நெஞ்சுக்கு நீதி
கட்டுப்பாடு மீறிய காரியங்கள் · 187 / 391
கட்டுப்பாடு மீறிய காரியங்கள் ஆகஸ்டு 5, 6 ஆகிய நாட்களில் மதுரை மாவட்ட மாநாடு முரசொலி மாறன் தலைமையில் நடைபெற மாவட்டச் செயலாளர் நண்பர் மதுரை முத்து அவர்களால் ஏற்பாடுகள் தொடங்கப் பட்டன. மாநாட்டின் திறப்பாளர், மாணவர்களை இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தட்டியெழுப்பிய அடலேறுகளில் ஒருவரான எல். கணேசன். அந்த மாநாட்டுக்குச் சில நாட்களுக்கு முன்பு கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை வந்து வீட்டில் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பில் அவர் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினார். அவருடன் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க விரும்புவதாகவும், அந்தப் பெண்மணி மதுரை மாநாட்டுக்கு வரவேண்டுமென்றும்; மாநாட்டு மேடையிலேயே அந்தப் பெண்மணிக்கு முன்வரிசையில் இடம்தரவேண்டுமென்றும், அதுகுறித்து மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் மதுரை முத்து அவர்களுக்கு கழகத் தலைவர் என்ற முறையில் நான் கட்டளையிட வேண்டுமென்றும் எம்.ஜி.ஆர்.
வலியுறுத்தினார். "ஏ, அப்பா! திராவிடர் இயக்கம் இதையெல்லாம் தாங்காது-கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள்!" என நான் அவரிடத்தில் விளக்கமளித்தேன். "நண்பர் முத்து அவர்களை உங்களுக்குத் தெரியாதா என்ன-உங்களுக்குத் தங்க வாள் பரிசளிப்பு விழா நடத்தியவராயிற்றே; அதனால் அவரிடமே இதுகுறித்துப் பேசுங்கள். அவரும் என்னைப் போலவேதான் கருத்து சொல்வார். ஒத்துக்கொள்ள மாட்டார்!"
என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தேன். எம்.ஜி.ஆர். அவர்கள் பிரச்சினையை அத்துடன் விடாமல் மதுரை முத்து அவர்களுக்கே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் பேசியிருக்கிறார். முத்து அவர்கள் எம்.ஜி.ஆரிடம் மிகவும் கண்டிப்பாக "அப்படியெல்லாம் யாரையும் அழைத்து வந்து மேடையில் உட்காரவைப்பதென்றால் அவர்களை மாநாட்டுப் பந்தல் முகப்பிலே நிறுத்திவிடுவேன்- அனுமதிக்க மாட்டேன்!"
என்று கூறிவிட்டார். எம்.ஜி.ஆரின் அந்த யோசனைக்கு இலட்சிய நடிகர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களும் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விட்டார். தலைமைக் கழக அளவில் நானோ, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களோ, பேராசிரியர் போன்றவர்களோ எம்.ஜி.ஆரின் அந்த வேண்டுகோளை ஏற்காத நிலையிலும்-கழக முன்னணித் தளபதிகளான மதுரை முத்து போன்றோர் கடுமையாக எதிர்த்த நிலையிலும் எம்.ஜி.ஆர்.அவர்கள் அந்தப் பெண்மணியாம் கதாநாயகி நடிகையை மதுரை மாநாட்டுக்கு அழைத்து வருகிற எண்ணத்தைக் கைவிட்டு விட்டார்.
ஆனாலும் அவர் மனத்தில் ஏற்பட்ட ஏமாற்றம்; வெறுப்புணர்வின் வடிவம் கொண்டுவிட்டது என்றே அவரது பிற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின. சினிமாப் படங்களில் நடித்துக் கொண்டே அமைச்சராக வேண்டுமென்றார். படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு அமைச்சராவதில் எந்தத் தடையுமில்லையென்று கூறினேன். அதன் காரணமாகவும் அவர் உள்ளத்தில் புகைச்சல் இருந்தது. அதைத் தொடர்ந்து மதுரை மாநாட்டிலும் அவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதால் மேலும் கோபம் கொண்டிருந்தார்.
