உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஜெ. பி. பாராட்டு!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஜெ. பி. பாராட்டு! · 198 / 391

ஜெ. பி. பாராட்டு! மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி வந்த தமிழகம்-நமது மாநிலத்திற்கு அதனால் ஏற்பட்ட இழப்பை ஓரளவுக்காவது சரிக்கட்ட மத்திய அரசு முன்வராததாலும், அதற்காக எத்தனையோ முறை மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தும் அது பயனளிக்காத காரணத்தாலும் மதுவிலக்குக் கொள்கையை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்தாததால் ஏற்பட்ட இன்னல்களுக்கு தமிழகம் ஆளாக வேண்டியிருந்ததாலும், நிதி நிலைமையைச் சமாளிப்பதற்காக மிகுந்த மனவேதனையுடன்-கொழுந்துவிட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள்ளே கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளைக்கு இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி, 1971-ஆம் ஆண்டு மதுவிலக்கை ஒத்திவைப்பதாக நான் அறிவித்திருந்த போதிலும்-அண்ணல், காந்தி நெறி நின்று அண்ணா வழியில் ஆட்சி நடத்திய எனக்கு மதுவிலக்கை ஒத்தி வைத்ததின் காரணமாக நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு உறுத்திக்கொண்டே இருந்தது.

ஒத்திவைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தான் அதனை ஒத்தி வைத்தபோதே பேரவையில் நான் ஒத்திவைப்பதாக உறுதியாக அறிவித்திருந்தேன். அவ்வாறு நான் சட்டப் பேரவையில் அறிவித்திருந்ததற்கு இணங்க, 14-8-74 அன்று சட்டப் பேரவையில் முதல் துணைமதிப்பீடுகளை அவையிலே வைத்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் அன்று அதே ஆண்டிலேயே மீண்டும் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தேன்.

அப்படி அன்று நான் அறிவித்த போதே மற்றொரு அறிவிப்பையும் அவையிலே அறிவித்தேன். அந்த அறிவிப்பு வருமாறு: "நீண்ட நெடு நாட்களாக நல்லோர் பலரின் முறையீடாக இருந்து வருவதும், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதுமான குதிரைப் பந்தயத்தை அறவே ஒழிப்பது என்று இந்த அரசு முடிவு செய்கிறது."

இவ்வாறு சட்டப் பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து-அந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்கான மசோதாக்கள் கொண்டு வந்து அவையிலே நிறைவேற்றப்பட்டன. அப்படி நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களில் மதுவிலக்கைப் பொறுத்தவரையில் கழக அரசு நடைமுறைப் படுத்திய போதிலும்; குதிரைப் பந்தயத்தைப் பொறுத்தவரை உச்ச நீதீமன்ற இடைக்காலத் தடையின் காரணமாக அது பத்தாண்டு காலமாக நடைமுறைக்கு வராமல் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அ.

தி. மு. க. அரசின் சார்பில் அந்தச் சட்டத்தை எழுந்து நடமாடச் செய்யத்தக்க விதத்தில் விரைவுப்படுத்த தயாராக இல்லாததுதான் அதற்குக் காரணம் என்பதை நான் சொல்லாமல் அனைவரும் புரிந்துகொள்வர். 1974-ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் குழப்பமான நிலைமை. தமிழகத்தில் தி. மு. கழகம் மத்திய அரசிடம் வெகு வேகமாக மாநில சுயாட்சி கோரிக்கைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

முதலமைச்சர் என்ற முறையில் நான் கலந்துக் கொள்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் மாநில சுயாட்சி கோரிக்கைக்கு உள்ள நியாயங்களை எடுத்துக் காட்டியதோடு, இந்தியாவிலே உள்ள பழம்பெரும் தலைவர்கள் பலர் மாநில சுயாட்சிக்கு ஆதரவாகக் கூறிய கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லி வந்தேன். மாநில சுயாட்சிக்கு ஆதரவாக ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கூறிய கருத்துக்களையும் நான் என்னுடைய கூட்டங்களில் எதிரொலிக்கத் தவறவில்லை.

ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அந்தக் காலக்கட்டத்தில் இந்திரா காந்திக்குப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தார். சர்வோதயத் தலைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அப்போது பீகாரில் உள்ள மந்திரிசபை மாற்றப்பட வேண்டும். அதை மாற்றுகிறவரை-வேறு தேர்தல் நடத்துகிறவரை தன்னுடைய போராட்டத்தை நிறுத்தமாட்டேன் என்று கூறி பீகாரில் பெரிய கிளர்சசியை நடத்தினார்! பீகாரே போர்களமாக இருந்தது. ஜெ. பி. அவர்களின் இந்தக் கிளர்ச்சி பற்றிப் பெங்களூரில், என்னை நிருபர்கள் சந்தித்து கருத்து கேட்டபோது "ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள ஐந்தாண்டு காலம் வரை காத்திருந்து, அந்த அரசு தவறு செய்யுமானால் அதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மக்களால் வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டு கீழே இறக்கப்பட வேண்டுமேயல்லாமல் இடையில் வன்முறைக் கிளர்ச்சிகளால் ஒரு அரசை இறக்குவது என்பது முறையாக ஆகிவிடக் கூடாது, அது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல; அதே நேரத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெரியவர்கள் இப்படிப்பட்ட கிளர்ச்சிகளில் ஈடுபடுவார்களானால் அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய அரிய யோசனைகளைக் கேட்டு அவர்களுடைய மனதைப் புண்படுத்தாமல் பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்" என்று சொன்னேன்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் அமெரிக்க நாட்டிலே கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகத்திலே பயின்றவர் என்றாலும் சோஷலிச சித்தாந்தங்ளோடுதான் இந்தியாவிற்குத் திரும்பினார். அங்கே பயின்ற அந்தக் காலத்திலே காப்பித் தோட்டங்களில் வேலை செய்து தன்னுடைய அன்றாடச் செலவிற்குச் சம்பாதித்துக் கொண்டவர். இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். சதித்திட்ட வழக்கில் ஹசாரிபாக் சிறையில் பூட்டப்பட்டார்.

அங்கிருந்து தப்பினார். வெள்ளைக்கார அரசாங்கம் ஜெயப்பிரகாஷ் நாராயணின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஒன்பதாண்டு காலம் சிறைச்சாலையிலே வாழ்ந்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல தடவைகள் அமைச்சர் பதவியையும், பிரதமர் பதவியையும் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தியும் மறுத்துவிட்டவர் அவர்! குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் உட்பட பலர் கேட்டபோதும் மறுத்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண்.

அப்படிப்பட்டவரை தமிழகத்திற்கு ராஜாஜி அவர்களின் நினைவாலயத்தைத் திறப்பதற்காக நான் அழைத்ததும். வருவதற்கு ஒப்புக்கொண்டார். ராஜாஜி அவர்கள் எந்த அளவிற்கு தமிழகத்துடன்-இந்தியாவுடன் தொடர்பு கொண்டு பணியாற்றியவர் என்பதையும் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவருக்காக கழக அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட நினைவாலயத்தினைத் திறப்பதற்காக வந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களுக்கு தமிழகத்திலே காங்கிரஸ்காரர்கள் கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்தனர்.

எம்.ஜி.ஆர். ஜெ.பி. அவர்களுக்கு கடிதம் எழுதி தமிழ்நாட்டிற்கு வந்து ஊழலை ஒழிக்கப் போராட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கறுப்புக்கொடி காட்டுவது பற்றி நான் கருத்து தெரிவிக்கும் போது "ஜெயப்பிரகாஷ் நாராயண் இந்தியா முழுவதும் ஊழல் ஒழிய வேண்டுமென்கிறார். இங்கே அவர் ஏதேனும் சுட்டிக்காட்டுவாரானால் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறது கழகம்! ஊழல் அல்லது தவறு என்று சுட்டிக் காட்டப்படுமானால் தம்பியானாலும், அண்ணன் ஆனாலும், ஆருயிர்த் தோழன் ஆனாலும், கழகம் நிர்வகித்த சென்னைக் கார்ப்பரேஷன் ஆனாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்காதது கழக அரசு.

