உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தீர்மானம் நிறைவேறியது
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தீர்மானம் நிறைவேறியது · 196 / 391

தீர்மானம் நிறைவேறியது என்னுடைய ஐம்பதாம் அகவை பொன் விழா ஆண்டினை நண்பர்களும் கழக அமைப்புக்களும் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களும் பாச உணர்வு பொங்கிடக் கொண்டாடி மகிழ்ந்த 1974-ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரு வழி காட்டியாக அமைந்துள்ளது என்பதனை 1984-ஆம் ஆண்டு எனது அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா கொண்டாடப்படும்போது அகில இந்தியத் தலைவர்களும், தமிழ் மாநில தலைவர்களும் சுட்டிக் காட்டிப் பேசியது எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றியோ அல்லது தி. மு.

கழகத்துக்குக் கிடைத்த வெற்றியோ அல்ல; பல அரசியல் மேதைகள் இந்தியாவின் உண்மையான ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கும் தேவையென வலியுறுத்திய "மாநில சுயாட்சி" என்ற கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இதோ இதுதான் தமிழக சட்டப் பேரவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 20-4-74 அன்று நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மான வாசகமாகும். "மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டுமென்று இப்பேரவை முடிவு செய்கிறது."

இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானம் அவையில் விவாதத்திற்கு வந்த போது அண்ணாவின் பெயரால் அ.தி.மு.க. கட்சி தொடங்கியவர்களான எம்.ஜி.ஆர். அவர்களும் அவரது நண்பர்களும் தீர்மானத்தை வரவேற்கவோ ஆதரிக்கவோ முன்வரவில்லை. அ.தி.மு.க. வின் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக இருந்த எட்மண்ட் அவர்கள், "ராஜமன்னார் குழுவின் அறிக்கை சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்குத் தகுதியுடைய புத்தகமல்ல; உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவன் கூடப் பயன்படுத்த இதில் எந்தவிதமான கருத்தும் இல்லை.

குப்பைக்கூடையில் தூக்கி எறியப்பட வேண்டிய அறிக்கை இது" என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட வாசகங்கள் அவைக்குறிப்பில் அப்படியே தான் இருக்கின்றன. தீர்மானம் குறித்த விவாதத்தில் ஆதரித்தும் எதிர்த்தும் ஆலடி அருணா, பெ. சீனுவாசன், எல். கணேசன், என். கே. பழனிசாமி, கே. கந்தசாமி, கே. பி. கந்தசாமி, அப்துல் ஜபார், ஜேம்ஸ், கே. எம். சுப்பிரமணியம், பி. டி. ஆர். பழனிவேல்ராசன், ஏ. சுப்பிரமணியம், திருமதி. ஆல்டாபௌலர், கே.

டி. கே. தங்கமணி தோப்பூர் திருவேங்கடம், கா. வேழவேந்தன், மணலி கந்தசாமி, எச். வி. அண்டே, செ. கந்தப்பன், அப்துல் லத்தீப், எம். முத்தையா, ஏ. ஆர். மாரிமுத்து, ஏ. ஆர். பெருமாள், எட்மண்ட், திருப்பூர் மொய்தீன், பொன்னப்ப நாடார் ஆகியோர் உரையாற்றினார்கள். ஹண்டே அவர்கள் அ. தி. மு. க. சார்பில் பேசும்போது இறுதியில் "நீங்கள் மாநில சுயாட்சி கேட்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள். உங்களுக்கு அந்தச் சாவியைக் கொடுத்தால் தீமைகள் இன்னும் அதிகமாக வரும்" என்றார்.

உடனே நான் எழுந்து "அப்படியானால் இரண்டு ஆண்டுகள் கழித்து மாநில சுயாட்சி கேட்கலாமா? அப்பொழுது கொடுக்க வேண்டுமென்று கேட்பீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஹண்டே, "நீங்கள் நல்ல ஆட்சி நடத்தியிருந்து இதைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள்" என்றார்.

