உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வழக்குகள் தொடங்கின!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வழக்குகள் தொடங்கின! · 214 / 391

வழக்குகள் தொடங்கின! எங்களைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்துவிட்டு கவர்னர் மாளிகைக்குச் சென்ற அதிகாரி பிற்பகல் இரண்டு மணி அளவில் திரும்பி வந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் நாங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி எங்களைக் கார்களில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். சென்னைச் சிறையில் மிசா கைதிகளாக அடைபட்டிருந்த கழகக் கண்மணிகளுடன் இருந்து பிறந்த நாளைக் கொண்டாடலாம் எனக் கருதியிருந்த எனக்கு ஏமாற்றம் தான்!

மறுநாள் காலை ஜூன் மூன்றாம் நாள்! வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து பெற்றோர் படங்களுக்கு மாலை அணிவித்துவிட்டு, அண்ணா சதுக்கம், பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து விட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் திரள்வது போல உடன்பிறப்புக்கள் திரண்டு நின்றார்கள், வீட்டு வாசலில்! அவர்கள் அணிவித்த மாலைகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் போதே வேதனை தரும் செய்திகள் என் செவிகளில் விழுந்தன.

வீட்டைச் சுற்றி நாலா திக்கிலும் போலீசார் நின்று கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக் கூற வருகிறவர்களை தடியடிப் பிரயோகம் செய்து கலைக்கிறார்கள் என்பது தான் அந்தச் செய்தி! ஒருவர் பின் ஒருவராகப் பத்துப் பதினைந்து பேர் தலையிலும் உடையிலும் ரத்தம் ஒழுகிட கையில் மாலைகளுடன் என் முன்னால் வந்து நின்று வாழ்த்து முழக்கங்களை ஆவேசமாக ஒலித்தனர். அவர்கள் எல்லாம் போலீசாரின் தடியடிப் பிரயோகத்திற்கு ஆட்பட்டுத் தப்பித்து எப்படியோ வீட்டுக்கு வந்து விட்டவர்கள்.

அந்தக் காட்சியைக் காணக் காண என் கண்கள் தணற்கட்டைகளாயின. இசைத்தட்டுகள் ஒலிபரப்புவதற்காக இருந்த 'மைக் செட்'டை அருகே கொண்டு வரச்சொன்னேன். என்னைச் சுற்றியிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடையே பேசினேன். "பிறந்த நாளையொட்டி என்னைப் பார்க்க வருகிறவர்களைக் கூடத் துடிக்கத் துடிக்க அடித்து விரட்டுகிறார்கள் போலீசார்! இந்தக் கொடுமைக்கு மத்தியில் எனக்குப் பிறந்த நாள் ஒரு கேடா? தேவையில்லை! வேண்டாம்!

இப்போதே இங்குள்ள ஆயிரம் பேருடன் ஊர்வலமாகக் கோட்டை நோக்கி அணிவகுக்கிறேன். ஆனது ஆகட்டும். ஊர்வலம் வரும் எங்களைச் சுட்டுக் கொல்ல, போலீஸ் தயாராகட்டும்!" என்று உணர்சியுரை ஆற்றி விட்டுப் புறப்பட்டேன், சூழ்ந்திருந்தோரும் என்னைத் தொடர்ந்தனர். அதற்குள் ஒரு போலீஸ் அதிகாரி ஜீப் ஒன்றில் வேகமாக என்னை நோக்கி வந்தார். இறங்கியவர் என்னைப் பார்த்து "தயவு செய்து ஊர்வலத்தை நிறுத்துங்கள்! உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு வருகிற யாரையும் இனி போலீசார் தடுக்க மாட்டார்கள்" என்று உறுதி அளித்தார்.

