நெஞ்சுக்கு நீதி
வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்! · 189 / 391
வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்! அக்டோபர் 13-ஆம் நாள் காலையில் நாஞ்சிலார் என்னை வந்து சந்தித்தார். அப்போது என்னுடனிருந்த கோ. சி. மணி, நாஞ்சிலாரின் சமாதான முயற்சி தேவையில்லையென்று கோபாவேசமாகப் பேசினார். நான் கோ. சி. மணியை அமைதிப்படுத்தினேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவரது பட நிறுவனத்தில் முக்கிய பணியாற்றிவந்த ஆர். எம். வீரப்பனும் என்னை வந்து சந்தித்தார். எம்.ஜி.ஆர். போக்கு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்ட வீரப்பன், எப்படியும் சமரசத்திற்கு வழி இருக்கிறது என்றார்.
அப்போது மதுரைமுத்து வந்து விட்டார். அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் மிகச் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தி, நாஞ்சிலாரிடத்திலும் வீரப்பனிடத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி சமரச முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சிதான்; வரவேற்கிறேன் என்று கூறினேன். அன்று பிற்பகல் நாஞ்சிலார், முரசொலி மாறனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் சென்று எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்தால் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.
மாறன், என்னிடம் கருத்து கேட்கவே-நானும் அதற்கு ஒப்புதல் அளித்தேன். இருவரும் சென்று எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். வலிமை பெற்றுத் திகழ்கிற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்துவிடக் கூடாதென்று இருவரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இறுதியாகத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக எம். ஜி. ஆர். ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அப்படியொரு கடிதம் எழுதத் தொடங்குவதற்குள் தொலைபேசி மணி அடித்திருக்கிறது.
எம். ஜி. ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள்; என்ன பேசினார்கள் என்று தெரியாது! அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்! மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறித்துவிட்டார்கள் என்பதும் எம்.ஜி.ஆரைத் தங்கள் வலையிலிருந்து மீளவொட்டாமல் நெ.-24 ஆக்கிவிட்டார்கள் என்பதும் அடுத்த விநாடியே நாஞ்சிலாருக்கும், முரசொலி மாறனுக்கும் புரிந்துவிட்டது. தொலைபேசி ரிசீவரைக் கீழே வைத்தவுடன் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் நாவலருக்கோ அல்லது செயற்குழு பொதுக்குழுவுக்கோ வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தைத் தர இயலாது என்றும் நடந்தது நடந்ததுதான் என்றும் மறுபரிசீலனைக்கே இடமில்லையென்றும் இருவரிடமும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
ஒரு நொடியில் எண்ணத்தை மாற்றிக் கொண்ட எம். ஜி. ஆரின் செயலைக் கண்டு வியப்பும் வேதனையுமுற்ற நாஞ்சிலாரும் மாறனும் நேரே செயற்குழுவுக்கு வந்து நடந்ததை விளக்கினார்கள். வேறு வழியில்லாமல் கழகக் கட்டுப்பாடு காக்கும் நோக்கத்துடன் செயற்குழு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது: "கழக நலனுக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் வருத்தம் தெரிவித்து கழகம் பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்தும்கூட, அவர் அதனைப் பயன்படுத்திக்கொள்ளாதது வருந்தத்தக்கதாகும்.
எனவே அவர், கழகத்தின் ஒழுங்குமுறைகள் குலையும் அளவுக்கு நடந்து கொண்டதற்காக பொதுச்செயலாளர் அவர் மீது கழகசட்ட திட்டவிதி 31-ன்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்தச் செயற்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு இந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழுவுக்குப் பரிந்துரை செய்கிறது."
மறுநாள், பொதுக்குழு கூடியது. அன்று காலை பெரியார் அவர்கள் அளித்திருந்த செய்தியாளர் பேட்டியொன்று தினமணி முதலிய ஏடுகளில் வெளிவந்திருந்தது. அந்தச் செய்தியில் பெரியார் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது: "நேற்று (12-10-72) என்னைச் சந்தித்த சில பிரமுகர்கள் நான் தலையிட்டு சமரச முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். அதன்பேரில் நான் எம். ஜி. ஆரைக்கூப்பிட்டு அனுப்பினேன். அவர் இன்று காலை (13-10-72) ஒன்பது மணிக்கு என்னை வந்து சந்தித்தார்.
