நெஞ்சுக்கு நீதி
இராமனுக்கு விரோதி யார்? · 197 / 391
இராமனுக்கு விரோதி யார்? கழக ஆட்சியின் மீது டெல்லிக்காரர்களுக்கு கோபம் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களில் மாநில சுயாட்சித் தீர்மானத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியதும் ஒன்றாக அமைந்தது. தீர்மானம் நிறைவேறியது 1974 - ஆம் ஆண்டு எனினும், அதற்கு முன்பே 1973 - ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14 - ஆம் நாள் அலகாபாத் நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் நான் கலந்துகொண்டு உரையாற்றியதும் டெல்லிக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
இந்தியாவில் முழுப் புரட்சி இயக்கம் ஒன்றினைத் தொடங்கி நடத்திய லோகநாயக் ஜெயப்பிரகாஷ் அவர்களுடன் நான் கொண்டிருந்த தொடர்பும் டெல்லிக்காரர்களுக்கு என் மீதும் கழக அரசின் மீதும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அப்பர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லியிலிருந்து நான் அலகாபாத் சென்றேன். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறன், மாரிசாமி, சாமிநாதன், தெய்வீகன் ஆகியோர் வந்தனர். தென்னரசும் என்னுடன் பயணத்தில் கலந்துகொண்டார்.
உத்திரப் பிரதேச தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்துக் காலையில் உரையாற்றினேன். அன்று மாலை அலகாபாத் புருஷோத்தம தாஸ் தாண்டன் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நான் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலகாபாத் நகரின் பல பகுதிகளில் எனக்கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. "இராமனின் விரோதி கருணாநிதி" என்று இந்தி எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டிருந்தன அந்தச் சுவரொட்டிகளில்.
அந்தக் கூட்டத்தில் ராஜ்நாராயண் அவர்களும் கலந்து கொண்டார். என்னைப்பற்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளுக்கு விளக்கமாகப் பதிலளிக்குமாறு அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். என் பேச்சை இந்தியில் புரொபசர் சந்திரகாந்த் அவர்கள் மொழி பெயர்த்தார். நான் அலகாபாத் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வருமாறு: "தமிழ்நாட்டிலிருந்து உத்திரப் பிரதேசத்துக்கு வந்துள்ள என்னை இங்குள்ள சிலர் ஆச்சரியத்தோடு பார்க்கக்கூடும்.
சிலர் என்னைத் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கக் கூடும். நான் இராமனுக்கு விரோதி என்றுகூட யாரோ சுவரொட்டி ஒட்டியுள்ளார்களாம். இராமனுக்கு விரோதி இராவணனே தவிர, நானல்ல! இதைக்கூடப் புரிந்து கொள்ளாத சிலர் இங்கிருப்பது வியப்புக்குரியதேயாகும். உத்திரப் பிரதேசத்தில் நான் வந்துள்ள இந்த நேரத்தில் இங்கு ஒரு மக்கள் அரசு இல்லாதது வருந்தத்தக்கது. ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறபோது இங்கு நான் வந்திருக்கிறேன்.
இங்கு மட்டுமல்ல ஆந்திராவில் - ஒரிசாவில் - மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட சுமார் பதினைந்து கோடி மக்கள் இந்தியாவில் ஜனநாயகத்தை அனுபவிக்காமல் ஜனாதிபதி ஆட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியபோது அம்பேத்கார் தெளிவாகச் சொன்னார். ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தப்படுகிற விதி செத்துப்போன எழுத்துக்களாக இருக்கும் என்று சொன்னார் ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் 32 தடவை ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 25 - வது ஆண்டு வெள்ளி விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஜனாதிபதி ஆட்சியைப் பொறுத்தவரையில் இன்னும் 18 தடவைகள் ஜனாதிபதி ஆட்சி வந்தால் நாம் 50 - வது ஜனாதிபதி ஆட்சிக்கு ஒரு பொன்விழா கொண்டாடலாம். கவர்னர் பதவி தேவையில்லை என்பது தி.மு.க.வின் எண்ணமாகும். ஆனால் ஆங்காங்கு அடிக்கடி ஜனாதிபதி ஆட்சி நடத்துவதற்காக அந்தப் பதவியை மத்திய அரசினர் வைத்திருக்கிறார்கள் போலும்.
