உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பிறந்த நாள் பணிகள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பிறந்த நாள் பணிகள் · 179 / 391

பிறந்த நாள் பணிகள் அனைத்து ஜீவராசிகளும் ஆண்டவன் படைப்பு என்று அனுதினமும் காலட்சேபம் நடத்திக் கொண்டிருக்கிற உபதேசிகளின் தொகை நாட்டிலே பெருகிய வண்ணமிருக்கிறது. அந்த ஜீவராசிகளில் உயர்திணைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள மனிதர்களைச் சாதிவாரியாகப் பிரித்து தீண்டத் தக்கவன்-தீண்டத் தகாதவன் என்று கொடுமைப்படுத்திடும் செயலைப் போலவே சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினராகத் தொழுநோயால் அவதியுறும் இரவலர்களையும் சொறிநாய்களைவிடக் கேவலமாகத் துரத்திடும் நிலையும் இருந்து வருகிறது.

புகைவண்டி நிலையங்களில், பேருந்து நிலையங்களில், கோயில் வாசல்களில் அழுகிப்போன உடல், குறைந்துபோன அங்கங்கள், இவற்றை மூலதனமாகக் கொண்டு "பிச்சைக்கார வியாபாரம்" நடத்தும் ஏழை எளியோர்க்கு ஏதாவது செய்யவேண்டுமென என் நெஞ்சில் அலைமோதிக்கொண்டிருந்த துடிப்பு உணர்வுக்கு செயல்வடிவம் கொடுக்க, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்திட எண்ணினேன் எனவே 1971-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3-ஆம் நாள் எனது 48-வது பிறந்த நாளை "தொழு நோய்ப் பிச்சைக்காரர் நல்வாழ்வு நாள்" என அறிவித்து, அவர்களுக்கு வாழ்வளிக்க மாவட்டந்தோறும் விடுதிகள் கட்டுவதற்கான திட்டங்களைத் தீட்டினேன். எல்லா மாவட்டங்களிலுமுள்ள அந்த விடுதிகளில் சுமார் நாலாயிரம் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த விடுதிகள், ஏனோதானோவென்று கட்டப்படாமல் நல்ல வசதிகளுடன் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டன. அங்கே அவர்களுக்கு பயிரிடுதல், தொழில்கள் செய்தல் போன்ற பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கை கால்கள் குறைந்த நிலையில் அவர்களால் எத்தகைய கருவிகளைக் கொண்டு தொழில் புரியும் பயிற்சிகளைப் பெற முடியுமோ அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு விடுதியிலும் தொழுநோய் சிகிச்சைக்கான மருத்துவ நிலையங்களும் அமைக்கப்பட்டன.

விடுதிகளை விட்டுத் தொழுநோய் இரவலர்கள் வெளியில் சென்று பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. விடுதிகளிலேயே அவர்களுக்கு நல்ல உணவு வழங்கப்பட்டது. விடுதியில் நோய்க்கு சிகிச்சையும் பெற்றுக் கொண்டு, தொழிலும் கற்றுக்கொண்டு, இனிப் பிச்சையெடுக்காமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டு, அதன்படி நடப்பவர்கள் மட்டுமே விடுதிகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள். "பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அமைந்திருக்கிறது" என்று ஆளுநர் கே.கே.ஷா, பல நிகழ்ச்சிகளில் புகழ்ந்துரைத்தார்.

செங்கற்பட்டுக்கருகில் உள்ள பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் அந்த விடுதியில் வாழ்வோருக்கான தொழில் இயந்திரமொன்றைத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், தொழுநோய்ப் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் தமிழக அரசின் போற்றத்தக்க திட்டமென்று குறிப்பிட்டுப் புகழ்ந்து கூறினார். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது இதேபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அரசின் சார்பிலும் பொதுமக்கள் உதவியுடனும் நடைமுறைப்படுத்தப் பட்டன.

