உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தஞ்சையும்-பூம்புகாரும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தஞ்சையும்-பூம்புகாரும்! · 193 / 391

தஞ்சையும்-பூம்புகாரும்! இவ்வாறாகப் புயல் வீசிய பிறகும் அதற்கு முன்பும் கழக ஆட்சி உறுதியாகவும் வலிமையுடனும் தமிழுக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்கு, தமிழர் வரலாற்றுக்கு, தமிழர் இலக்கியத்துக்கு, தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அளப்பரிய சாதனைகளைப் புரிந்த குறிப்புக்களை நான் இந்த வரலாற்று ஏட்டில் இடம் பெறச் செய்திட விரும்புகிறேன். அவற்றைத் தொகுத்துத் தரக் கடமைப்பட்டிருக்கிறேன். கி.மு.

இரண்டாம் நூற்றாண்டில் இலங்கை மீது படை நடத்தி சிங்கள மன்னனை வென்று அங்கிருந்து பன்னிரண்டாயிரம் அடிமைகளைக் கொண்டு வந்து காவிரிக்கு அணை கட்டச் செய்து அதன் மூலம் தன் புகழை நிலை நிறுத்திக் கொண்டான் கரிகாற் சோழன். அவனைப் போலவே மலைவளம் இல்லாத சோழ நாட்டிலே தன் மன வளத்தால் படை பலத்தால் கருங்கற்களைக் கொண்டுவந்து தஞ்சையிலே கோவிலைக் கட்டி, அதன் வாயிலாக தன் பெருமையை மேலோங்கச் செய்துகொண்டவன் இடைக்காலச் சோழர்களில் தலைசிறந்தவனாக விளங்கியவன் இராசராச சோழன்.

இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தர சோழனுக்கும் வானமாதேவிக்கும் இளைய மகனாக ஐப்பசித் திங்கள் சதய நாளில் பிறந்து கி. பி. 985இல் அரியணை ஏறி கி.பி. 1010இல் தஞ்சைக் கோவிலைக் கட்டி முடித்தான் இராசராசன். இலங்கையை வென்று அங்குள்ள மாதோட்டம் என்ற பகுதியிலிருந்து இக்கோயிலுக்காக மான்யம் தர கட்டளை பிறப்பித்தான் என்று பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் தனது தென்னாட்டுப் போர்க்களங்களில் எழுதியிருக்கிறார்.

பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர மன்னனையும் அமரபுங்கன் என்ற பாண்டிய மன்னனையும் வென்ற பிறகே அருள் மொழித்தேவன் என்ற தன் பெயரை மன்னர்கட்கெல்லாம் மன்னன் என்று பொருள் படும்படி இராசராசன் என்று மாற்றி அதையே கல்வெட்டுக்களிலும் பொறிக்கச் செய்தான் என்று திருக்கோவிலூர் கல்வெட்டுக் கூறுகிறது. குடமலைகாடு, வெங்கி நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி, கலிங்கம், கொல்லம், ரட்டபாடி, ஈழம், ஆகிய நாடுகளை இராசராசன் வென்றதாகவும் அவனுடைய மெய்க்கீர்த்திகள் விளக்குகின்றன.

அத்தகைய மாமன்னன் இராசராசனின் ஆட்சியிலே இன்று இந்தியாவில் இருக்கின்ற மக்களாட்சி முறையை விட மிகச் சிறப்பான மக்களாட்சி முறையை அவன் முடியாட்சி முறை மூலம் செயல்படுத்தி வந்தான். முதன்முதல் உலகிலேயே நிர்வாகிகளை மக்களால் தேர்ந்தெடுக்க குடவோலை முறையைக் கொண்டு வந்த தமிழ் மன்னன் இவன் தான். இன்றைக்கு இருக்கின்ற ஊராட்சி முறைகளுக்கு முன்னோடியாக சீராட்சி நடத்திக் காட்டியவன் இராசராசன். மத்தியிலே அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிராமல் அதிகார முறையைப் பரவலாக்கி தன் நாட்டை மண்டலங்களாகவும், கூற்றங்களாகவும், வளநாடாகவும் பிரித்து அனைத்தும் சுயாட்சியோடு நடைபெறும் வகையில் ஆட்சி செய்தவன் இராசராசன்.

வரி ஏய்ப்பு செய்பவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாதபடி சட்டம் வகுத்தவன் இராசராசன். இவ்வளவு சிறப்புக்குரிய மன்னன் கட்டிய கோயில் தான் தஞ்சை பெரிய கோவில். அறிவியல் உலகம் வியக்கத்தக்க வகையில் கட்டிய கோவில் இது. அத்தகைய கோயிலைக் கட்டிய இராசராசனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு அவனுடைய சிலையினை அவன் கட்டிய கோயிலுக்குள் வைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டு பலமுறை வாதாடி, போராடிய நிகழ்ச்சி கழக ஆட்சியில் முக்கியமானதொன்றாகும்.

உண்மையிலேயே மக்களாட்சி முறையை மதிக்கின்ற அரசாக இந்திய அரசு இருந்தால் உலகிலேயே முதன் முதல் மக்களாட்சி முறையை ஏற்படுத்தி இன்றைய ஆட்சி நிர்வாகங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த இராசராசனை ஜனநாயக நாட்டின் முதல் அரசனாக ஏற்று அவன் கட்டிய ஆலயத்திற்குள்ளேயே அவனுடைய சிலையினைத் திறக்க மத்திய அரசு அனுமதித்திருக்கும். ஆனால் மத்திய அரசு இராசராசன் கட்டிய கோவிலுக்குள்ளே அவனுடைய சிலையினைத் திறந்து வைக்க தமிழக அரசின் சார்பில் கடிதம் மூலமாகவும், நேரிலும் பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும் அனுமதி தராமல் வாயிற்காப்போனைப் போல கோயிலுக்கு வெளியே வைப்பதற்குத்தான் அனுமதி தந்தார்கள்.

