உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சில சட்டங்கள்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சில சட்டங்கள்! · 180 / 391

சில சட்டங்கள்! சோ ஷலிச சமுதாய அமைப்பைக் காண விரும்பும் ஒரு அரசு, நிலச் சீர்திருத்தத்தில் கண் துடைப்பாகக் காரியமாற்றாமல் படிப்படியாக முற்போக்கான சட்டங்களைக் கொண்டு வருவதில் முனைப்பாக இருந்திடல் வேண்டும். ஏராளமான நிலபுலங்களை மக்கள் ஏமாந்த காலத்தில் தங்களுக்குச் சொந்தமாகக் குவித்துக் கொண்டோர் கிராமத்து ராஜாக்களாகப் பரிபாலனம் செய்து வந்தனர். பெரும் பண்ணைக்காரர்களாகச் சிலரும் அவர்களிடத்தில் அடிமைகளாகப் பண்ணையாட்களும் என்ற நிலைதான் கிராமப்புறங்களை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

விடுதலைப் போராட்ட காலத்திலேயே காங்கிரஸ் கட்சியினால் முழங்கப்பட்டு வந்த நில உச்சவரம்பு என்ற கொள்கை, சுதந்திரம் வந்தபிறகு ஆங்காங்கு அமைந்த காங்கிரஸ் ஆட்சிகளினால் எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுச் சட்ட வடிவம் பெறும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அப்படியொரு ஆபத்து தங்களுக்கு வந்து விடக்கூடாதென்பதற்காக பெரு நிலச் சொந்தக்காரர்களான கிராமத்துப் பிரபுக்கள் பலபேர் தங்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.

நில உச்சவரம்பு பற்றிக் காங்கிரஸ் தொண்டர்கள் விறு விறுப்பாகப் பேசியபோதெல்லாம் தமிழகத்துக் காங்கிரசின் பெருந்தலைவர்கள் தங்களைச் சுற்றியிருந்த கபிஸ்தலங்களுக்காகவும், பூண்டிகளுக்காகவும், வடபாதிமங்கலம், மூலங்குடி, உக்கடைகளுக்காகவும் வாய்மூடி மௌனிகளாகவே இருந்தனர். ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட தேசீய விடுதலை இயக்கமான காங்கிரஸ் பேரியக்கம் நிலப்பிரபுக்கள், ஆலை அரசர்கள், பஸ் முதலாளிகள் ஆகியோரின் அரவணைப்பில் தேர்தல் பேரியக்கமாக நடமாட வேண்டிய அளவுக்கு எப்படியோ உள்ளாகிவிட்டது.

அதனால் நிலச் சீர்திருத்தங்களும், தேசீயமயக் கொள்கையும் தயங்கித் தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்தன. தேசீயமயக் கொள்கை என்ற பெயரால் நூறு மைல் எக்ஸ்பிரஸ் பஸ்கள் மட்டுமே அரசுடைமையாக ஆக்கப்பட்டனவே தவிர, டி.வி.எஸ்., ஏ.பி.டி., ராமன் அண்ட் ராமன், எஸ்.ஆர்.வி.எஸ். போன்ற முரட்டுத் தனியார் பஸ் கம்பெனிகள் மூட்டை மூட்டை- யாகப் பணத்தை லாபமாகக் குவித்துக் கொண்டிருந்தன. ஆட்சிப் பொறுப்பை நான் ஏற்றிருந்த அந்தக் கால கட்டத்திலே அந்தப் பழம் பெரும் பஸ் கம்பெனிகள் எல்லாம் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அரசின் போக்குவரத்துக் கழகங்களாக மாறின.

பல்லவன், பாண்டியன், சேரன், சோழன், அண்ணா பெரியார், கட்டபொம்மன் என்ற பெயரில் அந்தப் போக்குவரத்துக் கழகங்கள் மக்களின் தேவைக்கேற்ப சேவை புரியத் தொடங்கின. 1973-ஆம் ஆண்டு பஸ்களை முழுமையாகத் தேசீய உடைமையாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு முதல் கட்டமாக நீலகிரி மாவட்ட பஸ்களை முழுவதுமாக அரசுடைமையாக்கினோம். அதற்குள் பஸ் முதலாளிகள் அந்த முற்போக்குச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரையில் சென்றனர்.

