நெஞ்சுக்கு நீதி
கோவை மாநாடும் சண்டிகர் மாநாடும் · 205 / 391
கோவை மாநாடும் சண்டிகர் மாநாடும் சஞ்சீவ ரெட்டி அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது சென்னை சட்டப்பேரவையில் காமராஜர் அவர்களின் படத் திறப்பு விழாவிற்கு 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வந்திருந்தபோது காமராஜர் படத்தைத் திறந்து வைத்துவிட்டு உரையாற்றும்போது தெரிவித்த கருத்தும் முக்கியமானது. அப்போது சஞ்சீவரெட்டி பேசும்போது "காமராஜர் மிகவும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார். சாதாரண மனிதராகவே இருந்தார்.
அவருடைய கடைசி காலத்தில்-ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மூன்றுமுறை நான் அவரை சென்னைக்கு வந்து சந்தித்தேன். அவர் இந்த நாட்டைப் பற்றி மிகவும் கவலை கொண்டிருந்தார். அப்போது நெருக்கடி நிலை இருந்ததால், அவர் சிந்தனை அனைத்தும் நாட்டைப் பற்றியதாகவே இருந்தது. இப்போது யாரும் எதுவும் சொல்லலாம். ஏனென்றால் பதில் சொல்ல காமராஜர் இல்லை. அவர் தனது கடைசிக்காலத்தில் மகிழ்ச்சி இல்லாமலே இருந்து இறந்தார்.
அவர் இறந்தபோது நெருக்கடி நிலை அமுலில் இருந்ததால் அவர் மறைவுச் செய்தி கேட்டதும் உடனே என்னால் சென்னைக்கு வர முடியவில்லை. சாதாரணச சஞ்சீவரெட்டிக்கு விமான டிக்கெட் எப்படி கிடைக்கும்? இருந்தாலும் கடைசி நேரத்தில் தாமதமாகச் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். கருணாநிதியும் அவர் அரசும் என்னை விமான நிலையத்திலிருந்து காமராஜர் இறுதி யாத்திரை நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் செல்ல உதவினார்கள். காமராஜர் தன் கடைசிக் காலத்தில் இந்த நாடு என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.
காமராஜர் இறந்தபிறகு, அனந்தப்பூரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேச முயன்றேன். கூட்டம் நடத்த அனுமதி தரப்படவில்லை. கைதானாலும் பரவாயில்லை என்று தடையை மீறி கூட்டத்தை நடத்தினேன். அந்த நிகழ்ச்சியும், பேச்சும் பத்திரிகையில் வெளிவரவில்லை. ஆனால் அதே கூட்டத்தை சென்னையில் நடத்தியிருந்தால் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனுமதி வழங்கியிருப்பார். அந்த நிகழ்ச்சியையும் பத்திரிகையில் இடம் பெறச் செய்திருப்பார்" என்று காமராஜருடைய படத்திறப்பு விழாவிலே அ.தி.மு.க.
அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவிலே குடியரசுத் தலைவராக இருந்த சஞ்சீவரெட்டி அவர்கள் இவ்வாறு மனந்திறந்து பேசினார். சஞ்சீவரெட்டி அவர்கள் காமராஜரின் இறுதிக்கால நினைவுகளைப்பற்றி இப்படிக் கூறியபோதிலும், அக்டோபர் மாதம் 5-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற காமராஜர் இரங்கல் கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி அம்மையார் "காமராஜர் மறைவதற்கு முன்பாக கடைசி இருமாதங்களில் புதுக் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிவர மிகவும் விரும்பினார்.
