உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வேதனைக் காட்டில் சோதனைத் தீ!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வேதனைக் காட்டில் சோதனைத் தீ! · 212 / 391

வேதனைக் காட்டில் சோதனைத் தீ! தி ட்டமிட்டபடி சுற்றுப்பயணம் செல்வதை ஒத்திவைத்துவிட்டேன் என்றாலும், தினந்தோறும் முரசொலி அலுவலகம் செல்வதை மீண்டும் ஒரு வழக்கமாகக் கொண்டு விட்டேன். தொடர்ந்து முரசொலியில் எழுதுகிறேன் என்றதும், எமர்ஜன்சிகாலத் தணிக்கை அதிகாரி, ஒரு புதிய ஆணையை அனுப்பி, முரசொலியில் எந்தச் செய்தி அல்லது கட்டுரை வெளிவருவதாக இருந்தாலும் முதலில் அவற்றை தணிக்கை அதிகாரிக்கு அனுப்பி அனுமதி பெறவேண்டுமென்றும், எல்லாப் பக்கங்களும் அச்சாவதற்கு முன்பு (Page Proof) அந்தப் பக்கங்களையும் தணிக்கை அதிகாரியிடம் அனுப்பி அங்கீகாரம் பெறவேண்டுமென்றும் கடுமையாகச் சட்டம் இருப்பதாகத் தெரிவித்தார்.

அறிஞர் அண்ணா என்று அண்ணாவுக்கு அறிஞர் என அடைமொழி இட்டு எழுதுவதையோ, காமராஜரைப் பெருந்தலைவர் எனக்குறிப்பிடுவதையோகூட அந்தத் தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஒரு பக்கம் கட்டுரையோ செய்திகளோ அச்சுக்கோத்து அவை சென்சார் அலுவலகத்திற்குச் செல்லுமானால் திரும்பி வரும்போது அவற்றில் நாலைந்து வரிகளே மிஞ்சியிருக்கும். அந்த அளவுக்கு எழுத்துச் சுதந்திரம் எதிர்க்கட்சிகளுக்கு, அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பறிக்கப்பட்டது.

அதே நேரத்தில் தி. மு. கழகத்திற்கு எதிரான ஏடுகளில்-மத்திய அரசின் வானொலியில்-டெலிவிஷனில்-தி.மு.க. பற்றியும், குறிப்பாக என்னைப்பற்றியும், கழக அமைச்சர்கள், கழகக் குடும்பத்தினர் பற்றியும் திட்டமிட்டு வேண்டுமென்றே அவதூறுச் செய்திகள் பரப்பப்பட்டன. 1976 தொடக்கத்தில் கழக ஆட்சியைக் கலைத்தது முதல் 1977 வரையில் இப்படிக் கழகத்திற்கும் எனக்கும் களங்கம் கற்பிக்கும் செய்திகளைப் பரப்புகிற பணியை அதிகாரபூர்வமாகச் செய்து வந்தனர்.

அந்தச் செய்திகளை மறுக்கவோ, விளக்கமெழுதவோ எனக்கும், கழகத்தினருக்கும், கழக ஏடுகளுக்கும் உரிமை கிடையாது. எதிரியைக் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு அவன் நெஞ்சிலும், முதுகிலும் மாறி மாறிக் குத்துவது போல ஒரு அநியாயமான போராட்டத்தை அன்றைக்கு மத்திய அரசும், மாநில கவர்னர் அரசும், அவற்றுக்குப் பக்கபலமாக பிரச்சார பீரங்கிகளும் நடத்தின. உதாரணத்திற்கு ஒரு செய்தி சொல்ல வேண்டுமேயானால் 9-3-76 அன்றைய மாலை ஏடு ஒன்றில் என்னுடைய மகள் கனிமொழி பெயரால் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கிக் கிளையிலே டிசம்பர் மாதம் எண்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது.

அந்தச் செய்தியிலே சிறிதளவாவது உண்மை உண்டா என்றால் கிடையாது. 1973-ஆம் ஆண்டு முதல் சேவிங்ஸ் அக்கவுண்டில் என் மகள் கனிமொழி பெயரால் மாதந்தோறும் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் என்று டெபாசிட் செய்தவகையில் வெறும் நாலாயிரம் ரூபாய் அளவிற்கு தொகை சேமிப்பில் இருந்ததே தவிர வெளியிட்ட செய்தியைப் போல டிசம்பர் மாதம் எண்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படவே இல்லை என்பதை வங்கி கணக்குக் குறிப்புகளே காட்டிய போதிலும், அந்த ஏடுகள், அப்போது அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு தங்களுடைய அரிப்புகளைத் தீர்த்துக் கொண்டன.

