நெஞ்சுக்கு நீதி
இந்தியாவிலேயே முதல் தீர்மானம்! · 200 / 391
இந்தியாவிலேயே முதல் தீர்மானம்! அவசர நிலையைப் பிரகடனம் செய்தது பற்றி வானொலியின் மூலம் இந்திரா காந்தி 26-ஆம் தேதி காலையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- "இந்தியாவின் சாமானிய ஆடவர்கள், மகளிர் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே ஆழ்ந்த, பரவலான சதி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நிச்சயமாகக் கருதுகிறேன்.
ஜனநாயகத்தின் பேரால் ஜனநாயகம் செயல்படுவதையே குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நம்முடைய ராணுவத்தையும் போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களில் நாம் உறுதியுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவி புரிந்துள்ளன. பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும், ஏழை மக்கள், நிர்ணயமான வருமானம் உள்ளவர்கள் உட்பட பல்வேறு பிரிவினரின் இன்னலைப் போக்க மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.
அவற்றை விரைவில் அறிவிப்பேன். புதிய அவசர நிலை பிரகடனம், சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜைகளின் உரிமைகளை எவ்வகையிலும் பாதிக்காது என்று உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். கூடிய விரைவில் இந்தப் பிரகடனத்தை கைவிட்டுவிடும் வகையில் உள்நாட்டு நிலைமைகள் துரிதமாக அபிவிருத்தி அடையும் என்று நம்புகிறேன்."
தி. மு. கழகம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் துடித்தெழுந்தது! நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்; ஜூன் மாதம் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. ஒருநாள் இடைவெளியில் கூட்டிய போதிலும் மொத்தம் 75 செயற்குழு உறுப்பினர்களில் 63 பேர் கலந்து கொண்டார்கள். முதல் நாள் இரவு தலைமைக் கழகத்தினருடன் கலந்துரையாடி விட்டு விடியற்காலை நான்கு மணி அளவில் என் கைப்படத் தீர்மானத்தை எழுதி, மறுநாள் செயற்குழு விவாதத்திற்கு வைத்தேன்.
அந்தத் தீர்மான வாசகமாவது:- "உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில் அண்மைக் காலமாக ஆளுங் காங்கிரசார் கடைப்பிடிக்கும் போக்கும் பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும் ஜனநாயக ஒளியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு, தி. மு. கழகச் செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய நாடு சுதந்திரம் பெற்று, விடுதலைக்கான வெள்ளி விழாவும், குடியரசுப் பிரகடனத்திற்கான வெள்ளி விழாவும் கொண்டாடி முடித்த பிறகும், அடித்தளத்து மக்கள், ஏழை, எளியோர், பாட்டாளிகள் வாழ்வில் நிம்மதியற்ற நிலையே தான் நீடித்து வருகிறது. அவர்களுக்காகப் பெரிய சாதனைகளை உருவாக்கப் போகிறோம் என்று மத்திய அரசினரால் அறிவிக்கப்பட்ட பட்டியல்கள் ஏராளமெனினும், பயன் எதுவும் ஏற்படவில்லை. தனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஆளுங் காங்கிரசும், குறிப்பாக திருமதி இந்திரா காந்தி அவர்களும் முக்கியமாக வறுமையை விரட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றப் போவதாகக் கூறிவந்தனர்.
அந்தப் பணிக்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வறுமை நீங்கி ஏழையெளிய மக்கள் மகிழ்வெய்தி, இந்திய நாடு மேன்மையுறுவது எல்லா கட்சிகளுக்கும் உடன்பாடான கொள்கைதான். குறிப்பாக, தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில், இந்திரா காந்தி அறிவித்த முற்போக்குத் திட்டங்களை வரவேற்றுப் பாராட்டித் தனது ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறது. வங்கிகளைத் தேசியமயமாக்குவது மன்னர் மானியத்தை ரத்து செய்வது போன்ற செயல்களை வற்புறுத்தியதும், வரவேற்றதும் தி.
மு. கழகம் என்பதை நாடறியும். இது போன்ற இரண்டொரு அறிவிப்புக்களால், வறுமை தொலைந்து விடவில்லை. வறுமையை அகற்ற முடியாததற்கான பழியை எதிர்க்- கட்சிகளின் மீது சுமத்துகிற பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த இந்திரா காந்தி அவர்கள், இப்போது திடீரென உள் நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் அவசரப் பிரகடனத்தைச் செய்துவிட்டு, அந்த அவசரச் சட்டத்தையொட்டி, ஏழையெளிய பின்தங்கிய மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் இல்லாமல், இதுவரை இருந்து வந்த ஜனநாயகச் செயல்முறையிலேயே ஏழைகளுக்கான நன்மைகளை வழங்குவதை எந்தச் சூழ்நிலை தடுத்தது? நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலத்துடனும், இந்தியாவில் பல மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியுடனும் வலிவோடு விளங்குகிற இந்திரா காந்தி, முற்போக்குத் திட்டங்களை ஏழைகளுக்கான நன்மைகளை நாடாளுமன்ற, சட்டசபைப் பெரும்பான்மையோடு சட்டமாக்க முடியவில்லை; ஆகவே உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அவசரச் சட்டமென்னும் ஆட்கொல்லி சட்டத்தைப் பிரகடனம் செய்கிறேன் என்பது வேடிக்கையான விபரீத வாதமாக இருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் தமிழகத்தில் அல்லது கேரளத்தில், அல்லது குஜராத்தில், ஏழை எளியோரை வாழவைக்கும் சட்டங்களை மறுக்கின்ற அரசுகள் இருக்கின்றனவா? வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், ஏழை எளிய மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தமிழகத் தி.மு.க. அரசு நிறைவேற்றத் துடிக்கிற திட்டங்களை அங்கீகரிக்காமல் முட்டுக்கட்டை போடுவதில் மத்திய அரசு முனைப்பாக இருந்து வருகிறது என்பது தான் உண்மையாகும்.
உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு, பொய்யின் நிழலில் நின்று கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்குவதற்குத் திட்டம் தயாரித்து, அந்தத் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான போலிக் காரணங்களை தேடியலைந்து, வீண் அபவாதங்களை வாரியிறைத்து - எடுத்ததற்கெல்லாம் சதி, வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்குவாதிகள் என்ற சொற்கணைகளைப் பொழிந்து காலாகாலத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் திருமதி இந்திரா காந்தி நேற்றையதினம் (26-6-75) அதிகாலையில் சர்வாதிகாரத்திற்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார். வெளிநாட்டார் பகையிலிருந்து நாட்டை மீட்க அணி திரண்டு நின்றவர்களையெல்லாம், இன்று உள்நாட்டைப் பாதுகாக்கிறேன் என்ற பெயரால் சிறைக் கொட்டடிகளில் தள்ளியிருக்கிறார்.
இந்திய மண்ணின் விடுதலைக்காக தியாகத் தழும்புகளை ஏற்ற பழம்பெரும் தேசபக்தர்கள், கைதிகள் என்ற பரிசினை, இந்திரா ஆட்சியில் பெற்றிருக்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியின் போதும் இல்லாத கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தேசத் தலைவர்களின் மீது ஏவி விடப்பட்டுள்ள அடக்குமுறை கண்டு நாடு குமுறி எழுந்துள்ளது. எல்லா செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டன. அப்படியொரு சட்டம் பாய்ந்துள்ளது இப்போது!
வையம் புகழ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூட வானொலி வெளியிடவில்லை. 'சிலர் கைது' என்று கூறி, நாட்டின் நாயகர்களை நபர்களில் சிலராக வானொலி வர்ணிக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட பிறகே பத்திரிகைகளில் செய்திகள் வெளி வரவேண்டுமாம். விடுதலை பெற்ற இந்தியாவில், எத்தனையோ முறை எதிர்க்கட்சிகளின் எழுச்சி மிக்க கிளர்ச்சிகள் எரிமலைகளாக வெடித்திருக்கின்றன. அப்போதெல்லாம், ஜவகர் காலத்திலோ, லால்பகதூர் காலத்திலோ, பாயாத உள்நாட்டுப் பாதுகாப்பு அவசரச் சட்டம், இன்று முதன்முறையாகப் பாய்வானேன்.
சதி நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோர், தகாத முறையில் பேசுவோர், எழுதுவோர் தண்டிக்கப்பட ஏற்கனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருவது தேவை தானா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றது தானா? இவைகளையெல்லாம் இந்திரா காந்தி அம்மையார் சிந்தித்துப் பார்த்து, நேற்றைய அவசர காலப் பிரகடனத்தினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்திட முன்வரவேண்டும்.
பத்திரிகையாளர்களின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டு பத்திரிகைகளுக்குரிய நியாயமான உரிமைகளைத் தடையின்றி வழங்க வேண்டும். அதுவே, இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்கும் காரியமாகும் என்று தி.மு.க. செயற்குழு சுட்டிக் காட்டுவதோடு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தச் செயற்குழு பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு விடுக்கும் இந்த வேண்டுகோள் வெற்றி பெற இந்திய நாட்டு மக்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டு மக்கள், காந்தி அடிகள் நெறியை மறவாமலும், ஜனநாயகச் சின்னமாம் அறிஞர் அண்ணாவின் பாதையிலிருந்து தவறாமலும், தமக்கே உரிய தனிப் பண்பாட்டுடன் அமைதியான முறையில் வன்முறை தவிர்த்த வழியில் சட்டம், ஒழுங்குக்கு ஊறு நேரா வண்ணம் நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு, காண வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது."
தி. மு. கழகம் தமிழகத்தில் ஆளுங் கட்சியாக இருந்த போதிலும் துணிந்து மத்திய அரசை ஆளும் இந்திரா காந்திக்கு எதிராக இப்படிப்பட்ட தீரமிக்க தீர்மானத்தை அன்றைய தினம் நிறைவேற்றியது இந்திய அளவில்-ஏன் உலக அளவில் கூட பெரிதும் வியந்து பாராட்டப்பட்டது. அகில இந்தியாவிலும் நெருக்கடி நிலையை - இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை அன்றைய தினம் கண்டித்து முதன்முதலாக கட்சி ரீதியாக தீர்மானம் நிறைவேற்றி வெளியிட்ட பெருமையும் தி.
மு. கழகத்திற்குத் தான் உண்டு. கழகம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதற்கு மறுநாள்; உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிற யாரும் அதை எதிர்த்து வழக்கு மன்றங்களுக்குப் போக முடியாது, அதற்கு உரிமை கிடையாது என்ற வகையில் ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்தார். கைது செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையென மற்றொரு அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.
