உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கழக ஆட்சி கலைக்கப்பட்டது!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கழக ஆட்சி கலைக்கப்பட்டது! · 207 / 391

கழக ஆட்சி கலைக்கப்பட்டது! வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவுக்கான நாள் நிச்சயிக்கவும் விழா ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும் ஜனவரி எட்டாம் நாள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடினோம் என்பதைக் குறிப்பிடத் தொடங்கியதுமே. கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆட்சியில் திறப்பு விழா நடைபெற்ற அந்த நிகழ்ச்சிகளுக்கு என் நினைவுகள் பறந்தோடி விட்டன.

அந்த நினைவுகள் தான் கடந்த அத்தியாயம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டன. ஏப்ரல் திங்களில் இருந்து மீண்டும் ஜனவரி திங்களுக்கே வருகிறேன். என் இதயத்தில் எத்தனையோ எழுத்தாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நண்பர்களாகவும் இடம் பெற்றுள்ள சிலரில் "சாவி" ஒருவர். நெருக்கடி நிலையில் எழுத்தாளர்கள் எல்லாம் மிரட்டப்பட்டுக் கைகள் கட்டப்பட்டிருந்த போது கூட ஏப்ரல் மாதம் நடந்த வள்ளுவர் கோட்ட விழாவில் நான் அழைக்கப்படாததை உருக்கமாகச் சுட்டிக்காட்டி "தினமணி கதிர்" இதழில் எழுதிய எழுத்தாளரும் அவர் ஒருவரே யாகும்.

அவருக்கு ஜனவரி திங்கள் 29-ஆம் நாள் அறுபதாம் ஆண்டு பிறந்த நாள் விழா! அந்த விழாவுக்கு நான் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன் - ஆனால் அதற்கு முதல் நாள் சற்று உடல் நலிவு. மருத்துவர்கள் இரண்டு நாள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருந்தார்கள். அதனைக் குறிப்பிட்டு சாவி அவர்களுக்கு எனது இயலாமையைத் தெரிவித்தேன். "தாங்க முடியாத காய்ச்சலோடு சுபாஷ் சந்திரபோஸ் திரிபுரா காங்கிரசுக்குச் சென்று படுத்துக் கொண்டே தனது உரையை ஆற்றினார்" என்று சாவி அவர்கள் எனக்கு பதில் அளித்தார்.

"காய்ச்சலாக இருந்தால் நானும் வந்து படுத்துக் கொண்டே உரையாற்றி விடுவேன். ஆனால் எனக்கு வந்துள்ள நோய் அடிக்கடி தொல்லை தரக்கூடிய வயிற்றுப் போக்கா- யிற்றே!" எனக் கூறினேன். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாவி அவர்களின் அறுபதாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன். "சாவி 60" என்ற சிறப்பு மலரினை அமைச்சர் ராஜாராம் வெளியிட அதன் முதல் படிவத்தை எம். ஏ. எம்.

இராமசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். ஏ. எல். சீனிவாசன், சௌந்தரா கைலாசம், கி. வா. ஜகந்நாதன், கல்கி ராஜேந்திரன், சோ. ராமசாமி, சிவசங்கரி ஆகியோர் எனது தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் சாவியின் எழுத்தாற்றலையும், எழுத்துலக அனுபவங்களையும் புகழ்ந்து போற்றி வாழ்த்தினர். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்சரோடு பழகுகிறோம் என்றில்லாமல் அரசியல்வாதியாகவும் எழுத்தாளராகவும் இருக்கிற ஒரு நண்பரோடு பழகுகிறோம் என்ற முறையில் என்னிடம் நட்புறவு கொண்டுள்ள சாவி அவர்களின் சிறப்பியல்புகளைப் பாராட்டுவதாக அந்த விழாவில் நான் குறிப்பிட்டேன்.

