல்வேன்! என்னால் தாங்க முடியவில்லையே! நான் என் செய்வேன்! காலை 8.45 மணி அளவில் பொது மருத்துவமனையில் உயிர் துறந்த சிட்டிபாபுவின் உடலை எங்களிடம் 11.50 மணிக்குத்தான் தந்தனர்.

12 மணிக்கு அவரது சடலத்தை அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள நாகப்பையர் தெருவில் உள்ள வீட்டிற்கு எடுத்து வந்தோம். சென்னை நகரமே அந்தத் தெருவில் திரண்டுவிட்டது. மறுநாள் காலையில் சிட்டிபாபுவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு கிருஷ்ணாம் பேட்டையில் அவரது சடலம் எரியூட்டப்பட்டது. அன்றைய முரசொலியில் "மறையாத மாணிக்கப் பரிதி" என்ற தலைப்பில் சிட்டியைப் பற்றி நான் கடிதம் எழுதியிருந்தேன். இவ்வாறு ஜனவரி 5-ஆம் தேதி இறந்த சிட்டிபாபு மரணம் குறித்து பெப்ரவரி 20-ஆம் தேதி அரசாங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிகையில், சிட்டிபாபுவிற்கு நீரழிவு, மாரடைப்பு, குடலிறக்கம், மலஜலம் கழிப்பதில் தடை ஆகிய வியாதிகள் உண்டு என்றும், 5-1-77 அன்று மத்திய மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை வார்டில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார் என்றும் தெரிவித்திருந்தார்கள். அரசின் அந்த அறிக்கையைக் குறிப்பிட்டு முரசொலிமாறன், அப்போது முரசொலி மூலம் எழுப்பிய கேள்விகள் வருமாறு:- சிறைச்சாலையில் சிட்டிபாபு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டது உண்மையா?

இல்லையா? முன்பே அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் என்று அரசாங்க அறிக்கை கூறுகிறது. அத்தகைய நோயாளி கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்படக் காரணம் என்ன? அத்தகைய நோயாளி மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டது ஏன்? பொது மருத்துவமனைக்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற அனுப்பப்பட வேண்டுமென்று அவர் கேட்டதுண்டா? இல்லையா? எப்போது அவரை முதல் தடவையாக வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற பொது மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்?

அதற்கு இடைப்பட்ட நாட்கள் எத்தனை? உடனடியாக அவர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படாமல் காலங்கடந்து அனுப்பியதன் காரணம் என்ன? இதுபோன்ற முரசொலி மாறனின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் அரசு தரப்பிலிருந்து தரப்படவில்லை. சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் சிறையில் பிணமாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமா? இந்தியா முழுமையும் சிறைச்சாலைகளில் இந்திரா ஆட்சியின் எமர்ஜென்சிக் கொடுமையால் எத்தனை சித்திரவதைகள்!

சில அரசியல் கைதிகளை சிறைக் கோட்டத்தில் நாள் முழுவதும் பனிக்கட்டியில் படுக்க வைத்தனர். சிநேகலதா என்ற பெண்மணிக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லவே குலைநடுங்குகிறது. அரியானா மாநிலத்தில் ஒரு போலீஸ் லாக்அப்பில் எமர்ஜன்சியை எதிர்த்த குற்றத்திற்காக ஒரு அண்ணனையும் அவன் தங்கையையும் நிர்வாணமாக்கி போலீசார் எதிரிலேயே அவர்களை உடலுறவு கொள்ளச் செய்யுமாறு வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி-அவர்களது மர்ம உறுப்புக்களில் மிளகாய்ப் பொடியையும் தூவினார்கள்.

இப்படி நாசநர்த்தனமாடிய நெருக்கடி நிலையின் வெறிப்பற்களின் தினவு சற்று அடங்கியதற்கு அடையாளமாகத்தான் 1977 ஜனவரி 18-ஆம் நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி, "நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்" என்று அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மாநில அரசுகளுக்கு கீழ்க்கண்டவாறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. 1. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை விரைவுபடுத்தவேண்டும். அத்துடன் இந்திய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு விதிகளின்கீழ் போடப்பட்டுள்ள வழக்குகளை மறு ஆய்வு செய்யவேண்டும். 2. சகஜமான அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் தேர்தல் காரியங்களுக்காகவும் பொதுக்கூட்டங்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும்.

