உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இந்தியாவில் இரு தீவுகள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இந்தியாவில் இரு தீவுகள் · 206 / 391

இந்தியாவில் இரு தீவுகள் "நா டாளுமன்றத் தேர்தலை ஓராண்டிற்கு ஒத்திப்போட வேண்டும் என்று சண்டிகாரில் நடைபெறும் இந்திரா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பற்றி கருத்து என்ன?" என்று கோவை ரயில் நிலையத்தில் நான் புறப்படும் போது என்னைச் சந்தித்து நிருபர்கள் கேட்டார்கள். "எனது கருத்துக்களை நேற்றைய மாநில மாநாட்டில் விளக்கமாகக் கூறியுள்ளேன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் அந்தத் தீர்மானத்தை எந்த நிலையில் - பாரபட்சமற்ற முறையில் பாராளுமன்றம் அணுகுகிறது என்பதை ஜனநாயகத்தில் பற்றுள்ள அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இது இந்தியாவைப் பொறுத்த எதிர்பார்ப்பாக மட்டுமல்லாமல், அகில உலக அரசியல் அரங்கின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. எனவே, நாடாளுமன்ற முடிவினைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று அதற்கு நான் கருத்து தெரிவித்தேன். கோவை மாநில மாநாட்டை முடித்துவிட்டு சென்னை வந்ததும், அன்றைய காலை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு கோவை மாநாட்டைப் பற்றி "கோவையில் தி. மு. கழகம் நடத்திய ஐந்தாவது மாநில மாநாடு சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது பெரிய அரசியல் மாநாடு" என்றும், "மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுகிழமையன்று மதிய உணவிற்கான இடைவேளை விடப்படவில்லை.

மாநாட்டுப் பந்தலுக்குள் மக்கள், காலை 10 மணி முதல் சுமார் பன்னிரண்டு மணிநேரம் அமர்ந்திருந்தனர்" என்றும் எழுதியிருந்தது. இரண்டாவது பெரிய மாநாடு என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடக் காரணம், அகில இந்திய அளவில் ஆவடியில் 1955-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டைச் சேர்த்து குறிப்பிட்டதாகும். 1976-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று நாடாளுமன்ற கழக உறுப்பினர்களின் கூட்டம் நாடாளுமன்றத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக சென்னையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு :- "திராவிட முன்னேற்றக் கழகம் 1957 முதல் சட்டப் பேரவையிலும், சட்டமன்றத்திலும் (மேலவை), நாடாளுமன்றத்திலும், மாநிலங்கள் அவையிலும் எதிர்க்கட்சியாசச் செயல்பட்டு 1967 முதல் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகும். எதிர்க்கட்சியாக தி. மு. கழகம் செயல்பட்ட போது டெல்லியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, பாராளுமன்ற முறை ஜனநாயகத்திற்கு ஒருசிறிதும் பழுது ஏற்படாத வகையில் ஆட்சியின் முற்போக்குத் திட்டங்களை வரவேற்றும் குறைகளை, குற்றங்களைக் கண்ணியத்துடன் சுட்டிக்காட்டியும் தன்னுடைய கடமையை ஆற்றி வந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் கழக நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம், தனது எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டுமென்று விவாதித்தது. இன்றுள்ள அரசியல் நிலை குறித்து கழகம் தனது கருத்தைத் தொடர்ந்து ஆட்சி மன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளது. மேலும் நமது கழகத்தின் கருத்தை நமக்கே இயல்பான அரசியல் பண்பாட்டுடன், நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டங்களில் எடுத்து வைப்பது என்றும் - பாராளுமன்றத்தில் எழுகின்ற பிரச்சினைகளின் அடிப்படையில் உடன்பாடுள்ள மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புடன் கருத்துக்களைத் தெரிவிப்பது என்றும்-கழகத்தின் கொள்கைகளை, இலட்சியங்களைப் பொறுத்து தமது தனித்தன்மையை எப்போதும் போல் கட்டிக்காத்து வருவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநில மாநாட்டில் நான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு-'தமிழகம் குடியரசு தலைவர் ஆட்சியை விரும்பவில்லை; தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தி அனுப்பப்பட்டன.

