நெஞ்சுக்கு நீதி
செயற்குழுவின் சீற்றம் · 188 / 391
செயற்குழுவின் சீற்றம் மதுரையில் இருந்த என்னை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்தின் முன்னோடிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் மனக்குமுறலை வெளியிட்டு உடனடியாக நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் மீது நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். நானும் நண்பர் மதுரை முத்து அவர்களும் மதுரையிலிருந்து உடனடியாகச் சென்னை திரும்பினோம். அக்டோபர் 9-ந் தேதி மாலையிலேயே பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் சென்னை நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள்.
அக்டோபர் 10-ந் தேதி காலை தலைமைக்கழகத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இருபத்தி ஆறு பேர் கையெழுத்திட்ட ஒரு முறையீட்டுடன் என்னையும் பொதுச் செயலாளர் நாவலர் அவர்களையும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சந்தித்தார்கள். தலைமைக்கழகத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த குழு செயற்குழு. அந்தக் குழுவில், கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 31 பேர் உறுப்பினர்கள். அவர்களில் 26 பேர் என்னையும் நாவலரையும் நெருப்புப் பொறி பறக்கும் கண்களுடன் சூழ்ந்து கொண்டனர்.
அவர்கள் எங்களிடம் அளித்த முறையீடு வருமாறு:- அண்மையில் சில நாட்களாகக் கழகப் பொருளாளர் திரு. எம். ஜி. ஆர். அவர்கள் கழக சட்டத்திட்டத்திற்கு மாறாகவும், கழக அரசையும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களையும் குற்றம் சாட்டும் முறையில் கழகத்தையே இழிவுபடுத்திப் பேசி வருவதாலும், கழகச் செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் மட்டுமே பேசக் கூடியதும், மறுக்கப்படக் கூடியதுமான பிரச்சினைகளைப்பொது மேடையில் பேசி பொதுமக்களிடையே குழப்பம் விளைவித்து வருகிறார்.
மேலும் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் மதுவிலக்கு ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஆதரித்துப்பேசி, அந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவதற்கு ஒத்துழைத்திருந்தும் இப்போது அதனை எதிர்த்துப் பேசி வருகிறார். மேலும் கழகப் பொதுக்குழுவிலும் செயற் குழுவிலும் அவர் ஒரு தீர்மானத்தை கொண்டுவரப் போவ- தாகவும் அந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழு ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் பொது மக்கள் முன்னால் சென்று - பிரச்னையை எடுத்து வைத்துக் கழகத்தைச் சந்திப்பேன் என்றும் பேசியிருக்கிறார்.
அவருடைய இந்தப் போக்கு, கழக அமைப்பையும் பொதுக்குழுவையும் நமது ஜனநாயக முறையையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. ஆகவே கழகக் கட்டுப்பாட்டைச் காப்பாற்றவும் விதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர் மீது உடனடியாகத் தக்க நடவடிக்கையை எடுக்கப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்."
-இந்த முறையீட்டில் கையெழுத்திட்டவர்கள் திரு.டி.கே. சீனிவாசன், திரு. மதுரை முத்து, திரு, ஈ. ஆர்.கிருஷ்ணன் திரு. க. ராசாராம், திரு. ப. உ. சண்முகம், திரு. கே. டி. எஸ் மணி, திரு. நீலநாராயணன், திரு. எஸ். ஏ. இராசமாணிக்கம் திரு. எம். செல்வராஜ், திரு. எச். எல். முருகேசன், திரு. தோப்பூர் திருவேங்கடம், திரு. எஸ். எஸ். தென்னரசு, திரு. அழகியநம்பி, திரு. எம். எஸ். வெங்கடாசலம், திரு. இரா. இராசன், திரு. சாதிக்பாட்சா, திருமதி.
சத்தியவாணிமுத்து, திரு. க. அன்பழகன் (பேராசிரியர்) திரு. அன்பில் தர்மலிங்கம், திரு. மன்னை நாராயணசாமி, திரு. என். வி. நடராசன், திரு. பரூக் மரைக்காயர் (புதுவை முதல்வர்), திரு. ஏ. வி. பி. ஆசைத்தம்பி, திரு. து. ப. அழகமுத்து, திரு. காஞ்சி கல்யாணசுந்தரம், திரு. சி. வி. எம். அண்ணாமலை ஆகியோர் ஆவார்கள். முறையீட்டை எங்களிடம் அளித்ததோடு மாத்திரமல்லாமல் உடனடியாக எம். ஜி. ஆர். அவர்களைக் கழகத்திலிருந்து அறவே விலக்க வேண்டுமென்றும் செயற்குழு உறுப்பினர்களின் பெரும் பகுதியினர் வாதாடினார்கள்.
