உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/புதுடெல்லியில் ஒரு புதிய முயற்சி!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

புதுடெல்லியில் ஒரு புதிய முயற்சி! · 216 / 391

புதுடெல்லியில் ஒரு புதிய முயற்சி! பி ரதமரின் கௌகத்தி காங்கிரஸ் பேச்சினையொட்டி பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகுமேயானால் அப்போது எதிர்க் கட்சிகளின் சார்பில் இரு சாராருக்கும் உடன்பாடான கருத்துக்களை விவாதிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் கழகத்தின் சார்பில் அப்போது சிந்திக்கப்பட்டது. தனித்தனி அபிப்பிராயங்கள் எழுவதால் பேச்சு வார்த்தைகளின் மூலம் ஏற்படக்கூடிய நல்விளைவுகளுக்கு தடங்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பது கழகத்தின் எண்ணமாக இருந்தது.

அந்த அடிப்படையில் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் முதலில் ஓர் இடத்தில் கூடிக் கலந்து விவாதித்து பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த எந்த அடிப்படையில் அணுகுவது என்பதில் ஒருமித்த கருத்துக்கு வருவதே சிறந்தது என்றும் கழகம் கருதியது. இவைகளை மனதிற் கொண்டு, அனைத்திந்திய அளவில் உள்ள எதிர்க் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் கழகச் சார்பில் தொடர்பு கொண்டு நான் பேசியதில் அந்த முயற்சிக்கான ஊக்கமும் உற்சாகமும் கிடைத்தது.

எனவே எல்லா தலைவர்களையும் கூட்டி கலந்து விவாதிக்க வேண்டுமென்று எண்ணிய நான் அதற்கான தொடர்புகளை மேற்கொண்டேன். சென்னையிலோ அல்லது வேறு பகுதியிலோ அந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டால், பயண சிரமங்கள் இருக்குமென்பதால் டெல்லியிலேயே அந்த கலந்துரையாடல் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, 76-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாளன்று டெல்லியில் நண்பர் இரா. செழியன் (அப்போதைய நாடாளுமன்றக் கழகக்குழுத் தலைவர்) இல்லத்தில் அந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் எந்தவொரு எதிர்க் கட்சிகளின் தனிப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகளை முன்வைத்து நடைபெறப் போகின்ற கூட்டமல்ல என்பதும் முன்னதாகவே தெளிவாக்கப்பட்டது. "இந்தியாவின் வலிவும் வளமும் ஓங்கிடவும் காப்பாற்றப்படவும் எதிர்க் கட்சிகள் எப்படி ஒத்துழைக்கப் போகின்றன?"

என்று பிரதமர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வியின் அடிப்படையிலே - பிரதமர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எத்தகைய ஒருமுகமான போக்கை வடித்தெடுப்பது என்பதே அந்தக் கூட்டத்தின் தலையாய நோக்கமாகும் என்றும் நான் முதலிலேயே நன்றாகத் தெளிவுபடுத்தினேன். பழைய காங்கிரஸ் கட்சி, பாரதீய லோக்தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, புரட்சி சோஷலிஸ்ட் கட்சி, அகாலிதளம் போன்ற கட்சிகளுக்கு நான் அழைப்பு அனுப்பியிருந்தேன்.

"மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினை மீதும் எந்தத் கட்சியோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்கக் தயாராக இருக்கிறது" என்று அப்போது பி. ராமமூர்த்தி அவர்கள் கூறியதின் அடிப்படையில் தான் அந்தக் கட்சிக்கும் அழைப்பு அனுப்பியிருந்தேன். அழைப்பு அனுப்பியிருந்தேனே தவிர அந்தக் கட்சி கலந்து கொள்கிறது என்று நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்த ஒரு மாலைப் பத்திரிகை அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து சொல்வார்கள் என்று கருணாநிதி கூறியிருப்பதை நம்பூதிரி பாத்தும், பி.

ராமமூர்த்தியும் மறுத்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டது. பழைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக்மேத்தா அவர்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியிருந்ததோடு அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார். அவரைப் போலவே பி.எல்.டி. கட்சியின் தலைவரான சரண்சிங் அவர்களும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் கோரே பம்பாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று செய்தியாளர்கள் மூலமாகவும், முரசொலியில் எழுதிய கடிதத்தின் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன். இருந்தாலும் அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. டிசம்பர் 15-ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நானும் நண்பர்கள் ராஜாராமும், ஜி. லெட்சுமணனும் ரெயில் மூலமாகப் மூலமாகப் புறப்பட்டோம்.

சென்னை புகைவண்டி நிலையத்திற்கு ஏராளமானவர்கள் வந்திருந்து என்னை வழியனுப்பி வைத்தனர். 14-ஆம் தேதியன்று காலையில் புதுடெல்லி போய்ச் சேர்ந்தேன். அன்று காலையில் டெல்லிக்கு அருகில் உள்ள சத்திரப்பூருக்குச் சென்று அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக் மேத்தா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். நண்பர் இரா. செழியனும் வந்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் அன்றைக்கு முதல்நாள்தான் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த வாஜ்பாய் அவர்களை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தேன்.

அவர் 15 - ஆம் தேசிய கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். டிசம்பர் 15-ஆம் தேதியன்று காலை 10மணிக்கு டெல்லியில் கழக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா. செழியன் அவர்கள் இல்லத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது இந்தக்கூட்டத்தில் அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக்மேத்தா, திருமதி மொகிந்தர் கவுர் (அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்), திக்விஜய் நாராயணன்சிங் எம்.

பி. (பழைய காங்கிரஸ்), பிலுமோடி எம். பி (தலைவர், பாரதீய லோக்தளம்), எச். எம். படேல், எம். பி. (பாரதீய லோக் தளம்), பிஜு பட்நாய்க் (துணைத் தலைவர், சோஷலிஸ்ட் கட்சி), சமர்குகா எம். பி. (சோஷலிஸ்ட் கட்சி). சுரேந்திர மோகன் எம். பி. வாஜ்பாய் எம். பி. (தலைவர் ஜனசங்கம்), கிருஷ்ண காந்த் எம்.பி., பேராசிரியர் ஷெர்சிங் எம்.பி. (முன்னால் மத்திய அமைச்சர்), க. ராஜாராம் (தி.மு.க) ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில கட்சியின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று அகில இந்திய கட்சியின் தலைவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

அவர்களை எல்லாம் வரவேற்று நான் ஆற்றிய வரவேற்புரை இதோ :- "கட்சித் தலைவர்களே, நண்பர்களே, எனது அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோக்கத்தை நான் தங்களுக்கு விடுத்த அழைப்பு மடலிலேயே சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். கெளகத்தி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் ஆற்றிய உரையினிடையே எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு எப்போது அமையும் என்பது குறித்து அறிவித்துள்ள கருத்து அனைவரும் அறிந்ததேயாகும்.

அதுகுறித்து எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்பதை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் இயல்பேயாகும் "நாடு எதிர்நோக்கும் இயல்பானதும், சுமுகமானதுமான சூழ்நிலை விரைவில் உருவாகாதா?" என்று நாட்டின் எதிர்கால நல்வாழ்விலே நாட்டமுள்ளவர்கள் கவனித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்களது போக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், இந்திய நாட்டின் வலிவையும் வளத்தையும் வளர்த்துப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க முன்வரவேண்டு மென்றும் அப்போதுதான் பேச்சுவார்த்தைக்குப் பொருள் இருக்க முடியுமென்றும் பிரதமர் கூறியுள்ளார்.

"பேச்சுவார்த்தை தொடங்குவதென்றால் நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறவேண்டும்." சில எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து இப்படி ஒரு கருத்தும் எடுத்து வைக்கப்படுகிறது. நிபந்தனைகள், இருதரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு அவைகளை இரு தரப்பாரும் நிறைவேற்ற உடன்பட்ட பிறகே பேச்சு வார்த்தைக்கு இணங்க முடியுமென்று வாதிப்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகிவிடும் என்பது என் தாழ்மையான கருத்தாகும். சகிப்புத் தன்மையுடன் மனம் விட்டுப் பேசி மீண்டும் நாட்டில் இயல்பான சூழ்நிலை அமைந்திட முயற்சிகளை மேற்கொண்டு நமது பணிகளை வகுத்துக் கொள்வதே சிறப்புடைய தாகுமென, நான் சார்ந்துள்ள தி.மு.

கழகம் எண்ணுகிறது. பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட வாய்ப்பு கிட்டுமேயானால் அதன் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களுக்கென அமைந்த தனித்தன்மைகளையோ, கொள்கைகளையோ விட்டுவிட்டு அரசாங்கக் கொள்கைகள், நடைமுறைத் திட்டங்கள் அனைத்துக்கும் 'ஆமாம்' போடுகிறவைகளாக ஆகவேண்டுமென்று நினைத்துப் பார்ப்பதற்குக்கூட இடமில்லை. அதே நேரத்தில் இந்தியாவின் வலிவுக்கும், வளத்துக்கும் கேடு ஏற்பட வேண்டுமென்று எண்ணுகின்ற யாரும் இங்கில்லை.

ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பிறகு நிலைமைகளை மறு பரிசீலனை செய்வதற்கான சிந்தனையும் ஆர்வமும் எழுந்திருப்பது இருதரப்பாரின் சார்பில் நாட்டின் நல்லதோர் எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தை அளிக்குமென்றே நம்பிக்கை ஒளியைத் தோற்றுவித்திருக்கிறது என்றே கூறவேண்டும். அந்தக் குறிக்கோளுடன் செயல் முறைகளை வகுப்பதற்கே இங்கே நாம் கூடியிருக்கிறோம். இதில் தனிப்பட்ட கட்சிகளின் சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு இடமில்லை.