அந்தத் தந்திகளின் குவியல்கள் பிரதமர் அலுவலகத்தை அசைத்தன. நெருக்கடி நிலை காரணமாக மத்திய அரசினருக்கும் கழகத்திற்கும் இடையே உறவு குலைந்து எந்த நேரத்திலும் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற நிலைமை. அப்போது கூட 6-1-76-இல் நான் முரசொலியில் உடன்பிறப்பிற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தேன். "அமைப்பு ரீதியான கழகம்; ஆடை அணிந்துள்ள உடலைப் போல! அதில் ஆவி நிகர்த்தது கொள்கை; பதவி என்பது அணிகலன்; அணிகலன் இன்றி வாழ முடியும்; கொள்கை இல்லையேல் ஆவி இல்லை; ஆடையில்லையேல் மானம் போகும்!"

அன்றைய தினம்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கூட இந்திரா காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். காமராஜரின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டு பிரிவாகப் பிரிந்த நிலையில் ஒரு பிரிவினர் இந்திரா காங்கிரசுடன் சேர்ந்து பயனடைய வேண்டுமென்று நினைத்தனர். இன்னொரு பிரிவினர் காமராஜரின் விருப்பப்படியே தாங்கள் தனித்தன்மையுடன் ஒதுங்கியிருக்க வேண்டுமென்று எண்ணினர் என முன்பே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா; அந்தப் பிரிவினரை இந்திரா காங்கிரசுடன் சேர்க்கவொட்டாமல் நான் தான் தடையாக இருக்கிறேன் என்ற எண்ணம் இந்திரா காங்கிரசில் உள்ளவர்களுக்கு!

அதன் காரணமாக எப்படியாவது தமிழக ஆட்சியைக் கலைப்பதற்காக அவர்கள் படாதபாடுபட்டனர். டெல்லிக்கு தூதுமேல் தூது சென்றனர். கழக ஆட்சியைப் பற்றியும், கழகத்தைச் சேர்ந்த ஒருசில உள்ளூர்ப் பேச்சாளர்கள் பேசுவதையெல்லாம் பெரிதுபடுத்தியும் பிரதமரிடம் சென்று ஒன்றுக்குப் பத்தாய் கூறினர். இரண்டு காங்கிரசும் இணைவதற்கு நான்தான் தடை என்று கூறினர். இதன் விளைவாக நாடாளுமன்றத்தில் ஒருநாள் 1976-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் மத்திய அமைச்சர் ஓம்மேத்தா அவர்கள் தமிழகத்தில் கழக அரசு மற்ற கட்சிகள் கூட்டம் நடத்தவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பைத் தடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அது பற்றி மறுநாளே செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து எனது கருத்தை கேட்டனர். நான் அந்தக் கருத்தை மறுத்து பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும், தமிழ் நாட்டில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கட்சிகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளின் கூட்டமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்றும் பதில் கூறினேன். 'ஓம்மேத்தா அவர்கள் காங்கிரசின் உள்கட்சிப் பிரச்சினைகளில் தி.

மு. கழகம் தலையிடுகிறது என்று பேசியிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இன்னொரு கட்சியின் பிரச்சினைகளில் தலையிட வேண்டிய அவசியம் தி. மு. கழக அரசுக்கோ தி. மு. கழகத்திற்கோ என்றைக்கும் இருந்ததில்லை என்று அதற்கு நான் பதில் கூறினேன். 8-1-76 அன்று தலைமைச்செயலகத்தில் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை பெப்ரவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பாக நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டு, அந்தச் செய்தி பத்திரிகைகளுக்கும் தரப்பட்டது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற ஒரு விவாதத்திற்கு குறுக்கிட்டுப் பதிலளித்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் இந்தியாவில் கட்டுப்பாடற்ற இரண்டு தீவுகள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். கழகம் ஆட்சிபுரிந்த தமிழ் நாட்டையும், ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த குஜராத் மாநிலத்தினையும் மனதில் கொண்டுதான் அவர்கள் அவ்வாறு தெரிவித்தார்கள். இந்தக் குற்றச்சாட்டைப்போலவே, பிரதமர் அவர்கள் நபர்வாரி திட்ட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