அதன் அடிப்படையில் 1972-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு நாளன்று இராசராச சோழன் சிலைத் திறப்பு விழா தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே நடைபெற்றது. அந்த விழாவிற்கு கல்வி அமைச்சர் நாவலர் தலைமை தாங்கிட, அமைச்சர் மன்னை வரவேற்பரை ஆற்றிட, நான் இராசராசசோழன் சிலையினைத் திறந்து வைத்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., அமைச்சர் கண்ணப்பன் ஆகியோரும் உரையாற்றினர். அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின் இராசராச சோழன் நாடகம் விழா முடிவில் நடைபெற்றது.

அரசு சார்பில் அந்த விழா நடைபெற்றாலும், தஞ்சை நகரத்தையே கழக நண்பர்கள் அண்மையில் மறைந்து விட்ட தஞ்சை நடராசன் தலைமையில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு அலங்கரித்திருந்தனர். ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். உணர்ச்சியும் உத்வேகமும் போட்டியிட மக்கள் அந்த விழாவில் ஆர்வம் காட்டினர். அந்த விழாவில் நான் பேசும்போது கூறியதாவது:- "அருள்மொழித்தேவன் எனும் இயற்பெயர் படைத்த மாமன்னன் இராசராசசோழனின் திருவுருவச் சிலைத் திறப்பு விழா இந்த இடத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அந்த மாமன்னன் கட்டிய பெரிய கோவிலுக்குள்ளே அவனது சிலையை வைக்க வேண்டும் என்ற முயற்சியிலே நாம் வெற்றியினைப் பெறாமல் அவன் அமைத்த ஆலயத்துக்கு எதிரில் அவனது சிலையை நிறுவியிருக்கிறோம். அவன் ஆண்ட மண்ணின் தலைநகரில் அவன் கட்டிய கோவிலுக்குள் அவனது சிலையை திறந்து வைக்கக் கூடாது என்று மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டதற்காக நண்பர்கள் இங்கே வருத்தத்தோடு பேசினார்கள். அவர்கள் இராசராசனின் சிலையை கோவிலுக்குள் வைக்க அனுமதி மறுத்தத்தற்குக் காரணங்கள் உண்டு.

சிலம்புச் செல்வர் அவர்கள் என்னைப் பார்த்து 'லட்சோப லட்சம் மக்கள் திரண்டிருக்கும் இந்தக் காட்சியைச் செய்திப்படப் பிரிவினர் படம் பிடித்தார்களே; அதை மத்திய அரசக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினார். செய்திப்படம் பார்த்துத்தான் லட்சோப லட்ச மக்கள் கூடியிருக்கிறார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்கு முன்பே தெரியும்-இந்த சிலை திறப்பு விழாவிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று கோவிலுக்குள் சிலை அமைப்பு விழா நடத்தினால் இந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் இடம் கொள்ளாது அவதியுறும் என்ற காரணத்தால் தான் போலும்; கோவிலுக்குள் சிலை வேண்டாம்; வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

கன்னித் தமிழ் மன்னன்-களம் பல கண்டவன் கடாரம் வென்றவன்-அவன் செல்லாத நாடில்லை; வெல்லாத பூமியில்லை-சோழன் சென்றான்; வென்றான்; ஆட்சியில் நிலைத்து நின்றான் எனும் பெரும் புகழுக்குரிய பெருமன்னன் சிலை அவன் கட்டிய பெருவுடையார் கோவிலில் வைக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது சாதாரண நிகழ்ச்சி அல்ல. ஆலயத்தைக் கட்டியவனுக்கு ஆலயத்தில் இடமில்லை வெளியே வைத்துக் கொள் எனும் ஆணை கேட்டதும்...... இதற்குக் கூட உரிமை இல்லை என்றால் நமது மற்ற உரிமைகள் என்ன ஆவது?

என்ற உணர்ச்சி தமிழர் உள்ளத்திலெல்லாம் அரும்பிடத் தொடங்கியது. இராசராசசோழன் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழ் உணர்ச்சியின் திருவுருவாகத் திகழ்ந்தான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிலை உருவில் இங்கே நின்றிருந்தாலும் அந்த உணர்ச்சியை நமக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறான் சிலையை அமைக்கும்போது கோவிலுக்குள் இடம் தர மறுத்து விட்டதால் இங்கே சிலை அமைக்கப்படுகிறது என்ற சொற்றொடரை அமைக்குமாறு சிலம்புச் செல்வர் கூறினார்.

அவ்விதமே அமைத்திருக்கிறோம். இந்தச் சிலை திறப்பு பிரச்சினையை மாநில சுயாட்சியோடு தொடக்கக் காலத்தில் நாங்கள் இணைக்கவில்லை. இராசராச சோழன் தோன்றிய சதயத் திருநாளில் நடந்த விழாவின்போது இராசராச சோழனின் சிலையை கோவிலுக்குள் வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசுக்கு எழுதினோம். அப்போது கூட மாநில சுயாட்சியோடு இந்தப் பிரச்சினையை முடிச்சுப் போடும் எண்ணம் எழவில்லை.