ஆனால் அந்த அவதூறுகளுக்கு மறுப்பு தெரிவிக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. செய்தி சென்சார் கெடுபிடி அப்படி! முரசொலியில் அரசியல் கலப்பற்ற இலக்கியக் கடிதங்கள் எழுதினேன். அந்த இலக்கியக் கடிதங்களின் வாயிலாக நான் காட்டிய குறிப்புக்களை கழக உடன்பிறப்புக்கள் வெளியில் இருந்தவர்களும், சிறையில் இருந்தவர்களும் புரிந்து கொண்டார்கள். இலக்கியக் கடிதங்கள் மூலம் அரசியலை நுழைக்கிறேன் என்று சென்சார் அதிகாரிகளுக்குக் கழகத்தின் எதிரிகள் தெரிவிக்கவே; "இனி கருணாநிதி என்ற பெயரால் கட்டுரைகளோ - கலைஞர் கடிதங்களோ முரசொலியில் வெளிவரக்கூடாது" எனத் தணிக்கை இலாக்கா தடை செய்துவிட்டது.

அதன்பிறகுதான் "கரிகாலன் பதில்கள்" என்ற ஒரு புதிய பகுதி, முரசொலியில் தொடங்கப்பட்டது. அதிலும்கூட இருபது கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் ஐந்தாறு கேள்விகள்தான் தணிக்கை அதிகாரிகளால் அனுமதிக்கப்படும். தணிக்கை அதிகாரியால் அப்போது வெட்டப்பட்ட ஒரு கேள்வி பதிலைப் பற்றிய விவரம் இதோ கேள்வி: இன்னமும் மக்களிடையே ஒரு சாரார் பேய், பூதம், பிசாசுகள் இருப்பதாக நம்புகிறார்களே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: பேய், பூதம், பிசாசு என்று கூறுவது கற்பனை! ஏற்றுக் கொள்வது மூடநம்பிக்கை! பேய், பிசாசுகள் இல்லை என்பது பற்றி பகுத்தறிவுச் செம்மல் மா. சிங்காரவேலர் எழுதியுள்ள நூலை வாங்கிப் படிக்கவும். இந்த கேள்வி பதிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏன் அனுமதி மறுத்தீர்கள் எனக் கேட்டேன். "நீங்கள் பேய், பிசாசு, பூதம் என்று எழுதும் போது அது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.

அதை நினைத்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. என் கலைத்துறை வாழ்வில் நான் திரைப்படங்களுக்கு எழுதி அதிலே சென்சார் குறுக்கிட்டதையும், 'மிசா' நேரத்தில் பத்திரிகையில் நான் எழுதியதில் சென்சார் தலையிட்டதையும் மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு நல்ல புத்தகம் எழுதிட முடியும். அந்த அளவிற்கு அன்றாடம் சென்சாருடன் போராட்டம் அமைதியான முறையில் நடத்திட வேண்டியிருந்தது. கழகத்திற்கு வெளியே இந்த அளவிற்கு நிலைமைகளைச் சமாளிக்க வேண்டியிருந்த போது கழகத்திலே இருந்த மூத்த தலைவர்கள் சிலர் நான் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தனியாகப் பேசி முடிவெடுத்து, அதனை என்னிடம் நேரிலே சொல்வதற்கு முடியாமல், புலவர் கோவிந்தன் அவர்கள் மூலமாக ஒரு கடிதத்தை என் சகோதரிகளிடம் சேர்ப்பித்தார்கள்.

அந்தக் கடிதத்தின் பின்னால் எந்தெந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அக்கடித வாயிலாக புலவர் கோவிந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் நான் புலவர் அவர்களுக்கு ஒரு நீண்ட பதில் எழுதினேன், அந்தக் கடிதத்திலே நான் புலவர் அவர்களிடம், நீங்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக எனக்கு ஒரு துளி விஷம் அளித்திருக்கலாம் என்றும், கழகம் நல்ல நிலைமையிலே இருந்தபோதெல்லாம் அதற்கு தலைவனாக இருந்து விட்டு, கழகத்திற்கு ஓர் ஆபத்து என்ற நேரத்தில் அதைவிட்டுப் போவது அழகாகுமா என்றும், என்னை முழுவதும் உணர்ந்த புலவரே அதனை எழுதலாமா என்றும் கேட்டிருந்தேன்.