இதற்கிடையிலேதான் கழகத்தில் பிளவு ஏற்படுத்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் அவர்கள் எம். ஜி. ஆர். அவர்களைப் பயன்படுத்தும் முயற்சியிலே ஈடுபட்டார். மத்திய அமைச்சர்களுக்கும் எம். ஜி. ஆர். அவர்களுக்கும் இடையே இருந்த சில ரகசியத் தொடர்புகளைப் பற்றி கழகப் பிரமுகர்களில் ஒருவரான சேலம் மாவட்டக் கழக அவைத் தலைவர் எஸ். எஸ். எம். சுப்பிரமணியம் அவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது நண்பருக்கு ஒரு கடிதம் எழுதி அதனை எதிர்க்கட்சிப் பத்திரிகையொன்றில் வெளியிடுமாறு குறிப்பிட்டிருந்தார்.
ரகசியத் தொடர்பு என்பது அந்நியச் செலாவணிச் சிக்கல், வருமான வரிச் சிக்கல் போன்றவைகளாகும். எஸ். எஸ். எம். சுப்பிரமணியத்துக்கும் எம். ஜி. ஆருக்கும் இருந்த பகையில் அவர் அப்படியொரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் எப்படியோ வெளியாகி எங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. எஸ். எஸ். எம். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ரகசியத் தொடர்பு மர்மங்கள் உண்மையானவைதான் என்பதை காலதாமதமாகத்தான் எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது!
இருப்பினும் அந்த ரகசியத்தைக் கழகத் தலைமைக்குத் தெரிவிக்காமல் எதிர்க்கட்சி ஏட்டில் செய்தி பரப்பிட எஸ். எஸ். எம். அவர்கள் முயன்றது தவறு என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. 14-6-72 அன்று சென்னையில் நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழுவில் அது குறித்து எஸ். எஸ். எம். சுப்பிரமணியம் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. கடிதம் எழுதியதை அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆர்.
அவர்கள் குறுக்கிட்டு, "கட்சியில் நான் இருக்க வேண்டுமா? எஸ். எஸ். எம். இருக்க வேண்டுமா?" என்பதை முடிவு செய்யுங்கள் என்று பேசினார். அவரது வற்புறுத்தலின் காரணமாகப் பின்வரும் தீர்மானத்தைச் செயற்குழு நிறைவேற்றியது. "கழகக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பாக சேலம் மாவட்ட தி. மு. க. அவைத் தலைவர் எஸ். எஸ். எம். சுப்பிரமணியம் நடந்து கொண்டது பற்றிக் கூறப்பட்ட புகாரைச் செயற்குழு விசாரித்தது. அந்த விசாரணையின்போது திரு.
எஸ். எஸ். எம். சுப்பிரமணியம் தந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை என்ற காரணத்தாலும், அவர் தனது குற்றங்களை ஏற்றுக்கொண்ட காரணத்தாலும், அவரைக் கழகத்தின் சாதாரண உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் ஐந்தாண்டு காலத்திற்கு விலக்கி வைப்பதென்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது."
எம். ஜி. ஆர். மீது எஸ். எஸ். எம். அவர்கள் ஒரு அபாண்டத்தைக் கூறி, அதனையும் எதிர்க்கட்சி ஏட்டிலே வெளியிட முயற்சித்தார் என்றுதான் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் நம்பினர். கால ஓட்டத்திலேதான் அந்தக் குற்றச்சாட்டு அபாண்டமில்லை - உண்மையானது என்பது அனைவருக்கும் தெளிவாயிற்று. ஆனால் அந்த நேரத்தில் யாருக்கும் உண்மையொன்று மர்மமான இருட்டில் மறைந்து கொண்டிருந்தது தெரியாமல்தான் போய்விட்டது. ஜூன் மாதத்தில் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஆகஸ்டில் மதுரை மாநாடு!
அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் எம். ஜி. ஆர். ஆனால் அவர் எண்ணம் ஈடேறாத மனக் குறையுடன் கலந்து! கொண்டார்! பின்னணியில் மத்திய அரசின் மிரட்டல்கள்! எங்களுக்கு இதெல்லாம் அப்போது இவ்வளவு அப்பட்டமாகத் தெரியாது! ஏதோ எங்கிருந்தோ ஒரு சதி உருவாகிறது என்பது மட்டும் மின்னல் கீற்றுப் போலத் தெரிந்ததே தவிர, விவகாரங்கள் முழு வெளிச்சத்திற்கு வரவில்லை. துரோகம் செய்யத் துணிந்து விட்டவர்கள், தங்களைப் பூரணமான விசுவாசிகளாகக் காட்டிக் கொள்வார்கள் அல்லவா?