"பிறர் பரிகாசம் செய்வார்களே; இது ஏன் இப்படி நடந்தது? நடக்கலாமா?" என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். "என்மீது தவறு இல்லை. தி. மு. க. தலைமைதான் சரியாக நடந்து கொள்ளவில்லை" என்று அவர் பதில் சொன்னார். "பொது மேடையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி நீங்கள் பேசியது சரியல்ல என்றுதான் நானும் கருது- கிறேன். கட்சிக் கட்டுப்பாடு, ஆட்சி நலன் கருதியாவது நீங்கள் சொன்னதை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவிப்பது நல்லது என்பதே என் அனுபவம்.
அப்படிச் செய்யுங்கள்!" என்று எம். ஜி. ஆருக்கு நான் அறிவுரை கூறினேன். அவர், தன்னுடைய நிலையை விளக்கி, என்னுடைய யோசனையை நண்பர்களுடன் கலந்து பேசி ஆலோசித்து முடிவு செய்வதாக பதில் சொல்லிவிட்டுச் சென்றார். எம். ஜி. ஆரிடம் என் யோசனையைக் கண்டிப்பாகவே நான் சொன்னேன். ஏன் தகராறு செய்து கொள்கிறீர்கள் என்று கேட்டேன். தாமிரப்பத்திர விருதை என்னிடம் நேரில் வழங்குவதற்காக முதலமைச்சர், இன்று காலை 11 மணிக்கு என்னைச் சந்தித்தார்.
கட்சி ஒற்றுமை, ஆட்சி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சி பிளவுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். என் யோசனையை அவர் ஏற்றுக்கொண்டார்." பெரியார் அவர்களின் இந்த அறிவிப்பு அக்டோபர் 14 -ந் தேதி ஏடுகளில் வருவதற்கு முன்பு 13-ந் தேதி அவர் என்னிடம் நேரில் கூறியவாறுதான் நாஞ்சிலாரையும் மாறனையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபடுவதற்கு அனுப்பி வைத்தேன்.
அவர்கள் எடுத்த முயற்சி இறுதிக் கட்டத்தில் எப்படித் திசை மாறிக் கவிழ்ந்தது என்பது குறித்து செயற்குழுவில் இருவரும் அறிவித்தார்கள். செயற்குழுவைத் தொடர்ந்து மறுநாள் பொதுக்குழு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர் கூறியதாக ஒரு செய்தி "சுதேசமித்திரன்" தினசரி இதழில் வெளியாகியிருந்தது. "கழகத்திலிருந்து நிரந்தரமாகத் தன்னை நீக்கினால் தி.மு.க. தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகும்" என்று எம்.
ஜி. ஆர். அறிவித்ததாக அந்தச் செய்திக்கு தலைப்பு தரப்பட்டிருந்தது. அந்தச் செய்திக்குத் தன்னுடைய மறுப்பைத் தந்தி மூலம் அந்தப் பத்திரிகைக்கு எம். ஜி. ஆர். தெரிவித்துவிட்டு, அந்தத் தந்தியின் பிரதிகளை எனக்கும் நாவலருக்கும் அனுப்பியிருந்தார். அந்தத் தந்தியாவது, "தங்கள் பத்திரிகையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் பக்கத் தலைப்பையும் அதற்குரிய செய்தியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கழகத் தலைவர்களைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ, கழக உறுப்பினர்- களைப் பற்றியோ நான் அவ்வாறு கூறவில்லை.
உடனடியாக இதர ஏடுகள் வெளியிட்டதுபோல் நான் சொன்னதைப்பற்றி சரியான செய்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்." இதிலிருந்து என்ன புரிகிறது? மதுரை மாநாட்டில் அவர் பேசிய போதும், கடைசியாக "சுதேசமித்திரன்" செய்திக்கு மறுப்பு தெரிவித்தபோதும் தி. மு. க. வில் ஊழல் என்பதற்காக அவர் இப்படியெல்லாம் கட்டுப்பாடு கடந்து நடக்கவில்லை யென்பதும், அவரது சொந்த விவகாரங்கள் காரணமாக ஆட்டுவிக்கப்பட்டார் என்பதும், அதனால் ஏற்பட்ட விளைவுகள்தான் அவரது முரண்பட்ட நடவடிக்கைகள் என்பதும் தெளிவாகிவிட்டன!
