நெஞ்சுக்கு நீதி
இந்திரா காந்தி இறங்கி வந்தார் · 215 / 391
இந்திரா காந்தி இறங்கி வந்தார் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல எனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முரசொலியில் எனது எழுத்துக்களும் கழக உடன்பிறப்புக்களோடு தொடர்பு கொண்டு உலா வந்தன. சர்க்காரியா கமிஷன் விசாரணையும் சென்னையில் மிகுந்த விளம்பரத்தோடு நடத்தப்பட்டு, என்னைப் பற்றியும் கழக அமைச்சர்கள் பற்றியும் நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பிடும் பணியில் வானொலியும் ஏடுகளும் பயன்படுத்தப்பட்டன.
என்னிடம் பணியாற்றிய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள், மற்றும் ஒருசில அரசாங்க அதிகாரிகள் மிகுந்த கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டு சர்க்காரியா கமிஷன் விசாரணையிலே எனக்கு எதிராகப் பொய் சாட்சியங்கள் கூறுகிற அளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அரசின் ஆணைக்கு அடங்கி எனக்கு எதிராகச் சாட்சியமளிக்கா விட்டால் என்ன நேருமோ என அஞ்சிய அவர்கள் மனச்சாட்சியை தொலைவில் துரத்திவிட்டுத் துணிந்து சர்க்காரியா கமிஷனில் பொய்யுரைகளைப் புகன்றனர்.
சர்க்காரியா கமிஷன் முன்னால் எனது சார்பிலும் மற்ற அமைச்சர்கள் சார்பிலும் வழக்கறிஞர்கள் சாந்திபூஷன், ஜி. ராமசாமி, கோவிந்தசாமிநாதன், கே. கே. வேணுகோபால், கே. ராமசாமி, ஏ. சி. முத்தண்ணா, தர்மராஜ் சந்தோஷம், பாளை சண்முகம், தஞ்சை கோபாலய்யர், என். கணபதி, மதுரை ராசன், யு. என். ஆர். ராவ், குமார ராஜரத்தினம், பி. என். ஜார்ஜ், என்.வி.என். சோமு, ராதாகிருஷ்ணன், வெங்கடாசலம், வெங்கட்ராமன், நல்லியண்ணன், தேவதாஸ், வி.பி.சண்முக சுந்தரம், சிதம்பரநாதன், வி.டி.
அரசன், என்.எஸ்.சிவம், கோபாலகிருஷ்ண லட்சுமணராஜு, பிரேமராஜ், அன்புரோசு ஆகியோர் ஆஜராகினர். அரசியலில் பழிவாங்கும் எண்ணத்துடன் போடப்பட்டதே சர்க்காரியா கமிஷன் என்று மொரார்ஜி தேசாய், பாபு ஜகஜீவன்ராம், அசோக்மேத்தா, சாந்திபூஷன் ஆகியோர் 1977-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது பொதுக் கூட்டங்களிலேயே பேசினர். அத்தகைய பழிவாங்கும் நினைவுடன் அமைக்கப்பட்ட அந்த சர்க்காரியா கமிஷனை முறைப்படி சந்தித்து உண்மைகளை உலகுக்கு உணர்த்தவே தி.மு.கழகம் தயாராக இருந்தது.
ஆனால் சர்க்காரியா கமிஷன், முறைப்படி தனது விசாரணையை நடத்திட முன்வரவில்லை செப்டம்பர் திங்கள் சென்னையில் அந்தக் கமிஷன் விசாரணை தொடங்கியபோது, எங்களின் சார்பில் வழக்கறிஞர் சாந்திபூஷன் அவர்கள் நீதிபதி சர்க்காரியாவிடம் மனு ஒன்றைக் கொடுத்தார். என்மீதும், நாவலர் நெடுஞ்செழியன், ப. உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மாதவன், மற்றுமுள்ள அமைச்சர்கள், கழகத் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுப் புகார்களைக் கொடுத்துள்ள திரு.
எம்.ஜி.ஆர். அவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல கழகத்தினருக்கு எதிராக சர்க்காரியா கமிஷனில் சாட்சி கூறுகிற எல்லோரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவுக்கு நீதிபதி சர்க்காரியா அவர்கள் மழுப்பலான ஒரு பதிலைத்தான் அளித்தார். (குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட வீராணம் திட்டம் குறித்த ஊழல் புகார்கள் கமிஷன் முன்னால் நிரூபிக்கப்படவில்லை என்று முடிவு எழுதப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.)
எல்லாப் புகார்களிலுமே சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டால் அந்தக் குற்றச்சாட்டுகள் பொடிப்பொடியாகி விடும் என்பது தெரிந்த காரணத்தாலோ என்னவோ அன்றைக்கு சர்க்காரியா கமிஷன் சாட்சிகள் அனைவரும் குறுக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்படுவர் என்ற உத்திரவாதத்தை வழங்கிட முன்வரவில்லை. அந்த மழுப்பலான பதிலை ஏற்றுக் கொள்ளாமல்-முறைப்படி சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்காத காரணத்தால்-அந்தக் கமிஷன் விசாரணையிலிருந்து எங்களின் வழக்கறிஞர்கள் அனைவரும் வெளி நடப்புச் செய்துவிட்டனர்.