சூடு பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே நாவலர் அவர்களும், திரு. என். வி. என். அவர்களும் ஓர் அறிக்கையை சுருக்கமாகத் தயாரித்து எங்களிடம் படித்துக் காட்டினர். "தலைமைக் கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர். அவர்கள், அண்மைக்காலத்தில் கழகக் கட்டுப்பாடுகளை மீறியும், கழகத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகளின் மூலம் செயல்பட்டு வருவதால் அவர் இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பிலிருந்தும் மற்றும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் உட்பட எல்லாப் பொறுப்புக்களில் இருந்தும் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்."
அவர் பெயரில் விரைவில் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." நான் அந்த அறிக்கையின் வாசகத்தைக் கேட்டவுடன் சொன்னேன்; "இப்போதைக்குச் செயற்குழு உறுப்பினர்களின் முறையீட்டை பெற்றுக் கொண்டதாகவும், அது குறித்து எம்.ஜி.ஆர். அவர்களிடம் தலைவரும், பொதுச் செயலாளரும் பேசுவதாகவும் முடிவு செய்யப்பட்டதாகப் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தால் போதுமானது" என்று.
முதலில் மிக ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்த மதுரை முத்து, ஈ. ஆர். கிருஷ்ணன் போன்றவர்கள், என்னுடைய கருத்தை நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொண்டு, சலிப்புடன்; "ஏதாவது செய்யுங்கள்" என்று கூறி அமர்ந்தார்கள். நான் உடனே என். வி. என். அவர்களைப் பார்த்து, நிருபர்களை வரச் சொல்லி, சொல்லி அனுப்புங்கள் என்றேன். "நிருபர்களிடம் அறிக்கையை கொடுத்து விட்டேன். அவர்கள் போய்விட்டார்கள்" என்றார் என்.
வி. என். "ஏன் கொடுத்தீர்கள்? அறிக்கையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போதே யார் கொடுக்கச் சொன்னது?" -என்று வழக்கமாக என். வி. என். அவர்களிடம் காட்டும் உரிமை உணர்வோடு கோபித்துக் கொண்டேன். "நாவலர்தான் கொடுக்கச் சொன்னார்!" என்றார் என். வி. என். "என்ன நாவலர்?"
என்று நான் நாவலரைப் பார்த்தேன். "ஆமாம்-நான்தான் கொடுக்கச் சொன்னேன். நீங்கள் திடீரென்று மாறி இப்படி "சாப்ட்" (Soft) ஆகிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்துத் தான் உடனே கொடுக்கச் சொல்லி விட்டேன்!" என்றார் பொதுச்செயலாளர் நாவலர். அதைக் கேட்டதும், பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கரவொலி செய்தனர். "கழகக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்களை மன்னிக்க முடியாது!"
என்று உரத்த குரலில் நாவலர் அவர்கள் முழங்கினார். அவர் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும், பொதுச் செயலாளர் நாவலரும் ஒரு முடிவுக்கு வந்த பிறகு அதற்குக் கட்டுப்பட வேண்டியதுதானே எனது கடமை! அடுத்து, சிறிது நேரத்திற்கெல்லாம் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் எம். ஜி. ஆர். அவர்களுக்கு, விளக்கம் கேட்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதம் வருமாறு:- கழகத்தின் முன்னணித் தோழர்களில் ஒருவராகவும் கழகப் பொருளாளர் என்ற பொறுப்பிலும் உள்ள தாங்கள், அண்மைக்காலமாகக் கழகக் கட்டுப்பாடு-ஒழுங்கு முறைகளை மீறியும், கழகத் தோழர்களிடையே பிளவு உருவாக்கும் முறையிலும், கழகத்தின் கண்ணியத்துக்குப் பொதுமக்களிடையே இழுக்கு ஏற்படும் வகையிலும், கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையிலும் தாங்கள் செயல்படுவதும் பேசி வருவதும் கழகத்தின் பல்வேறு பொறுப்பிலுள்ள தோழர்களால் தலைமைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கழகத் தலைமைச் செயற்குழு-பொதுக்குழுக் கூட்டங்களில் முறைப்படி பேசி விவாதிக்க வேண்டிய கருத்துக்களைத் தாங்கள் வெளிப்படையாகப் பேசுவதுடன், அவை, கழகத்திற்கு எதிரானதும் ஊறு செய்யக் கூடியதுமான வகையில் இதழ்களில் வெளிவரும் நிலைமைகளையும் உருவாக்கி வருகிறீர்கள். எல்லா இதழ்களிலும் பரவலாக நாள்தோறும் வெளியிடப்படும் தங்கள் முறைகேடான பேச்சுக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பது தலைமைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது.