எந்த நிலையிலும் நான் அவருடன் பழகிய அந்தக் கால கட்டத்தில் ஆட்சி பீடத்தில் இருப்பவனாயிற்றே என்ற எண்ணம் எங்கள் நட்புக்குக் குறுக்கே நிற்கவில்லை. அந்த விழா நிகழ்ச்சி முடிவுற்று வீட்டுக்குச் சென்றபோது இன்னும் இரண்டொரு நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டு விடக் கூடும் என்று சில நண்பர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய முகத்தில் அவர்களாலேயே மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அச்சம் பரவியிருந்ததை என்னால் உணர முடிந்தது!

அன்று வெளி வந்த முரசொலி நாளிதழில் "வீரர்கள் பின் தொடரட்டும்" என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதினேன். ஏற்றுக் கொண்ட கொள்கையைக் காத்திடவும் நிறைவேற்றிடவும் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் ஒரு சலனமும் எனக்கு ஏற்படவில்லை. இந்த அத்தியாயத்தை எழுதும்பொழுது ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையில் சிங்கள வெறியர்களாலும் இராணுவத்தினாலும் இனப் படுகொலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களைக் காப்பாற்றி அவர்களுக்குப் பாதுகாப்பு அரண் நிலையானதாக அமைவதற்காக நடைபெறும் முயற்சியில் ஒரு அங்கமாக நியூயார்க் தமிழர்கள் டாக்டர் பஞ்சாட்சரம் போன்றவர்கள் நியூயார்க்கில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்கள்.

அந்த மாநாட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும், தி.மு.கழகத்தின் தலைமைக் கழகச் செயலாள்ர்களில் ஒருவரும் மாநிலங்களவையில் இலங்கைத் தமிழர்களுக்காக வீரக் குரல் கொடுக்கக் கூடியவர்களில் ஒருவரான தம்பி வை. கோபாலசாமி அவர்களும், தலைமை நிலைய வழக்கறிஞர் டி.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., மணவைத் தம்பி ஆகிய நண்பர்களும் மதுரை ஆதின கர்த்தர் அருணகிரி அடிகளாரும் சென்றிருந்தனர்.

லண்டனில் நடைபெற்ற அதே போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பி எல். கணேன் அவர்களும் சென்றிருந்தார். அவர்கள் எல்லாம் திரும்பி வந்து என்னைச் சந்தித்த போது ஏதேதோ சிறுசிறு பொருள்களை வாங்கி வந்து எனக்குப் பரிசாக அளித்தனர். ஷேவிங் ரேசர், கிரீம், சோப்பு, அழகான குதிரைப் பொம்மை, இப்படி இருந்தன அந்த பொருள்கள். அவற்றில் எல்லாம் விலை மதிப்பற்றதாக ஒரு பொருளை வீரமணி அவர்கள் என்னிடம் வழங்கினார்.

வேறொன்றுமில்லை-ஒரு நீல வண்ணமான அட்டைதான் அது! வானத்தில் பறவைகள் பறப்பது போன்ற நிழற்படம்! அதன் கீழே இந்த வாசகங்கள்! மார்ட்டின் லூதர் கிங் அவர்களுடைய பொன் மொழி! "சுதந்திரத்திற்காக எந்த விலையும் கொடுக்கலாம். அதற்காக பதவியைக்கூட இழக்கலாம். சிறைக்கும் செல்லலாம். ஒரு பணக்கார அடிமையாக இருப்பதை விட சுதந்திரமுள்ள ஏழையாக இருப்பதே சிறப்பு. சுயமரியாதையை விட்டுவிட்டு வளத்துடன் வாழ்வதைக் காட்டிலும் கொள்கைப் பிடிப்புக்காக வறுமையில் உழன்று சாவதே பெருமையெனக் கருதுவேன்" இந்த அட்டையும் இதில் பொறிக்கப்பட்டுள்ள மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியும் 1976 ஜனவரியில் என் கைக்குக் கிட்டவில்லையென்றாலும்-ஏறத்தாழ இதே உணர்வைத் தான் பெரியாரும் அண்ணாவும் என் இதயத்தில் ஒளி விளக்காக ஏற்றி வைத்திருந்தார்கள்.