இந்தியாவில் இதுவரைக்கும் ஜனாதிபதி ஆட்சி வராத மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கிறது. அது தமிழ் நாட்டிற்கும் வரவில்லையே என்று சிலருக்குக் கவலையாக இருக்கிறது. அவர்கள் யார்? அவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள். நான் காங்கிரஸ் என்று கூறும்போது ஆளும் காங்கிரசைச் சேர்த்துத்தான் கூறுகிறேன். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. இந்தியா முழுவதும் அவர்கள் கையில் இருக்கிறது. தமிழ்நாடு மாத்திரம் எதிர்க்கட்சியினர் கையில் இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
இலட்சக்கணக்கில் அரிசன மக்களுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் தமிழ்நாட்டில் குடியிருப்பு மனை, விவசாய நிலப்பட்டாக்கள் தரப்பட்டுள்ளன. அரிசனங்களையும், பின் தங்கியவர்களையும் நான் கவலையோடு கவனிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? நான் பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்தவன். இரண்டு நாளைக்கு முன்புகூட சில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று தி. மு. க. ஆட்சியை அகற்ற வேண்டுமென்று பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு உள்ள கோபம் தி.
மு. கழகம் மாநில சுயாட்சி கேட்கிறதே என்பதுதான். மாநில சுயாட்சி என்பது தேவையான எல்லா அதிகாரங்களும் எல்லா மாநிலங்களுக்கும் தரப்பட வேண்டும் என்பது தான். மாநில சுயாட்சி என்பது பிரிவினை அல்ல. பிரிவினையைத் தடுக்கவே நாங்கள் மாநில சுயாட்சி கேட்கிறோம். மாநிலங்கள் தங்கள் காரியங்களை வேகமாகச் சாதித்துக் கொள்வதை மத்திய சர்க்கார் தலையிட்டுத் தாமதப்படுத்துவதைக் தவிர்க்கத்தான் மாநில சுயாட்சி கேட்கிறோம்.
குடிதண்ணீர் குழாய் போடுவதற்கு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அடி ஆழம் தோண்டுவதற்குக் கூட மத்திய சர்க்கார் அனுமதி பெறவேண்டும். இப்படித் தேவையில்லாமல் இரட்டை இலாகாக்கள் பல இருக்கின்றன. மத்திய சர்க்கார் அதிகாரங்களைக் குவித்து வைத்துக்கொண்டிருக்கிறது. மாநில சர்க்கார் அதிகாரங்களுக்காகத் தவிக்கிறது. ஒரு சிறு கதை சொல்ல விரும்புகிறேன். ஒரு மருமகள் வீட்டு வாசற்படியில் கவலையோடு உட்கார்ந்திருந்தாள்.
அடுத்த வீட்டுக்காரி வந்து, "என்ன கவலையாக இருக்கிறாய்? சமைக்கவில்லையா?" என்றாள். "இல்லை" என்றாள். "ஏன், சமைப்பதற்கு அரிசி, கோதுமை இல்லையா?" என்று கேட்டாள் அடுத்த வீட்டுக்காரி. "அரிசி இருக்கிறது, சாமான்களும் இருக்கின்றன" என்றாள் மருமகள். "பிற்கென்ன, கறிகாய் இல்லையா?"
என்று அடுத்த வீட்டுக்காரி கேட்டாள். "அதுவும் இருக்கிறது" என்றாள் இவள். "அடுப்பெரிக்க விறகு இல்லையா, நெருப்புப் பெட்டி இல்லையா?" என்றாள். "அதுவும் இருக்கிறது" என்று பதில் சொன்னாள். "பின் ஏன் கவலையோடு இருக்கிறாய்?" என்று அடுத்த வீட்டுக்காரி கேட்டாள். அதற்கு மருமகள் "எல்லாம் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, மாமியார், சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்" என்று பதில் கூறினாள்.
அதுபோல மாநிலங்கள் மருமகள்களாக இருக்கிறோம். மத்திய சர்க்கார் மாமியாராக இருக்கிறது. அந்த மாமியாரைப் பார்த்து சாவியைக் கொடு என்று கேட்கிறோம். அதற்குப் பெயர்தான் மாநில சுயாட்சி நாங்கள் கேட்கிற மாநில சுயாட்சி தமிழ்நாட்டுக்கு மாத்திரமல்ல; உத்திரப் பிரதேசத்திற்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம். இந்தக் குரலுக்கு உங்கள் அன்பான ஆதரவு தேவை. அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். காலையிலே நடந்த மாநாட்டில் ராஜ்நாராயண் அதிகாரம் வேண்டுமென்று உரத்த குரலில் கேட்டார்.
