உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் கண்டனம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் கண்டனம் · 183 / 391

பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் கண்டனம் "சி காகோ பல்கலைக் கழகத்தில் அரசியல் கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு அன்பழைப்பு விடுத்த லாயிட் ருடால்ப் அவர்களுக்கும், சுசனே ருடால்ப் அவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், மாணவ நண்பர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியதாகுக. அமெரிக்க நாட்டு சுற்றுப்பயணத்திற்கிடையே இந்தப் பல்கலைக் கழகத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

விவேகானந்தரின் பொன்மொழிகள் எதிரொலித்த நகரம் இந்த எழில்மிகு சிகாகோ நகரமாகும். அந்தப் பெருமைக்குரிய மனிதர் பிறந்த நாட்டிலிருந்து, அமைதி வழியில் விடுதலைப் போர் நடத்தி வெற்றிகண்ட காந்தியடிகள் தோன்றிய நாட்டிலிருந்து, இருள் மிகுந்திருந்த தென்பகுதியில் பகுத்தறிவு ஒளி பரப்பிய பெரியார் ராமசாமியும், அரசியலில் புதுவழி வகுத்த அறிஞர் அண்ணாவும் தோன்றிய நிலப்பரப்பிலிருந்து ஒரு பெரிய மக்கள் இயக்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் உங்களையெல்லாம் இந்த அரசியல் கருத்தரங்கில் சந்திக்கிறேன்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று எச்சரிக்கை விடுத்த சிலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆண்ட நாடுகளின் அரசியல் சிறப்பை இன்னமும் விளக்கிக் கொண்டிருக்கிறது. அரசியலுக்கென ஒரு தனி அதிகாரமே வகுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் நெறி கண்ட வள்ளுவரின் திருக்குறள் மணம் கமழும் நாடு நான் பிறந்த தமிழ்நாடு. அந்தப் புகழ்மிக்க மாநிலத்தின் நான்கு கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் இருபது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த ஒரு பெரிய கட்சியை ஜனநாயகப் போர்க்களத்தில் சந்தித்து ஆட்சி மாற்றத்தைச் செய்த சரித்திரம் என்னுடைய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

அடிமை விலங்கொடிந்து ஆனந்த சுதந்திரம் வந்த பிறகும், எதிர்பார்த்த ஒளிமிகு வாழ்வு எங்கள் மக்களுக்குக் கிட்டவில்லை. ஆளவந்தவர்களிடம் காணப்பட்ட அக்கறையற்ற தன்மை அதற்கொரு காரணமாயினும் இந்திய நாடு அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதை மறந்து விட முடியாது. ஆறு பிரேசில் நாடுகள் - ஒன்பது நைஜீரியாக்கள் - பதினைந்து எகிப்துகள்-கிட்டத்தட்ட மூன்று அமெரிக்க நாடுகள் - இந்த மக்கள் தொகையைக் கொண்டது இந்திய நாடு.

அதற்காக மக்கள் தொகைக் கணக்கையும், அதன் சுமையையும் கூறிக்கொண்டே பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து விடவும் கூடாது. எல்லாம் அவனவன் தலையில் எழுதியபடிதான் நடக்குமென்று ஏமாற்றுகிறவன் கூற - அதனை ஏமாற்றப்பட்டவனும் ஏற்றுக்கொண்டிருந்த காலத்தை மாற்றி அந்தத் தலையெழுத்தைத் திருப்பி எழுத நாங்கள் எழுதுகோல் பிடித்திருக்கிறோம். அதில் இந்தியாவில் இப்போது தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறதென்றால் எங்கள் கட்சி மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிற அரசியல் விழிப்புதான் காரணம்.

சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்திட அந்தஸ்து மிக்க குடும்பத்தினர்தான் பதவிப் பொறுப்புக்கள் ஏற்க வேண்டுமென்றிருந்த ஐதீகத்தை அறவே மாற்றி சாமான்ய மக்களுக்குத் தொண்டாற்ற சாமான்யமக்களின் மத்தியிலிருந்தே தலைவர்களைத் தோன்றச் செய்த பெருமை எங்கள் அரசியல் கட்சியின் அஸ்திவாரமாக அமைந்த சுயமரியாதை இயக்கத்திற்கு உண்டு. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் எங்கள் நாட்டு மனிதனின் கண்களைத் திறந்தது. அண்ணாவின் அரசியல் ஈடுபாடு அந்த மனிதனுக்கு ஜனநாயக உணர்வுகளைத் தெளிவுபடுத்தியது.

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிற நீங்கள் எங்கள் இயக்க வளர்ச்சியைப்பற்றியும் இந்தப் பல்கலைக்- கழகத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காண நான் மகிழ்கிறேன். இந்தியாவின் முன்னாள் பிரதமர் பண்டித நேரு இந்தியா முழுமைக்கும் பரப்பிடத் தொடங்கிய ஜனநாயக ஒளி, தமிழகத்தில் முழுப்பிரகாசமாகத் திகழ்வதற்குக் காரணம், எங்கள் இயக்கம் பட்டிதொட்டிகளில் உள்ள ஏழை எளிய சாதாரண மக்களிடமும், கல்வி அறிவற்ற மக்களிடமும் ஜனநாயக தத்துவத்தை ஓயாமல் பிரச்சாரம் செய்வதுதான்.