அந்த உறுதியின் வெளிச்சம் தான் அப்போது என் ஒவ்வொரு பேச்சிலும், எழுத்திலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது என்பதை இப்போதும் எண்ணி ஒரு உள்ளார்ந்த இன்பத்தில் மூழ்குகிறேன். சுதந்திரத்திற்காக எந்தத் தியாகத்திற்கும் தயார் எனத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட காந்தியடிகளின் நினைவு நாள் ஜனவரி 30-ஆம் தேதி! அன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அங்கிருந்து புறப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டப் பணிகளைப் பார்வையிடச் சென்றேன். நான் விரும்பியவாறு திருவாரூர்த் தேர் போன்ற முழுத் தோற்றமும் வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் சிலை அமையும் இடத்தில் ஏற்படுவதற்கு அந்தத் தேர் வடிவத்தில் "தொம்பை"கள் தொங்கவிடுமாறு யோசனை கூறினேன். பிற்பகல் இரண்டு மணி வரையில் அங்கேயே இருந்து கோட்டப்பணிகள் பற்றி சிற்பிகளுடன் விவாதித்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.

அன்று மாலை கவர்னர் கே.கே.ஷா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியடிகள் நினைவு நாள் - கிண்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். விழாவுக்கு ஆளுநர் ஷா அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் காந்தியடிகளைப் பற்றிய பாடல்களை இசைத்தார். விழாவில் ஆர். வெங்கட்ராமன் அவர்களும், ம.பொ.சி. அவர்களும் கலந்து கொண்டனர். "காந்தியடிகளும் அவர் அணியில் நின்று தியாகத் தலைவர்களும் பெற்றுத் தந்த சுதந்திரத்தையும் அவர்கள் போற்றிய ஜனநாயகத்தையும் எல்லாவிதமான ஆபத்துக்களிலுமிருந்தும் நாம் காத்திட வேண்டும்" என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.

காந்தியடிகளின் நினைவுநாள் விழாவில் ஜனவரி 30-ந் தேதி மாலையும், 31-ந் தேதி காலையும் உரையாற்றிய கவர்னர் கே.கே.ஷா அவர்கள்; "இந்தியாவில் காந்தியடிகளின் அடியொற்றி நடைபெற்று வருகிற ஆட்சியாகத் தி.மு.க. ஆட்சி விளங்குகிறது" எனக் கூறினார். 30-ந் தேதி காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி முடிவுற்றதும் - அருகாமையில் கட்டப்பட்டு வந்த காமராஜர் நினைவு மண்டபத்தைப் பார்வையிடச் சென்றேன். அந்த மண்டப முகப்பில் மிகப் பெரிய "இராட்டை" ஒன்று இடம் பெற வேண்டுமென்று கூறியிருந்தேன்.

அதை எங்கே, எப்படி அமைக்க வேண்டுமென்பதை யெல்லாம் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கலந்து பேசி விட்டுப் புறப்பட்டேன். மறுநாள் காலையிலும் கிண்டியில் கவர்னரும், கழக அமைச்சர்களும் கலந்து கொண்ட காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலை சென்னை டான்பாஸ்கோ பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக 5 மணி அளவில் சென்றேன். அந்த விழாவில் எம். ஏ. சிதம்பரம் செட்டியாரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

விழாவுக்கு என்னுடன் தம்பி துரைமுருகனும் வந்திருந்தார். டான்பாஸ்கோவில் ஒரு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் செய்து விட்டு, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினேன். "அநேகமாக முதலமைச்சர் என்ற நிலையில் நான் கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சியாக இது இருக்கும்" என்று எனது உரையினிடையே நான் சொன்னதும், விழாவுக்கு வந்திருந்தோர் "அப்படிச் சொல்லாதீர்கள்!"

என்று உணர்ச்சி பொங்க ஒலியெழுப்பினர். மாலை ஆறரை மணி அளவில் விழா முடிவுற்றது. நானும் துரைமுருகனும் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டோம். வீட்டு வாசலில் இறங்கி உள்ளே செல்வதற்குப் படியேறுவதற்கு முன்பே எனது மருமகன்கள் அமிர்தம், செல்வம் இருவரும் கையில் ஒரு துண்டுத் தாளை வைத்துக் கொண்டு சிரித்தவாறு "ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்" என்றனர்! செய்தி நிறுவன இயந்திரத்தில் அடிக்கப்பட்ட செய்தி தான் அது!