எம். ஜி. ஆர். மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு செயற்குழு நிறைவேற்றிய பரிந்துரைத் தீர்மானம் பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம் 310 பொதுக்குழு உறுப்பினர்களில் கூட்டத்தில் கலந்து கொண்டோர் 277 உறுப்பினர்கள்! அந்த 277 உறுப்பினர்களும் செயற்குழுவின் முடிவை ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றினர். அந்த நிகழ்ச்சி குறித்து யு.என்.ஐ. என்ற செய்தி நிறுவனம் பின்வருமாறு செய்தி வெளியிட்டது: "எம்.ஜி.ஆர்.
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்திற்கு 310 பேர்களைக் கொண்ட பொதுக்குழுவில் இன்று வந்திருந்த 277 பேர்களில் எதிர்ப்புக் குரல் ஒன்றுகூட எழவில்லையென்பது பார்வையாளர்களுக்கு வியப்பாக இருந்தது." இப்படி ஜனநாயக முறைப்படி ஒரு கட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, எம்.ஜி.ஆர் பெயரால் உள்ள மன்றத்தினர் ஆங்காங்கு அராஜகம் நடத்திடத் தூண்டிவிடப்பட்டனர். பஸ்கள், லாரிகள் வழிமறிக்கப்பட்டன.
கொளுத்தப்பட்டன. பயணிகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்தச் செய்திகளையெல்லாம் கேள்வியுற்று அக்டோபர் 14-ஆம் நாள் விழுப்புரத்தில் பேசிய பெரியார் அவர்கள்; "சினிமாக்காரர்கள், ரசிகர்கள் என்ற பெயரால் இப்படி ரகளை செய்கிறார்கள். இதுமாதிரி நடக்குமென்று நான் முன்பே கூறியிருக்கிறேன். தி.மு.க.வில் வெளி ஆட்களால் ரகளை வராது உள்ளேயிருப்பவர்களால்தான் வருமென்று கூறியிருக்கிறேன். சமரசமாகப் போங்கள் என்று எவ்வளவோ கூறினேன்.
முடியாது என்று எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த கழகக் கொடிகளையெல்லாம் ரசிகர்கள் அசிங்கப்படுத்துவது கேவலமான செயலாகும். இந்த நேரத்தில் அனைவரும் தி.மு.கழகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் தி.மு.கழகத்தை ஏன் ஆதரிக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை முடிந்த வரையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதற்காகத்தான் அவர்களை ஆதரிக்கிறேன்.
கழக அரசு, பலவிதங்களில் ஏழைகளுக்கு நன்மை செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு தேவையான அளவு செய்து வருகிறது" என்று உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அக்டோபர் 15-ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் பொதுக்குழு முடிவுகளை விளக்கி, பொதுச் செயலாளர் நாவலர் தலைமையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய தலைமை உரையின் சுருக்கம் இதோ: "எம்.
ஜி. ஆர். அவர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தாலேதான் மிக வருத்தத்தோடு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. சாதாரணமானவர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கூப்பிட்டுப் பேசியே சரிசெய்து விடலாம். கழகத்தின் முக்கியப் பொறுப்பிலே இருக்கிற எம். ஜி. ஆர். கட்டுப்பாட்டை மீறினால் கழகத்தின் நாணயத்தை - லட்சோப லட்சம் தொண்டர்களின் நல்லுழைப்பை மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள் என்பதால் தான் நடவடிக்கை எடுத்தோம்.