இதுசம்பந்தமாக நானும் அவரும் அந்தச் சமயத்தில் பலமுறை செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். காமராஜரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டியது நம்முைடைய கடமை. நாட்டில் ஒழுக்கம், கடும் உழைப்பு ஆகியவற்றை மக்களிடம் ஏற்படுத்த அவசர நிலைமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை காமராஜரின் கட்சியினர் எதிர்த்தார்கள். ஆனால், அவசர நிலைமையின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகக் காமராஜர் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. ஏனெனில் நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் அவருக்குத் தெரியும்" என்று கூறினார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திரா காங்கிரசுடன் இணைந்துவிட வேண்டுமென்று துடித்த பழைய காங்கிரஸ்காரர்களிலே ஒரு பகுதியினர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையையும், மிசா சட்டத்தையும், தேசத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய கருத்துக்கள் காமராஜரின் வலக்கரம் போல் இருந்து செயல்பட்ட "நவசக்தி" நாளிதழிலேயே வெளி வந்ததை மறந்துவிட்டார்கள் என்றே கூறலாம். இல்லாவிட்டால் "காமராஜர் நெருக்கடி நிலையை எதிர்த்து ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை" என்று அக்டோபர் 5-ஆம் நாள் டெல்லியில் இந்திராகாந்தி அவர்கள் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
"எமர்ஜென்சி"யை எதிர்ப்பதில் காமராஜர் தீவிரமாக இருந்தார் என்பதை உணர்ந்திருந்த பழைய காங்கிரஸ்காரர்களில் ஒருபகுதியினர், இந்திரா காங்கிரசுக்குச் சென்றால் பதவி, பவிசுகள் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும்கூட காமராஜரின் கொள்கைக்கு விரோதமாக நடப்பதற்குத் தங்கள் மனச்சாட்சி இடம்தரவில்லை என உறுதியாகக் கூறிவிட்டனர். எனவே பழைய காங்கிரசார் இருகூறாகப் பிரிந்து நின்று ஒருவரோடொருவர் பல இடங்களில் மோதிக்கொண்டனர்.
சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் போன்றவைகளை யார் எடுத்துக் கொள்வது என்பதிலும் பெரிய கருத்து வேறுபாடு தோன்றியது. பல இடங்களில் இந்த மோதுதல்கள் வலுப்பெற்று, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி அவர்கள் எனக்கு அதுகுறித்து ஒரு கடிதம் எழுதினார். அதிலே தமிழகத்திலே உள்ள அவர்களுடைய கட்சி நிலைமை குறித்து தமிழக முதலமைச்சர் என்ற முறையிலே என்னுடைய சொந்தக் கவனத்தைச் செலுத்தி எல்லா அதிகாரிகளுக்கும் அதுசம்பந்தமாக உரிய உத்தரவுகள் இட வேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு அந்தக் கடிதத்தைச் டெல்லியிலே செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.
அந்தக் கடிதத்திற்கு நான் எழுதிய பதிலில் :- "அன்பார்ந்த திரு. ரெட்டி அவர்களுக்கு, தங்களுடைய 1975 நவம்பர் 29 நாளிட்ட கடிதம் கிடைத்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் ஸ்தாபன காங்கிரசில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஒட்டித் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கினைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள கவலையினை நானும் தயக்கமின்றிப் பகிர்ந்து கொள்கிறேன். திராவிட முன்னேற்றக்கழகத்தைப் பொறுத்தவரையில் அது, ஸ்தாபன காங்கிரசின் உள் விவகாரங்களில் கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை என்றும், அது அவர்களே முடிவு செய்து கொள்ளவேண்டிய விவகாரம் என்றும் பலமுறை பத்திரிகைகள் வாயிலாகத் தெளிவாக அறிவித்துள்ளேன்.
இங்குள்ள நிலைமையைப் பொறுத்தமட்டில், சட்டம்-ஒழுங்கினைப் பாதுகாத்திடும் பொறுப்பினை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் அனைவரும் நடுநிலைமையோடு அமைதி காத்திடுவர் என்பதனை என்னுடைய இக்கடிதம் மேலும் தங்களுக்கு உறுதிப்படுத்தும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தேன்.
காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. ஆட்சி சாதகமாயிருந்து, இந்திரா காங்கிரசுடன் ஸ்தாபன காங்கிரசார் இணைவதற்கு எதிராகச் செயல்படுவதாக டெல்லிக்குப் புகார் கூறப்பட்டதால்தான் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி அவ்வளவு அவசரமாக எனக்குக் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. கழக ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்பு 1975-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25, 26, 27, 28 ஆகிய நாட்களில் கோவை மாநகரில் நடைபெற்ற கழகத்தின் ஐந்தாவது பொது மாநில மாநாடு வரலாற்றுச் சிறப்புக்குரிய மாநாடாகும்.
அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கழகத் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டபிறகு, கோவை மாநில மாநாடு வரையில் கழகத்தின் சார்பில் மாவட்ட மாநாடுகள் தொடர்ச்சியாக முறையே ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வந்தன. 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் திருச்சியில் அந்த மாவட்ட ஐந்தாவது மாநாடு சி. பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டினை எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அதற்குப் பிறகு அதே 1970-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19, 20 ஆகிய.