"அப்பாடா! சஸ்பென்ஸ் முடிந்தது!" என்று கூறிக் கொண்டே, தெருப்பக்கம் திரும்பிப் பார்த்து, நான் பயன்படுத்திக் கொண்டிருந்த அரசாங்கக் காரை உடனே தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று விடுமாறு சொல்லி விட்டு மாடிக்குச் சென்றேன். என்னிடம் பணியாற்றிய தனி அலுவலர்கள் கண்ணீர் வடித்துக் கதறியழுதனர். "சே! இது என்ன; பைத்தியக்காரத்தனம்! தைரியமாக இருங்கள்!"

எனக் கூறி விட்டு அந்த நல்ல செய்தியை நண்பர்களுக்குச் சொல்ல "டெலிபோனை" எடுத்தேன்! என்ன ஆச்சரியம்! அதற்குள் என் டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. சில நிமிடங்களில் எப்படித்தான் செய்தி சென்னை முழுவதும் பரவியதோ தெரியாது - வீட்டு வாயிற்புறத்தில் ஆயிரக் கணக்கானோர் அழுது புலம்பியவாறு கூடிவிட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவது அன்றிரவு முழுவதும் பெரும் வேலையாகி விட்டது. இரவு எட்டு மணியிருக்கும் - அதற்குள்ளாக முதலமைச்சர் பந்தோபஸத்துக்கு என்றிருந்த போலீசார் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டனர்.

என்னுடைய துணைவியர்கள் தயாளுவானாலும், ராஜியானாலும் எவ்விதக் கலக்கமுமின்றி மிகச் சாதாரண நிகழ்ச்சியாக அதனை எடுத்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் என் சகோதரிகள், பிள்ளைகள். பெண்கள், மருமகன்கள், எல்லோருமே அதனை ஒரு திடுக்கிடத் தக்க நிகழ்ச்சியாகக் கருதவில்லை. அதனால் அவர்கள் உள்ளத்தைக் கடுகளவு வேதனையும் தீண்டவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஒரு விழா நிகழ்ச்சி போல எண்ணிக் கொண்டிருந்தோம்.

"போலீஸ் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்; உங்களைப் பார்க்க வேண்டுமாம்" என்று வீட்டில் நீண்டகாலமாகப் பணியாற்றும் செயல் மணி ஓடி வந்து சொன்னான். கைது செய்ய வந்திருப்பது போல் தெரிகிறது என்றும் கூறினான். 'வரச்சொல்' என்றேன்! வந்தார்கள் போலீஸ் அதிகாரிகள்! "என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?"

எனக் கேட்டேன். "இல்லை! உங்களை இல்லை" என ஒரு அதிகாரி அழுது காண்டே சொன்னார். "யாரைக் கைது செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். "உங்கள் மகன் ஸ்டாலினை!" என்று கூறினார்கள்; தழுதழுத்த குரலில் கண்ணீர் சிந்தியவாறு! "அவன் ஊரில் இல்லையே - நாளை மாலையில்தானே வருவான்" என்றேன். "வீட்டில் இருக்கிறாரா? என்று "சர்ச்" செய்து பார்க்கும் படி உத்திரவு!"

என்றார்கள். "தாராளமாகச் 'சர்ச்' செய்யுங்கள்" என்றேன். அவர்கள் தங்கள் கடமையைச் செய்தார்கள். வீட்டில் ஸ்டாலின் இல்லை! அவர்களை வெறுங்கையுடன் அனுப்புவது எனக்கு என்னவோ போலிருந்தது-அதனால் அவர்களைப் பார்த்து "வேண்டுமானால் நாளைக்கு என்னைக் கைது செய்வதை, இப்போதே செய்து கொண்டு போங்களேன்" என்றேன். மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுப் போலீசார் புறப்பட்டனர். ஆட்சிப் பொறுப்பு பறி போன ஓரிரு மணிநேர இடைவெளியில் இத்தனை நிகழ்ச்சிகள்!