ஒரு குவளை தண்ணீர் வெதும்பினால் அண்டா தண்ணீரை ஊற்றலாம். அண்டா தண்ணீர் வெதும்பினால் குளத்து நீரை ஊற்றலாம்; குளமே வெதும்பினால் கடல் தண்ணீரை ஊற்றலாம். கடல் தண்ணீரே வெதும்பினால்? கட்டுப்பாட்டை மீறுவோர் யாரானாலும் கழகம் நடவடிக்கை எடுக்கும். இவர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்றவர்களுக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா என்று கேட்கமாட்டார்களா? ஒரு கணவனும் மனைவியும் நடுரோட்டிலே இதைத்தான் பேசலாம்-வீட்டுக்குள்ளே பேசத்தக்கவை இவை இவைதான் என்பதற்கு வரைமுறை இருக்கிறது.
வீட்டு விஷயங்களை எவளும் வீதிக்குக் கொண்டு வரமாட்டாள். அப்படிக் கொண்டு வருபவளை எவனும் மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான். எம். ஜி. ஆருக்கு நம்முடைய கணக்கின்மேல் இதுவரை இல்லாத சந்தேகம் இப்போது வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் கணக்கை மன்றத்தில் வைக்க வேண்டுமென்று 69-ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றியவர் கலைஞர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத, இந்திரா காந்தியே நிராகரித்த அந்தச் சட்டத்தை நிறைவேற்றி அதன்படி கணக்கும் தரப்பட்டு வருகிறது.
ஆனால் எம்.ஜி.ஆர்.தான் முதலாண்டு மட்டுமே கணக்குத் தந்தாரே தவிர, கடந்த இரண்டாண்டாகக் கணக்குத் தரவில்லை. 13 தடவை நோட்டீஸ் அனுப்பியுங்கூட தரவில்லை." தலைமை உரையை அடுத்துப் பேசிய அம்மையார் அமைச்சர் சத்தியவாணிமுத்து பின்வருமாறு குறிப்பிட்டார்: "கழகத்தை அழிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். நினைக்கிறார். ஆனால் தன்னை அறியாமல் கழகத்தை அழிப்பதாக எண்ணிக்கொண்டு அவர் தன்னையே அழித்துக் கொள்கிறார். சம்பத் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியபோது கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்று நானும் மற்றவர்களும் சம்பத்திடம் சமாதானத்திற்குச் சென்றோம்.
அதைப் போல இப்போதும் கழகத்திலிருந்து எம். ஜி. ஆர். இப்படி தவறாகப் பேசி செயற்குழுவினாலும், பொதுக்குழுவினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது தாம் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தால் என்ன என்று கேட்க நானும் மற்றவர்களும் சென்றிருந்தோம். அமைச்சர்களைப் பற்றி மட்டுமல்ல; கழகத்தின் செயலாளர்களைப் பற்றி எல்லாம் குற்றஞ்சாட்டினீர்களே! யாரை நீங்கள் குறை கூறாமல் விட்டீர்கள்? மறுபடியும் கட்சிக்கு வருபவர்களாயிருந்தால் இப்படியெல்லாம் பேசுவீர்களா என்று நான் எம்.
ஜி. ஆரைக் கேட்கிறேன். கழகத் தலைவரும், பொதுச் செயலாளரும் கதவு திறந்தே இருக்கிறது என்றார்கள். ஏன் வருத்தம் தெரிவித்திருந்தால் என்ன? பெரியாரே வருத்தம் தெரிவிக்கச் சொன்னாரே, ஏன் வருத்தம் தெரிவித்திருக்கக்கூடாதா? எங்களைப் பொறுத்தவரை கழகம் பெரிதா, எம்.ஜி.ஆர். பெரிதா என்றால் கழகம்தான் பெரிது. கழகத்தின் கிளைகளை எல்லாம் மாற்றுங்கள் என்கிறார். அதை மாற்ற நீங்கள் யார்? யாரால் கழகத்தை ரசிகர் சங்கமாக மாற்றி விட முடியும்?
கழகத்தைக் கலைக்க முயற்சி எடுப்பதன் மூலம் அவர் தன்னையே அழித்துக் கொள்ள நினைக்கிறார். நாங்கள் எல்லாம் செத்து மடிவோமே தவிர கழகத்தை அழிக்க விடமாட்டோம். யார் நினைத்தாலும் கழகத்தை அழிக்க முடியாது." இவ்வாறு திருமதி சத்தியவாணிமுத்து ஆவேச உரை நிகழ்த்தினார்.