மேலும் அவரே தொடர்ந்து "நல்ல ஆட்சியாக இருந்தால் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. நாங்கள் வந்தால் நிச்சயமாகக் கேட்போம். அப்பொழுது கொடுக்க வேண்டுமென்பதில் சந்தேகம் கிடையாது" என்றார். அப்போதும் நான் 'அப்படி நீங்கள் (அ. தி. மு. க.) கேட்கும் போது ஒரு வேளை நாங்கள் எதிர்க்கட்சியிலே இருந்தால் நிச்சயமாக ஆதரிப்போம், பரந்த மனப்பான்மையோடு' என்று குறிப்பிட்டேன்.

ஹண்டே அவர்கள் பேசும்போது, தி. மு. கழகத்திற்கு இடைத்தேர்தல் தோல்வி ஏற்பட்டதால்தான் மாநில சுயாட்சி பற்றி பேசுவதாகத் தெரிவித்தார். அதற்கு நான் 1972 - ஆம் ஆண்டு மே திங்கள் 6, 7 தேதிகளில் தஞ்சை மாவட்ட கழக மாநாடு மன்னார்குடியில் நடந்தபோது "இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் மேலும் வலிவு தரும் வகையில் மத்திய அரசு பலமுள்ளதாகவும் மாநில அரசுகள் மக்களுக்கு வளம் பெருக்கும் வகையில் அதிகார உரிமைகளைப் பெற்றவைகளாகவும் விளங்கும் வண்ணம் தி.

மு. க. கோரி வருகிற மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி மடுத்து ராஜமன்னார் குழு அறிக்கையின் அடிப்படையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு கோருகிறது." என்ற தீர்மானத்தை முன் மொழிந்து அப்போது தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் அவர்களே பேசியிருக்கிறார் என்றும், தேர்தல் தோல்விக்கு பிறகு தான் மாநில சுயாட்சிக் கருத்தை தி. மு. கழகம் கூறுகிறது என்பது சரியல்ல என்றும் கூறினேன்.

விவாதங்கள் முடிவுற்ற பிறகு அதற்கு நான் 110நிமிடங்கள் பதிலுரை ஆற்றினேன். எனது முழு உரையையும் குறிப்பிடாவிட்டாலும் முக்கியமான பகுதிகளை எனது வரலாற்று நூலிலே இடம் பெறச் செய்வது அவசியமெனக் கருதுகிறேன். "என்னுடைய அரசியல் பொது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை இந்த மக்கள்மன்றத்திலே முன் மொழிந்து ஐந்து நாட்கள் விவாதம் நடைபெற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்ற கட்டத்தில் இதுவரையில் பேசப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நான் இந்தத் தீர்மானத்தைப் பற்றி முன்னுரையிலே குறிப்பிட்டிருக்கிற பல்வேறு கருத்துக்களுக்குத் தொடர்பாக இன்னும் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

பழைய காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சியே ஒரு பயங்கரமான பூதம் என்கிற அளவுக்கு தங்களுடைய வர்ணனையை செய்திருக்கிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சி டெல்லியிலே அவர்கள் இன்றைக்கு அரசோச்சுகின்ற காரணத்தினால் எதையும் விட்டுத் தர முடியாது என்கிற அந்த மனப்பான்மையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிகளோடு இணைத்து அரசியல் சட்டம் திருத்தப்பட தேவையில்லை.

மத்திய மாநில உறவுகளுக்காக என்ற ஒரு திருத்தத்தை அவர்கள் சார்பாக இரண்டு காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், பார்வேர்டு பிளாக் கட்சியும், தமிழ் அரசுக் கழகமும், சுயேட்சை உறுப்பினர்களுக்கும் மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறவேண்டிய இன்றியமையாமையும் மாநில சுயாட்சியினுடைய அவசியத்தையும் இங்கே வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள்.

