நெஞ்சுக்கு நீதி
கட்டபொம்மன் கோட்டை · 194 / 391
கட்டபொம்மன் கோட்டை மே திங்கள் 12-ஆம் நாள் நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூவருக்குக் கழக அரசு விழா எடுத்தது. "செந்தமிழ் நாடெனும்போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என உற்சாகக் கவிதை பொழிந்து வீர சுதந்திர சங்கநாதம் புரிந்திட்ட முறுக்கி விட்ட மீசைக் கவிஞன் சுப்பிரமணிய பாரதியார் பிறந்து வளர்ந்த எட்டயபுரத்தில் அவரது பூர்வீக இல்லத்தினை நினைவுச்சின்னமாக்கிட அரசு ஏற்பாடு செய்த விழா-அன்றைக்கே ஒட்டப்பிடாரத்தில்; கப்பலோட்டிய தமிழன், வெள்ளையரை வெளியேறச் சொன்ன வேங்கை வரிப்புலி வ.
உ. சிதம்பரனாருக்கு சிலை எடுத்த விழா-தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான விழா. பாஞ்சாலங்குறிச்சி விழாவில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்று அப்போது என்னை அழைத்தவர்கள் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான பெரியவர் மணலி கந்தசாமி அவர்களும், க. சுப்பு அவர்களுமாவார்கள். "பின் தங்கிய மக்களுக்கு நெஞ்சுரத்தோடு பாடுபடக்கூடிய தலைவர் ஒருவர் உண்டென்றால் அது நமது முதல்வர் கலைஞர்தான்.
அரசியலில் வேறுபாடு இருந்தாலும் இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் நான் வெட்கப்படத் தேவையில்லை. கட்டபொம்மன் விழா எடுக்கும் இந்த நேரத்தில் அந்தக் கட்டபொம்மனாகவே நம் எதிரே கலைஞர் அவர்கள் வீற்றிருப்பதை நான் காண்கிறேன். கட்டபொம்மன் இப்போது இல்லை என்கிறார்கள்; அதை நான் நம்பமாட்டேன். அந்த கட்டபொம்மன்தான் இங்கே கலைஞராக வீற்றிருக்கிற காட்சியைக் காண்கிறேன்."
அந்த விழாவில் நண்பர் சுப்பு பேசிய பேச்சின் ஒரு பகுதிதான் இது! அந்த நிகழ்ச்சியில் நான் அளித்த வாக்குறுதிக்கேற்ப 1974-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை எழுப்புவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பெற்று, 1974 ஆகஸ்டு 18-ஆம் நாளன்று அந்த எழுச்சிமிக்க கோட்டையின் திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கட்டபொம்மனின் புகழ் பாட உருவாக்கப்பட்ட கோட்டை குறித்தும், அதற்கான விழா குறித்தும் சில விபரங்கள்:- 180 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணிலிருந்து விடுதலைக் குரல் எழுப்பிய மாவீரன்-"வானம் பொழியுது; பூமி விளையுது; மன்னவன் காணிக்கு ஏது வரி?"
என்று முதல் முழக்கமிட்ட மாவீரன்-கட்டபொம்மன் நினைவாக எழுப்பப்பட்ட கோட்டை அது. வரலாறுகளில் காணப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு முன்பு கட்டபொம்மன் கோட்டை இருந்த இடத்தில்தான் இந்தக் கோட்டையை எழுப்பியிருக்கிறோம். கோட்டையின் வடிவமைப்பு 15 மீட்டருக்கு 15 மீட்டர் சதுர அளவுள்ளதாகவும், பாதுகாப்பு அரண்களைக் கொண்ட மாதிரி அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் மையத்தில் பத்து மீட்டர் உயரமுள்ள மைய தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணடபத்தின் மேல்புறக் கடைசியில் 3 மீட்டருக்கு 3 மீட்டர் அளவுக்கு மேடை உருவாக்கப்பட்டுள்ளது. மேல்புறக் கடைசியில் உள்ள மேடையில் உடைவாளின் மீது கையினை வைத்தவாறு தர்பார் மண்டபக் கொலு வீற்றிருக்கும் அமைப்பில் வீரன் கட்டபொம்மனின் அழகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இருபுறத்திலும் ஊமைத்துரை, வெள்ளைத் தேவன், தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம் ஆகியோர் உருவங்கள் சிற்ப வடிவங்களாக வடித்தெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன.