நாட்களில் வடஆற்காடுமாவட்ட ஐந்தாவதுமாநாடு வேலூரில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு ஏ. வி. பி. ஆசைத்தம்பி அவர்கள் தலைமை தாங்கினார். மதுரைமுத்து அவர்கள் அந்த மாநாட்டினைத் திறந்து வைத்தார். அடுத்து 1971-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்ததையொட்டி கழக மாநாடு எந்த மாவட்டத்திலும் நடைபெறவில்லை. 1972-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12, 13 ஆகிய நாட்களில் ராமனாதபுரம் மாவட்ட ஐந்தாவது மாநாடு ராஜபாளையம் நகரில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு சகோதரர் அரங்கண்ணல் தலைமை தாங்கிட, நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசாமி திறந்து வைத்தார். அந்த மாநாட்டில் அண்ணா அவர்களின் திருவுருவப் படம் என். வி. என். அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் திங்களில் 8,9 ஆகிய நாட்களில் செங்கற்பட்டு மாவட்ட ஐந்தாவது மா நாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. எஸ். எஸ். தென்னரசு அவர்கள் அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். ஆலடி அருணா திறப்பாளர், திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள் அண்ணா அவர்களின் படத்தினை அந்த மாட்டில் திறந்து வைத்தார்.
அடுத்து மே மாதத்தில் தஞ்சை மாவட்ட ஐந்தாவது மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு கே.டி.எஸ். மணி தலைமை தாங்கிட சி. டி. தண்டபாணி அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்தார். தந்தை பெரியார் நெ.-32 அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பெருமை சேர்த்ததோடு, பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்தினையும் திறந்து வைத்தார். அதே மே திங்கள் 19, 20 ஆகிய நாட்களில் உதக மண்டலத்தில் நீலகிரிமாவட்ட கழக மாநாடு நடைபெற்றது.
ஈ. ஆர். கிருஷ்ணன் எம். பி. மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். து. ப. அழகமுத்து மாநாட்டினைத் திறந்து வைத்தார். சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அண்ணா அவர்களின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். அடுத்து தர்மபுரி மாவட்ட மாநாடு, அதே 22-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 17, 18 ஆகிய நாட்களில் எம். எஸ். சிவசாமி தலைமையில், தமிழரசி திறந்து வைக்க நடைபெற்றது. ஏ. கே. ஏ. அப்துஸ் சமத் அவர்கள் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்தினைத் திறந்து வைத்தார்.
அடுத்து அதே ஆகஸ்ட் மாதம் 5, 6 ஆகிய நாட்களில் மதுரை மாவட்ட ஐந்தாவது மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு முரசொலி மாறன் தலைமை தாங்கிட, எல். கணேசன் திறப்பாளராக இருந்தார். பி. கே. மூக்கையாத் தேவர் அவர்கள் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்தினைத் திறந்து வைத்தார். பின்னர் 1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தென்னாற்காடு மாவட்ட ஐந்தாவது மாநாடு 14, 15 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் டி. கே. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
கோவை எஸ். ஏ. ராஜமாணிக்கம் அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்தார். அண்ணா அவர்களின் படத்தை எஸ். எஸ். ராமசாமி படையாட்சி அவர்கள் திறந்து வைத்தார். இந்தியாவில் "எமர்ஜென்சி" பிரகடனத்திற்குப் பிறகு 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. செ. கந்தப்பன் அவர்கள் தலைமை தாங்கிட, ஜார்ஜ் கோமகன் மாநாட்டினைத் திறந்து வைத்தார். மாநாட்டில் அண்ணா அவர்களின் படத்தினை சிலம்புச் செல்வர் ம.
பொ. சி. அவர்களும், தந்தை பெரியார் அவர்களின் படத்தினை மணலி கந்தசாமி அவர்களும், புரட்சிக்கவிஞர் படத்தினை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் திறந்து வைத்தார்கள். அடுத்து, அதே ஆகஸ்ட் 16, 17 ஆகிய நாட்களில் சேலம் மாவட்ட ஐந்தாவது மாநாடு சேலம் மாநகரில் நடைபெற்றது. கவிஞர் கா. வேழவேந்தன் தலைமை தாங்கிட, நன்னிலம் நடராஜன் மாநாட்டினைத் திறந்து வைத்தார். அண்ணா அவர்களின் படத்தினை அன்னை மணியம்மையார் அவர்களும், தந்தை பெரியார் அவர்களின் படத்தினை விருதுநகர் வி.
வி. இராமசாமி அவர்களும், புரட்சிக்கவிஞர் படத்தினை முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் அந்த மாநாட்டில் திறந்து வைத்தார்கள். தொடர்ந்து அக்டோபர் மாதம் 11, 12 ஆகிய நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட முதல் மாநாடு அறந்தாங்கியில் நடைபெற்றது. திண்டுக்கல் காதர்சா மாநாட்டுத் தலைவர்; எஸ். எஸ். ராஜேந்திரன் மாநாட்டின் திறப்பாளர். தந்தை பெரியார் அவர்களின் படத்தினை தளபதி வீரமணி அவர்களும், அண்ணா அவர்களின் படத்தினை ஏ.