நாளை வரும் ஜெயப்பிரகாசர் சுட்டிக் காட்டினாலும் நடவடிக்கை எடுப்போம். அந்த அடிப்படையில்தான் அவரோடு நம் உறவிருக்கும். தி. மு. கழகம் ஜெயப்பிரகாசருக்கு அமோக வரவேற்பளிக்கும்" என்று குறிப்பிட்டேன். நான் கழகம் வரவேற்பு தரும் என்று கோவையிலே குறிப்பிட்டது மறுநாள் ஏடுகளில் வெளிவந்தது. அதன் விளைவை 1975-ஆம் ஆண்டு மே திங்கள் 5-ஆம் நாள் காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கண்டது. பார்த்த இடமெல்லாம் தி.மு.

கழகக் கொடிகள்தான். கறுப்புக்கொடி காட்டப் போவதாக அறிவித்தவர்கள் எல்லாம் சென்ற இடம் தெரியவில்லை. மக்களின் ஆர்வப் பெருக்கின்ரற அலைமோதலில் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களை எப்படி புகைவண்டியிலிருந்து இறக்கி காருக்குக்கொண்டு போவது என்று தெரியாதநிலை. அவரை வரவேற்பதற்காகச் சென்றிருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். அந்த அளவிற்கு தி. மு. கழகம் ஒரு மகத்தான வரவேற்பை சென்னையில் ஜெ.

பி. அவர்களுக்கு அன்று கொடுத்தது. அன்று பிற்பகல் ஜெ. பி. அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார். பேராசிரியர் அவர்களும், நாவலர் அவர்களும் உடன் இருந்தனர். அன்று மாலையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவாக சென்னை கிண்டியில் காந்தி நினைவு மண்டபத்திற்கு அருகே தமிழக அரசால் அமைக்கப்பட்ட ராஜாஜி நினைவாலயத் திறப்பு விழா நடைபெற்றது. தலைமைச் செயலாளர் பி. சபாநாயகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு முதலமைச்சர் என்ற முறையில் நான் தலைமையேற்றேன்.

நாவலர் அவர்கள் ராஜாஜி அவர்களின் உருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார். பின்னர் ராஜாஜி நினைவாலயத்தை ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார். அங்கே அன்று உரையாற்றும் போதுதான் ஜெயப்பிரகாசர் அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். "குதிரைப் பந்தயம் ஒரு சூதாட்டம். அதனை அண்மையில் இங்கு ஒழித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதனால் இங்குள்ள பெரும் புள்ளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம்.

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு, குதிரைப் பந்தயம், லாட்டரி ஆகிய இந்த மூன்றும் கிடையாது! அதைப்போல மதுவையும், குதிரைப் பந்தயத்தையும் ஒழித்த நீங்களும் இந்த லாட்டரியையும் வெகு விரைவில்........." என்று கூறியபோதே நான் குறுக்கிட்டு, ஜெ. பி. அவர்களிடம் அண்ணா பிறந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் அந்த ஆண்டே 'லாட்டரி சீட்டு' தமிழகத்தில் இருக்காது என்று பலத்த கையொலிகளுக்கிடையே கூறினேன். தொடர்ந்து பேசிய ஜெ.பி.