அதற்கும் நான் விவரமாக, திட்டங்களுக்கு மத்திய அரசு தந்த உதவி போதுமானதல்ல என்றும், சொந்த முயற்சியால்தான் தமிழக அரசு மேலோங்கி நிற்கிறது என்றும். 1965-66-ஆம் ஆண்டில் நபர்வாரி வருமானத்தில் ஏழாவது இடத்திலிருந்த தமிழகம் அப்போது நான்காவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு நீண்ட விளக்கமான பதிலை அளித்தேன். தமிழகத்திலும் குஜராத்திலும் நடைபெற்ற ஆட்சிகள் "எமர்ஜென்சி"யை ஏற்காத கட்சிகளின் தலைமையில் இருந்த ஆட்சிகள் என்பதால் மத்திய அரசின் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக நேர்ந்தது என்பதுதான் உண்மை.

குஜராத்தின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பாபுபாய் படேல் அவர்களும் நானும் கலந்து கொண்ட காமராஜர் சிலைத் திறப்புவிழா வடசென்னையில் 20-1-76 அன்று நடைபெற்றது. அந்த விழாவிலே பா. ராமச்சந்திரன், பி. ராமமூர்த்தி, குமரி அனந்தன், வி. தண்டாயுதபாணி, டாக்டர் சந்தோஷம், அரு. சங்கர், கே. ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியும் மத்தியில் இருந்த இந்திரா காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு ஆத்திரத்தை அதிகமாக்கிற்று.

எனவே, தமிழக அரசைக் குற்றஞ்சாட்டி, பிரதமரும், மத்திய அமைச்சர்களும் ஏதாவதொன்றைச் சொல்லுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வழியில் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்தரெட்டி 'மிசா' சட்டத்தை குறிப்பிடாத காரியங்களுக்கெல்லாம் தமிழகத்தில் பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். அது குறித்தும் நிருபர்கள் என்னிடம் கருத்து கேட்டனர். "எது எதற்கு 'மிசா' சட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று குறிப்பிட்டு, மத்திய அரசிடமிருந்து வந்த தாக்கீதுபடி தமிழக அரசால் 'மிசா' சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

உணவுக் கலப்படம், பதுக்கல் வியாபாரிகள் மீது 'மிசா' சட்டம் உபயோகப்படுத்தப்படுகிறது. அதைப்போன்றசமூகக் குற்றவாளிகள் என்று கருதப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் பேர்வழிகள் 150க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் கட்சி சார்பற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மிசா சட்டத்தைப் பயன்படுத்தி; கள்ளச் சாராயம் காய்ச்சியதாகக் கைதான கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசு எங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்" என்று நான் பதில் கூறினேன்.

நிருபர்கள் தொடர்ந்து, "மத்திய அரசுக்கு எதிரான, 'அனாமதேய'த் துண்டுப் பிரசுரங்கள் தமிழ் நாட்டில் பிரசுரிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரம்மானந்தரெட்டி கூறியிருக்கிறாரே?" என்று கேட்டனர். அதற்கு நான், "அவரே அதை 'அனாமதேயத்' துண்டுப் பிரசுரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட அனாமதேயத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்" என்று பதில் கூறினேன்.

அரசியல்வாதிகளைக் கைது செய்யவேண்டும்; கடத்தல் காரர்களையும், கள்ளச் சாராயப் பெரும் வியாபாரிகளையும் கைது செய்யக்கூடாது என்ற மத்திய இந்திரா அரசின் உத்தரவு சமூக விரோதிகளை அடக்கவே 'எமர்ஜென்சி' கொண்டு வரப்பட்டது என்ற இந்திராகாந்தியின் வாதத்தை வலுவிழக்கச் செய்தது. அவசர நிலைமைக்குப் பிறகு கைதாகி காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று பிரதமரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒரு தேதி குறிப்பிட்டுச் சொல்வது கடினம்.

முதலில் அந்தத் தலைவர்கள் வன்முறைகளைக் கைவிடுவார்கள் என்பது உறுதியாக வேண்டும். அதன்பின்னரே அடுத்த நடவடிக்கைகளைச் சிந்திக்க இயலும்" என்று கூறினார். அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பரூவா அவர்கள் பம்பாயில் சிவாஜி பூங்காவிலே பேசும்போது "பிரதமர் இந்திராகாந்தி ஆர். எஸ். எஸ். இயக்கத்தைத் தடை செய்து விட்டார். தி. மு. கழகமும் ஒழுங்காக நடக்காவிட்டால் அதற்கும் அதே கதி நேரலாம்". என்று கூறினார்.

