நெஞ்சுக்கு நீதி
பொதுவாழ்வில் ஒரு பொன்னாள்! · 195 / 391
பொதுவாழ்வில் ஒரு பொன்னாள்! முதல் 1976 ஜனவரி இறுதி வரையில் நடைபெற்ற ஒன்பதாண்டுக் கால கழக ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுக் காலம் அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளில் தலைசிறந்த பணிகள் எனப்படுபவை- சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது - சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாகும் என ஆக்கியது - தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இருமொழிக்கே இடம்; இந்திக்கு இடமில்லை எனத் தடுத்து நிறுத்தியது.
அண்ணா அவர்களது மறைவுக்குப் பிறகு அவரது வழி நின்று கழக ஆட்சி, எனது தலைமையில் "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற முழக்கத்துடன் ஆற்றிய சாதனைகள் ஏராளம்! குடிசை மாற்று வாரியம், ஆதி திராவிடர்களுக்கும் மீனவர்களுக்கும் இலவசமாக வீடு கட்டி வழங்கும் திட்டம், நகர்ப்புற - கிராமப்புற ஏழை எளியோர்க்கு இலவச அறுவை சிகிச்சை மூலம் கண்ணொளி வழங்கி மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம், தொழு நோய்ப் பிச்சைக்காரருக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்து அவர்களை வாழ வைக்கும் திட்டம், ஊனமுற்றோர்க்குப் பலவகையிலும் உதவியளித்து தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், சென்னை போன்ற நகரங்களில் கைரிக்ஷாக்களை ஒழித்து அந்தத் தொழிலாளிகளுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம், பள்ளிச்சிறுவர் சிறுமியர்க்கு காது கேட்கும் கருவிகளை வழங்கும் திட்டம், ஆதரவற்ற சிறார்க்கு ஆலயங்களின் உதவியுடன் கருணை இல்லங்கள் அமைத்து அவர்கட்குக் கல்வி வழங்கிய திட்டம், விதவைகள் மறுவாழ்வுத் திட்டம், கலப்பு மணங்களை ஊக்கப்படுத்தும் திட்டம் - இவைகளையன்னியில் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி நிர்ணயசட்டம், அவர்கள் குடியிருக்கும் மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கிய சட்டம், தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு ஒப்படை செய்யும் சட்டம், அரசுக்குச் சொந்தமான, நிலத்திலிருந்து வீட்டு மனை ஒப்படை செய்யும் சட்டம், பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்ச வரம்பு சட்டம், பஸ்களை தேசீயமயமாக்கும் சட்டம், தனியாருக்குச் சொந்தமாக இருந்த மின் நிலையங்களை நாட்டுடமையாக்கிய சட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், குதிரைப் பந்தய ஒழிப்புச் சட்டம், பரிசுச் சீட்டு ஒழிப்பு மற்றும் குடிநீர் வாரியம், குறிப்பிட்ட காலத்துக்குள் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி செய்து கொடுத்தது, கிராமங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டம், பல நீர்த் தேக்கங்களை அமைத்து புதிதாக பதினைந்து லட்ச ஏக்கரா பாசன வசதி பெறுமாறு செய்தது, அரசு ஊழியர் கோரிக்கைகளை கவனிக்க இரண்டாவது ஊதியக் குழு அமைத்தது, இந்தியாவிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்து காவல் துறையினருக்கு ஊதிய உயர்வு போன்ற பல பரிந்துரைகளை நிறைவேற்றியது, அரசு அலுவலர் ஒருவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பத்தாயிர ரூபாய் பாதுகாப்பு நிதி அளித்தது, அரசு ஊழியர்க்கு திருமணக் கடன் தந்தது, அரசு ஊழியர்களின் பல்லாண்டு காலக் கோரிக்கையான ரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்தது, விபத்தில் உயிர் நீத்திடும் விவசாயத் தொழிலாளி, மரமேறும் தொழிலாளி, மீனவர்கள் குடும்பத்துக்கு உடனடி நிதி உதவி அளித்தது, பெண் போலீஸ் படையைத் தொடங்கியது, அண்ணா பிறந்த நாளன்று போலீசாருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை உருவாக்கியது.
பிற்படுத்தப்பட்டோர் நலன்கள் பற்றி ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு குழுவை நியமித்து அதன் பரிந்துரைகள் பலவற்றை ஏற்றது, பிற்படுத்தப் பட்டோருக்கும் ஆதி திராவிடர் நலனுக்கும் தனித்தனியே துறைகளும், அமைச்சர்களும் என்ற நிலையை ஏற்படுத்தியது, தொழிற் கல்லூரிகள், வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் 25 சதவிகிதம் என்பதை 31 என்றும், ஆதி திராவிடர்க்கு 16 என்பதை 18 சதவிகிதம் என்றும் உயர்த்தியது, பி. யு. சி.