ஆனால்...தமிழகத்திலேயே மிகப் பெரிய ஆலயத்தைக் கட்டியவனுக்கு அந்த ஆலயத்திலே சிலை வைக்கக் கூடாது; இது தான் மத்திய அரசு நமக்குத் தந்த பதில். இது போன்று 1966-ஆம் ஆண்டிலும் அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சியின் முதல்வர் பக்தவத்சலம் வேலூர் கோட்டைக்குள்ளே மிகப் பெரிய ஆலயம் இருக்கிறது. அதற்குள்ளே ஆண்டவன் சிலை இல்லை. ஆகவே அங்கே ஒரு சிலை வைக்க வேண்டும். அதோடு வேலூர் கோட்டையைப் பராமரிக்கும் பொறுப்பை மாநில அரசின் தொல்பொருள் காப்புத்துறைக்கு அளிக்க வேண்டும் என்று டில்லிக்கு கடிதம் எழுதினார்.

முடியாது என்பது தான் டில்லி தந்த பதில். முடியாது எனும் பதில் முன்னேற்றக் கழக ஆட்சிக்கு மட்டும் கிடைக்கும் பதிலல்ல; காங்கிரஸ் ஆட்சிக்கும் கிடைத்த பதில் தான்." அந்த இராசராச சோழன் சிலை திறப்பு விழாவில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பேசும்போது "இந்தச் சிலையை திறந்து வைத்ததன் காரணமாக அப்பரும், திருஞானசம்பந்தரும், மாணிக்க வாசகரும் தமிழக முதலமைச்சர் கலைஞரை வாழ்த்துவார்கள். கலைஞர் நினைத்திருந்தால் இதை தகராறுக்குரிய பிரச்சினையாக ஆக்கியிருக்க முடியும்.

கலைஞர் அவர்கள் நினைத்திருந்தால் இந்தச் சிலை தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள சிலை-நிரந்தரமாக உள்ளே வைக்கும்வரை எந்த மத்திய மந்திரியும் இங்கே வரவிடாமல் தடுக்க எங்களால் முடியும். ஆனால் தர்மத்துக்கு அஞ்சுகிறோம்" என்றார். இது தஞ்சையில் நடைபெற்ற விழா. அடுத்து சோழ நாட்டின் தனிப் பெருந் தலைநகராக விளங்கியது பூம்புகார்! பொதுவாக கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திற்கு புகார் என்பது பெயர். அதன்படி காவிரியாறு கடலுடன் கலக்கும் இடமும் புகார் என்றே வழங்கப்பட்டது.

பின்னர், இந்தப் புகார் பொலிவின் காரணமாகவும், சிறப்பின் காரணமாகவும் பூம்புகார் என்று அழைக்கப் பெற்றது. பிற்காலத்தில் பூம்புகார் என்னும் பெயர் மாறி, காவிரி புகும் பட்டிணம் என்றாகி, அதுவும் நாளடைவில் காவிரிப்பூம்பட்டிணம், காவிரிப்பட்டிணம், காவேரிப்பட்டிணம் என்று பலவாறாக அழைக்கப்படலாயிற்று. கழக அரசு பழந்தமிழ் பெயர்களையும், போற்றத்தக்க பழந்தமிழ்ப் பண்பாட்டையும் விடாமல் வலியுறுத்தி வந்ததால், மீண்டும் பூம்புகார் மலர்ந்து, தமிழர் மனத்தில் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படுத்த திட்டமிட்டது.

காவிரிப் பூம் பட்டிணம் மூன்று பிரிவுகளாக விளங்கியது. கடற்கரை ஓரமாக அமைந்த பகுதி மருவூர்ப்பாக்கம்; நகராக அமைந்த பகுதி பட்டிணப்பாக்கம், இரண்டிற்கும் இடையே அமைந்த பகுதி நாளங்காடி. கரிகால் சோழன் காலத்தில் தான் காவிரி பூம் பட்டிணம் சிறப்போடு விளங்கியது. அவன், வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்று வளர் பேரிமயத்துப் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினான். அவன் மீண்டு வரும் வழியில் வச்ர நாட்டு மன்னன் முத்துப் பந்தர் ஒன்றையும், மகத அரசன் தோரண வாயில் ஒன்றையும், திறையாகவும், பரிசாகவும் கொடுத்தனர்.

முத்துப் பந்தரும், தோரண வாயிலும் பொன்னும் மணியும் இழைத்த அரிய வேலைப்பாடுகள் உடையவை. கரிகாலன் இவற்றை யெல்லாம் காவிரிப் பூம் பட்டிணத்திற்குக் கொண்டு வந்து ஒன்று சேர்த்துக் கண்கவரும் கொலுமண்டபம் ஒன்றை அமைத்தான். இந்த மண்டபம் புலவர்கள் பாடும் சிறப்பைப் பெற்றது. இதற்கு பட்டி மண்டபம் என்று பெயர். பட்டினப் பாக்கத்தில் ஐவகை மன்றங்கள் இருந்தன. வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதச்சதுக்கம், பாவை மன்றம் ஆகியவைகளாகும்.

இவைகள் எல்லாம் அமையப் பெற்ற பூம்புகார் காலத்தின் கோலத்தால் கடற்கோளுக்கு இரையாகி, மறைந்த நகரங்களில் ஒன்றாகி விட்டது. அப்படி மறைந்த நகரை மீண்டும் அதே வனப்புடன் காணவேண்டும்-கண்ணகி வாழ்ந்த ஊரில் அவளுக்கு நிலையான நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். சிலப்பதிகாரக் காட்சிகளை சிற்பங்களாக வடித்து அவற்றை ஒரு மண்டபத்திலே அமைத்து, சிலப்பதிகாரக் கதையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டுமென்று, அதற்காக சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றினை நிறுவ வேண்டுமென்றும் திட்டமிட்டேன்.

அந்தக் கலைக்கூடம் அமைந்துள்ள கட்டிடம் எழுநிலை மாடம் என பெயர் பெற்றது. நான்கரை லட்ச ரூபாய் செலவில் இந்தக் கலைக்கூடம் அமைக்கப்பட்டது. இதனை 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17-ஆம் தேதி அதாவது இந்திர விழா நடந்த சித்திரைப் பௌர்ணமித் திருநாளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தக் கலைக் கூடத்தில் கண்ணகியின் கதையை விளக்கும் 48 சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படி சிற்பத்தில் ஒரு காப்பிய கதையை வடித்த முதல் கலைக்கூடம் இதுதான்!

