நெஞ்சுக்கு நீதி
சட்டமன்ற மரபுகளை வெட்டிப் புதைத்த செயல்! · 192 / 391
சட்டமன்ற மரபுகளை வெட்டிப் புதைத்த செயல்! மதியழகன் அவர்களிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் என்னிடம் திரும்பி வந்து மதியழகன் அவர்களின் போக்கு சரியில்லையென்றும், சில நாட்களில் கழக ஆட்சி கவிழ்ந்து விடுமென்று எம். ஜி. ஆரும், மதி போன்றவர்களும் நம்பிக் கொண்டிருப்பதாகவும், எனவே மதி அவர்களிடம் இனிப் பேசிப் பயனில்லையென்றும் கூறினார். திராவிடர் இயக்கத்தை அழிப்பதற்கு முனைந்து விட்டவர்களுக்கு மதியழகன்; அவரையறியாமலே துணை போய்க் கொண்டிருக்கிறார் என்றும் நெஞ்சு நோகக் கூறினார்.
மதியுடன் எஸ். டி. எஸ். அவர்களுக்கு நெருங்கிய நட்பு உண்டு என்ற காரணத்தால், நான் அவரை மீண்டும் வலியுறுத்தி மதியிடம் போய்ப் பேசுமாறு கேட்டுக் கொண்டேன். யாரையும் தன்னுடைய உரையாடல் வன்மையால் இழுத்துவிடக் கூடிய அருந்திறமை பெற்றவர் மதியழகன் அவர்களாவார்கள். எனவே அவரிடம் இரண்டாவது முறையாக எஸ். டி. எஸ். ஐ நான் அனுப்பியது பெரிய தவறாகப் போய்விட்டது. ஆம்; எஸ். டி. எஸ். ஸும் மதியுடன் சேர்ந்து எம். ஜி. ஆர்.
ஆரம்பித்த கட்சியில் ஒருவராக ஆகி விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் தஞ்சை மாவட்டம் குத்தாலம் பகுதியில் என்னுடன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் எஸ். டி. எஸ்; எம்.ஜி.ஆர். அவர்களின் செயலை மிக வன்மையாகக் கண்டித்துப் பேசினார். எம். ஜி. ஆர்., புதுக் கட்சி தொடங்குகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் சோவியத் நாட்டில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான எம். கல்யாணசுந்தரம் அவர்கள், சென்னைக்கு அவசரமாகத் திரும்பி, அந்தக் கட்சிக்கான தொடக்க முயற்சிகளுக்கு ஆலோசகராகவும், உற்ற துணையாகவும் செயல்பட்டார்.
அவரது யோசனைப்படி, தி. மு. க. அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை கவர்னரிடம் தரப் போவதாகவும் அதற்கு நவம்பர் 7-ந் தேதிக்குள் கவர்னர் நடவடிக்கை எடுக்கா விட்டால் தமிழகம் முழுதும் அண்ணா வழியில் அர்த்தால் நடத்தப்படுமென்றும் அக்டோபர் 31-ஆம் நாள் செய்தியாளர்களிடம் எம். ஜி. ஆர். தெரிவித்தார். அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய சர்க்கார் ஒரு கமிஷனை அமைக்க வேண்டுமென்று செய்தியாளர்களிடம் கூறிய எம்.
ஜி. ஆர்., "இந்தியாவில் எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டு; சுமத்தப்பட்டால் அதுபற்றி நீதி விசாரணை நடத்தும் அதிகாரம் மத்திய சர்க்காருக்குத் தான் இருக்கிறது" என்றும் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு கருத்தறிவித்த திரு. எம். கல்யாணசுந்தரம் அவர்கள், "நாங்கள் கவர்னரிடம் கொடுக்கப் போகிற ஊழல் புகார் பட்டியலில் கருணாநிதியும் இடம் பெற்றிருக்கிறார்.
எனவே கருணாநிதி ஒரு நல்ல மரபை ஏற்படுத்த வேண்டும். விசாரணை முடிந்து தீர்ப்புக் கிடைக்கும் வரையில் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை நேர்மையாகவும் நிர்ப்பந்தத்திற்கு இடமில்லாமலும் நடைபெறும். அது மட்டுமல்ல; கருணாநிதியின் ஆசி பெற்றவர் யாரும் முதலமைச்சராக இருந்து விசாரணை நடத்துவதற்கும் நாங்கள் ஒரு போதும் சம்மதியோம்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அக்டோபர் 14-ந் தேதி கழகப் பொதுக்குழுவுக்கு எம். ஜி. ஆர். அனுப்பிய தந்தியில் "கழக அமைச்சர்கள் ஊழல்கள்" என்பது குறித்து எதுவுமே பேசவில்லையென்று அவர் குறிப்பிட்டிருந்தமைக்கு மாறாக, அதே திங்கள் இறுதியில் திடீரெனப் புகார்ப் பட்டியல் தயாரித்து விட்டார் என்றால் அதிலே அடங்கிக் கிடக்கும் மர்மம் எளிதில் புரியும். மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் மூலம் சில பைல்'கள் அரைகுறையாகத் தயாரிக்கப்பட்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆதாரமற்ற புகார்கள் எழுதப்பட்டு - அதைக் கவர்னரிடம் வழங்கும் கருவியாக எம்.
