நெஞ்சுக்கு நீதி
காமராஜர் நினைவு போற்றிய கழகம் · 204 / 391
காமராஜர் நினைவு போற்றிய கழகம் கா மராஜர் அவர்களின் இறுதிக்காலத்தில் நான் அவருடன் எந்த அளவுக்குத் தொடர்பு கொண்டிருந்தேன் என்பதை நான் எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் முன்னாள் குடியரசுத் தலைவரும் காமராஜரின் மிக நெருங்கிய நண்பருமான நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் அண்மையில் இரண்டு திங்களுக்கு முன்பு எனது மணிவிழாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டுவது நல்ல சாட்சியத்துடன் கூடிய ஒன்றாகும். "இருண்ட நெருக்கடி நிலைக்காலத்தில் நானும் கருணநிதியும் இணைந்து பாடுபட்டதை நினைவு கூர்கிறேன்.
நெருக்கடி நிலையை எதிர்ப்பதால் தனது முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து என்ற போதிலும் கருணாநிதி அவர்கள் சர்வாதிகாரத் திட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட முதல் மூன்று மாத காலம் நானும் கருணாநிதியும் காமராசரின் வழி காட்டுதலையும் ஆசியையும் பெற்றோம்."
இதனை நான் சஞ்சீவி ரெட்டியார் அனுப்பிய மணிவிழா வாழ்த்தாக மட்டும் நான் கருதவில்லை. இந்திய நாட்டு வரலாற்றின் சோதனை மிகுந்த கட்டத்தில் பெரும்பாலான தேசத் தலைவர்கள் சிறையிலே அடைக்கப்பட்டிருந்த போது-நாடு எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூடச் சுதந்திரத்தை இழந்திருந்த நேரத்தில்-உளம் நொந்து உடல் நலிந்து படுக்கையில் இருந்த காமராஜருடனும், தேச விடுதலைப் போரில் முக்கிய பொறுப்பு வகித்த தளகர்த்தர்களில் ஒருவரான நீலம் சஞ்சீவி ரெட்டியாருடனும் நான் கொண்டிருந்த துணிவு மிக்கக் கொள்கை உறுதி வாய்ந்த உறவுக்குக் கிடைத்த பரிசாகவே அந்த வாழ்த்தினை நான் மகிழ்வுடன் வரவேற்றுப் பூரித்தேன்.
நெருக்கடி நிலைப் பிரகடனமான பிறகு ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் சஞ்சீவி ரெட்டி அவர்கள் சென்னைக்கு அடிக்கடி வந்தார். நான் ஜூலை முதல் வாரத்தில் காமராஜரை சந்தித்து விட்டு வந்த பிறகும் கடற்கரையில் நெருக்கடி நிலையை எதிர்த்துத் தி.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பிறகும் சஞ்சீவி ரெட்டி அவர்கள் என்னை வந்து சந்தித்தார். கழக அமைச்சரவை ராஜினாமா செய்து விட்டு காமராஜர் தொடங்கும் ஜனநாயகம் காத்திடும் இயக்கத்தில் கழகம் துணை நின்று நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக இருப்பதாக கழகத்தின் நிலையை திரு.
ரெட்டி அவர்களிடம் நான் தெரிவித்தேன். அவரும் எனது கருத்தைக் காமராஜர் அவர்களிடம் தெரிவித்து இருவரும் கலந்து பேசி இறுதியாகக் கழக அமைச்சரவை ராஜினாமா செய்யக் கூடாது என்பதில் காமராஜர் கண்டிப்பாக இருப்பதாகக் கூறிவிட்டார். தலைவர்களை விடுவிக்கவும், நெருக்கடியை எதிர்த்துப் போராடவும் காமராஜர் அவர்கள் ஆயத்தம் செய்து கொண்டு வருவதை திரு. ரெட்டியார் அவர்கள் வாயிலாக நானறிந்து அதற்கான ஆதரவை அவ்வப்பொழுது காமராஜரது அறிவுரைப்படி நானும் இயன்ற அளவு வழங்கி வந்தேன்.