வெளிப்புற அழகுக்கு ஏற்றவண்ணம் நன்கமைக்கப்பட்ட புல்வெளியும், தோட்டமும் உருவாக்கப்பட்டு, கருத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன. ஒட்டப்பிடாரம் கிராமத்திலிருந்து கோட்டைக்குச் செல்லும் சாலையில் ஐந்து அழகு வளைவுகள் வீரபாண்டிய கட்டபொம்மனோடு உடன் வாழ்ந்து மறைந்த வீரப்பெருமக்களின் நினைவு வளைவுகளாக அமைக்கப்பட்டன. நெல்லை மாவட்ட மக்களெல்லாம் திரண்டிருக்க கட்டபொம்மன் கோட்டை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கல்வி அமைச்சர் நாவலர் அவர்கள் தலைமை தாங்கினார்.
மற்றும் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம், அமைச்சர்கள் ஆதித்தனார், ப. உ. சண்முகம், மணலி கந்தசாமி, எஸ். எஸ். தென்னரசு, தூத்துக்குடி சிவசாமி எம்.பி., ஆற்காடு வீராசாமி எம்.எல்.ஏ., கா. மு. கதிரவன் எம்.எல்.ஏ., மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அந்த விழாவில் கலந்து கொண்டார்கள். கட்டபொம்மன் கோட்டை திறப்பு விழாவிற்கு முன்பு லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட மாபெரும் ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது.
அந்த ஊர்வலத்தில் கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றுக் காவியங்கள் அலங்கார ஊர்திகளில் கொண்டு வரப்பட்டன. இந்த மாபெரும் ஊர்வலத்தினை, கட்டபொம்மன் கோட்டை வாயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து நாங்கள் எல்லாம் பார்வையிட்டோம். ஊர்வலம் கோட்டையை அடைந்ததும், அங்கே அமைக்கப்பட்ட கட்டபொம்மனின் சிலையினை நான் திறந்து வைத்தேன். கோட்டை எழுப்புவதற்கும், அந்த இடத்தினை செப்பனிடுவதற்கும் ஏழு லட்ச ரூபாய் செலவாயிற்று.
கட்டபொம்மன் குல தெய்வமான ஜக்கம்மா ஆலயத்தின் சார்பில் எனக்கும் அமைச்சர்களுக்கும் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே கட்டபொம்மனின் வழித் தோன்றல்களான இருநூறு பேர்களுக்கு நிலப்பட்டா, மனைப் பட்டா வழங்கப்பட்டது. வீரபாண்டியனின் வாரிசுகள் சார்பில் வையப்ப நாயக்கர் அவர்கள் எனக்கு வீரவாள் ஒன்றை பரிசாக வழங்கினார். கட்டபொம்மன் கோட்டையை சமைத்துத் தந்த சிற்பிகள் கணபதி, மாணிக்கம், சிதம்பரம், சுப்பையா ஆகியேருக்கு கணையாழியும், பொன்னாடையும் என்னால் அணிவிக்கப்பட்டன.
கட்டபொம்மன் கோட்டைக்கான அடிக்கல் நாட்டு விழா, திறப்புவிழா ஆகிய நிகழ்ச்சிகளில் ஒருசிலர் எடுத்துரைத்த கருத்துக்களில் முக்கியமான சில பகுதிகள் இந்த வரலாற்று ஏட்டில் இடம்பெறுவது நல்லது. குறிப்பாக அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், "மிகப்பெரிய திட்டங்களைப் போடும் போது, பழமொழி சொல்வார்கள், 'மனக்கோட்டை கட்டுகிறான்' என்று.
கேலி செய்வதற்காகவே கோட்டை கட்டுகிறான் என்று சொல்லப்பட்ட நிலையை மாற்றி அமைத்து தமிழகத்தின் வீரத்தை நினைவுபடுத்தும் வகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை எழுப்பியிருக்கின்ற முதல்வர் கலைஞர் அவர்களையும், பொதுப் பணித் துறையினரையும் நான் பெரிதும் பாராட்டுகின்றேன். தமிழகம் வீரத்திற்கு எப்போதுமே மதிப்புத் தந்து வருகிறது என்பதற்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டாகும். கட்டபொம்மனுக்கு கருங்கல்லினாலேயே உருவச்சிலை அமைத்து கோட்டையையும் அமைத்திருப்பது தமிழகத்திற்கு பெருமை தருவதாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கலைஞரின் முயற்சியால் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது" என்றார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி., "இதுவரை நான் அனுபவித்திராத மகிழ்ச்சியை-இனி என்றும் அனுபவிக்க முடியாத மகிழ்ச்சியை இந்த சிறப்பான விழாவின் மூலம் நான் அடைகிறேன். கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கலைஞர் நிறைவேற்றுகிறார் என்பதற்கு இது அடையாளம். நடைபெற்ற ஊர்வலமும், அமைந்திருக்கிற கோட்டையும் வரலாற்றுச் சிறப்புடையதாகும்.