ஜி. ஆர். பயன்படுத்தப்பட்டார். அதனால் தான் அவர் திரும்பத் திரும்ப அந்தப் புகார்களைப் பற்றித் தனக்கு நேரடியாக எதுவும் தெரியாது என்று வாக்குமூலங்கள் அளித்து வந்தார். நவம்பர் 4-ஆம் நாள் எம். ஜி. ஆரும், எம். கல்யாணசுந்தரமும் புகார்ப் பட்டியல்களை எடுத்துச் சென்று கவர்னர் கே. கே. ஷா அவர்களிடம் கொடுத்தனர். அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கக் கோரினர். கவர்னர், "அரசியல் சட்டப்படி அந்தப் பட்டியலை முதலமைச்சருக்கு அனுப்பி அவரது கருத்தையும் அறிந்து தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இயலும்" என்று கூறியதால் புகார்ப் பட்டியலை அவர்கள் திரும்ப எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
எனவே குடியரசு தலைவரிடம் நேரடியாக புகார் பட்டியலைக் கொடுக்க எம். ஜி. ஆர். அவர்களும், கல்யாணசுந்தரம் அவர்களும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். நவம்பர் 6-ஆம் தேதி காலையில் குடியரசு தலைவர் அவர்களை இரு தரப்பினரும் சந்தித்து கழக அமைச்சர்கள் மீது புகார் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு ஒன்றினைத் தந்தார்கள். டெல்லியில் எம். ஜி. ஆர். நிருபர்களிடம் கூறும்போது "நாம் கோரியுள்ளபடி தமிழக அமைச்சரவை மீது ஊழல் புகார்களை விசாரிக்க நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டால் தி.மு.க.
அமைச்சரவை உடனடியாக பதவி விலகுவது தான் நியாயம். நாகரிகம் உள்ள சர்க்கார் எதுவும் அதைத்தான் செய்யும்" என்று கூறினார். மேலும் "ஏதோ தவறுதல் ஒன்றுக்காக ஒரு போலீஸ்காரர் மீது விசாரணைக்கு ஏற்படாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்தப் போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இது சாதாரணமாக உள்ள நடைமுறையே. சாதாரண ஒரு சர்க்கார் சிப்பந்தி விஷயமே இப்படி என்றால், தமிழக அமைச்சரவை மேல் விசாரணை என்றால், அந்த சர்க்கார் தானாக பதவி விலகுவதுதானே ஒழுங்குமுறைக்கு உகந்ததாக இருக்க முடியும்?"
என்று கூறினார். நவம்பர் 7-ந்தேதி செய்தியாளர் ஒருவர் "சென்னையில் ஒரு ஆடம்பர பகுதியில் இரண்டரை இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை மதியழகன் வாங்கினாரென்றும் அதற்கு அவர் கணக்குச் சொல்ல முடியவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. அவருடைய சகோதரருக்கும் அந்தச் சொத்தில் பங்கு உண்டு. அப்படியிருக்க அந்தச் சகோதரரை உங்கள் கட்சியின் அமைப்புக் காரியதரிசியாக்குவது முறையாகுமா? உங்களுடைய கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாதவர்கள் என்று நினைக்கிறீர்களா?"
என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது "சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள ஊழியர்களே எங்கள் கட்சியில் அதிகம் இருக்கிறார்கள். என் கட்சியில் சேர்ந்துள்ள தி.மு.க. தலைவர்களைப் பற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. அவர்கள் புதுக்கட்சியில் சேர்ந்த போது அவர்களுடைய சொத்து எவ்வளவு, கடன் எவ்வளவு என்று எங்களுக்குத் தெரியும். மேலும் பணம் சேர்த்திருக்கிறார்களா என்று ஒரு ஆண்டு கழித்து மறுபடியும் விசாரணை நடத்துவோம்" என்றார்.
சட்டப் பேரவைத் தலைவர் மதியழகன் அவர்களை எம்.ஜி.ஆர். சென்று பார்ப்பதும், எம்.ஜி.ஆரை, மதியழகன் சென்று பார்ப்பதுமாக இருந்தார்கள். நவம்பர் 10-ந் தேதியன்று அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்திய ஊர்வலத்தை பேரவைத் தலைவர் மதியழகன் அவர்கள் அண்ணா சாலையில் ஒரு இடத்திலிருந்து பார்வையிட்டார். இந்தக் காரணத்தினால் தமிழகச் சட்டப் பேரவை நவம்பர் 13-ஆம் தேதி கூட்டப்படும் போது பேரவைத் தலைவர் எந்த முறையில் நடந்து கொள்வாரோ என்பது தமிழக அரசியலில் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
13-ந் தேதி காலையில் பரபரப்பான சூழ்நிலையில் சட்டப்பேரவை கூடியது. அனுதாபத் தீர்மானம் முதலில் முடிந்து பேரவையின் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பினையும் செய்த பிறகு-முறைப்படி நிகழ்ச்சி நிரல்படி கேள்வி நேரம்! கேள்விகளை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அந்த நேரத்தில் ஒழுங்குப் பிரச்சினைகள் எழுப்பப்படுமானால், அவைகளுக்கு பேரவைத் தலைவர் அனுமதியே வழங்கிடக் கூடாது. ஆனால் அன்று நடைபெற்றது என்ன?
கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் கே. டி. கே. தங்கமணி அவர்கள் எழுந்து ஒரு ஒழுங்கு பிரச்சினை எழுப்ப விரும்புவதாகக் குறிப்பிட்ட போது. கழக உறுப்பினர் ஒருவர் கேள்வி நேரத்தின் போது ஒழுங்குப் பிரச்சினைக்கே இடமில்லையே என்றார். இருந்தாலும் பேரவைத் தலைவர் அதற்கு அனுமதிக்காமல், "தங்கமணியைப் பார்த்து ஒழுங்கு பிரச்சினை என்ன?"
என்று கூறும்படி அனுமதித்தார். உடனே தங்கமணி அவர்கள் கடந்த சட்டப்பேரவைக்குப் பிறகு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருப்பதாகவும், அப்போது விவசாய அமைச்சராக இருந்த அன்பில் தர்மலிங்கம் அவர்கள் திடீரென்று ராஜினாமா செய்தார் என்றும், பிறகு அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்றும், அதற்கெல்லாம் காரணம் என்ன என்றும் கேட்டார். மேலும் அமைச்சர்களிடையே இலாகா மாற்றம் செய்யப்பட்டதற்கும் காரணம் என்ன என்றும் கேட்டார்.
அதற்கு, பேரவைத் தலைவர் "பதவி விலகும் அமைச்சர்கள் தங்கள் விலகலுக்கான காரணத்தை மன்றத்திற்கு அவர்கள் விரும்பினால் சொல்லலாம் என்றுதான் விதி உள்ளது. சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயம், நிர்ப்பந்தம் கிடையாது. எனவே பதவி விலகிய அமைச்சர் தானாக விரும்பினால் அறிக்கை தரலாம். அமைச்சர்களை நியமிப்பது, மாற்றுவது ஆகியவை முதல்வருக்கு உள்ள உரிமை என்றாலும், இது விஷயத்தில் ஒரு மரபு ஏற்படுத்தலாம்.
பதவி விலகும் அமைச்சர் அவ்வாறு விலகியதற்கான காரணங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள அவ்வாறு விலகுபவர்கள் தங்கள் விலகலுக்கான காரணங்களை அறிவிக்க விதிமுறைகளை ஏற்படுத்தலாம்" என்றார். அடுத்து ஹண்டே அவர்கள் ஒரு ஒழுங்கு பிரச்சினை எழுப்பி பேரவைத் தலைவர் மீது ஆளுங் கட்சிக்காரர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையா என்று கேட்டார். அவர் பேசும்போது தி.மு.கழகத்தைப் பற்றி குறிப்பிடும்போது "கருணாநிதி தி.மு.க."
என்று கூற அதுக்குறித்து பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்கள் எழுந்து "ஹண்டே அவ்வாறு குறிப்பிடுவது தவறு என்றும், கருணாநிதி தி.மு.க. என்று குறிப்பிடக் கூடாது என்றும், எங்களுடைய கட்சியின் பெயர் தி.மு.க., அதற்குத் தலைவர் கலைஞர் கருணாநிதி" என்றும் கூறினார்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, - "ஹண்டே குறிப்பிடுவது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. என்று தான்" என்று சமாதானம் கூறினார். அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து "இன்றைய அமைச்சரவை தங்களுடைய கட்சியின் நம்பிக்கையையும் இழந்து, மக்கள் நம்பிக்கையையும் இழந்து விட்டது. இந்த நிலையில் இந்த அமைச்சரவை நீடிப்பது சட்டவிதி ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டதா?"
என்றார். கே.டி.கே. தங்கமணி அவர்கள் "இப்போது ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க. ஏழு கட்சிக் கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட்டது. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மூன்று கட்சிகள் தி.மு.க.விலிருந்து பிரிந்து விட்டன. தி.மு.கழகம் இரண்டாக பிளவுபட்ட நிலையில் அந்தக் கட்சி ஆட்சி நீடிக்க முடியுமா?"
என்றார். அப்போது நான் எழுந்து, "ஏகோபித்து எல்லா கட்சித் தலைவர்களும் ஒப்புக் கொண்டால், கேள்வி நேரத்தினை ஒத்திப்போட்டு விட்டு வேறு விவாதத்தை எடுத்துக் கொள்ள நாங்களும் தயார் என்றும் அமைச்சரவை மீது மன்றத்திற்கு நம்பிக்கை உள்ளதா இல்லையா என்பதை இங்கே கொண்டு வரப்படவிருக்கிற கண்டன தீர்மானத்தை விவாதித்த பிறகு ஆதரவு உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்றும்" குறிப்பிட்டேன். "அப்போது மீண்டும் எம்.ஜி.ஆர்.
எழுந்து நாட்டில் உள்ள நிலை, இங்கு உள்ள நிலை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த அவை, அரசு தொடர்ந்து நடைபெறுவது சரியா?" என்றார். அப்போது சபாநாயகர், "இன்று கிளப்பப்பட்டுள்ள பிரச்சினை ஒரு அசாதாரணமான பிரச்சினை ஆகும். முதல்வர் கருத்து அடிப்படையில் தங்களுக்கு மெஜாரிட்டி பலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த மந்திரி சபை நாட்டு மக்களின் நம்பிக்கை இழந்து விட்டது. கூட்டணியில் தோழமைக் கட்சிகளாக இருந்த கம்யூனிஸ்ட், புது காங்கிரஸ் கட்சிகள் விலகிவிட்டன.