நகரங்களில் வாழும் ஏழை எளியோர், கிராமங்களில் வாழும் ஏழை எளியோர் மட்டுமல்ல; நடுத்தர வர்க்கத்தினர்கூட, தங்களின் கண்ணொளி பாதிக்கப்படுமேயானால் அதற்கேற்ற சிகிச்சை பெற்று புத்தொளி பெற்றிட முடியாத அளவுக்கு இருந்திட்ட நிலை என் உள்ளத்தைப் பல காலமாகக் குடைந்து கொண்டிருந்தது உண்டு. ஒரு ஏழை, தனது கண்ணொளியை இழந்து அதனை மீண்டும் பெற எண்ணினால், கிராமத்திலிருந்து நகர்ப்புற மருத்துவமனைக்குச் சென்று "கேட்ராக்ட்" அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், மருத்துவமனையில் ஒரு வார காலம் ஓய்வெடுக்கவும், அப்போது தேவைப்படும் சத்துணவைப் பெறவும், மூக்குக் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொள்ளவும் தேவையான குறைந்தபட்சத் தொகைக்குக் கூட வழியில்லாமல் இருந்தது மாத்திரமல்ல; அந்தப் பண வசதியே கிடைத்தால் கூட-கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்ற அக்கறையுமற்றிருந்தான்.

அந்த ஏழை எளியோர் இருக்கும் கிராமப்புறம் தேடிச் சென்று கண் டாக்டர்கள் புடைசூழ பெரிய அளவில் முகாம்களை அமைத்து ஒவ்வொரு முகாமிலும் சுமார் ஆயிரம் பேருக்குக் குறையாமல் பல்வேறுவிதமான கண் நோய்களுக்கு சிகிச்சையளித்ததோடு - "கேட்ராக்ட்" அறுவை வைத்தியமும் நடத்தப்பட்டு அவர்களுக்கு அந்த முகாம்களில் ஒரு வாரம் தங்குவதற்குப் போதுமான வசதிகளும் வழங்கப்பட்டு - இப்படி நூற்றுக்கணக்கான முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணொளி கிடைக்கப்பெற்று மகிழ்ந்து திரும்பினார்கள். கண்ணொளி வழங்கும் அந்தப் பரவலான திட்டம் வெற்றிகரமாக நடைபெற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் அவர்கள் பெரும்பணி ஆற்றினார்கள்.

கண்மருத்துவ நிபுணரும் ஏழைகளுக்குக் கண்ணொளி வழங்குவதில் ஆர்வங்கொண்டவருமான மதுரை டாக்டர் வெங்கடசாமி அவர்கள், தமிழக அரசின் கண்ணொளி முகாம்களை கிராமப்பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் வெற்றிகரமாக நடத்தி லட்சக்கணக்கானோர் நன்மை பெற ஆக்கபூர்வமான யோசனைகளை அவ்வப்போது கூறியதுமல்லாமல் அவரும் உடனிருந்து அந்த முகாம்களில் நற்பணியாற்றினார். டாக்டர் ஆப்ரகாம், டாக்டர் செல்வம் போன்ற கண் மருத்துவ நிபுணர்கள் அந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான உதவியாளர்களுடன் தங்கியிருந்து அரிய சேவை புரிந்தனர்.

"மனிதனை வைத்து மனிதன் இழுப்பதா? மனிதனா? மாடா?" இந்தக் கேள்வியை மகாத்மா காந்தியடிகள் கேட்டு, அதனைப் படித்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்தக் கேள்விக்கு விடைகண்டு, அந்தக் கொடுமையை தீக்கத் தமிழகத்தில் எனது ஐம்பதாவது பிறந்தநாள் வரையில் யாரும் முன்வரவில்லை. சென்னையிலும் கடலூர் போன்ற நகரங்களிலும் ஏறத்தாழ இரண்டாயிரம் கைரிக்‌ஷாக்கள் இருந்தன. அந்த ரிக்‌ஷாக்கள் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தினர் யாருக்காவது சொந்தமாக இருக்கும்.

அவற்றை இழுத்துப் பிழைப்பவர்கள் அன்றாடங் காய்ச்சிகளாக இருப்பர். எனது ஐம்பதாவது பிறந்த நாளின் போது அந்தக் கைரிக்‌ஷாக்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு, அந்தக் கைரிக்‌ஷா தொழிலாளிகளுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்‌ஷா வழங்கப்படுமென அறிவித்தேன் அந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உரிய நஷ்டஈடு தரப்பட்டு எல்லா கைரிக்‌ஷாக்களையும் அரசாங்கம் கைப்பற்றிக்கொண்டது. அந்தக் கைரிக்‌ஷாக்களை மாடுபோல் இழுத்து வயிறு கழுவி வந்த தொழிலாளிகளுக்கு அரசாங்கமே இலவசமாக சைக்கிள் ரிக்‌ஷாக்களை வழங்கியது.