நல்ல அரசியல்வாதி என்பவன் போர்க் கப்பலின் தளபதிக்கு ஒப்பானவன். அண்மையில் நடந்த ஒரு போரின் போது அன்னிய விமானத்தின் தாக்குதலுக்கு உள்ளான ஓர் கப்பலின் தளபதி தனது உதவியாளர்களை எல்லாம் தப்பித்துக் கொள்ளச் செய்துவிட்டு மேல்தளம் சென்று தன் இணைபிரியா கப்பலுடன், கடலுக்குள் சங்கமமானான் என்று படித்தேன். அந்த வரிகள் என் கண்களைக் குளமாக்கின. அந்தத் தியாகம் தான் அரசியல்வாதிக்கு வேண்டும். அது இல்லாதவன் அரசியல்வாதியல்ல; வெறும் வியாதியே; புற்றுநோயினும் கொடிய வியாதியே!

என்ற கருத்துக்களை உள்ளடக்கி புலவர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். மேலும் முரசொலியில், "கரிகாலரே, உமது கையில் ஒரு கோப்பை விஷத்தைக் கொடுத்து கழகத்திலிருந்து விலகுகிறீரா? அல்லது விஷத்தை அருந்துகிறீரா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?"

என்ற கேள்விக்கு "அப்படி கொடிய இதயம் படைத்த எதிரிகள் யாரும் இல்லை. நம்முடைய நண்பர்கள் சிலரைவிட, எதிரிகள் எவ்வளவோ நல்லவர்கள். நண்பர்கள் யாராவது விலகுகிறாயா? அல்லது விஷம் தேவையா? என்று கேட்டால் விஷத்தையே விரும்பி ஏற்பேன். சாக்ரடீஸ்; கொள்கைக்காக விஷக் கோப்பையை ஏந்தியதும், மகாத்மா காந்தி துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கியதும் கற்பனைக் கதைகள் அல்ல; சாகாத சரித்திரங்கள்" என்று பதில் எழுதியிருந்தேன்.

என்னுடைய கடிதத்தைக் கண்டதும் புலவர் அவர்கள் என் வீடு நோக்கி ஓடிவந்தார். என்னைப் பார்த்ததும் "நான் எழுதியிருந்தது உங்களுடை கஷ்டங்களைக் காண சகிக்காமல் தானே தவிர வேறல்ல! நீங்கள் தலைமையிலிருந்து விலகிக் கொண்டாலாவது உங்களுக்குத் தரும் தொல்லைகளைக் குறைத்துக் கொள்ள மாட்டார்களா என்ற எண்ணத்தில் தான" என்று கூறி ஓவென கதறி அழுது விட்டார்.

பின்னர் நான் அவருக்கு சமாதானம் கூறினேன். கழகம் சோதனைத் தீயில் நின்று போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் அதனை விட்டுவிட்டு ஓடத் தயாராக இல்லை என்று கூறி, இதைவிட இன்னும் எவ்வளவு தொல்லைகள், துயரங்கள் தரப்பட்டாலும், அதனை அனைவரும் ஒன்றாக இருந்து சந்திப்போம் என்றும் அவரிடம் தெளிவுப்படுத்தினேன். கழகத்தின் சோதனைகளுக்கு அஞ்சி, அதுவரை நல்ல நல்ல பதவிகளிலே இருந்தவர்கள் கழகத்தை விட்டு விலகினார்கள்.

எந்தப் பதவியிலும் இல்லாத, எந்தப் பலனையும் அனுபவிக்காது கழகத்திலே இருந்தவர்கள் நாங்கள் என்றைக்கும் உன் பின்னால் இருப்போம் என்று அன்றாடம் மடல்கள் மூலம் எனக்கு எழுதினார்கள். கழகத்தை விட்டுச் செல்பவர்களைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கும் போது கூட - "போகிறவர்கள் போகட்டும்; அதற்காக வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறப்போவதில்லை. கடைசிவரையில் இருக்கப் போகிறவர்கள் யார்? இருந்தவர்கள் யார்?