தி. மு. கழகத்தினரும் வேறு கட்சிக்குப் போய் விட்டார்கள். எனவே இம்மந்திரி சபை நீடிக்க உரிமை இல்லை என்பது இன்னொரு தரப்பு வாதம். இது சரியா தவறா என்பதில் நான் போகவில்லை. இது ஒரு அசாதாரண பிரச்சினை. அசாதாரண சூழ்நிலை. இதற்கு ஒரு அசாதாராண தீர்வு கண்டுதான் சமாளிக்க முடியும். இதற்கு ஒரு யோசனையை என் தீர்ப்பாக அல்ல, யோசனையாக சொல்ல விரும்புகிறேன் நண்பர் என்ற முறையில் இல்லாவிட்டாலும், நாட்டை ஆளும் முதலமைச்சர் என்ற முறையில் இல்லாவிட்டாலும், முப்பது ஆண்டுகள் ஒன்றாகப் பழகியிருந்தவன் என்ற முறையில் இந்த யோசனையை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை இழந்து விட்டார்கள்; இந்த ஆட்சி நீடிக்க முடியாது என்பது வாதம். பெரும்பாலான எண்ணிக்கை உள்ள எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் நாட்டில் இன்று ஒரு பதட்டமான அசாதாரண நிலை உள்ளது. சட்டம், அமைதி, ஒழுங்கு இல்லை. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. இன்று அசாதாரண நிலை உள்ளது. மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடக்கும் நிலை சாதாரணமானவைகளாக இல்லை. அசாதாரண நிலைகளே உள்ளன.
இப்பிரச்சினைக்கு பரிகாரம் டெல்லியில் இல்லை. கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையிலும் இல்லை. முதலமைச்சர் தான் பெரிய மனது வைத்து பொது மக்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவைப் பெற வேண்டும். சென்ற ஆண்டு எப்படி நாலாவது வருடத்திலேயே சட்ட சபையைக் கலைத்து மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றாரோ அதே போல இன்று மாநிலத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்குத் தீர்வு காண சட்டசபையைக் கலைக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் சிபாரிசு செய்ய வேண்டும் என்ற என்னுடைய யோசனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டசபையைக் கலைத்து மறு தேர்தலுக்கு நின்று மேலும் மக்கள் ஆதரவுடன் மீண்டும் வரலாம் என்பது என்னுடைய யோசனை. எனவே மக்களை இன்றைக்கே சந்திக்கிறீர்களா என்று எம். ஜி. ஆர். கேட்கிறார். அதற்கு முதலமைச்சர் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறாரா?"
என்று சபாநாயகர் மதியழகன் அவர்கள் கேட்டபோது, நான் எதுவும் பதிலே சொல்ல விரும்பவில்லை என்பதை சைகை மூலமே காட்டி விட்டேன். இந்த நிலையில் திடீரென்று சபாநாயகர் கே .டி. கே. தங்க மணியும் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) பொன்னப்ப நாடாரும் (காங்கிரஸ்) தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொண்டு சபைக் கூட்டத்தை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்து விட்டு அறைக்குச் சென்று விட்டார். சட்டப்பேரவைத் தொடர்கூட்டமாக நடைபெறும் என்று நினைத்து வெளியூரிலிருந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் எல்லாம் ஒரே நாளோடு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது அறிந்து பேரவைத் தலைவர் அவர்கள்பால் மிகுந்த ஆத்திரம் கொண்டனர்.
அவர்களை எல்லாம் அமைதியடையச் செய்ய மிகுந்த நேரமாயிற்று. பொதுவாக 13-11-72 அன்று கூடிய தமிழக சட்டப் பேரவை வரலாறு காணாத நான்கு நிகழ்ச்சிகளை முதன்முறையாகக் க
ண்டது. அவை: 1. கேள்வி நேரமே எடுத்துக் கொள்ளப்படாமல், ஒழுங்குப் பிரச்சினை ஒன்றைப் பற்றி மட்டுமே ஒரு மணி நேரம் விவாதம் நடைபெற்று திடீரென்று சபை ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சி; அதற்கு சபாநாயகர் உடந்தையாக இருந்தது! 2. எதிர்க்கட்சித் தலைவர்களின் யோசனையை ஏற்று சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் ஒத்தி வைத்த நிகழ்ச்சி; 3. ஆட்சியின் போக்கைக் கண்டித்தும், குறை கூறியும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து ஆளுங்கட்சியை தேர்தலில் மீண்டும் போட்டியிட சபாநாயகர் இருக்கையில் இருந்தவாறு யோசனை கூறிய நிகழ்ச்சி.
4. சட்டசபை தொடர் கூட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் நாளோடு சபாநாயகர் தன்னிச்சையாக ஒத்தி வைத்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. தோழமைக் கட்சியினரான இந்தியயூனியன் முஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக், தமிழரசு கழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். "நாங்கள் எல்லாம் தங்களிடம் முழு நம்பிக்கை வைத்து ஏகமனதாக பேரவைத் தலைவராக தங்களைத் தேர்ந்தெடுத்தோம்.
