நெஞ்சுக்கு நீதி
கடமை வீரரும் கர்ம வீரரும் மறைந்தனர்! · 203 / 391
கடமை வீரரும் கர்ம வீரரும் மறைந்தனர்! நெ ருக்கடி நிலையை எதிர்த்து நான் கடற்கரையில் பேசியதை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் கழக அரசைக் கலைக்க வேண்டுமென்று குரலெழுப்பினார்கள். அதற்கு நான் திருச்சி மாவட்டத்தில் கரூரில் நண்பர் பராங்குசம் அவர்களுக்கு நடைபெற்ற மணிவிழாவிலே கலந்து கொண்டபோது பதிலளித்தேன். அது வருமாறு: "இன்று நாடு இருக்கும் நிலைமையில் சர்வாதிகாரம் என்று சொன்னாலே சிலருக்குக் கோபம் வருகிறது.
நாம் யாரையும் சர்வாதிகாரி என்று சொல்லவில்லை. சர்வாதிகாரியாக ஆகிவிடக் கூடாது என்றுதான் வேண்டுகிறோம். போகிற போக்கைப் பார்த்தால் சர்வாதிகாரம் எங்கே வந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. கூட்டம் நடக்கிற நேரத்தில் வானம் கருக்கத் தொடங்கினால் கூட்டம் ஏற்பாடு செய்த தோழர்கள் எங்கே மழை வந்துவிடுமோ என்று அஞ்சுவதைப் போல அஞ்சுகிறோம். மாடு; தும்பை அறுத்துக்கொண்டு வெளிக் கிளம்பிவிட்டால் எங்கே முட்டி விடுமோ என்று சந்தேகப்படுவதைப் போல இன்று இந்தியாவிலே இருக்கிற நிலைமைகளைப் பார்க்கும்போது சர்வாதிகாரம் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம்.
வராது என்று எங்களுக்குச் சொல்லுங்கள். நம்பிக்கை அளியுங்கள். வராது என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று கேட்கிறோம். ஜனநாயகம் வாழ வேண்டும் என்பது குற்றமா? நாங்கள் வேண்டாம் என்று வெறுப்பது இந்திரா காந்தியை அல்ல; சர்வாதிகாரத்தை! வேண்டும் என்று விரும்புவது ஜனநாயத்தை; ஆனால் இங்கே இருக்கிற சில கட்சிக்காரர்கள் இதை வைத்துக்கொண்டு கருணாநிதி மத்திய அரசோடு-இந்திரா காந்தியோடு மோதுகிறார். எனவே இந்த அரசைக் கலைத்து விட வேண்டுமென்று சொல்கிறார்கள்.
நான் அவர்களுக்குச் சொல்வேன். கழக அரசை ஏன் கலைக்க வேண்டும்? ஒருவேளை தமிழகத்திலே உள்ள சில எதிர்க்கட்சிக்காரர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் கழக அரசை இந்திரா காந்தி கலைத்து விடுவார்களானால், சிம்மாசனத்தில் உட்கார்ந்- நெ.-31 நெ.-31 துள்ள நாங்கள் சிறையில் உட்கார நேரிடும். நண்பர்களே, இந்தச் சிம்மாசனத்திலுள்ள மகிழ்ச்சியைவிட ஆயிரம் மடங்கு அதிகமான மகிழ்ச்சியைத் தரக்கூடியது சிறைக்கூடம்.
ஆனால் அடக்குமுறைகளும், சிறைச்சாலைகளும் நல்ல இலட்சியங்களை அழித்துவிட முடியாது. சிறையில் பூட்டப்பட்டவர், வெளியே வரும் நேரத்தில் இலட்சியங்களைத் துறந்துவிட்டு வெளியே வரமாட்டார். இன்னும் வேகமாக சுறுசுறுப்பாக வெளியே வருவாரே தவிர சிறையில் போட்டுவிட்ட காரணத்தால் - ஆட்சி கவிழ்க்கப் பட்டுவிட்ட காரணத்தால் -அந்த இயக்கம் தடைபடுத்தப்பட்ட காரணத்தால் சோர்வடைய மாட்டார். இந்த இயக்கத்தை தாறுமாறாக அவசரப்பட்டு எவராவது தடை செய்வார்களானால் - இந்த இயக்கத்தால் நடத்தப்படுகிற ஆட்சி கலைக்கப்படுமானால் நட்டம் எங்களுக்கல்ல.
