நெஞ்சுக்கு நீதி
"டாக்டர்" பட்டம் · 181 / 391
"டாக்டர்" பட்டம் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிற புரையோடி விட்டிருக்கிற சில நிலைமைகள், ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய வேண்டுமென்று ஆர்த்தெழுந்திருக்கிற உணர்வுகள், பொருளாதாரத்திலே படுபாதாளத்தில் போய்க் கொண்டிருக்கிற ஏழை மக்களின் நிலவரங்கள், இவைகளின் காரணமாக உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிவிடும் சில இளைஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில், தாங்கள் கொண்ட கொள்கைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காக தொடக் கூடாத - எண்ணியும் பார்க்கக்கூடாத வன்முறைகளைக் கருவிகளாக ஆக்கிக் கொண்டு கொலைகள் மூலம் தங்கள் இலட்சியம் வெற்றி பெறும் எனக் கருதி அதன் தொடர்பாக வடக்கே சில மாநிலங்களில் காணப்பட்ட சம்பவங்கள், மெல்ல மெல்ல தெற்கேயும் பரவி குறிப்பாகத் தமிழகத்திலே சில மாவட்டங்களில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
நக்சல்பாரி இயக்கம் என்ற பேரால் இந்த இயக்கத்தை நடத்துகிறவர்கள்; ஒரு குறிக்கோளுக்காக இந்த இயக்கத்தை நடத்துகிறோம் என்று வாதிட்டாலும் கூட அதற்கென அவர்கள் கையாளுகிற முறைகளை யாரும் ஏற்றுக் கொள்ள இயலாது. வறுமையிலே அழுத்தப்பட்டுப் பொட்டுப் பூச்சிகளாய் புன்மைத் தேரைகளாய் வாழ்வு நடத்திக் கொண்டிருக்கும் ஏழை எளியோர் கூட தங்களின் எதிர்காலத்திற்காக நடைபெறும் இத்தகைய வன்முறைகளை நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
பண முதலைகள், நிலத் திமிங்கிலங்கள் ஆகியோரை வேட்டையாடி வீழ்த்தி விடுவதின் மூலம்; தாங்கள் விரும்பும் சமுதாய் அமைப்பை உருவாக்கி விடலாம் என எண்ணிடும் தீவிரவாத வாலிபர்கள், அந்த எண்ணமும் கை கூடாமல் தங்களையும் பலியிட்டுக் கொள்கிற கொடுமையும் வேதனையும் நிறைந்த நிகழ்ச்சிகளும் நடைபெற்று விடுகின்றன. கழக அரசு நடைபெற்ற காலத்திலே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு நடைபெற்று அதன் தொடர்பாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கலியபெருமாள் என்ற தீவிர நக்சலைட்வாதியைக் கூட காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய நிலையெல்லாம் உண்டு.
சென்னை மேயராகப் பொறுப்பேற்றிருந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த க. சுப்பு அவர்களும் என்னிடம் தந்த முறையீட்டைப் பெற்று, நண்பர் கலிய பெருமாள் அவர்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தது கழக அரசு! இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு நோய் என்ன என்பதை முதலிலே அறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பது போல சமுதாய-பொருளாதார அரசியல் ரீதியில் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டுமென்று அனைவரும் யோசிக்க வேண்டும்.
அந்தக் கடமை அரசுக்கும், கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறேன். முதலமைச்சராக எம்.ஜி.ஆர். வீற்றிருக்க எதிர்க்கட்சித் தலைவனாக நானிருந்து - வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் நடைபெற்ற நக்சலைட் கிளர்ச்சிகள் குறித்து விவாதம் வந்த போது எடுத்து வைத்த கருத்துக்களின் சுருக்கம் தான் இது! அதன் தொடர்பாக 1982-ல் போலீஸ் மானியத்தில் பேசும் போது கூட நான் பின்வருமாறு குறிப்பிட்டேன்.
"நக்சலைட்டுகள் - போலீசார் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு கைகலப்பின் காரணமாக போலீசாரும் நக்சலைட் இளைஞர்களும் மடிந்து போன ஒரு நிகழ்ச்சி குறித்து இந்த மன்றத்தில் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசப்பட்டபொழுது நான் சொன்ன கருத்துக்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரத் தக்கவையாகும். ஏன் நக்சலைட் உருவாகிறான்? எந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட வன்முறைகள் தலைதூக்குகின்றன? மிதிக்க மிதிக்கப் புழுவும் புலியாகும் என்கிற அளவுக்கு ஏழை எளிய மக்கள்-விவசாயப் பெருங்குடி மக்கள் - தொழிலாள மக்கள் - முடக்கப்பட முடக்கப்பட.