வரையில் எல்லா மாணவர்க்கும் இலவசக் கல்வியென அறிவித்தது, புன்செய் நில வரியை ரத்து செய்து, நஞ்சைக்கு ஐந்து ஏக்கர் வரையில் வரியை விலக்கியது, இந்தியாவிலேயே முன்னோடியாக மாநிலத் திட்டக்குழு கண்டது, ஆகஸ்ட் 15-இல் கோட்டை முகப்பில் கவர்னருக்குப் பதிலாக முதலமைச்சர்தான் கொடியேற்ற வேண்டுமெனக் கோரி அதிலே வெற்றிக் கண்டது, இப்படி எண்ணிறந்த காரியங்கள்-அணைக்கட்டுகள், பாலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முற்போக்கு சட்டங்கள், மக்களை முன்னேற்றும் திட்டங்கள், தமிழகத்தை வளங் கொழிக்கச் செய்யும் வண்ணம் சாதனைகளாக மலர்ந்து மணம் பரப்பின. இத்தனையும் ஒரு மாநில அரசுக்கு உரிய அதிகாரங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!
மேலும் மாநில மக்களுக்கு மாநில அரசே நேரடியாக நன்மைகளைப் பெருக்கிட வேண்டுமென்பதற்காகத்தான் கழகத்தின் கொள்கையான மாநில சுயாட்சி முழக்கத்திற்கு வடிவம் கொடுக்கக் கழக அரசு முன்வந்தது. மாநில சுயாட்சி முழக்கத்தின் வரலாற்றில் 1974 - ஆம் ஆண்டு ஏப்ரல் 16 - ஆம் நாள் மிக முக்கியமான நாளாகும். அன்றுதான் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முன் மொழிந்து நான் உரையாற்றினேன், அந்த உரையின் சில பகுதிகள் வருமாறு: "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தைப் பெறப்போகும் சிறப்பு மிக்க தீர்மானத்தை நமது தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன் மொழிகிற பேறுபெற்றமைக்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
சிந்தனைச் செல்வம் மிகுதியாகப் பெற்றுள்ள இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள், இந்தத் தீர்மானத்தின் நல்ல நோக்கத்தை ஆய்ந்து தெளிந்து, தங்கள் பேராதரவை நல்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் வலிவும் பொலிவும் கெடாமலிருக்கவும், ஒருமைப் பாட்டுக்கு ஒரு துளி தீங்கும் நேராமல் இருக்கவும் தன் பங்கு எப்போதும் உண்டு என்று சூளுரை மேற்கொண்டு, அதனைச் செயல் வடிவிலும் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.
இன்றைய ஆளுங்கட்சியான தி. மு. கழகம் என்பதை அனைவரும் அறிவர். 1962 - ஆம் ஆண்டில் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதும், சீன ஆக்கிரமிப்பின்போது அந்த எதிரிகளை நோக்கிப் போர் முழக்கம் செய்த பாடி வீடுகளில் ஒன்றாக இருந்ததும், பாகிஸ்தான் போக்கு முறியடிக்கப்பட இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் முந்திக்கொண்டு ஆறு கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தின் சார்பில் போர் நிதி வழங்கியதோடு, போர்முனையில் நிற்கும் உணர்வுடன் வெற்றிக்கான வீரப் பணிகளைப் புரிந்ததும் - இன்றைய ஆளுங்கட்சியான தி.
மு. கழகத்தின் நாட்டுப் பற்றுக்குச் சான்றுகளாகும். தேவையற்ற ஐயப்பாட்டுப் பின்னணியினூடே இந்தத் தீர்மானத்தின் நோக்கம் பற்றி சிந்தித்திட வேண்டாம் என்பதற்கே இவைகளைக் குறிப்பிட்டேன். இந்திய நாட்டில் கூட்டாட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, 1945-ஆம் ஆண்டு இந்திய மக்கள் முன் வைத்த தேர்தல் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. "இந்தியக் கூட்டாட்சி என்பது, அதன் பல்வேறு பகுதிகளின்-விரும்பி இணையும் ஒன்றியமாக இருக்க வேண்டும்.
பகுதிகளுக்கு (அதாவது மாநிலங்களுக்கு) அதிகபட்ச சுதந்திரம் அளிப்பதற்காக எல்லோருக்கும் பொதுவான, முக்கிய அதிகாரங்கள் கொண்ட குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட்டாட்சி (மத்திய) அரசுக்கும், தேவைப்படும் பகுதிகள் (அதாவது மாநிலங்கள்) விரும்பினால் ஏற்கும் பொதுவான அதிகாரங்கள் கொண்ட பொதுப்பட்டியலும் இருக்கலாம்."
