நெஞ்சுக்கு நீதி
மதுரையில் ஒரு விழா! · 178 / 391
மதுரையில் ஒரு விழா! இந்தியாவிலேயே முதன் முதலாகக் கழக ஆட்சியில் தான் மாநிலத் திட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு, 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப் பெற்றது. அந்தக் குழுவுக்குத் தலைவராக மாநில முதலமைச்சர் இருப்பதென்றும், திட்டக்குழுவின் துணைத்தலைவராக தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள ஒரு முழுநேர அலுவலரை நியமிப்பது என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பதவிக்கு அப்போது தலைமைச் செயலாளராக இருந்த இ.பி.
ராயப்பா அவர்கள் நியமிக்கப்பட்டார். வருவாய்வாரியத் துறை முதல் உறுப்பினராக இருந்தவரும், மின்வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தவருமான பி. சபாநாயகம் அவர்கள், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றங்கள்யொட்டி, போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த ஆர்.எம்.மகாதேவன் அவர்கள் லஞ்ச ஊழல் ஒழிப்பு டைரக்டராகவும், மத்திய புலன் விசாரணைப் பிரிவில் டைரக்டராக இருந்த எப்.வி. அருள் அவர்கள் ஐ.ஜி. யாகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்தப் பதவி மாற்றங்களுக்குப் பிறகு மதுரை மாநகரில் நகராட்சி மன்றம், மாநகராட்சி மன்றமாக மாற்றம் பெற்ற நிகழ்ச்சியும் தொடர்ந்தது. நகராட்சி மன்ற உறுப்பினர்களே, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகும் தகுதி பெற்றனர். இந்த நிலையை, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த கல்வி அமைச்சர் நாவலர், ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டினார். ஆனால், நான் அதற்குரிய காரணங்களைக் கூறி, நகராட்சி மாநகராட்சியாகும் போது நகராட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி உறுப்பினர்களாகும் தகுதி பெறுவதில் தவறில்லை என வாதிட்டேன்.
அமைச்சரவையினரின் ஒப்புதலையும் பெற்று 1971 மே திங்கள் முதல் நாள் மதுரை மாநகராட்சி தொடக்க விழா மகிழ்ச்சிப் பெருக்குடன் நடைபெற்றது. நாவலர் தலைமையில் மாநகராட்சி மன்றத்தை நான் தொடங்கி வைத்தேன். நகராட்சியின் தலைவராக இருந்த நண்பர் மதுரை முத்து அன்றைய தினம் மதுரை மாநகராட்சியின் முதல் மேயரானார். அந்த விழாவில் பழம்பெரும் நடிகர் டி.ஆர். மகாலிங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மதுரைக் கோபுரமும்.
பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன்களும் வரையப்பெற்ற மாநகராட்சி மன்றத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்து, நண்பர் முத்து அவர்களுக்கு மேயர் பதவிக்கான அங்கி முதலிய அணிகளை அணிவித்தபோது நான் ஆற்றிய உரையை இந்த வரலாற்று ஏட்டில் பதியச் செய்வது எனது கடமையாகும். பிற்காலத்தில் அரசியல் சூழல்கள் என்னிடமிருந்து முத்து அவர்களைப் பிரித்துவிட்டன என்பதற்காக நான் அவரது கடந்தகாலப் பணிகளுக்குத் திரை போட்டு விடுவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று.
சிவப்பு வெல்வெட்டில் தைக்கப் பெற்ற விசேட அங்கியை அவருக்கு அணிவித்தேன். மதுரை ரோட்டரி கழகம் நூறு பவுன்களைக் கொண்டு மேயருக்கான சங்கிலியொன்றை தயாரித்து நன்கொடையாக அளித்திருந்தது. அந்தச் சங்கிலியை அவர் கழுத்தில் நான் அணிவித்தேன். தங்க முகடு பொறிக்கப்பட்ட வெள்ளிச் செங்கோலையும் மேயரிடம் நான் வழங்கினேன். சென்னை நகர மேயராக இருந்த நண்பர் சா. கணேசன் அமைச்சர்களுடன் வந்திருந்து மதுரையின் புதிய மேயர் முத்துவை வாழ்த்தினார்.
