உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அண்ணா சாலையில் ஓர் அறப்போர்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அண்ணா சாலையில் ஓர் அறப்போர்! · 213 / 391

அண்ணா சாலையில் ஓர் அறப்போர்! கோ வையிலிருந்து திரும்பிய மறுநாளே கர்நாடகக் தலைநகரான பெங்களூரில் நடைபெறவிருந்த சிறப்புத் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து புகை வண்டி மூலமே சென்றேன். சிறப்புக் கூட்டத்திற்காக டிக்கெட் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. அதிலே கூட்டச் செலவிற்கு இரண்டாயிரம் ரூபாய் போக மீதம் பத்தாயிரம் ரூபாயும், நான் தங்கியிருந்த விடுதியின் முன்னால் மாலை 4 மணி முதல் 7 மணி வரை மக்கள் 'கியூ' வரிசையில் நின்று 1 ரூபாய், 2 ரூபாய் என்று அளித்த வகையில் மட்டும் 6 ஆயரம் ரூபாயும் வழக்கு நிதியாக வசூலாயிற்று.

மூன்று மணி நேரம் நின்று கொண்டே அந்த நிதியினைப் பெற்ற காரணத்தால் நான் களைத்துப்போய் 'கியூ' வரிசையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதால்தான் அது நிறுத்தப்பட்டது. வாங்கிக்கொண்டேயிருந்தால், அது எத்தனை மணி நேரம் ஆகியிருக்குமோ? நான் அங்கே கலந்துகொள்ளவிருந்த சிறப்புக் கூட்டம் பெங்களூர் 'நகர் மண்டபத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், 'இலக்கியத்தில் நாம்' என்ற தலைப்பில் நான் பேச வேண்டுமென்றும் திராவிட மணி அன்று முதல் நாள் தொலைபேசி மூலமாகத் தெரிவித்திருந்தார்.

12 ஆயிரம் ரூபாய் வரை நுழைவுக் கட்டண நன்கொடைச் சீட்டுகள் வாயிலாக வசூலாகியிருப்பதாகவும், அதற்கு மேல் மண்டபத்தில் இடம் இல்லாத காரணத்தால் நுழைவுச் சீட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதென்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நான் புகைவண்டி நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கடலிலே நீந்தி, காரிலே ஏறி அமர்ந்ததும், சிறப்புக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதென்றும், அதனால் டிக்கெட் வாங்கியவர்களும், கழகத்தினரும், பொது மக்களும் நான் தங்கியிருந்த இடத்திலேயே வந்து என்னைக் கண்டு செல்வார்கள் என்றும் கூறினார், நான் தங்கியிருந்த இடம் பெங்களூர் மாதவ நகரிலே உள்ள 'ஓட்டல் ஹைலண்ட்ஸ்' ஆகும்.

நான் பெரும்பாலும் பெங்களூர் செல்லும் போதெல்லாம் அங்கு தான் தங்குவது வழக்கம். அங்கே தங்கி பல படங்களுக்கு நான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். அந்த ஓட்டல் உரிமையாளர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கர்நாடக மாதில பழைய காங்கிரஸ் கட்சிப் பொருளாளருமான திரு. ராமரொட்டி அவர்களாகும். மாலை 4 மணி முதல் அன்று என்னைக் காண வந்த கர்நாடக வாழ் தமிழ் மக்கள் ஆயிரமாயிரவர்களை அனுமதித்து, என்னைக் கண்டு செல்வதற்கு அந்த நெருக்கடி நேரத்திலும் உரிமை வழங்கினார்.

பொது மக்கள் வரிசையாக என்னைக் கண்டு செல்வதற்கு அந்த மாநில காவல் துறையினரும் அப்போது பெரிதும் ஒத்துழைத்தனர். அந்த அன்பான வரவேற்பில் இதயத்தைப் பறிகொடுத்து விட்டு, சிறப்புக் கூட்டத்திலே பங்கு பெறாமலேயே சென்னைக்குத் திரும்பினேன். அடுத்து 17-6-76 அன்று சிதம்பரத்தில் நான் கலந்து கொண்ட திருமணத்தைப் பற்றி குறிப்பிடாமல் விட முடியாது. சிதம்பரம் வேணு அல்லது ஜெயங்கொண்டம் வேணு என்றால் கழகத்தில் அனைவரும் அறிவார்கள்.

ஒரு காலத்தில் ஜெயங்கொண்டத்தில் என்னை அழைத்து திராவிட மாணவர் கழகக் கூட்டத்தில் பேசிடச் செய்த அவர், உயிர் உடலை விட்டுச் செல்லும் வரையில் என்னுடனே இருந்தவர். அண்ணா காலத்தில் அவர் ஆணைக்கிணங்க அறப்போரில் குதித்துப் பலமுறை என்னுடன் சிறை புகுந்தவர். அவருடைய மகன் திருமணத்திலே கலந்து கொள்ளத்தான் சிதம்பரம் சென்றேன். காலை 5 மணிக்கு சென்னையிலே புறப்பட்டு பத்து மணி அளவில் சிதம்பரத்தில் மணவிழா நடைபெறும் மண்டபத்திற்கு சென்றடைந்தோம்.