அதே பரூவா அவர்கள் டெல்லியிலே பேசும்போது "மத்திய அரசுதான் தேசிய அரசு, இந்தியாவின் மெட்ரோ பாலிடன் அரசு; மற்ற மாநில அரசுகள் எல்லாம் முனிசிபல் அரசுகளே" என்று கூறினார். வையம் புகழ் வள்ளுவர் கோட்டம் 1976 - ஆண்டு ஜனவரித் திங்கள் இந்திய நாட்டு வரலாற்றிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற காலகட்டங்களில் ஒன்றாகும். அந்தத் திங்கள் கடைசி நாள் மாலையில்தான் கழக ஆட்சி கலைக்கப்பட்டது என்ற செய்தியை எனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த செய்தி நிறுவனத்தின் இயந்திரம் ஆங்கிலத் தட்டச்சு எழுத்துக்களின் மூலம் வழங்கியது.

ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றின் காரணமாக நெருக்கடி நிலையை எதிர்த்தமைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்திராகாந்தி அம்மையாரின் அரசு தந்த தண்டனை அது! ஆனால் கழகமோ அதனைக் களத்தில் பட்ட விழுப்புண்ணாகத் தான் கருதிக்கொண்டது. கழக வரலாற்றில் ஒரு மாபெரும் சோதனைக் கட்டத்தையும், அடக்குமுறைகளைத் தாங்கும் உச்சக் கட்ட நிலையையும், இழித்தும் பழித்தும் அழித்துவிடத் துணிந்த மத்திய அரசினரின் கொடுமைகளை உறுதியோடு சந்திக்கும் சந்தர்ப்பத்தையும் அந்த ஜனவரி 31 -ஆம் நாள் மாலை நேரம்தான் தொடங்கி வைத்தது என்று கூறலாம்.

அந்த வேளை வருவதற்கு முன் அந்த மாதத்தில் உருண்டோடிய நிகழ்ச்சிகள் சிலவற்றை நினைவுகூர்தல் வேண்டாமா? கன்யாகுமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரேயுள்ள மற்றொரு பாறையில் 75 அடிஉயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றினை, பத்து லட்ச ரூபாய் செலவில் வைப்பது எனக் கழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவு ஜனவரி முதல் நாள் ஏடுகள் மூலம் அறிவிக்கப்பட்டது. கழக ஆட்சியின் அந்தத் திட்டம் உடனடியாகச் செயல்படத் தொடங்கியும்கூட இதுவரையில் நிறைவேறவில்லை.

ஆனால் எனது உள்ளத்து உன்னத குறிக்கோள்களில் ஒன்றாக இருந்த வள்ளுவர் கோட்டத்தின் வேலைகள் அனைத்தும் முற்றுப் பெற்று அதன் திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும், விழா எத்தகைய சிறப்புடன் தமிழ்த் திருவிழாவாக நடைபெற வேண்டுமென்ற திட்டங்களைத் தீட்டவும் ஜனவரி 8 - ஆம் நாளன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான், நாவலர், பேராசிரியர், ப. உ. சண்முகம், மாதவன், ராஜாராம், ராமச்சந்திரன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், ஏ.வி.

மெய்யப்ப செட்டியார், ஏ. எல். சீனுவாசன், எம். எம். ஏ. சின்னப்பாதேவர், நகர ஷெரீப் ராம கிருஷ்ணன், துணை ஷெரீப் சரவணன், கே. வி. சீனுவாசன், திரையரங்க உரிமையாளர் சார்பில் ராஜகோபால் செட்டியார் ஆகியோர் கலந்துகொண்டு வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவுக்கான திட்டங்கள் வகுத்தோம். பிப்ரவரி திங்கள் 22, 23 ஆகிய நாட்களில் அந்தத் திறப்பு விழாவைக் கழக அரசு முன்னின்று நடத்துவதென நாள் குறிக்கப்பட்டது. திருக்குறள் சுவடி பொறித்த வண்ணக்கொடியினை ஏந்திட திருக்குறளில் உள்ள 1,330 பாக்களை விளக்கும் வகையில் - 1,330 மாணவர்கள், 1,330 மாணவிகள், 1330 ஆசிரியர்கள், 1,330 ஆசிரியைகள் அந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வார்கள்.

