நெஞ்சுக்கு நீதி
திகைக்கவில்லை தித்திப்பு வழங்கினார்! · 191 / 391
திகைக்கவில்லை தித்திப்பு வழங்கினார்! கடற்கரைக் கூட்டத்தில் காரசாரமாகவும், கடுமையாகவும் கழக முன்னணியினர் பேசிய பிறகு இறுதியாக நான் பேசினேன். அந்த நீண்ட உரையில் சில பகுதிகளை நினைவூட்ட விரும்புகிறேன். "பல தீர்மானங்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டிய தி.மு. கழகம் அவைகளை எல்லாம் இன்று மறந்து விட்ட நிலையில் சில பிரச்சினைகள் நாட்டிலே உருவாகியிருக்கின்றன. அதுதான் என்னுடைய இனிய நண்பர்-அன்றும் இன்றும் சரி, என்றும் நான் அவரை இனிய நண்பர் என்றுதான் அழைப்பேன்-அந்த புரட்சி நடிகர் எம்.
ஜி. ஆர். திடீரென்று தி. மு. கழகத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற இலட்சக்கணக்கான தொண்டர்களுடைய நெஞ்சம் துடிக்கின்ற அளவிற்கு, 18,000கிளைக் கழகச் செயலாளர்களுடைய நெஞ்சம் பதறுகிற அளவிற்கு - 135 வட்டச் செயலாளர்களுடைய உள்ளம் உருகுகின்ற அளவிற்கு - 14 மாவட்டச் செயலாளர்கள் பதட்டம் அடைகிற அளவிற்கு - செயற்குழு, பொதுக்குழு இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகிவிட்டதே என்று வேதனைப்படுகிற அளவிற்கு - கொந்தளிக்கிற அளவிற்கு சில காரியங்களில் என் இனிய நண்பர், புரட்சி நடிகர் அவர்கள் ஈடுபட்டு விட்டார்.
கணக்கு கேட்டார் எம். ஜி. ஆர்., ஆகவே கழகத்தை விட்டு விலக்கி விட்டார்கள் என்று மாற்றுக் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள். எனக்கொரு மகிழ்ச்சி. எந்தப் பத்திரிகையிலே எம். ஜி. ஆர். அவர்கள் கிண்டல் செய்யப்பட்டு எழுதப்பட்டாரோ-அந்தப் பத்திரிகைகள் எல்லாம் இன்று எம்.ஜி.ஆர் அவர்களைத் தூக்கிவைத்துக் கொண்டு பாராட்டுகின்ற காட்சியைப் பார்த்து எனக்கொரு மகிழ்ச்சி. "பாரத் பட்டம் எப்படி வந்தது? யார் சிபாரிசு செய்தார்கள்?"
என்று கேட்ட பத்திரிகைகள் எல்லாம் இன்று பாரத் எம். ஜி. ஆர் என்று எழுதுகின்ற நிலைமையை உருவாக்கியிருக்கிறார் என்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எத்தனை கிளைக் கழகங்கள் என்று அவர் கணக்கு கேட்டிருப்பாரேயானால், துணைப் பொதுச் செயலாளர் என்.வி.என் மற்றொரு துணைச் பொதுச் செயலாளரான ராசாராம் அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து 18 ஆயிரம் கிளைக் கழகங்கள், 135 வட்டக் கழகங்கள் 14 மாவட்டக் கழகங்கள், இவை தவிர மாநில அமைப்புகள், செயற்குழு, பொதுக்குழு இப்படிப்பட்ட அமைப்பு ரீதியில் செயல்படுவதுதான் தி.
மு. கழகம். எம். ஜி. ஆர். "நான் கேட்ட கணக்கு எதற்காகத் தெரியுமா? எதிர்க் கட்சிக்காரர்கள் புகார் சொல்கிறார்கள், அதற்காகத்தான் நான் கணக்கைக் கேட்கிறேன்" என்றார். இதோடு நிறுத்தியிருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன். அடுத்து அவர் "அனைவரும் சொத்துக் கணக்கு வைக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் கேட்பேன்; அதற்கொரு தீர்மானம் கொண்டு வருவேன். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் பொது மக்களைச் சந்திப்பேன்" என்றார்.