புராணங்களிலே ஒரு நகரத்தை நிர்மாணிப்பார்களானால் தெய்வத் தச்சன் மயனால் உருவாக்கப்பட்டது என்று கூறுவார்கள். அதைப்போல இந்த சிறப்புகளை எல்லாம் காணும்போது சரித்திரம் காணாத அற்புதத்தை கலைஞர் நிறைவேற்றியிருக்கிறார். இந்த சாதனை தமிழன் என்ற உணர்வு படைத்த ஒவ்வொருவரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நன்றி உணர்ச்சியோடு போற்றத்தக்கதாகும். இன்றைக்கு சரியாக 175 ஆண்டுகளுக்கு முன்பு 1799-ஆம் ஆண்டு கயத்தாறு சாலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான்.
இன்று கலைஞர் அவர்கள் கட்டபொம்மனுக்கு கோட்டை எழுப்பியிருக்கிறார். தமிழா, உன் வரலாறு திரும்புகிறது. தமிழ்நாட்டில் இரண்டு கோட்டைகள் இருக்கின்றன. ஒன்று கலைஞர் ஆளும் கோட்டை; இன்னொன்று கலைஞர் அமைத்த கோட்டை. இவ்வளவு சிறப்பான காரியங்களைச் செய்து வரும் தம்பிகளுக்கு ஆசி கூற அண்ணன் இல்லையே என்ற குறை இருக்கிறது. என்னை அண்ணனாக நம்புங்கள்; நான் வாழ்த்துக் கூறுகிறேன்" என்றார்.
பெரியவர் மணலி கந்தசாமி அவர்கள், "கடந்தமுறை இதே பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு விழா நடந்தபோது, கலைஞர் அவர்கள் ஆட்சியின் சாதனைகளைப் பாராட்டிப் பேசி அவரது ஆட்சி பொற்காலம் படைக்கவேண்டும் என்று கூறினேன். நான் யாரையும் அதிகம் பாராட்டமாட்டேன். பாராட்டுக்குரியவர்களைத்தான் பாராட்டுவேன். கலைஞர் சொன்னதைச் செய்கிறார். அரசியல் ஞானம் அவரிடம் முற்றியிருக்கிறது. இந்த மக்களுக்காக-கட்டபொம்மன் பரம்பரைக்காக நிலப்பட்டா, மனைப்பட்டா கொடுத்து இந்த இடத்தை மீண்டும் ஊராக்க வேண்டும், ரெவினியூ ரிக்கார்டுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டோம்.
அதைப்பற்றி ஆவன செய்வதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் அதையும் இன்று இந்த மகிழ்ச்சிகரமான விழாவில் நிறைவேற்றியிருக்கிறார். பாரதத்திலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிய பெருமை அவருக்குண்டு. கம்பளத்து மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஆட்சிக்கு-அற்புத சாதனைகளைச் செய்துவரும் ஆட்சிக்கு-கலைஞருக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்" என்றார்.
விழாவிலே பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'நெல்லை' குமரி மாவட்டங்களுக்கும் இந்த நல்ல நினைவுகளை எடுத்துச் சொல்லும் இயக்கமாகத்தான் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் இயங்கவிருக்கிறது. இதற்காக கலைஞர் அவர்களுக்கு இந்தப்பகுதி மக்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளனர். மக்களைக்காக்கும் ஆட்சிப்பொறுப்பில் அமைந்துள்ள கலைஞர் அவர்கள் இந்தக் கோட்டையை எழுப்பியிருக்கிறார். கலைஞர் அவர்கள் ஆற்றி வருகின்ற சீரிய பணிகளின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழகம் சிறப்புற்று விளங்குகிறது.
இந்தியாவில் 47 போக்குவரத்துக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் கலைஞர் அவர்களால் துவக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள்தான் சிறப்பாக, லாபத்தில் நடக்கின்றன. இந்தக் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகமும் லாபத்தில் நடக்கும் என்ற நம்பிக்கை இருப்பதற்குக் காரணம், அது கலைஞரால் துவக்கப்படுகிறது. எந்த இடத்தில் மக்கள் கூடக்கூடாது என்று ஆங்கில ஏகாதிபத்தியம் தடுத்ததோ, எந்தப் பகுதி நிலத்தையாரும் பார்க்கக் கூடாது என்று அறிவித்தார்களோ எங்கே கோட்டை கொத்தளங்கள் இருக்கக் கூடாது என்று தரைமட்டமாக்கினார்களோ, அங்கே கோட்டையை எழுப்பி உரிமை உணர்வை-வீர உணர்வை ஊட்டுவதற்குப் பாடுபடுகிற கலைஞருக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள்."
