நெஞ்சுக்கு நீதி
அமெரிக்கப் பயணம் · 182 / 391
அமெரிக்கப் பயணம் ஏற்கனவே கார் விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஒரு கண்ணில் மீண்டும் 1967-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்ட பயங்கரக் கார் விபத்தினால் அடிக்கடி வலி ஏற்பட்டு என்னைத் தொல்லைப் படுத்திக் கொண்டேயிருந்தது. முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஓய்வறியாப் பணிகளின் காரணமாக வலித் தொந்திரவு மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அந்த வலியுடன் ஒப்புதல் தந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன்.
பேசினேன். எழுதினேன். கோப்புகளைப் படித்தேன். குறிப்புகளை எழுதினேன். சற்றொப்ப 1954-ஆம் ஆண்டிலேயிருந்து ஒரு கண்ணில் ஏற்பட்ட அந்த பாதிப்புடன் வலியை-உறுத்தலை-நீர்வடிதலை-சிவந்துகொண்டு எரிச்சல் மிகுவதை-இத்தனையையும் பதினேழு ஆண்டுக் காலம் தாங்கிக்கொண்டும், அவ்வப்போது கண் மருத்துவர்கள் முத்தையா, ஆப்ரகாம், இராமலிங்கம் ஆகியோரிடம் கிசிச்சை செய்துகொண்டு தற்காலிகமாக நலிவினைப் போக்கிக் கொண்டும் கட்சிப் பணிகளைக் குறைவற ஆற்றினேன்.
இருந்த போதிலும் ஒரு கண்ணில் ஊசியால் குத்துவது போன்ற ஒருவித வேதனையுடன்-ஆனால் அந்த வேதனையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொய்வின்றி என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். விடிய விடியக் கண்விழித்துத் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் அட்டியின்றிச் சுற்றிச் சுழன்றேன். 1971-ஆம் ஆண்டில் தாங்கிக் கொள்ளவே முடியாத வேதனை அடிக்கடி கண்ணில் தாக்கிடவே வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதென்ற முடிவுக்கு வந்தேன்.
சென்னை டாக்டர்களும் அந்தக் கருத்தையே தெரிவித்தனர். அமெரிக்க அரசாங்கம் எனக்கு விடுத்த அழைப்பினைப் பயன்படுத்திக் கொண்டு மூன்று வாரகாலம் அமெரிக்காவில் சுற்றிப் பார்க்கவும் கண் சிகிச்சை பெறவும் புறப்பட்டேன். அப்படி சிகிச்சைக்குப் புறப்பட்ட அந்த நேரத்திலும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி விட்டுத்தான் கிளம்பினேன். கோவை மாவட்டத்தின் கொள்கைச் சிங்கமெனப் புகழப்பெற்ற உடுமலை நாராயணன் எம்.
பி. அவர்கள் மறைந்த காரணத்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. மதியழகன் அவர்களின் தம்பி கே. ஏ. கிருஷ்ணசாமி அந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று பிடிவாதம் செய்தார். அவருக்கு வெற்றிவாய்ப்பு இல்லையென்று கோவை மாவட்டக் கழகத்தினர் கூறிய காரணத்தால் கே. ஏ. கிருஷ்ணசாமிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தருவதாக வாக்களித்து மோகன்ராஜ் என்ற இளைஞரை வேட்பாளராக நிறுத்தப்பட்டது. அந்த மோகன்ராஜ் கட்சிக்கு ஒரு சோதனை வந்த காலகட்டத்தில் கட்சியினால் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதைக்கூட மறந்து விட்டு ஒதுங்கிக்கொண்டார்!
நல்ல வேளை கழகத்தைத் தாக்கிடவில்லை! அந்தமட்டில் லாபம்தானே! திட்டமிட்டபடி பொள்ளாச்சி தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு 1971 நவம்பர் 8-ஆம் நாள் மாலை அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டேன். என்னுடன் முரசொலி மாறன், நிதித்துறைச் செயலாளர் வெங்கட்ரமணன் இருவரும் வந்தனர். கண் மருத்துவ நிபுணர் டாக்டர் வெங்கடசாமி அவர்கள், அமெரிக்காவில் எங்களை வந்து சந்திப்பதாகக்கூறி முன்கூட்டியே சென்று விட்டார். 8-ஆம் தேதி மாலை 6-45 மணி அளவில் சென்னையில் புறப்பட்ட விமானம் 8-30 மணி அளவில் பம்பாய் நகரை அடைந்தது.