ஒடுக்கப்பட ஒடுக்கப்பட, கிளர்ந்தெழுகிறார்கள். இந்த அடிப்படையைப் பற்றி சிந்திக்காமல் அலட்சியப்படுத்தி விட்டு துப்பாக்கிக் குண்டுகளால் பிரச்சினையைத் தீர்த்து விடலாமெனக் கருதி - நக்சலைட் அல்லாதவர்களுக்கும் நக்சலைட் பட்டம் சூட்டி அவர்களைப் போலீசாரே கொன்று குவித்துத் தண்டனை வழங்குவது என்பது எங்கே போய் முடியும் என்பதை இந்த அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்" இவ்வாறு ஆளுங்கட்சியாக இருந்த போதும் சரி-எதிர்க்கட்சி என்ற நிலையிலும் சரி - நக்சலைட்டுகளின் தீவிரவாத வன்முறையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலுங் கூட - அந்த இளைஞர்கள்பால் எனக்கொரு இரக்க உணர்வு இருந்தே வந்திருக்கிறது.
1971-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாப் பேருரை ஆற்றிடவும் அந்தப் பல்கலைக் கழகம் எனக்களித்த "டாக்டர்" பட்டத்தைப் பெறவும் நான் அங்கு சென்றிருந்த போது அந்தத் தீவிரவாத இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக நேரிட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் காங்கிரஸ் என்றும், இந்திய மாணவர் காங்கிரஸ் என்றும் அமைப்புகளின் பெயரால் எதிர்ப்புத் துண்டு அறிக்கைகளை அந்தத் தீவிரவாத மாணவர்கள் வெளியிட்டு - பெரும் அமளிக்கு வித்திட்டார்கள்.
ஆனால் பெரும்பாலான மாணவர்கள் என்னை வரவேற்றுப் பட்டமளிப்பு விழா உரையினை அமைதியாகக் கேட்டதோடு, ஆர்வத்துடன் முன் வந்து பட்டங்களையும் பெற்றுச் சென்றனர். விழா நிகழ்ச்சிகள் காலையில் முடிவுற்ற பிறகு மாலையில் அந்தத் தீவிரவாத மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தகராறு மூண்டது! அந்த நிகழ்ச்சியையொட்டி உதயகுமார் என்ற மாணவர் குளத்தில் விழுந்து இறந்து விட்ட செய்தியும் வந்தது! ஒன்றோடொன்று தொடர்பு படுத்தப்பட்டன!
அந்த நிகழ்ச்சி குறித்து நீதி விசாரணைக்கு உடனே அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. உதயகுமாரின் பிணம் குளத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு உப்பி விட்ட காரணத்தால்; முதலில் இறந்தது யார் என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. உதயகுமாரின் பெற்றோரால் கூட அடையாளம் கண்டு பிடிக்க இயலவில்லை. நீதி விசாரணை அறிக்கையில் குளத்தில் விழுந்து மாண்டது உதயகுமாராக இருக்கலாமென்றும், போலீஸ் தாக்குதலால் அது நிகழவில்லையென்றும் தெளிவாக்கப்பட்டது.
கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாத எனக்கு "டாக்டர்" பட்டம் கொடுக்கலாமா என்பதுதான் அன்றைய தினம் எழுப்பப்பட்ட பெரிய பிரச்சினையாக இருந்தது. அந்தக் கேள்வியை மனத்தில் ஒரு ஓரமாக வைத்துக் கொண்ட நான் அந்த விழாவில் உரையாற்றினேன். "விரிந்து மலர்ந்து தழைக்கும் அறிவுலகில் ஆற்றலாளர்களாய்ப் பீடு நடை போடப் பட்டம் பெறுகின்றீர் இன்று. உமக்கிடையே வாழ்த்துரை தந்திட வந்துள எனக்குமோர் பட்ட மளிப்பினை நடாத்துகின்ற நிகழ்ச்சிக்கு எவ்வாறு நான் நன்றி கூறுவேன்.
சங்க காலத் தமிழகத்தில் விழுப்புண் படாது! இயற்கையாக ஒருவன் இறந்திடுவானாயின் அவன் சடலத்தைப் புதைப்பதற்கு முன்னர் கத்தியால் ஓர் காயத்தைச் செய்து அவனை விழுப்புண் பெற்றவனாய் ஆக்குதல் மரபாம். அவ்வாறே இன்று எனக்கும் ஓர் பட்டத்தை அளித்து என்னையும் பட்டம் பெற்றவனாக ஆக்குகின்றீர் என எண்ணுகின்றேன். என் உழைப்பில் நான் மேலும் உற்சாகம் பெற்றிட - என் கொள்கைகளில் நான் மேலும் உறுதிகொண்டிட - இந்தச் சிறப்பு எனக்குத் தரப்பட்டுள்ளதாகக் கருதி, இந்த விருது தமிழ் உணர்வுக்கும், கலையார்வத்துக்கும், பண்பட்ட பகுத்தறிவுத் கொள்கைக்கும் அளிக்கப்பட்ட விருது எனக் கொண்டு, இந்தப் பெருமையை என்னருந் தமிழர்க்கும் எனை வளர்த்த தலைவர்க்கும் காணிக்கையாக்குகின்றேன்."
இப்படித் தான் அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உரையைத் தொடங்கினேன். இளைஞர்கள் தான் முற்போக்கு எண்ணங்களின் முன்னோடிகள். இளைஞர்களின் அமைதியின்மை - இந்தியப் பிரச்சினை அல்ல; அனைத்துலகப் பிரச்சினை! ஒவ்வொரு பழைய தலைமுறையும், புதிய தலைமுறையைப் பழித்தே பழக்கப்பட்டிருக்கிறது. பிளேட்டோ காலத்திலிருந்து இப்படித்தான்; இன்று நேற்றல்ல! "இந்தத் தலைமுறை முன்புபோல் இல்லை. தரம் குறைந்து விட்டது" இது நமது பாட்டனார் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்படும் குறை!
குடுமித் தலையில் மாற்றம் ஏற்பட்டபோதும் குமுறல்-இப்போது உடலைப் பிடிக்கும் உடைகளைக் காணும்போதும் குமுறல்-நடையுடைகளில் ஏற்படும் மாற்றங்களல்ல; மனத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான், சமுதாயத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், புதிய கோணங்களை ஏற்படுத்தவல்லவை! ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலை முறைக்கும் வேறுபாடு இருப்பது தவறில்லை. ஆனால், இடையில் ஆக்க பூர்வமான வளர்ச்சி தழைத்திடல் தேவை. பிளேட்டோ காலத்திம் சில நூறு மாணவர்கள் இருந்தார்கள்; ஆனால் இன்று அமெரிக்க நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேர் மாணவர்கள்.
இந்தியாவில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கும் மாணவர்களின் தொகை, பிரான்சு நாட்டு மக்கள் தொகைக்குச் சமம். மாணவர்களில் ஒரு சிலரது உள்ளத்தில் தீவிரவாதம் பொங்கியெழுந்து வழிந்தோடுகிறது. நான் தீவிரவாதத்தின் பகைவனல்ல. முகத்திலே இருக்கும் பருக்கள் அழகைக் கெடுக்கின்றன. உண்மை தான். அதற்கு அடிப்படைக் காரணமுணர்ந்து மருந்திடல் தான் முறையே தவிரச் சந்திர பிம்பமெனும் வதனத்தை விகாரமாக்கும் பருக்களைக் கிள்ளி எறிகிறேன் என நகங் கொண்டு பெயர்த்தெறிந்தால் ரத்தம் கொப்பளிக்கும்.
தழும்புகள் தோன்றும். சில வேளைகளில் புண்பட்டுப் புரையோடி உயிருக்கே உலை வைக்கும். குறு மருக்களை அகற்றும் கொள்கையில் வேறுபாடில்லை. முறையில் தானே முரண்பாடு! இலட்சியத்தைப் போலவே இலட்சியத்தை அடையும் வழிமுறைகளும் நன்முறைகளாக இருத்தல் வேண்டும். பல்கலைக் கழகத்திற்கு வரும் பாதையிலே பால் வடியும் முகத்தினன்-மாணவன் ராஜேந்திரன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான். தன்னை வளர்த்த மொழியைக் காக்க, அவன் தன்னுயிரைத் தாரை வார்த்தான்.