அந்த விழாவில் உணர்ச்சி பொங்கிட நான் ஆற்றிய உரை வருமாறு: "இன்று மதுரை மாநகரமே மகிழ்ச்சியால் துள்ளிடும் பொன்னாளாகும். மதுரை நகராட்சி மன்றம் மாநகராட்சி மன்றமாக இன்று மாறி அதனுடைய முதல் மேயராக முத்து அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். முத்து அவர்கள் பேசுகிற நேரத்தில் இது மாநகராட்சியாக மாறுவதற்கு நானும் நாவலர் அவர்களும் ஏனைய அமைச்சர் பெருமக்களும் எடுத்துக்கொண்ட பெரு முயற்சிகளை எல்லாம் இங்கே தொகுத்துச் சொன்னார்கள்.
சென்னையில் மேயர் பதவி என்று ஒன்று இருந்தது. அது நண்பர் சா. கணேசன் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. முதலமைச்சர் பதவி என்று ஒன்று இருந்தது. அது எனக்குக் கிடைத்தது. ஆனால் முத்து அவர்களைப் பொறுத்தவரையில் மேயர் பதவி என்று ஒன்று இருந்தது அது அவருக்கு மதுரையில் கிடைத்ததா என்றால் இல்லை. மேயர் பதவி முத்துவை நாடி இப்போது வந்திருக்கிறது. இது புதுமையானதும் மகிழத்தக்கதுமான பெரிய அம்சமாகும். முத்து அவர்களை மேயராக ஆக்கி நாங்களெல்லாம் மகிழ்ச்சி அடைகிற நேரத்தில் இருதயத்தின் ஒரு மூலையில் ஒரு சோகக் குரல் ஒலிப்பதை என்னால் மறைத்துக் கொள்ள முடியவில்லை.
நண்பர் முத்து அவர்களாலும் அதை மறைக்க முடியாது என்பதை அறிவேன். அந்த சோகக் குரல் ஒலிப்பதற்குக் காரணம் எங்களையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இங்கு இல்லையே என்பதுதான். அண்ணா அவர்கள் இருந்து அவருடைய திருக்கரங்களால் இந்த அங்கியை எடுத்துத் தந்து அவருடைய செங்கோலைக் கொடுத்து, அவருடைய கையால் முத்து அவர்களுடைய கழுத்தில் இந்தத் தங்கச் சங்கிலியை அணிவித்து அதை நாங்கள் பார்த்து களிக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற அத்தகைய உணர்ச்சி உள்ளத்தைக் குடையாமல் இல்லை.
முத்து அவர்கள் மதுரை மாநகரத்தின் மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார் என்றால் இதற்குப் பின்னால் - மதுரைக்குப் பின்னால் - இந்த நகராட்சி மன்றத்திற்குப் பின்னால் எத்தனை வரலாறுகள் இருக்கிறதோ, அதைப் போல மேயராக ஆகியிருக்கிறாரே மதுரை முத்து, அவருக்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது! அந்த வரலாறு குருதியால் எழுதப்பட்ட வரலாறு - இரத்தத்தால் தீட்டப்பட்ட வரலாறு -அந்த வரலாறு கண்ணீரால் எழுதப்பட்ட வரலாறு-தியாகச் செயல்களால் உருவாக்கப்பட்ட வரலாறு-அந்த வரலாறு அடக்குமுறைகளை அடக்கிக் கொண்டிருக்கிற வரலாறு.
அந்த வரலாற்றுக்குப் பின்னால் சிறைச்சாலைகள் தோன்றும். அந்த வரலாற்றுக்குப் பின்னால் சித்திரவதைகள் காணக்கிடைக்கும். அந்த வரலாற்றை எல்லாம் கடந்துதான் - பயங்கரப் பாதைகளை எல்லாம் தாண்டித்தான்-கடுமையான காட்டாறுகளை எல்லாம் கடந்துதான்-கனல் தெறிக்கும் பேச்சுக்கள் அனல் தெறிக்கும் ஏச்சுக்கள் தாங்க முடியாத எதிர்ப்புக் கணைகளை தாங்கித் தாங்கித்தான்; மதுரை மாவட்டத்திலே கூட அல்ல-ராமனாதபுரம் மாவட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய ஊரிலே பிறந்த முத்து, இன்று மேயராக உயர்ந்து நிற்கிறார்.
வாலிப வயதில் வட்டிக் கடையிலே வேலை பார்த்தார். பிறகு ஆலைத் தொழிலாளியாக இருந்தார். ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலே குதித்தார். பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்க பிரசாரமாக மாறினார். அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்ற தொண்டராக இருந்தார். இன்றைக்கு தி.மு.கழகத்தைக் கட்டிக் காக்கின்ற காவலர்களிலே ஒருவராக மதுரை மாவட்டத்திலே-ஏன், தமிழகத்திலே விளங்குகிறார். இது இங்கே அமர்ந்திருக்கின்ற இந்த மேயருக்குப் பின்னால் இருக்கின்ற வீர வரலாறு.