காரில் இருந்து நான் இறங்கியது தான் தெரியும். திருமணத்திற்கென அமைக்கப்பட்ட பந்தலை எப்படி நான் கடந்தேன்? மண்டபத்துப் படிக்கட்டுகளில் எவ்வாறு எவ்வாறு நான் ஏறினேன்? மணவிழா மேடையை அடைந்தது எப்படி? இதற்கெல்லாம் என்னால் விளக்கமளிக்க முடியாது. ஆலையிட்ட கரும்பானேன் என்று உவமை கூறலாம். அவ்வளவு நசுக்கப்பட்டேன். அப்படி நசுக்கியதற்காக கரும்பு கோபித்துக் கொண்டு கசப்புக் காட்டுவதில்லையே; என் நிலையும் அந்தக் கரும்பின் நிலை தான்.

என்னைப் பத்திரமாகவும் இடிபாடு இல்லாமலும் அழைத்துச் செல்ல தோள்தட்டி முன்வந்த தேவசகாயம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி ஆகிறோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. விளநகர் கணேசன் அந்தக் கூட்டத்தில் சிக்குண்டு மயக்கமுற்றார் என்று பிறகு நான் கேள்விப்பட்டேன். மணவிழா முடிந்ததும், பயணிகள் விடுதியில் ஐயாயிரம் ரூபாய் அளவிற்கு விசாரணைக் கமிஷன் நிதியை வரிசையாக வந்து தோழர்களும். பொதுமக்களும் அளித்தனர்.

இவ்வாறு மணவிழா நிகழ்ச்சிகளிலும், சிறப்புக் கூட்டங்களிலும், அவைற்றை அரசினர் தடுத்தாலும், பொது மக்களையும், கழகத்தினரையும் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன் என்பது கண்டு எரிச்சல் கொண்ட சில மாற்றுக் கட்சி ஏடுகள், "கருணாநிதியின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது; முரசொலி, விரைவிலேயே அடங்கும்; அல்லது அடக்கப்படும்" என்றெல்லாம் அச்சுறுத்தி எழுதின. "முரசொலி, நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமேயானால் நான் புறநானூற்றுத் தாய்போல மகிழ்ச்சி அடைவேனேயல்லாமல் அழுது புலம்பிட மாட்டேன்.

மாற்றார் ஏடுகள் எழுதியுள்ளது போல முரசொலி அடக்கப்படும் நாள் எனக்குத் திருநாள்; ஆம்-தியாகத் திருநாள்!" என்று முரசொலியிலேயே எழுதியிருந்தேன். தணிக்கையின் கெடுபிடியை எதிர்த்து நீதிமன்றத்திலே முரசொலியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, தணிக்கைக்கு ஓர் இடைக்காலத் தடை பெறப்பட்டது. அந்த இடைக்காலத் தடையிருந்த ஒரு மாத காலத்தில் முரசொலியில் சுதந்திரமாக எழுத முடிந்தது. பிறகு ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட காரணத்தால் அந்தச் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்டது.

இவற்றுக்கிடையே ஜூன் மூன்றாம் நாள் எனது பிறந்த நாளையொட்டிய நிகழ்ச்சியொன்றை நான் நினைவுபடுத்தியாக வேண்டும். பிறந்த நாள் செய்தி என்ற நிலையில் முரசொலியில் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. "என் அன்னையை விட அதிக அன்பை அண்ணா என்மீது பொழிந்தார்" என்று அந்தக் கட்டுரையில் இருந்த வாசகத்தை வெட்டிவிட வேண்டுமென தணிக்கை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்துவிட்டார். கடிதம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது; ஜூன் முதல் நாள் இரவு! அன்றிரவுதான் அதிகாரியிடம் பேசினேன். காட்டுதர்பார் நடப்பதை நிரூபிக்கிற வகையில் அவர் பதில் அளித்ததும் அதனை எதிர்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன். ஜூன் 2-ந் தேதி காலையில் சென்னை அண்ணா சாலையிலிருந்து கிளம்பி, தணிக்கை அதிகாரி அலுவலகம் சென்று அங்கே உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுமென்றும்-எழுத்து சுதந்திரம் பெறநடைபெறும் ஜனநாயகப் போர் இது என்றும்-என் கைப்படவே எழுதினேன்.

