நெஞ்சுக்கு நீதி
காமராஜரின் கண்ணீரும் கடற்கரை சூளுரையும்! · 201 / 391
காமராஜரின் கண்ணீரும் கடற்கரை சூளுரையும்! நெ ருக்கடி நிலையின் விளைவாக தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் தினந்தோறும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அது பற்றிய விவரம் எதுவும் பத்திரிகை சென்சார் முறை காரணமாக வெளி உலகத்திற்கு தெரியவில்லை. மற்ற மாநிலங்களில் கைதுகள் தொடர்ந்த போதிலும் தமிழகத்தில் மட்டும் கழக அரசு யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் தமிழகத்திலிருந்து அச்சாகி புதுவை மாநிலத்திற்குச் சென்ற முரசொலி, கழகக் குரல் போன்ற ஏடுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் நெருக்கடி நிலை இங்கே கழக அரசு இருந்த காரணத்தால் மக்களுக்கு அதன் வேகம் தெரியாத அளவிற்கு பாதுகாப்பாக இருந்தது. அதுகுறித்து அப்போது காந்தியடிகள், ராஜாஜி ஆகியோரின் பேரனாகிய ராஜ்மோகன் சென்னையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடும்போது "தேசத் தலைவர்கள் கைதானது குறித்தும், இதற்கு முன்பு இல்லாத வகையில் பத்திரிகைகள் மீது 'சென்சார்' முறை அமுலாக்கப்பட்டது குறித்தும் தி. மு. கழகம் தீட்டியிருந்த பெருமைமிகு தீர்மானத்தை வாழ்த்துவதற்குத் தான் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிகிறது என்று எண்ண வேண்டியிருக்கிறது.
நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர்களான காந்திஜி, இராஜாஜி, அண்ணா ஆகியோரின் வருந்தும் இதயங்களை டாக்டர் கருணாநிதி நிச்சயம் மகிழ்வுற வைத்திருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும், குரலாகவும் தமிழ்நாடு ஆகியிருக்கும் இந்த நேரம் போல் பாதித் தமிழனாக இருக்கும் என்னுடைய பெருமை இதற்கு முன் வேறெப்போதும் என்றுமே உயர்ந்திருக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் இதர மக்களும் தமிழ்நாட்டு தலைவர்கள் தெரிவித்திருக்கிற உணர்ச்சிகளைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.
தலைவர்கள் ஆரம்பித்து வைத்த காரியம் அசைக்க முடியாத நெஞ்சுறுதி கொண்ட பலரால் நிச்சயம் நிறைவேற்றி வைக்கப்படும்" என்று கருத்து தெரிவித்திருந்தார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டவுடன் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து திருத்தணி பொதுக்கூட்டத்தில் பேசியது அப்போது பழைய காங்கிரஸ் தினசரியான "நவசக்தி" பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது.
சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைகிறது என்பதையும், தனது தேசீய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத அவர் உடல் நலிவுற்றுப் படுத்த படுக்கையானார். ஜூலை 4-ஆம் நாள் காலை நானும் கல்வி அமைச்சர் நாவலரும் காமராஜர் அவர்களைக் காண அவரது இல்லம் சென்றோம். அவர் அருகே சென்று அமர்ந்த என்னைக் கண்டதும் அவரது கண்கள் கலங்கின. மெதுவாகத் தொட்டேன். தழுவிக் கொண்டார்.
அவரது கண்கள் நீர்வீழ்ச்சிகளாயின. "தேசம் போச்சு! தேசம் போச்சு!" என்று உரக்கக்கூவினார். நான் வாய்விட்டுக் கதறி அழுது விட்டேன். நாவலர் கண்ணீர் வடித்தவாறு எங்களிருவரையும் தேற்றினார். "அய்யா! நீங்கள் சொல்லுங்கள்! இப்போதே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுகிறோம்! இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த-சர்வாதிகாரத்தை அழிக்க-நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள்! உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயார்!"
என்றேன். "பொறுமையாக இருங்கள்! அவசரப்படாதீர்கள்! இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்" என்று அவர் அறிவுரை கூறினார். நெருக்கடிநிலைப் பிரகடனத் தொடர்பாக பிரதமர் வானொலியின் மூலமாக இருபது அம்சத் திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டு மற்ற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் தெரியுமா?
மராட்டிய முதல்வர் எஸ். பி. சவான் "பிரதமரது இருபது அம்சத் திட்டம் உண்மை உணர்வுடன் அமுல்படுத்தப்படும்" என்றும் - கேரள முதல்வர் அச்சுத மேனன் "இருபது அம்சத்தை உடனடியாக நிறைவேற்ற நிர்வாக இயந்திரத்தை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறோம்.
தேவையானால் அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றும்-கர்நாடக காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி உடனடியாக மாநில அரசு இருபது அம்சத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டது என்றும்-மத்தியப் பிரதேச அமைச்சரவை கூட பிரதமர் அறிவித்த திட்டங்கள் உறுதியோடு உடனடியாக அமுல் படுத்துவதென்று முடிவு செய்தது என்றும்-பஞ்சாப் முதல்வர் ஜெயில் சிங் "இருபது அம்சத் திட்டங்கள் உடனடியாகவும், தீவிரமாகவும் நிறைவேற்றப்படும்" என்றும் - அஸ்ஸாம் முதல்வர் எஸ்.
சி. சின்கா "பிற்போக்கு சக்திகளால் இந்தத் திட்டங்கள் இதுவரை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது புதிய வேகத்துடன் அவைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றும்-ஆந்திர முதல்வர் வெங்கல் ராவ் அவர்கள் "இந்தப் புதிய திட்டத்தினை வேகத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படுத்த உறுதி எடுப்போம்" என்றும் - பீகார் முதலமைச்சர் ஜகநாத் மிஸ்ரா "சமுதாயத்தின் அமுக்கப்பட்ட மக்களுக்கு இது உதவும்.
இப்போதே செயல்படுத்தப் போகிறோம்" என்றும் தெரிவித்தார்கள். ஆனால் தமிழக கழக அரசின் சார்பில் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்ட போது "பிரதமர் அறிவித்த திட்டங்களை எல்லாம் நாங்கள் முன்பே நிறைவேற்றி விட்டோம். அதற்கான புள்ளி விவரங்கள் இதோ! அதற்கு மேலும் அவர்கள் சொல்லாத திட்டங்கள் அரிசனங்களுக்கும், மீனவர்களுக்கும் இலவச வீடு வழங்கும் திட்டம்; குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம்; கழக அரசு செயல்படுத்துகின்றது" என்று பதில் கூறியது தமிழகத்தின் சார்பில் நான் ஒருவன் மட்டும் தான்.
தமிழகத்தில் உள்ள நிலைமை பற்றி கலந்தாலோசிக்க ஜூலை 5-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டினைக் கூட்டி மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளில் எந்தவித தொய்வும் இன்றி ஆற்றுவதற்கான யோசனைகளை வழங்கினேன். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாதுகாப்பு சட்டம் பாயும் என்று அறிவித்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை கடற்கரை சீரணி அரங்கில் மாபெரும் பொதுக் கூட்டம் ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மூவரும் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உணர்ச்சிப் பெருக்கெடுத்த நிலையில் வந்து கலந்து கொண்டனர்.
