நெஞ்சுக்கு நீதி
மூன்றாவது-கழக அமைச்சரவை · 177 / 391
மூன்றாவது-கழக அமைச்சரவை சு காதாரத்துறை என்றும் - பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை என்றும் பெயர் மாற்றம் பெற்ற (Health Portfolio) தைத் தான் நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் "மெடிகல் மினிஸ்டர்" என்று பெயரிட்டு; அந்தத் துறையின் அமைச்சராகத் தன்னை ஆக்கிட வேண்டுமென்று என்னிடம் வலியுறுத்தினார்.
எந்த இலாக்கா என்பதைப் பற்றிக்கூட நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கத் தயாரானேன். ஆனால் அந்தக் கருத்துக்கு நவலார், மாதவன் போன்ற ஒருசிலர் எதிராக இருந்தார்கள். அமைச்சரவையில் அவர் இடம் பெறுவதே கூடாது என்பது அவர்களது எண்ணமாக இருந்தது. படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டால் அமைச்சரவையில் அவர் இடம் பெறுவதில் எந்தத் தடையும் இல்லையல்லவா என நான் வினவினேன்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள், நடித்துக் கொண்டே அமைச்சராக இருக்க வேண்டுமென்றும் அதற்கேற்ப அமைச்சர் பணிக்கான கோட்பாடுகளைத் திருத்தச் சொல்லி பிரதமர் இந்திரா காந்தி அவர்களை வற்புறுத்த வேண்டுமென்றும் யோசனை கூறினார். நண்பர் மாதவன், அரசாங்க சட்ட வல்லுநர்களை அணுகி அவர்களது கருத்தை எழுத்து வடிவத்தில் பெற்று வந்தார். நடிப்புத் தொழிலில் ஈடுபட்டவாறு அமைச்சர் பதவியில் இருப்பது கோட்பாடுகளுக்கு மாறானது என்ற கருத்தையே சட்ட வல்லுநர்கள் வழங்கினார்கள்.
நானும் எம்.ஜி.ஆர். அவர்களிடம்; "கோட்பாடுகளே குறுக்கே நிற்காவிட்டாலும், அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு திரைப்படத்தில் பல்வேறு விதமான பாத்திரங்களில் நடிக்கும்போது-அது ஏதோ ஒரு வித்தியாசமாகத் தோன்றும்-எனவே, உங்களை அமைச்சராக்குவதில் எனக்கு ஆட்சேபணையில்லை-படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்களேன்" என்று கூறினேன்.
ஆனால் அவர் கேட்பதாக இல்லை. உடனடியாக வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத கோபத்தை ஆழமாக உள்ளத்தில் அடக்கி வைத்துக்கொண்டு, அமைச்சர் பதவிக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டார். தி.மு.கழக சட்டமன்ற கட்சித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆளுநர் உஜ்ஜல்சிங் அவர்களைச் சந்தித்து அமைச்சரவைப் பட்டியலை அளித்தேன். முதல்வராக நானும், கல்வி அமைச்சராக நாவலரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக என்.வி என்.னும், தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திருமதி சத்தியவாணிமுத்துவும், உணவு அமைச்சராக ப.உ.சண்முகமும், தொழில் அமைச்சராக மாதவனும், பொதுப்பணித் துறை அமைச்சராக சாதிக் பாட்சாவும், கூட்டுறவுத் துறை அமைச்சராக சி.
பா. ஆதித்தனாரும், வேளாண்மைத் துறை அமைச்சராக அன்பில் தர்மலிங்கமும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜாராமும், மின்துறை அமைச்சராக ஓ. பி. இராமனும், போக்குவரத்துத்துறை அமைச்சராக பண்ருட்டி ராமச்சந்திரனும், அறநிலையத்துறை அமைச்சராக மு. கண்ணப்பனும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தோம். மார்ச் 15-ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அமைச்சரவைப் பதவியேற்கும் விழா நடைபெற்றது.
தி. மு. கழகத்தின் முதல் அமைச்சரவை 1967 மார்ச் திங்கள் 6-ஆம் நாளும், இரண்டாவது அமைச்சரவை 1969 பிப்ரவரி 10-ஆம் நாளும், மூன்றாவது அமைச்சரவை 1971 மார்ச் 15-ஆம் நாளும் பதவி ஏற்றன! அமைச்சர் பதவியேற்றவர்களில் 1976-ஆம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்படும்வரையில் கழகத்திலேயிருந்து-ஆட்சிக் கலைப்பு, மிசாக் கொடுமை போன்ற சோதனைகள் கழகத்தைக் தாக்கியபோதும், தேர்தல் தோல்விகளைக் கழகம் சந்திக்க நேரிட்டபோதும்-ஆடாமல், அசையாமல் கொள்கை குலையாமல் நிலைத்தவர்கள் யார் யார் என்பதும்; பதவிச்சுவை-அதிகார அந்தஸ்து-இவற்றுக்காகப் பல் இளித்துக் கட்சி மாறிவிட்டவர்கள் யார் யார் என்பதும் நாட்டு மக்கள் அறிந்த உண்மையாகும்.