எங்கள் நம்பிக்கை வீணாகும் வண்ணம் அண்மைக் காலத்தில் ஜனநாயக பாரம்பரியத்திற்கு விரோதமாக தாங்கள் நடந்து கொண்டது கண்டு வருந்துகிறோம். தங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். ஆகவே தாங்கள் சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்" என்று சட்டப் பேரவையில் உள்ள எல்லா அமைச்சர்களும், தி.
மு. க., முஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக், தமிழரசு கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுமாக மொத்தம் 182 பேர் கையெழுத்திட்டு மதியழகன் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. பேரவையின் தலைவர் திடீரென்று டிசம்பர் 5-ஆம் தேதி வரை அவையை ஒத்தி வைத்து விட்ட காரணத்தால்-திரும்பவும் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு சட்ட ரீதியாக என்ன வழி என்று ஆராய்ந்து, அதன்படி தமிழ்நாடு சட்டமன்றத்தின் இருசபைகளின் அப்போதைய கூட்டத் தொடர் முடிவுற்றதாக (புரோ ரோக்) கவர்னர் அவர்கள் மூலமாக மாநில அரசின் ஆலோசனையின் பேரில் அறிவிக்கப்பட்டது.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமென்று அண்ணாவின் பெயரால் கட்சிக்குப் பெயர் - கொடியிலும் அண்ணாவின் உருவம்-ஆனால் அண்ணா அவர்கள் கட்டிக் காத்த சட்டமன்ற ஜனநாயக மரபுகளை வெட்டிப் பிளக்கும் காரியத்தில் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எம். ஜி. ஆரும் அவருடன் சுமார் பத்து பேர் அவரது கட்சியில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டார்கள். இன்றைக்கு சட்டமன்ற மரபுகளைப் பற்றி நியாய வாத வேதாந்தங்களைக் குன்றின் மீது ஏறி நின்றுப் பேசுகிறவர்கள் - எழுதுகிறவர்கள் - அன்றைக்குத் தங்களின் எரிச்சலைக் காட்டிக்கொள்ள எவ்வளவு மோசமாகச் சட்டமன்ற விதிமுறைகளை காலால் போட்டு மிதித்தனர் என்பதற்கு 1972 நவம்பர் 13-ஆம் நாள் சட்டமன்ற நிகழ்ச்சிகளே தக்க எடுத்துக்காட்டாகும்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு தான் அவையில் விளக்கங்கள் கோருவதோ அல்லது ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவதோ அவைத் தலைவரின் அனுமதியுடன் இடம் பெற முடியும். அதற்கு முற்றிலும் மாறாக நவம்பர் 13-ஆம் நாள் பேரவைத் தலைவர் அவையில் வந்து அமர்ந்ததுமே நண்பர் எம்.ஜி.ஆரும் அவருக்கு துணையாக ஒரு சிலரும் எழுந்து - கழக அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாய்மொழி மூலமாகவே கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் எழுத்து வடிவில் முன்னரே கொடுக்கப்பட்டு, அதனை எப்போது அவையில் எடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டு அதன் பிறகு விவாதம், ஓட்டெடுப்பு இவைகள் எல்லாம் நடைபெற வேண்டுமென விதிகள் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் குறித்து ஒரு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் எடுத்த எடுப்பிலேயே கழக அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்று எம்.ஜி.ஆர்.
அவர்கள், பேரவையில் கோரினார். வளர்த்த கடா, மார்பிலே பாயும் காட்சியைக் கண்டு நான் பதட்டமடையாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். சபாநாயகரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்ட காரணத்தால் சபையின் விதிமுறைகளை அவருடன் சேர்ந்து துவைத்துத் துவம்சம் செய்வது எம்.ஜி.ஆருக்குச் சுலபமாக இருந்தது. சுவையாகவும் இருந்தது அவருக்கு! திராவிடர் இயக்கத்தில் இப்படியொரு விரிசல் ஏற்பட்டு, வெள்ளப் பாழ் ஏற்படுவதைக் கண்டு களித்த காங்கிரஸ் கட்சியும், பிற கட்சிகளும் சட்டமன்ற விதிமுறைகளைக் கண்டு கொள்ளாமல் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற கணக்குப் போட்டுக் கொண்டு வேகமாகச் செயல்பட்டனர்.
இதிலே மிகவும் வேதனை என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்குத் தனது பேருழைப்பை நல்கி, வியர்வையும் குருதியும் கொட்டிய எனது ஆருயிர் நண்பர் மதியழகன் அவர்களையே பயன்படுத்திக் கொண்டு அந்தக் கழகத்தையும் கழக அரசையும் வீழ்த்த நினைத்தார்களே அதுதான் பெரும் வேதனை! இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டு விட்டு 1972 டிசம்பர் 2ஆம் நாள் சட்டமன்ற நிகழ்ச்சிக்குச் செல்லலாமெனக் கருதுகிறேன். 1983 ஜூன் திங்கள் 3ஆம் நாள் எனது அறுபதாவது பிறந்த நாள் விழா!