அமைச்சர் ஆதித்தனார், அமைச்சரும் நண்பருமான ப.உ.ச. ஆகியோரும் புகழுரை, பாராட்டுரை வழங்கினார்கள். ஆலடி அருணா அப்போது பேசிய போது, "இங்கே கலைஞர் அவர்களைப்பற்றிப் பேசுகிறபோது கட்டபொம்மன் வாரிசு என்று பாராட்டினார்கள், உண்மை! வரலாற்று அடிப்படையில் கட்டபொம்மனின் வாரிசாக இருப்பவர்தான் கலைஞர். இன்று கலைஞர் அவர்களால் மீண்டும் கோட்டை எழுகிறது. கட்டபொம்மன் கொற்றம் இங்கே தோன்றப்போகிறது. அந்த வகையில் கலைஞர் அவர்கள் கட்டபொம்மனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாரிசாகத் திகழ்கிறார்.
ஒரு மாபெரும் வீரனுக்குச் செய்கிற நன்றி உணர்வான ஏற்பாட்டு அடிப்படையில் கலைஞர் அவர்கள் இந்தக் காரியங்களைச் செய்கிறார். அந்த நன்றி உணர்வோடு நாமும் கலைஞருக்குத் துணை நிற்க வேண்டும்" என்றார். அடுத்து, அந்தத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தூத்துக்குடி சிவசாமி ஆற்றிய உரையாவது:- "சில நாட்களுக்கு முன்பு நான் இதே இடத்தில் பேசுகையில் ஒன்றைக் குறிப்பிட்டேன். கட்டபொம்மன் விழா அப்போது நடைபெற்றது.
புராண காலத்தில் ரிஷ்ய சிருங்கர் கால்பட்ட இடமெல்லாம் மழை பெய்யும் என்று புராணத்தில்தான் படித்திருக்கிறேன். ஆனால், கலைஞர் எந்தப் பகுதிக்கு வந்தாலும் அந்தப் பகுதி செழிப்பான மாற்றத்தைப் பெறும் வகையில் ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று சொன்னேன். பாஞ்சாலங் கோட்டையை வெள்ளையர்கள் இடித்துத் தரைமட்டமாக்கி அந்த இடத்தில் எருக்கஞ்செடிகளைப் பயிரிட்டார்கள். அந்த இடத்தை மாற்றித்தாருங்கள் என்று கேட்டேன்.
அவர்கள், ஒருவரம்தானே கேட்டாய், பல வரம் தருகிறேன் என்று சொன்னார்கள். ரெவினியூ ரெக்கார்டுகளில் இல்லாதிருந்த பாஞ்சாலங்குறிச்சியை ரெவினியூ ரெக்கார்டுகளில் ஏறச்செய்தார். கட்டபொம்மனின் மாதிரிக் கோட்டை இங்கே உருவாகும் என்று அப்போது வரம் தந்தார். இருந்தும் நான் பேராசைக்காரனாக இருக்கிறேன். திருக்குறளில் "தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்பார்கள். அதையேதான் இப்படி மாற்றிச் சொல்ல விரும்புகிறேன்.
"தெய்வம் தொழாது" கலைஞரைப் பின்பற்றினால் பெய்யெனப் பெய்யும் மழை என்று சொல்லத் தோன்றுகிறதும் யார் கேட்டாலும் வரம் தரும் திறன் பெற்றவர் கலைஞர். இந்தப் பகுதிக்கு கலைஞர் அவர்கள் இன்னும் பல வரங்களைத் தரவேண்டும். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்று சொல்வார்கள்.
பாஞ்சாலங் குறிச்சி மக்கள் நன்றிக்கு மிகவும் எடுத்துக்காட்டானவர்கள். கலைஞர் அவர்கள் போராட்டம் துவக்கும் காலத்தில் பாஞ்சாலங்குறிச்சி வீரப் பரம்பரையினர் கலைஞருக்கு வலது கரமாக இருப்பார்கள். சுப்பு அவர்கள் பேசுகையில் ஆதிக்கத்திற்கு கூற்றம் கலைஞர் என்று குறிப்பிட்டார்கள். அது நூற்றுக்குநூறு உண்மை. இந்தச் சின்னஞ்சிறு உருவமா அந்த வீரத்தைப் பெற்றது என்று அவரைப் பாராட்ட வேண்டுமென்று தோன்றவில்லை.
