உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வங்கதேச உதயம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வங்கதேச உதயம் · 184 / 391

வங்கதேச உதயம் டிசம்பர் 5-ஆம் நாள் இரவு 7-30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்த நான், அங்கிருந்து நேராக அண்ணா சிலைக்குச் சென்று மாலை அணிவித்துவிட்டு கலைவாணர் அரங்கில் பாகிஸ்தான் போர் வெறிக் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அமெரிக்காவில் கண் அறுவை சிகிச்சை முடிந்து வருகிற என்னை என் துணைவியர்கள் தயாளும், ராஜியும், என் சகோதரிகளும், என் மருமகன்களும், பிள்ளைகள், பெண்கள், பேரன், பேத்திகளும்கூட அந்தக் கண்டனக் கூட்டத்தில் வந்துதான் சந்தித்து உடல் நலம் விசாரித்தறிந்து கொண்டனர்.

இந்தியாவுக்கு வெற்றி கிட்டும் வரையில் நம்மிடையேயுள்ள கட்சிப் பிணக்குகளை மறந்து ஓரணியில் திரண்டு அனைத்துக் கட்சிகளும் அணிவகுப்போம் வாரீர் என்று வேண்டுகோள் விடுத்து அந்தக் கூட்டத்தில் பேசினேன். அதற்கு மறுநாள் சென்னை சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானத்தை நான் முன்மொழிந்து உரையாற்றினேன். அதே நாளில் டெல்லியில் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் நாடாளுமன்ற மக்களவையில் வங்க தேசத்தை அங்கீகரிப்பதாக முடிவெடுத்துள்ளதாக மிகுந்த மகிழ்ச்சி ஆராவாரத்திற்கிடையே அறிவித்தார்கள்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமரின் அறிவிப்பைப் பாராட்டின. தமிழகத்தின் சட்ட மன்றத்தில் அந்தத் தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடையில் நான் குறுக்கிட்டு, வங்க தேசத்தை இந்தியா அங்கீகரித்தது பற்றி பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்ததைத் தெரிவித்தேன். இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றி விவாதிக்க முதலில் ஐ.நா.சபையின் பாதுகாப்பு சபை கூடியது. போரை உடனே நிறுத்த வேண்டுமென்றும், பிடித்த இடங்களில் இருந்து இந்தியப் படை வெளியேற வேண்டுமென்றும், அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

அதனை ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்தது. அடுத்து அமெரிக்- காவும், சீனாவும் கூட்டாகச் சேர்ந்து தீர்மானம் கொண்டு வந்தன. அதையும் ரஷ்யா தோற்கடித்தது. பாதுகாப்பு சபையில் செயலிழந்த நிலையில் பொதுச்சபையைக் கூட்ட அமெரிக்காவும் சீனாவும் ஏற்பாடுகளைச் செய்தன. ஐ.நா. பொதுச் சபையில் அர்ஜெண்டைனாவும், மற்றும் 13 நாடுகளும் சேர்ந்து யுத்த நிறுத்தம் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்தன.

அதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டுமென்றும், பிடித்த இடங்களில் இருந்து இரண்டு நாட்டு ராணுவமும் வாபஸ் ஆகி தங்கள் பழைய இடத்திற்குப் போக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், இலங்கை உட்பட 104 நாடுகள் - எகிப்து உட்பட எல்லா முஸ்லீம் நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டன. ரஷ்யா, பல்கேரியா, ஹங்கேரி, கியூபா, போலந்து, செக்கோசுலேவியா, பூட்டான் உட்பட 11 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து ஒட்டுப்; போட்டன.

இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், நேபாளம், ஆப்கானிஸ்தான், டென்மார்க் உட்பட பத்து நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் சார்பில் கருத்து தெரிவிக்கும்போது சுதந்திர வங்காளத்தை அங்கீகரிக்கும் வரை போர் ஓயாது என்று தெரிவிக்கப்பட்டது. அதுபற்றி நான் சென்னையிலே ஒரு கூட்டத்திலே பேசும் போது - "ஐ.நா. மன்றம் இந்தியா படைகளைத் திரும்பப் பெறவேண்டுமென்று கூறி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இதுவரை நம்மோடு இருந்த யூகோ நாடு ஓட்டு அளித்திருக்கிறது. இந்தியாவிற்குப் பக்கத்தில் உள்ள இலங்கை நாடும் இந்தியாவிற்கு எதிரான இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது 55 கோடி மக்களின் 110 கோடி கரங்கள்தான்" என்று கூறியதோடு - அமெரிக் காவில் செய்தியாளர்கள் "இந்திய நாட்டின் எல்லையில் நடக்கும் போர் பற்றி தமிழ்நாட்டில் என்ன கவலை?"