தன் கையில் தரப்படுகிற வாக்குச் சீட்டின் சக்தியை ஒவ்வொரு குடிமகனும் இன்று உணர்ந்திருக்கிறான். அதனால் அரசாங்கத்தின் அச்சாணி; சட்டசபையிலோ, நாடாளுமன்றத்திலோ இருக்கிறது என்று அடையாளத்திற்காகச் சொன்னாலும் உண்மையிலேயே மக்கள் மத்தியில்தான் அந்த அச்சாணி இருக்கிறது. அவர்கள்தான் எங்களைத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக மாற்றியிருக்கிறார்கள். நாங்கள் போற்றிவரும் அரசியல் பண்பாடு நீண்ட காலமாகவே ஆளுக்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே உள்ள 'பலகை'யின் அகலத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாலைந்து ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும், பின் தங்கிய மக்கள் நலனுக்கும் திட்டங்கள் வகுத்துச் செயல் படுகிறோம். பட்டிதொட்டியெல்லாம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடவும், மின்வசதி பெருக்கிடவும் தீவிரமாகச் செயல்படுகிறோம். பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி வேகமாக நடைபெறுகிறது. குடிசைகளை மாற்றி நல்ல வீடுகளைக் கட்டித் தருகிறோம்.

குடியிருப்பு மனைகள் சொந்தமில்லாமல் இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு அவைகளைச் சொந்தமாக்க சட்டம் செய்துள்ளோம். நிலமற்ற ஏழை எளியோர் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கியுள்ளோம். இலக்கியப் புகழும், வரலாற்றுப் புகழுமிக்க தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறோம். இவைகளால் எல்லாம் நாங்கள் திருப்தி அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. நேரு, ஒருமுறை கூறியது போல் கடைசியாக ஒரு ஏழையின் கண்ணீர் துடைக்கப்படும் வரையில் எங்கள் பணி முடிந்ததாக அர்த்தமில்லை.

மிகப் பெரிய இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் நல்வாழ்வு பெருகி, மாநிலங்கள் மேலும் மேலும் பலமும் வளமும் பெறவெண்டுமானால் மத்திய அரசில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பரவலாக்கப்பட வேண்டுமென்று மாநில சுயாட்சிக் குரலை தி.மு.க. எழுப்பி வருகிறது மத்திய அரசை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாமல் மாநில சுயாட்சி அமைந்திட வழிவகைகள் உண்டு. அவைகளை விவாதித்து நல்ல முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் இதனைப் பேசித் தீர்த்துக் கொள்வது இயலாத காரியமல்ல. இதனை வலியுறுத்திப் பேச இப்போது இந்தியாவில் நிலைமைகள் சரியில்லை. எண்ணிய தீவிரத் திட்டங்களை நிறைவேற்றமுடியாமல் எல்லையோர ஆக்ரமிப்பு! ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள. இந்தச் சோதனையை அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள், தாமதமின்றி தயக்கம் காட்டாது தவிர்த்திட முன்வர வேண்டும். உலகம், யந்திரமயமாகிக் கொண்டு வருகிறது. உள்ளங்களும் யந்திரங்களாகி விட்டால் பிறகு உருகி அழுகின்ற கண்களையும் உவகையால் சிரிக்கின்ற உதடுகளையும் காணமுடியாது.

அந்த நிலைமை ஏற்படாமலிருக்க மனிதாபிமான உணர்வுடன் எதனையும் அணுகும் அன்பு வழி ஜனநாயக அரசியல் வளர்க்கப்படவேண்டும்". இவ்வாறு 23-11-71 அன்று மாலை சிகாகோ பல்கலைக்கழக அரசியல் அரங்கில் உரையாற்றினேன். சொற்பொழிவைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கருத்தரங்கிற்கு வந்தவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தேன். பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூடால்ப் சிகாகோ பல்கலைக் கழக வளைவுக்குள் சிறப்பு விருந்து ஒன்றை அளித்தார்.

சிகாகோவில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு புகழ்பெற்றதும் மகத்தானதுமான் "நயாகரா" நீர்வீழ்ச்சியையும் பார்த்துக்களித்துவிட்டு, 25-ந் தேதி அன்று நியூயார்க் நகரை வந்தடைந்தேன். இந்திய தூதரக அதிகாரிகளும், நியூயார்க் நகர இந்தியர்களும் விமான நிலையத்தில் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஐ.நா. மன்ற தலைமையகத்தைச் சுற்றிப்பார்த்தேன். ஐ.நா. வின் பொதுச்செயலாளர் ஊதாண்டுக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த பதவியில் இருந்த சி.வி.