தற்காலிகமான லாபம் யாருக்காவது கிடைக்கலாம். ஆனால் நீண்ட கால லாபம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான்." இவ்வாறு கரூர் விழாவில் நான் பேசினேன். இத்தகைய நிலையில் இந்தியாவின் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தபோது டெல்லியில் ஜூலை 21-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியது. மக்கள் அவையில் அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களும், மாநிலங்கள் அவையில் அமைச்சர் கே. பிரம்மானந்தரெட்டி அவர்களும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தது சரிதான் என்று தெரிவித்து தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள்.
தி.மு.கழகத்தின் சார்பில் இரா. செழியன் அவர்களும், எஸ். எஸ். மாரிசாமி அவர்களும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றினர். முடிவில் அந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்துவிட்டு தி.மு.கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம், பழைய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஜூலை 22-ஆம் தேதி வெளிநடப்புச் செய்தன. இந்தியா, பூராவும் இப்படிப்பட்ட குழப்பத்திற்கு ஆளாகியிருந்த நேரத்தில் தமிழக அரசில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எனதருமை நண்பர் என்.
வி. என். அவர்கள் இரண்டு மாத காலம் சென்னை பொது மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார். அந்த இரண்டு மாத காலமும், நானும் தமிழக அரசின் ஏனைய அமைச்சர்களும், காலை, மாலை இரண்டு வேளையும் பொது மருத்துவமனையிலேயே தங்கி என். வி. என். அவர்களை எப்படியாவது காப்பாற்றி விட முடியுமா என்று பார்த்தும் பயன் இல்லாமல் 3-8-75 அன்று அதிகாலை 2.45 மணிக்கு இயற்கை அடைந்தார். என். வி. என். அவர்கள் சென்னை மாவட்ட தி.
மு. கழகத்தின் முதல் செயலாளர்; கழகச் சட்ட திட்டங்களைத் திருத்துவதற்கு அமைக்கப்பட்ட சட்டத்திட்டத் திருத்தக் குழுவின் முதல் செயலாளரும் அவர்தான். கழகத்தின் முதல் அமைப்புச் செயலாளரும் அவர்தான் நான் முதல்வர் பொறுப்பை ஏற்றபிறகு தான் அவர் அமைச்சரானார். அதுவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்று ஒரு புதிய துறையை ஏற்படுத்திய பிறகு அந்தத் துறைக்கு முதன் முதலாக அமைச்சராக ஆனதும் அவர்தான். மதுரையிலே நடைபெற்ற பொதுக்குழுவிலேதான் என்.
வி. என். அவர்கள் கடைசியாகக் கலந்து கொண்டார். அப்போது ஜி. விசுவநாதன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கட்சிக் கட்டுப்பாட்டினைக் குலைக்கின்ற வகையில் நடந்து கொண்டார் என்பதைக் கேள்விப்பட்டு, என். வி. என். உடல் நலக்குறைவை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆவேசம் வந்தவரைப் போல மேடைக்கு வந்து கழகம் எப்படியெல்லாம் வளர்க்கப்பட்டது என்பது குறித்தும், துரோக சிந்தனை கொண்டவர்களை வளரவிடக் கூடாது என்பது குறித்தும் கடுமையாகச் சாடிப் பேசினார்.
அதுதான், தான் கலந்து கொள்கிற கடைசி பொதுக் குழு என்றும் கூறி, அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் தான் நமது தலைவர், கலைஞரின் கரத்தைப் பலப்படுத்துவோம் என்று தானும் முழக்கமிட்டு, அங்கேயிருந்த அனைவரையும் முழக்கமிடச் செய்தார். காலமெல்லாம் "கட்சி, கட்சி" என்று அலைந்து கொண்டிருந்த அந்த உழைப்பின் உருவம் மறைந்த துயரை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
எந்தக் காரியமானாலும் "என். வி. என். எங்கே கூப்பிடுங்கள்!" என்றுதான் பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பின்னர் நானும் அவரைத் தேடுவது வழக்கம். மருத்துவமனையிலே இருந்தபோது ஒருநாள் அவருக்கே தன் முடிவு தெரிந்து விட்ட நிலையில் தன் மகன்கள் சோமுவையும், செல்வத்தையும் என் கையோடு இணைத்து வைத்து, அவர்களுக்கு ஆணையிட்டார். என்ன ஆணை தெரியுமா? "நீங்கள் கட்சிக்கும், கலைஞருக்கும் என்றைக்குமே துரோகம் செய்யக் கூடாது.
துரோகம் நினைக்கவே கூடாது" என்றார். மருத்துவமனையில் இருந்த அனைவரும் கண்ணீர் கொட்டி நின்றோம். பிறகு என்னைப் பார்த்து "நான் ஏதாவது என்னை அறியாமல் எப்போதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று அவரைவிட பதினோரு வயது இளையவனான என்னைப் பார்த்துச் சொன்னபோது என் கண்ணீரைத் தடுக்க என்னால் இயலவே இல்லை.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் உடல்நலக் குறைவோடு இருந்த நிலையிலும் என். வி. என். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். காரை விட்டு இறங்க முடியாத அளவிற்கு அவரும் உடல் நலம் இல்லாமல் இருந்தார். காரின் அருகே என்னை அழைத்து எனக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றார். மற்றும் தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி அவர்களும், ஆளுநர் அவர்களும் என்.
வி. என். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். என். வி. என். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்து காரிலிருந்து இறங்கக்கூட முடியாத நிலையில் என்னை அழைத்து தனது வருத்தத்தைத் தெரிவித்து விட்டுச் சென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அதற்குப் பிறகு இரண்டு மாத காலமே உயிரோடு இருந்தார். அக்டோபர் மாதம் 2-ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளையொட்டி காலையில் நானும் கவர்னர் கே. கே. ஷா அவர்களும், அமைச்சர் பெருமக்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு, கட்சி அலுவலகத்திற்குச் சென்று புதுக்கோட்டை மாநாடு சம்பந்தமாக கலந்துரையாடி விட்டு, இரண்டு மணி அளவில் தான் வீடு திரும்பி சாப்பிட்டுவிட்டு படுத்தேன்.
சுமார் 3 மணி அளவில் இன்று சென்னை நகர காவல்துறை கமிஷனராக இருக்கும் ஸ்ரீபால் அவர்கள் எனக்கு போன் செய்து காமராஜர் அவர்களுடைய உடல்நிலை சரியில்லை என்றும் கவலைக்கிடமாக இருக்கிறதென்றும், மருத்துவர்கள் விரைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். நான் அவரிடம் உடனே அவருடைய இல்லத்திற்கு நான் செல்வதாகக் குறிப்பிட்டேன். உடனே போன் செய்து அமைச்சர் ராஜாராமை வரச் சொன்னேன். அவர் சில நிமிடங்களில் விரைந்து வந்தார்.
நான் சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்க முற்படுவதற்கும், காமராஜர் மறைந்து விட்டார் என்கிற தகவல் காவல்துறையினர் மூலமாக எனக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. கீழே இருந்த ராஜாராமை பார்த்ததும், அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு 'ஓ'வென கதறி விட்டேன். பின்னர் ஒருசில நிமிடங்களில் நான், ராசாராம், மாதவன், முரசொலி மாறன் ஆகியோர் காமராஜர் இல்லத்திற்குச் சென்றோம். அப்போது செய்தி வெளியே பரவாததால் காமராஜர் இல்லத்தில் பி.
ராமச்சந்திரன் அவர்களும், ராஜாராம் நாயுடு அவர்களும்தான் இருந்தனர். சற்று நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்து சேர்ந்தார். அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி பிறந்த நாளையொட்டி தேசத் தலைவர்களையெல்லாம் விடுதலை செய்யப் போகிறார்கள் என்று செய்தி வந்ததாகவும்-பிறகு அப்படி எதுவும் இல்லை என்று கேள்விப்பட்ட அதிர்ச்சியில் காமராஜர் அவர்கள் மாரடைப்புக்குப் பலியானார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.
ஆம்; ஜனநாயகத்தை இனிக் காத்திட இயலுமா என்ற கவலையிலேயே காந்தி பிறந்த நாளில் அந்த காந்தியடிகளின் வழி நின்று பணியாற்றிய காமராஜர் மறைந்து விட்டார். சில நிமிடங் களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சேர ஆரம்பித்தது. தமிழகத்திலே உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காமராஜரின் உடலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைத்து, அங்கேயே அடக்கம் செய்ய முடிவு எடுத்தனர். அந்தச் செய்தி என் காதிலே விழுந்ததும், நான் அந்தக் கருத்தை மறுத்து, தி.
மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அரசு மரியாதையுடன்தான் அடக்கம் செய்ய வேண்டுமென்றும், பொது மக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்திலேதான் வைக்க வேண்டுமென்றும் கூறினேன். அதிகாரிகளை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறிவிட்டு, உடனடியாக காமராஜரின் உடலை ராஜாஜி மண்டபத்திற்கு எடுத்துச் சென்று பொது மக்கள் பார்வைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறினேன்.
காமராஜர் மறையும்போது சரியாக 3.15 மணி என்ற போதிலும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அவரது உடல் ராஜாஜி மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நானும் அவரது உடல் சென்ற வேனுக்குப் பின்னாலேயே ராஜாஜி மண்டபம் சென்றேன். காமராஜருடைய உடலை எங்கே அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தபோது கிண்டியில் காந்தி மண்டபத்திற்குப் பக்கத்தில் ராஜாஜி நினைவகம் அருகில் அடக்கம் செய்யலாம் என்ற கருத்தினை நான் தெரிவித்தேன்.
அப்போது இரவு மணி எட்டாகி விட்டது. மழை வேறு. இருந்த போதிலும் நானே எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று பார்ப்பதற்காக கிண்டிக்குச் சென்றேன். என்னுடன் பேராசிரியர், ப. உ. சண்முகம், மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர். கிண்டிக்குச் சென்று அங்கே இருட்டில் காரைத் திருப்பி கார் வெளிச்சத்திலேயே இடத்தைப் பார்வையிட்டுத் தேர்ந்தெடுத்தோம்.
இரவோடு இரவாக மரங்களும், புதர்களும் நிறைந்த அந்த இடம் மறுநாள் சவ அடக்கம் செய்வதற்கேற்ற வகையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அமர்வதற்கேற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு அரசியல் மாறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் நாட்டுக்காக பாடுபட்ட பெருமகன் என்ற அளவில் கழக ஆட்சி பெருமுயற்சி எடுத்துக்கொண்டு அவரது இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தது.
காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சென்னை வந்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் உமாசங்கர் தீட்சித், கே. பிரம்மானந்த ரெட்டி, சி. சுப்பிரமணியம், கே. ஆர். கணேஷ் ஆகியோர் வந்தனர். பிரதமரை விமான நிலையத்தில் நானும் கவர்னரும் வரவேற்று நேராக ராஜாஜி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றோம். பிரதமர் காமராஜரது உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அக்டோபர் 3-ந் தேதி மாலை 3.25 மணிக்கு ராஜாஜி மண்டபத்தினை விட்டு சவ ஊர்வலம் புறப்பட்டது.
ராஜாஜி மண்டபத்து வராந்தாவிலிருந்த காமராஜர் உடலை நானும், அமைச்சர் ராஜராமும், ராணுவ வீரர்களின் துணையோடு தோள் கொடுத்து தூக்கி வந்து அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் வைத்தோம். கொட்டும் மழையிலே பெருந்தலைவர் காமராஜரின் சவ ஊர்வலம் மக்கள் கடலிலே ஊர்ந்து சென்றது. கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஸ் அவர்களும் எங்களுடன் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மறுநாள் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து காமராஜக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா என்று கேட்டபோது, காமராஜர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மண்டபம் கட்டப்படும் என்றும், காந்தி மண்டபத்துக்குப் பக்கத்தில் ராஜாஜி நினைவாலயம் இருப்பது போல அதற்கொப்ப பொருத்தமுடையதாக அந்த மண்டபம் அமையும் என்றும் கூறினேன்.