அப்படி எழுதப்பட்டதை ரகசியமாக 'பிளாக்' செய்து கொண்டு வரச் சொன்னேன். அதனை முரசொலியில் அச்சியற்றினால் கூட மறுநாள் போராட்ட ரகசியப் வெளிப்பட்டுவிடக் கூடுமென்பதற்காக-இரவோடு இரவாக நானும் என்னுடைய மகன்கள் அழகிரி, தமிழரசன் ஆகியோரும் அந்த பிளாக்கை ஒவ்வொரு தாளாக ஒற்றி ஒற்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களாக ஆக்கினோம். ஜூன் 2-ம் நாள்! அதற்கு மறுநாள்தான் எனது பிறந்த நாள்! காலை 10 மணி அளவில் என் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன்.

அப்போது கழகத்தில் உறுதி மாறாத பற்றுக்கொண்ட இளமுருகு பொற்செல்வி அவர்கள் வந்தார். அவர் செய்தி அறிந்து கொண்டு, "உங்களைத் தனியாக அனுப்பமாட்டேன்! எங்கு சென்றாலும் நானும் வருவேன்" என்றுரைத்து என்னுடன் காரில் ஏறிக்கொண்டார். எனது காரைத் தொடர்ந்து செல்வமும், அழகிரி, தமிழரசு ஆகியோரும் வேறொரு காரில் வந்தனர். எனது காரை அண்ணா சாலையின் பக்கம் போகச் சொன்னேன். ஆயிரம் விளக்குப் பகுதியைத் தாண்டியதும் காரிலிருந்து இறங்கிவிட்டோம்.

நானே என் கையில் அறப்போர் விளக்கத் துண்டுப் பிரசுரங்களை எடுத்துக் கொண்டு அதனை அண்ணா சாலையில் செல்வோர் அனைவரிடமும் விநியோகிக்கத் தொடங்கினேன். மக்கள் ஆவலுடன், வியப்புடன் என்னைப் பின்தொடர்ந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்துப்போய் விட்டது. அப்படியே நடந்து கொண்டே, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் அடி பீடத்துக்கு வந்து சேர்ந்தேன். கழகக்காளை ஜெகதீசன் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிட்டனர்.

"சர்வாதிகாரம்" என்று முழங்கினேன்! இளமுருகு அவர்களும் மற்றவர்களும் "வீழ்க!" என்று விண்முட்ட முழங்கினார்கள்! "ஜன நாயகம்" என்று ஒலித்தேன்! "வாழ்க" என இடியொலி எழுப்பினார்கள்! ஜனநாயகக் காவலர் அண்ணாவின் நெ.-36 சிலை முன்னால் ஜனநாயகம் காத்திடும் போராட்டம்! என் கையில் கழகக் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ் பட்டாளம் வந்தது. அதிகாரிகள் என்னை அங்கிருந்து அகன்றிடுமாறு வேண்டினர்!

பிறகு கட்டளையிட்டனர்! "முடியாது! இங்கிருந்து ஊர்வலமாக தணிக்கை அதிகாரியின் அலுவலகம் சென்று உண்ணா நோன்பு மேற்கொள்ளப் போகிறேன்" என்று அறிவித்தேன். அதன் பிறகு நானும், இளமுருகு பொற்செல்வியும், கழகக் கண்மணிகள் பத்து பேரும் கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம். சில நிமிடங்களில் செல்வம், அழகிரி, தமிழரசன் ஆகியோரையும் கைது செய்து கொண்டு வந்தனர். காவல் நிலையத்தைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி விடவே அந்தக் கூட்டத்தை போலீசார் துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பெரிய போலீஸ் அதிகாரியொருவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் என்னை வந்து சந்தித்தார். நீங்கள் விடுதலை செய்யப் படுகிறீர்கள் என்றார். ஆம், என்னை மட்டும் விடுதலை செய்வதாகச் சொன்னார். வேண்டுமானால் செல்வம். அழகிரி தமிழரசன் ஆகியோரையும் விடுவிக்கிறோம் என்றார். எங்களை விடுவித்துவிட்டு இளமுருகு பொற்செல்வி மற்றும் கழகக் கண்மணிகளை சிறையிலே பூட்டுவார்களாம். அதற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டுமாம். "முடியாது!

என்னையும் என் மருமகன் செல்வம், மகன்களை மட்டும் விடுவித்தால் நாங்கள் அண்ணா சாலையில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்று உறுதியுடன் தெரிவித்தேன். அந்தப் பெரிய அதிகாரியாருடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவசரமாக புறப்பட்டுப் போனார். கவர்னரைச் சந்திக்கப் போனார். போயிருக்கிறார் என்று காவல்நிலையத்திலே இருந்த ஒரு காவலர் என்னிடம் சொன்னார். மறுநாள் ஜூன் மூன்றாம் நாள்! எனது பிறந்த நாள்-சிறையிலேயே கொண்டாடலாம் என்று மகிழ்ச்சியோடு இருந்தேன்.