உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சட்டங்கள் பட்டபாடு!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சட்டங்கள் பட்டபாடு! · 210 / 391

சட்டங்கள் பட்டபாடு! தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கழக அமைச்சரவையைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று அமுல்படுத்தும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 31-ஆம் தேதி மாலையில் மத்திய அமைச்சரவை கூடி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ், தமிழ்நாடு மந்திரிசபையை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்வதாக குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்கு பரிந்துரை செய்து, அன்று இரவு குடியரசுத் தலைவர் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவுப்படி ஒரு மாநில அரசு தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கருதினால், அந்த அமைச்சரவையை நீக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அப்போது தமிழக அரசை தொடர்ந்து நடத்த முடியாத நிலை இருந்ததா? அப்போது தமிழக சட்டப்பேரவையில் தி. மு. கழகத்திற்குப் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நிலையிலே இருந்ததா என்றால்-அப்போது கழகத்திற்கு சட்டமன்றத்திலே இருந்த இடம் மொத்தம் 234 பேர்களில் தி.மு.கழகம் 167, அ.தி.மு.க.

17, ஸ்தாபன காங்கிரஸ் 13, இந்திரா காங்கிரஸ் 7, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 5, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி 2, முஸ்லிம் லீக் 6, பார்வர்டுபிளாக் 7, சுதந்திரா 4, தமிழரசுக் கழகம் 1, சுயேச்சை 1, அவைத் தலைவர் 1, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் 2, காலியான இடம் 1. இந்த அளவிற்கு தி.மு.கழகம் பெரும்பான்மையாக இருந்த போதிலும் கழக அமைச்சரவை கலைக்கப்பட்டது. அமைச்சரவையைக் கலைத்ததோடு தமிழ்நாடு சட்டசபையையும் கலைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 31-ஆம் தேதி காலையில் காந்தி விழாவில் உரையாற்றிய கவர்னர் அதுவரையில் தனது சிபாரிசை செய்யவில்லை. அவ்வாறு சிபாரிசு செய்திருந்தால் அந்த விழாவில் அவர் தமிழக அரசைப் பாராட்டிப் பேசியிருக்கமாட்டார். மத்திய அரசின் விருப்பத்திற்கொப்ப, அங்கே தயாரிக்கப்பட்ட அறிக்கை இங்கே அனுப்பப்பட்டு கவர்னரிடம் அதற்குப்பிறகு கையெழுத்து பெறப்பட்டது. அந்த அளவிற்கு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டு, தமிழக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்காக அன்றைக்கே அவசரம் அவசரமாக இரண்டு பேர்களை கவர்னரின் ஆலோசர்களாக மத்திய அரசு நியமித்தது.

மத்திய அரசில் பெட்ரோலியம் இலாகா செயலாளராக இருந்த பி.கே.தவே அவர்களையும், மின்சார இலாகா செயலாளராக இருந்த ஆர்.வி.சுப்பிரமணியம் அவர்களையும் கவர்னரின் ஆலோசகர்களாக மத்திய அரசு அறிவித்தது. அமைச்சரவை கலைப்பு பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது நான் விடுத்த அறிக்கை வருமாறு: "தமிழ்நாட்டு மக்கள் காந்திய வழியிலும், அண்ணா வழியிலும் நிரம்ப நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே அமைதி காப்பதிலும் வன்முறைகள் ஒருசிறிதும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்வதிலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உணர்வுடன் தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஒன்பதாண்டு காலம் கழக ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக மக்களுக்கும். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." குடியரசுத் தலைவர் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த பதினான்கு நாட்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கவர்னரின் ஆலோசனையின் பேரில் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆட்சிக் கலைப்பைத் தொடர்ந்து, குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த சகோதரர் அரங்கண்ணல் அவர்களும், மாநில திட்டக்குழு துணைத்தலைவராக இருந்த கே.

ஏ. மதியழகன் அவர்களும், குடிநீர் வாரியத் தலைவராக இருந்த செ. கந்தப்பன் அவர்களும், சுற்றுலா வளர்ச்சி வாரியத் தலைவராக இருந்த ஆசைத்தம்பி அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். நானும் எனது உறவினர்களும் முப்பது கோடி ரூபாய் சொத்து சேர்த்து விட்டதாக ஒரு துண்டு நோட்டீசை அச்சடித்து போலீஸ்வேன்களிலும், ஜீப்களிலும் எடுத்துக்கொண்டு போய் ஊர் ஊராக பிப்ரவரி முதல் நாளே வினியோகித்தனர். அதற்கு நான் உடனடியாக முரசொலியில் என்னுடைய சொத்துக்களையும், உறவினர் சொத்துக்களையும், அதற்கான கடன்களையும் ஏற்றுக்கொண்டு முப்பது கோடி ரூபாய் அல்ல, முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளத் தயாரா என்றும், அந்தத் தொகையையும் கூட கழகத்திற்கு நான் அளித்திடத் தயார் என்றும் பதிலளித்தேன்.

