உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/துரோகத்தின் தொடக்கம்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

துரோகத்தின் தொடக்கம்! · 185 / 391

துரோகத்தின் தொடக்கம்! வலிவோடும் பொலிவோடும் கழகம் வளர்ந்து கொண்டிருந்தது. நாட்டு மக்கள் - ஏன்; பிற நாட்டாரும் நல்லறிஞர் பெருமக்களும் பாராட்டுகிற அளவுக்கு கழக ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கழகம் நாள்தோறும் புதுமுறுக்குடன் வீறு கொண்டெழுவது கண்டு, கழகத்தின் துணையோடு மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரவும் - பதவியை நிலைநிறுத்திக் கொள்ளவும் வாய்ப்பு பெற்ற இந்திரா காங்கிரஸ் மூலவர்கள் இனித் தமிழக மாநில ஆட்சியில் தாங்கள் ஆதிக்கம் கொள்ள முடியாது என்று கருதி கழகத்தைப் பிளக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர்.

அப்படியொரு விஷவிதையை திருமதி இந்திரா காந்தி அவர்களின் மனத்தில் தூவியவர் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலமாகும். கழக ஆதரவால் நாடாளுமன்ற உறுப்பினராக ஆன அவர் அப்படி நன்றி தெரிவிக்க ஆரம்பித்தார். 1972-ஆம் ஆண்டு பிறந்தது - இந்த ஆண்டின் நிகழ்ச்சிகளில் முக்கியமானவைகளை மட்டும் சிலவற்றை பூர்வாங்கமாகத் தொகுத்துத் தருகிறேன். சென்னை சிம்சன் கம்பெனி தொழிலாளர்களிடையே ஒரு பிரச்சினை எழுந்தது. அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்த காட்டூர் கோபால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு எதிராக ஒரு கோஷ்டி செயல்பட்டது.

அவர்களுக்குப் பின்னால் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் இருந்து தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார். சென்னையிலே வந்து "நான் அமைச்சர் என்ற முறையில் அல்ல; தொழிற்சங்கத் தலைவர் என்ற முறையில் பேசுகிறேன்" என்ற ரீதியில் பேசினார். அதுகுறித்து கருத்து கூறும்போது நான், "மாநில விஷயங்களில் மத்திய அமைச்சர்கள் இருக்கின்ற நிலைமைகளை இருதரப்பிலும் தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு ஆவேசமாகப் பேசிவிடுவது அவர்கள் வகித்துவரும் பெறும் பொறுப்புக்கு அழகல்ல" என்று கூறினேன்.

திரு. மோகன் குமாரமங்கலத்தின் தூண்டுதலின் விளைவாக சில தொழிற்சங்கத் தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட்டார்கள். அதன்பேரில் டெல்லி சர்க்கார் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த காடில்கர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டெல்லிக்கு வந்திருக்கும் தொழிற்சங்கத் தலைவர்களையும், தமிழக தொழிலாளர் நல அமைச்சரையும் வைத்து சிம்சன் விவகாரம் குறித்து பேசவேண்டியிருப்பதால், தொழிலாளர் நல அமைச்சர் அவர்களை உடனே டெல்லிக்கு அழைக்கும்படி பிரதமர் இந்திரா கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கு உடனே நான் பதில் சொல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் தொடர்பு கொண்டு பதில் கூறுவதாகக் கூறிவிட்டு, சென்னையிலே ஆயிரம் விளக்கு பகுதியிலே அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களிடம் சிம்சன் பிரச்சினை பற்றிய விவகாரம் முழுவதையும் விளக்கி, மத்திய அமைச்சரின் கட்டளையை ஏற்று தமிழக அமைச்சரை அனுப்பவேண்டுமா? வேண்டாமா? என்று கேட்டேன். மக்கள் அனுப்பத் தேவையில்லை என்று கூறியதின்பேரில், அதனையே மத்திய சர்க்காருக்குப் பதிலாகத் தெரிவித்துவிட்டேன்.