அந்தக் கணக்கு ஒரு காலத்தில் தெரியத்தான் போகிறது. கடலில் போய்க் கலக்கும் தண்ணீருடன் கங்கையோ காவிரியோ வற்றிப் போய்விட்டதாக யாராவது சொல்ல முடியுமா? கடலில் சென்று கலப்பது கலக்கட்டும், கழனிகளில் பாய்ந்து பயன் விளைப்பது விளைக்கட்டும். கடலில் ஒரு பகுதி நீர் கலந்து உபயோகமற்ற உப்பு நீராகி விடுவதாலேயே நதியே வறண்டு விடுமா என்ன? அந்த நம்பிக்கையோடு நமது கடமைகள் தொடரட்டும். இன்றைக்குக் கழகத்தைக் குறைகூறுவதன் மூலம், கழகத் தலைமையை வசைப்பாடுவதன் மூலம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகிற சிலர்; என்றைக்கோ ஒரு நாள் தங்கள் மனச்சாட்சிக்குப் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கும்.

அந்த நாளை எதிர்பார்ப்போம்! அண்ணா வழியில் பணி புரிவோம். அமைதி! அமைதி! அமைதி! அதை எந்த நாளும் காப்போம்" என்று தெரிவித்தேன். இத்தகைய சூழலில் திராவிடர் இயக்கத்தின் பழம்பெரும் பணியாளரும், களம்பல கண்டவரும், மிசாவில் கைதாகி மதுரை சிறைச்சாலையிலே அடைபட்டுக் கிடந்தவருமான சாத்தூர் பாலகிருஷ்ணன் மதுரைச் சிறையில் ஏப்ரல் 1-ஆம் தேதியன்று திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி வந்தது. அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து காரிலேயே புறப்பட்டேன்.

முன்னாள் அமைச்சர் நண்பர் கண்ணப்பன் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். மாலை 6 மணி அளவில் சென்னையை விட்டுப் புறப்பட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே நாங்கள் செல்லும் போது மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டது. நண்பர் பண்ணை முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு எதிரில் கொட்டுகின்ற மழையில் நூற்றுக்கணக்கான கழக உடன்பிறப்புக்கள் புடைசூழ நண்பர் அன்பில் கையில் ஒரு குடையுடன் என்னை வரவேற்க நின்று கொண்டிருந்தார்.

செய்தி பரவிடாமல் இருந்த போதிலும், திருச்சியின் பல்வேறு பகுதியிலிருந்தும், திருவரங்கம் பகுதியிலிருந்தும் கழகத்தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். உணவு அங்கே அருந்திவிட்டு, இரவு ஒரு மணி அளவில் மழையினூடே மதுரை நோக்கிப் புறப்பட்டோம். விடியற்காலை 4 மணிக்குத்தான் மதுரையை அடைய முடிந்தது. ஒரு சில மணி நேரங்கள் தூக்கம் என்ற பெயரில் கழித்துவிட்டு காலை ஏழுமணிக்கு மதுரையிலிருந்து சாத்தூர் நோக்கிக் கிளம்பினோம்.

சரியாக பத்து மணிக்கெல்லாம் சாத்தூருக்குள் நுழைந்து விட்டோம். கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தோட கழகக் கண்மணிகள் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டவுடன் கோவெனக் கதறி அழுத குடும்பத்தாரைத் தேற்றிட முடியாமல் நான் தவித்தேன். எனக்கே ஆறுதல் சொல்ல அங்கே ஆட்கள் தேவைப்பட்டது. நான் இறுதி அஞ்சலி செலுத்தியவுடன் அந்தத் தியாகச் செம்மலின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கொளுத்துகின்ற வெயிலில் பல்லாயிரவர் அந்த இறுதி ஊர்வலத்தில் மௌனமாக அணிவகுத்தனர்.

நானும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்தே சென்றேன். எரியூட்டப் பெற்ற இடத்தில் அழகுத் தேவர் தலைமையில் இரங்கலுரையாற்றி இறுதி அஞ்சலி செலுத்தினேன். அன்று இரவு 12 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தோம். வழி நெடுக எங்கள் காரை நிறுத்துமாறு அன்புக்கட்டளை பிறப்பித்த கழக உடன்பிறப்புக்கள், மாணவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோரைச் சந்தித்து ஓரிரு நிமிடங்கள் உரையாற்றியதின் காரணமாக மனச்சோர்வும், சோகமும் சற்று குறைந்த நிலையில் திரும்பினேன்.

கட்சிப் பெயரை மாற்றும் யோசனை? 1976- ஆம் ஆண்டு முழுதும் நெருக்கடி நிலைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. அன்றாடம் என்னுடைய பொழுது; காலையில் எழுந்தவுடன் நாளேடுகள் படித்து முடிப்பதிலேயே ஆரம்பமாகும். பிறகு ஒன்பது அல்லது பத்து மணி வரையிலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்களிலும், வேன்களிலும் ஏறிக் கொண்டு கழக உடன்பிறப்புக்கள் நூற்றுக்கணக்கில் வருவார்கள். ஒவ்வொரு நாளும் தவறாமல் அவர்களைக் காண்பதில் எனது சோர்வெல்லாம் பறந்து போய்விடும்.

பஸ்களையும், வேன்களையும் வீட்டு வாசலில் நிறுத்தி அதிலே வந்தவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். மத்திய அரசால் பழிவாங்குவதற்கென்று போடப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணையில் வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிற செலவுக்காக அவர்கள் ஒரு ரூபாய் என்றும், ஐந்து ரூபாய் என்றும், வழக்கு நிதியை அள்ளி அள்ளி வழங்குவார்கள். அவ்வாறு நாள் தோறும் கழகத்தினர் சென்னைக்கு என் இல்லம் நோக்கி வருவதையும், வழக்கு நிதி தருவதையும் சகித்துக் கொள்ள முடியாத கவர்னர் ஆட்சி, அப்படி என்னைச் சந்திக்கப் புறப்படுகிற கழகத்தினரை அவர்களது ஊர்களிலேயே தடுத்து நிறுத்தும்படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டது.

அதன் காரணமாக பஸ்களையும், வேன்களையும் வாடகைக்குத் தருவதற்கு அவற்றின் உரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். அந்த நிலைமையை ஆங்காங்குள்ள கழகத்தினர் சமாளித்தவிதமே அலாதியானது! அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தக் கூடியது. திருப்பதிக்கு யாத்திரை போகிறோமென்றும், திருத்தணி கோயிலுக்குப் போகிறோம் என்றும் கூறி பஸ்களையும், வேன்களையும் வாடகைக்குப் பிடித்தனர். அவற்றில் குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாக ஏறிக் கொண்டனர்.

திருப்பதி, திருத்தணிக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த வந்தவர்களைப்போல மொட்டையும் அடித்துக் கொண்டனர். சந்தனத்தையும் தலை நிறையப் பூசிக்கொண்டனர். இல்லாவிட்டால் அவர்கள் திருப்பதி, திருத்தணியிலிருந்து சென்னை நகருக்குள் நுழைந்திட போலிசார் அனுமதிக்கமாட்டார்களே! பழுத்த பக்த சிரோன்மணிகளைப்போல என் வீட்டுக்கு வந்து சேருவார்கள். எனக்குத் தைரியம் கூறுவார்கள். "கவலைப்படாதே! நாங்கள் இருக்கிறோம்" என்று கண்கலங்க என் கைகளைப் பிடித்துக்கொண்டு உறுதி முழக்கம் செய்வார்கள்.

வழக்கு நிதி தருவார்கள். கூட்

டமாக என்னுடன் நின்று குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூட இருந்த மேலிடத்துத் தலைகள் சில கலங்கிப் போய் கை பிசைந்து செய்வதறியாது திகைத்துப் போய் என்னையும் செயலற்றவனாக ஆக்கிட முனைந்தபோது - அந்தக் கழகக் கண்மணிகள், மொட்டைத் தலையுடன் வந்து எனக்களித்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது! ஏ, அப்பா - அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு இந்தக் கழகம் ஏது?