ஆர். பெருமாள் அவர்களும், புரட்சிக் கவிஞர் படத்தினை புலவர் பொன்னிவளவன் அவர்களும் திறந்து வைத்தார்கள். அடுத்து மதுரையில் நவம்பர் 15, 16 ஆகிய நாட்களில் தி. மு. கழக மகளிர் மாநாடு அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி ராணி அண்ணியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொற்செல்வி இளமுருகு அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்தார். மாநாட்டில் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுடைய படத்தினை அன்னை மணியம்மையார் அவர்களும், டாக்டர் தர்மாம்பாள் அவர்களின் படத்தினை திருமதி பூங்கோதை அவர்களும் திறந்து வைத்தார்கள்.
அதே திங்கள் அடுத்தவாரம் குமரி மாவட்ட மூன்றாவது மாநாடு நாகர்கோவிலில் நண்பர் இரா. செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோவை மு. இராமநாதன் அந்த மாநாட்டினைத் திறந்து வைத்தார். தந்தை பெரியார் அவர்களின் படத்தினை எஸ்.எஸ். மாரிசாமி அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்கள் படத்தினை டாக்டர் எம். சந்தோஷம் அவர்களும், புரட்சிக் கவிஞர் படத்தினை வலம்புரிஜான் அவர்களும் திறந்து வைத்தனர். இதை அடுத்துத்தான் கோவையில் கழகத்தின் ஐந்தாவது பொதுமாநாடு நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான்தான் அந்த மாநாட்டிற்கு தலைமை வகித்தேன். பொதுச்செயலாளர் நாவலர் மாநாட்டின் திறப்பாளர். அந்த மாநாட்டில் 19 தியாகிகளின் படங்களை தமிழகத்தின் 19 முக்கிய தலைவர்கள் திறந்து வைத்தார்கள். டிசம்பர் 25-ஆம் தேதியன்று பிற்பகல் இருபது லட்சம் மக்கள் கலந்துகொண்ட, தமிழ்நாடே கோவையில் புகுந்ததுவோ என்று எண்ணிடத்தக்க அளவிற்கு ஏழுமைல் நீளம் கொண்ட ஊர்வலம் கோவையை அதிர வைத்தது.
ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க மூன்று மணி நேரம் ஆகியது. நான்கு மணிக்குப் புறப்பட்ட ஊர்வலம் 8.10 மணிக்கு பந்தலை அடைந்தது. அங்கே கழகக் கொடியினை மாநாட்டுத் தலைவர் என்ற முறையில் நான் ஏற்றி வைத்தேன். அடுத்த நாள் டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலை கலை நிகழ்ச்சிகளோடு அன்றைய நிகழ்ச்சி தொடங்கி, படத்திறப்பு விழாக்கள் நடைபெற்று, மாநாட்டிற்கு என்னை தலைமை தாங்கும் படி- கோவை ராஜமணிக்கம் முன்மொழிய, மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவர் சாமிநாதன், மாநாட்டுத் தொண்டர் படைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, நிதிக்குழு தலைவர் தேவசகாயம், மாநாட்டுச் செயலாளர்கள் ஏ.எம்.ராஜா, கோவை மு.
ராமனாதன், சி.டி. தண்டபாணி, மற்றும் அலமேலு அப்பாதுரை, து.ப. அழக முத்து, அன்பில், மன்னை, தென்னரசு, மு. கண்ணப்பன், ராணி அண்ணியார், கழகப்பொருளாளர் பேராசிரியர் ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர். பேராசிரியர் வழிமொழியும் போது கவிதை நடையில்: "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று சொன்ன "அன்பு இதயத்தை" தம் இதயமாகப் பெற்ற கலைஞரை வழிமொழிகிறேன்.