அதற்குப் பிறகு எங்கள் போராட்டம் கைவிடப்பட்டது. மாலை வரையில் உடன்பிறப்புக்கள் தங்கு தடையின்றி வந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறிவிட்டு, கழக நிதியும் அளித்துச் சென்றனர். பின்னர் ஜூலைத் திங்கள் 3-ஆம் நாளும் 4-ஆம் நாளும்-இரண்டு நாட்கள் சென்னை அன்பகத்தில் கழகத்தின் செயற் குழு கூட்டம் நடைபெற்றது. கழகத்தின் வரவு செலவு கணக்குகள், எதிர்கால ஆக்கப் பணிகள் குறித்து அந்தச் செயற்குழு விவாதிக்குமென உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

தலைமைச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் சிறையிலிருந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே சபாநாயகராக இருந்து கொண்டே கழக அரசுக்கு விரோதமாகச் செயல்பட்டு கழகத்திலிருந்து விலகி எம்.ஜி.ஆர். அவர்களின் கட்சியிலிருந்த நண்பர் மதி அவர்கள் மீண்டும் கழகத்தில் இணைந்து திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்தார். ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு ஒதுங்கியே இருந்த அவர், அந்தச் செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்தார்.

கூட்டத்தில் பொருளாளர் பேராசிரியர் அவர்கள் கட்சியின் கணக்கு விவரங்களைப் படித்தார், செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பொதுச் செயலாளர் நாவலர் அவர்கள் கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த சம்பவங்களை விளக்கிப் பேசினார். திடீரென மதியழகன் எழுந்து என்னையும், நாவலரையும், பேராசிரியரையும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகிடுமாறு பேசினார். அவரை ஆதரித்துப் பேசினார் எஸ். எஸ். ஆர். மதியழகன் அமைதியாகப் பேசிவிட்டு அமர்ந்தார்!

ஆனால் எஸ். எஸ். ஆர். மிகக்கடுமையானதும் தரக்குறைவானதுமான மொழிகளை உதிர்த்தார். இதற்கெல்லாம் மூல காரணமாக அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் நாளே அவர்களையெல்லாம் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் கட்டிவைத்து முடுக்கி விட்டிருந்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரால் ஒரு துண்டு அறிக்கை செயற்குழு கூட்டம் நடைபெற்ற அன்பகத்திற்கு வெளியே விநியோகிக்கப்பட்டது. அதில் என்னைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டிருந்தது.

மதியின் கருத்தையும், எஸ். எஸ். ஆர். கருத்தையும் செயற்குழுவில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. மதியழகன் வெளி நடப்புச் செய்து விட்டார். எஸ். எஸ். ஆர்., மேலும் மேலும் வரம்பு கடந்து பேசிக்கொண்டேயிருந்தார். அவரைச் செயற்குழு உறுப்பினர்கள் அமைதிப்படுத்த முயன்றனர். முடியவில்லை. எனது வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாக உடனிருப்பார் என நான் கருதியிருந்த நண்பர்களில் ஒருவரான எஸ். எஸ். ஆரின் அந்தத் திடீர்ப்போக்கிற்கு முக்கிய காரணம், மத்திய அரசின் அச்சுறுத்தல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

கட்டுப்படாமல் அவர் கூச்சல் போட்டுக் கொண்டேயிருந்த காரணத்தால் செயற்குழுவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அவர் அன்பகத்து வாசலில் கூடியிருந்த கழகச் செயல் வீரர்கள் மத்தியில் கழகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் தரமற்ற வார்த்தைகளைக் கூறிக் கூப்பாடு போட்ட காரணத்தால் அவருக்கும், கழகச் செயல்வீரர்களுக்குமிடையே சிறு மோதல் ஏற்பட்டது அந்த நிகழ்ச்சி கூட அன்பகத்திற்குள்ளே செயற்குழு கூட்டத்திலிருந்த எங்களுக்கு முதலில் தெரியாது.

இந்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்குப் பிறகு போலீஸ் அதிகாரி தேவாரம் தலைமையிலே போலீசார் அன்பக கட்டிடத்தை முற்றுகையிட்டார்கள். அங்கேயிருந்த கழகத் தோழர்கள் நாற்பதுக்கு மேற்பட்டவர்களை கைது செய்து கொண்டு போனார்கள். நெருக்கடி நிலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜேந்திரன் தாக்கப்பட்டார் என்ற வகையில் முதலில் போடப்பட்ட வழக்கு பின்னர் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சி என்ற அளவிற்கு குற்றப் பிரிவுகள் எல்லாம் எம்.

ஜி. ஆர். ஆட்சியில் அதிகரிக்கப்பட்டு, அந்த கொலை முயற்சி வழக்கிலே என்னையும் சேர்த்து நானும் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சித்தேன் என்ற அளவிற்கு வழக்குப் போடப்பட்டது? அந்த வழக்கு நீதி மன்றத்தில் பல நாட்கள் நடைபெற்று, போடப்பட்ட வழக்கு வேண்டுமென்றே போடப்பட்டது என்றும், அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழகம் நன்றாக அறிந்த ஒன்றாகும்.