அதற்கு யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை. கழக அரசு கலைக்கப்பட்டது பற்றி எம். ஜி. ராமசந்திரனிடம் கருத்து கேட்டபோது "தி. மு. கழக அரசு விலக்கப்பட்டது தைரியமான நடவடிக்கையாகும். இதை அ. தி. மு. க. வரவேற்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்திக்கு அ.தி.மு.க.வின் முழு ஆதரவு உண்டு" என்று கூறினார்.

234 பேர் கொண்ட அவையில் 167 பேர்களை தன்னகத்தே கொண்டிருந்த கழக அமைச்சரவையைக் கலைத்தது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல் என்று அப்போது எம்.ஜி.ஆர். கூறினார். "கழக ஆட்சியை ஏன் கலைக்க சிபாரிசு செய்தேன்" என்று கவர்னர் கொடுத்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதியன்று வைத்தார்கள்.

ஆட்சியைக் கலைத்தற்கு நாடாளுமன்றத்தில் தி.மு. கழகத்தோடு சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், இந்திய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. ஜனவரி 31-ஆம் தேதி தமிழக அரசைக் கலைத்த மத்திய அரசு பிப்ரவரி 3-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் ஆயுளை ஓராண்டு காலத்திற்கு நீடித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தைத் தாக்கல் செய்தது.

அதே பிப்ரவரி 3-ஆம் தேதி அன்று கழக அமைச்சரவை மீது விசாரணை நடத்துவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களைக் கொண்டு விசாரணைக் கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அதுபற்றி நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஓம் மேத்தா கூறும்போது, "1972-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க. தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன், தி.மு.க. அமைச்சரவை மீதான புகார்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்தார்.

மொததம் 54 புகார்கள் அடங்கியிருந்தன. அவற்றில் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிரானவை 27, மற்ற அமைச்சர்கள் மீது கூறப்பட்டவை 13, மீதி 14 புகார்களும் அதிகாரத்தை தி. மு. கழகம் தவறாகப் பயன்படுத்தியதாக பொதுப்படையான புகார்கள். இந்தப் புகார்கள் மீது நீதிபதி விசாரணை நடத்துவார்" என்று அறிவித்தார்.

அதாவது அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1972-ல் மத்திய அரசிடம் தரப்பட்ட புகார்களைத் தேடியெடுத்து அதன்மீது ஒரு விசாரணைக் கமிஷனை அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசு நியமித்தது. விசாரணைக் கமிஷன் குறித்து என்னை அபிப்பிராயம் கேட்டபோது, "கடந்த நான்காண்டுகளுக்கு முன் எங்கள் மீது கூறப்பட்ட புகார்களே இப்போதும் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கு அப்போதே பதிலளித்து அச்சிட்ட நூலாக சட்டசபையிலும் வைத்திருக்கிறோம்.

மேலும் விளக்கமான பதில்கள் சட்டசபையில் கூறப்பட்டுள்ளன. இப்போது விசாரணைக் கமிஷன் முன்பு விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதை வரவேற்கிறேன்" என்று கூறினேன். கழகம் ஆட்சியில் இருந்தவரை அதன் சுகங்களை அனுபவித்துவிட்டு, ஆட்சி கலைக்கப்பட்டவுடன் இனி இங்கிருந்தால் பயனில்லை, துன்பம்தான் என எண்ணி ஒருசிலர் கட்சியை விட்டுச் சென்றார்கள். அவர்களைப் பற்றி அப்போது முரசொலி ஏட்டில் பணியாற்றித் தன் இளம் வயதிலேயே மாண்டுவிட்ட தம்பி இளந்துறவி எழுதிய கவிதை இது: நேற்று ஒரு தலைவனின் நேர்த்தியினைக் கூறியவன் நிற்கின்ற இடம் இன்று வேறு -அவன் நிலைகெட்ட நிலையினைப் பாரு -திசை காற்றடிக்கும் நேரத்திலே தூற்றிக் கொள்ளும் நோக்கமுள்ள கயமையை விண்டு இங்கு கூறு -அந்த கயவரை சாடிமனம் ஆறு!

எச்சில் இலை போல இங்கு பிச்சையிடும் பதவிக்கு ஏங்கியவர் ஆசைமனம் தூண்ட -ஒரு இரவுக்குள் வேலியினைத் தாண்ட -மான அச்சமிலா மனிதரும் அரசியல் அரங்கத்தில் ஆடுகிற விந்தை என்ன விந்தை -அதை ஆதரிப்பார் சிந்தை என்ன சிந்தை? ஈரத்துணி உலருமுன் இடம் விட்டு இடம் தாவும் இலட்சியவாதிகளும் உண்டு -பணம் எண்ணுவதே இவர் செய்யும் தொண்டு -அந்த ஈரமிலா நெஞ்சுடையார் மாறுகின்ற காலம் வரை இங்கு இல்லை நல்லாட்சி என்று -திசை எட்டினிற்கும் கூறு வலம் சென்று!

