உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/புயல் புகுமுன்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

புயல் புகுமுன்! · 186 / 391

புயல் புகுமுன்! -ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் நாள் சென்னை லாயிட்ஸ் காலனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் எம். ஜி. ஆர் ; கழகத்தை நேரடியாகத் தாக்கிப் பேசினார். கழகத்தின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கக் கூடிய ஒருவர் செயற்குழுவிலோ பொதுக் குழுவிலோ தனது கருத்துக்களைச் சொல்லாமல் பொதுக் கூட்டமொன்றில் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறிப் பேசவேண்டிய திடீர் சூழ்நிலை எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

எந்தக் கட்சியிலும்-ஏன்; இப்போது எம்.ஜி.ஆரைத் தலைவராகக் கொண்ட கட்சியிலேகூட அவரது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுகிறவர்கள் அல்லது பேசுகிறவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு "விலக்கி விட்டோம்" என்ற பெட்டிச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். சென்னைக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். என்ன பேசினார், எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரங்களைப் பிறகு பார்ப்போம். அவர் இப்படிப்பட்ட ஒரு கலவரத்தைக் கட்சிக்குள் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புவரையில்கூட என்னைப் பற்றியும் கழகத்தைப் பற்றியும் எப்படி புகழ்ந்து கொண்டிருந்தார் என்பதை அறிந்து கொள்ளவேண்டியது மிக முக்கியம்.

"உலகம் சுற்றும் வாலிபன்" என்ற திரைப்படப் பிடிப்பிற்காக எம்.ஜி.ஆர். வெளிநாடு சென்றபோது நான் விமானநிலையம் சென்று அவரை வழியனுப்பி வைத்தது குறித்து "பொம்மை" என்ற பிரசித்தி பெற்ற கலைத்துறை இதழில் எம்.ஜி.ஆர். எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி இதோ: "அண்ணா அவர்கள் வந்திருந்து முன்பு மாலை அணிவித்த அதே விமானக் கூடத்தில் அண்ணாவைத் தேடினேன். அண்ணா இல்லை என்பது எனக்குத் தெரியாதா? நன்கு தெரியும்!

ஆனாலும் உள்ளத்திலிருந்த எண்ணம் 'அண்ணா வந்து என்னை வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமே' என்பது! நான் அந்தப் பேராசையோடு சுற்றிலும் பார்த்தேன்! சுற்றியலைந்த கண்களுக்கு முன் அதோ வருகிறார்! அதோ அருகில் வந்துவிட்டார்! போலீஸ் அதிகாரிகள் அவரை என் அருகில் அழைத்துவர உதவினார்கள்! ஆமாம்! கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா என்னை தேடி வந்தார்! கலைஞர் வந்தார்! அண்ணாவைப்போல் என்னைவிட வயதில் மூத்தவரில்லாவிடினும் அண்ணாவுக்குரிய தகுதியைப் பெற்ற கலைஞர் மாலையை என் கழுத்தில் அணிவித்தார்.

நான் உணர்ச்சிவயப்பட்டிருந்தபோதே அவர் தன்னைச் சமாளித்துக்கொண்டு அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்; வண்டியை நேராக விமானத்திற்கு அருகில் கொண்டு செல்லும்படி! நான் 'வேனில்' ஏற்றப்பட்டேன். வண்டி நகர்ந்தது. "கலைஞர் அண்ணா" விடம் ஏதேதோ பேசவேண்டுமென்று விரும்பினேன். இயலவில்லை. பெருத்த ஏமாற்றத்தோடும், வேதனையோடும் விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். தூரத்தில் அண்ணன் திரு.

எம்.ஜி.சி. மற்றும் பல பெரியவர்கள், அன்பர்கள், தோழர்கள் இருந்தனர். எல்லோரிடமும் சென்று என் வணக்கத்தைச் சொல்ல ஆசைப்பட்டேன்: இயலவில்லை. விமானத்தின் உள்ளே சென்று அயர்ந்து உட்கார்ந்தேன். பெருத்த ஏமாற்றம்! திடீரென வெளியே இருந்து போலீஸ் அதிகாரிகள் சிலர் விமானத்திற்குள் வந்தனர். கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா மீண்டும் என்னைத் தேடி வந்தார். என்னை ஆரத்தழுவினார். எங்கள் இருவர் கண்களிலும் நீர் மல்கின.