இலட்சியம் ஈடேறப் பிறரை வருத்தல்-பிறரை அழித்தல்-முறையல்ல! கூடாது! கூடவே கூடாது! "கொலைவாளினை எடடா; மிகு கொடியோர் செயல் அறவே!" என்றார் பாதிதாசன். கவிதையை உற்றுக் கவனியுங்கள்! கொடியோர் செயல் அறவே; கொலைவாளினை எடடா என்றாரே தவிர; கொடியோர் தலை அறவே கொலைவாளினை எடடா எனக் கூறினார் இல்லை! சிலர் செயல் அறத் தான் அந்தச் சிங்க நாதம் செய்தார். அந்தச் சிங்கக் கூட்டத்தைத் தான் என் எதிரே காணுகின்றேன். இறும்பூதெய்துகின்றேன்.
கருமுகில் கண்டு திருமயில் ஆடுமென்பர். கதிரொளி கண்டு தாமரை மலருமென்பர், என் நிலையும் அது தான்! உமது விழியொளி கண்டு மகிழ்கின்றேன்-விடை பெற முடியாது பிரிகின்றேன்" இவ்வாறு எனது உரையை அன்றைக்கு நிறைவு செய்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழக சம்பவம் குறித்து 1-8-71 "ஜனசக்தி" இதழ் எழுதியிருந்த கட்டுரையின் சில பகுதிகளை இங்கு நினைவூட்டுவது பொருத்தமானதாகும். "அண்ணாமலைப் பல்கலைக் கழக நிகழ்ச்சிகள் நமக்கு வேறு பல சம்பவங்களை நினைவூட்டுகின்றன.
ஒருமுறை இலக்கிய மேதை மார்க்சிம் கார்க்கியைப் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேச மாணவர் பேரவை அழைப்பு விட்டது. பாரிஸ் பல்கலைக் கழகச் சட்டவிதிகளின்படி, பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் பேசலாம். அந்த விதிப்படி, மாக்சிம் கார்க்கிக்கு, 'நீங்கள் படித்த கல்லூரி எது? வாங்கியுள்ள பட்டம் என்ன?'
என்ற கேள்விக் கடிதத்தை அனுப்பினார்கள்." மாக்சிம் கார்க்கி, பல்கலைக் கழகத்தவர் அல்ல. 'நான் உலகம் எனும் பல்கலைக் கழகத்தில், மக்கள் என்னும் முடிவுறா இலக்கியத்தைக் கற்று வரும் மாணவன்' என்று பதில் எழுதினார். இதன் விளைவாகத் தான் "எனது பல்கலைக் கழகம்" என்ற நூலை மாக்சிம் கார்க்கி எழுதினார். இன்றைக்கு அதே பாரிஸ் பல்கலைக் கழகத்தில் மாக்சிம் கார்க்கியின் படைப்புக்கள் இலக்கியத்திற்குப் பாடப் புத்தகங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இங்கே தமிழத்தில் பல்கலைக் கழகங்களில் கட்டாய பாடமாகப் பயில்கிறோமே திறக்குறள், அதைப் படைத்துத் தந்த வள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவரா? கவிச் சக்கரவர்த்தி கம்பன் பெற்ற பல்கலைக் கழகப் பட்டம் எது? பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் பல்கலைக் கழகங்கள் தந்த பட்டங்கள் ஏது? இதனால் கல்வி வேண்டாம், படிக்காத மேதைகளே மேல், என்று மொட்டையாக வாதிடுவதாகவும் கொள்ளவேண்டாம்; பட்டம் பெற்ற நவீன உயர்சாதி அகங்காரம் தான் அண்ணாமலைப் பல்கலைக் கழக குழப்பங்களுக்கு மூல காரணம்.
பட்டம் பெறாத பலர் உலகில் பல அரங்கங்களில் ஆற்றியுள்ள பணிகளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், இந்தக் கூச்சல் எழுந்திராது. இப்படி 'ஜனசக்தி'யில் நண்பர் தா. பாண்டியன் அவர்கள் எழுதியது என் உள்ளத்திற்கு இதமாக இருந்தது.