அதைத் தவிர ஒரே கல்லில் எட்டு அடி உயரம் உள்ள மூன்றரை டன் எடையுள்ள மாதவி சிலை ஒன்றும் அற்புதமாக வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது: இந்தச் சிலைகள் யாவும் மாமல்லபுரத்திலுள்ள அரசினர் சிற்பக் கலைப் பயிற்சி நிலையத்தில் கணபதி ஸ்தபதி அவர்கள் மேற்பார்வையில் செய்யப்பட்டதாகும். கலைக் கூடம் ஏழு மாடங்கள் கொண்டதாகவும், முதல் மாடம் 12 அடி உயரமும், அதன் மேலுள்ள ஒவ்வொரு மாடமும் ஐந்து அடி உயரம் கொண்டதாகவும், ஏழாவது மாடத்திற்கு மேலுள்ள கலசப் பகுதி எட்டு அடி உயரமும் கொண்டு, மொத்த உயரம் ஐம்பது அடிக்கு மேல் உள்ளதாகும்.

சுற்றுலா பயணிகள் வசதிக்காக அறிஞர் அண்ணா பெயரில் விருந்தினர் மாளிகை ஒன்றும் அங்கே கட்டப்பட்டது முத்துச்சிப்பிகள் வடிவிலும், நத்தைகள் வடிவிலும் தங்கும் விடுதிகள் அமைக்கும் பணியும் தொடர்ந்தது. சென்னையில் உலகத் தமிழ் மாநாடு எந்த அளவிற்கு விழாக்கோலம் கொண்டு நடைபெற்றதோ, அதைப் போலவே ஐந்து லட்சம் மக்கள் ஊர்வலத்திலும், இரண்டு நாள் விழாவிலே பத்து லட்சம் மக்களும் கலந்து கொண்டு நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிரம்மாண்டமான ஊர்வலம் ஏப்ரல் திங்கள் 17-ஆம் தேதி காலையில் நடைபெற்றது.

ஊர்வலத்தில் 24 அலங்கார வண்டிகள் இடம் பெற்றன. பிற்பகலில் அங்கே அமைக்கப்பட்டிருந்த முத்துப் பந்தரில் தமிழர் வரலாற்றுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு கி. வா. ஜகந்நாதன் தலைமை வகித்தார். அதில் புலவர் கோவிந்தராசன், நாகசாமி, கவிஞர் சுரதா, சௌந்திரராசன், நான் அண்ணன் என அருமையாக் அமைத்திட்ட பக்கர் எம். எல். சி., செ. கந்தப்பன், இராம அரங்கண்ணல், சா. கணேசன், ராஜாராம் நாயுடு, புதுவை முதல்வர் பருக்மரைக்காயர் ஆகியோர் உரையாற்றினர்.

அடுத்து கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தை நான் திறந்துவைத்தேன். அதன் பின் பூம்புகார் கடற்கரை நிலா முற்றத்தில் நாவலர் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதில் தவத்திரு அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பேராசிரியர் ஆகியோர் உரையாற்றிய பின் நான் உரையாற்றினேன். இரவு கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட சி

லப்பதிகார நாட்டியம் திருமதி கமலா குழுவினரால் நடத்தப்பட்டது. அதன்பின் நான் எழுதிய சிலப்பதிகார நாடகத்தை கரிகாலன் நாடக மன்றத்தினர் நடத்தினர். வெளி நாட்டுப் பயணிகளை கவரத் தக்க வகையில் இத்தகைய ஏற்பாடுகளை செய்ததோடு நின்று விடாமல், கலைக் கூடத் திறப்பு விழாவின்போது நான் கூறினேன். "இந்த இடத்தில் அழகிய கட்டிடங்கள், எழிலான மாடங்களை அமைப்பது மாத்திரம் தான் கழக அரசின் திட்டமல்ல; இப்பகுதியில் வாழும் ஏழையெளிய மீனவர்களுக்காக தமிழக அரசு இப்போது தீட்டியிருக்கின்ற ஒரு திட்டத்தை இங்கே நான் வெளியிடுவது நலம் என்று கருதுகிறேன்.

இந்தப் பூம்புகார் கடற்கரை ஓரத்தில் கிட்டத்தட்ட எழுநூறு மீனவர்கள் வாழ்கிறார்கள் அவர்களில் 400 பேர் கட்டு மரத்தை வைத்துக் கொண்டு தொழில் நடத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எங்கள் கண்ணீரைத் தீர்க்க நீங்கள் எண்ண மாட்டீர்களா என்று அவர்கள் நினைப்பதற்குமுன் அதைச் செய்துமுடிக்க வேண்டும் என்று கருதும் இந்த அரசு வீட்டு வசதித் துறை வாயிலாகவும் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியம் தரும் அனுபவத்தின் அடிப்படையிலும் இங்குள்ள மீனவ மக்களுக்கெல்லாம் விரைவில் அவர்களது குடிசைகளை மாற்றி நல்ல வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியதோடு நின்று விடாமல் நாற்பது இலட்ச ரூபாய் நிதியினை அந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு வீடு கட்டித தந்ததோடு, மீனவர்களுக்கு படகுகளும், நைலான் வலைகளும் வழங்குவதற்கும் ஏற்பாடுகளைச் செய்தேன்.