தினமும் அவர்களைச் சந்தித்து விட்டு முரசொலி அலுவலகம் செல்வேன். எழுதுவேன். தணிக்கைக்குத் தப்பிய எழுத்துக்களை முரசொலி வாயிலாக வெளியிடுவதற்கு உதவுவேன். அதன்பிறகு அன்பகம் செல்வேன். அமைச்சராக இருந்தோமே என்கிற அந்த நினைவையே மறந்து விட்டு நண்பர் சாதிக் பாட்சா அவர்கள் அன்பகத்தில் எல்லாக் கடமைகளையும் ஆற்றிடுவார். பேராசிரியர் வருவார். நாவலர் வருவார். மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் சிலர் வருவார்கள்.

என்னையும் பேராசிரியரையும் தவிர மற்ற எல்லோருடைய முகத்திலும் எதையோ பறிகொடுத்துவிட்ட சோகம்தான் பரவிக் கிடக்கும். அதிக நேரம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தால் எனக்கே ஒரு கோழைத்தனம் வந்து விடுமோ என்ற அச்சம் பிறக்கும். ஒருநாள் அன்பகத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது மாநிலக் கட்சிகளைத் தடை செய்ய இந்திரா அரசு உத்தேசித்திருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதை அறிந்த எம். ஜி. ஆர். அவர்கள் தனது கட்சியின் பெயர் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்று இருந்ததை "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என மாற்றிக் கொண்ட நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே!

தி.மு.க.வையும் பெயர் மாற்றிக் கொள்வதே பாதுகாப்பானது என்று மூத்த தலைவர்கள் அழுத்தமாகக் கருத்தறிவித்தனர். அமைச்சர்களாக இருந்த சிலரும் ஆமாம் போட்டனர். தி.மு.க.வை அரசியல் கட்சியல்ல என அறிவித்து; கலாச்சாரக் கழகமாக ஆக்கிவிடலாம் என்றும் வற்புறுத்தினர். அவசரப்பட்டு அடிப்படையை இழந்துவிடக்கூடாது என்ற எனது கருத்துக்கு பேராசிரியர் மட்டுமே துணை நின்றார். இப்படியொரு சிந்தனை கழகத்தின் மேல்மட்டத்தில் இருப்பது தெரிந்தால்கூட கழகத் தொண்டன் உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கூறினேன்.

அதற்குள் இந்தச் செய்தி சென்னை சிறைச் சாலைக்குள் பரவி, அங்கு மிசாவில் இருந்த கழக முன்னணியினர் கையெழுத்திட்டு, "கழகத் தலைமையிலாகட்டும் அல்லது கழகப் பெயரிலாகட்டும் எந்த மாற்றமும் கூடாது!" என உறுதியாகத் தெரிவித்து எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அந்தக் கடிதத்தை சலனமுற்றிருந்த நண்பர்களிடம் படித்துக்காட்டி "வாழ்ந்தாலும் கழகத்தோடு வாழ்வோம்! வீழ்ந்தாலும் கழகத்தோடு வீழ்வோம்" என்று உணர்ச்சி பொங்கிடக் கூறினேன்.

அதன்பிறகு சில நாட்கள், கழகத் தலைமை மாற்றம் - கழகப் பெயர் மாற்றம் இவை குறித்த விவாதங்கள் எழவில்லை. ஆனால் சில இடங்களில் குழுக்களாகக் கூடி முணு முணுத்துக் கொண்டிருந்தனர். 'மிசா' சட்டத்தின்கீழ் சிறையிலே அடைக்கப்பட்ட கழகத் தோழர்கள் பலரின் குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான நிலைமையிலே இருந்த காரணத்தால் அத்தகைய குடும்பங்களுக்கு மாதந்தோறும் இருநூறு ரூபாய் வீதம் நிதியாகத் தர முடிவு செய்து கழகத்தின் சார்பில் அதனை வழங்குவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டு தரப்பட்டது.

குடும்பத் தலைவன் இல்லாத நிலையில் அந்தக் குடும்பத்தினரை அப்படியே விட்டுவிடாமல் கழகமே அத்தகைய குடும்பங்களைப் பாதுகாத்திட வழிவகை செய்தது. அடுத்து, ஜூன் மாதம் 6-ஆம் தேதியன்று திருச்சி மாவட்டம் அம்பில் கிராமத்தில் மறைந்த கழகத் தோழர் இரா. கோபால் அவர்களின் இல்லத் திருமணத்திற்கும் பொன்மலை நகரச் செயலாளர் ராமானுஜம் இல்லத் திருமணத்திற்கும் நான் வரவேண்டுமென்று வற்புறுத்தி அழைத்திருந்தார்கள்.