சுமார் பத்தாண்டுகால இடைக்காலத் தடைக்குப் பிறகு, அந்த வழக்கைத் தீர விசாரித்த உச்ச நீதிமன்றம் 1973-ல் கழக ஆட்சிக் காலத்தில் பஸ்களைத் தேசீய உடைமையாக்கிடக் கொண்டு வரப்பட்ட சட்டத்தைப் பாராட்டி அது செல்லத்தக்கதே எனத் தீர்ப்பும் அளித்துள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது அந்த இனிப்பான செய்தி கிடைத்துள்ளது என்றாலுங்கூட, இன்றுள்ள எம்.ஜி.ஆர். ஆட்சியில் அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் முடக்கிப் போட்டு, பஸ் முதலாளிகளுக்குச் சாதகமாக ஒரு அவசரச் சட்டத்தையும் பிறப்பித்திருக்கிறார்கள்.

அண்ணா விரும்பிய தேசீயமயக் கொள்கை, அவரது பெயரை மட்டும் கட்சிக்குச் சூட்டிக்கொண்டவர்களால் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று! விடுதலைப் போராட்ட காலத்தில் நில உச்சவரம்பு முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்த காங்கிரசும், தமிழ் நாட்டில் 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. திடீரென்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச்சட்டம் 1959-ஆம் ஆண்டிலேயே "வரப்போகிறது!

வரப்போகிறது!" என்ற "பராக்கு"களுடன் "பரிவட்டம்" கட்டிக்கொண்டு வந்த காரணத்தால் நிலப்பிரபுக்கள் அத்தனை பேரும் முன்கூட்டியே தங்கள் நிலங்களை உற்றார் உறவினர்களுக்கும், அறநிலையங்களின் பெயராலும் வீட்டில் உள்ள சாமி சிலைகள், சாமி படங்களின் பெயராலும் பிரித்துப் பிரித்து எழுதி வைத்துக்கொண்டனர். எல்லா நிலப்- பிரபுக்களும் அவ்வாறு தங்களுக்கு வசதியாக எழுதி வைத்துக் கொண்டபிறகு 1960-ஆம் ஆண்டு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் 1959-ல் அவசர அவரமாக என்ன நடந்தது என்பதற்குச் சில உதாரணங்கள் தர விரும்புகிறேன். 1959 வரையில் கபிஸ்தலம் பண்ணையின் நில அளவு மொத்தம் 2,028 ஏக்கர்! அதில் 1,464 ஏக்கரா பிரித்துப் பிரித்து விற்பனை செய்யப்பட்டு விடுகிறது! மிச்சத்தில் 389 ஏக்கர், தரிசு நிலம் என்று அறிவிக்கப்பட்டு விடுகிறது! 125 ஏக்கர் அறக்கட்டளையென அறிவிக்கப்படுகிறது! எனவே 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டப்படி அந்தப் பண்ணையிலிருந்து அரசுக்கு உபரியாகக் கிடைப்பது நான்கு ஏக்கர் 84 சென்ட் மட்டுமே!

அடுத்தது பூண்டிப் பண்ணையார்-மொத்த நிலம் 467 ஏக்கர்! 1959 இறுதியிலேயே 295 ஏக்கர் நிலம் பிரித்து விற்கப்பட்டு விடுகிறது. 134 ஏக்கர் வீட்டில் பாகம் செய்து கொள்ளப்படுகிறது. அதே பண்ணையில் இன்னொருவரின் மொத்த நிலம் 385 ஏக்கர்! அதில் 307 ஏக்கர் முன் எச்சரிக்கையாக விற்கப்பட்டு விடுகிறது! அதே பண்ணையில் இன்னொருவரின் மொத்த நிலம் 625 ஏக்கரில் 1959-ஆம் ஆண்டுக்குள் 552 ஏக்கர் விற்பனை செய்யப்பட்டு விடுகிறது!

அதே பண்ணையில் மற்றொருவரின் மொத்த நிலம் 298 ஏக்கரில் 197 ஏக்கர் நிலம் முன் கூட்டியே விற்கப்பட்டு விடுகிறது. அதே பண்ணையில் பிறிதொருவரின் மொத்த நிலம் 498 ஏக்கரில் 468 ஏக்கர் நிலம் சட்டம் வருவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு விற்கப்பட்டு விடுகிறது. அதே பண்ணையில் மற்றொருவரின் மொத்த நிலம் 699 ஏக்கரில் 629 ஏக்கர் முன்கூட்டியே விற்கப்பட்டு விடுகிறது! மற்றும் ஒருவரின் நிலம் 446 ஏக்கரில் 256 ஏக்கர் விற்பனை!