ஏப்ரல் 18-ஆம் நாள் பூம்புகாரின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலையில் "சிலப்பதிகாரத்தில் பெரும் சிறப்புடையது புகார் காண்டமா? மதுரைக் காண்டமா? வஞ்சிக் காண்டமா?" எனுந்தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. பட்டி மன்றத்திற்கு மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரான டாக்டர் மு.வ. அவர்கள் நடுவராக இருந்தார். புகார் காண்டமே சிறப்புடையது எனும் தலைப்பில் அவ்வை நடராசன், அறிவுடை நம்பி, கோவை இளஞ்சேரன் ஆகியோரும், மதுரைக் காண்டமே சிறப்புடையது எனும் தலைப்பில் சிலம்பொலி செல்லப்பன், மா.

கி. தசரதன், புலவர் பொன்னி வளவன் ஆகியோரும், வஞ்சிக் காண்டமே சிறப்புடையது எனும் தலைப்பில் கா. வேழவேந்தன், புலவர் நன்னன், பேராசிரியர் காந்திமதி நாதன் ஆகியோரும் வாதிட்டனர். மாலையில் சிலப்பதிகாரத்தில் பாத்திரப் படைப்பு குறித்த கவியரங்கம் உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் நடைபெற்றது. பாண்டியனைப் பற்றி கவிஞர் சிக்கந்தரும், செங்குட்டுவனைப் பற்றி கவிஞர் தி. கு. நடராசனும், கண்ணகி பற்றி கவிஞர் முருகு சுந்தரமும், கவுந்தி அடிகள் பற்றி கவிஞர் கொத்த மங்கலம் சுப்புவும், மாதவி பற்றி கவிஞர் ஈரோடு தமிழன்பனும், கோவலன் பற்றி சுகி சிவனும் கவி பாடினர், தொடர்ந்து பூம்புகார் நிலா முற்றத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் இன்னிசை நடைபெற்றது.

இறுதியாக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவுரை ஆற்றினேன். அப்போது ஆண்டுதோறும் பூம்புகார் விழா நடைபெறும் என்று அறிவித்தேன். ஆனால் கழக ஆட்சி மாறிய பிறகு அந்தப் பகுதியே சரியாகக் கவனிக்கப்படாத நிலைக்குள்ளாயிற்று! முப்பெரும் இழப்பு 1972- ஆம் ஆண்டு தொடங்கி 1973-ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாக தமிழகத்தின் மூன்று பெரும் வைரத்தூண்கள் சாய்ந்துவிட்ட சோக சரித்திர ஏடுகள் தமிழர்களின் கண்ணீர்ப் பெருக்கிடையே புரண்டு விட்டன.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவரும் பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரியவரான பெருந்தகையாளர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் 1972-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4-ஆம் நாள் இயற்கை எய்தினார். மார்ச் இறுதியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற அவரை மீண்டும் தமிழகம் காண முடியாமல் கண்ணீரில் மிதந்தது.

அவர் கவலைக்கிடமாக இருக்கிறது என்று செய்தி அறிந்தவுடன் கோவை உடல்நிலை மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருந்த நான் அதனை ரத்து செய்துவிட்டு உடனடியாகச் சென்னை திரும்பினேன். ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது நிலையைக் கண்டபோது அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ள எனக்குத் தெம்பு இல்லாமல் போயிற்று. அவரது பேரன்பைப் பெரிதும் பெற்றவரான எனது ஆருயிர் நண்பர் அப்துல் சமது அவர்களும், கேரளத்துச் சிங்கமெனப் புகழப்பட்ட முகமது கோயா அவர்களும், அண்ணன் திருப்பூர் மொய்தீன், அன்பு நண்பர்கள் அப்துல் லத்தீப், காஜாமொய்தீன், பீர்முகமது ஆகியோரும் தென்காசி ரிபாயி அவர்களும் அப்போது காயிதே மில்லத் அவர்களின் படுக்கையருகே இருந்தனர்.

கண்மூடி மயக்க நிலையில் படுத்திருந்த அவர் அருகே குனிந்து மெல்லிய குரலில் "அய்யா! நான் கருணாநிதி வந்திருக்கிறேன்" என்று கூறினேன். அந்தக் குரல் கேட்டு காயிதே மில்லத் அவர்கள் கண் விழித்துப் பார்த்தார். அந்த நிகழ்ச்சி குறித்து தென்காசி எ.கே. ரிபாயி அவர்கள், அவர் எழுதிய "கவ்மின் காவலர்" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை அப்படியே கோடிட்டுக் காட்டுகிறேன். "அவர்கள் கண் விழித்துப் பார்த்தார்கள்.

வந்திருப்பது யார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். கலைஞர் கருணாநிதியைப் பார்த்ததும் தங்களது கரங்களை நீட்டினார்கள். அவரும் அக்கரங்களைப் பிடித்துக்கொண்டார். அச்சமயம் காயிதே மில்லத் அவர்கள், மிகவும் பலகீனமான குரலில் "முஸ்லீம் சமுதாயத்திற்குத் தாங்கள் செய்த உதவிகளுக்கெல்லாம் எனது நன்றி" என்று கூறினார்கள்.

இவ்வார்த்தைகளைக் கலைஞர் கருணாநிதி எதிர்பார்க்கவேயில்லை, இதைக் கேட்டதும் அவர் அப்படியே மெய் மறந்து விட்டார். அவரது கண்கள் கலங்கிவிட்டன. என்ன சொல்வதென்றே தெரியாது அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அதற்குள்ளாக காயிதே மில்லத் அவர்களின் கண்கள் மூடிக் கொண்டன. மீண்டும் மயக்கநிலை ஏற்பட்டு விட்டது. அதற்குப் பிறகு தலைவர் அவர்கள் மீண்டும் சுய நினைவு பெறவேயில்லை."