அன்னை அஞ்சுகம் அம்மையாரைத்தான் பாராட்ட வேண்டும். இத்தகைய வீரம் படைத்த தலைவரைப் பார்த்தா பதவி ஆசை பிடித்தவர் என்று சொல்கிறார்கள். வீரம்தான் வீரத்தைப் போற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் கலைஞர் அவர்கள்" என்றார்.
அந்த விழாவில் பேசிய நண்பர் சுப்பு- "கடந்த முறை இந்த இடத்தில் கட்டபொம்மன் விழா நடை பெற்றபோது கலைஞருக்குப் பக்கத்திலே நாங்கள் அமர்ந்திருந்தாலும் கட்சி அடிப்படையில் தூரத்தில்தான் இருந்தோம். அந்த விழாவில் பேசுகையில், தோழர் மணலி அவர்களையும் என்னையும் பார்த்து "நீங்கள் சொல்கிற திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிக் காட்டி வருகிறோம். நல்ல காரியத்திற்கு நீங்கள் ஏன் துணையாக இருக்கக் கூடாது" என்று கலைஞர் கேட்டார்.
மக்களுக்கு நன்மை செய்யும் கலைஞரை வீழ்த்துவது என்பது எட்டப்பன் வேலை என்பதால் அவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற வகையில் நானும் இங்கே வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். இப்படியெல்லாம் என்னைப் பாராட்டியவர்கள், சிலர் இப்போது என்னை வேகவேகமாகத் தாக்குகிறார்கள் என்றாலும், அவர்கள் இப்போது தாக்குவதை சிலர் நினைவூட்டும்போது, அவர்கள் அப்போது பாராட்டிய இது போன்ற உரைகள் எல்லாம் என் நினைவிற்கு வந்து, இப்போது அவர்கள் தாக்கிப் பேசுவதை மறக்க துணை செய்கிறது.
அந்த விழாவிலே நான் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டேன். "ஜனவரி 3-ஆம் தேதி கட்டபொம்மன் பிறந்த நாள். நான் ஜூன் 3ஆம் தேதி பிறந்தேன். இரண்டு பேருமே மூன்றாம் தேதி பிறந்தவர்கள். அதனால் தான் கட்டபொம்மனுக்கு எட்டப்பன் இருந்ததுபோல் - எனக்கும் சில எட்டப்பர்கள் இருக்கிறார்கள் என்
று கருதுகிறேன். எனவே அந்த மூன்றாம் தேதி ஒரு சோதனையான தேதி என்று புரிகிறது" இப்படி நான் அந்த விழாவில் கூறியது எந்த அளவுக்கு உண்மையாகிவிட்டது. பின் எனது உரையை அந்த விழாவில் பின்வருமாறு நிறைவு செய்தேன் :- "பதவிகள் பெரிதல்ல; ஆற்றுகின்ற பணி; மான உணர்ச்சியோடு போராடுகின்ற வீரம் அவைதான் என்றைக்கும் போற்றப்படக் கூடியவைகளாகும். அந்த வீரத்தை நெஞ்சில் ஏற்றிய தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபடும் ஒரே இயக்கமாக தி.
மு. கழகம் இப்படிப்பட்ட பெரியவர்களின் துணையோடு அரசுக் கட்டிலில் இருக்கிறது. அண்ணன் இல்லை என்றாலும் ரத்தத்தோடு ரத்தமாக - தசையோடு தசையாக எங்கள் கண்ணின் கருமணியாக இதயத்தின் துடிப்பாக இருக்கிறார். எங்கள் மூச்சோடு மூச்சாக இருக்கிறார். அந்த அண்ணனை இதயத்தில் நினைத்து, அவரே இருந்து செய்ய முடியாத காரியங்களை அவருக்காகச் செய்கிறோம். அண்ணனே! கடற்கரையில் நீடு துயில் கொண்டிருக்கின்ற அண்ணனே! இதோ இந்தக் கட்டபொம்மன் கோட்டை உனக்குக் காணிக்கை!
காவிரிப் பூம்புகார் கலைக் கூடம் உனக்குக் காணிக்கை! நாளை உருவாக இருக்கும் வள்ளுவர் கோட்டம் உனக்குக் காணிக்கை! இப்படிப்பட்ட காணிக்கைகளை தொடர்ந்து தந்து கொண்டே இருப்போம்!"
