உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நெருக்கடி நிலைப் பிரகடனம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நெருக்கடி நிலைப் பிரகடனம் · 199 / 391

நெருக்கடி நிலைப் பிரகடனம் -ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி என்பது சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில்-குறிப்பாக இந்தியாவின் நீதித்துறையிலே அழியாத இடம் பெற்ற தினமாகும். அன்று தான் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த நாள்.

தன்னுடைய தேர்தல் வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதற்காக பிரதமர் இந்திரா காந்தி ஊழல் முறைகளைக் கையாண்டார் என்ற புகார்களில் இரண்டை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்த நீதிபதியின் பெயர் ஜகன் மோகன்லால் சின்ஹா. இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று வழக்குத் தொடுத்தவர் அவரை எதிர்த்து அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த ராஜ்நாராயண். அந்த வழக்கில் பிரதமருக்கு ஆதரவாக வழக்கறிஞர் என்.

சி. காரேயும், ராஜ்நாராயணனுக்கு ஆதரவாக சாந்திபூஷனும் ஆஜரானார்கள். இரண்டு வழக்கறிஞர்களும் அரசியல் சார்புடையவர்கள். காரே புதிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; சாந்திபூஷன் பழைய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர். இந்திரா காந்தி தனது தேர்தல் வெற்றிக்காக இந்திய சர்க்காரின் கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாகப் பணியாற்றிய யஷ்பால்கபூர் அவர்களை தனது தேர்தல் வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்திக் கொண்ட ஊழலையும், இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களில் உத்திரப்பிரதேச அரசு செய்த ஏற்பாடுகளையும், போலீஸ் படைகளை அங்கு காவல் போட்ட வகையில் ஊழல் செய்தார் என்பதையும் நீதிபதி உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

யஷ்பால்கபூர் அவர்கள் முன்னதாகவே தனது வேலையை ராஜினாமா செய்த போதிலும் அது குடியரசுத் தலைவரால் ஜனவரி 25-ஆம் தேதிதான் ஒப்புக் கொள்ளப்பட்டது; எனவே அந்தத் தேதி வரையில் அவர் பணியில் இருந்ததாகத்தான் பொருளாகும். அந்தக் கால இடைவெளியில் அவர் இந்திரா காந்தியின் வெற்றிக்காக உழைத்தது முறை கேடானது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென்று ஒரு பெரிய திருப்பத்தை அந்தத் தேர்தல் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் ஏற்படுத்தி நாடு முழுவதும் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

அனைவரது உள்ளத்திலும் "அடுத்தது என்ன?" என்ற கேள்வி பரவலாக ஒலிக்கத் தொடங்கியது. இந்தத் தீர்ப்பு கூறப்பட்ட அரைமணி நேரத்திற்கெல்லாம் பிரதமர் சார்பில் நீதிபதி சின்ஹா முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டு அந்தத் தீர்ப்பின் அமுல் இருபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று உத்தரவிட்டார். ஆனால் அந்த இருபது நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டால், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் "அமுல் நிறுத்த" உத்தரவு அந்தத் தேதியுடன் ரத்தாகிவிடும் என்று நீதிபதி சின்ஹா தெரிவித்தார்.

இந்திரா காந்தியின் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களான ஜகஜீவன்ராம், சவான், உமாசங்கர் தீட்சித் பிரம்மானந்த ரெட்டி, எச். ஆர். கோகலே, டாக்டர் சங்கர்தயாள் சர்மா, புது காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்திரா காந்தி பிரதமராக நீடிக்கிறார் என்றும், இந்திரா காந்தியின் தலைமையில் முழு நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருப்பதாகவும், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்றும், நாட்டின் ஒருமைப்பாடு, ஸ்திரத் தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இந்திரா காந்தியின் தலைமை அவசியம் என்றும் தெரிவித்திருந்தனர்.

தீர்ப்பையொட்டி இந்திரா காந்தி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமராக இருந்த பழைய காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாயும், சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் மதுதண்டவாதே எம். பி. யும், சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டசும், இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் தாரியாவும் தனித்தனியாசுக் கருத்து தெரிவித்திருந்தனர். பழைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். கே. பட்டீல், எஸ்.

என். மிஸ்ரா, சாக்ளா ஆகியோர் தீர்ப்பு குறித்து தங்களது மகிழ்ச்சியினைத் தெரிவித்துக் கொண்டார்கள் சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள், அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகும் இந்திரா காந்தி பிரதமராக நீடிக்க வேண்டும் எனக் கூறப்பட்ட கருத்தைப் பலமாகக் கண்டித்தார். ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் அவர்கள் காஷ்மீரில் இருந்த குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அவர்களை ஜனதா முன்னணி கட்சிகளின் சார்பில் சந்தித்து அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப பிரதம மந்திரி இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தைத் தெரிவித்தார்.