நான் புறப்படுவதைப் பற்றி அவரிடம் பேசியதுண்டு. ஆனால் குறிப்பிட்ட தேதியில் நான் புறப்பட இருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லவே இல்லை. முன்பு பேரறிஞரிடமும் இப்படித்தான் செய்தேன். அவரும் வந்தார். இப்போது இவரும் வந்தார். நான் சுமார் ஏழுவயதுப் பையனாக இருக்கும்போது என் தாயிடமிருந்து முதன் முதலாகப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேருவதற்காகப் புறப்பட்ட நாளன்று வாயிற்படிவரை நாங்கள் (நானும் என் சகோதரரும்) வருவதும், உடனே ஓடி கூடத்தில் அழுதபடி உட்கார்ந்திருந்த தாயைக் கட்டி அணைத்து அழுவதும் எங்களைப் பெரியவர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் செல்வதும் வாயிற்படியைத் தாண்டும்போது மீண்டும் ஓடித் தாயைக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழுவதுமாயிருந்த அந்தக் காட்சியினை இது இப்போது நினைவுறுத்தியது.

மனத்திலிருந்த பெரும் பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்ற உணர்வு! கடைசியில் என் அண்ணா நான் இருக்குமிடத்திற்கே கலைஞரின் உருவில் தேடிவந்து ஆசி கூறிவிட்டார் என்ற பெரும் ஆறுதல்... ஒரு பெருமூச்சு. அது எத்தனை பேர் என்னைக் கவனிக்குமாறு செய்துவிட்டது."

இப்படி எழுதிய எம்.ஜி.ஆர். தான்; தனது சங்கடங்களுக்காகவும் டெல்லியின் மிரட்டலுக்குப் பணிந்தும் என்னையே அண்ணாவுக்கு விரோதி என்று பேசவேண்டிய நிலைமைக்கு ஆளானார்! இன்னும் அவரது பேச்சுக்கள் சிலவற்றைப் பார்ப்பது அவசியம். அவற்றைப் படித்தால்தான் அவர் 1972 அக்டோபரில் சென்னையில் கழகக் கட்டுப்பாட்டை மீறிப் பேசியது எவ்வளவு முரண்பாடு கொண்டது என்பதும், அவரை டெல்லியிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளச் செய்யபட்ட ஒரு ஏற்பாடு என்பதும் தெளிவாகும்.

1971-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவருடைய பரங்கிமலைத் தொகுதியில் "கருணாநிதிபுரம்" என்று ஒரு பகுதிக்கு பெயரினைச் சூட்டி, அதற்கான பெயர்ப் பலகையினை அவரே திறந்து வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியது மறக்கக் கூடிய பேச்சா? "ஒரு நல்ல தோழரும், தொண்டரும், செயலாற்றலுடைய சிறந்த தலைவரும் குடிமகனுமான தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பெயரை இந்த குடியிருப்புப் பகுதிக்கு சூட்டி என்னை அழைத்துத் திறந்து வைக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.

இந்த விழாவிலே கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்- போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.

அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப் பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது. கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர்.

கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. இப்படிப் பிரபலப்படுத்தப் படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை-திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார். அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை.

தனக்கென ஒரு கொள்கை தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர். கொள்கைப் பிடிப்புக் காரணமாகச் சமயம்வரும்போது அண்ணாவுடனும் சரி, என்னுடனும் சரி, கலைஞர் வாதிடுவதற்கு ஒருபோதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது.

ஒருதடவை பாண்டிச்சேரியில் அவர் சுயமரியாதை இயக்கத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்தபோது அவரை தெருவில் தள்ளி அடித்து சாக்கடையில் வீசிவிட்டுப் போனார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து போய் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த வீட்டுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் யார் தெரியுமா? அவரை அடிப்பதற்கு யார் ஆட்களை அனுப்பினார்களோ அவர்களே உள்ளே இருந்தார்கள். அங்கிருந்து தப்புவதற்கு அவர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை விளக்க வேண்டியதில்லை.

இப்படியெல்லாம் அடிபட்டுத் தொல்லைகள் மிகத் தாங்கியவர் கலைஞர். கல்லக்குடி போராட்டத்தில் உயிரை வெல்லமாக நினைக்காமல் தண்டவாளத்தில் முதலில் படுத்தவர் கலைஞர். இந்தத் தியாகம் மிகுந்த அனுபவங்களை எல்லாம் பெறும்போது அவர் இப்படி ஒருநாள் தமிழகத்தின் முதல்வராக ஆகப் போகிறோம் என்று அப்படியெல்லாம் தொல்லைப்பட்டவரல்ல. தமிழ் காக்க வேண்டும்; தமிழ்மானம் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பல்லாண்டு காலம் ஓயாது உழைத்துச் செய்த தியாகத்தின் பலனாக இன்று அவரைத்தேடிப் பதவி கிடைத்திருக்கிறது.

சிலருக்குப் பதவி கிடைத்தால் நாடு குட்டிச்சுவராகி விடுகிறது. ஆனால் நமது கலைஞருக்கு பதவி கிடைத்ததால் நாடு வாழ்கிறது. ஏழை எளியவரின் நம்பிக்கை எல்லாம் அவரது விழிகளை நோக்கி உயர்கின்றன. கலைஞர் பெற்றுள்ள நல்ல அனுபவம், திறமை, செயலாற்றல், அறிவுணர்வுகள் எல்லாம் இந்தத் தமிழ் மண் நலம் பெறும்படி பரிமளிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பெரிய பொறுப்புக்களையும் வகித்து வரும் கலைஞர் அவர்கள் எத்துறையில் திரும்பினாலும் அத்துறை சிறப்படைகிறது.

எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் அவர். கட்சியின் ஒவ்வொரு தொண்டனையும் தலைவனையும் நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டு அவர் கழகத்தைச் சீராக நடத்திச் செல்கிறார். தமிழகத்தின் முதல்வர் என்னும் முறையில் நல்ல நிர்வாகத் திறமையோடு கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசாங்கத்தை நடத்திச் செல்கிறார் கலைஞர். எல்லாத் தரப்பினருக்கும் தேவை- யான நன்மைகளை உரிய நேரத்தில் செய்து வரும் ஒரே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.

எந்தக்கட்சியிலும் காணக் கிடைக்காத அருங்குணங்களைப் பெற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது அறிவாற்றலுக்கும் நல்ல பண்பாட்டுக்கும் அவருக்கு இப்போதுள்ள முதல்வர் பதவி மட்டும் போதாது. இன்னும் உயரிய பதவிகள் எல்லாம் அவரைத் தேடி வரும் காலம் விரைவில் வந்தே தீரும். இத்தகைய உயரிய மனிதரின் பெயரால்-கருணையும் நிதியும் கலந்திருக்கும் பண்பாளரின் பெயரால் இந்தப்பகுதி கருணாநிதி புரம் என்று அமையப் பெற்றது பெரும் பேறாகும்."

குடிநீர் வாரியத்தின் ஆண்டு விழாவும், பல்லவபுரம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவும் 1972 ஏப்ரல் 27-ந்தேதி நடைபெற்றது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். பேசியதாவது:- "என்னை இந்த விழாவிலே வாழ்த்துரை வழங்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருக்கிறார்கள். நான் வாழ்த்துகிறேன் என்றால் உங்கள் சார்பில் வாழ்த்துவதாகத்தான் இருக்கும். முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேச்சைக். கேட்கிறவர்களும்-நாகரிகம் தெரிந்தவர்களும் அத்தனைப்பேரும் வாழ்த்துரை வழங்குவார்கள்.

டாக்டர் கலைஞர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் அவரது கொள்கைகளை நிறைவேற்றித் தரும் பாங்கையும் - துணிவினையும் தமிழகம் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற உலக மக்கள் அத்தனைப் பேரும் பாராட்டிக் கொண்டிருக்கும் காலம் இது. டாக்டர் கலைஞர் அவர்கள் தி. மு. கழகத்தின் தலைவராக மட்டுமின்றி - இந்த நாட்டின் முதல்வராகவும் தமிழகத்தின் தொண்டனாகவும் - தோழனாகவும் - நண்பனாகவும் - ஆசானாகவும் - அமைச்சராகவும் பணியாற்றிக் கொண்டிருப்பதை எண்ணியெண்ணி வியக்கின்றவர்களில் நானும் ஒருவன்.

கட்டுக்கோப்பு குலையாமல் அதே நேரத்தில் ஆடம்பரமின்றி செய்து நமது தலைவரை யாரும் குறை கூறாமல் இருக்கத்தக்க விதத்தில் நடத்த வேண்டுமென்று சொன்னேன். இது பற்றி முதலமைச்சரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவரும், "நான்கூட கந்தப்பன் அவர்களிடம் பல்லவபுரத்தில் நடக்கும் விழாவுக்கு சென்னையிலே ஏன் போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று கேட்டேன்" என்றார்.

இப்படிப்பட்ட தலைவரைத்தான் சிலர் குறை கூறுகிறார்கள். அண்ணா அவர்கள் நம்மோடு இருந்து நம்மை சிந்திக்க வைத்தார். அதன்மூலம் கட்சியை வளர்த்தார். இன்று நமக்கெல்லாம் பதவியைத் தந்துவிட்டு மறைந்து விட்டார். அப்படிப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது என்னவோ - நினைத்தது என்னவோ - அவர் உயிரோடு இருந்தால் எதையெதைச் செய்வாரோ அவற்றையெல்லாம்கூட கலைஞர் அவர்கள் செய்து முடித்துக் கொண்டிருக்கிறார். அவரது உள்ளத்தில் இருக்கின்ற எழுச்சியைப் பற்றி அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது நான் அறிந்தேன்.

கலைஞர் அவர்கள் உள்ளத்தில் கொண்டிருக்கின்ற எழுச்சி, தமிழர்களுக்குத் தனது கடமையைச் செய்யவேண்டும் என்கிற துடிதுடிப்பு அவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் வாயிலாகவும் நான் அறிந்தேன். டாக்டர் கலைஞரின் திட்டம் - அண்ணா அவர்களின் கொள்கை-ஏழை எளியமக்களுக்கு உதவிகள் செய்யவேண்டும்-அவர்கள் வாழ்வு முன்னேற திட்டம் தீட்டப் பட வேண்டும் என்பதுதான். டாக்டர் கலைஞரின் அமைச்சரவை செய்து வருகின்ற நல்ல பல காரியங்களை எண்ணி எண்ணி நாடு மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட நமது தலைவர் - முதல்வர் டாக்டர் கலைஞர் பல்லாண்டு வாழ வேண்டும் - பல்லாண்டு ஆள வேண்டும்." எம். ஜி. ஆர். அவர்கள் "பாரத்" பட்டம் பெற்றமைக்காக தி.மு.க. தலைமைக் கழகச் சார்பில் 1972-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற பாராட்டு விழாவில் நன்றி தெரிவித்து எம்.ஜி.ஆர் பேசியதாவது:- "கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பினைப் பற்றி இங்கே கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

முரட்டுக் கதரைப் போட்டுக் கொண்டு கலைஞர் அவர்களை என் பக்கம் இழுக்க முயன்றேன் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதில் நான் அடைந்த தோல்வியை மகிழ்வோடு ஒப்புக் கொள்கிறேன். நான் முதன் முதலாகப் பெற்ற பட்டம் புரட்சி நடிகர் பட்டம். அந்தப் பட்டத்தை எனக்கு முதன் முதலாகத் தந்து பாராட்டியவர் இன்று கழகத் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருக்கும் கலைஞர் அவர்கள். அன்றே எனக்குப் பட்டம் தரும் அளவுக்குத் தகுதி படைத்திருந்த அவரிடம் நான் என் தோல்வியை ஒப்புக்கொள்வதில் மகிழ்ச்சியே அடைகிறேன்: இன்று கலைஞர் அவர்களை எந்த மாநிலத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சந்தித்துப் பேச விரும்புகிறார்கள்.

இந்த நாட்டில் மட்டும் என்றில்லை. நான் சிங்கப்பூர் சென்றிருந்த போதும், பினாங்குக்குச் சென்றிருந்தபோதும் அங்குள்ள அமைச்சர்களும் மக்களும் முதல்வர் கலைஞர் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசத் தவறவில்லை. அந்த அளவுக்கு கலைஞர் அவர்களை வெளிநாட்டினர் கூட பெருமையோடு நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமில்லை, கடல்கடந்துள்ள மக்களும் கலைஞர் அவர்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார்கள் என்பதை அண்மையில் நான் வெளிநாடு சென்றபோது அறிந்தேன்.

எனக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டம் அளித்தபோதே கலை

ஞர் அவர்களைப்பற்றி நான் சொன்னது - திருவாரூர் மு.கருணாநிதி என்ற சொற்களை தி.மு.க. என்று விளக்கிக்கூறி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அவருக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னேன். இன்று டாக்டர் கலைஞர் அவர்களே என்று குறிப்பிடுகிறேன் என்றால், ஏற்பட்டிருக்கின்ற பெரிய மாற்றத்தை - சிறப்பான வளர்ச்சியை பார்க்கவேண்டும். கல்லக்குடி போராட்டத்தில் தன் உயிரையே பணயமாக வைத்தவர் கலைஞர் அவர்கள். அன்று உயிரையும் பணயமாக வைத்துப் போராடிய கலைஞர் தான் இன்று கழகத்தின் தலைவர்.

இறந்தாலும் லட்சியத்தோடு - கொள்கையோடுதான் நாம் இறக்கப் போகிறோம். மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. கழகத்தை வளர்ப்பதற்காக என்றென்றும் பாடுபடுவோம்." -இப்படி விழாக்கள், நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்த எம். ஜி. ஆர். அவர்கள் மதுரையில் நண்பர் முத்து அவர்கள் 1972 ஆகஸ்டில் நடத்திய கழக மாநாட்டில் கலந்து கொண்டபோது ஒரு வீரமிக்க உரையே ஆற்றினார்.