நெஞ்சுக்கு நீதி
தடைபட்ட பயணம்! · 211 / 391
தடைபட்ட பயணம்! தொ டர்ந்து மிசா சட்டத்தின்படி கழகத்தினர் வேட்டையாடப்பட்டனர். என்னுடன் யாரும் இருக்கக் கூடாதென்றும், என்னைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும் திட்டமிட்டு கவர்னர் ஆட்சியில் காரியங்கள் நடத்தப்பட்டன. எனது காரில் எனக்குப் பேச்சுத் துணைக்காக யாராவது சில நாட்கள் தொடர்ந்து வந்தால்கூட அவர்கள் மிசாக் கைதிகளாக ஆக்கப்பட்டார்கள் போடி. சுருளிவேல்-கழக வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும்கூட!
அவர் சில நாட்கள் என் காரில் வந்தார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார். இன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் தம்பி டி. ஆர். பாலு-அவர் ஒருவார காலம் என்னுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அவரையும் மிசா கொத்திக்கொண்டு போய்விட்டது. ஆயிரம் விளக்கு உசேன்-கழக உழைப்பாளி; அவர் சில நாட்கள் எனக்குத் துணையாகக் காரில் வந்தார். விடுமா, மிசா? அவரும் சிறையில் பூட்டப்பட்டார்! தம்பி எல். கணேசன்; நான் தடுத்தும் கேளாமல் என்னுடன் காரில் வரத் தொடங்கினார்.
அவர் மட்டும் தப்புவாரா? ஒரு வாரத்திற்குள் மிசா; அவரையும் வளைத்துப் போட்டுக்கொண்டது! சென்னை வீதிகளில் தன்னந் தனியனாகத்தான் காரில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு இரண்டு காரோட்டிகள் உண்டு! அவர்களிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தேன். அவர்களில் ஒருவர், உடல் நலமில்லை எனக் கூறிவிட்டு, வேறு ஒரு தொழிலதிபரிடம் வேலைக்குப் போய்விட்டார்! இன்னொருவர், அடுத்து இரண்டு நாட்களுக்கெல்லாம் என்னிடம் வந்து வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்து விட்டுச் சென்றுவிட்டார்.
காருக்கு டிரைவரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்பொழுதுதான் முன்னாள் அமைச்சர் நண்பர் கண்ணப்பன் எனக்குக் காரோட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அந்த மாபெரும் குற்றத்தைச் செய்தமைக்காக அவரையும் மிசா விழுங்கிச் சிறைக் கோட்டத்தில் போட்டுக்கொண்டது. கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி, விடுதலை சம்பந்தம், நடிகவேள் எம். ஆர். இராதா, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பழைய காங்கிரஸ் கட்சியினர் மிசாக் கைதிகளாயினர்.
மாநில முழுவதுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கானோர் மிசா சட்டப்படி அடைக்கப்பட்டிருந்தார்கள் என்றாலும் கூட- சென்னை சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டவர்களைத்தான் சிறை அதிகாரிகளும், கான்விக்ட் வார்டர்களும், சிறைச்சாலையின் பெரிய அதிகாரிகளின் முன்னிலையில் அடித்து நொறுக்கிச் சித்ரவதை செய்தனர். சென்னைச் சிறையில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து அந்தச் சிறைக் கொடுமையின் காரணமாக சிறையிலேயே பிணமான கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எழுதிய "டைரி" அச்சாகி வெளிவந்துள்ளதைப் படித்தால் இப்போதும் நமது நெஞ்சு எரிமலையாகும்!
அந்தக் கொடுமை குறித்து விசாரிக்க 1977-ஆம் ஆண்டில் மத்தியில் இருந்த ஜனதா ஆட்சியினால் நியமிக்கப்பட்டிருந்த கவர்னர் பிரபு தாஸ் பட்வாரி அவர்கள் நீதிபதி இஸ்மாயில் கமிஷனை அறிவித்தார். அந்தக் கமிஷன் அறிக்கையில் சிறையில் நடந்த கொடுமைகள் அனைத்தும் விளக்கப்பட்டன. மிசாக் கைதிகளுக்கு சோறுடன் மண்ணையும் சிறுநீரையும் கலந்து வழங்கிய அக்கிரமங்கள் எல்லாம் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் நுழைந்து அரசியல் மிசா கைதிகளை இழுத்துப் போட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து உதைத்த அநியாயங்கள் எல்லாம் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டன.
வித்யாசாகர் என்ற சிறை அதிகாரிதான் இத்தனைக்கும் காரணம் என இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டியது. ஆனால் நண்பர் எம். ஜி. ராமசந்திரன் முதல்வரானவுடன் அந்த அதிகாரி வித்யாசாகருக்குப் பதவி உயர்வு கொடுத்து அவரைக் கௌரவித்தார். அரசாங்க சார்பில் அச்சியேற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை இப்போது படித்தாலும் சென்னைச் சிறையில் அதிகாரிகள் நடத்திய அந்த மிருக வெறி கொண்ட செயல்கள் குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
மாநிலத்தில் மற்ற சிறைகளில் இருந்த மிசாக் கைதிகளைக் காண அவர்களது நெருங்கிய உறவினர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்; வாரம் ஒரு முறை! ஆனால் சென்னைச் சிறையில் இருந்த மிசாக் கைதிகளைப் பார்க்க அவர்களது பெற்றோர்களோ, உறவினர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. சிறையில் இருக்கும் அந்த உடன்பிறப்புக்களின் இல்லத்தினர் ஒவ்வொரு நாளும் என்னை வந்து சந்தித்து கண்ணீர் வடித்துக் கதறுவார்கள். இதற்கிடையே சிறையில் நடைபெற்ற சித்ரவதை நிகழ்ச்சிகளும் வெளியே பரவத் தொடங்கி விட்டது.
ஏறத்தாழ முப்பது நாட்கள் வரையில் சென்னை சிறையில் இருந்தவர்களின் கதி என்ன என்பதே எங்களில் யாருக்கும் தெரியாது. கழகத்தினர் வீடுகளிலே இருந்து ஆண்களும் பெண்களும் அழுது புலம்பியவாறு என்னை முற்றுகையிட்டனர். ஓரிரு நாள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். முடியவில்லை. ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள் பிற்பகல் நானே மாநிலப் போலீஸ் தலைமை அதிகாரி அருள் அவர்களுக்கு 'போன்' செய்தேன். "நாளைக் காலைக்குள் சிறையில் இருக்கும் மிசாக் கைதிகளைக் காண்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி அளிக்காவிட்டால் - சிறைச்சாலை வாசலில் நான் சாகும்வரையில் உண்ணா நோன்பு மேற்கொள்வேன்" என்று அவரிடம் அறிவித்தேன்.
அன்று மாலையே சென்னைச் சிறையில் உள்ள மிசாக் கைதிகளைக் காண்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு சிறையில் மாறனையும் ஸ்டாலினையும் பார்க்கக் குடும்பத்தோடு சென்றேன். மற்ற உடன் பிறப்புக்களைப் பார்க்க அனுமதி இல்லை. அப்போதுதான் தெரிந்தது மாறனுக்கு உடல் நலிவு ஏற்பட்டு, 'ஜன்னி' கண்டு-பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி! அதனால் சிறையில் ஸ்டாலினை மட்டுமே பார்த்தோம்.
ஸ்டாலினைச் சுற்றி இரண்டு சிறை அதிகாரிகள்! நான்கு சி. ஐ. டி. கள்! முழுக்கைச் சட்டை போட்டுக் கையை மூடியிருந்தான். காரணம்; அடிபட்ட காயங்கள் தெரியக் கூடாது என்பதற்காக சிறை அதிகாரிகள் உத்தரவு அப்படி! "அடித்தார்களாமே! உண்மையா?" என்று கேட்டேன். "இல்லை" என்பது போலத் தலையாட்டினான். ஆனால் கண்கள் மின்னின! "அடித்தார்கள்" என்று சொல்லியிருந்தால், மீண்டும் சிறையில் உள்ள அனைவருக்கும் அன்றே அடி விழுந்திருக்கும்.
சிறையில் சிட்டிபாபு மரண அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்றும், வீராசாமிக்கு காது கேட்கவில்லை என்றும், நீலநாராயணன் எழுந்து நடமாட முடியவில்லை என்றும் தகவல்கள் எங்களுக்கு வந்தன. மறுநாள் மாறனைக் காண பொது மருத்துவமனைக்குப் போனோம்! மருத்துவமனை அறையில் பத்துக் காவலர்கள் படுக்கையைச் சுற்றி நிற்க மாறன், ஜன்னி கண்டு படுத்திருந்த காட்சியைக் கண்டோம். ஒரு சில விநாடிகள் கூட எங்களை அனுமதிக்கவில்லை.
போலீசார் எங்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்கள். ஏனைய கழகக் கண்மணிகளையெல்லாம் காண முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்டியது. மிசா சட்டப்படி அவர்களைக் காண முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களது உறவினர்கள் அவர்களைக் கண்டு கலங்கியவாறு திரும்பினர். வெளியூர்களில் இருந்த கழகச் செயல் வீரர்களை சந்திப்பதற்கும், சிறைகளில் உள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கும், ஒரு சுற்றுப் பயணம் புறப்படத்திட்டமிட்டேன்.
அதுகுறித்து முரசொலியில் பின்வருமாறு பிப்ரவரி இறுதியில் ஒரு கடிதம் எழுதினேன். "உடன்பிறப்பே, உன்னைக் காண்பதற்கும், குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் நாளை புறப்படுவதாக இருந்தேன். இயலவில்லை. வரும் 24-ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அல்லது 25-ஆம் நாள் புதன்கிழமை புறப்படுவதாக இருக்கிறேன். மாலை, ஒலிபெருக்கி, மேடை, வரவேற்பு வளைவு-இவைபோன்ற எதுவும் இருக்கக் கூடாது; ஒலி முழக்கமோ, ஆரவாரமோ அறவே இருந்திடலாகாது.
நான் வரப் போகிறேன் என்பதற்கான துண்டு அறிக்கை விளம்பரங்களோ. சுவர் எழுத்து விளம்பரங்களோ, தட்டிகள் கட்டிடும் விளம்பரங்களோ - நிச்சயம் கூடாது! அவைகளையும் தவிர்க்க வேண்டும். நான், உன் ஊருக்கு வரும்போது பயணிகள் விடுதி கிடைத்தால் அங்கு தங்குவேன். அவைகள் கிடைப்பது கஷ்ட- மாக இருந்தால் ஏதாவது ஓட்டல் அறைகள். அதுவுமற்ற இடங்களில் இருக்கவே இருக்கிறது எப்போதும் போல் உன் இல்லம். உள்ளத்திலேயே இடம் கொடுத்திருக்கிற நீ, சற்று நேரம் தங்கிச் செல்வதற்கு இல்லத்திலா இடம் தராமல் போய் விடுவாய்?
சில இடங்களில் உன் அரிய முயற்சியினால், அயரா உழைப்பினால் கழகத்திற்கென கட்டி வைத்திருக்கிற அலுவலகக் கட்டிடங்களை இந்தச் சமயத்தில் நான் பயன்படுத்திக் கொள்ளும்போது, எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் தெரியுமா? உன்னிடம் பேசவும், கழகத்துப் பணிகளை நீ எவ்வாறு அமைதியுடன் ஆற்றிட வேன்டும் என்று எடுத்துக் கூறிடவும் தான் உன்னைக் காண வருகிறேனே அல்லாமல், கூட்டம் பேசுவதற்கு அல்லவே அல்ல! உன் திருமுகம் காணத்தான் வருகிறேனே அல்லாமல் திரளான மக்கள் சூழ் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அல்ல!
இதனை உணர்ந்து, நான் கேட்டுக்கொண்டுள்ளவாறு நடந்து கொள்வாய் என நம்புகிறேன்." என்று எழுதியிருந்தேன். இதற்கிடையே நான் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என சில காங்கிரஸ்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சருக்கும், கவர்னருக்கும் தந்தி கொடுத்தனர். கழகத்திலே உள்ள மூத்த தலைவர்கள் சிலருமே நான் அந்தப் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என தடுத்தனர், கழகத்தின் மேல்மட்டத்திலேயிருந்த ஒரு சிலர் நான் அந்தப் பயணத்தை மேற்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது கஷ்டங்கள் ஏற்படுமோ எனக் கருதி என்னைப் போகக்கூடாது எனத் தடுத்தனர்.
மற்றும் ஒரு சிலர் நான் அந்தப் பயணம் மேற்கொள்வதால் எனக்கு மேலும் சிரமங்கள் நேரிடுமோ என எண்ணி பயணம் வேண்டாமெனத் தடுத்தனர். வேறு பலர் நான் அந்தப் பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமென்று வற்புறுத்தினர். ஒரு மாலை நேரம், முரசொலி அலுவலகத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். சட்டப்பேரவைத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களும், மேலவைத் தலைவராக இருந்த சி. பி. சிற்றரசு அவர்களும் என்னிடம் தனிமையில் பேசவேண்டுமென்று வந்தார்கள்.
தலைமைக் கழக மேலிடத் தலைவர்கள் கூடிக் கலந்து பேசியதாகவும், இப்பொழுதுள்ள நிலையில் நான் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாதென்று அவர்கள் கருதுவதாகவும், அதனைச் சொல்லி எனது பயணத்தை நிறுத்துவதற்காகவே இருவரையும் அனுப்பியிருப்பதாகவும் சொன்னார்கள். "கழகத்தின் மூத்த தலைவர்களான நீங்கள் இருவரும் சொல்கிற காரணத்தால் உங்கள் பேச்சைத் தட்டக்கூடாது என்ற நிலையில் சுற்றுப் பயணத்திட்டத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன்.
அறவே ரத்து செய்ய இயலாது" எனப் புலவர் அவர்களிடமும், சி. பி. சி. அவர்களிடமும் கூறினேன். அவர்களும் அந்த அளவிற்கு நான் ஒத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து விட்டுச் சென்றார்கள். இதற்கிடையில் இலட்சிய நடிகர் நண்பர் எஸ். எஸ். ஆர். அவர்களும், எனது அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனும் மத்திய அரசின் அதிகாரிகள் வகுத்த வியூகத்திற்குள் சிக்கிக் கொண்டனர். கழகத்தில் உள்ளவர்களை; யார் யாரைக் கைது செய்ய வேண்டுமென்று ஆள்காட்டுகிற வேலையிலே பண்ருட்டி இராமச்சந்திரன் ஈடுபட்டார்.
அதுமட்டுமல்ல; கழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் அவர்களை அச்சுறுத்தி, மத்திய அரசின் அடக்குமுறைகளிலிருந்து தப்பிட வேண்டுமானால் கழகத்திலிருந்து விலகிவிடுங்கள் என்றும் எச்சரிக்கிற பணியிலே ஈடுபட்டார். கழகத்தின் மேல்மட்டத் தலைவர்கள் சிலர் கழகத் தலைமைப் பொறுப்பிலே இருந்து நான் விலகிக் கொண்டால் - கட்சிக்கு மேலும் ஆபத்து வராது என்றும், கட்சியை மத்திய அரசு தடை செய்யாமல் விட்டுவிடுமென்றும் அவர்களாகவே கூடிப்பேசி, ஒருநாள்; முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன் வீட்டில் அதுகுறித்துக் கலந்து பேசி முடிவெடுக்க என்னையும் அழைத்தனர்.
அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த எஸ். எஸ். ஆர்., "கலைஞர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவே கூடாது!" என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். ஆனால் அந்தச் செய்தி எப்படியோ மத்திய அரசின் ஒற்றர்களுக்கு எட்டி விட்டது! அன்றிரவே அவரைச் சூழ்ந்து வளைத்து, அவரது வீட்டையும் சோதனையிட்டு - அவர் கொண்டிருந்த கருத்தைக் கட்டாயப்படுத்தி மாற்றிவிட்டனர். மறுநாள் எஸ். எஸ். ஆர்., பத்திரிகைகளில் "கழகத் தலைவர் கருணாநிதி, உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலகிடவேண்டும்" என்று அறிக்கை கொடுத்தார்!
இல்லை; கொடுக்குமாறு அவரை அந்த அதிகாரிகள் செய்துவிட்டனர். நெ.-35