நெருக்கடி நிலை காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகு சாத்தூர் பாலகிருஷ்ணன் மறைவிற்காக வெளியூர் சென்று வந்ததைத் தவிர வேறெங்கும் செல்லாததால், 5-ஆம் தேதி இரவு நான் திருச்சிக்கு ரயிலில் புறப்பட்டபோது புகைவண்டி நிலையத்திலேயே ஏராளமான பேர் வந்திருந்து வழியனுப்பி வைத்தார்கள். நான் அந்த புகைவண்டியில் வருவதறிந்து ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து இரவு முழுவதும் என்னைத் தூங்கிவிடாமல் வரவேற்றனர்.

அதன் காரணமாக புகைவண்டி பல மணி நேரம் தாமதமாகச் சென்றது. திருச்சியிலே வண்டியிலிருந்து என்னை இறக்கி காருக்கு அழைத்துச் செல்லவே முடியாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கானவர்களின் கூட்டம். எப்படியோ கூட்டத்தில் போட்டு நசுக்கி காரில் கொண்டுபோய் என்னைத் தள்ளினார்கள். திருச்சியிலிருந்து அம்பில் கிராமத்து திருமணவீட்டிற்கு சுமார் பதினைந்து மைல். காலை 9 மணிக்கு திருச்சியை விட்டுப் புறப்பட்டு 11 மணிக்குத்தான் அம்பில் சென்றடைந்தோம்.

15 மைல்களைக் கடக்க இரண்டு மணி நேரமா என்றால், அந்த அளவிற்கு வழியெங்கும் எங்கள் கார் நிறுத்தப்பட்டு, உடன் பிறப்புக்களின் அன்பிற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. பின்னர் 12 மணி அளவில் அம்பிலை விட்டுப் புறப்பட்டு 11 மணி அளவில் தான் பொன்மலை திருமண விழாவிற்கு வந்து சேர முடிந்தது. என்னுடைய காருக்கு நண்பர் காமாட்சி தான் சாரதி. அன்பில், அழகமுத்து, மாவட்டச் செயலாளர் எம்.எஸ். வெங்கடாசலம், ஆலந்தூர் பாரதி, வி.எம்.ஆர்.

சபாதி ஆகியோர் உடன் வந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு தங்குமிடத்தில் மாலைவரை 'கியூ'விலே நின்று விசாரணைக் கமிஷன் நிதியினைப் பெற்றுக்கொண்டேன். நிதி ஐயாயிரத்தைக் கடந்து ஆறாயிரத்தை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு வசூலாயிற்று. இரவு சென்னைக்குச் செல்ல ரயிலில் டிக்கெட் இல்லை என்று 6 மணி அளவில் செய்தி சொன்னார்கள். மறுநாள் காலையில் சென்னையிலே ஒரு திருமணத்திற்கு நான் தலைமை தாங்கியாக வேண்டும். எனவே வேறு வழியில்லாமல் 7 மணிக்கு நண்பர் காமாட்சியின் காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டோம்.

இரவு 12 மணிக்கெல்லாம் சென்னையில் சேர்த்து விடுவதாகத் தெரிவித்தார். ஆனால் உளுந்தூர் பேட்டைக்கு முன்பாகவே கார் சக்கரத்தில் ஒன்று பழுதாகி விட்டது. உளுந்தூர்பேட்டையில் அதனை சரிசெய்துகொண்டு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தோம். மீண்டும் அதே சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஏதோ ஒரு தேய்ந்துபோன ஆணி குத்தி ஓட்டை விழுந்துவிட்டது. விழுப்புரத்தில் மீண்டும் அதனை சரி செய்துகொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

மதுராந்தகம் தாண்டியதும் மறுபடியும் கார் சக்கரத்தில் பழுது! நல்லவேளையாக சென்னை நோக்கி வந்துகொண்டிருத ஒரு வாடகைக் காரில் இருந்தவர்கள், தங்கள் காரில் உள்ள ஒரு உபரி சக்கரத்தை எங்கள் காருக்குத் தந்தார்கள். அதை மாட்டிக்கொண்டு இரவு 12 மணிக்கு சென்னை வந்து சேர நேரம் குறித்தவர்கள், விடிய விடியக் கண்விழித்து விடிந்தபிறகு சென்னை வந்து சேர்ந்தோம். வந்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் அணையுடைத்த வெள்ளம்போல் மூன்று பேருந்துகளில் பண்ருட்டி, குளித்தலை, கோவையிலிருந்து உடன்பிறப்புக்களும், தாய்மார்களும் வந்து கூடிவிட்டார்கள்.