மாநிலத்திற்கு சுயாட்சி தேவையில்லை; அதை அண்ணா எந்தக் காலத்திலும் சொல்லவில்லை; மாநிலங்களுக்குக் கூடுதலான அதிகாரங்கள் தேவை; அதிக அதிகாரங்கள் தேவை; ஆனால் அந்த அதிகாரங்களை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்குக் கொடுக்க கூடாது என்ற கருத்தை அ.தி.மு.க. நண்பர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். தி.மு.கழக ஆட்சியில் தரப்பட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டனவா? என்னென்ன நல்ல காரியங்களை செய்வதற்கு இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சட்டம் இடம் தரவில்லை?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுருக்கமாக பதில் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை. இந்தியாவிலேயே தோன்ற இருக்கின்ற ஜனநாயகப் புரட்சியினிடையே தோற்றுவாயாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிற நாளாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலே தான் இந்தத் தீர்மானத்தை முன் வைத்திருக்கிறோம். அதிகாரங்கள் கூடுதலாக மாநிலங்களுக்கு வேண்டுமென்று கேட்பதால் மத்திய சர்க்காருக்கு குறைவான அதிகாரங்கள் இருக்க வேண்டுமென்ற பொருள் அல்ல.

மத்திய சர்க்காருக்கு அதனுடைய வலிவு, காக்கப்படுவதற்கான அதிகாரங்கள் அங்கே இருக்க வேண்டுமென்பதும் மாநில சர்க்கார்களுக்கு அந்த மாநிலங்களின் வளம் பெருக்கப்படுவ- தற்குத் தேவையான அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்பது தான் மாநில சுயாட்சியினுடைய நோக்கம். பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அந்த மாநாட்டில் எதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்பதற்காக ஒரு வரைவுக் குறிப்பையே அனுப்பினார்கள். அந்த வரைவுக் குறிப்பில் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்பட்ட வரைவுக் குறிப்பு என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

நான் தமிழக அரசு சார்பாகச் சொன்னேன்-காங்கிரஸ் கட்சியினுடைய வரைவுக் குறிப்பை அங்கே நாங்கள் ஆராயத் தயாராக இல்லை; உங்களுடைய கட்சி உங்களுக்கு வரைவுக் குறிப்பு தந்தது; அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு மத்திய அரசு பரிந்துரைத்து இருக்குமானால் அதைப்பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறி அதற்குப் பிறகு அவர்கள் உறவை மாற்றிக் கொண்டு மத்திய அரசு பரிந்துரைத்த குறிப்பின் மீது விவாதிக்கப்படுவதற்கு நான் அழைக்கப்பட்ட போது அந்த நேரத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்ரா என்ற உச்ச வரம்பு கொண்டு வரவேண்டுமென்பது வரைவுக் குறிப்பில் ஓர் முக்கியமான அம்சமாகும். நான் அங்கே சொன்ன பதில் இது.

ஏற்கனவே எங்கள் தமிழ்நாட்டில் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே அமுல்படுத்தபட்ட சட்டமாகும் என்று எடுத்துச் சொல்லுகின்ற அளவுக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா மாநிலங்களையும் முந்திக் கொண்டு நாம் செய்து முடித்திருக்கிறோம் என்பதாகும் இப்படி எத்தனையோ எண்ணற்ற சாதனைகள்! இன்னும் செய்ய வேண்டிய சாதனைகளுக்கு அரசியல் சட்டத்தினுடைய குறுக்கீடு என்ன? இந்தக் கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு நான் தருகின்ற பதில் இதோ விவாதத்தில் பேசும்போது கே.

டி. கே. தங்கமணி அவர்கள் கூடச் சொன்னார்கள். கேரள மாநிலத்தில் தோட்டங்களையெல்லாம் அரசுடமையாக்க வேண்டுமென்ற அவசரச் சட்டத்தை இன்றளவும் மத்திய சர்க்கார் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே ஒரு சமதர்மச் சட்டம் அங்கே முடங்கிப் போய் கிடக்கிறது என்ற கருத்துப்பட ஒரு குறிப்பை எடுத்துச் சொன்னார்கள். அதைப் போலத் தான் 1969-ஆம் ஆண்டு கூடலூர் ஜென்மம் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் என்கின்ற ஒரு சட்டத்தை நாம் இந்த மன்றத்திலே நிறைவேற்றினோம், ஆனால் அந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றார்கள்.