அவர்கள் "தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் இப்போது என்னிடம் செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து லாட்டரி சீட்டை ஒழித்து விடுவதாகத் தெரிவித்தார். அவர் உடனுக்குடன் துணிகரமாக நீண்ட கால பயனளிக்கக்கூடிய முடிவுகளை எடுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை நான் முன்பே அறிவேன். அதைத் தொடர்ந்து இப்போதும் இங்கேயே அறிவித்ததற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அதற்காக நன்றியைத தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜாஜி அவர்களுக்கு இன்று எழுப்பிய நினைவாலயத்தைவிட மிகப் பெரிய சிறப்பு மகத்தான நினைவாலயம் என்னவென்றால் தமிழகத்தில் பரிசுச் சீட்டை ஒழித்தல், மதுக்கடை ஒழிப்பு, குதிரைப் பந்தய ஒழிப்பு ஆகியவைகள்தான்" என்றார். ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அந்த விழாவில் பேசிய ஏனைய கருத்துக்கள் வருமாறு: "ராஜாஜி அவர்களின் பெயரால் அமைந்துள்ள மண்டபத்தினை திறந்துவைக்கும் பெருமையை எனக்களித்ததற்காக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் தலைசிறந்த தவப்புதல்வரின் நினைவால் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் வடிவ அமைப்பினை உங்கள் முதலமைச்சர் அவர்களே தயாரித்தார் என்பதைக் கேட்டு நான் பெரும் மகிழ்ச்சியும் பேருவுவகையும் கொள்கிறேன். ராஜாஜிக்காக இந்த நினைவு மண்டபத்தினை தமிழக அரசு எழுப்பியதற்காக நான் முதற்கண் பாராட்டுகிறேன். பாரத நாட்டுப் பிரதமர் அவர்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூறலாம் என்றால் தமிழகத்தின் முதலமைச்சர் காட்டிய முன் உதாரணத்தைப் பின்பற்றி பாரதப் பிரதமர் அவர்கள் நம்முடைய நாட்டின் தலைநகரான டெல்லியில் ராஜாஜி அவர்களுக்கு ஒரு நினைவாலயத்தை எழுப்ப வேண்டும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ராஜாஜி அவர்கள் தொடர்ந்து, காங்கிரசிலே இருந்திருந்தால், இதற்குள் ராஜாஜி அவர்களுக்கு ஒன்றல்ல. எண்ணற்ற பல நினைவாலயங்கள் எழுப்பப்பட்டிருக்கும் என்று நான் துணிந்து கூற விரும்புகிறேன். அதிகாரத்தால், சம்பிரதாயத்தால் நிலைநாட்டப்பட்ட அமைப்பிற்கு எதிராக மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதை வரவேற்பதாக அண்மையில் பிரதமர் அவர்கள் கூறியிருப்பதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ராஜாஜி அவர்களுக்கு நினைவாலயம் எழுப்புவதின் மூலம் அவருடைய பெருமைக்கு மேலும் சிறப்பு தேடித்தர முடியாது.

ஆனால் வருங்கால தலைமுறை தங்களுடைய நாட்டின் முன்னோர்கள் சிறப்பைப் பற்றி நினைத்து அவர்கள் காட்டிய வழிகள் பற்றி அறிந்து கொள்ள நினைவு மண்டபங்கள் உதவியாக இருக்கும். திருமதி இந்திரா காந்தி கூறியதைப்போல மாறுபட்ட கருத்து என்று எடுத்துக்கொண்டால், மனச்சான்றுக்கு உண்மையான மாறுபட்ட கருத்துக்கு உறுதுணையாக இருக்கிற உத்தம நெறியை விளக்க எடுத்துக்காட்டாக விளங்கியவர் ராஜாஜி அவர்களாகும். அந்த முறையில் பாரதப் பிரதமர் அவர்கள் மனச்சான்றுக்கு உண்மையான மாறுபட்ட கருத்தை வரவேற்பது உண்மையாக இருந்தால், ராஜாஜி அவர்களுக்கு இதுவரையில் நினைவாலயம் எழுப்பாத தவறை திருத்திக் கொண்டு உடனடியாக அவருக்கு நினைவாலயம் எழுப்ப முன் வருவார் என்று நம்புகிறேன்."

அந்த விழாவிறகு தலைமை தாங்கிய நான் உரையாற்றும்போது, "ராஜாஜி அவர்களின் தூய நினைவாக இந்த நினைவுச் சின்னம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்தைத் திறந்து வைப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி படைத்த ஒருவர் இன்று வருகை தந்திருப்பது விழாவிற்கு பெருமை சேர்ப்பதாகும். எத்தனையோ தியாகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்; தன்னலமற்றவர்; நாட்டிற்கு உழைத்தவர்; இன்னும் உழைத்துக் கொண்டிருப்பவர் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஆவார்கள்.

நேர்மையும் நியாயமும் நிலைக்க பாடுபட்டு வருகிற ஒரு தலைவர், அபிப்பிராய பேதங்களுக்கு இடையிலேயும்-அன்பால், அறிவால், ஆற்றலால், எங்கள் இதயம் கவர்ந்த ராஜாஜி அவர்களின் நினைவாலயத்தைத் திறந்து வைப்பது என்பது ராஜாஜியின் குடும்பத்தாரை மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்ல குடும்பத்தாரையும் மகிழச்சியிலும் உணர்ச்சியிலும் திளைக்கச் செய்கின்ற நிகழ்ச்சியாகும். தமிழகத்தில் இன்று நடைபெறுகின்ற அரசுக்கு 1967-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தவர் ராஜாஜி.