உரத்த குரலில் கேட்கக் கூடிய உருவம் அவருக்கு இருக்கிறது. என்னுடைய உருவமும் அப்படிப்பட்டதல்ல. உள்ளமும் அப்படிப்பட்டதல்ல. அவர் கொண்டா சாவியை என்று கேட்பவர். நான் சாவியைக் கொடுங்கள் என்று கேட்பவன். இரண்டும் ஒன்று தான். எனவே ராஜ்நாராயணனைச் சந்திப்பதற்குப் பதிலாக என்னை அவர்கள் சந்திப்பது நல்லது."
கூட்டத்திற்கு உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் திரு. ரூப்நாத் யாதவ் தலைமை வகித்தார். ராஜ்நாராயண், ராம்சேவக் யாதவ், சத் பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். அலகாபாத் சென்றிருந்தபோது பண்டித நேரு குடும்பத்தின் பழம் பெரும் வீடான "ஆனந்த பவன"த்தைச் சென்று பார்வையிட்டேன். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் கூடுதுறையான திரிவேணி சங்கமத்திற்கும் சென்றேன். அன்று காலையில் நடைபெற்ற பின்தங்கியோர் மாநாட்டில் பேசும்போது இறுதியாக நான் கூறியது.
"மத்திய அரசு வேலை வாய்ப்புக்களில், அரிசனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் செய்யப்பட வேண்டும். ஒழுங்காக முழுமையாக பூர்த்தி அதுபோல மத்திய சர்க்காருடைய உத்தியோகங்களில் இனிமேல் பின்தங்கிய மக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இவ்வளவு இடம் என்று நிர்ணயிக்கப்பட வேண்டும். அதையும் மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்" என்று கூறினேன்.
நான் அன்று கூறிய அந்தக் கருத்துத்தான் இன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளாக வெளிவந்திருக்கிறது. எப்படியோ என்னுடைய அலகாபாத் பயணமும், காலையிலும், மாலையிலும் ஆற்றிய உரைகளும் டெல்லியின் மனதுக்கு இதமாக இல்லை! அத்துடன் நான் முதலில் குறிப்பிட்டதைப் போல ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களுடைய கருத்துக்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்து வந்ததும், டெல்லியின் கோபத்தை அதிகமாக்கத் தவறவில்லை. பொது வாழ்வில் இருப்போர் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதிலும் - தூய்மையைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதிலும் நான் ஜெயப்பிரகாஷ் அவர்களின் கருத்தை வரவேற்றேன்.
அதன் காரணமாகத்தான் கழக அரசில் 1973 - ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 - ஆம் தேதியன்று சட்டப் பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. "பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா" என்று அந்த மசோதாவுக்குப் பெயர்.
இந்தச் சட்டத்தின்படி பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அவருக்கு உதவியாக தேவைப்பட்டால் கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்படுவார்கள். கூடுதல் கமிஷனர்களாக நியமிக்கப்படுவோர் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்களாக இருப்பார்கள். இதன்படி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் ஈடுபட்ட அவருக்கு ஏழு ஆண்டுக் காலம்வரை சிறை தண்டனை விதிக்க மசோதா வகை செய்யும்.
பொது வாழ்வில் ஈடுபட்டவர் மீது சாட்டப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பொய்யானவை என்று விசாரணைக்குப் பிறகு முடிவானால் அவ்வாறு பொய்யான குற்றம் சுமத்தியவருக்கு மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம். நெ.-29 பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்று கூறும்போது முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், முன்னாள் - இந்நாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை, மேலவை முன்னாள் - இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், மாநகராட்சி முன்னாள் - இந்நாள் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.
இந்த மசோதாவை அறிமுகம் செய்தபிறகு அதுபற்றி ஆய்வு செய்வதற்காக பொதுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை எம். ஜி. ஆர். அப்போது கறுப்பு மசோதா என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு சுருத்து தெரிவித்தபோதும், அப்போது சென்னைக்கு வந்திருந்த ஜனசங்கத் தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள் அந்த மசோதா பற்றி கருத்து கூறும்போது, "தமிழ்நாடு அரசின் ஊழல் ஒழிப்பு மசோதா பற்றிய கொள்கையை வரவேற்கிறேன். ஊழல் பிரச்சினை மாநில மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும்.