என்று கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலையும் அந்தக் கூட்டத்தில் கூறினேன். நான் அந்த அமெரிக்கா நிருபருக்கு அளித்த பதில் இதுதான்! "சாலையில் நீங்கள் நடந்து போகும்போது காலில் ஆணி ஏறினால் உடனே 'ஐயோ' என்று வாய் அலறுகிறது. கால்தானே பாதிக்கப்பட்டது என்று வாய் அலறாமல் இருந்து விடுவதில்லை. அதுபோல வடநாட்டில் ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு வாய் கதறும், பதறும்" என்று கூறினேன்.

டிசம்பர் 12-ஆம் தேதியன்று கழகத்தின் தலைமைச் செயற்குழு சென்னையிலே கூடி, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையில் நியாயங்களைப் புறக்கணித்து அமெரிக்கா போன்ற அரசுகள் நடந்து கொள்ளும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும், இந்தியாவின் பக்கம் ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. தலைமைக் கழகத்தின் சார்பில் தமிழக அரசு திரட்டிய பாதுகாப்பு நிதிக்கு 25,000 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

டிசம்பர் 7-ஆம் தேதியன்று வானொலியில் நான் ஆற்றிய "கொடி நாள்" உரையில் அறிவித்ததற்கிணங்க அந்தப் போரிலே மாண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஐயாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மேலும் நஞ்சையாக இருந்தால் ஒன்றரை ஏக்கரும், புஞ்சையாக இருந்தால் மூன்று ஏக்கரும் அவர்களது குடும்பத்தினருக்குத் தரப்பட்டது. மத்திய அரசின் அனுமதியோடு வீர விருதுகளுக்கு அளிக்கப்பட்டிருந்த தொகையை அதிகமாக்கித் தந்தோம்.

பரம வீர சக்கரத்திற்கு பதினைந்தாயிரம் என்றும், மகாவீரச் சக்கரத்திற்கு பத்தாயிரம் ரூபாய் என்றும், சேனாபதக்கம் பெறுவோருக்கு மூவாயிரம் என்றும், இராணுவ அறிவிப்பு எனும் பாராட்டுப் பட்டியலில் இடம் பெற்றோருக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றும் உதவித்தொகை அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட மாவீரர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரு நூறுக்கு மேற்பட்டவர்களாகும். இதையன்னியில் தமிழகத்தின் சார்பில் இந்தியாவின் போர் நிதி 1972-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வழங்கப்பட்டது.

இந்த விழா சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற போது, நாட்டுப் பாதுகாப்பு நிதியாக ஆறு கோடி ரூபாயை தமிழகத்தின் சார்பில் பிரதமர் கையில் நான் வழங்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் ஆளுநர் கே.கே.ஷா அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முதல் இரண்டு நாட்கள் - மே 19, 20 ஆகிய நாட்களில் நீலகிரியில் நடைபெற்ற கழக மாநாட்டில் கலந்து கொண்டேன். 20-ஆம் தேதி இரவு மாநாட்டை முடித்துக் கொண்டு, அன்று இரவே நீலகிரி துரிதயில் மூலமாக சென்னை வந்து, 21-ஆம் தேதி காலை 10-15 மணிக்கு விமானத்தின் மூலம் சென்னைக்கு வரும் பிரதமரை வரவேற்று - அங்கிருந்து நேராக யுத்த நிதி வழங்கப்படும் நிகழ்ச்சிக்கு காலை 11-15 மணிக்கு நான் அழைத்து செல்வதாகத்தான் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் மாநாட்டை முடித்துக் கொண்டு நீலகிரி ரயிலில் நானும், மற்ற அமைச்சர்களும் புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது - திருப்பூர் அருகே வஞ்சிப்பாளையம் எனும் நிலையத்திற்கருகே, நீலகிரி துரித வண்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலில் இஞ்சின் கோளாறு ஏற்பட்டு, வண்டி நகர முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டதன் காரணமாக நாங்கள் வந்த ரயிலும் பல மணி நேர தாமதத்திற்குப் பிறகே புறப்பட இயலும் என்றும், எப்போது புறப்படும் என்பதைச் சொல்வதற்கு இயலாது என்றும் தெரிவித்து விட்டார்கள். இரண்டு நிலையங்களுக்கு இடையிலே நாங்கள் பயணம் செய்த ரயில் நின்று கொண்டிருக்கிறது.