இதற்கு என்ன பொருள்? எம். ஜி. ஆருக்காகப் பரிந்து பேசுகிற காங்கிரஸ்காரர்களை மற்றக் கட்சிக்காரர்களைக் கேட்கிறேன். உங்கள் பொதுக்குழுவிற்கு ஒரு தீர்மானத்தை ஒருவர் கொண்டு வந்து - அது நிறைவேறா விட்டால் பொது மக்களைச் சந்திப்பேன் என்று உங்கள் கட்சியிலே உள்ள ஒருவர் சொன்னால் அவர்களைச் சீராட்டிப் பாராட்டுவீர்களா? அல்லது உங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றுவீர்களா? இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். 18 ஆயிரம் கிளைக் கழகச் செயலாளர்களின் கணக்குகளையும் கொண்டு வந்து பொதுக்குழுவில் வைப்பது என்றால் அது எவ்வளவு உயரம் இருக்கும்?
அவ்வளவையும் ஆராய்வது என்றால் அது நடக்கின்ற காரியமா? நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய செயலா? இது எம். ஜி. ஆர். அவர்களுக்கு நன்கு தெரியும். தெரிந்தும் கேட்டார், ஏன்? அவருடைய எண்ணம் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இரண்டிலே ஒன்றை விரும்பினார். அவர் விரும்பினார் என்பதற்கு ஒரு சாட்சி - அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 26 செயற்குழு உறுப்பினர்கள் மனு கொடுத்து சொன்ன நேரத்தில் கண்கள் குளமாக எங்கள் நா தழுதழுக்க ஒருவரோடு ஒருவர் உரையாடி வேதனை- யோடு இந்த முடிவைச் செய்தோம்.
முடிவைச் செய்த நாங்கள் வேதனைப்பட்டோம். ஆனால் முடிவைக் கேள்விப்பட்ட எம். ஜி. ஆர். மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். யாராவது ஒரு கழகத் தோழன் தான் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாக கேள்விப்பட்டால் அவன் சாதாரணத் தொண்டனாக இருந்தாலும் ஐயோ, என்னையா விலக்கி விட்டார்கள்? என்று பதறியிருப்பான். எம்.ஜி.ஆர். பதறவில்லை; செய்தி கேட்டுப் பாயாசம் சாப்பிட்டார் எனப் பத்திரிகைகளிலே செய்தி வந்திருக்கிறது. நான் உள்ளபடியே வேதனைப்படுகிறேன்.
அவர் திகைக்கவில்லை. தித்திப்பு வழங்கினார்; கலகலவென்று சிரித்திருக்கிறார். படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார் என்றெல்லாம் செய்தி வருகின்றன. ஆகவே அவர் எதிர்பார்த்த ஒன்று-தேவைப்பட்ட ஒன்று நடந்திருக்கிறது! நான் நண்பர்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர். தி.மு.கழகத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டுக்கள் சொன்னாலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தான் நாம் பதிலளிக்க வேண்டுமே யல்லாமல் நம்மோடு பழகிய நண்பரைப் பற்றி முன்பு காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல் சொல்லக் கூடாது.
மதுரை முத்து என்னை விட வயதில் பெரியவர்; அனுபவத்திலேயும் பெரியவர். அண்ணா அவர்களிடத்திலே எங்களைப் போல் பழகியவர். ஆகவே அவரை நான் கண்டிக்கின்ற தகுதியுள்ள தலைமை இடத்திலே இருந்தாலும் நான் தலைவன் என்ற அகந்தையில்லாமல்-முத்துவுக்கு தம்பி என்ற முறையில் மதுரை முத்து அவர்களுடைய காலைப் பிடித்துக் கேட்டுக் கொள்வேன். எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி இங்கு பேசிய வார்த்தைகளை இனிமேல் பேச வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால் எம்.ஜி.ஆர். அவர்களோடு நான் 27 ஆண்டுக்காலம் பழகியிருக்கிறேன். தோழர்கள் எல்லாம் பழகியிருக்கிறார்கள். அவருடைய ஆற்றலும் பணியும் இந்தக் கழத்திற்கு தேவைப்பட்டது என்பதை நான் மறந்து விடவில்லை. அவர் இங்கே இருந்த நேரத்திலும், தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்ன நேரத்தில்-நான் புண்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்; தனிப்பட்ட நாவலர் புண்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டார்; மதுரை மேயர் முத்து தனிப்பட்ட முறையில் புண்பட்டு இருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டார்-ஆனால் எங்கள் அண்ணன் வளர்த்து 'இதைக் காப்பாற்று தம்பி' என்று எங்களிடத்திலே ஒப்படைத்து விட்டுப் போனாரே-அந்தக் கழகமே புண்படுத்தப்பட்டு விட்ட காரணத்தாலே தான் நாங்கள் இந்த முடிவுக்கு வர நேரிட்டது!