ஒரு அதிகாரி-அவர் பெயர் வைத்திலிங்கம்-கழக ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த மாதம் வேலை நீக்கம் செய்யப்பட்டு-மீண்டும் மூன்று மாதம் கழித்து வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். எனது அந்தரங்கச் செயலாளராக இருந்தவர். வேலையை இழந்து மீண்டும் வேலையைப் பெற்ற அந்த இடைவேளையில் அவர் மிரட்டப்பட்டு எனக்கு எதிராக சர்க்காரியா கமிஷன் முன்னால் ஆறரை மணி நேரம் சாட்சியமளித்தார் என்றால் இப்படி எதிரான சாட்சியங்களைத் திரட்ட நெருக்கடி காலத்தில் அரசு யந்திரம் எப்படியெல்லாம் முடுக்கி விடப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒருநாள் கோபாலபுரத்து வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறேன். வருமான வரித் துறையினர் கூட்டமாக வந்தனர். முதலமைச்சரான பிறகு வாங்கிய வீடுதானே இது-இதனை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றனர். 1956-ஆம் ஆண்டு வாங்கிய வீடய்யா இது; என்மீது புகார் கொடுத்த நண்பர் எம்.ஜி.ஆருக்கு இதுகூடவா தெரியாது என்று கேலியாகக் கேட்டேன். "அது என்னவோ சார்! வீட்டை அளந்து மதிப்பீடு செய்ய வேண்டும்" என்றனர். தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, உள்ளேயிருந்த என் மனைவி தயாளுவைக் கூப்பிட்டு-"இவர்கள் வீட்டை அளக்கப் போகிறார்களாம்-மதிப்பீடு செய்யப் போகிறார்களாம்.
நீயும் பிள்ளைகளும் உடனிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்" எனக் கூறிவிட்டு முரசொலி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். முரசொலியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். பத்து மணியிருக்கும் காலையில்! "திமு திமு" எனப் பத்துப் பதினைந்து அதிகாரிகள் ஏதோ "அதிரடிப் படை"யினர் போல அலுவலகத்தில் நுழைந்தனர். என் அறைக்குள்ளும் நுழைந்து எனது மேசையைச் சுற்றி நின்று கொண்டனர். வருமானவரி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சோதனை போட வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துவிட்டது.
"சார்! இந்த ஆபீசை 'ரைடு' செய்யப்போகிறோம்." என்றனர். "நான் எழுதிக் கொண்டிருப்பதால் உங்களுக்கு ஒன்றும் தொந்திரவு இருக்காதே!" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டு, நான் முரசொலிக்கு எழுதுவதில் கவனம் செலுத்தினேன். எனக்கு எதிரிலேயே தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. என்னைச் சுற்றி நாற்காலிகளில் சிலர் உட்கார்ந்து கொண்டனர். சிலர் அறையிலிருந்த பொருள்களை உருட்டினர். சிலர், என் மேசையைத் திறந்து அதிலிருந்த தாள்களைப் புரட்டினர்.
மதியம் ஒரு மணி அளவில் எனது எழுத்து வேலைகளை முடித்து விட்டு, சோதனையிட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன். அன்றிரவு இரண்டு மணி வரையில் முரசொலி அலுவலகம் சோதனையிடப்பட்டு-சின்னாபின்னாமாக்கப்பட்டது. ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் அண்ணாமலைபுரத்திலுள்ள என் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் நுழையும்போது அதிகாரிகள் பட்டாளம் வீட்டை ஆகரமித்துக் கொண்டிருந்தது. வருமானவரி அதிகாரிகள், அவர்களுடன் போலீஸ் பட்டாளம்!
"ராஜி" என்று எனது மனவியைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். ராஜியைக் காணவில்லை. அந்த அதிகாரிகள் ஏற்கனவே எனக்குத் தெரிந்த அதிகாரிகள்தான். அவர்கள் என்னைப் பார்த்து "நீங்கள் யார் சார்? உங்கள் பெயர் என்ன சார்?" என்று கேட்டார்களே; அந்தக் கேள்வியை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு பகீர் என்கிறது! என்செய்வது; இப்படியெல்லாம் என்னை அவமானப்படுத்த வேண்டுமென்று திட்டம்! அந்த அதிகாரிகளுக்குப் பதில் கூறாமலே மாடிக்குப் போனேன்.