ஆனால் மிகவும் குன்றி விட்ட அவரது உடல் நிலை உடனடியாக ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு இயலாமல் அவரைத் தடுத்து நின்றது. அந்தக் கால கட்டத்துச் செய்திகளைத் தான் திரு. ரெட்டியார் எனக்கனுப்பிய மணிவிழா வாழ்த்தில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். காமராஜர், உடல் நலிவுற்றுப்படுக்கையில் படுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரும் நானும் சென்னையில் ஒரு பொது இடத்தில் சந்தித்து மூன்று மணி நேரம் பேசினோம்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாக்டர் வீட்டு மாடியில் தான் அந்தச் சந்திப்பு மாலை ஆறரை மணி முதல் இரவு ஒன்பதரை மணி வரையில் நடந்தது. காமராஜர் அவர்களுக்கும் எனக்கும் சிகிச்சை அளித்த டாக்டர் அவர். அவர் வீட்டில் தான் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அந்த அரசியல் சந்திப்பு நிகழ்ந்தது. காமராஜருடன் நெருங்கியிருந்த நண்பர்களில் ஒருவரான நண்பர் கலிவரதன் அவர்கள் கூட அந்தச் சந்திப்பு குறித்து இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாள் விழாவின் போது மயிலைப் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
மூன்று மணி நேரம் நானும் கர்மவீரர் காமராஜர் அவர்களும் நிகழ்த்திய அந்த உரையாடலில் எங்கள் இருவரது உள்ளுணர்வும் ஒன்று கலந்தன. ஆங்கிலத்தை அறவே அகற்றி விட்டால் அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக் கொள்ளும். என்று அவர் எச்சரித்துச் சொன்னது என்றைக்கும் மறக்க முடியாத- தாகும். கழகம் மாநில சுயாட்சி என்று குரல் கொடுக்கும்-போது அதனை வேண்டுமென்றே பிரிவினை வாதமெனக் கூறி திசை திருப்ப டெல்லியில் உள்ளவர்கள் முயலுகிறார்கள்.
எனவே விரைவில் நானே (காமராஜரே) அந்தக் கொள்கையை முன்வைத்து நாடு தழுவிய அளவுக்குக் கோஷம் கொடுக்கப் போகிறேன். அதற்கான ஆரம்ப வேலைகளை ஆந்திராவில் தொடங்குமாறு சஞ்சீவி ரெட்டியிடமும் கூறியிருக்கிறேன் என அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் அந்தக் காரியத்தை முன்னோடியாக நின்று முடுக்கி விட முடியாமல் அவர் வாழ்வை முடித்துக் கொண்டார். ஆம்; விடுதலை பெற்ற நாட்டில் சுதந்திரமில்லாமல் வாழ்வதை எண்ணி-அந்த விடுதலை பெற்றுத் தந்த வித்தகன் காந்தி பிறந்த நாளிலேயே காமராஜர் கண் மூடிவிட்டார்.
அவரது நினைவைப் போற்றும் வண்ணம் நினைவகம் எனும் எழில் மண்டபம் கட்டியது மட்டுமல்ல; விருதுநகரில் அவரது பிறந்த இல்லத்தையும் அவரது நினைவுச் சின்னமாக கழக அரசு மாற்றியமைத்தது. காமராஜர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடும் முயற்சிக்கும் கழக அரசு மத்திய அரசைத் தூண்டிக் கடிதம் எழுதியது. கழக அரசு எந்த அளவிற்கு காமராசரை இழந்த துயரில் பங்கு கொண்டது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு சொல்ல-வேண்டுமேயானால் காமராஜரின் நெருங்கிய நண்பரும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான ராஜாராம் நாயுடு அவர்கள் அப்போது மேலவையிலே பேசியதை நினைவூட்டுவது மிகப் பொருத்தமாகும்.
அது வருமாறு:- காமராஜர் மறைந்த அன்று-என்னால் எங்கு பேசினாலும் இதைச் சொல்லாமல் இருக்க முடியாது-நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும், மற்ற அமைச்சர்களும் அங்கு வந்து, அவர்களுடைய சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டதைப் போல அந்த இடத்தில் தோற்றம் அளித்தார்களே தவிர, மற்றொரு கட்சித் தலைவர் இறந்தார் என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. எங்களைக் கட்டிப்பிடித்து முதலமைச்சர் அன்று துக்கம் தெரிவித்ததும், அழுததும் என்னுடைய உயிர் உள்ள அளவும் மறக்க முடியாது.
அவ்வளவு பாச உணர்ச்சியை அவர்கள் காட்டினார்கள். தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்து அன்று அரசு மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அவருடைய பிரேதத்தை பார்வைக்கு வைத்து அங்கேயே எரித்து நினைவுச்சின்னம் கட்டுவது என்று தான் முதலில் முடிவு செய்திருந்தோம். சிலர் ராஜாஜிஹாலுக்கு கொண்டு போய் வைக்கவேண்டும், முதலமைச்சரிடம் கேளுங்கள் என்று சொன்னார்கள். இதை எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதே வினாடியில் முதலமைச்சர் அவர்கள் காமராஜர் வீட்டிற்குள் வந்து விட்டார்.
வந்ததும் முதல் வேலையாக இங்கே கூட்டத்தை சமாளிக்க முடியாது. உடனே ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு போக வேண்டும்; என்று நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஏதோ கனவு கண்டதைப் போலச் சொன்னார்கள். எங்கள் மனதை எப்படி தெரிந்து கொண்டார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எனக்கும் என்னுடைய சகாக்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களுக்கும் இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்றே புரியவில்லை. பிறகு ராஜாஜி ஹாலுக்கு வந்து எவ்வாறு வைக்க வேண்டுமென்று அவைகளை எல்லாம் சரி செய்து, மேடை போட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், அங்கேயே மந்திரி சபை கூடியது என்ற வகையில் எல்லா அமைச்சர்களும் அங்கேயே வந்து விட்டார்கள்.
அவரை எங்கே வைப்பது என்பதற்கு காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டுமென்று சொன்னார்கள். அதே க்ஷணத்தில் முடிவு செய்தது மாத்திரமல்லாமல் அன்று இரவே முதலமைச்சர் அவர்கள் அவருடைய வண்டியிலேயே என்னையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி காரியதரிசியையும் அழைத்துக் கொண்டு, மழை பெய்து கொண்டிருக்கும் போதே இரவு 8 மணிக்கு முதலமைச்சர் அவர்களும், பொதுப்பணி அமைச்சர் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்றோம்.
அவர்களே செய்திருக்கலாம். எங்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டியதில்லை; இருந்தாலும் எங்களையும் அழைத்துக் கொண்டு, அந்த இடத்தில், அந்த இரவில் வெளிச்சம் இல்லை. கார்களை எல்லாம் திருப்பி நிறுத்தி விளக்கைப் போட்டு இடத்தைத் தேர்ந்தெடுத்து அன்றிரவே அங்குள்ள மரங்களை எல்லாம் அகற்றி இரவெல்லாம் அமைச்சர் அவர்கள் தூக்கமில்லாமல் அங்கேயே இருந்து ஏற்பாடுகளை எல்லாம் செய்தார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று எங்களுக்கு தெரியவே இல்லை.
கட்சியைப் பற்றி நான் எண்ணவில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்றுமே இதை மறக்க முடியாது; நான் உள்ள அளவும் மறக்க முடியாது. திரு, ராஜாராம் நாயுடு அவர்கள் ஆற்றிய இந்த உரை சட்டமன்ற மேலவைக் குறிப்பு நூலிலேயே இடம் பெற்றுள்ளது. மறைவதற்கு நாற்பது நாட்களுக்கு முன் நடைபெற்ற என்னுடைய மகன் ஸ்டாலின் திருமணத்திலும் காமராஜர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடல் நலமற்ற அவர் மணமேடைக்கு வருவதற்கென்றே தனி வழி அமைக்கப்பட்டது.
காமராஜருடன் அந்த மணிவிழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி, மத்திய அமைச்சர், ஜெகஜீவன்ராம், கவர்னர் ஷா, சீசஞ்வி ரெட்டி, வீரேந்திர பட்டீல், முகமது கோயா, பக்தவத்சலம், புதுவை ஆளுநர் சேத்திலால், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., சிவாஜி கணேசன், மூக்கையா தேவர், புலவர் கோவிந்தன், பேராசிரியர் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்; மணவிழாவிற்கு நாவலர் தலைமை தாங்கினார். காமராஜர் வாழ்த்தும் போது, "திருமணம் நடத்திக் கொள்ளும் மணமக்களுக்கு ஆசி கூறவும் வாழ்த்தவும் வந்திருக்கின்ற பெரியோர்களில் நானும் ஒருவனாக சேர்ந்து மணமக்களை நீண்ட நாள் வாழவும் சகல பாக்கியத்துடன் வாழவும் ஆசி கூறுகிறேன்" என்று வாழ்த்தினார்.
காமராஜருக்கு தமிழக அரசின் சார்பில் நினைவுச் சின்னங்கள் அமைக்க மேற்கொண்ட முயற்சிகள் பற்றிக்கூட ஒருசில அரசியல்வாதிகள் அர்த்தம் கற்பித்து கழகத்தின் மீது மாசு கூற முற்பட்டனர். அப்போது நான் அதற்கு விளக்கம் அளிக்கும் முகத்தான் "ஆயிரம் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காமராஜருக்கு நினைவுச் சின்னங்களை கழக அரசு அமைக்கிறதென்றால் - அந்த வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு உணர்வு இருக்கிறது.
அது தான் "தமிழன் என்ற இனஉணர்வு" என்று கூறினேன்.