கண்ணீர்க் காவியம். புதிய புறநானூறு படைத்தவர் இன்று மதுரை நகர மேயராக இருக்கிறார். முத்துவா? மேயராவதா? என்று எண்ணுபவரும் இருந்திடுவார்கள். மதுரை முழுதும் இன்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கிறது என்றாலும் மகிழ்ச்சி அடைபவர்களிலே சிலருக்கு வியப்பிருக்கலாம். மதுரை முத்து மேயராவதா? இவ்வளவு பெரிய பதவிகளை ஏற்பதா? என்று எண்ணிடுவோரும் இருக்கத்தான் செய்வார்கள். நான் அவருக்கு அங்கியை எடுத்து - சங்கிலியை எடுத்து அணிவித்த நேரத்திலும் செங்கோலை எடுத்து அவர் கையிலே கொடுத்த நேரத்திலும் எனக்கு ஏற்பட்ட உணர்வெல்லாம் நான் என்னுடைய வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டபோது என்னுடைய மனைவிக்கு நான் மாங்கல்யம் எடுத்து அணிவித்தபோது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டதோ அந்த மகிழ்ச்சியைத்தான் அந்த உணர்ச்சியைத்தான் இந்தக் கிழப்பெண்ணை மணந்துகொள்கிற இந்த நேரத்திலே நான் பெற்றிருக்கின்றேன்.
நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட கழகத்தினுடைய முத்து இங்கே மதுரையினுடைய சொத்தாக உங்களுக்கெல்லாம் கிடைத்திருப்பது கண்டு நான் வாழ்த்துகின்றேன். அவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கின்ற சிவப்பு நிற ஆடையைத் தொட்டுப் பார்த்தால் பட்டுப் போன்ற மிருதுவான தன்மையைக் காணலாம். ஆனால் அந்த ஆடை மறைத்திருக்கின்ற அவர் மார்பகத்தில் எத்தனை எத்தனை விழுப்புண்கள் இருக்கின்றன என்பதை அவரோடு குடும்ப பாசத்தோடு பழகி இருக்கின்ற எங்களுக்குத் தான் அது தெரியும்.
அவருடைய கழுத்திலே இன்றைக்கு நூறு பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை மாட்டியிருக்கின்றோம். அந்தச் தங்கச் சங்கிலிக்குரிய கழுத்து எத்தனை கட்டாரிகளால் குறிபார்க்கப்பட்ட கழுத்து; எத்தனை கத்தி வீச்சுகளுக்கு ஆளாக இருந்த கழுத்து; அதை நாம் அறிவோம்; நாடறியும்."
இவ்வாறு நான் உரையாற்றிய மதுரை நிகழ்ச்சிக்கு முதல் நாள்; அதாவது ஏப்ரல் 30ம்-ஆம் நாள் திருக்கழுக்குன்றம் கோயில் திருப்பணி ஆறு லட்சத்து ஐம்பதாயிர ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டதை நான் தொடங்கி வைத்தேன். அந்த விழாவில் சிட்டிபாபு எம்.பி., மதுராந்தகம் ஆறுமுகம், முனு ஆதி, செங்கை விசுவநாதன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். ஆலய நிகழ்ச்சியென்றதும் அப்படியே என் கொள்கைகளை மறந்துவிட்டு நான் கொண்டிருக்கும் இலட்சியத்துக்கு மாறாக எதையும் உளறிவிடுகிற பழக்கம் என்றைக்கும் என்னிடம் இருந்ததில்லை.
அந்த ஆலயத் திருப்பணித் தொடக்க விழாவில் "இறைவன் என்றால் யார்?" என்ற கேள்வியுடன் எனது உரையை ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து நான் பேசியதை இந்தப்பகுதியில் இணைப்பது அவசியமெனக் கருதுகிறேன். அந்தப் பேச்சு பின்வருமாறு: "இங்கேகூட மாநில சுயாட்சி அமைந்திட இறைவன் அருள் புரிவானாக என்று எழுதி வைத்திருக்கிறார்கள். எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பது பழமொழி. எழுத்தறிவிப்பவர் யார்? ஆசிரியர்கள், அப்படியானால் அவர்களும் இறைவனாவார்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்றார் தாகூர். இங்கே ஏழைகள் எல்லாம் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் இறைவன் தான். இறைவன் யார்? இறைவன் அல்லாதவன் யார்? எல்லோருக்கும் கடவுள்கள் தான் நல்லது செய்வது என்றால் நல்லது செய்கிறவர்கள் எல்லாம் கடவுள்கள் தான். நம்முடைய மனச்சாட்சி தான் நமக்குக் கடவுள். தவறு செய்கிறோமா இல்லையா என்பதை ஒரு நீதிபதி பல நாள் வக்கீல் வாதத்தை வைத்து கண்டுபிடிப்பதைவிட-உளநூல் ஆராய்ச்சிக்காரர் விஞ்ஞான மகிமையால், தவறு செய்கிறோமா இல்லையா என்று கண்டுபிடிப்பதைவிட; தவறு செய்கிறோமா இல்லையா என்பதைச் சொல்கிற ஒப்பற்ற நீதிபதி உண்டென்றால் அது மனச்சாட்சி தான்.