எத்தகைய அன்புள்ளங்கொண்ட ஒரு மாமனிதரை நான் இழந்து விட்டேன் என்பதை எண்ணிக் கண்ணீர் வடித்தேன். காயித்த மில்லத் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் பேட்டை என்ற கிராமத்தில் பிறந்தவர். காந்தியடிகளும், அலி சகோதரர்களும் தேசீய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களது அழைப்பின் பேரில் காயிதே மில்லத் அவர்கள்தனது. கல்லூரி படிப்பை விட்டுவிட்டு தீவிர அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டார். 1936-ஆம் ஆண்டில் முகம்மது அலி ஜின்னாவின் ஆலோசனைக்கேற்ப முஸ்லீம் லீகில் காயிதே மில்லத் சேர்ந்தார்.

1946-ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதே மில்லத் 1948-இல் சென்னை சட்ட மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவர். டெல்லி அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 1962-இல் கேரளத்தில் உள்ள மஞ்சேரி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதே மில்லத் அவர்கள் இறுதிக் காலம் வரை அந்தக் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வாக்கெடுப்பு நாள் வரையில் தன் தொகுதிக்குள் அடியெடுத்து வைக்காமலே வெற்றி பெற்றவர் என்ற தனிச்சிறப்பு காயிதே மில்லத் அவர்களுக்கு உண்டு. 1965-ம் ஆண்டு இந்தியா மீது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு நடத்திய போது நாடடுப் பற்று மிகுந்த காயிதே மில்லத் அவர்கள் தன்னுடைய முஸ்லீம் லீக் இயக்கத்தின் முழு ஆதரவையும் பாகிஸ்தானை எதிர்ப்பதற்குத் தந்தார். அது மாத்திரமல்ல, இந்திய மண்ணின் மானத்தைக் காக்கும் வீரப்போருக்கு தன்னுடைய ஒரே செல்வன் மியாகானை தருகிறேன் என்றும் காயிதே மில்லத் அப்போது அறிவித்தார்.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் பொது மொழியாக ஆட்சிமொழியாக இந்தி தான் இருக்க வேண்டுமென்ற போது, அந்த அவையின் உறுப்பினராக இருந்த காயிதே மில்லத் அவர்கள் அதனை கடுமையாக எதிர்த்தார். இந்தி கூடாது என்றால் இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டனர். "வளம் செறிந்ததும் தொன்மை நிறைந்ததுமான எனதருமைத் தாய்மொழியுமான தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம்", என்று ஆணித்தரமாக முழங்கியவர் காயிதே மில்லத் அவர்களாகும்.

அந்தப் பெருமகனாரின் இழப்பைத் தொடர்ந்து மற்றொரு பேரிழப்பு: 1972 டிசம்பர் திங்கள் 25-ஆம் நாள் மாலை 6 மணி அளவில் சென்னைப் பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மூதறிஞர் ராஜாஜி அவர்கள் காலமானார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட தென்னாற்காடு மாவட்டம் சென்றிருந்த நான் ராஜாஜி அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து உடனடியாக சென்னைக்குத் திரும்பினேன்.

"அரசியலைக் கடந்து அன்பு காட்டிய ஒரு உள்ளத்தை நாம் இழந்தோம். தேசத்தின் தலைசிறந்த மூத்த தலைவர்களில் ஒருவர் தீப ஸ்தம்பம் சாய்ந்தது போல் சாய்ந்துவிட்டார்" என்று எனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். ராஜாஜி அவர்களுக்கும் தி. மு. கழகத்திற்கும் இருந்த உறவு எத்தகையது என்பதை ராஜாஜி அவர்களே, "நமக்கிடையே உள்ள நட்பு நீக்க முடியாதது" என்று தமது கடைசி நாட்களில் குறிப்பிட்டார்.

அவருக்கும் கழகத்திற்கும் அது போல அண்ணா அவர்களுக்கும் அதற்கடுத்து எனக்குமுள்ள தொடர்பில் ஒன்றிரண்டை மட்டும் இங்கே நினைவு கூர்ந்திட விழைகிறேன். சென்னை மாநகராட்சி தேர்தலின் போது சுதந்திரா கட்சி, தி. மு. கழகத்துடன் உறவு கொண்டு போட்டியிட்ட போதிலும், அந்தத் தேர்தலில் தோழமைக் கட்சியான சுதந்திரா கட்சி தோல்வி கண்டது. அந்தத் தோல்வியைப் பற்றி ராஜாஜி கூறும்போது "தி. மு. கழக வெற்றி என்பது சாம்பார்.

அதில் பல கட்சிகள் காய்கறிகள், பருப்பு போல் இருக்கின்றன. ஆனால் எனது கட்சி உப்பு போன்றது. உப்பின் உருவம் சாம்பாரில் தெரியாது. அது போல நாங்கள். இந்த வெற்றியில் எங்கள் உருவம் இல்லை. சாம்பாரில் உருவம் இல்லாமல் கலந்து உப்பு சுவையேற்றுவது போல இந்த வெற்றிக்கு நாங்கள் சுவையேற்றுகிறோம்" என்று சொன்னார்.

1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ராஜாஜி அவர்களுக்கும் தி. மு. கழகத்திற்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. 1937-38-ஆம் ஆண்டில் இந்தியை தமிழகத்தில் வெகுவேகமாக நுழைப்பதற்கு காரணமாக இருந்த ராஜாஜி அவர்களே, 1965-ஆம் ஆண்டு "இந்தி வெறியர்களின் போக்கைப் பார்க்க எனது மூளையில் கூட பிரிவினை எண்ணம் வந்து விட்டது" என்று கூறினார்.