எம்.ஜி.ஆர். - மாற்றார் சந்தேகிக்கிறார்கள். ஆகவே நானும் சந்தேகிக்கிறேன் என்று சொல்கிறார். இது ராமாயணம் போல் இருக்கிறது. யாரோ ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகிக்கிறான். ஆகவே நான் சீதையை காட்டுக்கு அனுப்பகிறேன் என்று இராமன் அனுப்பினான் சீதையைக் காட்டுக்கு! இராமன் அனுப்பலாம்! இராமச்சந்திரன் இப்படி கழகத்தைக் காட்டுக்கு அனுப்பத் துணியலாமா? எம். ஜி. ஆர். அவர்களுக்கு இந்த எண்ணம் வரலாமா? தி. மு. கழகத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு அண்ணா வழியில் தான் நிற்பது உறுதி என்று சொல்லிக்கொண்டு, எங்களோடு உடன்பிறவா சகோதரராக பழகிக் கொண்டிருந்த ஒரு நண்பர் எது வேண்டுமானாலும் எங்களிடம் தனித்துப் பேசியிருக்கக் கூடாதா?
ஒரு மாத காலம் பேசினார்! ஆதித்தனாரைப் பற்றித் தாக்கிப் பேசினார். தினத்தந்தி, மாலை முரசு ஏட்டைப் பற்றி ஏளனமாகப் பேசினார். எதை எதையோ பேசினார். தனிப்பட்ட முறையில் நாங்கள் எல்லாம் தாக்கப்பட்டோம். நிருபர்களுக்குத் தெரிந்தது கூட முதலமைச்சருக்குத் தெரியவில்லை என்று கேலியாக ஆலந்தூரில் பேசினார். அதையெல்லாம் இந்த ஒரு மாத காலம் நாங்கள் தாங்கிக் கொண்டோம். இறுதியாகத்தான் நாங்கள் தாங்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டோம்" ★ ★ ★உ ண்மையிலேயே தூங்குபவனைத்தான் தட்டி எழுப்ப முடியும்; வேண்டுமென்றே தூங்குபவனைப் போல பாசாங்கு செய்பவனை எப்படி எழுப்ப முடியும்?
ஏதாவது வேண்டாததைச் சொல்லிக் கழகத்தை விட்டு வெளியேறி விட்டால் அல்லது வெளியேற்றப்பட்டு விட்டால் மத்திய சர்க்காருக்கு நல்ல பிள்ளையாகி விடலாம் என்ற நினைப்போடு எம். ஜி. ஆர். அவர்கள், கடற்கரைக் கூட்டத்திற்குப் பிறகு தனிக்கட்சி தொடங்குவதிலே ஆர்வம் காட்டத் தலைப்பட்டார். அந்த முயற்சிக்கு மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் அவர்களின் முழுமையான தூண்டுதல் இருந்தது. குமார மங்கலத்தின் தூதுவர்களும் சென்னையில் எம்.
ஜி. ஆர். தோட்டத்தில் முகாமிட்டு அவரை உசுப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள். புதிய கட்சிக்குப் பெயர், கொடி இவற்றையெல்லாம் கூட மோகன் குமாரமங்கலம் அவர்களால் அனுப்பப்பட்ட சில முக்கிய பிரமுகர்கள் தான் எம். ஜி. ஆருக்கு வகுத்துக் கொடுத்தனர். திராவிடர் இயக்கத்தைப் பிளக்க இப்படியொரு சூழ்ச்சி நடைபெறுவதைக் கண்டும் கேட்டும் தந்தை பெரியார் அவர்கள் வெகுண்டெழுந்து 24-10-72 அன்றைய விடுதலை இதழில் ஒரு தலையங்கம் எழுதினார்.
அந்தத் தலையங்கத்தின் சில பகுதிகள் எம்.ஜி.ஆரின் அந்தப் போக்கிற்கான காரணத்தை நாட்டுக்கு அம்பலமாக்கின. பெரியார் அவர்கள் அக்டோபர் 24-ஆம் நாள் விடுதலையில் எழுதிய தலையங்கப் பகுதிகள் வருமாறு:- "எம்.ஜி.ஆர். ஒரு சினிமாக் கலைஞர். அந்தத் துறையில் எனக்கு அனுபவம் இல்லை என்பதோடு வெகு காலமாகவே நான் சினிமா பார்ப்பதில்லை. கலைத்துறைகள் என்பவை முழுதும் ஒரு சாரார் ஆதிக்கத்திலும் அவர்கள் கைவசத்திலும் இருந்து வந்ததானது.
நமது ஆசையின்படி கொஞ்சம் கொஞ்சமாக மாறி நம்மவர்கள் கைக்கு வர நேர்ந்ததை முன்னிட்டும் நான் நமது கலைஞர்களைப் பாராட்டவும், அவர்கள் வளர்ச்சிக்கு பாடுபடவும், விளம்பரம் ஏற்படவும் முயற்சித்து இருக்கிறேன். என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறேன். சிவாஜிகணேசன் அவர்களையும் நான் நாடகத்தில் பாராட்டியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். அவர்களை எனக்கு அவர் யார் என்றும் அவர் நிலை எது என்றும் ஒன்றுமே தெரியாது.
சில திருமண நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். சில தி.மு.க நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். வணக்கம் தெரிவித்துக் கொண்டதல்லாமல் ஒரு நிமிட நேரமாவது அவருடன் பேசியதாக எனக்கு ஞாபகம் இல்லை. தி.மு. கழகத்தில் அவருக்கு சம்பந்தம் ஏற்பட்ட பிறகு தான் அவர் அரசியல் வாழ்வில் பிரஸ்தாபிக்கப்படும் தன்மையை அடைந்தார். அண்ணா இருந்த போது அவருக்கு இருந்த பெருமையை விட அண்ணாவிற்குப் பிறகு அதிக பெருமை, பிரபலம் அவருக்கு ஏற்பட்டது.
அவருக்கு 'இன்கம்-டாக்ஸ்' விஷயமாய் தொல்லை இருப்பதாகச் சொல்லப்பட்டதுடன், அதனால் அவருக்கு மனச்சங்கடம் இருப்பதாகவும், அதற்குப் பரிகாரம் தேடுவதில் அதிக கவனமாகவும் முயற்சியாகவும் இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையின் மூலமாக அவருக்கு மனக்-குழப்பமும் பல யோசனைகளும் தோன்றுவது இயற்கையே ஆகும். அதன் பயன் தான் இன்றைய அவருடைய குழப்ப நிலைக்குக் காரணம் என்பது எனது கருத்து. அப்படியில்லா விட்டால் நான் அவரை அழைத்துக் கேட்டுக் கொண்டதற்கு ஒரு பதிலும் தெரிவிக்காமல் யோசிக்கிறேன், யோசித்துச் சொல்லுகிறேன் என்று சொல்லவும் எனது கருத்தை அலட்சியப்படுத்தவும் அவர் துணிந்திருக்க மாட்டார்."
பெரியார் அவர்கள் தெரிவித்த இந்த கருத்துகளுக்குப் பிறகு, திராவிடர் இயக்கத்தின் தேவையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் தெளிவு பெற்றார்கள். எனினும், கட்சியில் இருந்த சில அதிருப்தியாளர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள எம். ஜி. ஆர். பெரு முயற்சி செய்தார். அதன் விளைவாகச் சட்டப் பேரவைத் தலைவராக இருந்த அருமை நண்பர் மதியழகன் அவர்கள் கழகத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். அவர் கழகத்திலிருந்தும், சட்டப் பேரவைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகிவிட விரும்பினார்.
ஆனால் எம்.ஜி.ஆரும், மோகன் குமாரமங்கலம் அவர்கள் தயாரித்து அனுப்பியிருந்த நண்பர்களும் மதியழகனை சுற்றி வளைத்துக் கொண்டு-சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து விலகாமல் இருந்து கொண்டே, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தி. மு .க. வுக்கு எதிராகச் செயல்பட வேண்டுமெனத் தூண்டிவிட்டார்கள். இச்செய்தி என் காதில் விழுந்ததும் நண்பர் எஸ். டி. சோமசுந்தரம் அவர்களை அழைத்து மதியழகன் அவர்களிடம் தூது அனுப்பினேன்.
அவர், 'கழகத்திற்கு துரோகம் செய்ய முனையும் மதியழகனைப் போய்ப் பார்க்கவே மாட்டேன்' என்று முதலில் மறுத்தார். நான் பிடிவாதமாகப் பேசி எஸ்.டி.எஸ். அவர்களை மதி அவர்களிடம் பேசுமாறு அனுப்பி வைத்தேன்.