அமைச்சரவை பதவியேற்ற அன்றிரவு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்ற தி. மு. க. குழுத் தலைவராக நாஞ்சிலாரும், துணைத் தலைவராக இரா.செழியனும் செயலாளராக சி.டி. தண்டபாணியும், கொறடாவாக ஜி. விசுவநாதனும், துணைக் கொறடாவாக மாயவனும், பொருளாளராக சிட்டிபாபுவும், துணைச் செயலாளர்களாக பி.ஏ. சாமிநாதன், தா. கிருஷ்ணன் ஆகியோரும், மாநிலங்களவை குழுத் தலைவராக தில்லை வில்லாளனும், துணைத் தலைவராக டி.கே.
சீனிவாசனும், கொறடாவாக புதுவை சிவப்பிரகாசமும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுடன் இணைந்து நடைபெற்ற நடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட நாற்பது இடங்களில், திரு. காமராசர் அவர்கள் போட்டியிட்ட நாகர்கோயில் தொகுதி ஒன்றைத் தவிர மற்ற எல்லா இடங்களும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிக்கே கிடைத்தன என்பது குறிப்பிடத் தக்கதாகும். நண்பர் மதியழகன் அவர்களுக்கு அந்த அமைச்சரவையில் எப்படியும் இடம் தந்தே ஆக வேண்டுமென்று அவரது இளவல் கே.ஏ.
கிருஷ்ணசாமி எனது இல்லத்தினை முற்றுகையிட்டு வாதாடினார்! போராடினார்! மதி அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்தபோது கே.ஏ.கிருஷ்ணசாமி பெயரால் வாங்கப்பட்ட வீடு ஒன்றினைக் குறித்துச் சட்டப் பேரவையில் புகார் கூறப்பட்ட காரணத்தினால்தான் மதியழகன் பதவியிழக்க நேரிட்டது என்ற அந்த நிலையில் மீண்டும் மதியழகன் அவர்களை அமைச்சராக்க இயலாத சூழலை நான் விளக்கினேன். ஆனால் இறுதியாக கண்ணீர் கண்டு கசிந்துவிடும் எனது பலவீனத்தின் காரணமாக மதியழகன் அவர்களைச் சபாநாயகராக ஆக்குவதற்கு ஒப்புதல் அளித்தேன்.
அதேபோலத்தான் பண்ருட்டி ராமச்சந்திரனின் கண்ணீர் என் கால்களையே நனைத்துவிட்ட நிலையில்; மரணப்படுக்கையில் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு மாறாக பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் மந்திரிப் பதவி தரச் சம்மதித்தேன். மிகப் பெரும் தலைவர்களான ராஜாஜி, காமராஜர் இருவரது தலைமையில் தேர்தல் களத்தில் போரிட்ட அணியை வெற்றி கண்டு மிகப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றிட்ட பூரிப்பில், கழகத்தோடு சேர்ந்து வளர்ந்த மதி போன்றவர்களையும்-கண்ணீர் மல்க நின்ற பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களையும் புறக்கணிக்க என் மனம் இடம் தரவில்லை!
பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட விளைவுகள் எவ்வளவு விபரீதமானவைகள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. தமிழகத்தில் கழகம் பெற்ற மகத்தான வெற்றி குறித்து டெல்லியிலிருந்து வெளிவரும் "லிங்க்" என்ற ஆங்கில ஏடு பின்வருமாறு எழுதியது :- "பிரமாதமான முறையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திடுவோமென்று வலதுசாரி சக்திகளின் கூட்டு பெரிய நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்த மாநிலம் தமிழ்நாடு. ராஜாஜியும், காமராசரும் கூட்டுச் சேர்ந்தால் அது வெல்லற்கரிய மாபெரும் சக்தி என்பதாக ஒரு மாயை மிகக் கவர்ச்சிகரமாகக் கட்டி வளர்க்கப்பட்டது.
ஆனால் தமிழகத்து மக்கள் வேறுவகை சிந்தனை உடையவர்களாக இருந்தனர். அந்தக் கூட்டுக்கு இத்தேர்தலில் அவர்கள் கொடுத்துள்ள சாட்டையடியிலிருந்து அவர்கள் மீண்டும் எழுவதென்பது இயலாத காரியம். நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்திடுவதென்று கருணாநிதி தீர்மானித்தபோது மந்த புத்தி அரசியல் பண்டிதர்கள், இது சிக்கலான ஒரு சோதனை என்று கூறினர். ஆனால் முற்போக்கு அணியின் பிரகாசமான வெற்றியும் சிண்டிகேட் சுதந்திரா கூட்டுக் கும்பலின் கேவலமான தோல்வியும், ஊக்கமிக்கவரும் திரைக்காவிய கர்த்தாவுமான தி.