மத்திய அரசு இதனை மேற்கொள்ளக் கூடாது. இந்த மசோதா வரம்பிற்குள் முதலமைச்சரும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய சர்க்காரின் லோக்பால், லோக் அயுக்த் மசோதா வரம்புக்குள் பிரதமர் சேர்க்கப்படவில்லை" என்று கூறினார்.
அவர் மாத்திரமல்ல; 21 - 2 - 73 தேதியிட்ட 'இந்து நாளேட்டில் எம். ஏ. சதானந்த் என்பவர் அந்தச் சட்டம் பற்றித் தன்னுடைய கருத்தை எழுதியிருந்தார். அதில் "எல்லாவற்றுக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு, இந்த வகையிலும் அகில இந்தியாவிற்கும் வழிகாட்டியுள்ளது. நடைமுறைக்கேற்ற நல்ல சட்டங்களைக் கொணர்வதில் தமிழகம் எப்பொழுதுமே முன்னோடியாக இருந்திருக்கிறது. அந்த வகையில் இந்த மசோதாவும் ஒரு முன்னோடியாகும். ஒரு ஜனநாயக அமைப்பில், அறிவுபூர்வமான கருத்துக்கள் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அவை வரவேற்கப்படவேண்டியவை.
அந்த வகையில், மிகச் சிந்தனைத் தெளிவோடு இந்த மசோதா வந்துள்ளது. நடைமுறைக்கேற்ற நியாயமான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யக் காரணமாக இருந்தவர்களைப் பாராட்டுகிறேன்," என்று எழுதியிருந்தார். சுயராஜ்யா வார இதழில் அதன் ஆசிரியர் க. சந்தானம் அவர்கள் இந்தச் சட்டம் குறித்து அப்போது ஒரு கட்டுரையே தீட்டியிருந்தார். அது வருமாறு: "தமிழக சட்டமன்றத்தின் கடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊழல் விசாரணைச் சட்டம் தீவிரமானதும் நெடு நோக்குடையதாகும்.
ஆனால் என்னை வியப்பிலாழ்த்தியது என்னவெனில், எம். ஜி. ராமச்சந்திரனும் வேறு சிலரும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதானது ஏதோ ஊழலை மறைப்பதற்கென்றே செய்யப்பட்ட மாக்கியவல்லி நடவடிக்கை என்பதாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டதாகும். அவர்கள் இந்தச் சட்ட நகலை உன்னிப்பாகப் பரிசீலித்தார்களா? புரிந்து கொண்டார்களா? என்று நான் ஐயுறுகிறேன். 1969 - ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை முன் கொண்டு வரப்பட்டு பின்னர் என்ன காரணத்தாலோ மாநிலங்களவை முன் கொண்டு வரப்படாமல் காலாவதியாகும்படி விடப்பட்ட லோக்பால், லோக் அயுக்த் சட்ட நகலோடு தமிழக சட்ட நகலை அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
மத்திய சட்ட வரைவைக் காட்டிலும் சில வகைகளில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட வரைவு சிறப்புடையதாகும். லோக்பால் மசோதா பிரதம மந்திரிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் வரம்பிலிருந்து விலக்களித்தது. தமிழக சட்டமோ முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை மேலவை ஆகியவற்றின் உறுப்பினர்களையும் அதன் வரம்புக்குள் சேர்த்துள்ளது. சட்டத்தில் சாத்தியமான அளவுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடு சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட வரைவு பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்கும்." அந்தச் சட்டத்தின் சிறப்பு பற்றி நானே கூறுவதைவிட சந்தானம் போன்றவர்கள் எழுதியிருப்பதிலிருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான் இதை எழுதியுள்ளேன். இறுதியாக பொதுக்குழு முடிவிற்குப் பிறகு 1973 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 - ஆம் தேதியன்று அந்த மசோதா தமிழகத்தின் இரண்டு சபைகளிலும் நிறைவேறியது. சட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்த்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கழக அரசைப் பாராட்டியதோடு, தனது முழுப் புரட்சி இயக்கமான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்தச் சட்டம் ஓரளவு உதவிபுரியும் என்றும் கூறினார்.
கழக அரசு நிறைவேற்றிய இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டார். ஆனால் ஊழல் புகார்களைக் கொண்டு போய் டெல்லியிலே கொடுத்த அ. தி. மு. க. வினர் யாரும் தமிழக அரசின
் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு கூறி அந்தக் கமிஷன் முன்னால் ஒரு புகார்கூட கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற்றுவிட்டார்கள்.