எம். ஜி. ஆரின் ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் மதியழகன் அவர்கள் எம். ஜி. ஆருடன் இல்லை. எம். ஜி. ஆரைப் பிரிந்து வந்து மீண்டும் தி. மு. கழகத்தில் இணைந்து விட்டார். அந்த மதி அவர்கள் எனது பிறந்த நாள் விழாவில் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன். "நாற்பதாண்டுகளுக்கு முன்பு திருவாரூர் நகரில் என்னுடைய பால்ய நண்பராகச் சந்தித்த என்னுடைய அருமைச் சகோதரர், இன்றைக்கு ஏழு கோடி மக்களுடைய இனத் தலைவராகப் பெருமை பெற்று தமிழர்களை வழி நடத்திச் செல்லும் பாங்கினைக் கண்டு நான் பேருவுவகை கொள்கிறேன்.
நான் இன்று தலைவரின் பேச்சாற்றலைப் பற்றியோ, எழுத்தாற்றலைப் பற்றியோ, அவர்களின் தியாகத்தைப் பற்றியோ, தலைமையைப் பற்றியோ பேசப் போவதில்லை. அவைகள் எல்லாம் அங்கீகாரம் பெற்று எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன நம்முடைய பேராசிரியர் அவர்கள் தான் மிகவும் அழகாகக் கேட்பார்கள். "இவரை விட்டால் தமிழ்நாட்டில் வேறு தலைவர் யார் இருக்கிறார்கள்?"
என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மிகப் பெரிய தலைவர் இன்று அறுபதாவது வயதிலே அடியெடுத்து வைக்கின்ற நேரத்திலே இங்கேயிருக்கின்ற ஒரு கோமாளியின் ஆட்சியை - ஒரு விதூஷகனுடைய ஆட்சியை - தூக்கி எறிவதற்காக இன்றைய தினம் ஒரு அணி திரண்டிருக்கிறது. இந்தப் பெரிய அணியின் தலைவராக நான் கலைஞர் அவர்களைப் பார்க்கிறேன். எதிர்க்கட்சியிலே இருக்கிற பல தலைவர்களுக்குச் சொல்வேன். இன்றைய தினம் தமிழகத்திலே நடைபெறுகின்ற அநியாயங்கள் - அக்கிரமங்கள் - ஜனநாயகப் படுகொலைகள் - மக்களுடைய அவதிகள் வேறு எந்த நாட்டிலேயாவது இருக்குமேயானால் அந்த நாட்டிலே ஆளுபவர்கள் எக்கதிக்கு ஆளாகியிருப்பார்கள் தெரியுமா?
இந்த நாட்டிலே இருக்கின்ற மிகக் கேவலமான நிலைமை சொரணை கெட்டவர்களாக - மானம் கெட்டவர்களாக - கொஞ்சம் கூட மரியாதை இல்லாதவர்களாக தமிழர்கள் இன்றைய தினம் இருக்கிறார்கள். இங்கேயிருக்கின்ற தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு, அரிசிப் பிரச்சினை வேறு எங்கேயாவது இருக்குமேயானால் அந்த நாட்டு மக்கள் எப்படியோ கிளர்ந்தெழுந்திருப்பார்கள். இன்றைக்கு ஒரு நல்ல காலக் குறி தோன்றியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
கலைஞரின் தலைமையிலே நம்முடைய எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஜனநாயகப் போராட்டத்தை நடத்தி, ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்துபவனை வீட்டிற்கு அனுப்புவதற்கு நீங்கள் எல்லாம் பாடுபட்டாக வேண்டும். எம்.ஜி.ஆருடைய அருவருப்பான ஆட்சியை, மிகக் கேவலமான ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு கலைஞர் அவர்கள் ஒரு அற்புதமான படைக்கருவி. தியாகத்திலே அவர்கள் வளர்ந்தவர்கள். நெருக்கடிகளை எல்லாம் சந்தித்தவர்; அடுத்த ஆண்டு அவருடைய மணிவிழா நடக்கும் நேரத்தில் இந்த ஆட்சி அகன்றது; தமிழர்கள் நலம் பெற்றார்கள் என்ற நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அருமைத் தலைவரே, எங்கள் கண்ணின் கருமணியே, நீ நீடுழி வாழ்க. உன்னுடைய முயற்சிகள், போர்ப் பரணிகள் இந்த நாட்டிற்கும் வெளிநாடுகளிலே இருக்கும் தமிழர்களுக்கும் நல்ல பலனைத் தரட்டும் என்று ஒரு சகோதரனின் உள்ளத்தோடு உன்னை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" இப்படிப் பேசிய மதியழகன் அவர்கள் பிறகு நீண்ட நாள் உயிரோடு இல்லை. அவரை வளைத்துக் கொண்டிருந்த நோய் அவரைப் பறித்துக் கொண்டே போய்விட்டது.
அவரைப் பிரிந்த துயரம் மறையாத நிலையிலேயே 1972-ஆம் ஆண்டின் சட்டமன்ற நிகழ்ச்சிகளை எழுத வேண்டியிருக்கிறது. நவம்பர் 13-ஆம் நாள் விளைவுக்குப் பிறகு, கவர்னர் அவர்களால் முடித்து வைக்கப்பட்ட (புரோரோக்) சட்டமன்றக் கூட்டத் தொடர் டிசம்பர் 2-ஆம் நாள் மீண்டும் தொடங்குமென அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல தி.மு.கழகம் உள்ளிட்ட 185 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மதியழகன் அவர்கள் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவித்துத் தீர்மானம் கொடுத்திருந்தார்கள்.
அதே போல் கழக அமைச்சரவையின் மீதும் நம்பிக்கையின்மையைத் தெரிவித்து எம்.ஜி.ஆர். கோஷ்டியின் சார்பில் ஒரு தீர்மானம் தரப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்றால்-பேரவைத் தலைவர் மீதுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ளாமல், அமைச்சரவை மீதுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் அனுமதிப்பது என்றும், அதற்கான விவாதம் முடிவுற்ற பிறகு அமைச்சரவை மீதுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தினை குரல் ஓட்டிற்கு முதலில் விடுவது என்றும், குரல் ஓட்டில் அதிகமான பேர்கள் அமைச்சரவை மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னாலும், சபாநாயகரான மதியழகன் அவர்கள் எழுந்து, அமைச்சரவை மீது இந்தச் சட்டமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு, உடனடியாக சபையை ஒத்தி வைத்து விடுவது என்றும் முறைப்படி சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்துப் பேசுவதற்கு விதிப்படி இடம் கிடையாதாகையால் அமைச்சரவையையும், சட்டசபையையும் கலைத்து விடலாம் என்றும் திட்டம் போட்டு அப்படிச் செய்ய முற்பட்டனர்.
ஆனால் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற்றது என்ன தெரியுமா? தமிழகச் சட்டமன்றத்தில் பேரவையிலே அன்று வரலாறு காணாத வகையில் இரண்டு அவைகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. காலை 11 மணி அளவில் சட்டமன்றம் கூடியது. முதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு வேறு முக்கிய அலுவல்களைக் கவனிக்கலாம் என்று அவை முன்னவர் நாவலர் ஒரு தீர்மானத்தினை முன்மொழிந்தார். கேள்வி நேரத்தைப் பொறுத்தவரையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தான் ஒத்தி வைக்க இயலும்.
யாராவது ஒரு உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க இயலாது. எனவே கேள்வி நேரத்தை ஒத்திவைக்க நாவலர் தீர்மானம் முன்மொழிந்த போதிலும், சிலர் குரல் ஓட்டின் போது அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காத காரணத்தால் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்த பிறகு சட்டமன்றக் கழக உறுப்பினர் ஆற்காடு வீராசாமி அவர்கள் எழுந்து, "நானும், இந்த அவையின் 184 உறுப்பினர்களும் தற்போதைய சபாநாயகர் அவர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டுமென்று தீர்மானம் கொடுத்திருக்கிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 179-வது விதியில் அந்தத் தீர்மானத்தைத்தான் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது" என்று கூறி அதனை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூறினார். உடனே அவை முன்னவர் நாவலர் அவர்கள் எழுந்து, "உறுப்பினர் வீராசாமி கூறியதை நான் ஆதரிக்கிறேன். இந்த அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமானால் அதைப் பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இந்த அவையின் முன் தற்போதைய சபாநாயகர் அவர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டுமென்று கூறும் தீர்மானம் உள்ளது. இந்த அவையின் 185 உறுப்பினர்களது நம்பிக்கையை இழந்து விட்ட ஒரு சபாநாயகர் இந்த அவைக்குத் தலைமை தாங்க முடியாது. இந்த அவையின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே இதன் நடவடிக்கைகளைத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியும். முறையான சபாநாயகர் இருந்தால் தான், சபை கூடியதாகப் பொருள் கொள்ள இயலும்.
இதுவே அரசியல் சட்ட நெறியின்படியும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் சட்ட விதியின்படி முக்கிய கோட்பாடாகும். இந்த அவையின் 185 உறுப்பினர்கள் தற்போதைய சபாநாயகர் பதவியிலிருந்து அகற்றப்பட தீர்மானம் கொடுத்துள்ளனர். ஆகவே இந்த அவை வேறு அலுவல்களைக் கவனிக்கும் முன்னால் பதவியிலிருந்து இப்போதுள்ளவரை அகற்ற வேண்டுமென்ற இந்தத் தீர்மானத்தை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவின்படி 14 நாள் அவகாசம் முடிந்து விட்டது.
இந்தத் தீர்மானத்தைக் கவனிக்க சபாநாயகரே நாள் குறிப்பிட வேண்டுமென்றும் அரசியல் சட்டத்தின் அப்பிரிவு கட்டளையிடுகிறது. சபாநாயகரே இத்தீர்மானமானது உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று நவம்பர் 13-ம் தேதியன்று அறிவித்தார். அவ்வாறு தேதி குறிப்பிடாமல் அரசியல் சட்டம் கூறுகிறபடி அவர் தன் கடமையைச் செய்யாது தட்டிக் கழிக்கும்போது இந்த மன்றமானது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தாக வேண்டியுள்ளது.
அரசியல் சட்டத்தின் 208-வது பிரிவின் கீழ்வகுக்கப்பட்டுள்ள செயல் விதிகள் அரசியல் சட்டத்துக்கு உள்ளடங்கியதேயாகும். எனவே இந்த அவை சபாநாயகரைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை பரிசீலனைக்கு உடனே எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் சட்ட 181-வது பிரிவின்படி சபாநாயகருக்கெதிரான தீர்மானம் வருமேயானால் அப்போது சபாநாயகர் அவையில் இருந்தாலும் அவர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது என்றுள்ளது.