நரசிம்மன் எனக்கு ஒரு விருந்து அளித்தார். ஐ.நா. மன்றத்தில் இந்தியத் தூதுக்குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரியின் ஏ.எஸ். மணி என்னுடன் வந்திருந்து விளக்கங்களைத் தந்தார். ஐ.நா. மன்ற நடவடிக்கைகளை இந்தியப் பிரதிநிதிகளுடன் அமர்ந்து கவனித்தேன். ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் ஊதாண்ட் அவர்கள் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்த காரணத்தால் அவர் தொலைபேசியின் மூலம் என்னைத் தொடர்புகொண்டு விசாரித்தார். நியூயார்க் நகரில் "ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிலையம்" சென்று அங்குள்ள கம்யூட்டர் இயந்திரங்களின் வேலைமுறைகளை அறிந்து கொண்டேன்.

நியூயார்க் நகரில் செய்தியாளர்கள் பேட்டி கண்டபோது;- இந்தியாமீது பாகிஸ்தான் பகை கக்குவதை நான் வன்மையாகக் கண்டித்து, பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்களை மறுத்து விளக்கங்கள் அளித்தேன். "நீங்கள் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டிருப்பது உங்கள் சொந்த முடிவின் மீதா அல்லது பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்த யோசனை மீதா?"

என்று கேட்டதற்கு "நான் இந்தியாவுக்காகப் பேசுகிறேன்; இந்திராவுக்காக அல்ல" என்று விடையளித்தேன். நியூயார்க் நகரில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து "தமிழ்ச் சங்கம்" அமைத்து அதன் தொடக்க விழாவில் என்னைக் கலந்துகொள்ள அழைத்தார்கள். அதன்படி அந்த விழாவில் கலந்துகொண்டு நியூயார்க் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்தேன். தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் பி.எஸ். குமரேசன் என்னை வரவேற்றுப் பேசினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதன் முதலாக இணைந்த பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றான மேரிலாந்து மாநில ஆளுநர் மார்வின் மாண்டலை டிசம்பர் முதல் தேதியன்று சந்தித்தேன்.

அவர் எனக்கு அம்மாநிலத்துச் சின்னம் ஒன்றையும்-இரட்டைச் சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்தார். பின்னர் முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் துணைத் தலைவரும் செனட் சபை உறுப்பினருமான ஹம்ப்ரேயைச் சந்தித்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் அவருடன் உரையாடினேன். அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் நான் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மும்முரமடைந்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் டாங்கிப் படைகளையும், ராணுவத்தையும் பாகிஸ்தான் குவித்து வைத்துக் கொண்டு, இந்தியப் பகுதியை நோக்கிச் சுட ஆரம்பித்தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கத் தக்கவிதத்தில் இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியப்படைகளும், பாகிஸ்தான் படைகளும் நேரடி சண்டையில் ஈடுபட்டன. வாஷிங்டனில் ஹம்ப்ரே அவர்களைச் சந்தித்தபோது வங்காளதேச பிரச்சினை குறித்து அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தேன். உலக வங்கித் தலைவர் மாக்ன மாரா அவர்களைச் சந்தித்தேன். அயல்நாடுகளுக்கான அமெரிக்க உதவித் திட்டத்தின் நிர்வாகியான திரு.ஹன்னா அவர்களையும், கூப்பர் அவர்களையும் சந்தித்தேன்.

3-12-71 அன்று இரவு குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் இந்தியா முழுவதும் அவசர நிலைமையை பிரகடனம் செய்தார். பாகிஸ்தான் விமானங்கள் ஸ்ரீநகர், அவந்திப்பூர், அமிர்தசரஸ், பதன்கோட், அம்பாலா, ஆக்ரா, ஜோத்பூர் ஆகிய நகரங்கள் மீது குண்டுகளை வீசின. இந்திய வீரர்கள் பீரங்கியால் சுட்டு அந்த விமானங்களை விரட்டினர். இந்தச் செய்தி கேட்டதும் நான் எனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்ப முடிவு செய்தேன்.

எனக்கு பெரிய வரவேற்பு கொடுப்பதற்கான அறிக்கையினை துணைப் பொதுச் செயலாளராக இருந்த என்.வி.என். அவர்களும், சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த நீலநாராயணன் அவர்களும் செய்திருந்தார்கள். அதனை அறிந்த நான் வாஷிங்டனிலிருந்து புறப்படுவதற்கு முன்பு தமிழக செய்தியேடுகள் மூலம் விடுத்த செய்தியில் "இந்தியாவில் தவிர்க்க இயலாத நிலையில் ஏற்பட்டிருக்கிற போர் சூழ்நிலையை இந்திய மக்கள் நெஞ்சுறுதியோடு சமாளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் வெற்றிக்கு தமிழ் நாட்டு மக்கள் கட்சி சார்பற்ற முறையில் எல்லாவிதத் தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டுகிறேன். 5-ந் தேதி சென்னை வந்து சேருகிறேன். விமான நிலையத்தில் எனக்கு வரவேற்பு நிகழ்ச்சி எதுவும் வேண்டாமென்றும் யாரும் மாலை முதலியவைகளை அணிவிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கை விடுத்தேன்.

அன்று என்னை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்புக் கூட்டம் பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் கண்டனக் கூட்டமாக மாற்றப்பட்டது.