அந்த மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொண்டால், நாமம் தரித்தாலும் தரிக்கா விட்டாலும் - விபூதி பூசினாலும் பூசாவிட்டாலும் - உண்டியலில் பணம் போட்டாலும் போடாவிட்டாலும் - மொட்டை அடித்துக் - கொண்டாலும் இல்லாவிட்டாலும் - ருத்ராட்சம் அணிந்தாலும் அணியாவிட்டாலும் - துளசி மணி மாலை போட்டாலும் போடாவிட்டாலும் - காவியாடை உடுத்தினாலும் உடுத்தாவிட்டாலும் - கமண்டலத்தை கையில் ஏந்தினாலும் ஏந்தாவிட்டாலும் மனச்சாட்சிக்குப் பயந்து நடக்கிற மனிதன் தான் ஆண்டவன்! திருவாரூரில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தேரை மறுபடியும் ஓட வைப்பதற்கான முயற்சிகளை கழக அரசு செய்து அதனை ஓடச் செய்தது.
அந்த விழாவில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் கலந்து கொண்டார். தேர் ஓடுவதற்கான சாலையினை பழுது பார்த்திட மட்டும் இரண்டு இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. மேலும் இரண்டு இலட்ச ரூபாய் பராமரிப்புச் செலவு போன்றவைகளுக்காகச் செலவு செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்களின் முன்னிலையில் அமைச்சர்களுக்கு நடைபெற்ற ஒரு பாராட்டு விழாவில் நான் பேசும்போது "பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடருவோம்!
அதே நேரத்தில் பக்திப் பிரச்சாரத்தைத் தடுக்க மாட்டோம்" என்று கூறினேன். விழாவில் மேலும் பேசும்போது "திருவாரூர் தேரை ஓடவிட்டேன் என்பதும், அதற்காக நான்கு இலட்ச ரூபாய்க்குத் சாலை போடப்பட்டது என்பதும் பற்றி சிலர் நினைக்கலாம். ஆனால் தேர் நான்கு நாட்கள்தான் ஓடுகிறது. அதற்குப் பிறகு மக்கள் தான் அந்தப் பாதையில் நடக்கிறார்கள். அரசை நடத்துபவர்களுக்கு இப்படிப்பட்ட சாதுரியங்கள் தேவை. நாளைக்கு மறுநாள் போடக்கூடிய ரோட்டை இன்று தேர் ஓடுகிற நேரத்தில் போட்டால் பக்தர்களின் மனமும் பூரிக்கிறது.
மக்களுடைய தேவையும் நிறைவேறுகிறது. நான் ஒரு புடவைக் கடையைத் திறந்து வைக்க அழைக்கப்படுகின்றேன். அப்போது அந்தக் கடையில் உள்ள புடவைகள் நன்றாக இருக்கிறது என்று சொன்னேனென்றால் உடனே ஒரு புடவையை எடுத்துக் கொடுத்து கட்டிக்கொள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதைப் போல ஒரு ஆலயத் திருப்பணியைத் தொடங்கி வைக்கிறேனென்றால் உடனே அங்கேயிருக்கிற கடவுளை ஏற்றுக்கொள் என்று அவர்களும்சொல்லமாட்டார்கள். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர்களது மனதைப் பொறுத்ததாகும்."
ஒன்றே குலமென்போம் உண்மையின் பெயரே தெய்வம் என்போம் என்று பாடிய பாரதியாரின் கவிதையை ஏற்றுக் போற்றுகிறவர்கள்; எனது கருத்தை மட்டும் ஐயத்தோடு நோக்குவது ஏன் என்பதுதான் புரியவில்லை. "ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்" என்று பாரதியார் சாடுவதைவிடவா "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கை வேதமாக இருக்கிறது?