ஏசுநாதருக்குத் துரோகம் செய்த ஜுடாஸ் கூட அப்படித்தானே கடைசி நேரத்திலும் நடந்து கொண்டான்! மதுரை மாநாட்டில் எம். ஜி. ஆரின் பேச்சு மத்திய அரசுக்கு எதிரான போர் முழக்கமாக இருந்தது! கழக அரசு தூய்மையானது என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார்? "காங்கிரசார் இதனை ஊழல் ஆட்சி என்கிறார்களே; ஊழல் ஆட்சியா இது?"
என்று பொதுமக்களைப் பார்த்து மாநாட்டில் கேட்டார்! "இல்லை! இல்லை! என்ற பதில் முழக்கம் விண்ணைப் பிளந்தது! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு - இது ஊழல் ஆட்சி அல்ல!" என்று முடிவு கூறினார். மிக மிக விசுவாசி போலக் காட்டிக்கொண்ட அவர் மத்திய அரசை எப்படித் தாக்கிப் பேசி-மாநில சுயாட்சிக்காக முரசு கொட்டினார் என்பதையும் பார்ப்போம்! இதோ அந்தப் பேச்சின் ஒரு பகுதி:- ஏதோ இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்று யாரோ முயற்சி செய்வதாக நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள்.
இதுவரை நான் பேசாத பேச்சை - சொல்லாத சொல்லை இப்போது சொல்லும்படி அவர்கள் தூண்டிவிட்டிருக்கிறார்கள். அடுத்து நியாய பூர்வமாக எந்த ஆண்டில் தேர்தல், நடைபெற வேண்டுமோ அப்போது நடவாமல் அதை மீறி இடையில் தேர்தல் நடக்கும் நிலை உருவாக வேண்டும் என்று விரும்புவார்களானால்-மோகன் குமாரமங்கலமோ, சி. சுப்பிரமணியமோ அதற்குத் தூண்டிவிட்டிருந்தால், தாய்மார்களே, பெரியோர்களே, கழகத் தோழர்களே, நீங்கள் அதை அனுமதிக்கப் போகிறீர்களா?
அப்படி ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுமானால் மறுவினாடி ராணுவத்தையே தமிழ்நாடு சந்திக்கும். இந்த ஆட்சியை கலைக்க வேண்டுமென்பதற்கு உண்மையான காரணம் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கலைஞர் அவர்களிடம் முன்பிருந்த நிமிர்ந்த நடையில்லை; மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து பழகிவிட்டார். அவரது உடல்தான் குனிந்திருக்கிறதே தவிர உள்ளம் குனியவில்லை. தன்னை அடக்கிக் கொண்டு அடக்கத்தின் உருவாக இருக்கிறார்.
தனது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு யாரையும் ஏளனமாகப் பேசக் கூடாது என்ற அடக்க சுபாவத்தை மேற்கொண்டிருக்கிறார். இதெல்லாம் அண்ணா அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம்தான் காரணமாகும். "எம்.ஜி.ஆர். : மாநில சுயாட்சியை... மக்கள் : அடைந்தே தீருவோம்... எம்.ஜி.ஆர். : தமிழக அரசை... மக்கள் : காப்போம்! காப்போம்...! எம்.ஜி.ஆர். : கலைஞர் தலைமையில்... மக்கள் : வழி நடப்போம்..."
இப்படி ஆகஸ்டில் மதுரையில் பேசியவர், செப்டம்பரில் சில கூட்டங்களில் மெல்ல மெல்லத் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும், மத்திய அரசின் விருப்பத்தை முடித்து வைக்கவும் தலைப்பட்டார். அப்படிச் சில கூட்டங்களில் பேசியபோது கழகத்தினர் திகைத்தனர். பதைத்தனர். அக்டோபர் 8-ஆம் நாள் சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழாவும், எம்.ஜி.ஆர். "பாரத்" பட்டம் பெற்றமைக்கு பாராட்டு விழாவும் நடைபெற்ற போது ஒரு முடிவுக்கே வந்தவராக முன்னுக்குப் பின் முரணாகப் பேசி முடித்தார்.