தீர்ப்பு வெளியான அன்று நான் தஞ்சை மாவட்டத்தில் முத்துப்பேட்டை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தேன். தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் என்னுடைய கருத்தைக் கேட்ட போது, "ஆளும் காங்கிரஸ் இந்தியாவில் மிகப் பெரிய கட்சி; இந்தியா, உலகத்தில் மதிக்கத்தக்க மிகப்பெரிய நாடு. இவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்து இப்போது மத்திய அரசில் இருப்பவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ, அந்த முடிவுதான் இந்தியாவின் எதிர்கால அரசியலில் முன்மாதிரியாகத் திகழும்.

இதுபோன்ற ஒரு நிலைமை தமிழ்நாட்டில தி. மு. கழக அரசுக்கு ஏற்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள இந்திரா காங்கிரஸ் உட்பட மற்ற எதிர்க் கட்சிகள் எல்லாம் எவ்வளவு கூப்பாடு போட்டிருப்பார்கள், என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தச் சூழ்நிலையிலும் தி. மு. கழகம் தன் பெருந்தன்மையை உணர்த்தும் வகையில்தான் இந்தக் கருத்தை அறிவிக்கிறது" என்று கூறினேன்.

நிருபர்கள் தொடர்ந்து "இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்களா? வேண்டாமென்று சொல்கிறீர்களா?" என்று குறிப்பிட்டுக் கேட்டதற்கு, "அவர்களாகவே ராஜினாமா செய்திருந்தால் நாங்கள் பாராட்டியிருப்போம்" என்று கூறியதோடு, "நாங்கள் எங்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறோம்.

மேற்கொண்டு நடக்க வேண்டியது அவர்களுடைய அபிப்பிராயம். அவர்கள் எடுக்கும் முடிவு ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்காலத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்குமென்பதை மறந்து விடக்கூடாது. மறந்து விடக்கூடாது. ஜனநாயகத்திற்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும்" என்று கூறினேன்.

இந்திரா காந்திதான், நாட்டின் ஒரே தலைவர் என்று டெல்லியில் பல இடங்களில் இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குகின்ற பணியினைச் செய்த போது சந்திரசேகர் எம். பி., கிருஷ்ணகாந்த் எம். பி., லெட்சுமிகாந்தம்மா எம். பி. ஆகியோர் அதில் கையெழுத்துப்போட மறுத்து விட்டனர். டெல்லியிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு தனது 13-6-75 தேதியிட்ட தலையங்கத்தில், "இப்போதுள்ள சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட் அப்பீல் முடிவாகும் வரை பிரதமர் பதவியிலிருந்து விலகி நிற்பதே திருமதி இந்திரா காந்தி எடுக்கக்கூடிய சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

இவ்வாறு செய்வதின் மூலம் நீதித்துறையின் செயல் முறையையும் இந்திய ஜனநாயகத்தையும், அவை எழுப்பப்பட்டுள்ள அடித்தளத்தையும் அவர் மேன்மைப்படுத்தியவராவார். திருமதி இந்திரா நாட்டுக்கு நல்லது செய்திருக்கலாம், நன்றி. அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் நன்றாக நீடிக்கக்கூடும். ஆனால் அது வேறுவிஷயம். அவரது தேர்தல் அப்பீல் விசாரணையில் இருக்கும் போது அவர் தொடர்ந்து ஆட்சித் தலைமையிலும் இருக்க வேண்டும் என்பது வேறு.

தலைக்கு மேல் கத்தி தொங்குபோது, அவர் பிரதமர் பதவியில் தொங்குவாரானால் செயல்படத் தேவையான திறமையோ, செயல்பட வேண்டுமென்கிற எண்ணமோ இல்லாமல் ஒரு தற்காலிக அரசின் தலைவராகவே அவர் இருக்க முடியும்" என்று எழுதியது. ஸ்டேட்ஸ்மென்ட் ஏடு தனது தலையங்கத்தில் "அப்பீல் செய்து கொள்வது என்பது இதர இந்தியப் பிரஜைகளைப் போலவே இந்திரா காந்தியாருக்குத் தரப்பட்டிருக்கிற விஷயம் என்றாலும்; அதற்கிடையில் இந்திரா காந்தியார், நாட்டிற்கும் இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிற ஜனநாயக முறைக்கும் நன்றிக் கடன் ஆற்ற வேண்டியிருக்கிறது.

அதுதான் அவர் பதவியை ராஜினாமா செய்வதாகும். இப்போது ராஜினாமா செய்யாமல் இருப்பதன் மூலம் தேர்தல் சட்டத்தையே மீறிய குற்றத்தைவிட பெரிய குற்றத்தை இந்திரா காந்தியார் செய்தவராகிறார்" என்று எழுதியிருந்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் டெல்லியில் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவர் அவர்களின் இல்லத்திற்கு முன்னால் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திராவைப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கேட்டு குடியரசுத் தலைவரிடம் மகஜர் கொடுத்தனர்.