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இந்தத் தேர்தல் பிரகடனத்தைத் தொடர்ந்து 1947-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் முன் மொழிந்த தீர்மானத்திலும் மத்திய அரசுக்கு என்று ஒதுக்கப்படும் அதிகாரங்களைத் தவிர, மற்ற எல்லா அதிகாரங்களும் சுயாட்சி உள்ள மாநிலங்களுக்கே உண்டு என்பது வலியுறுத்தப்பட்டது. அத்தீர்மானத்தின் பகுதியாவது:- "இப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள நிலப்பகுதிகளும், இந்திய சமஸ்தானங்களில் உள்ள நிலப்பகுதிகளும், வேறு வெளியில் உள்ள பகுதிகளும் இணைந்து சுதந்திர இந்தியாவாக விளங்கும்.
அரசியல் நிர்ணய சபை தீர்மானிக்கிறபடியான எல்லைகளைக் கொண்டோ அல்லது இப்பொழுதுள்ள எல்லைகளுடனோ அவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தனித்த சுயாட்சியுள்ள பகுதிகளாகச் செயல்படும். எஞ்சிய அதிகாரங்களும் அப்பகுதிகளுக்கே அளிக்கப்படும்."
இந்தத் தீர்மானங்களும், தேர்தல் பிரகடனங்களும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் பிறகு மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்டுவிட்ட உண்மைகளாக ஆகிவிட்டன. அந்த உண்மையை தி.மு. கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் பலமுறை வெளிக் கொணர்ந்து, அதற்கேற்ற வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று வாதிட்டிருக்கிறது. 1967-ஆம் ஆண்டு தி.மு. கழகத் தேர்தல் அறிக்கை பின் வருமாறு அமைந்தது:- "ஒருமைப்பாடு என்பதை வலியுறுத்தி நடைமுறைக்குக் கொண்டு வரும்போது, அது, ஒரு பகுதியினர் பிற்பகுதியினர் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஆகிவிடாமல் பாதுகாத்திடும் பொறுப்பை தி.மு.
கழகம் மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது. மாநில உரிமைகள் நசுக்கப்படாமல் பாதுகாத்திடவும், பொருளாதார வளம் ஒரேசீராக எல்லா மாநிலங்களுக்கும் அமைவதற்கான திட்டம் மேற்கொள்ளப்படவும் தி.மு.கழகம் பொறுப்புடன் பணியாற்ற உறுதி கொண்டிருக்கிறது. மாநில உரிமைகளைப் பாதுகாத்திடும் முறையிலும், குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரங்கள் மத்திய சர்க்காரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முறையை மாற்றி, அவை மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதற்காகவும் கழகம் பாடுபடுவதுடன், அந்த நோக்கத்துடன் இந்திய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறது."
1969-ஆம் ஆண்டு "ஹோம் ரூல்" ஆங்கில ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கடைசி கட்டுரையில்- "அன்புள்ள தம்பி, நான் பதவியைத் தேடிபைத்தியம் பிடித்து அலைபவனுமல்ல; காகிதத்தில் கூட்டாட்சியாகவும்; நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்புக் கொண்டதாகவும் இருக்கிற ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருப்பவனுமல்ல. இதற்காக மத்திய அரசுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதும், டில்லியோடு சண்டை போடுவதும் தான் எனது நோக்கம் என்று நான் பிரகடனம் செய்ய விரும்பவில்லை.
அதனால் யாருக்கும் நன்மையில்லை. உண்மைதான்; சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டுமென்பதுதான் முக்கியம். ஆனால் கூட்டாட்சி முறையைப்பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை அதற்கு முன்னால் செய்ய வேண்டும். அந்தப் பணியில், அன்புத் தம்பி, உன்னுடைய உற்சாகமான ஒத்துழைப்பும், மனப்பூர்வமான பங்கேற்பும் எனக்குக் கிடைக்குமென்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. பதவியில் இருப்பதின் மூலம், இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் கொல்லைப் புறமாகக் கொண்டு வரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச் சிந்திக்கக்கூடிய பொதுமக்களின் கவனத்திற்கு தி.மு.க.
கொண்டு வர முடியுமானால், அது உண்மையிலேயே அரசியல் உலகிற்குச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க உதவியாகும்" என்ற அறிக்கையை இந்த அவையின் முன் வைத்திருப்பதோடு, அதனை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தையும் உங்கள் மேலான வழிமொழிதலுக்காக வைத்துள்ளேன். இந்திய நாட்டின் சுதந்திரக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. வான்முகட்டைத் தொடுவது போல் அசைந்தாடும் அந்தக் கொடியின் கம்பீரம் காண, முகில்களைக் கிழித்துக்கொண்டு நமது விழிகள் தாவுகின்றன.