அங்கே பம்பாய் தமிழர்களின் சார்பில் தரப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு, இரவு ஒரு மணி அளவில் புறப்பட்டோம். நவம்பர் 10-ஆம் தேதியன்று பகல் 3மணி அளவில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் போய்ச் சேர்ந்தோம். விமான நிலையத்தில் இந்தியத் தூதர் எல்.கே.ஜா, அமெரிக்க அரசின் வரவேற்புத்துறை உயர் அதிகாரிகள், அமெரிக்க வெளிநாட்டிலாகா அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். அமெரிக்க விமான நிலையத்தில் அப்போது கழக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விசுவநாதன் அவர்களும் என்னை வரவேற்றார்.
விமான நிலையத்திலிருந்து நேராக இந்திய தூதர் எல். கே. ஜா அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். நவம்பர் 12-ஆம் தேதியன்று அமெரிக்க ராஜாங்க இலாகாவின் உயர்மட்ட அதிகாரிகளிடம் வங்கதேசப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலை குறித்து விளக்கினேன். அமெரிக்க ராஜாங்க இலாகாவின் சார்பில் எனக்கு பகல் விருந்து அளித்தார்கள். அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் - காங்கிரஸ் ஆகிய அவைகளின் உறுப்பினர்களையும் - அரசின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்தபோது பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினேன்.
அன்று மாலை புகழ்பெற்ற அமெரிக்க செனட் சபையின் உறுப்பினரும், ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக புகழுடன் விளங்கி மறைந்த ஜான் கென்னடி அவர்களின் இளைய சகோதரருமான எட்வர்டு கென்னடி அவர்களைச் சந்தித்து உரையாடினேன். மேலும் பாப்டோல், சாக்ஸ்பி ஆகிய செனட் உறுப்பினர்களுடனும் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கல்லாகர் என்பவருடனும் விவாதித்தேன். கல்லாகர் ஆசிய விவகாரங்கள் பற்றிய துணைக் குழுவின் தலைவராவார்.
நவம்பர் 13-ஆம் தேதியன்று உலகிலேயே பெரிய விவசாயப் பண்ணை என்று கூறப்படும் 'பெல்டஸ் வில்லி' என்ற இடத்தில் உள்ள விவசாயப் பண்ணையைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நேராக பால்டிமோர் நகரை அடைந்தேன். பால்டிமோர் நகரில் உள்ள "ஜான்ஹாப்கின்ஸ்" மருத்துவமனையில் எனது கண்ணைப் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று முடிவு கட்டினர். அதனை புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணர் டாக்டர் மாமுனி என்பவர் செய்தார்.
பதினேழு ஆண்டுக்காலம் நான் அனுபவித்த கண்வலி எனும் வதையை நான் எடுத்த துணிவான முடிவின் காரணமாகப் போக்கிக்கொண்ட நிம்மதி ஏற்பட்டது. நவம்பர் 14-ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்ற அன்றுதான் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டன. கழக வேட்பாளராக அங்கே போட்டியிட்ட மோகன்ராஜ் பெரும் வெற்றியை அடைந்தார் என்ற செய்தி எனக்கு தொலை பேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. 15-ஆம் தேதி காலை நாவலர் அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் எனக்குத் துணையாக இருந்த முரசொலி மாறனுடன் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் எனது பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய காயிதே மில்லத் அவர்கள் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து டெல்லி வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கும் செய்தி கேள்விப்பட்டிருந்த நான் அவரது உடல்நிலை குறித்து இரா. செழியன் மூலம் விவரம் கேட்டறிந்தேன். மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டேன். மருத்துவமனையில் இருந்தபோது எனக்கு அடிக்கடி உதவி புரிந்த அலெக்ஸாண்டர் என்ற டாக்டரையும், திருமதி வைத்தினாதன் என்ற அம்மையாரையும் மறக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள அமைச்சர் பெருமக்களிடமிருந்தும், கழக முன்னணித் தலைவர்களிடமிருந்தும், மற்றும் பல நண்பர்களிடமிருந்தும் என்னுடைய உடல்நலம் கேட்டு ஏராளமான தொலைபேசிகளும், தந்திகளும் வந்துகொண்டேயிருந்தன. அதற்கெல்லாம் நன்றி தெரிவித்து 17-11-71 அன்று தொலைபேசி மூலம் தமிழகப் பத்திரிகைகளுக்கு செய்தி தந்தேன். நவம்பர் 20-ஆம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து, அன்று கென்னடி முனை சென்று ராக்கெட் தளத்தைப் பார்வையிட்டேன்.