அண்ணாவின் தூங்காத இதயமே தலைமை ஏற்க வா! அல்ல, அல்ல தூங்காத இதயம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவின் ஆற்றல்மிக்க இதயமே தலைமை ஏற்க வா! உனக்குரிய இடத்தில் அமர வா, வா! அல்ல, அல்ல; உனக்குரிய பணியை ஆற்ற வா! அல்ல, அல்ல; என்றும் பணியாற்றும் நீ அதைத் தொடர வா! என்று கலைஞரை அழைத்து, நானும் அவரை வழிமொழிந்தேன் என்ற பெருமையைத் தேடிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார். எனது தலைமையுரையின் முன்னுரையிலே; "கழக அமைச்சரவை 28-ஆ
ம் தேதியோடு காலியாகும் என்று சிலர் எழுதியிருப்பது பற்றி இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். 28-ஆம் தேதி என்ன? பேசி முடித்துவிட்டு பந்தலை விட்டு வெளியில் போகும் நேரத்தில் அந்தச் செய்தி வந்தாலும் அதைவிட பரவசம் அடைகிறவர்கள் எங்களைப் போல வேறுயாரும் இருக்க முடியாது. நான் கிரீடம் பற்றி கவலைப்படுகிறவன் அல்ல. அந்தக் கிரீடத்தைத் தாங்கும் தலைபற்றித்தான் கவலைப்படுகிறவன். கிரீடம் போய் விடலாம்.
ஆனால் தலை இருக்கவேண்டும். கிரீடம்தான் அமைச்சரவை. தலைதான் திராவிட முன்னேற்றக் கழகம்" என்று குறிப்பிட்டேன். மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலே நெருக்கடி நிலையை ஒட்டி நிறைவேற்றப்பட்ட முதல் இரண்டு தீர்மானங்கள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவைகளாகும். தீர்மானம் 1 ஒழுங்கு கட்டுப்பாட்டில் காட்டப்படுகிற ஆர்வத்தை இந்த மாநாடு வரவேற்கிறது. எனினும் அவைகளை நடைமுறைப்படுத்தும்போது ஜனநாயக முறைகள் பாதிக்கப்படாமல் நிலைத்து நீடிக்கவும் மீண்டும் இயல்பான சூழ்நிலை அமையவும் பேசித் தீர்த்து நாம் எதிர்பார்த்த நல்விளைவுகளைக் காண அனைத்துக்கட்சித் தலைவர்களையும் கொண்ட ஒரு வட்ட மேஜை மாநாட்டை உடனடியாகப் பிரதமர் கூட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(முன்மொழிந்தவர்: இரா. செழியன்; வழிமொழிந்தவர்: நெல்லிக்குப்பம் கிருஷ்ண மூர்த்தி, டி. வி. நாராயணசாமி, என். கணபதி, மாயவன் எம்.பி.) தீர்மானம் 2 பொதுத்தேர்தல் முறைப்படி குறித்த காலத்தில் நடைபெறுவதும், அரசியல் கட்சிகளின் நடைமுறைப்பணிகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவைகள் பற்றி மதிப்பீடு செய்து, தீர்ப்பளிக்கும் வாய்ப்பை மக்கள் பெறுவதும் ஜன நாயக நெறியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பெற்று, நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் தி.
மு. க. பொதுக்குழு கூடி நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப் பேரவைத் தேர்தலையும் இணைத்து நடத்துவதை நலம் என்றும், அதன் காரணமாக ஒரே ஆண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரண்டு தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்றும், இரட்டிப்புச் செலவாகாமல் குறைக்கலாமென்றும் அரசு அதிகாரிகள் இரண்டு முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட இயலாத நிலைமையைத் தவிர்க்கலாம் என்றும் கருத்தறிவித்து 71-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடனேயே சட்டப் பேரவைத் தேர்தலையும் நடத்துவதென்று முடிவெடுத்தது.
இன்றுள்ள நிலையில் ஜனநாயக ரீதியாக பொதுத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்றும், அந்தத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கேற்ப சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துவதோடு, போதிய முன்னறிவிப்பு தந்து; வரும் மார்ச் திங்களில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை ஒருங்கிணைத்து நடத்தவேண்டும் என்றும் கருத்தறிவிக்கிறது. (முன்மொழிந்தவர்: சாதிக், வழிமொழிந்தவர்: ஓ.
பி. ராமன், ரெங்கனாதன் எம்.எல்.ஏ.) மாநாட்டிலே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து நான் என்னுடைய முடிவுரையிலே நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டுமென்று கேட்டு பிரதமருக்கு கழகத் தோழர்கள் அனைவரும் தந்தி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். கழக மாநாடு கோவையில் நடைபெற்ற அதே தேதியில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநாடு சண்டிகார் நகரிலே நடைபெற்று, அந்த மாநாட்டிலே நாடாளுமன்றத் தேர்தலை ஓராண்டு காலத்திற்கு ஒத்திப்போட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"எமர்ஜென்சி"யின் காரணமாக இந்திரா காங்கிரஸ், எதேச்சாதிகாரமாகப் பெற்றுக்கொண்ட பயன்களில் இதுவும் ஒன்று!