1967-ஆம் ஆண்டு தேர்தலின் போது ராஜாஜி மிகுந்த உற்சாகத்தோடு தி. மு. கழகம் ஆட்சி அமைப்பதைப் பார்த்து விட்டுத்தான் நான் கண் மூடவேண்டும் என்றார். அவரது அந்த ஆசையை தி. மு. கழகம் அவரது வாழ்நாளிலேயே நிறைவேற்றிக் காட்டியது. 1967-இல் கழக ஆட்சி அமைந்த சில நாட்களுக்குப் பிறகு தி. மு. கழகத்திற்கும் சுதந்திரா கட்சிக்கும் இடையே சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைப் பற்றி குறிப்பிடும் போது கூட ராஜாஜி அவருக்கே உரிய பாணியில் "தி.

மு. கழகத்திற்கும் சுதந்திரா கட்சிக்குமான தேன் நிலவு முடிந்து விட்டது" என்று குறிப்பிட்டார். அதைப்பற்றி அண்ணா அவர்கள் கூறும் போது தேன் நிலவு முடிந்து விட்டது என்று ராஜாஜி கூறுவதற்குக் காரணம், குடும்ப வாழ்க்கையை இனி துவக்க வேண்டும் என்பதற்காகத் தான்" என்றார்.

அறிஞர் அண்ணா அவர்கள் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, ராஜாஜி அவர்கள் என்பால் செலுத்திய அன்பு அலாதியானது சிறப்பானது. 1964 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது சென்னை ராயப்பேட்டை லெட்சுமிபுரம் யுவர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராஜாஜி அவர்- களும் நானும் தோழர் ஈ. வே. கி. சம்பத்தும் ஒன்றாகப் பேசினோம். அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போது "தூக்கனாங் குருவியொன்று தனது கூட்டுக்கு ஒளி கிடைக்கும் என நினைத்து கொள்ளிக்கட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டில் வைத்ததாம்.

அது ஒளி கொடுப்பதற்குப் பதில் கூட்டையே பொசுக்கி விட்டதாம். அதுபோல தமிழகம் பயன்பெறும் என்று இந்தியைக் கொண்டு வந்தார் ராஜாஜி. ஆனால் அந்த இந்தியோ தமிழகத்தையே சுட்டுப் பொசுக்க முயல்கிறது" என்று குறிப்பிட்டேன். அந்த உவமையை ராஜாஜி கேட்டு விட்டு, மனந்திறந்து என்னைப்பாராட்டினார். அந்தக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய ராஜாஜி "கருணாநிதி முழுக்க முழுக்க அரசியல் வாதி; இலக்கிய வாதி; பத்திரிகைக்காரர்" என்று பாராட்டினார்.

அவர் மறைவதற்கு இரண்டொரு திங்களுக்கு முன்னால் 2-10-72 அன்று விடுதலை வீரர்களுக்கெல்லாம் தாமிர விருது அளிக்கும் விழா சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அந்த விழாவில் ராஜாஜி அவர்களுக்கும் விருது வழங்கிட விருந்தோம். அதை அறிந்த ராஜாஜி அவர்கள் தனிப்பட எனக்கொரு கடிதம் எழுதினார். அதில் "அன்புள்ள கருணாநிதி அவர்களுக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நீங்கள் தாமிர பத்திர விருதினை வழங்குவதாக அறிகிறேன்.

அந்த விழாவில் கலந்து கொண்டு உங்கள் கையால் தாமிரவிருது பெற இயலாமை குறித்து வருந்துகிறேன். எனவே என்னுடைய சார்பில் நீங்களே அந்த தாமிர பத்திரத்தைப் பெற்று எனக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

அதன்படி 2-10-72 அன்று நடைபெற்ற விழாவில் ராஜாஜி அவர்களுக்கான தாமிர பத்திர விருதினை ராஜாஜி அவர்கள் சார்பில் கவர்னரிடமிருந்து நானே பெற்றுக் கொண்டு, மறுநாள் அக்டோபர் 3-ஆம் தேதி அன்று காலை ராஜாஜி அவர்களின் இல்லத்திற்குச் சென்று தாமிர பத்திர விருதினை ஒரு தட்டில் வைத்து, அத்துடன் பழங்களையும் வைத்து-பெரிய ரோஜாப்பூ மாலை ஒன்றினை ராஜாஜி அவர்களுக்கு அணிவித்து, விருதினையும் வழங்கினேன். அதனைப் பெற்றுக் கொண்ட ராஜாஜி ஒரு பெரிய ஜரிகை மாலையை எனக்கு அணிவித்தார்.

"முதல்வர் கருணாநிதி நேரில் வந்து தாமிர பத்திரத்தை எனக்குத் தருவதாக தீர்மானித்தது நம்முடைய நாட்டுப் பண்பாட்டோடு ஒட்டி நின்ற மரியாதை முறை. இதை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்று பின்னர் அது குறித்து ராஜாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் சிறிது நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குச் செல்ல புறப்பட்ட போது ராஜாஜி அவர்கள் என்னை ஆசிர்வதிப்பதாகக் கூறி "என் ஆசிர்வாதம் வீண் போகாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதைக் கேட்டு நான் சிரித்துக் கொண்டே "வீண் போகவில்லை. நீங்கள் கொடுத்து விட்ட ஆசிர்வாதத்தை உங்களாலேயே மாற்ற முடியாது" என்று கூறினேன்.