அவர்களையும், மற்ற பல பகுதிகளிலிருந்து வந்தவர்களையும் சந்தித்துவிட்டு அவர்கள் வழங்கிய தேர்தல் நிதியையும் பெற்றுகொண்டு சென்னையில் முருகேசன் இல்லத் திருமண விழாவிற்குப் புறப்பட்டுச் சென்றேன். 7-ஆம் தேதி சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள் 8-ஆம் தேதியன்று கோவை மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சாமிநாதன் இல்லத்து மணவிழாவிலும், கலந்து கொள்வதற்காக நீலகிரி துரித ரயில் வண்டி மூலமாகப் புறப்பட்டேன்.

என்னுடன் வழக்கறிஞர்கள் கணபதி, என். வி. என். சோமு, ராதகிருஷ்ணன், நல்லியண்ணன் ஆகியோர் உடன்வந்தனர். விடியற்காலை 4 1/2 மணிக்கு ஈரோட்டைச் சென்றடைந்தது நாங்கள் சென்ற புகைவண்டி. ஈரோடு ரயிலடியில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கொங்குமண்டல மக்கள் கூடியிருந்து அந்த விடியற்காலை நேரத்தில் எனக்கு வரவேற்பளித்தனர். புகைவண்டி நிலையத்தில் சாதிக், கண்ணப்பன், எஸ். ஏ. ராஜமாணிக்கம், ஜானகிராமன், சி. டி. தண்டபாணி, தேவசகாயம், ஈரோடு மு.

சின்னசாமி, திருப்பூர் துரைசாமி, பொங்கலூர் பழனிசாமி, அந்தியூர் நடராஜன், கல்லார் ராமசாமி, ஈரோடு விசுவநாதன், நகரச்செயலாளர் மதார்சா, இரா. பெருமாள், அத்தாணிபாபு, கணேசமூர்த்தி, மு. தமீம், சென்னியப்பன், விஜயராகவன், கருப்புசாமி, அல்லாபிச்சை, கலைமான், கோபி. வெங்கிடு, ஏ. என். சாமி, பெருந்துறை கந்தசாமி, மற்றும் பல்லாயிரக்கணககான உடன் பிறப்புக்கள் என்னை அன்போடு வரவேற்றனர். வெள்ளாங்கோவிலில் கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திற்கும் கனகாம்பரத்திற்கும் நடைபெற்ற மணவிழாவில் தலைமையேற்று மண விழாவினை நடத்தி வைத்தேன்.

மண விழாவிலே கூட நான் பேசக்கூடாது என்று காவல்துறையினர் ஒலிபெருக்கிக்கான லைசென்ஸ் வழங்கிடவில்லை. 'மெகபோன்' ஒன்று கொண்டு வரச் சொல்லி, அதை தோளிலே மாட்டிக்கொண்டு, அந்த மணவிழாவிலே மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன். அடுத்து புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற சாமிநாதன் இல்லத் திருமணத்திலும், ஈரோட்டில் நடைபெற்ற அர்ச்சுனன் இல்லத் திருமணத்திலும் கலந்து கொண்டேன். (சாமிநாதன் அப்பொழுது சிறையில் இருந்தார்.)

அன்று ஒரு நாள் நிகழ்ச்சியில் மட்டும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி மட்டும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் விசாரணைக் கமிஷன் செலவு நிதியை அளித்தது. ஈரோட்டிலிருந்து சென்னை திரும்பியதும், அதற்கு முன்பு ஈரோட்டிற்கு நான் பலமுறை சென்றபோது அளித்த வரவேற்பினையும், 1945-ஆம் ஆண்டு நான் முதன்முதலாக ஈரோடு சென்று பெரியாரிடம் பணியாற்றிய நிகழ்ச்சிகளையும் ஞாபகடுத்தி "பள்ளிக்குச் சென்று வந்தேன்" என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் எழுதினேன்.