மு. கழகத் தலைவர் கருணாநிதி, ராஜகோபாலாச்சாரியார், காமராசர் ஆகியோரைக் காட்டிலும் நுண்திறன் வாய்ந்த அரசியல் தந்திரமிக்கவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. தமிழகத்தில் இயங்கும் ஏக போக ஏடுகள் தங்கள் முழு ஆத்திரத்தையும் தி.மு. கழகத்தை வலிந்து தாக்கி பிரச்சார இயக்கம் நடத்தின. இதனால் எல்லாம் தி.மு. கழகம் அரசை விட்டு அகலும் என்ற கருத்தை ராஜாஜி, காமராஜர் கூட்டத்தினரால் உருவாக்க முடிந்ததற்கும் அந்த ஏடுகளே காரணம்.
சுதந்திராவும், சிண்டிகேட்டும் அடைந்துள்ள படுதோல்வி உண்மையிலேயே அவமானகரமானது." மீண்டும் முதல்வர் பதவியேற்றவுடன் 16-3-71 வானாலிெயில் நான் ஆற்றிய உரையை இங்கு நினைவுபடுத்துவது தேவையான ஒன்றாகும். "தமிழகத்தைப் பொறுத்த வரையில் கழக அரசினைத் தங்களுக்குப் பாதுகாப்பான மெய்க்காப்பாளனாகவும் - தங்களுக்குப் பணியாற்றும் ஊழியனாகவும் - தங்கள் வீட்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்காகவும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உழைப்பதற்கு நாங்கள் சூளுரை மேற்கொண்டிருக்கிறோம்.
ஏழை எளிய மக்கள் வாழ்வு ஒளிபெற - சாதிபேதமற்ற சமூக நீதி நிலைத்திட - சமதர்மம் நடைமுறைக்கு வந்திட - தனி மனிதனின் வாழ்வுக்கான அடிப்படைச் சொத்துரிமைகளைச் சீர்குலைக்காமல் இந்த அரசு சீரிய பணியாற்றும். விஞ்ஞான யுகத்திற்கு ஏற்ற சமதர்ம சமுதாய அமைப்பில் நமது கவனத்தைக் கவருகிறவர்கள், சமுதாயத்தின் அடித்தளத்திலே வாய்ப்பு வசதிகளின்றி பின்தங்கிய சமூகத்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஆவர். அவர்களைக் கைதூக்கிவிட இந்த அரசு எடுத்துள்ள முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
தொழிலாளர் கிளர்ச்சியாயினும் - மாணவர் எழுச்சியாயினும் - விவசாயிகள் கிளர்ச்சியாயினும், கிளர்ச்சி நடத்துவோரைப் பற்றிச் சிந்திக்காமல் கிளர்ச்சியின் காரணத்தை உணர்ந்து அவைகளில் வீண் கெளரவப் பிரச்சனை பார்க்காமல், அவர்தம் முறையீடுகளுக்குச் செவி சாய்த்து நியாயமெனப்பட்டதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டத் தேவையில்லை என்பதே அரசு தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்பும் பண்பாகும். ஆளுங் கட்சிக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்துவது தான் அரசு!
அதுபோல அனைவரையும் சேர்த்து நடத்துவது தான் நல்லரசு! அந்த நல்லரசாக இந்த அரசு தொடர்ந்து நடந்திட நாளும் நாங்கள் பணியாற்றுவோம். ஆகவே இவர்கள் ஆளுகிறார்களே என்று எண்ணாமல், இவர்கள் ஆளுவதற்கும் இனிய அறிவுரைகளைக் கூறுவோம் என்று நல்லிதயம் கொண்டு எங்களை வாழ்த்துமாறு, கருத்து மாறுபாடு - கொள்கை மாறுபாடு கொண்டவர்களையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் சாதாரணமானவர்கள் நாங்கள்; சாதாரண மக்களுக்காக உழைப்பதற்கு முன் வந்திருப்பவர்கள்.
எங்களை ஆளாக்கிய எங்கள் அண்ணன் எதையும் தாங்கும் இதயம் கொண்டு, கடமை போற்றி, கண்ணியம் வளர்த்து, கட்டுப்பாடு குலையாமல் நடப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்த அண்ணனின் வழிநின்று அயராது உழைப்போம். குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்! காழ்ப்புணர்ச்சியின்றி நடுநிலையோடு கருத்துக்களை எடுத்துக் கூறுங்கள்! தமிழகத்தின் அரசியல் பண்பாடும், நாகரிகமும் அணுவளவும் குறையாத வகையில் உண்மை விமர்சனங்களைச் செய்திடுங்கள்.
நியாயங்களுக்குத் தலைவணங்குகிறோம். தொடர்ந்து நேர்மை வழி நடக்க உறுதி பூணுகிறோம். உங்கள் அரசு இது! உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நாங்கள்! குறை இருந்தால் கண்டியுங்கள்! குற்றம் இருந்தால் தண்டியுங்கள்! தேர்தல் முடிந்து விட்டது - புயல் ஓய்ந்து விட்டது - இனி தென்றல் வீசட்டும்! நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்! இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்! தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்திடுவோம், வாரீர்!"