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான வால்ட் டிஸ்னி அவர்களின் அதிசய உலகமான "டிஸ்னி லாண்ட்" நகரைப் பார்த்தேன். தமிழகத்திலே அதுபோன்றதொரு நகரை எப்போது அமைப்போமோ என்று எண்ணிக் கொண்டேன். கென்னடி முனைக்கு அருகே உள்ள அழகுமிகு "ஆர்லண்டோ" நகருக்குச் சென்றேன். எழில்மிகு ஏரிகள் பல நிறைந்த நகரம் இது. அமெரிக்காவின் பிற பகுதிகளில் குளிர் வாட்டிக் கொண்டிருந்த நேரத்தில் ஆர்லண்டோ நகரம் மட்டும் வெப்பமாக இருந்தது.
ஆர்லண்டோவில் உள்ள நுண்கலை மற்றும் கலைக் கழகங்களுக்கு நிதி சேர்க்கும் முகத்தான் நடைபெற்ற ஒரு சிறப்பு விருந்தில் என்னைச் சிறப்பு விருந்தினனாக அழைத்தார்கள். இக்கலைக் கழகங்களின் ஆண்டுச் செலவு மட்டும் அப்போதே ஏழுகோடி ரூபாயாகும். அந்த சிறப்பு விழா பழங்கால முறையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு அமெரிக்க நாட்டின் பூர்வ குடிகளான சிவப்பிந்தியர்களின் உடைகளை அணிந்திருந்த அமெரிக்கப் பிரமுகர்களையெல்லாம் கண்டு வியந்தேன்.
அந்த விருந்து நடைபெற்ற நகரின் அழகிய ஏரியின் நடுவே இருந்த மிகப் பெரிய நீரூற்று பற்றிய கவிதை ஒன்றை எழுதினேன். அந்தக் கவிதையை ரசித்த அந்த விழாவின் தலைவர் அக்கவிதையினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட எனது அனுமதியைக் கேட்டார். அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அன்று நான் எழுதிய கவிதை வருமாறு :- "ஆர்லந்தோ எனும் நகரில் அரியதோர் ஏரியிலே அழகிய மத்தாப்பூ ஊற்றொண்டு கண்டேன் ஒளிவிளக்குப் போடுகின்ற தாளத்திற்கு ஒரு லயமும் பிசகாமல் ஆடுகின்ற நீரூற்று ஆட்டக்காரி நாட்டியத்தின் நேர்த்தி யென்ன சொல்வேன்!
பசும்புல் தரை மீது பால் நிறத்தில் பனிக்கட்டி உருள்வது போல் ஓர் காட்சி - அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே 'படக்' என மாறிவிடும் மற்றோர் காட்சி இப்படித் தான் இங்குள்ள 'அப்போலா, கிளம்பிற்றென்று இருள்கிழித்து வானேறும் நீரின் கரங்கள் பொற்கொல்லர் பட்டறையில் பொன் பரப்பும் மஞ்சள் ஒளி விற்பட்ட அம்பு போல விர்ரென்று எழுந்து பாயும். கற்காலக் கொள்கை மனிதர் கடவுளர்கள் சந்நிதியில் காவுக்கு ஓர் உயிரை வெட்டும் போது பீறிட்டுக் கிளம்புகின்ற ரத்தம் போல சீறித்தான் தாவுதய்யோ சிவப்பு வண்ணம்.
மார்கழித் திருநாளில் நம்மூரில் மங்கையர்கள் திருவாயில் பாவிரித்துத் தத்தம் தெருவாயில் பறங்கிப் பூவிரித்து வைக்கின்ற கோலம் போல் கண் கொள்ளாக் காட்சி கண்டேன். நல்ல வேளை தனியாக ரசிக்கின்ற வாய்ப்பெனக்கு தப்பினேன் அதனாலே! பெண்ணொருத்தி அருகிருந்தால் நீரூற்றின் வண்ணத்தைக் கணக்கெடுத்து - மறுநாளே வகைக்கு ஒன்றாக ஆடை கேட்பாள்."
பின்னர் 22-11-71 அன்று சிகாகோ நகரைச் சென்றடைந்தேன். அங்கு "வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகையைச் சேர்ந்த திரு. வாரன் உன்னா என்பவரும், "பால்டிமோர் சன்" பத்திரிகையைச் சேர்ந்த திரு. ஆடம்பிளேமேர் என்பவரும் என்னைச் சந்தித்து முறையே தங்கள் பத்திரிகைகளுக்கான பேட்டியினை சிறப்பாக வெளியிட்டனர்.