நேரமோ நள்ளிரவு. காலையில் பிரதமரை மீனபாக்கம் விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும். எனவே உடனடியாக ஒரு கார் ஏற்பாடு செய்து, அதிலே நானும், மற்ற அமைச்சர்களும் புறப்பட்டு, எப்படியும் காலையிலே சென்னை வந்து சேர்ந்ததாக வேண்டுமென்ற எண்ணத்தோடு விரைந்தோம். வழியிலேயே செங்கற்பட்டில் குளித்து விட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு, விமானம் மீனபாக்கத்திற்கு வந்து சேருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் நாங்கள் வந்து சேர்ந்தோம்.

நாங்கள் பிரதமரை வரவேற்க வருவதற்கு எவ்வளவு தடைகள் ஏற்பட்டதோ, அதைப்போல் பிரதமர் அந்த விழாவில் வந்து கலந்து கொள்வதற்கு மறைமுகமாக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன; இருந்தாலும் நான் அந்த விழாவிலே குறிப்பிட்டதைப்போல எவ்வளவு தடைகள் வந்தாலும், எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் நாங்கள் நினைக்கிற காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்போம் என்றதைப் போல் அந்த விழா நடை பெற்றது. தமிழகத்தின் சார்பில் ஐந்தரைக் கோடி ரூபாய்தான் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும்கூட ஆறு கோடி ரூபாய் நிதியினை அந்த விழாவில் அளித்தோம்.

அப்போது இந்தியா முழுவதிலும் அதுவரை 25 கோடி ரூபாய் தான் போர் நிதி தரப்பட்டிருந்தது. அதிலே நான்கில் ஒரு பகுதியினைத் தமிழகம் தந்தது என்ற பெருமையினை கழக அரசு பெற்றது. தமிழகத்தைவிட பெரிய மாநிலமான-பிரதமரின் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சார்பில் ஐந்து கோடிக்கும் குறை வாகத்தான் போர் நிதியாகத் தரப்பட்டிருந்தது. நிதியினைப் பெற்றுக்கொண்ட பிரதமர் தனது உரையில் "நாட்டை முன்னேற்றும் பணிகளில் நமக்கு இடையூறுகள் வரலாம்.

இங்கே வந்து சேருவதில் இருந்த சங்கடங்களைப்பற்றி முதலமைச்சர் குறிப்பிட்டார். கடந்த இரவு அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களை மீறி வரமுடிந்ததென்பதை அவர் உணர்த்தினார். இதேபோல் நாட்டில் பல சங்கடங்களையும், இடர்களையும் எதிர் நோக்கியுள்ள நாம் அவற்றை மீறி புதிய சமுதாயம் காணும் பணியில் நாம் வெற்றி பெறவும் உறுதிகொண்டிருக்கிறோம். போர் நடந்த நேரத்திலும் போர் இல்லா நேரத்திலும் நாட்டிற்கு ஏற்பட்ட கஷ்டமான நேரத்திலெல்லாம் நீங்கள் அளித்த மகத்தான ஒத்துழைப்புக்கும் உதவிக்கும் தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் தமிழ் மக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

இந்த ஆறுகோடியை அன்னியில் சென்னையிலே அமைச்சர்களின் துணைவியர்கள் ஊர்வலமாகச் சென்று போர் நிதியாகத் திரட்டிய மூன்று லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை எல்லாம் நேரடியமாக அனுப்பியதோடு, அடையாளமாக சில பொருட்களை நான் டெல்லி சென்றபோது நேரிலே எடுத்துச் சென்று பிரதமரிடம் அளித்தேன். 15-12-71 அன்று பாகிஸ்தான் தளபதியாக இருந்த நியாஜ் போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதனையொட்டி பிரதமர் இந்திராவும் போரை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார்.

வங்காள தேசத்தில் சுதந்திர அரசு டிசம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவில் பொறுப்பேற்றது. இந்தியாவின் வெற்றி பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது "வங்க தேசம் உதயமாகி விட்டது, வெற்றிச் செய்தி நம்மையெல்லாம் களிப்பில் ஆழ்த்துகிறது. நமது படை வீரர்கள் நினைத்திருந்தால் டாக்காவை போரிட்டு பிடித்திருக்க முடியும். ஆனாலும், போர்க்களத்திலும் மனிதாபிமான உணர்ச்சியோடு நடந்துகொண்டு எதிரிகளை சரணடையச் செய்து, அவர்களுடைய உயிரையும் பாதுகாத்து இருக்கிறார்கள்.

இது இந்தியாவின் பெருமையை உயர்த்துகிறது. இந்த வெற்றிக்கு உயிரைப் பணயமாக வைத்து போரிட்ட வீரர்களை எல்லாம், இந்திய மண் போற்றிப் பாராட்டுகிறது" என்று கூறினேன். டெல்லியில் உள்ள வங்காள தேச தூதர் ஆபீசில் பத்திரிகைத் தொடர்பு கலாசார அதிகாரியாகப் பணியாற்றிய அம்ஜாதுல் ஹக், சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்துப் பேசினார். டெல்லி பாராளுமன்றத்திற்கு அடுத்தபடியாக தமிழக சட்டமன்றம்தான் வங்காள தேச வெற்றியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று கூறி அதற்காக நன்றி தெரிவித்து, என்னையும் வங்காள தேசத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

சுதந்திர வங்காள தேசத்திற்குப் பாராட்டு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை அவையிலே டிசம்பர் 17-ஆம் தேதியன்று நான் கொண்டு வந்து அனைவராலும் ஆதரிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. அதிலே நான் பேசும்போது கூறியதாவது; "சுதந்திரக் கொடியை வங்க தேச மக்கள் ஏற்றி வைத்த நேரத்தில் அதை ஏற்றி வைக்கக்கூட அவர்களுக்கு ஒரு இடம் இல்லை. வங்க தேசத்தில் எங்கோ ஒரு மூலையில், ஒரு மரத்தினடியில் தங்களுடைய அரசை அவர்கள் உருவாக்கினார்கள்.

இவர் ஜனாதிபதி, இவர் பிரதமர், இவர் ராணுவத் தளபதி என்று பிரகடனம் செய்தபோது உலக நாடுகள் கேலிக் கண்களோடு அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்ததையும், இது எங்கே நடக்கப் போகிறது? புது நாடா? இது உருவாகுமா? என்றெல்லாம் கேட்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. இன்று அந்தப் படம் மாறி, அவர்கள் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்களின் தளநாயகர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ ஒரு இடத்தில் அவர்களாகச் சூட்டிக் கொண்ட முஜிபுர் நகர் என்ற இடத்தில் பறக்கவிட்ட அந்தக் கொடி, இன்று வங்க தேசத்தின் தலைநகரமான-இந்திரா காந்தி அறிவித்ததைப் போல-சுதந்திர நாட்டின் சுதந்திரத் தலைநகரமான டாக்கா நகரில் பறக்க விடப்பட்டிருக்கிறது என்றால், புறக்கணிக்கப்படுகிறவர்களும், அலட்சியப் படுத்தப்படுபவர்களும், உரிமையின்றி நசுக்கப்படுபவர்களும், விடுதலை விரும்பிகளும் என்றைக்காவது ஒரு நாள் வெற்றியை நிச்சயம் பெற்றே தீருவார்கள் என்ற நம்பிக்கையை அகில உலகத்திற்கும் ஜனநாயக ரீதியில் அறிவித்துக் கொண்டிருக்கிற தகுந்த சாட்சியாகும்.

டாக்கா என்றாலே-டாக் என்ற ஒருவகை மரம் நிறைந்த இடம் என்றும் அதனால்தான் அப்பெயர் வந்தது என்றும் கூறுகிறார்கள். மரங்கள் அடர்ந்த ஒரு இடத்தில் ஒரு புதிய அரசு உருவாகியது. மரங்கள் அடர்ந்து இருந்த காரணத்தால் அந்தப் பெயரைப் பெற்ற ஒரு தலைநகரத்தில் இன்று அந்த அரசு நிலை பெறுகிறது. இந்தப் போர் இந்தியாவிலே ஒரு பகுதியில் நடைபெற்றாலும் இது தமிழ்நாட்டையும் பாதிக்கக் கூடிய போர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

தமிழ் மாநிலம், ஆந்திர மாநிலம், கேரள மாநிலம், கர்நாடக மாநிலம், பஞ்சாப், மராட்டியம் என்ற பாகுபாடு இல்லாமல் அந்த ஒரே உத்வேகத்தோடு எதிரியை போர்முனையில் சந்தித்தோம். தமிழ்நாட்டிற்கு ஒருவேளை போர் வராவிட்டாலும் தமிழ்நாடும் போர்முனையில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டு வீரர்களில் சிலர்-ஏன், பலர் என்றுகூடச் சொல்லலாம்-இந்தப் போரில் தங்கள் இன்னுயிரைத் தந்திருக்கிறார்கள்.

அவர்கள் அணிந்திருந்த ராணுவ உடைகள் அவர்களது வீட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த உடைகளை கண்ணீரால் நனைத்து, தங்கள் அருமந்தச் செல்வனின் நினைவாக-வீட்டுத் தலைவனின் நினைவாக பேழையில் வைத்துப்பூட்டி அப்பேழைகளுக்கு மலர் கொண்டு பூஜித்துக் கொண்டிருக்கிற அந்த வீட்டுத் தாய்மார்கள் நம் அனுசரணைக்கும் ஆதரவிற்கும் உரியவர்கள். நாம் மண்ணாசை பிடித்தலையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக போர் நிறுத்தம் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்.

முதலில் இந்தியாவில் போர் தொடுத்தது பாகிஸ்தான். போர் தொடுப்பதில் மு

ந்திக்கொண்டது பாகிஸ்தான். இன்று போர் நிறுத்தம் செய்கிறோம் என்பதில் முந்திக் கொண்டிருப்பது இந்தியா. இதை மனதில் கொண்டு உலக நாடுகளில் சில நாடுகள் தாங்கள் எடுத்த அநியாயமான முடிவுகளிலிருந்து தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்தியா அவர்களுக்கு மேலும் புத்தி வரக்கூடிய அளவிற்கு பாடத்தைப் புகட்டும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இன்று அமெரிக்காவின் கையில் "பூட்டோ" இருக்கலாம். ஆனால் ரஷ்யாவின் கையில் 'வீட்டோ' இருக்கிறது.

நல்ல நாடுகள்-நியாயத்திற்காகப் பாடுபடுகிற நாடுகள் நம் பக்கம் இருக்கின்றன. அந்த நாடுகளுக்கெல்லாம் மீண்டும் இப்பேரவையின் சார்பிலும் நான்கரை கோடி தமிழ் மக்களின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து யாகியாகானை எதிர்த்துப் பாகிஸ்தானில் அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்தப்பட்டன. தனக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததைக் கண்ட யாகியாகான் முப்படைத் தளபதிகளின் கூட்டத்தைக் கூட்டி பதவியை விட்டு விலக சம்மதிப்பதாக அறிவித்தார்.

அதன்படி 20-12-71 அன்று யாகியாகான் தனது பதவியை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக பாகிஸ்தானின் புதிய அதிபதிராக 43 வயதே உடைய பூட்டோ பதவி ஏற்றார். பதவியேற்றவுடன் பூட்டோ அளித்த பேட்டியில் ரகிமான் விடுதலை செய்யப்படுவாரா என்பதை உடனே கூறுவதற்கில்லை என்று கூறிய போதிலும் 3-1-72 அன்று கராச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பூட்டோ பேசும்போது "ரகிமானை விடுதலை செய்யலாமா? வேண்டாமா?"

என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார். கூடியிருந்த மக்கள் விடுதலை செய்யலாம் என்று கூறியதன் பேரில் பூட்டோ, உங்கள் கருத்தையும் உலக மக்களின் கருத்தையும் ஏற்று ரகிமானை விடுதலை செய்கிறேன் என்று அறிவித்தார்.