வங்கம் தந்த தங்கக் கவி தாகூர் எழுதிய தேசீய கீதம் நமது செவிகளில் குற்றால நீர்வீழ்ச்சியின் சங்கீத ஓசையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த நாடு, தன்னை விடுவித்துக் கொண்டு தலைநிமிர்ந்து கிளம்பிய வரலாற்று வரிகள், உலகப் புத்தகத்தில் கோடிட்டு வைக்கப்பட்டுள்ளன. சிறையிலிருந்த நாடு, விடுதலை பெற்று விட்டது. கதவு திறந்தது. பூட்டிய இரும்புக் கூட்டிலேயிருந்த கைதி, புன்னகை மலர வெளியே வருகிறான்.
தந்தையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த தளிர்நடைச் செல்வம், இளங்கரம் தூக்கி, தாவியோடுகிறது, அவனைத் தழுவிக் கொள்ள! அவனும் அடக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளம் கரை புரள மகனைத் தூக்கி முத்தமிடக் கரங்களை நீட்டுகிறான். கைகள் இயங்க முடியாமல் தவிக்கின்றன. சிறையிலிருந்துதான் விடுபட்டு விட்டானே; இன்னும் என்ன தடை? தன்னை யார் தடுப்பது? சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் சிறையில் இல்லை; சுதந்திர பூமியில்தான் இருக்கிறான்.
பிறகு யார், தன் குழந்தையைக்கூடத் தழுவிட முடியாமல் அவனைக் கட்டுப்படுத்துவது? யாருமல்ல; அவன் சிறையிலிருக்கும்போது அவன் கைகள் இரண்டையும் காலையும் சேர்த்து ஒரு விலங்கு மாட்டியிருந்தார்கள். விடுதலை அடைந்த பூரிப்பில், விலங்குகளைக் கழற்ற வேண்டுமென்ற நினைப்பு கூட இல்லாமல் அவன் வெளியே வந்துவிட்டான். அவன் சுதந்திர மண்ணில்தான் இருக்கிறான். கை, கால் விலங்கு மட்டும் கழற்றப்படவில்லை. மனிதன் விடுதலையாகிவிட்டான்; கை, கால்கள் மட்டும் கட்டுண்டு கிடக்கத் தேவையில்லையே; இந்தியா விடுதலை பெற்றுவிட்டது.
அதன் அவயவங்களைப் போன்ற மாநிலங்கள் மட்டும் மத்திய அரசுக்குத் தேவையில்லாத அதிகாரக் குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்? இந்தக் கேள்வியின் நீண்ட நாளைய தாகத்தைத் தீர்க்கும் நெல்லிக்கனியாத்தான் இன்று, இந்த அவையின் முன்னால் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். அரசியல் சட்டம் என்பது திருத்தப்படக்கூடாத ஒன்றல்ல. நமது அரசியல் சட்டம் 30 தடவைகளுக்கு மேல் திருத்தப்பட்டிருக்கிறது.
மாநிலங்களின் மொழிகள் வளரவும், பண்பாட்டுத் தன்மைகள் காக்கப்படவும், மாநிலத்திற்கு மாநிலம் நல்லுறவுகள் வளரவும், மத்திய மாநில உறவுகள் நிலைத்துச் செழிக்கவும், நாட்டின் பொருளாதாரம் வளம் பெற்றுத் திகழவும், அரசியல் சட்டத்தில் இந்த மகத்தான மாறுதலைச் செய்வது எதிர்காலத்தில் இந்தியாவின் வலிமையையும் வளப்பத்தையும் பெருக்குவதற்கு அடித்தளமாக அமையும் என்பதை உணர்ந்து மத்திய அரசினர் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக உங்கள் ஒத்துழைப்பு அமைய வேண்டுமென்று விழைகின்றேன்.
மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டும், பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டும், இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றிவைக்கும் இந்தச் சுடர்விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் தூண்டுகோலாக இருக்க வேண்டுமென்றும் பணிவன்புடன் கோருகிறேன்."
மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து ஆளுங்கட்சியின் சார்பில் முதலமைச்சர் என்ற முறையில் நான் ஆற்றிய உரை என் இதயத்தில் எத்தகைய எழுச்சியையும், மகிழ்ச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தியது என்பதை என்னால் விவரிக்கவே இயலாது. அந்த நாள் என் பொதுவாழ்வில் ஒரு பொன்னாள்!