நெருக்கடி நிலைமையின்போது மாநில சட்டசபைத் தேர்தலை மத்திய அரசு நினைத்தால் தள்ளிவைக்க அரசியல் சட்டத்தின் 152-வது பிரிவு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தி.மு.கழக அமைச்சரவை நீடிப்பதற்கு காலம் இருந்தபோதிலும், ஆட்சியைக் கலைத்த மத்திய அரசு 1970-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தல் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் மீண்டும் நடத்தியிருக்க வேண்டும். மாறாக ஆறு மாத காலத்திற்கு கேரள சட்டசபையின் ஆயுட்காலத்தை நீடித்து பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

காரணம், கேரளத்தில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அச்சுதமேனன் அரசு நெருக்கடி நிலையை அப்போது ஆதரித்த அரசாக இருந்தது. எனவே கேரளத்திற்கு ஒரு விதி, தமிழகத்திற்கு ஒரு விதி, என்று ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி குடும்பத்தினருடன் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று சென்னைக்கு வந்தார். கிண்டியில் கழக அரசு கட்டி முடித்த காமராஜர் நினைவு மண்டபத்தைத் திறந்து வைக்கவும், பிப்ரவரி 15-ஆம் தேதியன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவும் வந்தார்.

14-ஆம் தேதி மாலையில் நடைபெற்ற காமராஜர் மண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அதனை இந்திராகாந்தி திறந்து வைத்தார், திறப்பு விழாவுக்கு முன்பு அவரது ஆணைப்படி காமராஜர் நினைவுமண்டப முகப்பில் இருந்த "இராட்டை" அகற்றப்பட்டுவிட்டது. அது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் தேர்தல் சின்னம் என்பதால் அப்படியொரு முடிவெடுத்து அதனை அகற்றினார்கள். காமராஜரின் இறுதிக் கால நினைவுகள் என்ன என்பதை சஞ்சீவரெட்டி அவர்கள் பேசியதை எடுத்துக்காட்டியதன் மூலம் தெரிவித்திருக்கிறேன்.

ஆனால் காமராஜர் நினைவு மண்டபத் திறப்பு விழாவில் பேசிய இந்திராகாந்தி அம்மையார் காமராஜர் எண்ணம் என்ன என்பது குறித்து பேசியது என்ன தெரியுமா? உடல் நலம் தேறியதும் நாம் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட இறுதி முடிவெடுப்போம் என்று காமராஜர் என்னிடம் கூறினார். எங்களுடன் காமராஜர் இணைய விரும்பினார். அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் உள்ள பழைய காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருடன் வந்து இணைய விரும்பினார்.

எனவேதான் இரு காங்கிரஸ் இணைப்புக்கு கால தாமதம் ஆனது. மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு, இனிமேல் தாமதித்துப் பயனில்லை. முதலில் தமிழ்நாட்டில் இரு காங்கிரசும் இணைவோம். வருபவர்கள் பின்னால் வந்து சேர்ந்துகொள்ளட்டும் என்று எனக்குச் செய்தி அனுப்பினார். நான் இதுகுறித்து பேச சென்னைக்கு வருகிறேன் என்று கூறினேன். அதற்கு காமராஜர், நீங்கள் சென்னைக்கு வந்தால் பல ஊகங்களுக்கு இடம் கொடுக்கும்.

ஆகவே முதலில் டெல்லியில் நாம் சந்தித்துப் பேசுவோம். அதன் பிறகு சென்னை வந்தால் போதும் என்று செய்தி அனுப்பினார். இந்திராகாந்தி அம்மையார் காமராஜரின் எண்ணம் என்ன என்பது பற்றிப் பேசிய இந்தக் கருத்துக்களையும், சஞ்சீவரெட்டி தெரிவித்த கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து காமராஜரின் கடைசி கால எண்ணம் என்ன என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும்! தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததையொட்டி இரண்டு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று மேலும் இரண்டு வாரக்காலத்திற்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 1976 பிப்ரவரி மாதம் 15-ஆம் நாள்தான் சென்னையில் இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாடு பிரதமர் இந்திரா முன்னிலையில் நடைபெற்றது. இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் அவர்களைத் தலைவராகவும், மகாதேவன் பிள்ளை, கே. எஸ். ராமசாமி ஆகியோரை துணைத் தலைவர்களாகவும் அன்று அறிவித்தார்கள். கடற்கரையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசும்போது இந்திராகாந்தி தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்: "சென்னை நகரில் இனிமேல் குடிதண்ணீர் பிரச்னையை சமாளிக்க ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன்.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்கள் சென்னை நகருக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்காகவும் கிருஷ்ணா நதி மூலமாக ஐநூறு கோடி கன அடி தண்ணீர் - அதாவது மொத்தமாக 1,500 கோடி கன அடி தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இனிமேல் சென்னையில் குடிதண்ணீர் பஞ்சமே ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்."

"தி. மு. கழகத்தைத் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதனால் இந்திய அரசு-இலங்கை அரசுக்கிடையே நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார்."

இது பிரதமர் இந்திரா அம்மையாரின் கடற்கரைப் பேச்சு! இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. கொண்டிருந்த உறுதியும்கூட இந்திராகாந்தி அவர்களை அப்போதே உறுத்தியிருக்கிறது என்பதற்கு அவரது இந்தப் பேச்சு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.