அந்தக் கூட்டத்திற்கு மு. அரங்கநாதன், எம்.சி. தலைமை வகித்தார். பார்த்தசாரதி, எம். சி., ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளர் ஜார்ஜ், ஆலந்தூர் மோகனரங்கம், கே. ஏ. கிருஷ்ணசாமி, கோவை செழியன், ஆர்.எம்.வீரப்பன், நாஞ்சிலார், பேரவைத் தலைவர் கே. ஏ. மதியழகன் ஆகியோர் பேசியபின் இறுதியில் பேசிய எம். ஜி. ஆர். கூறியதாவது:- "திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ-என்ன என்ன பேச வைத்தார்களோ-அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன்.
அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்து வைத்துவிட்டு-பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன். யாரோ சொன்னார்கள்-மதுரை முத்து இந்திரா காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள் என்று! நான் கேட்டேன்-முதலமைச்சர் கருணாநிதி இன்றைய தினம் மதுரையில் அவரைப் பாராட்டுவதாக இருந்ததே என்றேன். என்னமோ தெரியவில்லை. வியாபாரம் இங்கே நடக்கவில்லை.
அங்கேதான் நடக்கும் என்று போய் விட்டதாகச் சொன்னார்கள். விவரம் 15-ந் தேதிக்குப் பிறகுதான் தெரியும். இப்படிக் குழப்பி விடுவதில் சில உண்மைகள் வெளிவரும். "எம். ஜி. ஆர். என்றால் தி. மு. க."-"தி. மு. க. என்றால் எம். ஜி. ஆர்." என்று சொன்னேன். உடனே ஒருவர்-நாங்கள் எல்லாம் தி. மு. க. இல்லையா? என்று கேட்டார். நான் சொல்கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்கு துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!
உனக்கு துணிவிருந்தால், நான்தான் தி. மு. க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் 'மட்டும்' தி. மு. க. என்றால் தான் கேள்வி! இதைக்கூட புரிந்து கொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தேவையற்ற பிரச்சினைகள். மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ளவேண்டும் என்று சொன்னார்.
இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்திற்குரியவர்கள்! முன்பொரு முறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்று! அண்ணாவை வழிகாட்டி என்று சொன்னேன். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்திற்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்திற்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம்.
ஆனால் கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.கழகத்திற்கு வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது. அப்போதும் இதே மதுரை முத்து 'தூக்கி எறிவோம்' என்று சொன்னார்.
தூக்கி எறிந்து பழக்கம்! ஆனால் யாரை என்றே தெரியவில்லை. கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா மக்கள் குரலே மகேசன் குரல் என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன்.
அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக் கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாத வாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும். கடைசியாக 'பணத்தோட்டம்' என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்திற்கு வந்தவன். கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம்.
பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.என். எனக்கும் கருணாநிதிக்கும் விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அபேதவாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன். ஒரு சமயம், கம்யூனிசக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரெயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால் நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன்.
இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்க வேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன். இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டிற்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்திற்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்து கொண்டபோது - நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயிண்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஐயா அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாட்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்திற்கு வாக்குத் தாருங்கள்; இன்னின்ன கொள்கையை ந
ிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா? கழகத்திற்கு வாக்கு தாருங்கள், இன்னின்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு-சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா? திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம்.
யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. யாருக்கோ என்னுடைய கேள்வி குழப்பத்தை உண்டாக்குகிறது. மந்திரிகள் - சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி. மு. கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது? ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா?
அதற்கு முன்னால் வந்ததா? இதைக் கேட்கக் கூடாதா? என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது? மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு! இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன்.
மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன். மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்ல வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம். 15-த் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்."
சென்னை பொதுக் கூட்டத்தில் எம். ஜி. ஆரின் இந்தப் பேச்சுக்குப் பிறகும் கழகத்தின் ரத்த நாளங்கள் புடைத்தெழாமல் இருக்க முடியுமா? முடியவில்லை! அதன் விளைவு?