100 ஏக்கர் பாகப் பிரிவினை! அந்தப் பண்ணையில் மட்டும் ஆக மொத்தம் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தில் 1959 இறுதியில் சட்டம் வரப்போவதை அறிந்து முன் ஜாக்கிரதையாகக் காரியங்கள் ஆற்றியதால் அரசுக்கு உச்சவரம்பு சட்டத்தில் கிடைத்த மிச்ச நிலம் 48 ஏக்கர் மட்டும்தான்! இதே வழியைப் பின்பற்றித்தான் வடபாதிமங்கலங்களும். மூலங்குடிகளும் தப்பித்துக் கொண்டன! அதனால்தான் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட உச்சவரம்புச் சட்டத்தை அண்ணா அவர்கள் மிச்சவரம்புச் சட்டம் என்று கேலி பேசினார்.

அந்தச் சட்டப்படி தமிழகம் முழுதும் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது 24,194 ஏக்கர்! அதிலே அரசு கைப்பற்றியது 16,330 ஏக்கர்! நிலமற்ற விவசாயிகளுக்கு ஒப்படை செய்தது எதுவுமில்லை! 1970-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கழக ஆட்சி 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு எனத் திடீர் என அறிவித்து ஒரு சட்டத்தையும் இயற்றியது. அந்த உச்சவரம்புச் சட்டத்தால் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது 1,08,068 ஏக்கராகும்! அதில் அரசு கைப்பற்றியது 88,146 ஏக்கர்!

நிலமற்றவர்களுக்கு ஒப்படை செய்த நிலம் 62,682 ஏக்கர் பயனடைந்த உழவர் பெருமக்கள் 38,504 பேர்! இத்தகைய புரட்சிகரமான சட்டங்களையெல்லாம் கொண்டு வந்த கழக அரசு, நிதிநிலையின் காரணமாக மதுவிலக்குச் சட்டத்தை ஒத்திவைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டது! அந்தச் சட்டம் ஒத்திவைப்பது பற்றி கேள்விப்பட்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களே என் இல்லம் தேடி வந்து அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களும் என்னைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் எடுத்த முடிவுக்காக மதுவிலக்குச் சட்டத்தை ஒத்திவைக்கவில்லையென்றும், தமிழக அரசின் நிதி நிலைமையை உத்தேசித்துச் சிறிது காலம் அந்த ஒத்திவைப்புத் தேவைப்படுகிறதென்றும் அந்தப் பெரியவர்களிடம் விளக்கினேன். மதுவிலக்கை ஒத்தி வைத்து சட்டப்பேரவையில் நான் உரை நிகழ்த்தும்போதுகூட மெத்த வேதனையுடன்தான் இருந்தேன்.

"புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டுமென்று காந்தியடிகள் கூறினாரோ, அந்தக் கொள்கை அவர் ஏந்திய கொடி நிழலில் அணிவகுத்து நின்ற அவர்தம் தானைத்தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல மத்திய அரசினை நடாத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?"

என்று சட்டப்பேரவையில் பேசினேனே தவிர, மனச்சாட்சி இடங்கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச சட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தேன். மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி காமராசர் அவர்கள் போர்க்குரல் கொடுத்தார். அவரது கட்சியைச் சேர்ந்த பல்லாயிரவர் மறியல் செய்து சிறைச்சாலைக்குச் சென்றனர். அவர்கள் யார் மீதும் வழக்கு நடத்தி தண்டனை வாங்கித்தர முனையாமல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஒத்திவைக்கப்பட்டிருந்த மதுவிலக்குச் சட்டத்தை 1973-ஆம் ஆண்டு மறுபடியும் அமல் நடத்தக் கழக அரசு முன் வந்து அவ்வாறே அறிவித்து மதுவிலக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது! இன்றைக்கு மதுவிலக்கை ரத்து செய்துவிட்டுப் பல முனைகளிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாகக் குவிக்கிறார்களே; அது போல் இல்லாமல் அன்றைக்கு அரசின் நிதி ஆதாரத்திற்காக மட்டுமே மதுவிலக்கு கைவிடப்பட்டது! ஆம்; ஒத்திவைக்கப்பட்டது!

பின்னர் மக்கள் கருத்தை மதித்து மதுவிலக்குச் சட்டம் எழுந்து நடமாடத் தொடங்கியது.