ஜூன் 22-ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இந்திரா பதவி விலகக் கோரி மிகப்பெரிய பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, ராஜ் நாராயண், மதுலிமாயி, எஸ். என். மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஜூன் 23-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் சார்பில் வழக்கறிஞர் பல்கிவாலா அலகாபாத் தீர்ப்பின் அமுலை நிறுத்தி வைப்பதற்கான மனுவையும், தீர்ப்பை எதிர்த்த அப்பீல் மனுவையும் தாக்கல் செய்தார்.

நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் மதிய உணவு இடைவேளைக்குக்கூடச் செல்லாமல் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, 24-ஆம் தேதி பிற்பகல் 3-45 மணிக்குத் தீர்ப்பு கூறுவதாகத் தெரிவித்தார். அதன்படி அவர் மறுநாள் அளித்த தீர்ப்பில், "பிரதம மந்திரி இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அமுலை சில நிபந்தனைகளுடன் நிறுத்தி வைக்கவும், அப்பீல் பைசல் செய்யப்படும் வரை இந்திராகாந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அந்தப் பதவிக்குரிய உரிமைகளை அனுபவிக்கலாம் என்றும் அவர் தொடர்ந்து பிரதம மந்திரி பதவியை வகிப்பதற்கு சட்ட பூர்வமான தடை எதுவும் இல்லை என்றும், ஆனால் நாடாளுமன்றத்தில் பிரேரணைகள், திருத்தச் சட்டங்கள் முதலியவைகளின் மீது ஓட்டு எடுக்கும்போது ஓட்டு போடுவதற்கு அவருக்கு உரிமை கிடையாது என்றும், நாடாளுமன்ற கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளலாம் என்றும், இந்த நிபந்தனைகளை நீக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் பெஞ்சுக்கு பிரதம மந்திரி மனு செய்து கொள்ளலாம் என்றும், முழுமையான நிபந்தனையற்ற இடைக்காலத் தடை உத்தரவிற்கும் நிபந்தனையுடன் இப்போது அளிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவிற்கும் நடைமுறை சம்பந்தப்பட்ட வரையில் வித்தியாசம் ஒன்றுமில்லை என்றும் நீதிபதி தீர்ப்பு நெ.-30 கூறினார்.

இந்த உத்தரவை மாற்ற வேண்டுமென்று எதிர் மனுதாரர் (ராஜ்நாராயண்) விரும்பினால் உச்ச நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சுக்கு அவரும் அப்பீல் செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, பிரதமர் பதில் கூற மறுத்துவிட்டார். ராஜ்நாராயண், நீதிபதி அளித்த இடைக்காலத் தடை உத்தரவில் நிபந்தனைகள் விதித்திருப்பதை வரவேற்று, பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரினார்.

பிரதமர் வீட்டில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், தலைவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்களும் சேர்ந்து ஆலோசனை செய்தனர். இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை கொண்ட இடைக்காலத் தடை உத்தரவிற்குப் பிறகும் ராஜினாமா செய்வதில்லை என இந்திராகாந்தி முடிவு செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் அதுபற்றி செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டனர். "அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்பட்ட பிறகு, அந்தத் தீர்ப்பின் உட்பொருளை உணர்ந்து இந்திய நாட்டு ஜனநாயக அரசியலுக்கு எதிர்கால முன்மாதிரியை அளிக்க வேண்டிய பொறுப்பின் சுமை, ஆளுங்காங்கிரசின் மீதும்-திருமதி.

இந்திராகாந்தியின் மீதும் அதிகமாக விழுந்து விட்டது. அதனை உணர்ந்து சரியான முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளுங் காங்கிரசும், இந்திரா அம்மையாரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் மேன்மை எந்த வகையில் பாதுகாக்கப்படப்போகிறது என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்" என்று கூறினேன்.

நிபந்தனையற்ற இடைக்காலத் தடை பெறத் தவறியது இந்திரா காங்கிரசிற்குக் கிடைத்த அடுத்த தோல்வியாகத்தான் கருதப்பட்டது. அதற்குப் பிறகும் இந்திராகாந்தி ராஜினாமா செய்ய மறுத்த காரணத்தால் அவரை ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரி நாடு முழுவதிலும் ஜூன் 29-ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக மொரார்ஜி தேசாய் தலைமையில் மக்கள் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.

அந்த எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தி. மு. கழகமும் அழைக்கப்பட்டிருந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழைய காங்கிரஸ், ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோஷலிஸ்ட், அகாலிதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்றம் கழகம் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இவ்வாறு இந்தியா பூராவும் உள்ள முக்கிய ஏடுகளும், எதிர்க் கட்சிகளும், மூத்த தலைவர்களும், இந்திரா காந்தி அவர்களை ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய போது, இந்திராகாந்தி அம்மையார் செய்தது என்ன தெரியுமா?