3. நபர்கள், வாகனங்கள் நடமாட்டம் மீதான கட்டுப்பாடு, பாதகமான செயல்களுக்கு தண்டனை விதிப்பது, பொதுக் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடு ஆகிய விஷயங்களின்கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை வாபஸ் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தவிர மத்திய தகவல் ஒலிபரப்பு மந்திரியாக இருந்த வி.சி.சுக்லா விடுத்த அறிவிப்பில் "அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மக்களிடம் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்குத் தேவையான எல்லா நியாயமான நடவடிக்கைகளையும் அனுமதிப்பதே அரசின் நோக்கம் என்று பிரதமர் தனது வானொலி உரையில் அறிவித்தார்.

பத்திரிகைகள் அதற்கான சாதனங்களில் ஒன்று. பிரதமர் கூறிய அந்த உறுதி மொழிக்கு இணங்க செய்தித் தணிக்கை உத்தரவை அமல்படுத்துவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத நான்கு பெரிய எதிர்க்கட்சிகளான பழைய காங்கிரஸ், பாரதீய லோக்தளம், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஜனதா கட்சி என்ற பொதுப்பெயரில் போட்டியிடுவதாக முடிவு செய்திருப்பதாக மொரார்ஜி தேசாய் அறிவித்தார்.

மத்திய அரசின் இத்தகைய அறிவிப்புகளுக்குப்பிறகும் தமிழ்நாட்டில் கைது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவில்லை. எனவே நானும் ராஜாராமும் கவர்னர் சுகாதியா அவர்களைச் சந்தித்து மத்திய அரசு உத்தரவிற்குப் பிறகும் தமிழகத்தில் இன்னும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவில்லை என்பதை அறிவித்தோம். அதன்பிறகு ஜனவரி 23-ஆம் நாள் தொடங்கி, படிப்படியாக பிப்ரவரி 2-ஆம் நாள் முடிய கழகத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட கழகக் கண்மணிகள் அனைவரும் சென்னைக்கு வந்து அண்ணாவின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு என்னையும் நேரில் கண்டனர். அவர்கள் விடுதலை குறித்து "இருப்புக்கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா!" என்ற தலைப்பில் நான் எழுதிய உடன் பிறப்பு மடல் இதோ: "பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!"

எனப் பாவேந்தரின் கவிதைகளாலேயே, கழகத்தின் கண்மணியே! உன்னை நான் இருகையேந்தி அழைத்து மகிழ்கிறேன். ஓராண்டு காலம் உன்னையும் என்னையும் மறைத்து நின்ற வானுயர்ந்த சுவர்களை விட்டு வெளியில் வந்துவிட்டாய்! உன்னுடன் உள்ளே அடைபட்டவர்களில் இருவர் உறங்கிடும் கண்களுடன் வெளியே வந்தனர். ஆம். என்றுமே விழித்துப் பார்க்க இயலாத விழிகளுடன், காற்றை உள்ளே இழுத்து வெளியே விட முடியாத சுவாச கோசங்களுடன் வெளியே வந்து, குளிர்ந்துபோன தங்கள் உடல்களுக்குத் தணலாடையைப் போர்த்திக்கொண்டு மண்ணோடு மண்ணாக மாறினர்.

இல்லை, இல்லை, எங்கள் கண்ணோடு ஒளியாகக் கலந்தனர். மூச்சோடு காற்றாக ஒன்றினர். இதய அசைவுகளின் துடிப்பாக இணைந்தனர். அந்தக் குமுறலை அடக்கிக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு சிறைக் கொட்டடிகளில் பூட்டப்பட்டுக் கிடந்த உனக்கு விடுதலையே கிடைக்காது என்றுதான் நினைத்து நினைத்து என் உள்ளம் களைத்துப் போயிற்று. உடலும் இளைத்துப் போயிற்று. எத்தனை ஆண்டுகளாயினும் கழகத்தின் பத்தரை மாற்றுப் பசும் பொன்னாகத்தான் இருப்பேன் என்று சூளூரைத்து ஓராண்டு காலம் வரலாறு காணாத அடக்குமுறையைச் சிறைக்கோட்டத்தில் தாங்கிக் கொண்ட என் சிங்கம் நிகர் உடன் பிறப்பே, உன் தியாகத் திருவடிகட்கு என் சிரம் தாழ்த்துகிறேன்.

நீ, மல்லிகை, முல்லை, ரோஜா மலர்மாலைகளைக் கொண்டு வந்து என் கழுத்திலே சூட்டுகிறாய்! உனக்கு மாலை சூட்டிய மங்கை நல்லாள் ஓராண்டு காலம் உன்னைப் பிரிந்து அனுபவித்த வேதனையும், அந்த மயிலைப் பிரிந்து நீ அனுபவித்த கொடுமையும் எண்ணிப் பார்த்திடவே நெஞ்சுக்கு பூகம்ப அதிர்ச்சியைத் தரும் நிகழ்ச்சியாக அன்றோ இருந்தது! இருக்கிறது! உன்னைப் பிரிந்து உன் அன்னை வடித்த கண்ணீர்-உன் தந்தையின் இதயஓலம் -உன் அருமை மழலைகளின் வாடி வதங்கிய முகங்கள் - உன்னை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவளின் உள்ளத்து உலைக்களம்.

உடன்பிறப்பே, இந்த ஓராண்டு காலம் அவைகளுக்கு ஆறுதல் கூறமுடியாமல் வெளியில் இருந்து நாங்கள் பட்ட அவதி, இவற்றையெல்லாம் மாற்றிட, இருள் நீங்க எழுந்த கதிர் போல் உன் விடுதலைச் செய்தி கிட்டியது. இருப்புக்கூட்டின் கதவு திறந்ததும் இல்லம் நோக்கி விரைந்திடவில்லை உன் கால்கள். சென்னை நோக்கிப் பறந்திட பாச இறக்கைள் உனக்குத் திடீரென முளைத்துவிட்டன. அடடா! நீ வந்த நேரம்-செயற்குழு என்றும்-ஆய்வுக் குழு என்றும் ஆயிரம் வேலைகள்-ஆரத்தழுவிட வேண்டும்-ஆண்டொன்றாயிற்றே இடைவெளி ஏற்பட்டு; அந்தக் காலத்து கதைகளை எல்லாம் பேசிட வேண்டுமென்று துடிக்கிறேன் என்றாலும் வேலைகள் குறுக்கிடுகின்றன.

ஓடிவந்த உன்னிடம் ஓரு வருடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியவில்லையென்றாலும் ஒருவரையொருவர் இமைகொட்டாமல் பார்த்துக் கொள்கிறோமே அதிலே எத்தனை நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி விடுகிறோம் - எத்தனை சரித்திரங்களைப் படித்து விடுகிறோம்-பார்த்தாயா? சிலர் உன்னை அணுகி, "சாகிற வரையில் சிறை தான்" என்றனர். "என் சாம்பல் தமிழ் மணந்து வேகும்" என்றாய். "கட்சியைத் துறந்திடு; கதவு திறந்திடும்" என்றனர். "கடையைக் கட்டிடு; நடையைத் தொடங்கிடு" என்று நறுக்கென பதில் அளித்தாய்.

"தலைமையைத் தாக்கி ஒரு அறிக்கை அளித்திடு; தளைகள் அறுபடும் தப்பிடலாம்" என்றனர். "அதற்கு எம்முடன் சில எட்டப்பர்கள் வந்துள்ளனர். அவர்களை அணுகிடுக. தலையே அறுபடினும் துரோகம் செய்யும் ரத்தம் இந்த ரத்தமல்ல என்று நிமிர்ந்து நின்று விடையளித்தாய். நெ-38 வீரத்தின் திருவுருவே! மான மரபின் குலவிளக்கே! மாணிக்கத் தமிழே! மரகதச் சுடரே! முன்னூறு நாட்களுக்கு மேலாக நீ ஓய்வெடுத்துக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்ததும் வராததுமாக நீ ஆற்றிட வேண்டிய பணி உன் எதிரே மலை போல் உயர்ந்து நிற்கிறது......

நிறைய இருக்கிறது பணி! நேரம் குறைவு! நகர்ந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானது! காலம் பொன் போன்றது-கடமை கண் போன்றது. புதிதாகப் புரிந்துகொள்ள வேண்டியவைகளா; இவைகள்? அல்லவே, அதனால் புறப்படு! "பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! வையம் ஆண்ட வண்டமிழ் மரபே! கையிருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே? மாறிணாகே கடல்போல் மாப்பகை மேல் விடு!

மக்களை ஒன்று சேர்; வாழ்வை உயர்த்துக! கைக்குள திறமை காட்ட எழுந்திரு!" இந்தக் கடித வாயிலாகக் காராக்கிரகமிருந்து வெளிவந்த கழக அடலேறுகளை வரவேற்றேன். அந்த ஓராண்டு உச்சக் கட்டச் சோதனைகளுக்குப் பிறகும் கழகத்திற்கு வந்துற்ற சோதனைகள் ஓய்ந்திடவில்லை. 1977-க்குப் பிறகும் அவை தொடர்ந்தன. அவற்றைத் தனியொருவனாக நின்றல்ல தன்னலம் கருதாத தியாகத் திருவிளக்குகளாம் தி. மு. கழகத்தின் உடன்பிறப்புக்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தின் துணையினால் எதிர்கொண்டேன், அந்த வரலாற்றை "நெஞ்சுக்கு நீதி" மூன்றாம் பாகமாகத் தொடர விரும்புகிறேன், இப்போது இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது.

-முற்றும்-