அதைக் கேட்டு ராஜாஜியும் சிரித்தார். பின், வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். நான் இவ்வாறு கூறியதை மனதிலேயே வைத்துக் கொண்டிருந்த ராஜாஜி அதற்குப் பின் சில நாட்கள் கழித்து ஒருநாள் திடீரென்று அவருக்கு உடல் நலம் இல்லை என்ற செய்தி கேட்டு நானும், நாவலரும் அவரைப் பார்க்கச் ச

ென்றோம். அப்போது ராஜாஜி அவர்கள் நான் என்னுடைய மகன் அழகிரி திருமணத்திற்கு அழைப்பதற்காகத் தான் வந்திருக்கிறேன் போலும் என நினைத்துக் கொண்டு, திருமணத்திற்கு நேற்றே வாழ்த்து அனுப்பி விட்டேனே என்றும் கலப்புத் திருமணம் எனக் கேள்வியுற்று மகிழ்கிறேன் என்றும் கூறினார். நான் திருமணத்திற்கு அழைப்பதற்காக இப்போது வரவில்லை. உடல் நலிவுற்றிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு பார்க்க வந்தேன் என்று சொன்னேன்.

உடனே என்னை அருகே அழைத்து தலையில் கைவைத்து ஆசி கூறி, நான் சில மாதங்களுக்கு முன்னால் சொன்ன வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு "திரும்பப் பெறமுடியாத ஆசி கூறுகிறேன்" என்றார். அந்தப் பெரிய மனிதர், திரும்ப முடியாத இடத்துக்குச் சென்று விட்ட போது, நட்பின் இலக்கணத்தைக் காட்சி வடிவில் கண்டோம். ஆம்; தந்தை பெரியார் அவர்கள், சுடுகாடு வரையில் வந்திருந்து ராஜாஜியின் உடலுக்குத் தீ மூட்டப்பட்டபோது நீர்வீழ்ச்சி யெனக் கண்ணீர் உகுத்தாரே; அந்தக் காட்சி தான் அது.

அந்தச் சோக நிகழ்ச்சியைத் தொடர்ந்து சரியாக ஓராண்டுக்குள் தமிழகத்தை அதிரச் செய்த மற்றொரு சோக நிகழ்ச்சி: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அரசியல் ஆசானும், சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும், இந்தி ஒழிப்புப் போரின் முதல் தளகர்த்தரும், பைந்தமிழ் நாட்டில் பகுத்தறிவுச் சுடர் பரப்பியவரும், கௌதமபுத்தருக்குப் பின் வந்த சமுதாயசீர்திருத்தப் புரட்சியாளரும், தென்னகத்தில் முதன் முதலாக சமதர்மக் கருத்துக்களை அறிமுகம் செய்தவரும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பாதுகாவலரும், திராவிடக் கழகத்தின் ஒப்பற்ற தலைவருமான பகுத்தறிவுச் சிங்கம், சமுதாயப் பணி நடத்திய சரித்திரநாயகன், தன்மானமூட்டிய தங்கம், தமிழினத்தின் வழிகாட்டி தந்தை பெரியார் அவர்கள் 1973-ஆம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மறைந்து சரியாக ஓராண்டு கழித்து, டிசம்பர் 24-ஆம் நாள் காலை 7-40 மணிக்கு வேலூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

செய்தி கேட்டு இயக்கத் தோழர்களும், தாய்மார்களும் "நடக்கக் கூடாதது நடந்து விட்டதே; சீர்திருத்தப் போரின் நாயகனது புரட்சி வாழ்வு முடிந்து விட்டதே;" என்று கதறினர். செய்தி அறிந்ததும் சில நிமிடங்கள் எனக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை. பழைய நினைவுகள் என் மனதில் அலை மோதின. முதலமைச்சர் என்ற முறையில் என்னை வளர்த்த அந்த ஆசானுக்கு நான் செய்ய வேண்டிய கடமை என்ன என்று சிந்தித்தேன். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி தலைமைச் செயலாளரை அழைத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், பெரியாரின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கவும் ஏற்பாடுகளைக் கவனிக்கக் கூறினேன்.

அதிகாரிகள் பெரியார் அவர்கள் அரசுப் பொறுப்பில் எதிலும் இல்லாத காரணத்தால் அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று கூறினர். அப்போது அவர்களிடம் நான் கூறினேன். "காந்தியடிகள் எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்? எனவே நாம் விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆகவேண்டும். அதனால் கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்றுமேயானால், அதை விட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது.

எனவே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நடக்க வேண்டியதைக் கவனியுங்கள்" என்று கூறினேன். அதன்படி ஏற்பாடுகள் நடைபெற்றன. பெரியாரின் உடலை உடனடியாக சென்னைக்கு எடுத்து வரச்செய்து, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பெரியார் மறைவையொட்டி பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் எனக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் "பெரியாரது மறைவு பற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு அதில் களிப்பெய்திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துக்களை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர்களுக்கும், அவரைப் பின்பற்றியவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். நான் விடுத்த இரங்கல் செய்தியில் "தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். 95-ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம் கடைசி மூச்சு வரையில் சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறுக்க முடியாது.

இன்று தமிழ் நாடு தன்மான உணர்வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோப லட்சம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது. எங்களையெல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டி. இந்தப் பிரிவு பற்றி என்ன செய்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்த புரட்சிக்காரரை இழந்து விட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்.

நாம் தொடர்வோம்" என்று குறிப்பிட்டிருந்தேன். பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர். டிசம்பர் 25-ஆம் தேதி பகல் 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ராஜாஜி மண்டபத்திலிருந்து சரியாக 3 மணிக்கு பெரியாரின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பெரியார் திடலை 4-30 மணிக்கு அடைந்தது. இறுதி ஊர்வலத்தில் நான், அமைச்சர்கள், பெருந்தலைவர் காமராஜர், தளபதி வீரமணி, அன்னை மணியம்மையார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சம்பத் ஆகியோர் வந்தோம்.

காமராசர் என்னை அரவணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். காவல்துறையினர் சோக இசைமுழக்க, மும்முறை குண்டுகள் வெடிக்கப்பட்டு. அரசு மரியாதையுடன் தந்தை பெரியாரின் திருவுடல் கல்லறையில் வைக்கப்பட்டது.