மதுவிலக்குக் கொள்கை பற்றிக் கோவையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. இதனைத் தாங்களும் உடனிருந்து நிறைவேற்றியிருப்பதுடன், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாகத் தாங்கள் விளக்கமாகப் பொதுக்குழுவில் பேசியுமிருக்கிறீர்கள். இந்தத் தீர்மானத்தின் பேரில் கழகமும் கழக அரசும் மேற்கொண்ட செயல்முறைகளைத் தாங்கள் இத்தனை நாள் கழித்து பகிரங்கமாகக் கண்டித்துப் பேசியிருக்கிறீர்கள்.
இது, கழகக் கட்டுப்பாட்டையும், பொதுக்குழுவின் முடிவின் பேரிலும் கழகமும் கழக அரசும் மேற்கொண்ட செயல்முறைகளை அவதூறாகப் பேசுவதாகவும் அமைவதாகத் தலைமைக்கழகம் கருதுகிறது. மேலும் 8-10-72 அன்று சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தாங்கள் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப் போவதாகவும், அந்தத் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறாமற் போகுமானால், அந்தத் தீர்மானத்தைப் பொது மக்கள் முன்னிலையில் வைத்து, மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்து வெளியில் ஆதரவு திரட்டப் போவதாகவும் பேசியிருக்கிறீர்கள்.
பொதுக்குழுவில் எந்த ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கும் அதன் உறுப்பினரான யாருக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், அப்படிக் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேறாமற் போகுமானால், பொதுக்குழுவின் முடிவுக்குக் கட்டுப்படவோ அடங்கவோ மறுத்து அதே தீர்மானத்தை பொதுமக்களிடையில்-அதாவது கழகத்துக்கு வெளியே-வலியுறுத்துவேன்-ஆதரவு தேடுவேன் என்று பகிரங்கமாகத் தங்களைப் போன்ற முக்கியப் பொறுப்பில் உள்ள தோழர் அறிவிப்பது கழகக் கட்டுப்பாடு-ஒழுங்கு முறை-கழகம் வளர்க்க விரும்பும் ஜனநாயக அடிப்படை ஆகியவைகளைப் புறக்கணிக்கத் துணிந்துவிட்ட செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
மேலும் இவை போன்று அடிக்கடி தங்களால் கழக நன்மைகளுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசப்பட்டு வரும் கருத்துக்கள், கழகத் தோழர்களிடையில் கட்டுப்பாடு இன்மையும் பொதுமக்களிடையில் கழகத்தைப் பற்றித் தவறான இழிவான எண்ணமும் உருவாக ஏதுவாகிறது என்று தலைமைக் கழகம் கருதுகிறது. எனவே, இவை போன்ற காரணங்களாலும், கழகத் தோழர்களிடையே குழப்பமும், பொதுமக்களிடையே கழகத்திற்கு இழுக்கும் நேர்வதைத் தடுக்கும் வகையில் தங்களை இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பு மற்றும் சாதாரண உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக விலக்கி (சஸ்பெண்ட்) வைப்பதுடன் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே தங்களை ஏன் அறவே கழகத்திலிருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் இந்தக் கடிதம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்குத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் விளக்க-சமாதானங்களை தெரிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
முன்கூட்டி அறிவித்திருந்தபடி கழகத்தின் இதயம் போன்று விளங்குகிற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அக்டோபர் 12-ஆம் நாள் சென்னையில் தொடங்கின. இதற்கிடையே நாஞ்சில் மனோகரன் (நாஞ்சிலார்), முரசொலி மாறன் ஆகிய இருவரும் எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்துக் கழகத்தில் பிளவு ஏற்படுத்தாமல் ஒன்றுபட்டுப் பணியாற்றிட வழி காணுமாறு வலியுறுத்தினார்கள். அந்த அடிப்படையில் அக்டோபர் 12 செயற்குழுவில் பேசிய நாஞ்சிலார் அவர்கள், "எம்.ஜி.ஆர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்து தவறுதான் என்றாலும் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி செயற்குழு யோசிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொண்டு அவ்வாறு எம்.ஜி.ஆர். அவர்கள், செயற்குழுவினரிடமும் பொதுக்குழுவினரிடமும் வருத்தம் தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தரலாம் என்றும் குறிப்பிட்டேன். இறுதியாக செயற்குழு உறுப்பினர்களும் அந்தக் கருத்துக்கு ஒப்புதல் தந்தனர்.
ஆனால்...நடந்தது என்ன?