இவ்வளவிற்கும் அங்கே தொழிலாளர்களின் பிரச்சினைகள் அனைத்தும் சமரசமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த காட்டூர் கோபால் அங்கே தலைவராக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஜனநாயக முறையிலே நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற முடியாமல், இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட முற்பட்டார்கள். டெல்லிக்கு தமிழக அமைச்சரை அனுப்ப மறுத்த போதிலும், மத்திய அரசின் சார்பில் மாற்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவித்தேன்.

சிம்சன் தொழிற்சங்கத்திற்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மற்றவர்கள் கோரினார்கள். மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நான் ஒப்புக்கொண்டேன. அதன் பின்னர் மத்திய அமைச்சர் காடில்கர் அந்தப் பிரச்சினையில் நான் காட்டிய ஆர்வத்திற்காக நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, மாநில அரசு விவகாரத்தில் தலையிடும் எண்ணம் டெல்லி சர்க்காருக்கு சிறிதளவும் இல்லை என்றும் தெரிவித்தார். 10-1-72 அன்று இரவு சிம்சன் தகராறு குறித்து தொழிற் சங்கத் தலைவர்கள் பி.

ராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம் அந்தோணிபிள்ளை, ராமானுஜம், மணிவர்மா, காட்டூர் கோபால் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அமைச்சர்கள் நாவலர், என். வி. என்., மாதவன் ஆகியோர் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள். அந்தப் பேச்சு வார்த்தையின் பயனாக உடன்பாடு ஏற்பட்டு சிம்சன் தொழிலாளர்கள் திரும்பவும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். கழகத்தின் சார்பில் காட்டூர் கோபால் அங்கே வெற்றி பெற்றிருந்தபோதும்கூட, பெருந்தன்மையாக கழகம் அந்தப் பிரச்சினையிலே நடந்து கொண்டு, காட்டூர் கோபால் அவர்களைத் தொழிற்சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் செய்து அந்தத் தொழிற்சாலையில் அமைதி ஏற்பட கழகம் உதவியாக இருந்தது.

இந்திரா காங்கிரஸ் தி. மு. கழகத்துடன் அதுவரை உறவு கொண்டிருந்தபோதிலும் சிம்சன் பிரச்சினைக்குப் பிறகும் மோகன் குமாரமங்கலம் அவர்களும், சி. சுப்பிரமணியம் அவர்களும் மத்திய அமைச்சர்களாக இருந்துகொண்டு தமிழகத்தில் வந்து மாநில அரசைப் பற்றி விமர்சித்துப் பேசுவதின் காரணமாகவும் கழகத் தோழர்கள் மத்தியில் அந்தக் கட்சியுடன் உறவு கொள்வது பற்றி கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. அதன் காரணமாக 1972-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி தஞ்சையில் கழகத்தின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடியது.

அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:- "பிற்போக்கு சக்திகளை முறியடிக்க தமிழ்நாட்டில் தி. மு. க தலைமையில் அமைந்த முற்போக்கு கட்சிகளின் தேர்தல் உடன்பாடு, தேர்தல் வெற்றிக்குப் பிறகும், ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபட்டு பாடுபடுகிறது எனினும், குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் (இ. காங்கிரஸ்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய இரண்டும், அண்மைக் காலமாக தி.மு.கழகத்திற்கு எதிராகக் கடைப்பிடிக்கும் போக்கும் மேடைப் பேச்சுக்களும், எழுத்துக்களும் கழகத்தினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஆளும் கட்சியான தி.மு.கழகம், தோழமைக் கட்சிகளில் ஒன்றாக இருப்பினும், அதன் ஆட்சியின் போக்குபற்றி கருத்து அறிவிக்கவும் தங்கள் தங்கள் கட்சிக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படவும் இருக்கின்ற உரிமைகளை இப்பொதுக் குழு ஏற்று வரவேற்கிறது என்றாலும், பிற்போக்கு சக்திகளும் வன்முறையாளர்களும் வலுப்பெறும் வகையில், ஆளும்கட்சியான தோழமைக் கட்சிக்கு எதிராக மேற்குறிப்பிட்ட இரண்டு கட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகள் கழகத்தின் எல்லா மட்டத்திலும் கசப்பு உணர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் தோழமை உணர்வோடு அந்த இரண்டு கட்சிகளுக்கும் இந்தப் பொதுக்குழு தெரியப்படுத்திக் கொள்கிறது. இந்த விரும்பத்தகாத நிலை மேலும் நீடிக்கக் கூடாது என இக்குழு கருதுவதோடு தவிர்க்க முடியாத அளவில் இந்த நிலை தொடருமானால் அதுபற்றி இறுதி முடிவெடுக்க கழகத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு பொதுக்குழு அதிகாரம் அளிக்கிறது."