அங்கே ராஜியை சில பெண் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடைக்குள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கக் கூடுமென்று அப்படி சோதிக்கிறார்களாம். என்னைப் பார்த்ததும் ராஜியும், என் மகள் கனிமொழியும் கதறியழுதவாறு மயக்கமுற்றனர். அதன் பிறகும் இரவு எட்டு மணிவரையிலே 'ரைடு' முடியவில்லை. சே! சில கொள்கைளை அழுத்தமாகச் சொன்னதற்காக சர்வாதிகாரத்தை நேர் நின்று எதிர்த்தமைக்காக-எப்படிப்பட்ட பழிவாங்கும் குணத்தினர் ஒன்று கூடிக்கொண்டு என்னையும் என் குடும்பத்தையும் என் கட்சியின் முன்னணித் தோழர்களையும் எவ்வளவு கேவலப்படுத்தினர் என்பதை இப்போது நினைத்தாலும் இதயம் எரிமலையாகிறது!
ஆனால் அந்தச் சோதனைகள், வேதனைகளிலும் மிரண்டு போகாமல் தலைநிமிர்ந்து நின்றோமே என்ற பெருமிதமும் ஏற்படத்தான் செய்கிறது. 1976-ஆம் ஆண்டு மையத்தில் நெருக்கடி நிலையின் கடுமை சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது என்றே கூறலாம். 1975-ஆம் ஆண்டு எமர்ஜன்சி பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்ட வடபுலத்துத் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். நாடு தழுவிய அளவில் அப்படி மொத்தமாக அனைவரும் விடுதலை செய்யப்படவில்லை.
தமிழ் நாட்டில் மிசாவில் கைதான அரசியல்வாதிகள் யாரும் 1976-ஆம் ஆண்டு இறுதிவரையில் விடுவிக்கப்படவில்லை. அனைத்து நாடுகளில் இந்தியாவின் நெருக்கடி காலச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிக்கப்படுகிற நிலைமை பரவலாகப் பெருகிற்று. அந்த நிலை, பிரதமர் இந்திரா காந்தியின், மீது உலக மக்களின் வெறுப்பை அதிகரிப்பதாக இருந்தது. எனவே, மெல்ல மெல்ல "எமர்ஜன்சி"க் கொடுமையிலிருந்து நாட்டை விடுவிக்க இந்திரா காந்தி அவர்களே முன்வர வேண்டியதாயிற்று.
மிசாக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களுடைய உடல்நிலையும் சிறைவாசத்தால் மிகவும் கெட்டுப் போய் விட்டதாகச் செய்திகள் வந்தன. சிறைச் சாலைகள், போலீஸ் லாக்கப்கள், இங்கெல்லாம் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட - சொல்லவே நாக்கூசுகின்ற துன்பங்களையும்' இழிவுகளையும் பத்திரிகைகளில் வெளியிட முடியாவிட்டாலும் துண்டு அறிக்கைகளாக அச்சியற்றிப் பல்வேறு மொழிகளில் நாடெங்கும்-ஏன்; உலகெங்கும் பரப்புகின்ற பணி தொடர்ந்து நடைபெற்றது!
தமிழ்நாட்டில் அத்தகைய துண்டுப் பிரசுரங்களை அச்சியற்றித் தர அச்சகங்கள் தயங்கின! ஓடி ஒளிந்தன. ஆனால் அந்த நேரத்தில் கழகச் சார்பில் நெருக்கடி நிலைக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களை அச்சியற்றித்தரும் பணியை அருமை நண்பரும் தமிழ்ச் சங்கக் காப்பாளருமான க. திருநாவுக்கரசு அவர்கள் ஏற்றுக் கொண்டதை என்னால் மறக்க முடியாது! நிழல் போல இருந்தவர்கள் எல்லாம் தழல் போல என் உள்ளத்தை ஆக்கிவிட்டுப் பிரிந்தோடி விட்ட நேரத்தில் தொலைவில் இருந்தே என் மீது அன்பு காட்டிவரும் அந்த நண்பரின் தொண்டினை எவ்வாறு மறக்க இயலும்!
இவ்வாறு எதற்கும் துணிந்தவர்கள் - இலட்சியததிற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள் - அவர்களின் எண்ணிக்கை கூடுகிறதேயன்றிக் குறையவில்லை என்பதை உணர்ந்து தான் பிரதமர் இந்திரா அவர்கள் 1976 நவம்பர் திங்கள் கௌகத்தில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய போது எதிர் கட்சிகளுடன் ஓரளவு சமரசத்திற்கு வருவது போல ஜாடை காட்டிப் பேசினார். "எதிர்க் கட்சியினர் எங்களைக் குறைகூறக் கூடாது என நான் ஒருபோதும் கூறியதில்லை.
அவர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொண்டு வளமான இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என அரசாங்கம் உணர்ந்தால் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கும்." இதுதான் பிரதமர் இந்திரா காந்தியின் கௌகத்தி மாநாட்டுப் பேச்சு! அம்மையார், கொஞ்சம் இறங்கி வருகிறார்கள் என்பதற்கான அறிகுறி!