உச்ச நீதி மன்றம் அந்தச் சட்டம் செல்லுபடியாகாது என்ற தீர்ப்பை வழங்கியது. இது போன்ற புரட்சிகரமான திட்டங்கள் செல்லுபடியாக வேண்டுமேயானால், ஒரு அரசியல் சட்டத்தில் 9-வது அட்டவணையும் சேர்க்கப்பட்டாக வேண்டும். 9-வது அட்டவணையிலே இந்தச் சட்டத்தை சேர்த்து 31-ஏ பிரிவின் கீழ் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்று 26-2-72-இல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். பலமுறை மத்திய அமைச்சர்களைச் சந்தித்த போதெல்லாம் இதைப்பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.

24 - 11 - 73 - இல் கூட பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். இதுவரையில் சாதகமான முடிவு எதுவும் மத்திய சர்க்காரிடமிருந்து நமக்குக் கிடைக்கவில்லை. 1973 - 74 - ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மால்கோ தேசியமயமாக்கப்பட வேண்டுமென்று அறிவித்தோம். அதை அறிவித்தவுடன் பெப்ரவரி மாதம் சட்ட நகலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அதைப் பெற்றுக் கொண்டதாக 2-3-73- இல் நமக்குக் கடிதமும் வந்தது. ஆனால், இதுவரையில் அந்தப் பிரச்சினை என்னவாயிற்று?

முடியுமா? முடியாதா? என்கின்ற எந்த திட்டவட்டமான பதிலும் இல்லை. இதுவும் ஒரு சமதர்மத் திட்டம். 1972 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 - ந் தேதி இரவு விடுதலை நாள் வெள்ளி விழா கொண்டாடப்பட்ட பொழுது "தொழிலாளிகளுக்கு நிர்வாகத்திலே பொறுப்பு, முதலீட்டில் பங்கு" என்கின்ற திட்டத்தை அறிவித்து, அதற்கான விதிமுறைகள் எல்லாம் வகுத்து மசோதா கொண்டு வந்து இன்றைக்கு அந்தச் சட்டம் மத்திய சர்க்கருடைய தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் கம்பெனிச் சட்டம் இதற்காகத் திருத்தப்பட வேண்டும். இது நல்ல திட்டம் என்று பிரதமரே பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. நாம் சாதனைகள் செய்ய முடியாமல் அரசியல் சட்டத்தில் எப்படிப்பட்ட சங்கடங்கள் இருக்கின்றன என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான் இவை. உணவு உற்பத்தியில் பிரதான தொடர்பு கொண்டது உரம். உர உற்பத்தியை எடுத்துக் கொண்டால் தொழிற்சாலைகளுக்குள்ளே நுழைந்து அவர்களிடத்திலுள்ள இருப்புகளைக் கேட்கவும், விநியோகத்தில் தவறு நடந்தால் உரத்தை பறி முதல் செய்யவும் நாம் கார்டுகள் கொடுத்த விவசாயிகளுக்கு விநியோகம் செய்யவும் நமக்கு அதிகாரம் தேவை என்றும் உரத் தொழிற்சாலைகளின் இருப்புகளைச் சோதனையிடுகிற அதிகாரம் நமக்குத் தேவை என்றும் பலமுறை கேட்டிருக்கிறோம், பயன் இல்லை.

சிறு தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்லக்கூடாது என்று தடை இருந்தது. அந்தத் தடையை மத்திய சர்க்கார் நீக்கி விட்டார்கள். யாரைக் கேட்டுக் கொண்டு நீக்கினார்கள்? நம் மாநிலத்தை கலந்துக் கொண்டு செய்யப்பட்டதா? இல்லை. எண்ணெய் விலையை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தலாம் என்று தான் வேர்க்கடலைக்கு லெவி வேண்டுமென்றும், வியாபாரத்திற்கு லைசென்ஸ் தரப்பட வேண்டுமென்றும் அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்றும் அனுமதி கேட்டோம்.