இந்தத் தீர்மானத்தை மதுரை மேயர் முத்து முன்மொழிய தென்னரசு, சேப்பெருமாள் ஆகியோர் வழி மொழிந்தனர். 2) அண்மையில் சென்னையில் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்சினையில் மத்திய அரசின் அமைச்சர் ஒருவர், மாநில அரசுடன் எந்தவித தொடர்பும் கொண்டு கலந்து பேசாமல் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, மத்திய மாநில அரசுகளின் உறவுகளைப் பாதிக்கும் வகையில் பேசியதும் நடந்து கொண்டதும், ஆளும் கட்சியும் நேசக் கட்சியுமாக உள்ள தி.மு.கழகத்தை அலட்சியப்படுத்தும் போக்காக அமைந்துள்ளதை, இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுவதோடு, இது போன்ற நிலை இனி ஏற்படாத வண்ணம் பிரதமர் கண்காணிப்பார் என்று நம்புகிறது.

இந்தத் தீர்மானத்தை அரங்கண்ணல் அவர்கள் முன்மொழிய, நீலநாராயணன் அவர்களும், வீரபாண்டி ஆறுமுகம் அவர்களும் வழி மொழிந்தனர். இந்தப் பொதுக்குழுத் தீர்மானத்திற்குப் பிறகு இந்திரா காங்கிரஸ், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பகைக்கவே தொடங்கி விட்டது என்றே கூறலாம். கழகத்தில் சரிவு ஏற்படுத்த என்ன வழி என்று யோசித்தனர். அமைச்சராக இருந்த ஆதித்தனார் கையில் உள்ள தினத்தந்தியின் பலத்தைக் குறைத்தால் கழகத்தை பலவீனப்படுத்த முடியுமா என சிந்தித்து அவரிடம் ஊடுருவினார்.

ஆதித்தனார் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகுதான் டெல்லியின் பார்வை நண்பர் எம்.ஜி.ஆரின் மீது விழுந்தது. கழகத்திற்கு ஒரு வகையில் பலமானவராகவும் அதே சமயம் சோதனைகளைத் தாங்க முடியாத பலகீனராகவும் ஒருவர் டெல்லிக்குத் தேவைப்பட்டார். அந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடியவராக எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கிடைத்தார். எம்.ஜி.ஆர். அவர்களிடம் டெல்லி வட்டாரம் பரிவுடனும் பயமுறுத்தல் காட்டியும் பழக ஆரம்பித்தது.

இந்தச் செய்திகள் மெல்ல மெல்ல சில ஏடுகளில் "கிசு கிசு" செய்திகள் என்பார்களே அது போல வரவும் தொடங்கிற்று. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் உள்ளம் ஊசலாட்டத்தில் இருந்தது. திடீரென்று கழகத்திற்குத் துரோகம் செய்ய அவருக்குத் துணிவில்லை - அதே சமயம் டெல்லிக்காரர்களின் கைப்பாவையாகச் செயல்படவும் வேண்டியிருந்தது! அந்த ரகசியம் வெளியில் தெரிந்து விடாமல் இருக்க அவர் பொதுக் கூட்டங்களிலும், கழக மாநாடுகளிலும் தன்னை ஒரு தீவிர தி.மு.க: வீரராகவும், என்பால் நிறைந்த அன்பு கொண்டவராகவும் காட்டிக் கொண்டு பேசினார்.

செங்கற்பட்டு மாவட்டக் கழக மாநாடு 1972-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8, 9 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. நண்பர் எஸ். எஸ். தென்னரசு மாநாட்டிற்கு தலைமை தாங்கிட நண்பர் ஆலடி அருணா மாநாட்டினைத் திறந்து வைத்தார். அந்த மாநாட்டிலே கழகப் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். பேசும்போதுதான், கழகத்தைப் பிளவுபடுத்த எவராலும் முடியாது என்று கூறினார். எம். ஜி. ஆர். கூறியதாவது:- "கழகத் தோழர்களுக்கும், கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆதரவாளர்களுக்கும் நம் மீது பற்றும் பாசமும் கொண்டுள்ள பொது மக்களுக்கும் நான் இந்த மாநாட்டிலே ஒரு வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில் நாம் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அது அப்படியே சில பத்திரிகைகளில் வராது. பொய்தான் வரும். உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு வியாபாரம் ஆகாது. உள்ளத்துப் பொறாமைக்கு அமைதி ஏற்படுத்திக் கொள்வதற்காகவே அவர்கள் மக்களிடம் பொய்யைப் பரப்புவதில் முனைந்து நிற்கிறார்கள். கழக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்று எழுதினால் மக்களின் நல்லெண்ணம் நம் பக்கம் விழுந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

8-4-72 அன்றைய மாலை ஏடு ஒன்றில் செயற்குழு முடிவதற்கு முன்பே எம். ஜி. ஆர். வெளியேறிய மர்மம் என்ன என்று செய்தி வெளியிடப்பட்டது. அதில் ஓர் இடத்தில் எம். ஜி. ஆர். சோர்வாக இருந்தார் என்று எழுதியிருக்கிறார்கள் இப்படிப்பட்ட விமர்சனங்களை மக்கள் நம்பிவிட வேண்டாம். என் மேலும், முதல்வர் கலைஞர் மேலும், நாவலர் மேலும் பற்று வைத்துள்ள தோழர்களே, உங்களுக்கெல்லாம் எங்கள் மேல் சந்தேகம் உண்டாக வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

கழகம் பிரிவுபட வேண்டும், கழகத்தில் உள்ளவர்களிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்கிற நப்பாசையோடு நடத்தப்படுகிற அப்படிப்பட்ட ஏடுகளுக்கு கழகத் தோழர்கள் ஆதரவளிக்கக் கூடாது. எம். ஜி. ஆர். வராதது ஏன்? ஏன்? என்கிறார்கள். எம். ஜி. ஆர். ஒருவரை வைத்து கழகம் வளரவில்லை. வேறு எந்த ஒருவருக்காகவும் கழகம் இல்லை. அப்படி இருப்பதாலே தான், அண்ணா அவர்கள் நம்மைவிட்டுப்பிரிந்த போதும் கூட, கழகம் இருக்கிறது. அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட நமது கழகம் அவருடைய கொள்கையின் மீதும், லட்சியங்களின் மீதும் பற்று வைத்துள்ள லட்சோப லட்சம் மக்களை நம்பித்தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட கழகத்தில்தான் பூசலை உண்டாக்க நினைக்கிறார்கள். பிளவை உண்டாக்கப் பார்க்கிறார்கள். நடக்குமா? அப்படியே உண்டாக்கினாலும் கூட அதை எங்களுக்குள் தீர்ப்போமே தவிர அது சந்தைக்கும் வராது, எங்களுக்குள் சச்சரவும் வராது. யாரானாலும் சரி, உண்மையைப் பேச வேண்டும். பொய் நீண்ட நாள் நீடிக்காது. தி. மு. கழக அரசு சோஷலிசத்தை அடிப்படையாக வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் செயல் முறையைத் தடை செய்ய துணைக் கண்டப் பேரரசின் மூலம் சிலர் முயற்சிக்கிறார்கள்.

அவர்கள் அப்படி ஆசைப்படுகிறார்கள். எல்லோருக்கும் சரிசமமான உரிமை கொண்ட சமதர்மம் உருவாக வேண்டும் என்பதுதான் தி. மு. க. அரசின் கொள்கை. உள்ளன்புடனும், பாசத்துடனும், பண்புணர்ச்சியுடனும் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது தி. மு. க. ஆட்சி. இதன் மீது கொண்ட அச்சம் காரணமாகத்தான் மாற்றார்கள் ஏசிப் பேச ஆரம்பித்துள்ளார்கள். தி. மு. க. ஆட்சியிலே ஊழல், ஊழல் என்று பேசி வருகிறார்கள். பக்தவச்சலனாரே கூட ஊழலைப் பற்றிப் பேசுகிறார்.

இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் தங்கள் கட்சியைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும். அது ஒருக்காலும் அவர்களுக்கு நிறைவேறப் போவதில்லை. தி. மு. க. ஆட்சியில் குறைகள் நடக்கிறது என்றால் அது பற்றி இன்ன குறை நடக்கிறது என்று சொல்லுங்கள். யார் மீது குற்றம் என்று தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக வழக்கு மன்றத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இப்படி எல்லாம் செய்யாமல் சில பத்திரிகைகளைத் தூண்டிவிட்டு அவற்றிக்குப் பணம் கொடுத்துப் பொய் பிரச்சாரங்கள் செய்யச் சொல்வானேன்.

கழகத்துக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு இப்படி எல்லாம் வழிகோலலாம் என்று சில குழப்பவாதிகள் நினைக்கிறார்கள். இங்கு குழப்பங்களை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். தி. மு. க. மக்கள் கட்சி. இது தனி மனிதக் கட்சி அல்ல. அண்ணா அவர்கள் கழகத்தை உருவாக்கினார்கள். கலைஞர் அவர்கள் இதனைக் கட்டிக்காத்து வருகிறார்கள். கழகத்தைப் பிளவுப்படுத்தச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி நினைப்போரின் நினைப்புக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன்.

கழகத்தைப் பிளவுபடுத்த எவரும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கப் போவதுமில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு முதலமைச்சர் பொறுப்புக்கு வருவது பற்றி நமது கலைஞர் அவர்கள் என்ன சொன்னார் என்று இதுவரை நான் எந்த மேடையிலும் சொல்லவில்லை. இங்கே அதைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். "முதலமைச்சர் பொறுப்புக்கு நான் வர விரும்பவில்லை. எனக்கு வேண்டாம்" என்றுதான் அவர் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல; தம்பி மாறன் அவர்களையும் அனுப்பி வைத்து தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று தெரிவித்திடச் சொன்னார். கலைஞரின் துணைவியாரும் இதையே தெரிவித்தார். ஆனால் நாங்கள் தான் அதை மறுத்தோம். ஆகவே கலைஞர் அவர்கள் இந்தப் பதவியை விரும்பியவரல்ல; வேண்டுமென்று கேட்கவுமில்லை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் அவர் முதலமைச்சர் ஆனார

். நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் அந்தச் சுமையை (முதல்வர் பொறுப்பு) சுமக்க வைத்தோம். அவர் படங்களுக்கு வசனமெழுதினால் பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும். அதற்குக்கூட நேரமில்லாமல் இந்தச் சுமையை மக்களுக்காக அவர் ஏற்றிருக்கிறார்." -காஞ்சி மாநாட்டில் இப்படிப் பேசிய எம். ஜி, ஆர். அவர்களே, கழகத்தைப் பிளக்கும் கருவியாக மாறினார்! அந்த மாற்றம் பகிரங்கமாக வெளிப்படுவதற்கு முன்பு அவர் பேசியவைகளை நினைவுபடுத்திக் கொள்வது மிக முக்கியம்.

மறைந்தும், ஒளிந்தும், டெல்லியினால் தூண்டிவிடப்பட்டும் தொடங்கப்பட்ட அந்தத் துரோகத்தின் முழு உருவம் 1972 செப்டம்பர் மாத இறுதியில் வெளிப்படுவதற்கு முன்பு - அந்த இடைக்காலத்தில் எம். ஜி. ஆர். அவர்கள், என்னைப் பற்றியும், கழக ஆட்சியைப் பற்றியும் ஆற்றிய பாராட்டுரைகளை இப்போதும் எடுத்துப் படித்தால், "இவரா இப்படிச் செய்தார்?"

என்று வியப்பு ஏற்படும். அந்த உரைகள் சிலவற்றை நினைவுபடுத்துகிறேன் முதலில்.