எனது 51-வது பிறந்தநாளின் போதுதான் ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம் உருப்பெற்றது. ஊனமுற்றோருக்கான உதவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதுவரையில் செய்யப்பட்டன என்றாலுங்கூட அதனை அரசாங்க அளவில் பெரிய திட்டமாக வகுத்துப் பரவலாக நடைமுறைப்படுத்திய பணி அப்போதுதான் ஆரம்பமாயிற்று. மாமல்லபுரம் செல்லும் பாதையில் முட்டுக்காடு (முத்துக்காடு) என்னும் இடத்தில் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டு, அதில் ஊனமுற்றோர் தொழில்பயிற்சி பெறவும் - அப்படிப் பயிற்சி பெறும்போதே அந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி நடக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தத் தொழிற்கூடத்தில் மட்டுமல்லாது அரசின் பல்வேறு தொழிற்கூடங்களில் ஊனமுற்றோருக்கு ஏற்றவகையில் தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட வசதிகள் செய்யப்பட்டன. ஊனமுற்றோர் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட்டன. மூன்று சக்கர சைக்கிள்களும் அளிக்கப்பட்டன. ஊனமுற்ற சிறுவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. காது கேட்காத பள்ளிச் சிறார்கள் ஆயிரக் கணக்கானவர்களுக்கு காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

52-வது பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுக்கான கருணை இல்லங்கள் தொடங்கப்பட்டன. ஆலயங்களுடன் அந்தக் கருணை இல்லங்கள் இணைக்கப்பட்டு, செலவினங்களை ஆலய நிர்வாகமும் அரசும் பகிர்ந்து கொள்ளும் முறையில் திட்டம் வகுக்கப்பட்டது. முப்பது வயதுக்குக் குறைந்த விதவைகளை மறுமணம் புரிந்துகொண்டால்-விதவை மணத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பத்தாயிர ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு அந்தத் திட்டம் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது.

ஆதரவற்ற விதவைத் தாய்மார்களுக்கு ஆயிரக்கணக்கான தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நாற்பத்தி ஐந்து வயதான விதவைத் தாய்மார்களுக்கு முதியோர் உதவித் தொகை அளிக்கப்படுவதற்கு வழிவகுக்கப்பட்டது. கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும் அரசின் சார்பில் அந்தத் திருமணத் தம்பதிகளுக்கு சுமார் ஏழாயிர ரூபாய் கிட்டும் வகையில் குடும்ப நிதி வழங்கப்பட்டது. மணமக்கள் இரண்டு வேறு சாதியினராக இருந்தால் மட்டும் போதாது; இருவரில் ஒருவர் உயர் சாதி எனக் கருதப்படுகிறவராகவும்-இன்னொருவர் தாழ்ந்த வகுப்பு எனக் கருதப்படுகிறவராகவும் இருந்து-அவர்கள் அந்தச் சாதிக் கொடுமையிலிருந்து விடுபட்டு சமத்துவ நிலையில் திருமணம் செய்து கொள்கிறவர்களாக இருத்தல் வேண்டும்.

அரசு தரும் பணத்திற்காகத் திருமணம் செய்து கொண்டு, பிறகு கைவிட்டு விடக்கூடாதென்பதற்காக-அந்த உதவியை முதலில் ஒரு பத்திரமாக வழங்கி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்தப் பணத்தைப் பெறுகிற வாய்ப்பு உருவாக்கப்பட்டது. சமுதாயத்தில் உள்ள மேடுபள்ளங்களை சமப்படுத்தவும்-சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு நம்பிக்கையிழந்தவர்களுக்கு வாழ்வளிக்கவும்-மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும்-என் பிறந்த நாட்களைப் பயன்படுத்திக்கொண்டு கழக அரசின் சார்பில் செய்யப்பட்ட மக்கள் பணிகள் இவை.