அனைவரும் ஏற்றிடத்தக்க ஒரு பொதுவான உடன்பாடு நமக்குள்ளே ஏற்படுவதற்கு இந்தக் கூட்டம் வகை செய்யும், துணை புரியும் என்று நான் நம்புகிறேன்." என்னுடைய வரவேற்புரைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களெல்லாம் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள், அந்தக் கூட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. நிலைமையை இயல்பான நிலைக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடக்கக்கூடிய எத்தகைய பேச்சிலும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து மறு நாள் 16 - 12 - 76 அன்று மீண்டும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அந்தச் சந்திப்பு எச். எம். படேல் எம். பி. அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. அதற்குப் பிறகு அசோக்மேத்தா அவர்களும் பிலுமோடி அவர்களும் என்னை டெல்லியிலே சந்தித்து உரையாடினார்கள். 1976-ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் டெல்லியிலே கூட்டப்பட்ட அந்த அனைத்துக் கட்சி (எதிர்க்கட்சிகள்) கூட்டம் தான் ஜனதா கட்சி இந்திய அரசியலும் உருவாக முழுமுதல் காரணம் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

டெல்லியிலே நடைபெற்ற அந்தக் கூட்டம் குறித்து 16 - ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலே குல்தீப் நய்யார் நெ.-37 அவர்கள் ஒரு கட்டுரை தீட்டியிருந்தார். அதிலே "எதிர்க் கட்சிகளும் ஆளும் காங்கிரசும் முன்னிருந்ததுபோல் இப்போதும் வடதுருவம், தென்துருவமாக இல்லை என்பது வெளிப்படை. சமாதானம் சாத்தியமே என்பதைக் காட்டும் வண்ணம் சிலபல நடந்துள்ளன. இல்லாவிடின், டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய திரு.

கருணாநிதி கூறியுள்ளதுபோல், ஆளும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அதில் தாம் என்னென்ன விவரங்களை விவாதிக்க வேண்டும் என்ற விவரங்களை முடிவு செய்ய டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்திராது" என்று குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி கூட்டத்தில் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஒரு மனதான முடிவெடுக்கப்பட்டு, முன் நிபந்தனைகள் எதுவுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தைக்கு உடன்படுவதே சுமுகமான சூழ்நிலைக்கு வழிகோலும் என்பது விளக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையை விளக்கி ஒரு கருத்துரையை வெளியிடவேண்டுமென்று முதல்நாள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கருத்துரை தயாரிக்கப்பட்டு 16 - 12 - 76 அன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருடைய பார்வைக்கு அனுப்பப்பட்டு, அன்று மாலை திரு.

எச். எம். படேல் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தக் கருத்துரையின் வரைவினை வைத்துக் கொண்டு கலந்துரையாடி பிறகு அதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் "எதிர்க்கட்சிகள் ஜனநாயக செயல்முறைகளில் ஈடுபாடு உள்ளவை. தேசீய பிரச்சினைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசவும், குறிப்பாக நாட்டில் அரசியல் வாழ்வை சகஜப்படுத்துவது மிக அவசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில் அரசுடன் பேச்சு நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றன" என்று குறிப்பிடப்பட்டு, அது பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கூட்டம் டெல்லியில் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றும், கழகத்தின் முயற்சி கைகூட வேண்டுமென்றும், பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து பேசுகிற நாள் விரைவில் வர வேண்டுமென்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் பாட்னாவிலிருந்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதம் கூட்டத்தில் படிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தெரிவித்து பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

"சுயேச்சையான, வெளிப்படையான விவாதத்தின் மூலம் நாட்டில் எதிர்ப்பட்டுள்ள பிரச்சினைகளை நம்மால் தீர்க்க இயலும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டுள்ளன" என்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கடிதத்தினுடன் எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கையையும் இணைத்து பிரதமருக்கு அனுப்பினேன். அதற்குப் பின்னர் டிசம்பர் மாதம் 23 - ஆம் தேதி புதுடெல்லியில் காங்கிரஸ் ஊழியர்களின் முகாமில் பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முன்பாக, அந்தக் கட்சிகளின் போக்கு பற்றியும் ஆராய வேண்டியுள்ளது என்றார்.

அதாவது எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் - பேச்சுவார்த்தைகளின் வாயிலாகப் பிரச்சினை தீருவதையும் - தனக்கு ஏற்படும் கௌரவக்குறைவு என அவர் கருதினார் என்றே எண்ணிட வேண்டும். ஆனால் அந்த வீம்பு நீண்டநாள் இருக்கவில்லை. "எமர்ஜன்சி" எனும் சர்வாதிகாரக் கொடுமையாட்சியிலிருந்து பின் வாங்கவே அவர் முனைந்தார். அதற்குமேல் தமது எதேச்சாதிகாரப் பிடிவாதப் போக்கை நாடு தாங்காது எனப் புரிந்து கொண்டார்.