அரசியல் சட்டத்தின் 175(2)-ம் பிரிவின்படி மாநில ஆளுநர் தெரியப்படுத்தியுள்ள பொருள்களை இந்த அவை பரிசீலித்திட வேண்டும். இப்போது சபாநாயகராக உள்ளவர் அரசியல் சட்டத்தின் 179-ம் பிரிவும் 175-ம் பிரிவும் கூறுகிற கட்டளைகளின்படி நடக்க மறுக்கிறார். எனவே துணை சபாநாயகர் இந்த அவைக்குத் தலைமை தாங்கிட வேண்டுமென்று இந்த அவை தீர்மானிக்க நான் முன்மொழிகிறேன். நாவலர் முன்மொழிந்த தீர்மானத்தை அவை ஏற்றுக்கொண்டது.
அதன்படி துணை சபாநாயகர் சீனிவாசன் அவைக்குத் தலைமையேற்றார். ஆனால் அ.தி.மு க. நண்பர்கள், அவர்களது தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் அமைச்சரவை மீது தாங்கள் கொடுத்த தீர்மானத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஒலி பெருக்கியே இல்லாமல் அவர்களாக எழுந்து கூற, அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, அவர்கள் திட்டப்படியே அப்போது செயல்பட்ட மதி அவர்கள், அதனை எடுத்துக் கொண்டு அதன் மீது பேசுவதற்காக எம். ஜி.
ஆரை அழைக்க அவரும் ஒலிபெருக்கியே இல்லாமல், அவர் என்ன பேசுகிறார் என்பது மற்ற உறுப்பினர்களுக்கோ
, பத்திரிகையாளர்களுக்கோ கேட்காத போதிலும் அவர் விடாப்பிடியாக அப்படியே நின்று கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். பெரும்பாலான உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட நாவலரின் தீர்மானத்திற்கு அவர்கள் மதிப்பே அளிக்காமல் நடந்து கொண்டார்கள். துணைத்தலைவர்தான் அவையை நடத்த வேண்டுமென்று அவை தீர்மானித்த போதிலும், மதி அவர்கள் தனது இருக்கையிலிருந்து நகரவில்லை. அவையிலேயே மத்தியில் தற்காலிகமாக ஒரு இருக்கை போடப்பட்டது.
ஒலிபெருக்கியும் வைக்கப்பட்டது. அவை உறுப்பினராக இருந்த ராயபுரம் வேதாசலம் அவர்கள் மதி அவர்களின் மேஜை மீது இருந்த "மணி"யை எடுத்து துணை அவைத் தலைவருக்கு வைத்திட்டார். அவையில் ஒரே நேரத்தில் இரண்டு தீர்மானங்கள்-ஒன்று பேரவைத் தலைவர் மதி அவர்கள் மீது 185 உறுப்பினர்கள் கொண்டு வந்திருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்; மற்றொன்று அமைச்சரவை மீது ஒரு சிலரே கொண்டு வந்திருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்.
ஆனால் அந்தத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதமோ, பேச்சுக்களோ சபையின் நடவடிக்கை குறிப்பிலேயே ஏறவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் கேட்கவில்லை. பிறகு அன்றைய தினம் துணை அவைத் தலைவராக இருந்த தம்பி சீனிவாசன் அவையினை நடத்தினார். மிக இளம் வயதிலேயே அந்தப் பொறுப்பினை ஏற்ற தம்பி சீனிவாசன் அன்றைய தினம் அவையை மிகவும் திறமையாக நடத்தினார். இருக்கையில் அமர்ந்ததும் உறுப்பினர் ஆற்காடு வீராசாமி கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அவையின் பரிசீலனைக்கு வைக்கிறேன் என்று கூறிட, தீர்மானத்தை வீராசாமி முன்மொழிந்திட, சகோதரர் அரங்கண்ணல் அவர்கள் வழி மொழிந்தார்கள்.
அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று தீர்மானம் வாக்குக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் அந்த அளவிற்கு நிலைமையை சமாளித்திருக்காவிட்டால் அமைச்சரவையின் மீது நம்பிக்கை இல்லை என்று அவை முடிவு செய்துவிட்டதாக அ.தி.மு.க. வினரின் தூண்டுதலின் பேரில் பேரவைத் தலைவர் இடத்திலிருந்து மதி அவர்கள் அறிவித்திருப்பார்கள். பிறகு அதனைச் சமாளிப்பதற்குள் சட்ட சிக்கல்கள் எல்லாம் எழுந்திருக்கக் கூடும்.
அமைச்சரவை மீதுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்க நாங்கள் பயப்பட்டோம் என்றிருக்கக் கூடாது என்பதற்காக 7-12-72 அன்று நானே கழக அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றை முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் எம்.ஜி.ஆர். டெல்லியிலே கொண்டு போய் கொடுத்த புகார் பட்டியல் அதற்கான பதில் என்ற வகையிலே விளக்கமாக அமைந்தது. பெருவாரியான வாக்குகளால் கழக அமைச்சரவை மீது நம்பிக்கை வைக்கும் தீர்மானம் நிறைவேறியது.