அவர்கள் இருவரும் வெளி நடப்பு செய்த பிறகு செயற்குழு தொடர்ந்து அன்றும், அதற்கு மறுநாளும் நடைபெற்று 22 தீர்மானங்களை நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் மண்டபங்களில் பேசுவதற்குக் கூகி விதிக்கப்பட்டிருந்த தடை முதன்முதலாக 76ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி சென்னை யோகலட்சுமி திருமணமண்டபத்தில் என். வி. என். அவர்களின் படத்திறப்பு விழாவின் போதுதான் தளர்த்தப்பட்டது. ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு பொதுமேடையில் அங்குதான் நான் பேசினேன்.

கூட்டம், நடைபெறும் அன்று காலையிலே தான் ஒரு சிறிய சுவரொட்டி அந்த நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் வகையில் சென்னையில் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்று மாலை அந்தப் பெரிய சாலை முழுவதும் கடற்கரையிலே நடைபெறும் கூட்டத்திற்கு செல்வதைப்போல இருபக்கங்களிலிருந்தும் சாரை சாரையாக மக்கள் வெள்ளம்! அந்த மண்டபம் நிரம்பி சாலையில் இரு பக்கத்திலும் மக்கள் அமர்ந்திருந்தனர். மழையையே காணாத மக்கள் பல நாட்களுக்குப் பிறகு பொழியும் மழையில் இறங்கி அங்குமிங்கும் ஓடி நனைவதைப் போல, அன்றையதினம் அந்தக் கூட்டத்திற்கு மக்கள் வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்திற்கு சென்னை மாவட்டத் துணைச் செயலாளராக இருந்த இரா. மு. மனோகரன் தலைமை தாங்கி, சாதிக்பாட்சா, ராஜாராம் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஆர். ஆர். முனுசாமி, சற்குணம் திருப்பூர் துரைசாமி, இரா. சாம்பசிவம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக நான் பேச எழுந்து "அன்பார்ந்த" என்று ஆரம்பித்தது தான் தாமதம்; எழுந்த கையொலி அடங்க ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆயிற்று.

அந்த அளவிற்கு சென்னையிலே இருந்த கழக உடன்பிறப்புக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு அங்குக் கூடியிருந்தனர். ஆகஸ்ட் திங்கள் 29-ஆம் நாள் தென்னாற்காடு, தஞ்சை மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரிலே புறப்பட்ட எனக்கு புதுவை மாநில எல்லையிலும், கோரிமேடு, கடலூர், பு. முட்ளூர், பரங்கிப்பேட்டை ஆதிராநல்லூர், தம்பிக்குநல்லான்பட்டிணம், புவனகிரி, வயலூர், சிதம்பரம், கீழ்மூங்கிலடி, கி.முட்ளூர், கீழ்அனுவம்பட்டு, கிள்ளை, தில்லைவிடங்கள், கீழ்ச்சாவடி, கடவாச்சேரி, வேளுக்குடி, புத்தூர், சேந்தங்குடி ஆகிய வழியிலே உள்ள ஊர்களில் எல்லாம் வரவேற்பளித்தார்கள்.

கிள்ளையிலே ஒன்பது இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு, சீர்காழி சிறப்புக் கூட்டத்திற்கு 1 1/2 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தச் சிறப்புக் கூட்டத்தில், விளநகர் கணேசன், தம்பி தேவேந்திரன், சுப்ரவேலு ஆகியோர் பேசிய பிறகு நான் பேசினேன். நான் சீர்காழியில் உள்ள நண்பர் குமாரசாமி வீட்டில் சாப்பிட்டேன். எனக்கு அன்று உணவு அளித்த குற்றத்திற்காக சென்னை திரும்புவதற்குள் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஆம் அன்றைய ஆட்சியில் எனக்கு உணவு அளிப்பது கூட குற்றமாகக் கருதப்பட்டது. மறுநாள் பூம்புகார், கும்பகோணம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு விசாரணைக் கமிஷன் செலவு நிதியினைப் பெற்றேன்.