12 - 4 - 1973 - இல் இருந்து கேட்டோம். இதுவரை அந்த அனுமதி தரப்படவில்லை. மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே இதுவரை எண்ணெய் டெப்போக்களுக்கு மண்ணெண்ணையை விநியோகம் செய்ய உத்திரவிடுகிற அதிகாரம் இதுவரையில் மாநிலத்திற்கு இருந்தது. ஆனால் திடீரென்று 1972 - இல் இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொண்டார்கள். கரை போடப்பட்ட வேட்டி, வண்ணச் சேலைகள் ஆகியவற்றை நெய்வது கைத்தறிகளுக்கே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் கைத்தறியாளர்களுக்கு தங்கு தடையின்றி நூல் கிடைக்க 1962 - ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3 - ஆம் நாள் டாக்டர் யு.

கிருஷ்ணாராவ் அவர்கள் தொழிலமைச்சராக இருந்த போதே பேரவையிலே ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். கிட்டதட்ட இருபதாண்டு காலம் ஓடிவிட்டது! அந்தத் தீர்மானத்தின் கதி என்ன? கவனிக்கப்படவில்லை. எனவே அதிக அதிகாரம் கேட்பது இங்கே அமர்ந்திருக்கிற அமைச்சர் பெருமக்கள் அந்த அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா? அதிகாரம் எங்களுக்காக அல்ல. மாநிலத்திற்காக கேட்கிறோம். அது புரிய வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி என்று சொல்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி - மாநில சுயாட்சி என்று கூறுகிற நேரத்திலேயே அங்கு பிரிவினைக்கு எள்ளளவும் இடமில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் 'நீங்கள் ஏற்கனவே திராவிட நாடு கேட்டவர்கள், பிரிவினை கேட்டவர்கள். ஆகவே உங்களுடைய வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உங்களைச் சந்தேகிக்கிறோம்' என்று இங்கே சொன்னார்கள்.

போர், போர் என்று அலைந்த அசோகன் களம் பல கண்டான். கலிங்கம் வரை சென்றான் - கலிங்கத்தில் களம் கண்டான் - அவனுடைய கரியின் கால்பட்டு ஆயிரக்கணக்கானவர் பிணமாயினர்; பிணக்குவியலை கண்டான். நான் இனிமேல் போர் புரிய மாட்டேன், புத்தன் வழி செல்வேன் என்றவுடனே, அவனைப் பார்த்து உன்னுடைய பழைய வரலாறு போர் வரலாறு ஆகவே ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று கூறி இருந்தால் அன்றைய இந்தியக் கொடியிலே அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்க முடியாது.

இன்றைக்கும் அசோகச் சின்னம் நம்முடைய இந்தியாவினுடைய தேசீய சின்னமாக ஆகி இருக்க முடியாது. வழிப்பறி கொள்ளை அடித்த ரட்சன் வால்மீகியாகி இராமாயணம் எழுதினான். அவனையே ஒத்துக் கொண்டீர்கள் எங்களை ஒத்துக் கொள்ள கூடாதா?" இப்படியெல்லாம் என்னுடைய பேச்சைத் தொடர்ந்த நான் அடுத்து அ.தி.மு.க. நண்பர்கள் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சி என்ற வார்த்தையைச் சொன்னாரா என்று கேட்டதற்கு பதிலாக முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் 21 - 7 - 1968 - இல் நடைப்பெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் பேசிய நீண்ட பேச்சினை முழுவதும் படித்துக்காட்டி; "மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல!"

என்று அண்ணா அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதையும் எடுத்துக் காட்டினேன். தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளுங்கட்சியான தி.மு. கழகம், இந்திய யூனியன் முஸ்லீம்லீக், பார்வாடு பிளாக், தமிழ்நாடுகம்யூனிஸ்டு கட்சி, தமிழரசு கழகம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் 161 பேர் ஆதரித்து வாக்களித்தனர், தீர்மானத்தை எதிர்த்து பழைய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்த்த 23 பேர் வாக்களித்தனர்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற விவாதம் போதாதென்பது போல மேலும் விளக்கம் கேட்டு, விளக்கம் கேட்க அவகாசம் தரப்படாததால் வெளி நடப்பு செய்வதாக நொண்டிச் சாக்கு கூறிவிட்டு அ. தி. மு. க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். பெரும் மகிழ்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆரவாரத்துக்கிடையே பெருவாரியான வாக்குகளைப் பெற்று மாநில சுயாட்சி கோருகிற தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியது.