உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது கூறியதாவது:-
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது கூறியதாவது:- · 202 / 391

அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது கூறியதாவது:- "இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலைமைகளைக் கண்டு இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட பெரிய தலைவர்கள் - தங்களுடைய வயதான காலத்தில் - 'தங்களுடைய பேரப் பிள்ளைகள் சுதந்திர இந்தியாவில் உலவுவார்கள்;-எல்லா விதமான உரிமைகளோடும் உலவுவார்கள்' என்று எண்ணிக் கொண்டிருந்த பழைய காலத்துத் தேசியவாதிகள்-கண்கலங்கும் காட்சியைக் காண்கிறோம்!

இந்தக் காட்சி இருக்கலாமா? முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர்-மிகப் பெரிய அறிஞர்-அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், 'பத்திரிகைச் சுதந்திரம் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதே' என்று எழுதியதை நேற்று இரவு படித்தேன்; எண் கண்கள் கலங்கின!

இப்படி, இந்தியத் திருநாட்டில், தேசத் தலைவர்கள்-தேசியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள்-பல ஆண்டுக் காலம் தங்களை சிறைவாழ்விற்கு ஒப்படைத்துச் சுதந்திரம் பெறுவதற்காகப் பாடுபட்டவர்கள்-சிறைச்சாலைகளில் கஞ்சிக் கலயங்களை ஏந்தியவர்கள் - சித்திரவதைக்கு ஆளானவர்கள் - எல்லாம், 'கிடைத்த சுதந்திரம் என்னவாகுமோ' என்கின்ற அச்சத்தால் ஐயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! தூக்கமில்லாமல் வாடுகிறார்கள்!

கண்ணீர் மல்குகிறார்கள் - கதறுகிறார்கள்! அவர்களுடைய கண்ணீரைத் துடைக்கத் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் முன்வர வேண்டாமா என்று கேட்கத் தான் நாட்டு மக்களுடைய உணர்வை அவருக்கு எடுத்துச் சொல்லத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அலகாபாத் தீர்ப்பையொட்டி-அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய சில நிபந்தனைகளையொட்டி-இந்தியாவின் ஜனநாயகத்தை உலகம் பார்த்து வேதனைப்படுகின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தான் கழகம் கவலையோடு உற்று நோக்குகிறது!

செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன! அதற்கு ஆங்கிலத்தில் 'சென்சார்' என்று பெயர்; 'சென்சார்' என்றால்-இதுவரையில் சினிமாவில் தான் அதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்; அதுவும், 15,000 அடி படம் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தால் அதிலே இரண்டாயிரம் அடியை வெட்டி விட்டு மீதியுள்ள படத்தை வெளியிடத் தருவார்கள்.

அது கூட இப்போது செய்வதில்லையே? ஆனால் இன்றைக்குள்ள பத்திரிகை 'சென்சார்', 'செய்திகளையே போடாதே' என்கிறது! அமெரிக்காவில் ஒரு 'ஜனாதிபதி' சொன்னதாக நினைவு; காலையில் எழுந்ததும், 'நியூயார்க் டைம்ஸ்' போன்ற பத்திரிகையைப் பார்த்தால்தான், நாட்டில்-உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்று சொன்னாராம்! பத்திரிகையைப் பார்த்துத்தான் உலகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது! பத்திரிகை, காலத்தின் கண்ணாடி-நாட்டின் பிரதிபலிப்பு!

நாட்டுமக்கள் உள்ளத்தின் எதிரொலி பத்திரிகை-அது எந்தக்கட்சிப் பத்திரிகையாக இருந்தாலும் சரி தான்! தலைமை அமைச்சர், "நான் பத்திரிகை உரிமைகளை உடனடியாகத் தர இயலாது" என்று கூறியிருக்கிறார்; 'எதற்காகப் பத்திரிகைகளுக்கு உரிமை அளிப்பது - என்னை எதிர்க்கவா' என்று கேட்டிருக்கிறார்!

பத்திரிகைகளுடைய 'சென்சாரை'ப் பற்றி வந்திருக்கின்ற தாக்கீதுகள், எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன; தமிழ்நாட்டிற்கும் அனுப்பப்பட்டிருக்கிறது; அந்தத் தாக்கீதுகளில், மாநில அரசுகள், ஒன்றிரண்டைச் சேர்த்தும் நடைமுறைப்படுத்தலாம். ஆந்திர மாநிலத்தில் எதைச் சேர்த்திருக்கிறார்கள் தெரியுமா? 'பத்திரிகைகளில் தலைமை அமைச்சரைப் பற்றியோ - தலைமை அமைச்சரின் பேச்சுக்களைப் பற்றியோ தவறான விமர்சனம் எதுவும் வரக்கூடாது' என்று இருக்கிறது!

ஆனால் ஆந்திர மாநிலத்தில், 'தலைமையமைச்சரைப் பற்றி மாத்திரமல்ல-முதலமைச்சரைப் பற்றி வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சேர்த்திருக்கிறார்கள்! நாம் அவர்களுடைய தாக்கீதுகளை நடைமுறைப்படுத்துகின்ற நேரத்தில், நினைத்தால் சேர்த்திருக்கலாம்; ஆனால், நாம் ஜனநாயகவாதிகள்! கருத்தைக் கருத்தால் சந்திப்போம்- எழுத்தை எழுத்தால் சந்திப்போம்- சொல்லைச் சொல்லால் சந்திப்போம்- என்கின்ற தெம்பு இருக்கின்ற காரணத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தகுந்த அவதூறான விஷயங்கள் வருமானால், 'அவைகளுக்கென்று ஏற்கனவே உள்ள சட்டங்கள் அவைகளைப் பார்த்துக் கொள்ளும்' என்று கருதுகிறோம்!

ஆகவே, 'முதலமைச்சரைப் பற்றி எழுதாதே-அவரைப் பற்றி எதுவும் சொல்லாதே' என்று சொல்லுகின்ற அளவுக்கு எழுதுகோல்களை முறிக்கின்ற சட்டத்தை - நாக்குகளை அறுக்கின்ற சட்டத்தை-கழகம் விரும்பவில்லை! ஆகவே, எங்களுடைய மனச்சாட்சி இடம் தருகின்ற வரையில், அந்தத் தாக்கீதுகளை நாங்கள் நிறைவேற்றுவோம்! மனச்சாட்சியையும் கடக்கின்ற நிலைமைகள் வருமேயானால், 'யோசிப்போம்' என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தர் ஒரு வாலிபனைச் சந்தித்தார்; அந்த வாலிபனிடத்தில் புத்தர் சொன்னார்- "ஏ, வாலிபனே!

வீணையினுடைய நரம்பை மேலும் அதிகமாக முடுக்கினாலும் அல்லது மேலும் அதிகமாகத் தளர்த்திவிட்டாலும் நல்ல இசையைக் கேட்க முடியாது" என்று! வீணையில் நரம்பை அதிகமாக முடுக்கினாலும் நல்ல இசையைக் கேட்க முடியாது; அதிகமாகத் தளர்த்தி விட்டாலும் நல்ல இசை கிளம்பாது; அது எந்த அளவு முடுக்கப்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இருந்தால் தான், நல்ல இசை கிளம்பும்! அதிகமாக முடுக்கப்பட்டு விட்டால்-சர்வாதிகாரம்!

அதிகமாகத் தளர்த்தப்பட்டு விட்டால்-பழைய காலத்து மன்னர்களுடைய ஆட்சி! இன்றைக்கும் நாம் விரும்புவது, சர்வாதிகாரத்திற்கும்-பழங்கால மன்னர் ஆட்சிக்கும் இடையிலே உள்ள ஜனநாயக ஆட்சி! வீணை நரம்பில் இனிய நாதம்-இன்ப நாதம்-எழிலிசை கிளம்ப வேண்டுமேயானால், நரம்பு எந்த அளவுக்கு முடுக்கப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு முடுக்கப்பட வேண்டும்! 'நான் இப்படித் தான் முடுக்குவேன்' என்று முடுக்கினால், நாதம் எழுவதற்குப் பதிலாக நரம்பே அறுந்து விடும்!

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலைமை இருக்கப் போகிறது? ஒரு வாரமா-ஒரு மாதமா-ஓராண்டுக் காலமா-அல்லது நீண்ட காலமா-புரியவில்லை? எங்கள் நிலை என்னவோ-புரியவில்லை! அதற்காக நாங்கள் திகைக்கவில்லை - வருத்தப்படவில்லை! இன்றைக்கே ஒத்திகை பார்ப்பதைப் போலத் தான், நம்முடைய அமைச்சர்களெல்லாம், சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு நடந்து வந்தார்கள்; நான் தான் சொன்னேன்- 'எல்லாக் கார்களும் அங்கேயே நிறுத்தப்பட்டு, அமைச்சர்களெல்லாம் நடந்தே வரட்டும்-ஒத்திகை பார்க்கட்டும்' என்று!

ஆகவே, இது எங்களுக்குப் பழக்கமான காரியம்! என்ன நடக்கப் போகிறது இந்தியாவில்? நாங்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்- 'இந்திரா காந்தி அம்மையார், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவார்கள் - சர்வாதிகாரத்தின் எல்லைக்குச் செல்ல மாட்டார்கள்' என்று!

அந்த நம்பிக்கையோடு சொல்லுகிறேன் - இராஜாஜி இருந்தால் - 'ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுவார்! பெரியார் இருந்தால்- 'இதை வைத்துப் புரட்சி நடத்துங்கள்' என்று சொல்லுவார். காயிதே மில்லத் இருந்தால்- 'நெருக்கடி நிலை தேவையில்லை' என்று சொல்லியிருப்பார்!

அண்ணா இருந்தால் என்ன சொல்லுவாரோ - அதைச் சொல்லுகிறேன்-இப்போது! இந்தக் கடற்கரையில் ஒரு சூளுரையைத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். "எழுந்து நில்லுங்கள்"- (கடற்கரை வெண்மணற் பரப்பில் வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் எழுந்து நிற்கிறார்கள் - மேடையிலுள்ள தலைவர்களும் எழுந்து நிற்கின்றனர்!) "நான் சொல்லுவதை அப்படியே சொல்லுங்கள்"-(நான் சொன்ன சூளுரையை மக்கள் திரும்பச் சொல்லிச் சூளுரை ஏற்றனர்) "எந்த நிலையிலும் - எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும்- இந்தியாவின் மக்களாட்சி முறைக்குக் கேடு ஏற்படாமல்- பாதுகாப்பதற்குத் தயங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்!

தேசத் தலைவர்கள் விடுதலை- பத்திரிகைகளின் நியாயமான உரிமைகள்- இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று- இந்தியப் பிரதமர் அவர்களை- தமிழ்நாட்டு மக்களின் இந்த மாபெரும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. வாழ்க ஜனநாயகம்!" இந்தச் சூளுரை முழக்கத்துடன் அந்த மக்கட் பெருங்கடல் கடற்கரையை விட்டு நகர்ந்துசென்றது.