அதன்பிறகு கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டபோதும், நான் அவரைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் ஆரம்பத்தில் நீங்கள் வழங்கிய வாழ்த்து கல்மேல் எழுத்துப்போல அப்படியே இருக்கிறது; அதனை, நீங்களே நினைத்தால்கூட உங்களால் மாற்றி எழுதிட இயலாது என்று கூறுவேன். அவரும் முகம் மலர புன்னகை புரிந்து என்னை மீண்டும் மீண்டும் வாழ்த்தி அனுப்புவார். 1971-ஆம் ஆண்டு நிதிநிலை காரணமாகவும், பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாகவும் மெத்த மனவருத்தத்தோடு தமிழக அரசு மதுவிலக்கை ஒத்தி வைத்தது.

தமிழக அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று அவர் கருத்து வெளியிட்டார். என்னிடமும் வலியுறுத்தினார். மதுவிலக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்று அவர் கூறிய உருக்கமிகு சொற்கள் என் உள்ளத்திலே ஊடுருவிப் பாய்ந்து குடைந்து கொண்டிருந்த காரணத்தினால் மீண்டும் தமிழக அரசின் சார்பில் முழுமையான மதுவிலக்குத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். இது ராஜாஜி அவர்களுக்கு நாங்கள் செலுத்திய காணிக்கையாகும்.

இங்கு எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவாலயத்தைவிட, மீண்டும் மதுவி

லக்குக் கொள்கையை நாங்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பதுதான் அவருக்கு பெரிய நினைவாலயம் ஆகும்" என்று குறிப்பிட்டேன். அன்று மறுநாள் சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் பேசும்போது, "தி. மு. கழக அரசு ஊழல் செய்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். எம். ஜி. ராமச்சந்திரன் இந்த அரசைப் பற்றி முன்பே பத்திரிகைகளில் வெளியிட்ட அறிக்கையின் வாசகங்களைக் கடிதமாக்கி இன்று என்னிடம் அளித்தார்கள்.

எம். ஜி. ராமச்சந்திரன் கடிதத்தில் உள்ள வாசகங்கள் மிகவும் தரம் குறைந்த கசப்பான வசைமாரிகள். நடைபெறுகின்ற அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாலேயே இது ஊழல் உள்ள அரசு என்றாகி விடாது. உண்மையும் ஆகிவிடாது. குற்றம் சாட்டுகிறவர்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வர வேண்டும். ஒருவர் மீது குற்றச்சாட்டு என்றதும், அவர்கள் கேட்டுக் கொண்டது போலவே பகிரங்க நீதி விசாரணை வைக்க உடன்பட்டு நீதி விசாரணை என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் திரு.

கருணாநிதி. வேறு எந்த மாநில முதலமைச்சரும் செய்ய முன்வராதபோது, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. கருணாநிதிதான் தன் அமைச்சரவை மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலையே அச்சடித்து சட்டமன்றத்தில் முன் வைத்தார். தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் தி. மு. கழக அரசு பற்றி என் நிலை என்ன என்று அறிய அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள். தி. மு. கழக அரசு சரிவர ஆட்சி நடத்தவில்லை என்றும், தவறுகளைச் செய்திருக்கிறது என்றும் குறை கூறுகிறார்கள்.

குற்றச்சாட்டுக்களைக் கூறுவது சுலபம். அவற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம்" என்றார். ஜெ.பி. அவர்கள் இவ்வாறு தமிழக அரசைப் புகழ்ந்து கூறியதும், தமிழக அரசும், கழகமும் ஜெ. பி. அவர்களுக்கு அளித்த மாபெரும் வரவேற்பும் டெல்லியில் உள்ளவர்களுக்கு கழகத்தின் மீதும் கழக அரசின் மீதும் இருந்த கோபத்தை அதிகப்படுத்தின.