திருக்குறளின் முப்பாலை எடுத்துக் காட்டும் வகையில் தஞ்சை முத்துப் பல்லக்குகள் மூன்றில் திருக்குறள் சுவடி வைத்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும். ஊர்வலத்தின் முகப்பில் 13 யானைகளும்-133 குறள் அதிகாரங்களை விளக்கும் வகையில் 13

3 குதிரைகளில் வீரர்களும் அமர்ந்து செல்வார்கள். அலங்கார வண்டிகளில் திருக்குறள் சிற்பங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள், பொய்க்கால் குதிரை, நாதஸ்வரக் கச்சேரிகள் போன்றவை இடம் பெறும் என்றும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை கழக அரசு நிறைவேற்றுவதற்கு முன்பு ஜனவரி 31 மாலையிலேயே கலைக்கப்பட்டு விட்டது.

அரசியல் சூழ்நிலையின் காரணமாக எஞ்சியிருந்த அதனுடைய அமைப்புப் பணிகளும், அதன் திறப்பு விழா நிகழ்ச்சியும் அறவே நின்றுவிடுமோ என்று தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் கவலைப்பட்டன. ஆனால் 1976 - ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் என்ற செய்தி வந்தது. "கோட்டம் திறக்கப்படுகிறது. குறளோவியம் தீட்டப்படுகிறது" என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவான 15-4-76 அன்று நான் "கடிதம்" எழுதியிருந்தேன்.

"இன்று எழுதுவது பெரிய கடிதம்" என்று தொடங்கி எழுதப்பட்ட கடிதம் அது! "சில குறிப்புகள் "சுயபுராணம்" போல் தோன்றக்கூடும். இப்போது அந்தக் குறிப்புக்கள் தேவையோ இல்லையோ, எதிர்காலத்துக்கு நிச்சயம் தேவைப்படும். எனவே இந்த மடலில் என்னைப்பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்" என்ற வேண்டுகோளுடன் நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இதோ: உடன்பிறப்பே, இன்று சென்னையில் ஒரு விழா!

திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா! கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய்-காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்-மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்-நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்-எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.

மாசறு பொன்னாக, வலம்புரிமுத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால் உலகப்பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான்-மகிழ்வான்-தகதகவெனக் குதிப்பான்-தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம்-தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ? ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ் மறைக்கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் நிகழ்கின்றது.

இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள்தானே இந்த நாள்! "கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்று இடைக்காடர் கூற, "அல்ல! அல்ல! அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த குறள்" என்று ஒளவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா!

புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா! கோட்டம் திறக்கப்படுகிறது! குறளோவியம் தீட்டப்படுகிறது. "தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். தரணி எங்கும் பரவிட வேண்டும், மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்படவேண்டும். அந்த மறுமலர்ச்சி, தமிழுக்கு ஏற்படத்தான், தி. மு. கழகம் ஆட்சி பீடம் ஏறிட விரும்புகிறது" என 1967 விருகம்பாக்கம் மாநாட்டில் அறிஞர் அண்ணா முழங்கியதை அவர் மறைவுக்குப் பிறகும் மறந்தோமில்லை என்பதற்குச் சான்று பகரும் வகையிலேதான் தில்லையாடியில் வள்ளியம்மை நகர் உருவாக்கினோம்.

புதிய பூம்புகார், வாழ்ந்த தமிழகத்தின் வரலாற்றுச் சின்னமாக எழுந்து நிற்கிறது. அன்னியரை எதிர்த்த அடலேறு கட்டபொம்மனுக்கு நினைவுக் கோட்டை கம்பீரமாகக் காட்சி தருகிறது. காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஓர் ஆலயம். கலனாகிக் கிடந்த மயிலை வள்ளுவர் கோயிலுக்குப் புதிய திருப்பணி. நுங்கம்பாக்கத்தில் உலகோர் கவனத்தைத் திருப்பும் வண்ணம் ஒப்பற்ற வள்ளுவர் கோட்டம். உடன்பிறப்பே, இவைகளை எல்லாம் நினைக்கிறேன்.

நெஞ்சு இனிக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். தேன் பாய்கிறது, 'இதயமெனும் கழனியிலே! உயிர், தமிழுக்கு எனும் உறுதிப்பயிர் விளைகிறது! களைகளுக்கு இங்கு இடமில்லை என்ற திடமும், தெம்பும் பிறக்கிறது.' ஆகா! அதோ! அதோ! வள்ளுவர் கோட்டத்துத் தேரின் உச்சியிலே நானும் நாவலரும் இணைந்து கலசத்தை ஏற்றி வைக்கும் உணர்ச்சிமிகு காட்சி! மனத்திரையில் நிலைத்து நிற்கிறது. கோட்டம் திறந்திட வருகிறவர் குடியரசுத் தலைவர். நமது அன்புக்குரியவர்!

மேன்மை தங்கிய பக்ருதீன் அலி அகமது அவர்கள். வள்ளுவர் கோட்டத்தை அவரது திருக்கரங்களால் திறக்கிறார் என்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்ற போது என்னைச் சந்திக்கக் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார். அந்தப் பெருமகனாரின் பாதம்பட்ட என் வீட்டுப் படிக்கட்டுகள், மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோடி பங்கு அதிக மகிழ்ச்சியை இன்று நான் அடைகிறேன், அவர் அவர் கோட்டம் திறக்க வருவது கண்டு!

திறப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறவர், தமிழ் மக்களிடத்தில். ஐந்தாண்டுக் காலம் இரண்டறக் கலந்து பழகிடும் வாய்ப்பினைப் பெற்ற தமிழக ஆளுநர் கே. கே. ஷா அவர்களாவார்கள். அவர்கள் மனந்திறந்து பேசக்கூடிய பண்பாளர். தன் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்களான "கே. கே" என்பதைக்கூட "கலைஞர் கருணாநிதி ஷா" என்றும் இன்பம் பொங்கிடக் குறிப்பிட்டுத் தனது பாச உணர்வை என்மீது பல நேரங்களில் மழையாகப் பொழிந்தவர்.

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்" என்ற குறள் நெறிக்கேற்ப, ஆளுநர் அவர்கள் தலைமை ஏற்பதும் மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறப்பு விழா நடத்துவதும் சாலப் பொருத்தமுடையதாகும். என் இனிய உடன்பிறப்பே! "இன்றைய செய்தி நாளைய வரலாறு" என்பதும் வெறும் சொல்லழகுக் கோவையல்ல. செய்திகள்தான் வரலாற்று வரிகளாக மாறுகின்றன. என்றாலும், எல்லாச் செய்திகளும் வரலாறாக ஆகிவிடுவதில்லை.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதால் எல்லாக் குழந்தைகளுமே தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒன்று, குழந்தைகள்தான் தலைவர்களாகிறார்கள். நாட்டு விடுதலைக்காக வனப்புமிகு வாலிபத்தைப் பல ஆண்டுக் காலம் சிறைக்கோட்டங்களில் தியாகத் தீயில் கருக்கிக் கொண்ட மாவீரர் பண்டித நேரு அவர்கள், மண் மீட்கும் போரிலே களத்தில் நின்றபோது மகாத்மாவின் மடியில் தவழ்ந்த இளங்குழந்தை இந்திராதான் இன்றைய இந்தியத் திருநாட்டின் தலைமை அமைச்சர்!

நெ.-33 நமது ஆளுநர் அவர்கள் கல்விக்கூட விழாக்களில் உரையாற்றும்போது உற்சாகம் மேலிடக் குறிப்பிட்டது எனக்கும் உனக்கும் கூட நன்றாக நினைவிருக்கிறது. "சிறுமிகளே, நீங்கள் எல்லாம் இந்திராகாந்தி போல எதிர் காலத்தில் ஆகவேண்டும். சிறுவர்களே, நீங்கள் எல்லாம் கருணாநிதி போல், காமராஜர் போல் ஆகவேண்டும்" என்று பலத்த கையொலிக்கிடையே கூறுவார்.

என்னைத் தலைவர்கள் வரிசையில் சேர்த்தார் என்பதற்காக இதைக் குறிப்பிடவில்லை. நான் கிடக்கிறேன், சாதாரணமானவன்; என்னை விட்டு விடு! இந்திய நாட்டுப் புகழ்மிக்க பிரதமர் இந்திராகாந்தி போலவும், தியாகச்சுடர் காமராஜர் போலவும் எதிர்காலத்தில் குழந்தைகள் ஒளி விட்டுத் திகழ வேண்டும் என்பது போலத்தான் இன்றைய செய்திகளும் நாளைய வரலாறுகளாக மாறிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். செய்திகள், குழந்தைகளைப் போல!

வரலாறுகள், தலைவர்களைப் போல! ஒரு சாராருக்கு களிபேருவுவகை வழங்கும் செய்தி, மற்றொரு சாராருக்கு மாறாக மனநோயைத் தரவல்ல தாகவும் விளங்கிடக்கூடும். இன்று 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் வியாழக்கிழமை! இந்த நாளில் சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்படுகிறது. இது செய்தியா? வரலாறா? என்று கேட்டால் அதற்குத் தெளிவாகக் கிடைக்கக்கூடிய பதில் "வரலாற்றுச் செய்தி" என்பதுதான். இப்படி ஒரு கோட்டம் அமைத்திடும் எண்ணம் எவ்வாறு எழுந்தது தெரியுமா?

பூம்புகார் உருவாக்கியதும், பாஞ்சாலக்குரிச்சி கண்டதும், புதிய எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதும் உணர்ந்த நல்லோர் சிலர், மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற முறையீடொன்றைத் தந்தனர் என்னிடம்! மறுநாளே நானும் அறநிலைய அமைச்சர் கண்ணப்பனும் மயிலைக்குச் சென்றோம். கோயிலைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது. அதற்கென கருத்துரை வழங்கிட குழு ஒன்றும் உருவாக்கப் பட்டது.

இதற்கிடையே அந்தக் கோயிலை அன்னியில் நகரில் நடுப் பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசையும் தோன்றியது. அதுபற்றி விவாதித்தோம். பெரிய அளவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாக அந்தக் கோட்டம் அமைய வேண்டுமென விரும்பினோம். பூம்புகார் கலைக்கூட பணிகளை முன்னின்று நடத்திய சிற்பி கணபதி ஸ்தபதியாரிடம் கோட்டம் பற்றிய விவாத அரங்குகளைத் தொடர்ந்து நடத்தினோம். கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும், வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான "கோணல்மாணல்" கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன்.

நான் வரைந்து காட்டிய வள்ளுவர் கோட்ட அமைப்புச் சித்திரம் கோணல் மாணல் கோடுகளாக இருந்தாலும் அடிப்படை எண்ணத்தைப் புரிந்துகொண்டு அதனைத் திருத்தியமைத்து சிற்பிகளும், அரசு அதிகாரிகளும் வேலைகளைத் தொடங்கினர். இடையில் பணிகள் விரைவில் முடிவுற வேண்டி ஸ்தபதியார் எஸ். கே. ஆச்சார் அவர்களும் இணைத்துக் கொள்ளப் பட்டார். அவர்தான் குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத்தக்கவண்ணம் வடித்துத் தந்தவர்.

குமரி முனையில் கோயில் எழுப்பிய சிற்பியும் காவிரி கடலோடு கலக்குமிடத்தில் பூம்புகார் எழுப்பிய சிற்பியும் சேர்ந்து வழங்கும் சிறப்புமிகு கோட்டம்தான் சீர்சால் வள்ளுவர் கோட்டம். சிற்பக் கலைக்கு உயிரூட்டும் கழக அரசை அந்த இரு சிற்பிகளுமே பெரிதும் பாராட்டியுள்ளனர். "எத்தனையோ அற்புத சிற்பங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய கதையையே தொடர்ச்சியாக சிற்பங்களில பூம்புகாரில் வடிக்கச் செய்த அரசு, இந்த அரசுதான்" என்று கழக அரசை கணபதி ஸ்தபதி பாராட்டினார், "பூம்புகார் பெருந்தச்சன்" என்ற விருதினை மாமல்லபுரத்தில் எனக்கு சிற்பிகள் வழங்கிய விழாவில்!

"பழைய காலத்தில் எத்தனையோ மன்னர்கள் கலையைப் பேணி வந்திருக்கிறார்கள். கோயில்களையும் மண்டபங்களையும் கட்டும்படி சிற்பிகளை அவர்கள் தூண்டியிருக்கிறார்களே தவிர யாரும் தனது வாழ்நாளில் இப்படி ஒரு கல்தேரை பிரம்மாண்டமாக உருவாக்கும்படி கூறியதில்லை" என்று ஸ்தபதி எஸ்.

கே. ஆச்சார், ஒரு பத்திரிகை பேட்டியில் கருத்து வெளியிட்டார். நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு அளித்த திட்டங்கள்தான் இவைகள். அதே நேரத்தில் தமிழ்மொழியின் மேன்மையை - கலாச்சார மாண்பை நிலைநிறுத்தும் பணியுமாகும். பாரதியின் பாட்டாக, பாரதிதாசனின் கவிதையாக, பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரையாக, மொழி பெயர்ப்புக்களாக வடிவு கொண்டிருந்த வள்ளுவருக்கு இதோ கோட்டம் அமைத்து விட்டோம்.

வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டுக்கு வரலாற்றுப் புகழ் கொண்ட வள்ளுவர் கோட்டம்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த எழில்மிகு கோட்டத்தை நானும் நாவலரும் அமைச்சர்கள் சிலரும் சென்று சென்று பார்த்து வந்தோம். கோட்டத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கல்லும் எங்கள் கவனத்திலிருந்து தப்பியதில்லை. காலம், யாருடைய காலடியிலும் அடிமைப்பட்டுக் கிடக்கவில்லை. அது ஒரு காற்று! பல திசைகளிலும் வீசும் ஆற்றல் பெற்றது!

அப்போது புரியும் அவர்களுக்கு சரித்திரத்தின் வல்லமை. மீண்டும் நமது ஆளுநர் அவர்களின் சொற்பொழிவுக் குறிப்பு ஒன்றையே நான் நினைவுகூர்ந்திட விரும்புகிறேன். "கருணாநிதி அவர்களே! தாங்கள் ஒரு உண்மையை உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். கீழ்த்தளத்திலிருந்து ஒரு மனிதன், மிக உன்னத நிலைக்கு வரமுடியுமென்று காட்டியதற்காக எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அரசியல்வாதிகள் இடையில் மறைந்துவிடலாம்.

ஆனால் எழுத்தாளராக - மனிதத்தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி, என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்." ஜூலை 31-ஆம் நாள் 1971-ஆம் ஆண்டு நமது தமிழக ஆளுநர் ஆற்றிய உரைதான் இது. அவர் கருணாநிதி என்று என் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும்கூட, நான் ஆற்றிய பணி, ஆற்றுகிற பணி எல்லாமே கழகச் சார்பில், கழக அரசின் சார்பில், அண்ணாவின் வழியைப் பின்பற்றி என்கிறபோது, தனிப்பட்ட எனக்கல்ல; நானும் நீயும் மற்றவர்களும் இணைத்துள்ள இந்தக் கழகத்துக்கு, கழக அரசின் நற்சாதனைகளுக்கு தமிழ்ப் பணிக்கு என்றே பொருள் கொண்டிட வேண்டும்.

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன். உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக்கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு, பாலுட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலிகட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!

என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத் நான் பெறுகிறேன் இன்று! ஆம்-என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப்பள்ளு பாடுகிறேன். "நெடுநாள் ஆசை நிறைவேற்றம் நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்" நீயும் சேர்ந்து பாடுக இந்த மகிழ்ச்சிப் பாடலை! வாழ்க வள்ளுவர்! வெல்க குறள் நெறி!"

என்று நான் அந்த வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா அன்று எழுதினேன். வள்ளுவர் கோட்டத் திறப்பு ஆளுநர் தலைமையில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சீர்காழி கோவிந்தராஜன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். குடியரசுத் தலைவரின் உரையை திரவியம் மொழி பெயர்த்தார். அந்த விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலோ, அந்த வள்ளுவர் கோட்டம் எழும்பிடக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலோகூட நான் அழைக்கப்படவில்லை.

அழைக்கப்படாதது மாத்திரமல்ல, வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோ

து அமைக்கப்பட்ட அந்த 'கல்' கூட அங்கே இருந்திடக் கூடாது என்று அப்புறப் படுத்தப்பட்டு விட்டதாகப் பின்னர் அறிந்தேன்.