அறு வெறும் அறிவிப்போடு நிற்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் இன்றும் கிண்டியில் காமராஜரின் புகழ் பாடிக்கொண்டிருக்கும் காமராஜர் நினைவாலயம். அந்த அறிவிப்பு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பி. ராமச்சந்திரன், "தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் நீடித்து நிலைப்பதற்காக தமிழக அரசின் சார்பாக நினைவுச் சின்னம் எழுப்ப இருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அரசின் அந்த முடிவுக்கும் அரசின் அந்த முயற்சிக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
நினைவாலயம் மட்டுமல்லாமல் சென்னையில் அக்டோபர் 5-ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டபோது சென்னை மெரினா கடற்கரை சாலை காமராஜர் சாலை என்று அழைக்கப்படும் என்று அறிவித்தேன். அந்த இரங்கல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் பா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிஜலிங்கப்பா, பெரியவர் பக்தவத்சலம், சிலம்புச் செல்வர் ம.
பொ. சி., வீரேந்திர பட்டீல், தளபதி வீரமணி, அப்துல் லத்தீப், ராஜாராம் நாயுடு, எம். கல்யாணசுந்தரனார், டாக்டர் சந்தோஷம், ஹண்டே, வி. பி. சிந்தன், எஸ். எஸ். ராமசாமி படையாச்சி, எச். எல். கிருஷ்ணமூர்த்தி, கலிவரதன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மணிவர்மா ஆகியோர் உரையாற்றிய பிறகு இறுதியாக நான
் உரையாற்றினேன். அது வருமாறு: "காமராஜருடைய செயல் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் அவருடைய தொண்டின் மூலம் முன்னுக்கு வரத் தலைப்பட்டார்கள். தமிழ்நாட்டு அரசியலில் அடித்தளத்திலே மிகப் பிற்படுத்தப்பட்ட ஒரு இடத்திலே இருந்து தோன்றி இந்திய நாட்டு அரசியல் வானிலே ஒளிமிகுந்த கதிரவனாகத் திகழ்ந்து தமிழ்நாட்டின் பெருமையினை இந்திய அரங்கிலே உயர்த்திய பெருந்தகையாளர்தான் காமராஜர் அவர்கள்.
காமராஜர் அவர்களோடு இன்று நேற்றல்ல; எதிர்க்கட்சி வரிசையிலே இருந்து எதிர்க்கக்கூடிய சூழ்நிலை இருந்த அந்தக் காலத்திலேயே அவர் மதிக்கத்தகுந்த ஒரு தலைவர்; பாராட்டத் தகுந்த ஒரு பெரியவர்; ஒரு தியாகி; ஒரு உழைப்பாளி; தொண்டர்க்குத் தொண்டர்; தலைவர்க்கு தலைவர் என்பதை நாங்கள் உணர்ந்தே அதை உரைத்தே வந்திருக்கிறோம்."
மேலும் அந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்றும்போது நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக நண்பர் தண்டாயுதபாணி அவர்கள் மாணவர்கள் சார்பில் என்னிடம் தேதி கேட்டபோது, நான் அந்தத் தேதியில் வேறொரு நிகழ்ச்சிக்காக தேதி கொடுத்ததை ரத்து செய்து விட்டு காமராஜருடைய பிறந்த நாள் விழாவிற்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தேன். நண்பர்கள் திகைத்துப்போய், நீங்கள் வரமாட்டீர்கள், என்று நினைத்தோம்; கேட்க வேண்டுமென்பதற்காகத்தான் கேட்டோம் என்று கூறியபோது நான் அவர்களிடம் "நாங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அளிக்கின்ற மரியாதை இது என்று நினைக்க வேண்டாம்.
உழைப்பிற்கு, தியாகத்திற்கு தன்னலமற்ற தொண்டிற்கு நாங்கள் அளிக்கின்ற மரியாதை இது என்று கூறியதையும் நினைவூட்டினேன்", பின்னர் சட்டப் பேரவையில் 22-10-75-ல் காமராஜருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேறியபோது விரைவில் பேரவையில் காமராஜர் படம் திறந்து வைக்கப்படுமென்றும் அறிவிப்பு செய்தேன்.
